இணைய இதழ்இணைய இதழ் 52தொடர்கள்

ரசிகனின் டைரி; 7 – வருணன்

தொடர் | வாசகசாலை

October (2018)

Dir: Shoojit Sircar |115 min | Hindi | Amazon Prime

காதல் அப்டிங்குற வார்த்தைய ஒரு தடவை கூடச் சொல்லாம இருக்கும் போதும், காட்சிகள் முடிஞ்சதும் ஒரு அழகான காதல் கதையா நம்ம மனசுல தங்கி வளர்ற படமா இருக்குது ‘அக்டோபர்’. ஒரு சிலர் இது காதல் படமே இல்ல; ஒரு இளைஞன் தன்னோட டீன் ஏஜை (பதின்பருவம்) கடந்து பெரிய மனுஷனா கொஞ்சம் கொஞ்சமா மாறுற ஒரு coming-of-age story அப்டினும் சொல்லலாம். அதை நான் மறுக்கப் போவதும் இல்ல. இந்த படத்தில் அது தான் நிறைய இருக்கு. ஆனா, காதலைப் பத்தி இந்தப் படம் நேரடியா பேசலன்னாலும், படம் தர்ற ஒட்டு மொத்தமான பார்வை அனுபவத்த வச்சுப் பார்த்தா, மனசுக்குள்ள பிசுபிசுப்பா காதல் தான் வந்து ஒட்டிக்குது. பேசிப் பேசி புரியுற விசயமா காதல்? உணர்றது தானே! அதனால தான் என்னால இத ஒரு காதல் திரைப்படமாவே பார்க்க முடியுது.

சில படங்கள நாம அது சொல்ற கதைக்காகப் பார்ப்போம். சில படங்கள அதப் பார்ப்பதால நமக்குக் கிடைக்கிற அனுபவத்துக்காக பார்ப்போம். அக்டோபர் இதுல ரெண்டாவது வகை. சொல்லப் போனா இந்த ரெண்டாவது வகைன்னு சொன்ன படங்கள நாம பார்த்து முடிச்சதுக்கு அப்புறமா தான் அது தரும் அனுபவத்துக்குள்ள நாம நுழைய முடியும். அதாவது இது மாதிரி படங்கள் நாம பார்க்கும் போது பிடிச்சதை விடவும், பின்னர் நிதானமா மனசுல அசை போடும் போது தான் இன்னும் நெருக்கமான படைப்பா மாறும். இதைத் தான் நான் ‘மனசுல தங்கி வளர்ற படம்’னு சொல்றேன். படம் தருகிற அனுபவம் தான் முக்கியமானது என்பதால இதுல இருக்கிற கதை அம்சத்தை வெளிப்படையாவே தாராளமா சொல்லிவிடலாம். ஒரு கதை என்னவா திரையில வளர்ந்து நம்மோட எந்த விதத்தில் இணையுது என்பதைப் பொருத்தது தானே அது தர்ற அனுபவம் என்பது. 

டேனிஷ் வாலியா எனும் டேன் தான் படத்தோட நாயகன். ஒரு மிகப் பெரிய ஸ்டார் ஹோட்டல்ல பயிற்சி செய்யுற ஒரு ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மாணவன். பெரிய ரெஸ்டாரண்ட் ஆரம்பிக்கிற கனவைச் சுமந்து திரியுற துடிப்பான இளைஞன். எல்லார்கிட்டையும் ரொம்ப நட்பா பழகுற அவன்கிட்ட, சக தோழர்கள் எல்லாருமே அன்பா இருக்காங்க. டேன் செய்ற ‘சொதப்பல்களை’ அதானாலேயே சகிச்சிகுறாங்க. கொஞ்சம் விளையாட்டுத்தனமான பையன் தான். வேணும்னா கொஞ்சம் குழந்தைத்தனம் நிறைஞ்ச பையன் அப்டினு கூட சொல்லிக்கலாம். இந்த பயிற்சி மாணவர்கள மேய்க்கிற கண்டிப்பான சூப்பர்வைசர் ‘அஸ்தானா’வுக்கு டேன் பயலை மேய்ப்பதற்குள் போதும் போதும்னு ஆகிடுது. சின்னச் சின்ன தடுமாற்றம், அங்க அங்க சில்லறையான கவனக்குறைவு இப்படின்னு அஸ்தானாகிட்ட டேன் அர்ச்சனை வாங்காத நாளே இல்லை. அவரும் சளைக்காம இவனுக்கு எப்படியாவது பயிற்சி கொடுக்கணும்னு ரொம்ப கறாராவே நடந்துக்கிறார். ஹோட்டலோட ஒவ்வொரு டிபார்ட்மெண்ட்டுக்கும் அவனை பந்தாடுறாரு. எவ்வளவு வாங்கிக் கட்டிகிட்டாலும் அதுக்குப் பிறகும் எதையாவது சொதப்பி வச்சு, அவர் முன்னால் தலையைச் சொறிஞ்சிக்கிட்டு நிக்கிறத டேனும் விடற மாதிரி இல்ல. ரொம்ப அப்பாவித்தனமான முகத்தோடயே இவன் இருக்கிறதால நண்பர்கள் வேணா இவனை சகிச்சுக்கலாம். ஆனா, மத்தவங்க? சக ஊழியர்களோட அவனோட உறவு, குறிப்பா சூப்பர்வைசர் அஸ்தானாவோட இருக்கும் உறவு, சொல்லிக்கிற மாதிரி இல்ல. சுருக்கமாச் சொன்னா அவன் வேலையில ரொம்ப திணறிப் போறான். இப்படியே போனா அவன் பயிற்சியையே உருப்படியா முடிப்பானா அப்டிங்குறதயே உறுதியா சொல்ல முடியாத நிலைமை தான். 

அவன் கூட சக பயிற்சி மாணவியா அங்க இருக்குறவங்க ஷூலி ஐயர் என்கிற பெண் (அவளுக்கு ஷூலி மலர்கள் ரொம்ப பிடிக்கும் என்பதால அந்த பெயரை வச்சதா பிறகு ஒரு சமயம் அவளோட அம்மா சொல்வாங்க) ஷூலி கூட அப்படி ஒண்ணும் சொல்லிக்கிற மாதிரி நெருக்கம் எல்லாம் டேனுக்கு இல்ல. எல்லார்கிட்டையும் பழகுற அதே மாதிரி தான் ஷூலியுடனான அவனது பழக்கம் இருக்கு. இயல்புன்னு எடுத்துகிட்டோம்னா, டேனும் ஷூலியும் எதிர் எதிர் துருவங்கள் தான். அதனாலேயெ அவர்கள் நெருங்கிப் பழக வாய்ப்பே இல்லாமப் போகுது. 

புது வருஷக் கொண்டாட்ட இரவுல, ஹோட்டலோட மூணாவது மாடியில பயிற்சி மாணவர்கள் எல்லாரும் கூடி சந்தோஷமா இருக்குற அந்த தருணத்துல, டேன் மட்டும் அங்கு இல்ல. அங்கு இருக்குற ஷூலி சுற்றுச் சுவரோட திண்டில் கை வழுக்கி மேலே இருந்து கீழே விழுந்துடறா. புது வருஷக் கொண்டாட்டம் அத்தனையும் நொடியில வடிஞ்சு போயிடுது. எல்லாரும் இடிஞ்சு போயிடறாங்க. நண்பர்களுக்கு, தோழிக்கு இப்படி ஆயிடுச்சேன்னு வருத்தம்; அதே நேரம் தங்களோட இடத்துல இப்படி அசம்பாவிதம் ஆகிடுச்சேன்னு ஹோட்டலுக்கு கவலை. தீவிர சிகிச்சைப் பிரிவுல ஷூலி சேர்க்கப்படுறா. தில்லி ஐஐடி பேராசிரியரான ஷூலியோட அம்மா வித்யா பதறியடிச்சு வர்றாங்க.

இது எதுவுமே தெரியாத டேன் திரும்பி வந்த பிறகுதான் நடந்தத தெரிஞ்சுக்கிறான். அவனுக்கும் சக நண்பர்களைப் போல ஷூலியோட நிலையைப் பார்த்து வருத்தம் தான். ஆனா, ஒரு கட்டத்துல அது ரொம்பப் பெரிய அளவுல அவனோட மனச பாதிக்கிற விசயமா மாறுது. காரணம் ஒண்ணுதான். ஷூலி தவறி விழுவதுக்கு முன்பு கடைசியா பேசிய வார்த்தை “டேன் எங்க?” அப்டிங்குறதுதான். இத தன் சக தோழர்கள் மூலமா டேன் தெரிஞ்சுக்கிறான். அவன் மேல எந்த தனி ஈடுபாடும் அதுவரையிலும் காட்டாத அவள் ஏன் தன்னைப் பத்தி கேட்கணும் அப்டிங்குற கேள்வி அவன் மனசை அரிக்கத் தொடங்குது. மிகத் தொடக்கத்துலயே அவனோட அறை நண்பனான மஞ்சீத் அது ரொம்ப யதார்த்தமான கேள்வியா தான் இருக்கும் அப்டீங்குறான். அவங்களோட சக தோழி இஷானியும், ரொம்ப வெளிப்படையாவே “உங்க ரெண்டு பேருக்கும் செட்டே ஆகாது. அவளுக்கு உன் மேல எந்த அபிப்ராயமும் இல்லவே இல்ல. சும்மா கற்பனை பண்ணாத” அப்டின்னு சொல்லியும் கூட டேன் மனசு அதை ஏத்துக்க மாட்டேங்கிது. 

கோமா நிலைக்கு போன ஷூலியோட மருத்துவமனை வாசம் நீண்டுகிட்டே போகுது. நண்பர்களுக்கு அவள் மேல அக்கறையும், பிரியமும் இருக்குற போதிலும், அவரவருக்கு வாழ்க்கை இருக்கே! அதனால கொஞ்சம் கொஞ்சமா அவங்க தோழிய போயிப் பாக்குறது குறைய ஆரம்பிக்கிது. ஆனா, டேன் வேற ஆளாவே மாறிப் போயிடறான். தினமும் அவளைப் போயி மருத்துவமனையில பார்க்குறதையும், அங்கேயே கிடப்பதையும்தான் தன்னோட பிரதான வேலையா செய்யுறான். ஏற்கனவே வேலையில் ரொம்ப நல்ல பேர் சம்பாதிச்சு வச்சிருக்குற இவனோட நிலைமை இதனால இன்னும் கவலைக்கிடமாகுது. 

மருத்துவ சிகிச்சை குடுத்தும் எதிர்பார்குற அளவுக்கு அவளோட உடல்நிலையில முன்னேற்றம் ஏற்படல. கதையில வருகிற தமிழரான அவங்க அப்பாவோட தம்பி ஜெய்ராம் ஐயர், அதாவது அவளது திருச்சிக்கார சித்தப்பா ஒரு கவனிக்கத்தக்க கதாபாத்திரம். அந்த கதாபாத்திரம் எப்போதும் எதிர்மறையா பேசுவது போல நமக்குத் தோணினாலும், அவரோட கோணத்துல அவர் ரொம்ப யதார்த்தமான பார்வையத்தான் முன்வைக்கிறார் அப்டிங்குறத நாம உள்வாங்கிக்க முடியும். ஒரு வகையில அவர் தன்னோட அண்ணன் பொண்ணு மேல அக்கறையைத் தான் அப்படிக் காட்டுறார் அல்லது அவருக்கு அப்படித்தான் காட்டத் தெரியுது. ‘பாவம் சின்ன பொண்ண இப்படி சிகிச்சைங்குற பேருல ஏன் கஷ்டப்படுத்துவானேன்’ என்கிற பரிவு இருக்குற அதே அளவுக்கு, இப்படி முன்னேற்றம் இல்லாத சிகிச்சைக்கு ஏன் தண்டமா செலவு செய்யணும்னு அப்டினு கணக்குப் பாக்குற மனசும் இருக்கு. அவரு தான் ஷூலியோட அம்மாகிட்டயும், தம்பி தங்கைகிட்டையும் சிகிச்சையை கைவிட்டுடலாம்னு ஓயாம பேசிகிட்டு இருக்காரு. அவங்களுக்கும் சில சமயங்கள்ல, எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்த மனசோட அவரு சொல்வதை கேட்கலாமா அப்டினு மனசு ஊசலாடுது. ஆனா, அந்த சமயங்கள் எல்லாம் ரொம்ப ரொம்ப நேர்மறையாக, சொல்லப் போனா குருட்டுத்தனமான நம்பிக்கையை இறுக்கமா பிடிச்சுகிட்டு சிகிச்சையை தொடரணும்னு டேன் தான் பேசுறான். அவன் பேசுவது உண்மையில ஒரு 21 வயசு இளைஞனோட முரட்டு நம்பிக்கை மட்டும் தான் அப்டிங்குற போதிலும், அது ஷூலி மீதான பிரியத்தால வர்றதுதான். 

சித்தப்பா கதாப்பாத்திரம், ரொம்ப அழகா யதார்த்தமான மனுஷங்களுக்கு நெருக்கமான வடிவமைக்கப்பட்டிருக்கு. பாசத்துக்கும் யதார்த்தத்துக்கும் நடுவுல அவர் மாட்டிகிட்டு முழிக்கிறாரு பல தருணங்கள்ல. ஒரு பக்கம் வித்யாகிட்ட , “நான் சொல்றத புரிஞ்சுக்கங்க. அவ காப்பாத்துற கட்டத்த தாண்டீட்டா. அதுனால சிகிச்சைக்கு செலவழிப்பது வீண்” அப்படீன்னெல்லாம் சொன்னாலும், ஒரு அம்மாவா வித்யா அதை ஏத்துக்கத் தயங்குறதையும் ஒரு புலம்பலோட அனுமதிக்கிறாரு. அப்படியான புலம்பல் தருணங்கள்ல அவரு தன்னை அறியாம தமிழ் வார்த்தைகள பேசுவது ரொம்ப ரொம்ப நுட்பமான விசயமா இருந்துச்சு. தன் அண்ணி வித்யா வடக்கத்தி பெண் என்பதால அவங்க எல்லார்கிட்டையும் ஹிந்தியில மட்டுமே பேசுறாரு. ஆனா, தன்னோட ஆதங்கத்தை வெளிப்படுத்துற சமயங்கள்ல அவரையும் அறியாம தாய்மொழி வெளிப்படுது. பொதுவா ஒரு மனிதன் எத்தனை மொழிகள கத்துகிட்டு எல்லாத்தையும் பேசி வந்தாலும், மனசுக்குள்ள பேசிக்கிறது அவனோட தாய்மொழியா தானே இருக்கும். அது தான் அந்த காட்சிகள்ல ரொம்ப அழகா வெளிப்படுது. 

டேன் ஒரு முறை ஷூலி மலர்கள வீதியில பார்த்து அதுல கொஞ்சம் பூக்கள ஒரு காகிதத்துல எடுத்து வந்து ஷூலியோட தலைமாட்டுல வைக்கிறான். நள்ளிரவுல அதுவரை முழு கோமா நிலையில இருந்த அவளோட நாசி (மூக்கு) அந்த வாசனைய இழுத்து அசையுது. இதைக் கவனிக்கிற நர்ஸ் அதை டாக்டரோட கவனத்துக்குக் கொண்டு போறாங்க. ரொம்ப நம்பிக்கையூட்டுற செய்தியா இது இருக்கு. அம்மா வித்யா இத ரொம்ப ஆர்வமா எதிர்பார்க்க, டாக்டரோ, ‘இது நல்ல முன்னேற்றம் தான், இருந்தாலும் சில சமயம் ரொம்ப அதிகமான வாசனைகளுக்கு அபூர்வமா கோமாவுல இருக்க நோயாளிகள் ரியாக்ட் பண்ணுவாங்க. இது நம்ம சிகிச்சை சரியான பாதையில போறதுங்கிறதக் காட்டுது. ஆனா, அதைத் தாண்டி இப்ப எதுவும் சொல்ல முடியாது’ன்னு முடிச்சுக்கிறாரு. திரும்பவும் குடும்பமே தளர்ந்து போகுது. டேன் மட்டும் தன்னோட குருட்டு நம்பிக்கைக்கான முதல் பிடிமானமா இதைப் பிடிச்சுகிட்டு அவங்க எல்லாருக்கும் நம்பிக்கை ஊட்டுறான். ‘நாம எப்படி சிக்கிச்சை போதும்னு முடிவெடுக்க முடியும். ஷூலியோட வாழும் உரிமையை அவ தானே முடிவு செய்யணும். அவள் வாழ விரும்பலாம். அதுனால அவளுக்கு இன்னும் நாம அவகாசம் கொடுக்குறது தான் நியாயம்.’ இது தான் டேனோட பார்வை. இவன் முன்வைக்கிற இந்த வாதத்துக்கு யாரால மறுப்பு சொல்ல முடியும்?! 

தனிப்பட்ட வகையில டேனோட வாழ்க்கை பாதாளத்துக்குப் போயிடுது. கிட்டத்தட்ட சரி செய்ய முடியாத அளவுக்கு பிரச்சனைகள் குவிஞ்சு கிடக்கு. தொடர்ந்து விடுமுறை எடுப்பது, அப்படியே வேலைக்கு போனாலும் அங்கயும் தூங்குவது (இரவு முழுக்க மருத்துவமனையில முழிச்சுக் கிடந்தா?!) அப்டினு நிலைம ரொம்ப கவலைக்கிடமா ஆகுது. சூப்பர்வைசர் உண்மையில டேனை திட்டிகிட்டே இருந்தாலும் அவன் பேருல அக்கறையோடவும் இருக்கார். பயிற்சி மாணவர்கள் வேலையில பிரச்சனை செஞ்சா, பயிற்சியில இருந்து வெளியேறிடணும்னும், கூடவே அபராதமா மூணு லட்சம் கட்டணும்னு போட்ட ஒப்பந்தத்துல ஒரு விதி இருக்குறத – அதுக்காவது டேன் பயப்பட்டு ஒழுங்கா வேலை பார்க்க மாட்டானா அப்டிங்குற நினைப்புல – அவனுக்கு நினைவு படுத்துறாரு. எதுவும் வேலைக்கு ஆகல. நண்பர்கள் அவனை அக்கறையோட கண்டிக்க முயற்சி செய்றப்போ, நீங்க எல்லாம் எப்படி இப்படி அவளை மறந்துட்டு எளிதா கடந்து போயிட்டீங்க அப்டினு எதிர் வாதம் செய்யுறான். அவ்வப்போது கடன் கேட்கவும் ஆரம்பிக்கிறான். 

சில மாதங்களுக்கு பிறகு தொடர் சிகிச்சையோட பலனா ஷூலியோட கருவிழி அசையத் துவங்குது. அதுவும் மருத்துவரோட குரலை கேட்டுப் புரிஞ்சுகிட்டு அதன்படியே அசையும் விழிகள். முதல் முறையா நம்பிக்கையோட கீற்று தெரியத் துவங்குறதா தலைமை மருத்துவர் கோஷ் சொல்றாரு. இருண்டு போன வானமா கிடந்த அவளோட குடும்பத்தினருக்கு, குறிப்பா அவங்க அம்மாவுக்கு, மெல்லிய வெளிச்சம் பரவின மாதிரி இருக்கு. மறுபக்கம் டேன் வாழ்க்கையில பயந்த மாதிரியே இடி இறங்குது. தொடர்ந்து பயிற்சி காலத்துல சரியா பணி செய்யாததால, அவன் வெளியேத்தப்படுறான். தண்டத்துக்கு அபராதத் தொகை வேற. வீட்டுக்குத் தகவல் போகுது. 

டேனைத் தேடி வர்ற அவனோட அம்மாவும் அவன மருத்துவமனை வாசல்ல இருக்குற கடையில தான் சந்திக்க முடியுது. இப்பொவெல்லாம் அவன் அங்க மட்டும் தானே இருக்கான். ஷூலி உன்னோட பெண் நண்பியான்னு நேரடியா அம்மாகிட்ட இருந்து வருகிற கேள்விக்கு அவன்கிட்ட நேரடியான பதில் இல்ல. ஷூலியைப் பார்த்து நலம் விசாரிக்கிற கையோட, நாசூக்கா தன் மகனோட வாழ்க்கை தடம் புரண்டு போன விசயத்தை வித்யாகிட்ட வெளிப்படுத்திட்டு சொல்லிக்காமலே கிளம்பிடறாங்க டேனோட அம்மா. ஒரு தாயோட வலி இன்னோரு தாயான வித்யாவுக்கு விளங்குது. தன்னோட சுயநலத்துக்காக டேனோட வாழ்க்கையை கெடுத்திட்டதா குற்ற உணர்வுல துடிக்கிறாங்க வித்யா. கோமா நிலையில இருந்து மிக நல்ல முன்னேற்றம் கண்டு தேறிகிட்டு வர்ற ஷூலியோ டேன் மீதான காதல வெறும் பார்வையாலேயே வெளிக்காட்டத் துவங்குறா. அவனோட அருகாமையை அவள் விரும்புறா. அதை எதிர்பார்க்கத் துவங்குறா. ஆனா, இந்த சமயத்துல ஒரு தாயா, டேன் அம்மாவோட உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்குற வித்யா இனி ஷூலிய தானே பார்த்துக்கிறதாகவும், அதுவரையிலான டேனோட மிகப் பெரிய உதவிகளுக்கு நன்றின்னும் சொல்றாங்க. 

வேறு வழி இல்லாம டேன் வடகிழக்கு இந்தியாவுல இருக்க ஒரு பெரிய விடுதியில மேனேஜரா வேலைக்கு சேர்றான். அவன் அவளைவிட்டு மனதளவுல பிரிஞ்சிச்சுட முடியல. முடியுமா என்ன?! அவன் செய்யுற வேலை அவள்கிட்ட இருந்து ஒரு தற்காலிக திசைதிருப்பல் மட்டும் தான். நாள் போகப் போக டேன் அவனோட வேலையில மூழ்கிப் போறான். இங்க ஷூலியோட உடல்நிலை மிக நல்ல முன்னேற்றம் அடையுது. ஆனா, மனநிலை? தன்னோட தவிப்ப எப்படி காட்டுறதுன்னு தெரியாத அவள், சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்து முரண்டு பிடிக்க ஆரம்பிக்கிறா. அது ஒரு வகையில அவளோட எதிர்ப்பு. அதை பதிவு செய்யுறா. அவ்வளவு தான். உடல்நிலையில நல்லபடியா ஏற்பட்ட முன்னேற்றம் தடைபட்டு திரும்பவும் மோசமாகத் தொடங்குது. இதுபத்தி கேள்விப்பட்ட டேனால அங்க இருக்கவே முடியல. 

திரும்பவும் எல்லாமே ஆரம்பிச்ச இடத்துக்கே வந்து நிக்கிறது மாதிரி ஒரு நிலை. தான் விலகிப் போனதுக்காக ஷூலிக்கிட்ட மன்னிப்பு கேக்குற அவன், இனி போகவே மாட்டேன் அப்டினு சொல்றான். அவனோட வருகையே அவளைத் தேத்துது. அதுவும் மருத்துவமனையை விட்டு வீட்டுக்கே கூட்டிகிட்டு வர்ற அளவுக்கு. அவன் அவளுக்கு உதவி செய்ய பக்கத்துல இருக்கிற தருணங்களில் எல்லாம் அவளோட கண்கள் அவனை அள்ளி எடுத்து நிறைச்சுக்குது. காதல் அப்டினு (ஒரு முறை கூட) வார்த்தையா கூட உச்சரிக்காத அவங்களுக்கு இடையில பெருக்கெடுக்குற அந்த அன்பை பாக்குற நாம எல்லாருமே உணர முடிகிற அற்புதம் அந்த காட்சிகள்ல நடக்குது. அவனோட அரவணைப்பு அவளை இன்னும் தேத்துது. சக்கர நாற்காலியில வச்சு அவளை பக்கத்தில் இருக்குற பூங்காவுக்கு கூட்டிகிட்டுப் போற அளவுக்கு நல்ல முன்னேற்றம் தான். என்ன வித்யாவுக்கு அதுக்கு முன்னர் ஷூலிக்கு சில சமயம் வந்துட்டு போன வலிப்பு திரும்பவும் வராம இருக்கணுமே என்ற கவலை மட்டும் தான்.

பூங்காவுல டேன் , ஷூலிகிட்ட அவள் ஏன் அன்னைக்கு நைட் விழுறதுக்கு முன்னாடி தன்னை பத்தி கேட்டாள் அப்டினு நேரடியாவே கேட்க , அவள் பதிலாக அவனோட பேரை மட்டும் திரும்பத் திரும்ப சில முறை சொல்றா. வேறு பதில் எதுவும் இல்ல. ஒரு வேளை அவள் ஏதோ சொல்ல செஞ்ச முயற்சியோட தொடக்கமா கூட அவனோட பெயர உச்சரிச்சு இருக்கலாம். அன்னைக்கு நள்ளிரவு திரும்பவும் அவளுக்கு தீவிரமான வலிப்பு வருது. நுரையீரல் செயல் இழக்குது. ஷூலிங்கிறது இரவு நேரத்துல மட்டும் பூத்து காலையில வாடிப் போற பாரிஜாதப் பூ. இந்த இரவுல அதே போல இந்த ஷூலி மலரும் உதிர்ந்து போகுது. 

மறுநாள் காலை டேன் எழுந்ததும் வழக்கம் போல ஷுலி வீட்டுக்குக் கிளம்புறான். போனதும் விசயம் தெரியுது. இடிஞ்சு போறான். அங்க மகளை, அக்காவ இழந்து தவிக்கிற குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல டேன் இருக்கான். ஆனா, அவனோட இழப்புக்கு ஆறுதல விடுங்க… அதை பகிரக் கூட வழியில்ல. இழப்ப மறக்க காலத்தை விடவும் சிறந்த களிம்பு வேறென்ன இருக்கு?! திரும்பவும் அவன் பயிற்சி செஞ்ச நட்சத்திர ஹோட்டல்லயே வேலை கிடைக்குது. ஷூலி இல்லாததால வந்த காலி இடத்தை அவங்க இவன வச்சு ஈடுகட்டிக்கிறாங்க. நாட்கள் நகருது. 

திடீர்னு ஒரு நாள் வித்யாகிட்ட இருந்து அழைப்பு வருது. அவங்க டேனை பார்க்க விரும்புறாங்க. சூழல் மாறியிருக்கு. இருக்குற டெல்லி வீட்ட காலி பண்ணிட்டு அவங்க திருச்சிக்குப் போக முடிவு செஞ்சிருக்காங்க. அந்த வீடு முழுக்க அவங்களோட மூத்த மலர் ஷூலியோட நறுமணம் நிறைஞ்சு கிடக்கு. பார்க்கும் பக்கமெல்லாம் ஞாபகங்கள் குவிஞ்சு கிடக்கு. அவங்களுக்கு ஒரு வகையில இப்போ இடமாற்றம் அவசியமானது. இன்னும் இரு குழந்தைகளுக்காக வாழ்க்கை நகர்ந்தே ஆகணும். அவங்களுக்கு ஷூலியை பத்தி கொஞ்சம் போல அசை போடணும். அதுக்கு டேனை விட்டா வேறு யார் இருக்கா! அதுக்குதான் அழைப்பு. ஆள் மாறி இருக்கான். நிறையவே பக்குவப்பட்டு இருக்கறது கண்கூடா தெரியுது. ஷூலி ஆசையா வளர்த்துவந்த ஒரு செடிய எடுத்துட்டும் போக முடியாம, விட்டுட்டும் போக மனசில்லாம அல்லாடுறாங்க. நான் அதை பத்திரமா பாத்துக்குறேன்னு உறுதி சொல்லி டேன் அந்த தொட்டிகளோட கிளம்புவதோட கதை திரையில் முடியுது. 

அது நேரடியா சொல்லாத, காட்டாத ஏதோ ஒண்ணு நமக்குள்ள வளர ஆரம்பிக்குது. ஒரு சராசரி மனித வாழ்க்கைக்குள்ள வந்து போற ஏற்றம், இறக்கம், நட்பு, பாசம், காதல், இழப்பு, வலி, வலி தருகிற படிப்பினை, அதனால கைகூடுற பக்குவம், அப்புறம் நிறையவே கசப்பும் இனிப்பும் கலந்த கலவையா கடந்த கால நினைவுகள் இப்படி எல்லாத்துக்குள்ளையும் கொஞ்ச கொஞ்ச நேரம் இளைப்பாறி, மெதுவா நகர்ந்து, நம்மை ஏறக்குறைய ஒரு மென்மையான தியானம் போல கைபிடிச்சு கூட்டிக்கிட்டு போயி அரவணைக்குது படம். 

நிச்சயமா இது சந்தோஷமான முடிவுள்ள ஒரு படம் இல்ல. சோகம் ததும்புற முடிவு தான். டேன் போல ஒரு பையனை நம்ம வாழ்க்கையில சந்திக்கிறது ரொம்ப ரொம்ப அபூர்வமானது. அவன ஒரு கதாபாத்திரமா இப்படி ஒரு கதைக்குள்ள மட்டும்தான் சந்திக்க முடியும். ஷூலி மாதிரி பெண்ணையும் தான். ஒரு வேளை ஷூலி போனதும் டேனுக்கு சாகணும்னு தோணி இருக்கலாம். தன்னோட மலர் வாடி போயிடுச்சேன்னு அவனும் தன்னோட ஓட்டத்தை நிறுத்தி இருக்கலாம் தான். ஆனாலும் அவன் தொடருறான். சமீபமா எங்கோ வாசிச்ச “இருந்து என்ன தான் ஆகப் போகிறது? செத்துத் தொலையலாம்; செத்துத் தான் என்ன ஆகப் போகிறது? இருந்தே தொலைக்கலாம்” என்ற வண்ணதாசனோட வரிகள் ஏனோ இந்த இடத்துல ஞாபகத்துல இடறுது. 

அக்டோபர் காதல் திரைப்படம் இல்ல. காதலைப் பத்தின படம்னு யாரோ இருத்தர் இந்த படம் பத்தி எழுதினத எங்கோ ஒரு இடத்துல வாசிச்சேன். எத்தனை உண்மை அது! 

(தொடரும்…)

writervarunan@gmail.com  –

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button