
The Lunchbox (2013)
Dir: Ritesh Batra | 105 min | Hindi | Netflix
பெருநகர வாழ்க்கை அங்க வாழ ஆசைப்படுறவங்களுக்கு வேணா கனவு வாழ்க்கையா இருக்கலாம். ஆனா, அங்க வாழ்ந்துகிட்டு இருக்கவங்களுக்கும் அது அப்படியானதா தான் இருக்கும்னு நம்மால உறுதியா சொல்ல முடியுமா? பெருநகர வாழ்க்கை நிறைய இலவச இணைப்புகளை அங்க வாழுற மனுசங்களுக்குத் தருது. அதுல மிக முக்கியமானது இயந்திரத்தனம். அங்க எல்லாரும் கால்ல சக்கரத்த கட்டிக்கிட்டு பறக்குறவங்க இல்ல. மாறா தங்களோட வாழ்க்கையோட பெரும் பகுதிய கடிகார முட்கள்ல கட்டித் தொங்கவிட்டிருக்கவங்க. அன்புக்காக ஏங்கித் தவிச்சுக்கிட்டே கிடக்குற அவங்க பலரோட மனசு, அதே அன்பை நெருக்கமா இருக்கவங்களோட கூட பகிர வழியில்லாம பரபரத்துக்கிட்டே திரியுது. இப்படியான வாழ்க்கை முறை நிச்சயம் வரம் கிடையாது.
ஒருத்தர் விரும்பித் தனக்கென தேர்ந்தெடுக்குற தனிமை வரம்னா, வேறு வழியே இல்லாம, ஏன் விருப்பமே இல்லாட்டாலும் ஒருவர் மேல திணிக்கப்படுற தனிமை சாபம் தான். இந்த விரும்பாத் தனிமை ஆளையே விழுங்குற பூதம். தன்னோட தனிமைக்குள்ளயே கிடந்து வேகுற மனுசங்களுக்கு கொஞ்சமா கொஞ்சமா அன்பு, சக மனுசங்க மேல இருக்குற பரிவு, இரக்கம் போன்ற இயல்பான நல்ல குணங்கள் மரத்துப் போயி, நாளடைவுல மறந்தே போயிடும். அவங்க ஏறத்தாழ ஒரு நடைப்பிணம் போல வாழ்க்கைய வாழாம, கடனேன்னு கடத்திக்கிட்டு இருக்குறவங்களா மாறிடுறாங்க. இப்படி மும்பை மாதிரியான ஒரு பெருநகரத்துல தங்களோட தனிப்பட்ட வாழ்க்கையில வாட்டி எடுக்கிற தனிமையில, அன்பே இல்லாம காய்ஞ்சு கிடக்கிற சில மனிதர்களுக்கிடையில துளிர்க்குற ஒரு எளிமையான தூய அன்பு என்னென்ன மாயாஜாலம்லாம் நிகழ்த்த முடியும்கிறது தான் ரித்தேஷ் பத்ராவுடைய ‘The Lunchbox’
இலா ஒரு இளம் குடும்பத் தலைவி. பொறுப்பானவள். அற்புதமா துவங்குன அவளோட திருமண வாழ்க்கை இப்போ – ஒரு அன்பு மகள் காதலுக்கான சாட்சியா இருந்தும் – அவ்வளவு சிறப்பா இல்ல. வெறும் ஒரு உறவா மட்டுமே எஞ்சி நிக்குற தங்களோட மண வாழ்க்கையில இருந்து காணாமப் போயிட்ட அந்த காதலை மீட்டு எடுத்து எப்படியாவது இழந்த வசந்த காலத்த திரும்பவும் பிடிச்சிடணும் அப்டிங்குற முனைப்பு அவளுக்குள்ள அடங்காம எரியுது. அதுக்கு அவளுக்கு தெரிஞ்ச வழி சமையல். கணவன் ராஜீவுக்கு பிடிச்ச உணவுகளச் சமைச்சு எப்படியாவது அவனோட கவனம் தன் மேல திரும்புற மாதிரி செய்ய கடுமையா முயற்சி செய்றா இலா.
மும்பையில வேலைக்கு போற பலரும் மதியவேளை சாப்பிடறது அவங்க மனைவிமார்களோட தயவால மட்டும் இல்ல. சமைக்கப்பட்ட உணவுகள பொறுப்பா நேரத்துக்கு எடுத்துட்டு வர்ற டப்பாவாலாக்களாலயும் தான். அவங்க தான் உண்மையிலயே காலாகாலத்துக்குமான ஸ்விகீ டெலிவரி பாய்ஸ். தினசரி பல ஆயிரக்கணக்குல உணவுகளை டெலிவரி செஞ்சாலும், சரியான ஆளுக்கு சரியான லஞ்ச் பாக்ஸ் போவது மாதிரி பிசிறில்லாம கச்சிதமா வேலையைச் செய்வது அவங்களோட தனிச்சிறப்பு. அவங்களோட வேலை செய்யுற முறைய வெளிநாடுகல்ல இருந்து வந்து ஆய்வு பண்ணி அதிசயப்பட்டு போயிருக்காங்க. அது ஒரு பெரிய நெட்வொர்க். இப்படியான நேர்த்தியான டெலிவரி முறையில ஒரு சின்னத் தப்பு நடந்து போகுது (கதையோட சுவாரசியத்துகாகத் தான்). அது இலா தன் கணவனை ஈர்க்குறதுக்காக செஞ்சு அனுப்பின லஞ்ச் பாக்ஸ் தவறுதலா மாறிப் போயி, இன்னும் ஒரு மாசத்துல ஓய்வு பெறப் போற அக்கவுண்டண்ட் சாஜன் பெர்னாண்டஸ் கையில போய் சேருது. மனைவிய இழந்து தனிமரமா தவிக்கிற அவருக்கு தஞ்சம் வீட்டுக்கு பக்கத்துல இருக்குற ஒரு மெஸ் தான். அவங்க அனுப்புற சுமாரான சாப்பாட்டை சாப்பிட்டு நாக்கு செத்துப் போயிக் கிடக்குற பெர்னாண்டஸ், ருசியான உணவை விடுவாரா! முழு டப்பாவும் காலி.
நம்ம இலாவுக்கு ஆதரவா இருக்குற ஒரே தோழி, மேல் வீட்டு ஆண்டி திருமதி தேஷ்பாண்டே தான். அவங்க தான் இவளுக்கு அந்தரங்க ஆலோசகரும் கூட. தான் ஏங்கிக் கிடக்குற அன்பையும், கவனத்தையும் கணவன்கிட்ட கேட்கக் கூட பயந்து கிடக்குற சராசரி இந்திய மனைவி அவள். இந்த உணவை வச்சு ராஜீவை கவர்ற யோசனை கூட ஆண்டி உபயம் தான். காலி டப்பாவைப் பார்த்ததும் ஒரே சந்தோஷம் இலாவுக்கு. உடனே ஆண்டிகிட்ட மகிழ்ச்சியை பகிர்ந்துக்கிறா. ஆனா, சாயங்காலம் அவன் வந்ததும் நாசூக்கா சாப்பாடு பத்திக் கேட்குறப்போ தான், அவன் பதிலை வச்சு, உணவு மாறி வேறு யாருக்கோ போயிருப்பதைத் தெரிஞ்சுக்கிறா. மறுநாள் ஆண்டியோட யோசனையின் பேரில் உணவோட சின்ன கடிதம் ஒன்றையும் வச்சு அனுப்புறா. தன் கணவனுக்கு போக வேண்டியது தவறுதலா மாறிப் போயிட்டதை அதுல குறிப்பிடுறா. அடுத்த நாளும் சரியா தப்பா (!) சாஜன்கிட்டையே அந்த லஞ்ச் பாக்ஸ் போகுது. அவரு இலாவோட கடிதத்த வாசிச்சிட்டு சாப்பிடுறார். அப்புறமா இன்னைக்கு உப்பு கொஞ்சம் தூக்கல்னு பதில் அனுப்புறாரு. அதை வாசிச்சதும் ஒரே ஆச்சரியமா போகுது இலாவுக்கு. என்ன குசும்பு இந்த ஆளுக்குன்னு கூட அவள் நினைச்சிருக்கலாம். ஆனா, காட்சிகள் நகர நகர நாம பெர்னாண்டஸ் பத்தி நிறையவே தெரிஞ்சுக்கிறோம்.
மிகத் திறமையான அக்கவுண்டண்ட் சாஜன் பெர்னாண்டஸ். இன்னும் ஒரு மாசத்துல ஓய்வு பெறப் போறவர். மனைவிய இழந்துட்டு மும்பை பெருநகரத்துல தனிக்கட்டையா வாழ்க்கையை ஓட்டுறவர். நல்ல சம்பளம் வர்ற ஒரு நிரந்தர வேலை கிடைச்சா எல்லாமே கிடச்ச மாதிரி. இது தான் பல பேரோட எண்ணமா இருக்கும். ஒருவகையில அது சரி தான். ஆனா, அது கிடச்சும் தனிமையாவே வாழ சபிக்கப்பட்ட வாழ்க்கை எவ்வளவு மோசமானதுன்னு நாம் இவர மாதிரி மனுசங்க வாழ்க்கையைப் பார்த்துப் புரிஞ்சுக்கலாம். பணம் கஷ்டப்படாத ஒரு வாழ்க்கை வாழ மட்டும் தான் உதவி செய்யும். புழங்க புழங்கத்தானே அன்பு பெருகும். அதன் ருசி மனசு அறியும். மனைவியின் இறப்புக்குப் பிறகு இவருக்குத்தான் அப்படியான கொடுப்பினை இல்லையே! அதனால அன்பு புழங்காத அவரோட மனசு இறுகிப் போய் கிடக்கு. எப்பவுமே ஏதோ முக்கியமான வேலை செஞ்சுக்கிட்டு இருக்க முகபாவனையே அவருக்கு நிரந்தரமா அமைஞ்சு போன மாதிரி தான் தோணும். யாரோடவும் சிரிச்சுப் பேசுற வழக்கமே இல்லாத மனிதர் அவர். வீட்டுக்கு பக்கத்துல இருக்குற குழந்தைங்க கூட அதுல விதிவிலக்கு இல்ல. இப்படியான சூழ்நிலைல இருக்க இவரைப் புரிஞ்சுகிட்டோம்னா, இவரால அப்படித் தான் பதில் எழுத முடியும்னு நாமே புரிஞ்சுக்குவோம். அது குசும்பு இல்ல, மாறா அது தான் அவரோட இயல்புனு நமக்கு விளங்குது.
அடுத்த நாளும் டப்பா சரியா மாறி போகுது அவர் கைக்கே. உணவோட கூடவே ஒரு சின்ன குறிப்பு எழுதுன கடிதம். அதுக்கு அவரும் பதில் அனுப்புறாரு. இலாவோட கடிதங்கள் எல்லாமே ஹிந்தியில இருக்க அவரோட பதில்கள் எல்லாமே ஆங்கிலத்துல இருக்கு. அந்த காலத்துல நாம் கேள்விப் பட்டிருப்போமே, பேனா நண்பர்கள்னு. ஒரு விதத்துல இவங்களும் அப்படித் தான். தன் கணவனோட கவனத்தை பெற முடியாத தன் சோகத்தை அவள் கொஞ்ச கொஞ்சமா முகமே தெரியாத சாஜன்கிட்ட பகிர்ந்துக்க, பதிலுக்கு அவரும் தன் தனிமை நிரம்பி வழியுற வெறுமையான வாழ்க்கையோட கதையை பகிரத் துவங்குறாரு. ஒரு இடத்துல, “சொல்லிப் பகிர்ந்துக்குறதுக்கு யாருமே இல்லாதபட்சத்துல நாம எல்லா விசயங்களையும் மறந்து போயிடறோம்னு நினைக்கிறேன்” அப்டீன்னு அவர் சொல்ற வரிகள் அவ்வளவு வலி நெறஞ்சது. அவங்க ரெண்டு பேர் வாழ்க்கையிலையும் பெரிய பள்ளமா கிடக்குற வெறுமைய அக்கறையான வார்த்தைகள் மூலமா நிரப்பிக்கிறாங்க. அது அவங்களுக்கு சொல்ல முடியாத ஆறுதலத் தருது. மதிய உணவு எப்ப வருமோன்னு காத்திருந்து அவர் அவளோட கடிதத்தை படிக்கிறார். திரும்பவும் எப்படா டப்பா வீட்டுக்கு வரும் என இலாவும் காத்துக் கிடந்து அவரோட பதில் கடிதங்கள வாசிக்கிறா. அவங்களுக்குள்ள இருக்குறது காதல்னு சாயம் பூச அவசியமில்லாத ஒரு அன்புனு சொல்லலாம். அவங்களோட துவண்டு போயிருக்குற மனசுக்கு சாய தோள் தருவது போல இருக்கு அவங்க எழுதிக்கிற கடிதங்கள்ல இருக்குற வார்த்தைகள். அதுல அவங்க சாஞ்சுக்கிறாங்க. அவ்வளவு தான்.
இதுக்கு இடையில படத்துல இன்னோரு மிக முக்கியமான கதாபாத்திரம் உள்ள வருது. அது ஓய்வு பெறப்போற சாஜன் பெர்னாண்டஸ்குப் பிறகு அவர் இடத்துல வரப் போற அஸ்லம் ஷேக். வேலையை சாஜனே அவருக்கு கத்துக் குடுத்துட்டா நல்லா இருக்கும்னு நினைக்கிற அவரோட பாஸ் ஒரு மாசத்துக்கு முன்னாடியே அஸ்லம்ம உதவியாளரா கூட வச்சுக்க கேட்டுக்குறாரு. அஸ்லம் ரொம்ப நட்பா பழக முயற்சி பண்ணாலும் தன் இறுக்கத்தை சாஜன் தளர்த்திக்கவே மாட்டேங்கிறாரு. அணுக முடியாத பாறை போல அடச்சுக் கிடக்கிற அவர்கிட்ட எப்படி பழகுறதுன்னு புரியாம முழிக்கிறாரு அஸ்லம். துவங்கத்துல அவரோட பேச்சும் நடவடிக்கையும் அவர் ரொம்ப குல்லா போடுற ஆள் போலவும், யாரையும் பகைச்சிக்காத காரியவாதி போலவும் தோணும். செயற்கையான பணிவோடயும் அன்போடையும் அவர் பழகுறார்னு கூட தோணலாம். ஆனா, சில காட்சிகள் வழியா எப்படி நாம சாஜன் அப்டிங்குற மனிதர தனிப்பட்ட முறையில புரிஞ்சுக்கிறோமோ அது போலவே அஸ்லம், சாஜன்கிட்ட பேசுற ஒரு சில வசனங்கள் வழியாவே நாம் அவரை புரிஞ்சுக்கிறோம்.
துவக்கத்துல அஸ்லமை சுத்தமா கண்டுக்காம இருக்குற சாஜன் வேலையையும் சொல்லித்தராம அலைக்கழிக்கிறாரு. ஒரு கட்டத்துல வெறுத்துப் போன அஸ்லம், தன்னைப் பத்தி சுருக்கமா அவர்கிட்ட சொல்றாரு. அதன் வழியா நமக்குத் தெரியவரும் முக்கியமான தகவல் அஸ்லம் ஒரு அநாதை அப்டிங்குறதுதான். யாருமற்ற தன்னோட வாழ்க்கையில யார் நுழைஞ்சாலும் அவங்களை தக்க வச்சுக்கணும் அப்டிங்குற ஒரு ஏக்கம் அவனுக்கு உள்ளூற இருக்கு. அது தான் அவனை மிதமிஞ்சின பணிவோட குழைவா பேச வைக்குது. இலா போலவோ, சாஜன் போலவோ இல்லாம அவனோட அனாதை வாழ்க்கையில தனிமை அவன் கூடவே பிறந்திருக்கு. அன்புங்கிற சின்ன மேகம் கொஞ்சம் நேரமாவது தன் மேல தங்கிடாதா அப்டிங்குற தவிப்பு அவனுக்குள்ள எப்போதும் இருக்குது.
இலா சாஜன் என்ற ரெண்டு பேருக்கும் இடையில பூக்கிற அந்த தூய்மையான அன்பு, அவங்க வாழ்க்கையை மட்டுமில்லாம அவங்கள சுத்தி இருக்குறவங்க வாழ்க்கையையும் அழகாக்குதுன்னு சொல்றதுக்கே திரைக்கதையில படைக்கப்பட்டதுபோல தோணுது அஸ்லம் கதாபாத்திரம். மெல்ல நாம சாஜன் இளகி அஸ்லமோட நெருக்கமாகுறதப் பாக்குறொம். அவருக்கு கல் மனசு இல்ல. அவரோட மனைவியோட இறப்புக்குப் பிறகு அவருக்குனு அன்பைப் பகிர்ந்துக்க ஆளே இல்ல. அதனால காய்ஞ்சு போன தரிசா மனசு மாறிப் போயிருக்கு. இப்போ இலாவோட அன்பு மழைச் சாரலா பேஞ்சு அவரை ஈரமாக்கி இருக்கு. அது தான் விசயம்.
முப்பத்தி அஞ்சு வருட பணி வாழ்க்கையில தப்பே செய்யாத சாஜன், அஸ்லம் செஞ்ச ஒரு பெரிய தப்ப தான் செஞ்சதா பழிய ஏத்துக்கிற அளவுக்கு அவனுக்கும் நெருக்கமான ஒரு இடத்த தன் மனசுல குடுக்குறாரு. அவங்க வீட்டுக்கு வரும்படி அஸ்லமோட தொடர் நச்சரிப்புக்கு மதிப்பு கொடுத்து ஒரு நாள் இரவு உணவுக்குப் போறாரு சாஜன். அங்க அஸ்லம் மனைவி மெஹ்ரூனிசா விசாரிக்க, பதிலா தன் மனைவி இறந்துட்டாங்க எனச் சொல்ல, கேட்கக் கூடாததை கேட்டுட்டோமே அப்டினு கொஞ்சம் தர்மசங்கடமா அவங்க உணர, உடனே சாமாளிக்கிற சாஜன், “ ஆனா, எனக்கு தோழி ஒருத்தி இருக்கா” அப்டினு சொல்லி ஆச்சரியப்படுத்துறாரு. அவர் தன்னைச் சுத்தி தானே கட்டிக்கிட்ட ஒரு கூட்டை உடைச்சிட்டு முதல்முறையா இவங்கள அனுமதிக்கிறார் என்பத நாம உணருற கட்டம் அது. உணவுக்கு பின் அஸ்லம் தாங்க ரெண்டு பேரும் இன்னும் முறைப்படி திருமணம் செஞ்சுக்கலன்னும், தன்னை மட்டும் நம்பி மெஹ்ரூனிசா வந்திட்டதாவும், இப்போ தான் அவங்க வீட்டுல கல்யாணத்துக்கு ஒத்துகிட்டதையும் பகிர்ந்துக்கிறாரு. கூடவே ஒரு வேண்டுகோளும் வைக்கிறாரு. அவளுக்குப் பெரிய குடும்பமே இருக்க, யாருமில்லாமல் இருக்குற தன் பக்கமிருந்து திருமணத்தில் கலந்துக்கணும்னு சாஜனிடம் கேட்டுக்கிறாரு. அதை அவரும் ஏத்துகிறது, இலா வழியா கிடச்ச அன்பை பகிர ஒரு வாய்ப்பு போல அவரு எடுத்துகிறதா நினைக்கத் தோணுது நமக்கு.
இடையில இலா தன்னோட கணவன் ராஜீவுக்கு வேறு ஒரு பெண்ணோட தொடர்பு இருக்கிறத உணர்வது மாதிரி நிகழ்ச்சிகள் நடக்குது. ஏற்கனவே சரிஞ்சிகிட்டு இருக்க தங்களோட திருமண வாழ்க்கை மேல இருக்க சலிப்பை இது இன்னும் பல மடங்காக்குது. நொந்து போயிருக்க அவளுக்கு சாஜனோட கடித வரிகள் தான் ஒரே ஆறுதலா இருக்கு. அவளுக்கு அவரை நேரில் சந்திக்கணும்னு தோணுது. அவங்களுக்குள்ள தங்களோட வயசு பத்தின எந்த ஒளிவு மறைவும் இல்லாததால காமமோ, காதலோ பெரிசா இல்லாத, அதுக்கு வெளியில இருக்க ஒரு உறவா தான் அவங்க அதை அணுகுறாங்க. மறு நாள் மதியம் தான் அவர சந்திக்க ஒரு ரெஸ்டாரெண்ட் வர்றதா இலா சொல்றா. சாஜனும் ரொம்ப ஆர்வமா தன்னைய அந்த சந்திப்புக்கு தயாரிச்சுக்கிறார். சொன்ன நேரத்துக்கு இலா அவருக்காக அங்க காத்திருக்கா. ஆனா, அவர் வரல. ரொம்ப எதிர்பார்த்து ஏமாந்தவளா இருக்க இலா அதை ஜீரணிக்க முடியாம தவிக்கிறா. மறுநாள் அவருக்கு காலியான டிபன்பாக்ஸில் ஒரு கடிதம் மட்டும் வருது.
அவர் அவ பக்கம் இருக்க கோபத்தோட நியாயத்தை புரிஞ்சுக்கிறாரு. பதில் எழுதுறாரு. அதுல உண்மையில தான் அங்க வந்ததாகவும், அவளை தூர அமர்ந்து கவனிச்சதாவும் சொல்றாரு. அவள் ரொம்ப அழகா, இளைமையோட இருக்கறத பார்த்ததும் அவளோட வாழ்க்கைக்குள்ள பொருந்தவே முடியாத தான் சந்திச்சு தொந்தரவு செய்ய மனசில்லாம விலகி நின்னதா சொல்றாரு. அந்த இடத்துல தான் இது ரொம்ப அழகான அன்பு வழியுற ஒரு கதையா உயருது. அவள் தன்னொட வாழ்க்கையத் தொடரும்படி கேட்டுக்கிறாரு. தொடர்ந்து புற்று நோயால அவதிப்பட்ட இலாவோட அப்பா இறந்த வீட்டுல அவளோட அம்மாவோட திருமண வாழ்க்கையும் எவ்வளவு வெறுமையானதுன்னு அவங்க வாயாலயே சொல்லத் தெரிஞ்சுக்கிற அவளுக்கு பலரோட வாழ்க்கையும் இப்படி பொறுப்புகளாலேயே நசுங்கிப் போயிருக்குன்னு உணர முடியுது. அவளுக்கு பூடான் போகணும்னு ரொம்ப ஆசை. அங்க இருக்க மனிதர்களோட சம்பளதை விடவும் அவங்க சந்தோஷத்தை வச்சு மதிப்பிடப்படுறாங்கன்னு கேள்விப்பட்டதுல இருந்தே பூடான் மேல ஒரு ஈர்ப்பு வருது. அவ முன்னமே அது பத்தி சாஜனுக்கு எழுதியிருப்பா! அதுக்கு அவரு சேர்ந்தே போகலாமா அப்டினும் சொல்லி இருப்பாரு!
அப்பாவோட மரணம் அம்மாவோட தவிப்பு எல்லாம் பாத்து, அவ சாஜனை எப்படியாவது நேருல பார்க்கணும்னு கஷ்டப்பட்டு இடத்தைக் கண்டுபிடிச்சு போயி அவளால பாக்க முடிஞ்சது அஸ்லமை மட்டும் தான். சாஜன் ஓய்வு பெற்று நாசிக் போயிட்டதா அஸ்லம் சொல்றாரு. இலா அனுப்ப முடியாத ஒரு கடைசி கடிதத்தை சாஜனுக்கு எழுதுறா. அவர் நாசிக் போயிட்டதாவே நம்புற அவ, தான் கணவனை விட்டுப் பிரிஞ்சு குழந்தையோட பூடான் போகப் போறதா எழுதுறா. ஆனா, சாஜன் நாசிக் போகல. போக நினைச்சு அப்புறமா மனச மாத்திகிட்டு திரும்பிடறாரு. டப்பாவாலாக்களோட துணையோட இலாவத் தேடி அவர் கிளம்புறதோட படம் முடியுது.
உண்மையில ரொம்ப டிராமாடிக்கான படம் தான். ஆனா, அது கடத்துற உணர்வு, அதுல கதாபாத்திரங்களா புழங்குற மனிதர்களுக்குள்ள மெல்ல துளிர்க்குற அன்பு, அது பிரம்மாண்டமா வளர்ந்து வளர்ந்து ஒரு பெரிய நிழல, ஒரு ஆதரவை தர்ற மேஜிக் இப்படி எல்லாத்தையும் பாக்குறதுக்கு நெகிழ்ச்சியா இருக்கு. அன்பைப் போல துணை மனுசங்களுக்கு வேறு எதுவும் இருக்கவே முடியாது. அதுக்கு மாற்று எதுவுமே இல்லை என்பதையும் நாம உணர்வுப்பூர்வமா புரிஞ்சுக்கிற படைப்பா இது இருக்கு. முக்கிய கதாபாத்திரமான சாஜனை ரத்தமும் சதையுமா நம் கண் முன்னாடி அவ்வளவு நுட்பமான நடிப்பால இர்ஃபான் கான் தத்துரூபமா கொண்டு வந்து நிறுத்துறாரு. பல இடங்கள்ல, சாஜன் கதாபாத்திரத்தோட நிதானத்தை தன்னோட உடல்மொழியிலயும், வெறுமையான மனசை வெறும் கண்ணசைவுகளாலேயே நமக்கு படம் பிடிச்சுக் காட்டுறாரு. ரொம்ப உயிர்ப்பான படம் என்பதால படத்தோட ஒன்றிப் போய் பார்த்துக்கிட்டிருந்த போதும், அதையும் தாண்டி, ‘சே! இவ்வளவு அற்புதமான கலைஞன் இவ்வளவு சீக்கிரம் போயிட்டாரே’ அப்டீன்னு மனசு முணுமுணுக்குற அந்த கணத்துல ஒரு அசலான கலைஞன் தான் இறந்தாலும் தன் கலைநுட்பத்தால நம்ம மனசை ஜெயிப்பான்னு நினைச்சுக்கிட்டேன்.
படம் அடிப்படையில பேசுறது நாகரீக நகர வாழ்க்கைமுறையில, மனிதர்களைத் துரத்துற தனிமையையும், வெறுமையையும் பத்திதான். தனிமையும், அன்புக்கான மன ஏக்கதையுமே இந்த பாத்திரங்கள் நமக்கு எடுத்துக் காட்டுது. படத்துல வருகிற துணை பாத்திரங்கள் டிராமாவுக்குள்ள அத்தனை அழகா பொருந்துறாங்க. அது ஒரு காட்சியில கூட முகமே காட்டாம வெறும் கரிசனம் நெறஞ்ச குரலா மட்டுமே வரும் திருமதி தேஷ்பாண்டே ஆகட்டும், இன்னோரு முக்கிய பாத்திரமா வர்ற அஸ்லம் ஆகட்டும், ரொம்பவே அழகா எழுதப்பட்ட கதாபாத்திரங்கள். படம் முடிஞ்ச பிறகு ஒரு வேளை நீங்க அழலாம் அல்லது படம் தந்த பார்வை அனுபவத்தை எப்படி எடுத்துக்கிறதுன்னு தெரியாம அப்படியே கொஞ்சம் நேரம் வெறிச்சுப் போயி உட்கார்ந்து இருக்கலாம். இப்படி இருந்தாலும் படம் உங்களை நிச்சயமா பாதிக்கும். வேலைக்கு போறப்போ டிபன் பாக்ஸ் கொண்டு போறவரா நீங்க இருந்தீங்கன்னா, மதியம் அதை சாப்பிட மேசையில வைக்கையில உங்களை அறியாம அதை மென்மையா வருடிக் கொடுத்தப்படி சிரிப்பீங்க. அப்போ இன்னும் உங்க மனசுக்குள்ள படம் முடிவில்லாம ஓடிகிட்டிருக்கும். அங்க நிச்சயம் சாஜன், இலாவோட முகவரியை கண்டுபிடிச்சு, அவங்க ரெண்டு பேரும் நேரில சந்திச்சிருப்பாங்க.
(தொடரும்…)