CODA (2021)
Dir: Sian Heder | American Sign Language / English | 111 min
பலதரப்பட்ட மனிதர்களின் அன்றாடங்களை, வாழ்க்கைப்பாட்டை அறிதல் என்பது கலையின் வழியாக நிகழ்கையில் அது மனதிற்கு நெருக்கமானதாகிறது. இரண்டாம் நிலை அனுபவத்தை பெறுகிறோம் எனினும் அப்படைப்பின் நேர்த்தியில் அது முதல் நிலை அனுபவத்திற்கு மிக நெருக்கமாக வருகின்ற வாய்ப்புகள் அதிகம். கலை / இலக்கியம் மனிதர்களை அவர்கள் பார்வைக் கோணத்திலிருந்து பார்த்துப் புரிந்து கொள்வதற்கும், அதன் வாயிலாக நாம் பெறுகிற பக்குவத்தோடு அவர்களை அணுகுவதையும் சாத்தியமாக்குகிறது. சுருங்கச் சொன்னால் கலை இலக்கியப் படைப்புகளை ஆத்மார்த்தமாய் கற்பது நம்மை இன்னும் மனிதம் நிறைந்தவராக மாற்ற வல்லது.
திரைப்படங்கள் என வருகையில் எனக்கு பொதுவாக Feel good cinema வகைப் படங்களில் பெரிதான ஈர்ப்பு இல்லை. அந்த சொற்பதமே கொஞ்சம் விநோதமாகப்படும். இதனை திரைப்படங்களைப் பார்க்கத் துவங்கிய சில வருடங்களுக்குப் பிறகுதான் நானே மிகத் தற்செயலாக அறிந்து கொண்டேன். என தோழி ஒருவருக்கு நேர்மறையான சுப முடிவுகள் கொண்ட திரைப்படங்கள் மீதுதான் பெருமோகம். ஆனால், பணிச்சுமையின் காரணமாக மிகக் குறைவாகவே படங்கள் பார்ப்பார். ஒரு முறை ‘நீ தான் நிறைய படங்கள் பார்ப்பியே. உனக்குத்தான் எனது விருப்பங்கள் தெரியுமே. எனக்குப் பிடிக்கிற மாதிரி சில படங்களை பரிந்துரை செய்’ என்றார். அதற்கென யோசித்துப் பார்க்கையில்தான் மேற்சொன்ன விசயத்தை நானே கண்டு கொண்டேன்.
தனிப்பட்ட விதத்தில் எனது ரசனையும் ஈர்ப்பும் யதார்த்தத்திற்கு நெருக்கமான படைப்புகளை நோக்கியே இருப்பதால், Feel good (இதனை எப்படி தமிழில் சொல்வது? ‘நல்லுணர் திரைப்படங்கள்’ என்பது பொருத்தமாக இருக்குமா!) வகை திரைப்படங்களில் இருந்து ரொம்பவே விலகி இருப்பேன். நேர்மறையான நம்பிக்கையை விதைக்க வேண்டுமெனும் சுயநிர்பந்தத்தின் காரணமாக இவ்வகைமையின் பெரும்பான்மையான திரைப்படங்களில் மெல்லிய செயற்கைத்தனம் ஒட்டிக்கொள்வதாய் தோன்றும். நிறைவைக் கொடுப்பதற்கும், வாழ்வின் மீதான நம்பிக்கையை விதைக்கவும் அதீத நாடகீய தருணங்கள் மிகுந்த வலிந்து திணிக்கப்பட்ட காட்சிகள் இருப்பதை இத்தகைய படங்களில் ஒரு பொது அம்சமென காண முடியும். ஆனால், வெகு சில படங்கள் சிற்சில செயற்கைத்தனங்கள் இருந்தாலும் அதனையும் மீறி ஈர்ப்பதுண்டு. அப்படியான ஒரு படமாக சியான் ஹைடர் இயக்கத்தில் 2021இல் வெளியான CODA திரைப்படம் இருந்தது. இப்படம் 2014 ஆம் ஆண்டு வெளியான La Famille Bélier எனும் பிரெஞ்சுத் திரைப்படத்தின் மறுஆக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
CODA என்பது Child of Deaf Adults என்பதன் சுருக்கம் ஆகும். அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தின் வடக்குக் கரையோர நகரொன்றில் வசிக்கிற ரூபி ரோசியின் குடும்பம் வித்தியாசமானது. மீன்பிடித் தொழில் செய்யும் அவர்கள் வீட்டில் காது கேட்கக்கூடிய ஒரே நபர் அவள் மட்டுமே. பெற்றோரும் அவளது அண்ணனும் செவித்திறனற்ற மாற்றுத்திறனாளிகள். அக்குடும்பத்தின் வெளியுலக சாரளமாக இருப்பது ரூபி மட்டும்தான். அவள்தான் அவர்களுக்கும் உலகத்திற்கும் இடையேயான மொழிபெயர்ப்பாளர். அமெரிக்க சைகை மொழிதான் அவர்கள் அனைவரும் புழங்கு மொழி. அக்குடும்பத்தின் வாழ்க்கையும், வாழ்வாதாரமும் ரூபியை அச்சாணியாய்க் கொண்டே சுழல்கிறது.
ஒவ்வொரு குடும்பமும் இப்படி ஏதாவது ஒரு அச்சாணியைக் கொண்டே இயக்குகிறது. அது அவர்கள் வழியாகவே உயிர்மூச்சை விட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களின் தியாகம் அங்கு பொதுநலனுக்கான அடிப்படைத் தேவை என்றாகிறது. எனவே அங்கு அத்தியாகத்திற்கான சிறப்பு அங்கீகாரமோ, பாராட்டோ எதிர்பார்ப்பது அபத்தம். இவ்வாதம் ஏற்கக்கூடியதுதான். அதுதானே உலக யதார்த்தம் என்றும் நாம் கடந்து விடுகிறோம். ஆனால், சக்கரமாய் அன்றி அந்த அச்சாணியாய் இருந்து பார்க்கையில்தான் இந்த யதார்த்தத்தின் மறுபக்கத்தை நாம் தரிசிக்க முடியும். தனக்கு பிரியமானவர்களின் நலனுக்கும் தனிப்பட்ட ஆசைகள் அல்லது இலட்சியங்களுக்கும் இடையிலான ஊசலாட்டத்தை அப்போதுதான் நம்மால் உணர இயலும். இப்படமும் இதனையே தன் மைய இழைகளுள் ஒன்றெனக் கொண்டுள்ளது.
பேச்சுகளே இல்லாத சைகை மொழி உலகத்தில் வாழும் ரூபிக்கு இசை, பாடல்கள் என்றால் கொள்ளைப் பிரியம். அவளது தேர்வும் ரசனைகளும் கூட வித்தியாசமானதாகவே இருக்கிறது. பதின்வயதினளான அவள், தனது சக மாணவர்களின் கிண்டல்களை புறந்தள்ளிவிட்டு, வகுப்பு நேரங்கள் தவிர மீதமுள்ள நேரத்தில் தனது குடும்பத்தின் மீன்பிடி தொழிலில் பங்கெடுக்கிறாள். அங்கு பிரதான பாத்திரம் வகிப்பவளும் அவளாகவே இருக்கிறாள். சக மாணவர்களால் கிண்டலுக்கு உள்ளாவது அவளது பொருளாதாரப் பின்னணி மட்டுமல்ல காரணம். அவர்களது குடும்பத்தினர் செவிடர்கள் என்பதும்தான். பதின் வயதின் பரிகசிக்கும் மனோபாவத்திற்கு எதுதான் தப்பும்? ஆனால், கேலிப்பொருளாக இருப்பவருக்கு மட்டுமே உரித்தானது அப்பரிகசிப்பின் வலி. அது அவளை தனக்குள்ளே சுருங்கிக் கொள்ளச் செய்கிறது. ஒரு ஓட்டிற்குள் ஒடுங்கும் நத்தை வாழ்க்கை அவளுடையது. மனங்கவர்ந்த சக மாணவன் மைல்ஸ் என்ற இளைஞனுக்காகவே அவன் சேரும் பாட்டு வகுப்பில் தானும் சேர்ந்து கொள்கிற அளவுக்கு மையல் அவளுக்கு.
தனது காதலும், கனவான இசையும் ஒரு சேர சாத்தியமாகும் வாய்ப்பு கைகூடினாலும் பரிகசிப்பு அளித்த பரிசான தயக்கம் கடக்க முடியாத தடையாக அவள்முன் நிற்கிறது. அதனைத் தாண்டுவதற்கு அவளுக்கு நாளெடுக்கிறது. நல்வாய்ப்பாக அவளது இசை ஆசிரியர் பெர்னார்தோ அற்புதமானவர். இவளது தனித்திறனைக் கண்டறியும் அவர், தான் கற்ற கலையை அவளுக்குத் தருகிறார். அவரது அரவணைப்பில் ரூபி தன கனவை நோக்கிய பயணத்தின் அடிகளை மெல்ல மெல்ல எடுத்து வைக்கிறாள்.
தந்தை பிராங்க் மற்றும் தாய் ஜாக்கி தங்களுக்குள் பெருங்காதல் கொண்ட தம்பதியர். பதின்வயதினருக்கு இணையாக அவர்கள் காட்டும் வேடிக்கைகள் அவர்கள் எவ்வளவு வெள்ளந்தியான மனிதர்கள் என்பதைக் காட்டுவதாக இருக்கிறது. அடுத்தவரின் அபிப்ராயங்களுக்கெனவே வாழ்த்து மடிந்து போகிற போலிகளுக்கு மத்தியில், வாழ்க்கையை அதன் யதார்த்தத்தோடு கொண்டாடுபவர்களாக அந்த இணையர் இருக்கிறார்கள். என்ன…பல சமயங்களில் அவர்களது அதி யதார்த்தம், ஒப்பனைகளோடு வலம் வருகின்ற உலகிலிருந்து அவர்களைத் தனித்துக் காட்டிவிடுகிறது. அப்போதெல்லாம் தர்மசங்கடத்தில் நெளிகிறாள் ரூபி.
அவளது ஒரே அண்ணன் லியோவிற்கோ, தன்னைவிட இளையவளான தங்கைக்கு மொத்த குடும்பமும் பிரதான முக்கியத்துவம் அளிப்பது குறித்த மெல்லிய பொறாமை. ஒரு வகையில் அதனை தன் சுயத்திற்கான அங்கீகார மறுப்பாகவும் லியோ உள்வாங்குகிறான். அது உண்மையுங்கூட. குடும்ப உறவுகளுக்குள் கோபதாபங்கள் சகஜமெனினும் அவர்களுடன் மட்டும்தான் பல சமயங்களில் நாம் நமது அசலான முகங்களுடன் புழங்க முடிகிறது. பாசாங்குகள் குறைவு என்பதாலேயே அங்கு உரசல்களும் அதிகம் என்பது யதார்த்தமே. உள்ளம் கவர்ந்தவன் எனினும் தன் வீட்டு ரகசியத்தை சக தோழர்கள் மத்தியில் பகிரங்கப்படுத்தியதால் மைல்ஸுடனும் அவளுக்கு பிணக்கு. ஒரு பக்கம் தன் கனவை எட்டிப்பிடிக்க வலிய வருகிற பேராசிரியர் பெர்னார்தோவின் உதவிக்கரத்தை பற்றிக் கொள்ள தடையாக தன் குடும்பத்தினருக்குத் தேவையான தனதிருப்பு ரூபியை நிலைகொள்ளாமல் தவிக்க வைக்கிறது.
‘கோடா’ கதையாக நம்மைக் கவர்வதை விடவும் கதையின் போக்கில் கடக்கின்ற தருணங்களால் நம்மை வசீகரிகிறது. இத்தருணங்கள்தான் துவக்கத்தில் நான் சொல்லியதைப் போல அடுத்தவரின் பார்வைக் கோணத்தில் இருந்து சூழ்நிலையை அணுகும் வாய்ப்புகளை நல்குகின்றன. தன் பாதையில் முன்னேற எத்தனிக்கும் ரூபி இயல்பாகவே குடும்பத் தொழிலில் பங்களிப்பை குறைத்துக் கொள்கிறாள். ஒரு கட்டத்தில் அவளது இல்லாமை, அவர்களது மீன்பிடி தொழிலுக்கே உலைவைக்கிற அளவுக்கு நிலைமையை சிக்கலாக்குகிறது. கடலோரக் காவற்படையினர் தொடுக்கிற வழக்கைச் சந்தித்து, அபராதத் தொகையை செலுத்தி பிரச்சனையில் இருந்து ஒரு வழியாக வெளியே வருகிறார்கள்.
ஒரு பக்கம் தனது இல்லாமையால் ஏற்பட்ட விளைவுதான் இதுவென குற்றவுணர்வில் புழுங்கியும், மறுபக்கம் தனது கனவு மெல்ல கைநழுவிப் போகிறதே எனும் விரக்தியும் ஒரு சேர, புயலில் சிக்கிய சிறு தோணியென அவள் மனம் அலைக்கழிகிறது. சப்தம் என்றால் என்னவென்றே அறியாத குடும்ப உறவுகளிடம் அவள் எங்கனம் தனது இசையார்வத்தைப் புரிய வைப்பாள்?!
பாடகர் குழுவினரோடு அரங்கேறுகிற இசை நிகழ்வுக்கு பெற்றோர் யாவரும் அழைக்கப்பட, ரூபியின் குடும்பத்தினரும் கலந்து கொள்கின்றனர். தங்களது மகள் பாடுவதை அவர்களால் காண மட்டுமே இயலுமெனும் சோகம் சொட்டும் யதார்த்தம் அவர்களைச் சுணக்கினாலும், ஏனைய பார்வையாளர்களின் அங்கீகரிப்பைக் காண முடிவதால் அவர்களும் அம்மகிழ்ச்சியில் தங்களை இணைத்துக் கொள்கின்றனர். ஒரு கணம் மொத்த ஒலியும் ஒடுங்கி, திரையில் காட்சிகள் மட்டுமே நகர்கிறது. அக்கணம் பார்வையாளர்களாகிய நாம் அனைவரும், செவித்திறனற்றோரின் வாழ்க்கையை கொஞ்சம் வாழ்ந்து பார்க்கிறோம்! பேரமைதி எவ்வளவு தொந்தரவானது என்பதை உணர்வுப்பூர்வமாக அனுபவிக்க நமக்கு வாய்க்கும் தருணமது. படத்தின் கதையோட்டத்தில் இதற்குப் பிறகு வருகிற இரு காட்சிகள் மென்சோகக் கவிதைகள்.
அரங்கத்திலேயே தனது மகளின் குரலைக் கேட்க இயலாத பெருஞ்சோகம் பிராங்கின் முகத்தில் அப்பட்டமாய் தெரிகிறது. எல்லாம் முடிந்து வீடு திரும்பிய பிறகு தனக்காக ஒரு முறை அப்பாடலை பாடச் சொல்லி அவர் கேட்க, ஆச்சரியத்தில் துணுக்குறுகிறாள் ரூபி. எனினும் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றிட பாடத்துவங்க, அவரோ அவளது குரல்வளையின் அதிர்வுகளை தனது உள்ளங்கையால் தொட்டுணர முயல்கிற காட்சி மிக நுட்பமானது. திறன் குறைவினால் ஒரு மனிதன் தனிப்பட்ட விதத்தில் அனுபவிக்கிற சொல்லவியலா, நிவர்த்தி செய்யவே இயலாத துயரங்களை அவன் கடக்க முயல்கிற பிரயத்தனங்களை அது அத்தனை அழகாய் எடுத்துக் காட்டுகிறது.
இதன் பின்னர் கொஞ்சம் இவ்வகைப் படங்களுக்கே உரித்தான மிகையுணர்ச்சிக் காட்சிகளும் திருப்பங்களும் வருகிறது. ஒரு புறம் ரூபி தான் மட்டுமே தன் குடும்பத்தினருக்கான மொழிபெயர்பாளராக இருக்க இயலுமெனும் நிதர்சனத்தை உணர்கிறாள். தனது இருப்பு இன்றியமையாதது எனவும், தனது இல்லாமையை வேறு எதனாலும் ஈடு செய்யவும் முடியாது என்றும் புரிந்து கொள்கிறாள். குடும்ப நலனா, கனவா என்று வருகையில் அவள் தியாகம் செய்யத் தயாராகிறாள். இரண்டு கவித்துவமான காட்சிகள் என்று சொல்லி விட்டு, ஒன்றை மட்டும் தானே சுட்டி இருக்கிறேன். இன்னொரு காட்சியாக நான் பார்ப்பது ரூபிக்கும் அவளது தாய்க்குமான சிறு உரையாடலை.
ஒரு தாயாக, தான் ஏன் ரூபி பிறந்த போது அவளுக்கும் கேட்கும் திறன் இல்லாமல் இருக்க வேண்டும் என விரும்பினேன் என்பதை சொல்லும் கட்டம் சற்றே அதிர்ச்சியாக இருப்பினும், காரணத்தை பகிர்ந்து கொள்கையில் அதிலுள்ள யதார்த்தத்தை நம்மால் விளங்கிக் கொள்ள முடிகிறது. உண்மை என்றோ, சரியான விளக்கம் என்றோ உலகில் ஒன்றே ஒன்று மட்டும் இல்லை. இது எல்லா விடயங்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் பொருந்தும். பல நேரங்களில் மனிதகளுக்கு இடையேயான மனக்கசப்புகளின் இன்னொருவரின் தரப்பைக் முழுமையாய் கேட்காமலேயே முன்முடிவுகள் கொண்டு ஒரு விடயத்தை அணுகி அதனை முன்வைத்தே அபிப்ராயங்களை உருவாக்கிக் கொண்டு, அவசரமாய் தீர்ப்பெழுதியும் விடுகிறோம் என்பதனை உணர்ந்து கொள்ள இக்காட்சி உதவுகிறது. கொஞ்சம் பொறுமையாய் பேச வாய்ப்பளித்து உன்னித்துக் கேட்க மனமிருந்தாலே போதும். பல கசப்புகள் கரையும். இடர்கள் இல்லாமலாகும்.
இலட்சியக் கனவான இசைப்பள்ளியில் சேர நடக்கிற நேர்முகத்தேர்வில் பங்கெடுக்கப் போவதில்லை எனவும், தான் அவர்களோடே மீன்பிடி தொழிலில் ஈடுபடப்போவதாக அறிவிக்கிற ரூபியின் முடிவை ஒரு புறம் நிம்மதிப் பெருமூச்சுடன் வரவேற்றாலும், இன்னொரு புறம் பெற்றோரும், அண்ணனும் வேறொரு முடிவை எடுக்கிறார்கள். அவளுக்கான கனவின் பாதையின் தடைகளை தகர்த்து, அவளை அவர்களே நேர்முகத்தேர்வுக்கு அழைத்தும் செல்கின்றனர்.
அங்கு நேர்முகத் தேர்வில் அவள் பாடும் பாட்டை ரகசியமாய் கேட்க விழைகிற இவர்களுக்காக தேர்வுக் குழுவினரிடம் பாடிக்காண்பிக்கிற பாடலை அப்படியே சைகை மொழியிலும் செய்து காட்டுகிற காட்சி நாடகீய உச்சத்தை இக்கதைக்குத் தருகிறது. அமெரிக்க வாழ்விற்கு அந்நியமாகிக் கொண்டே வருகின்ற குடும்ப வாழ்க்கையின் முக்கியத்துவத்தை / மேன்மையை வலியுறுத்துகிற விதமாக குடும்ப உறவுகளுக்கு இடையே நிகழும் ஒரு நெகிழ்ச்சிக் கதையையே இப்படமும் முன்வைக்கிறது என்றாலும், அதன் அணுகுமுறையில் நேர்மறையான செயற்கைத்தனங்களையும் மீறி, பல யதார்த்த தருணங்கள் பதிவாகி இருக்கிறது.
இப்படத்திற்கான விருது அங்கீகாரங்களிலும் சுவாரசியங்களுக்குக் குறைவில்லை. BEFTA விருது வரலாற்றில் முதன் முறையாக சிறந்த துணைக் கதாபாத்திரத்தில் நடித்ததற்கான விருதினை பெற்ற செவித்திறனற்றவர் எனும் பெருமையை தந்தை பிராங்க் பாத்திரத்தை ஏற்று நடித்த ட்ராய் கோட்சூர் பெற்றார். போலவே இதே பிரிவில் ஆஸ்கர் அகாதமி விருதினை தட்டிச் சென்ற (செவித்திறனற்ற) இரண்டாவது நபர் எனும் பெருமையையும் பெற்றார். முதலாவது நபர் வேறு யாருமல்ல. இதே படத்தில் அவருடன் தாய் ஜாக்கி பாத்திரத்தில் நடித்த மார்லி மேட்லின்தான் அது. தனது அறிமுகத் திரைப்படமான Children of a Lesser God (1986) படத்தில் சிறந்த பங்களிப்பிற்கென சிறந்த நடிகை விருதினைப் பெற்றார். அச்சமயத்தில் அவருக்கு வயது இருபத்தியொன்றுதான். மிக இளம் வயதில் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதினைப் பெற்றவர் என இவர் பெற்ற சாதனையை இன்றைய தேதி வரை இவர் தக்கவைத்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மனித உறவுகளுக்குள் மிக நெருக்கமானது, விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் குடும்ப உறவுகளே. அந்த நெருக்கமான உறவுகளுக்கிடையிலான உறவுச் சிக்கல்களை, உணர்வு நிலையில் ஏற்படுகிற ஏற்ற இறங்கங்களை, தனிமனித தேடல்களுக்கும் குடும்பத்தின் பொது நலனுக்கும் இடையேயான மனிதர்களின் ஊசலாட்டத்தையும் மிக அழகாக முன்வைக்கிறது இந்தப்படம். அதே வேளையில் அதனுடைய படைப்பின் மைய நோக்கமான காது கேளாதவர்களின் வாழ்க்கையை பகிர்தல் என்பதனை நேர்மையாக கலையாக்கிப் பதிவதில் இயன்ற அளவுக்கு படம் வெற்றி பெற்றிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். மென்மையான படங்களையும், வாழ்க்கையின் மீதான நேர்மறையான நம்பிக்கையை விதைக்கிற படங்களையும் விரும்புகிற பார்வையாளர்களுக்கு இப்படம் மிக நெருக்கமான படமாக இருக்கும். இன்னொரு தளத்தில் இப்படம் பதின்வயதினர் வயது வந்தோராக பரிணமிப்பதை முன்வைக்கிற ஒரு மிகச் சிறந்த Coming-of-age-film ஆகவும் இருக்கிறது.
(தொடரும்…)