இணைய இதழ்இணைய இதழ் 55தொடர்கள்

பல’சரக்கு’க் கடை; 4 – பாலகணேஷ்

தொடர் | வாசகசாலை

கணேஷும், கம்ப்யூட்டரும்!

சென்ற அத்தியாயத்தில் சொன்ன, வேலைதேடி மதுரையில் பேயாய் அலைந்து கொண்டிருந்த அதே காலச்சதுரம். வேலைதான் கிடைக்கவில்லையே தவிர, வருமானம் இருந்தது எனக்கு. காலையில வைதீகத்துக்கு அசிஸ்டெண்ட், பிறகு 10 மணிக்கு மேல் டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்ல இன்ஸ்ட்ரக்டர், மாலையில 30 வீடுகளுக்கும் மேல வீடு வீடாப் போய் புத்தகங்கள் தர்ற சர்க்குலேஷன் லைப்ரரி. மூன்று குறு வேலைகளும் நல்ல வருமானத்தையும், அப்ளிகேஷன் போடறதுக்கு வீட்டோட கைய எதிர்பாக்காமயும் வெச்சிருந்துச்சு.

அப்பத்தான் ஒருநாள் காலைல, கனரா பாங்க்ல வேலைபாக்கற என் அத்தை பையன் ஸ்ரீதரன் வீட்டுக்கு வந்தான். வந்தவன், “டேய், டவுன்ஹால் ரோட்ல ‘ப்ளியாடிஸ்’ன்னு ஒரு கம்ப்யூட்டர் சென்டர் இருக்கு. அவங்களுக்கு நல்லா இங்கிலீஷ், முக்கியமா தமிழ் டைப்பிங் தெரிஞ்ச ஆள் வேணுமாம். உடனே போய்ப் பாரு. சாலமன் அனுப்பினாருன்னு என் ப்ரெண்டோட பேரைச் சொன்னாலே வேலைல சேத்துக்குவாங்க. போ..”ன்னான்.

“என்னடா பேரு இது ப்ளியாடிஸ்ன்னு..? வடமொழிப் பேரா..?”

“அது என்ன மொழியோ..? நட்சத்திரக் கூட்டம்னு அர்த்தமாம் அந்தப் பேருக்கு. இப்ப இந்த ஆராய்ச்சி ரொம்பத் தேவையாடா..? வேலை கிடைக்குதுன்னா போவியா..?”ன்னு முறைச்சான் ஸ்ரீதரன். 

ரைட்டு, கிளம்புடா பாண்டியான்னு (சைக்கிள் பேரு. ஹி… ஹி…) அதைக் கிளப்பி, ஓடினேன் உடனே. ஆனா உள்ளுக்குள்ள கொஞ்சம் பயம்தான். கம்ப்யூட்டர்ன்னு ஒரு வஸ்து உலகத்துல இருக்குன்னு தெரியும். ஆனா, அது எப்டி இருக்கும், அத வெச்சு என்ன செய்யறது… அ,ஆ தெரியாதே எனக்கு. என்னத்த கம்ப்யூட்டரப் பாத்து, அதைக் கத்துக்கிட்டு…ன்னு மலைப்பு. ஆனாலும் ஏதோ குண்டு தைரியத்தோட (நானும் குண்டுதானே. ஹி… ஹி…) டவுன்ஹால் ரோடு போய், ப்ளியாடிசுக்குள்ள நொழைஞ்சேன்.

முன் ஹால்ல சேர்போட்டு, மூணு பேர் உக்காந்து பேசிகிட்ருந்தாங்க. அதுல உசரமா, அகல நெத்தியோட இருந்த ஒருத்தர், “வாங்க, என்ன வேணும்..?”ன்னாரு. அட, அவர் பேசும்போதுதான் தெரிஞ்சது, முயல்போல ரெண்டு தெற்று முன்பற்கள்! ஒரு செகண்ட் ‘ழே’ன்னு முழிச்சுட்டு, ஸ்ரீதரன் சொன்னதை கிளிப்பிள்ளையாட்டம் ஒப்பிச்சேன்.

“ஓ… சாலமன் அண்ணேன் அனுப்ச்சாரா..? ரைட். இன்னும் ரெண்டு மாசத்துக்கு காலேஜ் டெஸர்ட்டேஷன் (அப்டின்னா?) நெறைய வரும். கம்ப்யூட்டர்ல வொர்க் பண்ணி அனுபவம் உண்டுதானே..?”

“சார், கம்ப்யூட்டர்ன்னா எப்டி இருக்கும்னு கண்ணாலகூடப் பாத்ததில்லை சார்…”ன்னேன் லேசா வழிஞ்சபடி.

“சரி, வாங்க. இன்னிக்கு கம்ப்யூட்டர்ல டைப் பண்ணி ப்ராக்டிஸ் பண்ணிக்குங்க. நாளைலருந்து வேலைல சேந்துக்கலாம்..” என்றபடி எழுந்தார். என்னவொரு ‘உயர்ந்த’ மனிதர்!! என்னை அழைத்தபடி அடுத்திருந்த ஹாலுக்குள் நுழைந்தார். போகிற போக்கிலேயே எனக்காக ஃபிக்ஸ் செய்திருக்கும் தொகையைச் சொன்னார். மதுரையின் விலைவாசிக்கே கேவலமான தொகைதான் அது. இருந்தாலும் ஸ்ரீதரனுக்காகத் தலையாட்டி வைத்தேன்.

அவர் அழைத்துச் சென்ற ஹாலினுள் வரிசையாக பல டப்பாக்கள் படுக்க வைக்கப்பட்டு, அவற்றின் மீது டிவி ஸ்க்ரீன் போல ஒன்று வைக்கப்பட்டிருந்தது. (ஆஹா… குளுகுளுவென்று ஏசி!) எதிரே கீ போர்டு இருந்தது. ஒரு சேரில் என்னை அமரவைத்து, “இந்த கீபோர்டுலதான் நீங்க டைப் பண்ணனும். பண்ணினா இந்த ஸ்க்ரீன்ல தெரியும்..” என்று காட்டினார்.

“ஓ… இதான் கம்ப்யூட்டரா ஸார்..? எழுத்துல்லாம் இவ்ளவு ப்ரைட்டா கண்ணைக் கூச வெக்குதே..” என்றேன்- கலர் மானிட்டர்கள் இல்லாத அந்தநாளில் புழக்கத்திலிருந்த அதற்கு மோனோக்ராம் மானிட்டர் என்பது பெயர் என்பதை பின்னாளில் அறிந்தேன்.

லேசாகத் தலையில் தட்டிக் கொண்டு, “சார், இதுக்குப் பேரு மானிட்டர். கீழ இங்க இருக்கு பாருங்க… இதான் சி.பி.யூ. அதாவது, கம்ப்யூட்டர்.” என்று ஸ்க்ரீனுக்குக் கீழிருந்த டப்பாவைக் காட்டினார். வியந்து போய்ப் பார்த்தேன். இதுவா கம்ப்யூட்டர்..? என் கற்பனையிலிருந்த பிரம்மாண்ட வஸ்து இத்தனை சிறியதாக இருக்கிறதே!! (அன்றைய கம்ப்யூட்டர்கள் நிற்க வைக்கப்பட்டிருக்காது, படுக்க வைக்கப்பட்டிருக்கும். (அந்த ட்ரங்க்பொட்டி சைஸைப் பார்த்தே வியந்த நான், இன்றைய தினத்தில் அதோடு ஒப்பிடுகையில் குருவி சைசுக்கு இருக்கிற கம்ப்யூட்டர்களைப் பார்க்கையில்…)

அவர் -விஸ்வநாதன்.! ஆனால் அவர் பேரை ‘விசு’ என்றுகூடக் கூப்பிடாமல் ‘விஷ்’ என்று ஸ்டைலாக அழைத்தார்கள் – வேர்ட் ஸ்டார் என்றொரு மென்பொருளைத் திறந்து, ஒரு கோப்பை உருவாக்கித் தந்தார். பின் ஒரு ஆங்கில நாவலை என்னிடம் தந்து, “இதை டைப் பண்ணுங்க..” என்றுவிட்டு வெளியே போனார்.

டைப்ரைட்டரில் இம்ப்ரஷன் பேப்பரில் தெளிவாக விழ வேண்டுமென்பதற்காக விரல்களை நட்டக்குத்தலாக நிறுத்தி, அழுத்தி டைப் செய்தே பழகியவன் நான். கம்ப்யூட்டரிலும் அதையே பின்பற்ற ஆரம்பித்தேன். தடதடவென்று விரல்கள் ஓட, அசுர வேகத்தில் ஆறேழு வரிகள் டைப்பி முடித்திருப்பேன்.. பட்டென்று கதவைத் திறந்து கொண்டு ‘விஷ்க் விஷ்க்’ என வேகமாக நடந்துவந்தார் விஷ். 

“வெளில போய் உக்காந்தா, அஸ்பெஸ்டாஸ் ஷீட்ல மழை பெய்யற மாதிரி ‘தடதடதட’ன்னு சத்தம் கேக்குது. என்னன்னு பாக்கலாம்னு வந்தா, இங்க நீங்க கீபோர்டில குதிரை ஓட்டிட்டிருக்கீங்க. இதுல டைப்ரைட்டர் மாதிரி இத்தனை அழுத்தி டைப் பண்ண வேண்டியதில்லை கணேஷ். லைட் டச் குடுத்தாலே போதும். மெதுவா டைப் பண்ணுங்க..” என்றவர், அந்தக் குறுகிய நேரத்திற்குள் நான் ஆறு வரிகளைக் கடந்து விட்டிருந்ததை ஆச்சரியமாகப் பார்த்துவிட்டு வெளியே போனார்.

போனாரா..? போனவரால் நிம்மதியாகச் சேரில் உட்கார்ந்து அங்கிருந்தவர்களுன் பேச்சைத் தொடர முடிந்ததா..? விட்டேனா நான்..?

“விஷ் ஸாஆஆஆர்…” என்று மெகாபோன் இல்லாமலே அதன் சவுண்டுக்கிணையான மெகா அலறல் நான் அலறியதைக் கேட்டு பதறியடித்து மீண்டும் உள்ளே ஓடிவந்தார்.

“என்னாச்சுங்க..?”

“பாருங்க ஸார்… டைப் பண்ணிட்டே இருந்தனா..? திடீர்ன்னு நான் டைப்பினதெல்லாம் காணாமப் போய்டுச்சு. ஸ்க்ரீன்ல வேற என்னத்தையோ காட்டுது.”

ஸ்க்ரீனைப் பார்த்தார். “ஓ… இதுவா..? நீங்க கை தவறி ‘எஸ்கேப்’ கீயைத் தட்டிருக்கீங்க. மறுபடி அதைத் தட்டினா பழையபடி ஆய்டும். இங்க பாருங்க..” என்று இஎஸ்சி என்கிற கீயைத் தட்டினார். இப்போது மானிட்டரிலிருந்த மெனு கலைந்து, நான் டைப்பிய இடத்தில் வந்து நின்றது.

ஹார்ட் பீட் நார்மலாக, ‘ஹப்பாடா’ என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். 

“அதுசரி… ஸேவ் பண்ணீங்களா..?” என்றார் விஷ். சரியாகக் காதில் வாங்காமல், “அதெல்லாம் டெய்லி செய்வேன் ஸார். காலைலயே பண்ணியாச்சு..” என்று தாடையைத் தடவிக் காண்பித்தேன். (உண்மையில் நான் அப்போது மீசைகூட வைத்திருந்ததில்லை, டெய்லி ஷேவ்தான். அமிதாப்பச்சன் பாதிப்பு. ஹி… ஹி…)

லேசாக தலையில் தட்டிக் கொண்டார். தலையில் தட்டிக் கொள்வது அவரது மேனரிஸமா, இல்லை நான்தான் அப்படிச் செய்ய வைக்கிறேனா என்பதில் மைல்டாக ஒரு டவுட் எழுந்தது. “அட ராமா… அதைச் சொல்லலை நான். ஷேவ் இல்ல ஸார்.. ஸேவ்!” 

‘ஸே’வுக்கு வலிக்கிற அளவு அழுத்தி உச்சரித்தார். “நீங்க டைப் பண்றப்ப நாலு லைனுக்கு ஒரு தடவை தா இருக்கு பாருங்க, கண்ட்ரோல் கீ, இதை தட்டிட்டு ‘எஸ்’ ஒரு தடவை தட்னீங்கன்னா…” கையைக் காட்டி, “இந்த ப்ளாப்பில நீங்க டைப் பண்றது ஸேவ் ஆயிடும். அப்பறம் நாம எப்ப வேணாலும் ஃபைலைத் திறந்து எடுத்துக்கலாம்”

கருப்பாக, சதுரமாக நடுவில் ஒரு வெள்ளைத் தகட்டு வட்டத்துடன் இருந்த அந்த ப்ளாப்பி என்ற வஸ்துவை வியந்து பார்த்தேன். (இன்றைய தலைமுறை கண்ணால்கூடக் கண்டிருக்க வாய்ப்பில்லை).

அதற்கு மேலேயும் என்னைத் தனியாக விட்டுவிட்டுப் போகத் துணிச்சல் வரவில்லை ‘விஷ்’ ஸாருக்கு. என் அருகிலிருந்த சேரிலேயே அவரும் உட்கார்ந்து விட்டார். நான் டைப்புவதைப் பார்த்துக் கொண்டிருந்தார். நானும் டைப்பியபடியே எனக்குத் தோன்றுகிற சந்தேகங்களையெல்லாம் கேட்டு க்ளியராகிக் கொண்டிருந்தேன்.

லன்ச் டைம் வந்ததும், “ஓகே கணேஷ். இப்டித்தான் கம்ப்யூட்டரை ஹேண்டில் பண்ணனும். நீங்க நல்லாவே டைப் பண்றீங்க. நாளைக்கு காலைல பத்து மணிக்கு டூட்டில ஜாயின் பண்ணிடுங்க….” என்றபடி வடை கொடுத்தார், ச்சே, பசி மயக்கம், விடை கொடுத்தார்.

அந்தப் புராதன கம்ப்யூட்டருக்கு 386 என்று பெயர். பின்னாளில் நான் ‘தினமலர்’ நிறுவனத்தில் சேர்ந்த சமயம், அங்கே அப்போது அறிமுகமாகியிருந்த 486 என்ற கணிப்பொறியை வாங்கினார்கள். ‘ச்சே, கெட்ட ஸ்பீடு’ என்று வியந்தோம். பிறகு 486-ஐத் தூக்கிச் சாப்பிட ‘பென்டியம்’ வந்தது. ‘இதுக்கு மேல ஒரு ஸ்பீட் சாத்தியமே இல்ல’ என்று மட்டித்தனமாய் அதற்கும் வியந்தோம். இன்றைய ஜெனரேஷன் கம்ப்யூட்டர்கள் அளவில் குறைந்து, வேகத்தில் நிறைந்து பழையவற்தை தூக்கி விழுங்கி விட்டன. அதேபோலத்தான் சாஃப்ட்வேர்களும். காலந்தோறும் புதிய வசதிகளுடன், புதிதாக வந்து கொண்டே இருக்கின்றன.

அன்று முதன்முதலாக கம்ப்யூட்டரைக் கண்டு மிரண்ட நானும் இன்றுவரை விடாமல் அந்தந்த சாஃப்ட்வேர்களுக்கு என்னை அப்டேட் செய்து கொண்டு ஓடிக் கொண்டுதான் இருக்கிறேன். அத்தனைக்கும் அடிப்படை ‘தினமலர்’ தந்த பயிற்சி. என்ன கேக்கறீங்க..? பத்திரிகை அனுபவங்களா..? பத்திரிகை, படிப்பு, எழுத்துன்னு சொல்றதுக்கு எத்தனையோ இருக்குங்க. சொல்றேன். ஆனா, ஈதனைத்தையும் படிக்கறதுக்குத் தேவையான அடிப்படையான விஷயம் ஒண்ணு உங்ககிட்டத்தான் இருக்கணும் – பொறுமை! ஹி… ஹி…

(தொடரும்…)

balaganessh32@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. சுவாரஸ்யம்.  மதுரையில் இப்படி ஒரு இடத்தை நான் பார்த்ததில்லை.  வைதீக காரியம்?  நாராயணன் சாஸ்திரிகளைத் தெரியுமோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button