
சாம்பல் மலர்கள்
காளியின் கைகளில் கரண்டி சுழல்கிறது
யுத்தமும் வதமும் பழகிப் போனவள்
தன்னுடனே போரிட்டு
தன்னையே பலி கொடுக்கிறாள்
சுயத்தை அரிந்து
அவள் தயாரிக்கும் உணவுகள்
நேரந்தவறாமல் பரிமாறப்படுகின்றன
ஜ்வலிக்கும் தட்டுகளில்
தன் கோரைப் பற்களைக் காட்டிவிடக் கூடாதென
அவள் எடுத்திருப்பது
தற்காலிக முடிவுதான்.
•
மஞ்சள் குங்குமம் மணக்க நடந்து வருகிறாள்
அத்தை
நடக்க நடக்க சரசரக்கிறது
பழங்கதைகளூட்டி பாரம்பரியப்படி நெய்யப்ப்பட்ட பட்டுச்சேலை
அதுதன் மடிப்பின் அசைவிலெல்லாம் கிசுகிசுப்பது
தலைவிக்கு விதிக்கப்பட்ட
கடமைகளைத்தானே?
ஆனால்
அரிவை சுமக்க முடியாமல் சுமந்து வருவதோ
ஒரு கனவை
அதில் நிறைந்திருப்பது
அவளால் மட்டுமே நெய்ய முடிந்த ஒரு ககனம்.
•
வாழ்வின் வெம்மையைக் குழலில் செலுத்தி
அடுப்பூதிக் கொண்டிருக்கிறாள்
காற்றும் மரமும்
நெருப்புக்குத் தீனியிட
சாம்பல் படிந்து கிடக்கிறது அவள் மனம்
அது
ஆள் காணா வீட்டின் மாட விளக்கோ
பாழடைந்த ஆலயத்தின் தூபத்தூணோ
தன்னைத்தானே நிந்தித்த சாம்பல் மலரோ
•
எத்தனையோ பேர் சொல்லியும் கேளாமல்
கண்ணாடி வளையல்களை கை நிறைய
அணிந்திருக்கிறாள் அத்தை
பிடிவாதமாக
வீட்டின் அமைதியை அடிக்கடி கெடுக்கிறது
அந்த சத்தம்
நேரங்கெட்ட நேரத்தில் சத்தமாய் சிணுங்குகிறது
எங்கிருந்தாலும் அவள் இருப்பை அதுவே
காட்டிக் கொடுக்கிறது
ஆனாலும் அத்தை அவற்றைப் பெருமையுடனே
அணிந்திருக்கிறாள்
என்னவோ தன் சொந்தக் குரலைப் போல..
•
அத்தைக்குப் பித்துப் பிடித்துவிட்டது
இப்போது அவளைப்பொறுத்தவரை அனைவருக்கும் ஒரே முகம்
ஒரே குரல்
யார் என்ன பேசுவார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்
ஆனால்
எதைப் பற்றியெல்லாம் பேசவே மாட்டார்கள் என்பதை மட்டும்
அத்தை அறிந்திருக்கிறாள்
ஆம்
அத்தைக்குப் பித்துதான் பிடித்திருக்கிறது