
பெருங்கருணை
பறவை விதைத்த விதை
முளைவிட
ஒரு மழைநாளில் சிறிது
நெகிழ்கிறது பாறை
சிசுவின் பசி சிணுங்கலில்
கண்ணீரைச் சுரக்கின்றன
தாயின் முலைக்கண்கள்
கரு முதல் கண்கள் அற்ற
கவிஞன்
கனவில் எழுதுகிறான் கவிதையை
நீ
வளிமண்டலப் பிரவேசத்தில்
எரியும் நட்சத்திரம் என்
அடைக்கலப் பெருங்கடல்
கேடயம் இன்றி
நான் நுழைந்த போர்க்களத்தில்
வளரத் தொடங்கிய
நத்தையின் கூடு
கலவி முடிவில்
பரிபூரண சம்மதத்துடன் இரையாகும்
ஓர் உயிரின் உச்ச கருணை.
***
பயமாக இருக்கிறது
உண்மையிலேயே எனக்கு பயமாக
இருக்கிறது
காலத்தின் மீதான நம்பிக்கை
ஒரு ஆபத்தான நண்பனாகத் தெரிகிறது
எனக்கு சிலரைத் தெரியும்
காலத்தை நம்பியே
வீணாய் போனவர்கள் அவர்கள்!
மனிதர்களின்
ஏமாற்றம், துரோகம் கூடப் பரவாயில்லை
கடந்து சென்று விடலாம்
காலத்தை எப்படிக் கடப்பது
தாயிடம் இருந்து குட்டிநாய்களைப்
பிரித்து விற்றுவிட்டு
ஒரு பிஸ்கட் துண்டை தூக்கியெறிவது போல
உயிரைத் தவிர
எல்லாவற்றையும் எடுத்துவிட்டு
அனுபவத்தை பிச்சையாக போடுகிறது காலம்
அனுபவம் நல்லது என்கிறீர்களா
முட்டாள்களே
உங்களுக்காக அது வைத்திருக்கும்
பல்லாயிரக்கணக்கான சூழ்நிலைகளில்
நீங்கள் சந்தித்தது ஒன்றோ இரண்டோதான்
எனவேதான்
உண்மையிலேயே எனக்கு பயமாக
இருக்கிறது.
***
பிரபஞ்சக் கூற்று
இதுவொரு நீண்ட பயணம்
இந்நீலக்கோள் ஒரு நிறுத்தம்
செல்லும் இடமெல்லாம் அழித்து
எதையோத் தேடி
சுற்றி சுற்றி அலைகிறது
இந்த இருகால் உயிரினம்.
***
விடை பெறுதல்
நான் விடைபெறும் நாளில்
பூத்துக் குலுங்கட்டும்
இந்த பூமி
ஏதுமற்றவன் வெளியேறும்போது
கவலை கொள்ளாத விழா வீடாய்
மகிழ்ந்திருக்கட்டும் உங்கள் மனது
என்னை மன்னிக்கவோ
என் மேல் இரங்கவோ வேண்டாம்
உங்கள் நியாயங்களையும்
உணர்வுகளையும் நோகடித்த
குற்றவுணர்வுடன்தான் சென்றேன்
என்ற நம்பிக்கை போதும்
நான் அமைதியில் இளைப்பாறுவேன்
இதனால் என்னை
கோழையென்று வெறுக்காதீர்கள்
மலை உச்சியில் ஏற்றி
சிறகுகளை வெட்டிவிட்டு
புறந்தள்ளிய காலம்
உங்களுக்கும் வராமல் விழித்திருங்கள்
இதுவே
உங்கள் வாழ்வு இனிதாக
என் இறுதி வேண்டுகோள்.
********