இணைய இதழ்இணைய இதழ் 63தொடர்கள்

பல’சரக்குக்’ கடை; 11 – பாலகணேஷ்

தொடர் | வாசகசாலை

தூங்கும் வேலைக்குச் சம்பளம்!

றுபடி சற்றே என் பத்திரிகையுலக வாழ்க்கைக்குள் நுழைவோம். தீபாவளி மலர்ப் பணிகள் முடிந்தபின் மீண்டும் என் செக்ஷனுக்கு மாற்றப்பட்டேன். கல்யாணமான பெண் மீண்டும் தாய்வீட்டுக்கு வருகையில் அனுபவிக்கிற ஒருவிதமான சுதந்திர உணர்வும் நிம்மதியும் கிடைக்கப் பெற்றது எனக்கு. 

எங்களின் லேஅவுட் பிரிவில் பலப்பல சுவாரஸ்ய சம்பவங்கள் அவ்வப்போது நடக்கும். ஒன்றிரண்டைச் சொல்கிறேன். முதலாவது தலைப்பில் தவறு நடப்பது. ட என்கிற எழுத்தைக் கீபோர்டில் ஷிப்ட் ப்ரஸ் செய்து டைப்பினால் கிடைப்பது டு. அடுத்த கீயில் இருப்பது ‘டி’. ஒருமுறை ‘குண்டு வெடித்து 4 பேர் பலி’ என்கிற செய்தியை டைப்பிய பிரகஸ்பதியானவன் கைதவறி ஷிப்ட் போட்டு அடுத்த கீயில் கைவைத்து டைப்பித் தொலைக்க, ‘டு’வுக்குப் பதிலாக ‘டி’யோடு அந்தத் தலைப்பு அச்சானது. மறுநாள் டைப்பியவர், மெய்ப்புத் திருத்தும் பிரிவினர் அனைவருக்கும் ‘பாராட்டுப் பத்திரம்’ வாசித்தளித்தார் எம்டி.

‘ச’வும் ‘ம’வும் அருகருகே இருக்கும். போலவே ‘ச’வின் அடுத்த கீ ‘த’. இவற்றால் விரல் மாறும்போது வினோதமான எழுத்துப் பிழைகள் ஏற்படும். உதா : ‘இந்தியா – சீனா ஒப்பந்தம்’ என்ற தலைப்பு விரல் சற்றே மாறி நடனமாடிவிட, ‘இந்தியா – மீனா ஒப்பந்தம்’ என்றானது. போலவே, ‘விம்பிள்டன் ஃபைனலில் அகசி’ என்பது ‘விம்பிள்டன் ஃபைனலில் அகதி’ என்றானது. இந்தப் பிழைகளெல்லாம் மெய்ப்புத் திருத்தும் பிரிவால் கண்டுபிடிக்கப்பட்டு வெளியாகாமல் தடுக்கப்பட்டன. (இந்தியா மீனாவோட ஒப்பந்தம் போடற அளவுக்கு மீனா பெரிய ஆளாடா..? அடேய், ஃபைனலுக்கு அகதியெல்லாம் அனுப்ப மாட்டாங்கடா, அவர் பேரு அகசி – போன்ற கமெண்ட்களுடன் திருத்தப்பட்டன.)

ஆனால், பிழை திருத்துப் பிரிவின் கவனத்தையும் தாண்டி சிற்சில சமயங்களில் பிழைகளோடே மக்களுக்குப் போய்விடும். உதாரணம் முன் சொன்ன ‘டு’வுக்குப் பதில் ‘டி’. அதுபோல ‘இன்று ஆயுத பூஜை’ என்ற தலைப்பு, ‘இன்று ஆயுத பூனை’ என்று அச்சானதும் உண்டு. மறுதினம் படிக்கிற வெகுஜனம் சிரித்துக் கொண்டு பேசாமலிருந்து விட்டால் பாதகமில்லை. எவனாவது பொழுதுபோகாதவன் (ரிடையரான கேஸ்கள் பலருக்கு இதுவே வேலை) ஆசிரியருக்குக் கடிதம் எழுதி தவறைக் குறிப்பிடும் நக்கீரர் வேலையைச் செய்து தொலைத்தால், பிழை சார்ந்தோர் அனைவருக்கும் தண்டனை நிச்சயம் அலுவலகத்தில்.

இதுவாவது ஏசுதல், மெமோ என்கிற அளவுடன் நின்றுவிடும். ஆனால், விளம்பரங்களில் எழுத்துப் பிழை ஏற்பட்டதென்றால் டிசைன் செய்தவன் பாடு அந்தோ… பரிதாபம்தான். விளம்பரம் தந்தவர் பணம்தர மறுத்து விடுவார். அந்த விளம்பரத்துக்கான தொகை, டிசைன் செய்தவன் கணக்கில் பற்று வைக்கப்பட்டு, சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும். அங்கே எந்தவிதச் சமாதானமும் எடுபடாது. இந்த ரிஸ்க்குக்காகவே விளம்பரங்களை ஒதுக்கி, செய்திகளை மட்டும் டைப்புகிற சில ‘முன்ஜாக்கிரதை முத்தண்ணா’க்களும் எங்கள் செக்ஷனில் உண்டு.

எனக்கு எந்த ஏரியாவிலும் பயமில்லை – தமிழ் பிழையறத் தட்டச்சத் தெரியும் என்பதால். ஆனாலும், ஓரிருமுறை கண்டிக்கப்பட்ட அனுபவம் உண்டு. தன்னை மீறிய ஓரிரு பிழைகள் எப்போதேனும் நேர்வதும் மனித இயல்புதானே. நான் மனிதன்..! ஆனால், கூடியவரை சரியாகச் செயலாற்றும் மனிதன். இப்போது இப்படிப் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறேனே… அப்போது அப்படி இருந்ததால்தான் அடுத்த ஆபத்து வந்தது. அதைப் பார்க்கலாம்.

எங்கள் ஆபீசில் டெலிபோன் ஆபரேட்டராக இருந்த அம்மையாருக்கு வயது ஐம்பதுக்கு மேலிருக்கும். ஆனால், டெலிபோனில் அவரது குரலைக் கேட்பவர்கள் யாரும், அவருக்கு பதினெட்டுக்கு மேல் வயது மதிப்பிட மாட்டார்கள். அத்தனை இனிமையான குரல். (அதற்காகத்தானே டெ.ஆ.க்களை நியமிப்பதே). சில பிரகஸ்பதிகள், குரலை மட்டும் கேட்டுவிட்டு, ஆளைப் பார்க்கவென்றே ஏதாவது சாக்கை இழுத்துப் போட்டுக் கொண்டு எங்கள் அலுவலகத்துக்கு வந்து, அம்மையாரைக் கண்டதும் அசடுவழிந்து நின்றதையும் நான் பார்த்து ரசித்திருக்கிறேன்.

போகட்டும்… சொல்ல வந்த விஷயம் அதில்லை. அவர்களின் பணியானது காலை பத்து முதல் மாலை ஆறு வரை. ஆறு மணிக்கு அவர் கிளம்பியதும் டெலிபோன் ஆபரேட்டர் பொறுப்பை ஏற்றுக் கொள்பவன் பாலாஜி என்கிற இளைஞன். (வழக்கம்போல் பெயர் மாற்றியிருக்கிறேன்). அவனுக்கு வேலை மாலை ஆறு மணியிலிருந்து இரவு ஒரு மணி வரை. காலையில் துவங்கி மாலை வரை பரபரவெனக் கால்கள் வந்த வண்ணமிருப்பதால் டெலிபோன் போர்டு பிஸியாக இருக்கும். மாலை சற்றே குறையத் துவங்கி, இரவு ஒன்பது மணிக்கு மேல் ஓரிரண்டு கால்களை அட்டெண்ட் செய்தால் அதிசயம் என்கிற நிலைதான்.

பாலாஜி வேலைக்கு வந்து கொஞ்ச நேரமே பிஸியாக இருப்பான். இரவு உணவை முடித்துவிட்டு வந்தானென்றால் சேரில் சாய்ந்து அழகாகத் தூங்கியபடியே இருப்பான். எப்போதாவது சில சந்தர்ப்பங்களில் இரவு வரும் கால்களை அந்தந்தத் துறைகளுக்கு மாற்றி விட்டுவிட்டு மறுபடியும் தூங்கத் தொடங்கி விடுவான். டெலிபோன் ஆபரேட்டர் அறையைக் கடக்கும் சமயங்களிலெல்லாம் நாங்கள் அவனைக் கேலி செய்வது வழக்கம்.

“டேய், அவனவன் விரல் ஒடிய வேலை பாத்து சம்பளம் வாங்கறான். தூங்கறதுக்குன்னே சம்பளம் குடுத்து ஒர்த்தனை வெச்சிருக்காங்கன்னா அது நீ ஒண்டிதான்டா இந்த ஆபீஸ்ல” என்பேன் நான். திருமண வீடுகளில் முகூர்த்த நேரம் நெருங்குகையில் அனைவரும் நாதஸ்வர, மிருதங்கக்காரர்களை நோக்கி ஆட்டுவார்களே… அதுபோல விரலை ஆட்டி, நாக்கைத் துருத்தி எச்சரிப்பான் அவன். சிரித்துக் கொண்டே ஓடிவிடுவோம்.

அவனை அத்தனை கேலி செய்த நானே அவனது சேரில் உட்கார்ந்து அந்தத் ‘தூங்குகிற’ வேலையைப் பார்ப்பேன் என்று நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. ஆனால், நடந்தது.

அன்று செக்ஷனில் நுழைந்ததுமே செக்ஷன் சீஃப் அருகில் வந்தார். “ப்ரதர், இன்னைலருந்து உங்களை டெலிபோன் போர்டுக்கு மாத்திருக்காங்க. அங்க போய் பாலாஜிகிட்ட வேலை கத்துக்குங்க..”

“ஏண்ணா..? நான் என்ன தப்பு செஞ்சேன்..?”

“நீங்க தப்பே செய்யாத ஆளு, நம்பர் ஒன்ங்கறதாலதான் தற்காலிகமா அங்க மாத்திருக்காங்க. பாலாஜிக்கு ஏதோ நல்ல வேலை கிடைச்சிடுச்சாம். ரிசைன் பண்ணிட்டான். நெக்ஸ்ட் ஆபரேட்டர் அப்பாயிண்ட்டாற வரைக்கும் நீங்கதான் கத்துக்கிட்டு சார்ஜ் எடுத்துக்கணும்னிருக்கார் எம்டி.” என்றார்.

“இருங்க, இருங்க… மறுபடி செக்ஷனுக்கு வந்ததும் தப்புந் தவறுமாப் பண்ணி, நம்பர் ஒன்ங்கற எடத்துலருந்து எறங்கிக் காட்டறேன். இல்லன்னா என் பேர் பாலகணேஷ் இல்ல…” என்றேன்.

“சரி, லாப கணேஷ்ன்னு கூப்ட்டுக்கறோம். இப்ப போங்க..” என்று அத்தனை பற்களையும் காட்டி ஆனந்தமாகச் சிரித்தார். ‘அவருக்கென்ன, சிரித்துவிட்டார். அகப்பட்டவன் நானல்லவோ’ என்று எம்ஜியார் போலப் பாடியபடி என் வெட்டுப் பாறைக்குச் சென்றேன்.

“வாய்யா… வாய் கிழிய என்னைய கிண்டலடிச்சேல்ல..? இப்ப என்கிட்டயே ‘தூங்கறதுக்கு’க் கத்துக்கப் போற. விதியப் பாத்தியா..?” நக்கலடித்தபடியே வரவேற்றான் பாலாஜி. விதியை நொந்து கொண்டு, தலையைத் தொங்கப் போட்டபடியே அவன் எதிரிலிருந்த சேரில் அமர்ந்தேன். “சொல்லுங்க குருநாதா. எப்டித் தூங்கணும்..?”

“நீ திருந்தவே மாட்டேடா. இத பாரு… கால் வந்தா இந்த கீ ப்ளிங்க் ஆகும். அப்டி ஆச்சுன்னா, என்னன்னு கேட்டுட்டு, இதை ப்ரஸ் பண்ணினா ஹோல்ட் ஆகும்..” என்று ஆரம்பித்து தொழில் நுணுக்கங்களை அவன் கற்றுத்தர, கவனமாகக் கேட்டுக் கொண்டேன்.

அன்றைய தினம் அவன் கூடவே இருந்ததால் எளிதாக ஓடிவிட்டது பொழுது. அடுத்த தினத்திலிருந்து நான் தனிக்கச்சேரி டெலிபோன் போர்டில். வேலைக்கு வந்ததுமே என் டிடிபி செக்ஷன் சகாக்கள் என்னைப் பரிதாபமாகப் பார்த்தபடி கடந்து போனார்கள். அன்றைய வேலை புதிதாகையால் நிறையப் படபடப்பு உள்ளே இருந்தாலும் திறமையாகவே அன்று சமாளித்துவிட்டேன். ஆனால்…

‘சும்மா இருப்பதே சுகம்’ என்றொரு சொலவடை கேள்விப்பட்டிருப்பீர்கள். சும்மா இருப்பது சுகமானதே இல்லை- உழைத்துப் பழகியவர்களுக்கு. இரவு ஒன்பது மணிக்கு மேல் கால்களும் அதிகம் வராமல், பரபரப்பாக வேலை செய்தே பழகியதால் உறக்கமும் வராமல் ரொம்பவே தவித்துப் போனேன். (பின்னாளில் சும்மா இருப்பதை வைத்து வடிவேலு செய்திருந்த காமெடி இதனாலேயே எனக்கு மிகப் பிடித்தமானதாகிப் போனது.) அடுத்த தினத்திலிருந்து அதைச் சமாளிக்க ஒரு வழி கண்டுபிடித்தேன்.

அப்போதைய காலச்சதுரத்தில் மாதத்திற்கு முப்பது நாட்கள் என்றால் மாதநாவல்கள் மட்டுமே முப்பத்தைந்து வெளியாகிக் கொண்டிருந்தன. ஆக, கடைக்குப் போனால் தினம் ஒன்று அல்லது இரண்டு மாத நாவல்கள் புதிதாக வந்திருக்கும். அவற்றை வாங்கிப் பையில் திணித்துக் கொண்டு வேலைக்கு வருவேன். ஒன்பது மணிக்கு மேல் அவற்றில் ஏதேனும் ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு ஆனந்தமாகப் படித்துக் கொண்டிருப்பேன். தினம் ஒரு நாவல் என்று நான் அந்த போர்டிலிருந்த அறுபது நாட்களும் அறுபது புத்தகங்கள் படித்துத் தீர்த்தேன். போரடித்துக் கொன்ற வேலையானது சுவாரஸ்யமாகவே மாறிப் போனது.

புத்தகங்கள் என் கையிலிருப்பதைப் பார்த்த என் செக்ஷன் ஆட்கள் நான் படித்து முடித்ததும் இரவல் வாங்கி, அவர்கள் படிக்கத் தொடங்க, டெ.ஆ. வேலையிலிருந்து நான் பழையபடி எங்கள் செக்ஷனுக்கு வந்தபின்னும் என்னை புக் சப்ளையர் ஆகவே மாற்றி விட்டார்கள். புத்தகங்கள் சேகரிக்கும் என் கலெக்ஷன் ஆர்வமும் அப்போதிலிருந்துதான் கிளைவிரித்து மரமாகத் தொடங்கியது.

ஒன்றரை மாதங்கள் முடிந்திருந்த நிலையில் ஓரிரு சொதப்பல்கள் மட்டுமே அந்த வேலையில் செய்திருந்தேன். ஒருமுறை நிருபர் ஒருவர் போன் செய்து, தன் பெயரை ஸ்டைலாக உச்சரிக்க, (அவன் நாக்கு தடித்தது என்பதால் எனக்கு உச்சரிப்பு சரியாகக் கேட்காமல்) வேறு பெயரைச் சொல்லி எம்டிக்கு கனெக்ஷன் கொடுத்து விட்டேன். “அந்த நாயையெல்லாம் எதுக்கு என்கிட்ட பேசவிடறே..? அவன் பேரைச் சொல்லிருந்தேன்னா, குடுக்காதேன்னு சொல்லிருப்பேன்.” என்று என்மீது பாய்ந்தார். இப்படிக் குறிப்பிடத்தக்க திட்டு வாங்கியது இரண்டு முறைதான். அதன்பின் பத்துநாட்கள் கழித்து, புதிய ஆபரேட்டர் வந்துவிட, பழையபடி நான் விடுதலை செய்யப்பட்டு, என் செக்ஷனுக்கே திருப்பி அனுப்பப்பட்டேன்.

‘திரும்பி வந்தால் நிறையத் தப்புகள் செய்து நம்பர் ஒன்னிலிருந்து கீழிறங்கி விடுவேன்’ என்று செக்ஷன் சீஃப் சத்யாண்ணனிடம் செய்த சபதத்தை நிறைவேற்றினேனா..? அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

(தொடரும்…)

balaganessh32@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. அந்த நாட்கள் போல இப்போது வருமா என்று மனதிற்குள் ஒரு ஏக்கமும் வரும். சுவாரஸ்யமான அனுபவங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button