இணைய இதழ்இணைய இதழ் 100சிறுகதைகள்

நட்சத்திர சிவப்பு – அமுதா ஆர்த்தி

சிறுகதை | வாசகசாலை

நிபியோடு நான் பேசிக்கொண்டேயிருந்தேன் அவனின் இறப்புச் செய்தி குறித்து. பேச்சின் இடையே அங்கிருந்த நிபியின் முதலாளி சொன்னார் அவனை நிபிக்கு நன்றாகத் தெரியும்.

“ஓ தெரிந்திருக்கலாம் பல பேர் வந்து போகும் அலுவலகம் அதனால் தெரிந்திருக்கலாம். இதில் என்ன.”

இறந்தவனைக் குறித்த தகவல்களை கேட்கவும் அவன் வாழ்க்கை குறித்து கேட்கவும் ஆவலாக இருந்தாள் நிபி.

முதலாளி வெளியே கிளம்பியவுடன் சொல்ல ஆரம்பித்தேன்.

அவன் சமீபத்தில்தான் ஒரு பெட்டை ஆட்டுக்குட்டி வாங்கினான் அதற்கு அம்முன்னு பேர் வச்சிருந்தான். அந்த ஆட்டுக்குட்டிக்கு குளத்தங்கரையில் வளர்ந்து நிற்கும் பசிய இலைகளைப் பறித்து கொடுப்பான். ரோட்டை கடந்தால் அதுவாகவே நல்லவை பார்த்து தின்றுவிடும்; அவனோ ரோட்டைக் கடக்க விடுவதேயில்லை. புல்லைக் கொடுக்கும்போதே அதை செல்லமாகத் திட்டுவான். அவன் தெரிவு செய்து அறுக்கும் புல் அத்தனை மணமுடையதாக இருந்தது.

ஆட்டுக்குட்டி வாங்குவதற்கு முன்னால அழகான புஸ் புஸ் என்ற வெள்ளை நிறத்தில் ஒரு நாய் வளர்த்தான். அது ரோட்டில் விளையாடும் போது வண்டியில் அடிபட்டு இறந்துவிட்டது. அதன் பிறகு கருப்பு மற்றும் செவலை என நாய்களை வளர்த்தாலும் எல்லாம் அடிபட்டே இறந்துவிட்டது. அதுனால்தான் அவன் ஆட்டுக்குட்டியை வளர்க்க ஆரம்பித்திருக்கிறான். ஆடு அவன் கூடவே படுத்துக்கொள்ளும். ரோட்டோர அரசு நிலத்தில்தான் வீடு. பெரிதாக ஒன்றுமில்லை இருபதடி நீளம் ஏழு அடி அகலம் உள்ள சிறிய அறை; அதை ஒட்டிய சின்ன கழிவறை.

வீட்டின் முன் பல வருடங்களாக பல ஊர் சாக்கடைகள் தேங்கி நிற்கும் குளம். உள்ளே சாக்கடை நீர் என்றாலும் வெளியே பார்ப்பதற்கு அற்புதமான இயற்கைக் காட்சி. பல வகை புற்கள் செடிகள் கொடிகள் மலர்கள் என குளம் அலங்காரம் செய்து அனைவரின் கண்களுக்கும் தன்னை ஆரோக்கியமாக காட்டி நிற்கும். குளத்து படித்துறையில் உட்கார்ந்து கதைகள் பேசி செல்பவர்கள் அவன் அம்மாவின் நித்த ஆண் வாடிக்கையாளர்கள். அதில் முதியோர்களே அதிகம்.

வெத்தலை பாக்கு மற்றும் காய்கறிகள் வாங்கி விற்பது அவள் தொழில். அரசு சாராயக்கடையை மூடும் விடுமுறை நாட்களில் அவள் இரண்டு நாளுக்கு முன் வாங்கி வந்து விற்பாள் அதில் கொஞ்சம் அதிகமாகவே வருமானம் கிடைக்கும். அவளுக்கு பிடித்த ஆண்களோடு உறவு வைத்துக் கொள்வாள். அவளைப் பார்ப்பதற்கு ஆரோக்கியமற்று வறுமையோடு தளர்ந்த தோல்களை உடைய கறுத்த பெண். ஆனால், இளமையில் அழகி என்றே சொல்லலாம். அவள் மகனோ முப்பதை தாண்டும் வயது என்றாலும் முதுமையின் தோற்றம் மெலிந்து வீங்கிய உடல். அழுகிய பழத்தின் தோற்றத்தை உடையவன். பல நாட்கள் வேலைக்குப் போகமாட்டான். குளத்தங்கரை படித்துறையிலேயே படுத்துக் கிடப்பான். நீர் பறவைகளின் ஒலிகளை கேட்டவாறு. அவன் அயர்ந்து தூங்குவதுபோல் குடிசைக்குள் இருந்து வரும் முயங்குதலின் ஒலியைக் கேட்டாலும் கண்டுகொள்ளமாட்டான். பல நேரங்களில். மத்தியானம் ஆள் அரவமற்ற நேரத்திலேயே அதிகமாக கேட்கும்.

ஒரு மழை நாளில் நனையாமல் இருக்க அவன் வீட்டு பக்கம் ஒதுங்கினேன். வேகமான காற்றில் மேற்கூரை கிழிந்து மழைநீர் வீட்டில் சொட்டிக் கொண்டிருந்தது. அப்போது அவன் அம்மாவிடம், “கொஞ்சம் பணம் போட்டு இந்தக் கூரையை மாற்றலாமே” என்றேன். உள்ளே டீவியில் நாடகம் ஓடிக்கொண்டேயிருந்தது. அவன் அந்த காட்சிகளை அவ்வளவு உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தான்.

“நேற்றுத்தான் புது டீவி மகன் வாங்கினான். அடிக்கடி பழுதடையும் டீவியை வைத்து பார்த்து வந்தோம்” என்றாள். அதைச் சொல்லும் போது அவள் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. வீட்டுக் கூரையின் பெரிய ஓட்டையை பார்த்துச் சொன்னாள், “அரசாங்கம் வீட்டை இடித்தால் என்ன செய்ய முடியும்?” என்று சொல்லியவாறே வாயில் மென்ற வெத்தலை நீரை நடையில் துப்பினாள். அது நட்சத்திர சிவப்பாய் மழை நீரில் கலந்தது.

மாலை நேரத்தில் தினமும் வெளியே நாற்காலியைப் போட்டு வருவோர் போவோரை வேடிக்கை பார்த்து சிரித்துக் கொண்டிருப்பாள். நான் வரும்போதும் போகும் போதும் அன்போடு விசாரிப்பாள். அம்மாவையும் மகனையும் தேடி உறவுக்காரர்கள் வருவதில்லை.

ஒரு வாரம் காய்ச்சல் கண்டு கிடந்த அம்மாவிற்கு உதவிகள் செய்தான். சமையல் செய்வது முதல் அவளைப் பராமரிப்பது என அத்தனையும் செய்தான். சிறிய வீட்டிற்குள் அவர்களின் பெரிய உலகம் உருண்டு கொண்டேயிருந்தது.

இரவு அவசரமாக சென்று கொண்டிருந்தேன். அவளின் அழுகுரல் தனியே ஒலித்தது. படித்துறையில் யாரும் இல்லை மழை பெய்து ஓய்ந்த ஈர மண் இருட்டுப் பூச்சிகளின் ஒலிகளின் ஊடே பெருங்குரலெடுத்து அழுதாள். கைவிடப்பட்ட உறவின் வலி. சாலை அதன் போக்கில் உணர்வின்றிக் கிடந்தது. சட்டென கால்கள் குடிசைக்குள் போக எத்தனித்தது ஆனால், அவசரம் காரணமாக என் வேலையைப் பார்க்கப் போய் விட்டேன். வழியில் போகும் போதே என்ன நடந்திருக்கும் என்று யோசித்தே சென்றேன். ஒரு வேளை அம்மாவும் மகனும் சண்டையிட்டு அழுகிறார்களாக இருக்கும் என்று எண்ணினேன். இல்லை நேற்றுத்தானே அவன் அம்மாவை அவன், “ஏய் செல்லக்குட்டி அம்மா செல்லக்குட்டி அம்மா” என கூப்பிட்டான். அதை கேட்டுக்கொண்டே போகும்போது எனக்குள் அத்தனை சந்தோஷம்.

திரும்பி வரும்போது அவன் வீட்டின் முன் ஆட்கள் கூடி நின்றார்கள் அவர்களுக்குள் ஒருவன் பேசிக்கொண்டான்.

“பணம் ஏதாவது வச்சிருக்கியா எல்லா ஏற்பாடும் செய்திடலாமா” என்றான்.

அவள் தலையசைக்கிறாள்.

நான் கடந்து செல்லச் செல்ல ஊதுவத்தியின் வாசம் மரணச்செய்தி சொல்லியது. நான்காவது நாள் அவன் அம்மா வெளியில் நின்றாள். ஆடு அதன் போக்கில் புல்லைத் தின்று கொண்டிருந்தது. துக்கம் விசாரிக்காமல் செல்வது சரியல்ல என்று நினைத்து அவளிடம் சென்று கேட்டேன்.

“அவனுக்கு கல்லீரல் பாதிப்பு வந்து மஞ்சள் காமாலை உண்டு. விதை வீக்க நோய், சிறுநீரக பிரச்சினையும் இருந்துச்சி. ஆப்ரேஷன் பண்ண சொன்னாங்க. திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜ் கொண்டு போங்கன்னு சொன்னாங்க. மருத்துவம் செஞ்சாலும் பொழைக்கியது கஷடம்னு. அது மட்டுமில்ல ஏழு எட்டு லட்சம் செலவாகும். எனக்கிட்ட ஏது பணம்? அதனால இருக்குறது வரையும் இருக்கட்டும்னு உட்டுட்டேன். ஆனா, ஒரு நாளுக்கூட கெடையில இல்ல. எல்லா வேலையும் அவனே செய்வான். எனக்கு கறி சோறுக்கூட அவன் ஆக்கிப்போடுவான். “

“கடைசியா தண்ணி கேட்டான். எனக்க மகனுக்க உயிர் வாய் வழியாத்தான் போச்சு” என்று சொல்லி கண்கள் கலங்கி அவள் வாயைத் திறந்து காண்பித்தாள். நான் குளத்து சப்பாத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஆட்டுக்குட்டி அதில் படுத்திருந்தது. கண்களை துடைத்து இயல்பாகவே அடுத்த வேலைக்கு கடந்து சென்றாள். வீடு எந்த சோகத்தையும் தேக்கி வைக்கவில்லை.

ஒரு போதும் அவனை வளர்ப்புக் குழந்தை என்று அவள் சொன்னதேயில்லை ஊராருக்கும் தெரியாது. யாருமற்றவள் ரயில்வே தண்டவாளங்களில் கிடைக்கும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்று அதில் தனது வாழ்வை கழித்தவள். அப்போதுதான் தனியாக அழுது கொண்டு கிடக்கும் இவனைக் கண்டெடுத்து கூடவே வைத்துக் கொண்டாள். ஒரு மாதமாகியும் யாரும் தேடி வராததால் தன்னோடு வளர்க்க ஆசைப்பட்டு இடம்விட்டு நகர்ந்து இந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். ‘அப்பா’ என்று அவன் கேட்கும்போது அன்று முழுவதும் குடித்து போதையில் இருப்பாள். அதனால் அவன் ‘அப்பா’ என்ற சொல்லையே உபயோகிப்பது இல்லை.

அவனை விரும்பி வந்த பெண் வேறு வீடு பார்த்து தனியாக சென்றுவிடலாம் என்று அடிக்கடி நச்சரிக்க அவன் வலுக்கட்டாயமாக மறுத்தான். “அம்மா தனியா இருப்பா. போக வேண்டாம்.. இங்கேயே இரு” என்றான். ஆறு மாதங்கள் அவனோடு வாழ்ந்து அவனைவிட்டு பிரிந்து அம்மாவீ டு சென்றவள் அவன் குழந்தையைப் பெற்று குழந்தையில்லாத தம்பதி ஒருவருக்கு வளர்க்க கொடுத்துவிட்டு வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொண்டாள். அவன் உயிர் பிரிந்தாலும் எங்கோ அவன் உயிர் வாழ்கிறது.

நான் சொல்லி முடித்தவுடன், “அப்படியா” என்றாள் நிபி

“ஏன்?”

“ஒரு மாதத்திற்கு முன் அவன் இங்கு வந்தான். தோள் பை ஒன்றைக் கையில் வைத்தபடி.” என்றாள். அப்போது வாடிக்கையாளர்கள் யாரும் இல்லை.

“வந்தவன் என்னிடம் அம்மு உன்னை ரொம்ப பிடிக்கும் அதிலும் உன் கண்கள் அவ்வளவு வசீகரமானவைகள் அம்மு. பல மாதங்களாக அதோ தூரத்தில் தெரியும் டீக்கடையில் டீ குடித்தவாறே உன்னை நான் தினமும் கவனிப்பேன்.”

“கண்ணாடி கதவுகள் வழியே அம்முவின் கண்கள் மட்டும் காண்பேன்.”

“நான் தூங்கும்போது அம்மு உன் கண்கள் என்னைத் தொந்தரவு செய்யுது.”

“அம்மு உன்னை நான் விரும்புறேன்.”

“நான் குடிக்கக் கூடியவன். உன்னால் மட்டும் என்னை திருத்த முடியும் அம்மு”

“தெனமும் வேலைக்கு போவேன் சம்பாதிக்கிறேன். வீடு சின்னது. “

“நான் பள்ளிக்கூட வாசல் கூட போனதில்ல.”

அம்மு என்னை விரும்பினால் நான் வாழ்வேன்.” அப்படின்னு சொன்னான்.

இடையில் வந்த வாடிக்கையாளரை கவனித்து வேலையை முடித்துக் கொடுத்து விட்டு மீட்டும் அவன் பேச்சைத் தொடங்கினாள் நிபி.

“எனக்கு என்ன சொல்லன்னே தெரியல. அவனைப் பார்த்துச் சொன்னேன், “அண்ணா எனக்கு அடுத்த இரண்டு நாளில் கல்யாணம்”

“அவன் அத காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை. பிறகு முதலாளி வந்ததும் சொல்லிக் கொடுத்தேன். அவனைத் திட்டி அனுப்பினார். அதன் பிறகு அவன் வரவேயில்லை.”

“நானே பத்து வருடங்களாக என்னவனைக் காதலித்து பல போராட்டங்களுக்குப் பிறகு திருமணத்தில் வந்து முடிஞ்சிருக்கு. குறிப்பா காதலித்த நாள் முதல் என் கணவனாகப்போறவரை அம்முன்னு தான் கூப்பிடுவேன். கல்யாணத்திற்கு என்ன புடவை எடுக்கலாம், நகை எடுக்கலாம்னு நாங்க பேசிக்கிட்டு இருக்கிறப்ப இவன் இப்டிச் சொன்னது பெரும் கோவமா வந்துச்சி”

“அப்போ கல்யாணம் ஆனத மறச்சி எங்கிட்ட பொய் சொல்லியிருக்கான்”

நான் சிரித்துக் கொண்டே சொன்னேன், “உன் கண்கள் உண்மையில் வசீகரமானதுதான்”.

“இத்தனை நோய்களை வச்சிக்கிட்டு அவனுக்கு ஒரு காதல் கேட்டுருக்கு”

“ஒரு வேளை இந்த எண்ணத்தால் கூட உயிர்வாழ சாத்தியம் இருந்திருக்கும்” என்றேன்.

வாடிக்கையாளர்கள் வரவே நான் எனது வேலையைச் செய்ய ஆரம்பித்தேன்.

அவள் செல்போன் அடித்துக்கொண்டேயிருந்தது அதில், ‘அம்மு காலிங்’ என வந்தது.

நான் மேலும் புன்னகை செய்தேன்.

மாலை நேரம் வீடு வரும்போது அந்த சிறிய ஆட்டுக்குட்டியை பிடித்து கயிற்றால் கட்டியபடியே சொன்னாள்.

“குட்டியே அம்மு, இங்க வா. பச்ச இலயா இருந்தாத்தான் தின்னுவியா? இந்த பய அதுக்கு பழக்கப்படுத்தி வச்சிருக்கான்” மகன் வீட்டில் இருப்பதுபோலவே அவனைத் திட்டினாள்.

“போக்காளன் என்ன வேலை செய்திருக்கான். இத யாருக்கிட்டையாவது வித்துடனும்” நான் ஆட்டின் கண்களைப் பார்த்தேன்.

அது அம்முவின் கண்கள் இல்லை.

-amuthaarthi7870@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button