
“சரியாகப் பார்த்து, சரியாகப் பேசினால், நீங்கள் உங்களைத் தவிர வேறு எதையும் பார்க்க மாட்டீர்கள். உங்களைத் தவிர வேறு எதையும் வெளிப்படுத்திக் கொள்ளமாட்டீர்கள்.”
–மிர்தாத்
நீலாம்பல் தன் மடல்களை விரித்து மலர்ந்திருப்பதைப் போல எரிந்து கொண்டிருந்தது கேஸ் ஸ்டவ்வின் முதல் அடுப்பு. சற்றுமுன்புதான் தூள் உப்பு டப்பாவை ஒற்றைக்காலில் நிற்கும்படி ஒருபக்கமாய்ச் சாய்த்து ஒரு தட்டுத்தட்டி கெட்டிபட்டதிலிருந்து விடுபட்ட உப்புச் சரிவிலிருந்து ஒரு டீஸ்பூனையெடுத்து அடுப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் பூரிக்கிழங்கில் தூவினாள். எப்பொழுது வந்தாலும் மிர்தாத்திடமிருந்து வருகிற பதில் இன்று அச்சுதனிடமிருந்து வந்தது.
அச்சுதன் வீட்டிற்கு வந்து கிட்டத்தட்ட மூன்று நான்கு மணிநேரங்கள் இருக்கும். வந்ததும் ஒரு டீ. நிறைய உரையாடல்கள். டீயைப் பற்றி எனது கமெண்ட்டில் கடைசியாக வந்தபோதும் இதே மாதிரி டீயைக் குடித்ததாகச் சொல்லி ஏற்கனவே அனுபவமிருக்கிறதென்றும் இந்த டீயை அடையாளப்படுத்தினேன்.
“எப்பவும் ஒரே மாதிரிலாம் இருக்காது. இதே டேஸ்ட் ஒரே மாதிரி திரும்ப வராது”
மிர்தாத்தும் இந்த வசனத்தைச் சொல்லியிருக்கிறாள்.
“இப்ப செஞ்ச வத்தக்குழம்புக்கு இருக்க டேஸ்ட் அடுத்தவாட்டி செய்யும் போதும் வரும்னு சொல்ல முடியாதுங்க. ஒவ்வொரு தடவயும் ஒவ்வொரு டேஸ்ட் வருமுங்க”
மிர்தாத்தின் குரல் ஆட்டின் கழுத்திற்குக் கீழ் கட்டப்பட்டிருக்கும் வாய்பிளந்த குலுங்கு மணியாகயிருக்கும். அவள் பேசுகிறபோது குணுகிக் குணுகி ஒலிக்கும்.
மிர்தாத் டீச்சர். வீட்டிற்குள் நுழைந்ததும் பரஸ்பரம் நலம் விசாரிப்பிற்குப் பிறகு கொண்டுவந்திருந்த கட்டுபேப்பரைத் திருத்த வேண்டுமென்று சற்று நேரத்திற்கெல்லாம் ஒன்றின்மேல் ஒன்றாகப் போடப்பட்ட ப்ளாஸ்டிக் சேர்களின் மீதேறி அமர்ந்து கொண்டாள். மடியில் பேப்பர் திருத்தும் மைக்கா அட்டை ஒன்றின் மீது பேப்பர்களைக் கட்டவிழ்த்து திருத்த ஆரம்பித்துவிட்டாள். அவளது தலைகுனிவில் சரிகள் விழுவதே தெரிந்தன. நான் சிவப்பு மையைக் கற்பனை செய்துகொண்டேன்.
எனது அலைபேசி சோபாவில் கேட்பாரற்றுக் கிடந்ததை அவ்வப்போது பார்த்துக் கொண்டேன். அவள்தான் செல்போன் குறித்த அங்கலாய்ப்பை தெறிக்கவிட்டாள். பிள்ளைகளின் படிப்பு விகிதம் குறைந்துவிட்டதாகவும் அதற்கு காரணம் லாக்டவுனில் தொடங்கிய செல்போன் உபயோகிப்பென்றும், டீச்சர்ஸ் மீட்டிங்கில் அரசாங்கமே அதற்கு ஆதார காரணமென்றும் தனது புரட்சிக் கொடியை ஒரே மூச்சில் உயர்த்திவிட்ட திருப்தியில் மீண்டும் தலையைக் குனிந்தவாறு வேலையைத் தொடர்ந்தாள்.
கூலிவேலைக்குச் செல்கிறவர் ஒருவரின் பிள்ளை கூட செல்போன் வேண்டுமென்று அடம்பிடித்ததும், வாங்கித் தரவில்லையென்றால் கையை அறுத்துக்கொள்வேனென்று அச்சுறுத்தியதாகவும் எவ்வளவோ கதைகளென்று சலிப்புத் தட்டியது அவளுக்கு. நானும் செல்போன் விவகாரங்கள் குறித்து அவளது உரைப்பாட்டிற்கு நடுநடுவே ஈடுகொடுத்தே வந்தேன். அலைபேசியில் இருக்கும் அத்தனை சுவாரசியங்களும் தடவுகிற வரையில்தான் உரப்பு. நிகழ் கணங்களுக்குத் திரும்புகிற பட்சத்தில் தூக்கி எறிந்துவிட்டு ஏதாவது வேலையைப் பார்ப்போம் என்கிற விரக்தியே மிஞ்சும். எல்லா வெறுமைகளையும் தானே ஏற்றிக்கொள்ளும் அலைபேசிக்கு மட்டும் அழுத்தம் இருக்காதா? ஏதோ ஒரு கட்டத்தில் நம்மைச் சட்டென்று உதறத் தெரிகிற உத்தியும் அலைபேசியோடு இணைத்தே வருகிறது.
தட்டில் பூரிகளைப் போட்டு எடுத்து வந்தாள். என்னவோ பூரிகளிடமிருந்து சில துகள்கள் உடைந்து விழுந்திருந்தன. அவை பூரிகளுடையதென்று தெரிந்துகொள்வதற்குள் வட்டமான பெரிய இந்தத் தட்டை மேலும் கீழுமாக திருப்பிக் கொண்டிருந்தேன். ஏதோ அழுக்கு அசௌகரியமாக ஒட்டிக்கொண்டிருக்கிறதென்று பூரிகளைத் தட்டிலிருந்தே காப்பாற்றி ஒதுக்கிவிடவேண்டுமென்று நினைப்பு. பிறகுதான் தட்டின் சுத்தம் புரிந்தது. வட்டத்தைச் சுழற்றியிருக்கத் தேவையில்லை. தட்டைச் சுழற்றியதில் நீர்வரிகளின் தேக்கமுள்ள பகுதி உறுத்த அப்பகுதியிலேயே பூரிக்கிழங்கை கரண்டியிலெடுத்து ஊற்றிக் கொண்டேன். நீரோடு திண்மம் கலப்பதென்பது இயல்புதானோ?! இதிலெதுவும் உறுத்தவில்லை.
மிர்தாத் இன்னும் பூரிகளைச் சுட்டுக்கொண்டிருந்தாள். வேகமாக அடுக்களையிலிருந்து சுடச்சுட இரண்டு பூரிகளைக் கொண்டுவந்தவள் தட்டில் திணித்துவிட்டுப் போனாள். தட்டு நிறைந்தது. பூரிக்கிழங்கு கொஞ்சம் தீர்ந்து போயிருந்தது. ஏனோ இந்தப் பூரிக் கிழங்கிற்கும் எங்கள் வீட்டுப் பூரிக்கிழங்கிற்கும் வித்யாசம் தெரிந்தது. நிறத்தைத்தான் சொல்லவேண்டும். எங்கள் வீட்டில் வெளிர் மஞ்சளாகத் தெரிகிற பூரிக்கிழங்கின் தோற்றம் இங்கு அடர் பழுப்பு நிறத்தில் இருந்தது. பூரிக்கிழங்கு கெட்டியாக வர கடலைமாவைக் கலப்போம். இவர்கள் இதில் எதைக் கலந்திருப்பார்கள்? ஒருவிதத்தில் இந்த பூரிக் கிழங்கின் குழம்பு பருத்திப்பாலை நினைவூட்டியது. நாங்கள் வேறுபட்ட சமையல்களையுடையவர்கள்.
“வாழ்வதற்காகச் செத்துப்போ!
சாவதற்காக வாழ்ந்திரு !”
–மிர்தாத்
என்னவோ செத்துடலாம்னு ஒரு வெறுமை, கஜனிக்கு ஒரு மெசேஜ் இப்படிக் கடைசியாக அனுப்பிவிட்டு வலது இடது கண்களிலிருந்து வழிந்தோடிய கண்ணீரின் ஈரத் தடங்களை உணர்ந்தபடி படுத்திருந்தேன். வெகு நாட்களாக விடுதலையடையாத ஆன்மா இந்த அறையில் சுதந்திரமடைவதை உணரமுடிகிறது. எனது நான்கு சுவர்கள் எனக்குச் சிறைத்தண்டனை. இங்கு அப்படியில்லை. எனது உடலை உணரமுடிகிறது. எனது ஆன்மாவை உணரமுடிகிறது. கவலைகளற்று வெற்று உடலாக படுத்திருக்கிறேன். என் ஆன்மாவில் குழப்பங்களும் தீங்குகளும் உயிரோடில்லை. பரிபூரண வெளியை உணர்ந்து வருடங்களாகிவிட்ட உறைவிலிருந்து மீட்டெடுக்கப்பட்டு சிலிர்த்தபடியிருக்கிறேன். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கென்று ஒதுக்கப்பட்ட விருந்தினர் அறையின் இரவை அனுபவித்துக் கடந்துகொண்டிருக்கிறேன். என் சுதந்திரத்திற்கான கதவும் அடைக்கப்பட்டு நிம்மதியாக உறங்கப் போகிறேன். இப்பொழுதும் நான்கு சுவர்களுக்குள்தான் இருக்கிறேன். ஏனோ என்னறையைப்போல மண்டியிடத் தேவையில்லை. எனது ஒரே ஒரு திறந்து மூடும் ஜன்னலின் கம்பிகளைப் பிடித்தபடி தூரத்து மலையின் புகைமூட்டத்தை நினைத்து பெருமூச்செறியத் தேவையில்லை. எனக்கு அந்த மலை பேரின்பத்தை வழங்கும், என்னை என் அறையிலிருந்து காப்பாற்றுமென்று நினைத்தபடி மீண்டும் ஜன்னலைவிட்டு விலகி அறையின் படுக்கைக்குத் திரும்ப வேண்டியதில்லை. என் அறையை விட்டு இப்போது வெளியேறிவிட்டேன். நான்பறந்துகொண்டிருக்கிறேன் எந்தக் கம்பளமுமின்றி.
*****
இதே நாள் முன்னிரவு
“ஊடுருவும் பார்வை ஆத்மாவை நிர்வாணமாக்கக்கூடியது”
–மிர்தாத்
ஹாலில் டிவி ஓடிக்கொண்டிருந்தது. டிவி பார்க்க ஏனோ விருப்பமற்று ஆறு வருடங்களாகிப் போனதை அச்சுதனுடனான உரையாடலின்போது இரண்டு மூன்று முறைகள் சொல்லி விட்டேன். அமர்ந்திருக்கும் சோபாவிலிருந்து டிவிப்பக்கம் தலையைத் திருப்புகிற கோணம் தலைவலியையும் கழுத்துவலியையும் தருவதாகவே இருந்தது. இரண்டு வலிகளையும் இணைக்கும் பாலமாக எனதிருப்பை வெளிப்படுத்த அவ்வளவு எளிதாகயில்லை சூழல். டிவியில் தெனாலிராமன் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது.
மிர்தாத்திடமிருந்து அத்தகைய சப்தங்கள் வருமென்று எதிர்பார்க்கவில்லை. பூரிகளைச் சாப்பிட்டதைச் சொன்னேனே. பூரிகளுக்கு முன்பு கிழங்கு சமைத்ததையும் அடுப்பின் ஜூவாலையையும் சொன்னேனே; ஆனால், வெங்காயம் நறுக்கியதைப் பற்றி? மிர்தாத் ஒரு சிறிய தாம்பாளத்தட்டில் வெங்காயங்களை இட்டு நிரப்பி கொண்டு வந்தாள். காய்கறி நறுக்கும் பலகையையும் கையோடு எடுத்துவந்து மடியில் கிடத்திக் கொண்டாள். அவள் வெங்காயங்களை நறுக்க ஆரம்பிக்கும் போதே ஹாலில் ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியின் மெல்லிய படபடப்புகளும் டிவியில் தெனாலிராமன் வேடத்தில் வருகிற வடிவேலுவின் முக நளினங்களும் ஏனோ தத்தமது வெளிப்பாடுகளின் கூச்சல்களை அடக்கியிருந்தன. வெங்காயங்களின் தலைகளைத் திருகி எறிந்துவிட்டு தோலை உரித்துத் தள்ளுவதிலிருந்து உரிபடுகிற நெடியைத் துளைத்தபடி என்னுடைய மூக்கில் சதை ஒழுகியது. தோலை உரித்தவுடன் அதன் அடர் இளஞ்சிவப்பு நிறத்தை காதுகளால் கேட்டபடியேயிருந்தேன். அடுத்து அவைகளை ஒவ்வொன்றாக துண்டு துண்டாக நறுக்குகிற மிர்தாத்தின் மௌனங்களைக் கூராய்ந்தேன். என் கண்கள் டிவியில்தான் ஓடிக்கொண்டிருந்தன. என் நினைவுகளை இழுத்துப் பிடித்து காய்கறி நறுக்கும் பலகையில் வைத்து கத்தியால் செருகிக் கொண்டிருந்தாள். ஒவ்வொருமுறை செருகி எடுக்கிறபோதும், “ஒரு பெண் வலிய தன் அதிகாரத்தை சுதந்திரமாகவும் எவருடைய தடைவிதிப்பிகளுமின்றி நிரூபித்துக் கொண்டிருக்கிறாள். அவளை அவளுக்கு அருகே அமர்ந்திருக்கும் மற்றொரு பெண்ணின் சமையல் வேலைகள் எவ்விதத்திலும் தன் அதிகாரத்திற்கு உட்படுத்தவில்லையென்றும் அதோடு நீ பொருட்டிற்குக் கூட உதவியாக வரவில்லையென்பதையும் பகிரங்கமாக சுட்டிக் காட்ட டொக்…டொக்…டொக் என்ற சாடல்கள் தலைநிமிர்ந்த வண்ணமேயிருந்தன”.
ஒருமுறை குடும்ப நண்பரொருவரின் வீட்டிற்குப் போயிருந்தபோது எல்லோரும் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய முன்னிரவு நேரம். அவ்வீட்டின் பெண்களிருவரும் வேகமாக அடுக்களைக்குள் நுழைந்து சமையல் வேலைகள் சகிதம் தொடங்கியிருந்தார்கள். ஆண்கள் வழக்கம்போல ஹாலில் லேப்டாப்பைத் திறக்கவும் குளியல் முடித்துவந்த மேலாடையற்ற அமர்வுமாக டிவி பார்க்கத் தொடங்கி விட்டார்கள். நானும் அவர்களோடு டிவி பார்க்கத் தொடங்கினேன். எனக்கு என் வீட்டில் மட்டுமே அதுவும் இஷ்டமிருந்தால் வேலைகள். இல்லையென்றால் நான் ஒரு துருப்புச் சீட்டு. அந்த வீட்டிலும் டிவியில் வடிவேலுவின் காமெடி. வாய்விட்டு வெடிச்சிரிப்பாய்ச் சிரிக்க ஆரம்பித்த சில நிமிடங்களில் மேலாடையற்ற ஆணின் பார்வை வியந்து வினோதமாக எதிர்கொள்ள, இது பெண் என்பதால் மட்டுமல்ல என் சிரிப்பு அவ்வளவு சத்தமாக ஒலித்ததிலிருந்து உருவான எதிர்விளைவு. இல்லையில்லை கூடயிருந்தபடியே தள்ளிவைக்கும் மனோபாவம். ஆண் மேலாடையற்ற திறந்தமேனியை எங்கேயாவது வைத்துக்கொள்ள வேண்டும். அதுவும் ஹால் போன்ற பொதுவெளி பேதமற்ற கட்டுப்பாடுகளையுடையது.
மறுநாள்
“மிகச் சுருக்கமான சுயமறப்புதான் உறக்கம். சுயத்தை அது மூழ்கடித்து விடுவது நல்லது. பிறகு, விழித்து, விரலளவு உறக்கத்தால் மறதியை உறிஞ்சிவிட வேண்டும்.”
– மிர்தாத்
இன்று இந்நேரம் உறங்கியிருக்க வேண்டும். முட்டிகளுக்குக் கீழ் உறங்கத் தேவையான களைப்பை சுமந்து கனக்கத்தான் செய்கிறது. ஆனாலும், நேற்றிரவு போதுமானதாகயிருந்த அறை இன்றில்லை. நேற்றிரவு விடுதலை செய்த அறை இன்று என்னுடையதில்லை. நாளை மீண்டும் என் வீட்டில் எனது அறைக்கே திரும்ப வேண்டும். இன்றே என் கைகளுக்கு விலங்குபூட்டப்பட்டது. என்ன நாளை வீடுசேரும் வரை அவ்விலங்கு திறக்கப்படாமல் பத்திரமாய் பாதுகாப்பாய் பயணிக்கப் போகிறது. என் அறையில் சாவகாசமாக கழற்றிவைக்க வேண்டியதுதான். ஆனால், விலங்கற்ற சிறைத்தண்டனையில் கிடத்தப்பபடுவேன். சுதந்திரம்மிகுந்த கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படுவேன் என்கிற மசோதா எங்கும் திருத்தப்படாது தொடரும். என் குளிர்காலக் கூட்டத்தில் நான் மட்டுமே கூட்டமாக அமர்ந்திருக்கப் போகிறேன். என் முடிவுகளை நான் மட்டுமே எடுக்கப் போகிறேன். முடிவுகள் ஒருபோதும் திருத்தப்படுவதுமில்லை. மாற்றியமைக்கப்படப் போவதுமில்லை. குளிர்காலம் கன்றிப்போய்விடும்.
இதே நாள் முன்னிரவு
“இரவே தன்னை மறைப்பு நீக்கி வெளிப்படுத்திக் கொள்ளுமானால், அது எவ்வாறு இன்னொன்றிற்கு மறைப்பாக இருக்க முடியும் ?”
–மிர்தாத்
“நடைபயிற்சிலாம் போவீங்களா”
அச்சுதனின் முகம் மூக்குக் கண்ணாடிக்குள் நெளிவதைப் பார்க்க, போவேன் என்பதைச் சாதுரியமாகச் சொல்ல வேண்டியிருந்தது. கலை நிகழ்ச்சியொன்றிற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். மிர்தாத்தும் அச்சுதனும் ஒன்றாக நடக்கத் தொடங்கினார்கள். அவர்களின் பின்னால் என்று சொல்லமுடியாது பக்கவாட்டில் நடந்தபடியே விரைவாகத் தொடர்ந்தேன். சாலைகளின் பிரிவு வருகிற ஓரிடத்தில் கடக்க நேரிட்டது. கிளைச்சாலையை ஒட்டி ஓரமாக நந்தியாவட்டைப் பூக்கள் பெரும் நிழலை விரித்துக் குமுகாயச் சிந்தனையிலிருந்தது. சாலையைக் கடந்து சில அடிகளின் தூரத்தில் திரும்பத் திரும்பப் பார்த்தபடியே விரைந்தேன். அச்சிறிய மரத்தில் ஒன்றுகூட உதிராது எப்போதும். அப்படியொரு சிலைவடிவம் அதற்கு.
அடுத்து சிக்னலில் ஒரு ஆட்டோவைக் கண்டுபிடித்துவிட்டோம். ஆட்டோக்காரன் சாலையின் எதிர்புறத்தில் அச்சுதன் விரித்துக் காட்டிய இரு கைகளின் உயர மத்தியில் அச்சுதனின் குரலை மூன்றாவது முறையாக தெளிவாகக் கேட்டுவிட்டான். ஒரு வளைப்பு. வந்துசேர்ந்தவனிடம் முகவரியைச் சொன்னார்கள். ஆட்டோ குளிர்ந்த காற்றின் பிரதேசத்திற்குள் நுழைவதாகப் பயணிக்கத் தொடங்கியது.
இரவு ஒன்பது மணிக்கு மேலாகிவிட்டது. அப்போதும் மிர்தாத்தான் அடுக்களையை உருட்டி வெங்காயம் தக்காளிகளை தாம்பாளம் போன்ற ஒன்றில் இட்டு நிரப்பிக்கொண்டு வந்தாள். வழக்கம்போல டிவி ஓட ஆரம்பித்தது. மிர்தாத்திற்கு யாரும் உதவ முன்வரவில்லை. சிரம பரிகாரங்களை முடித்துவிட்டு பின்வாசலிலிருந்து ஹாலுக்குள் பிரவேசித்த அச்சுதன், “குட்டி நான் எதும் கட் பண்ணட்டுமா?
“இல்லம்மா…நானே பாத்துக்குறேன்”
தத்துப்பித்து மூளையாகவேயிருக்கிறது. நடக்கப்போவதை முன்பே உணர்த்தி வாழ்க்கையை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. டிவி அசௌகரியமாகப்பட அலைபேசியைத் திறந்து நோண்ட ஆரம்பித்தேன். அலைபேசியிலும் போதிய வகையில் செய்திகள் இல்லை. சற்று நேரத்திற்கெல்லாம் அச்சுதன் மூத்த மகளிடமிருந்து வந்த வீடியோ அழைப்பையேற்று பேசத் துவங்கியிருந்தார். அவரோடு மிர்தாத்தும் பேத்தியிடம் கொஞ்சலாகப் பேசிக்கொண்டிருப்பதை உணர்ந்தேன். அவர்கள் இருவருக்கும் எதிரில் ‘குறுக்கே செல்லாத பூனையாக’ அமர்வதிலிருந்து விடுபட்டு அறைக்குத் திரும்பினேன்.
அறையின் கால்மிதியை மிதித்தவாறே வீட்டிற்கு அழைத்துப் பேசினேன். மனிதர்கள் வினோதமானவர்களென்றேன். ஃப்ளிப்கார்ட்டில் ஆர்டர் செய்த பொருளொன்று வந்திருப்பதை தெரிந்துகொண்டேன். ஹாலில் அமைதி நிலவியது. இருவரும் சாப்பிட்டபடியிருக்க வேண்டும். லேசாகத் திறந்து வைத்திருந்த கதவை , “சரி சார் நான் தூங்கப்போறேன் “
அசடு வழியாமல்தான் நின்றேன். ஏனோ அச்சுதனும் மிர்தாத்தும் ஏறெடுத்துப் பார்க்காமலே புன்னகைத்தபடி தலையாட்டினார்கள். இரு பூனைகளுக்கு நடுவில் மாட்டிக்கொண்டவளாய் மீண்டும் அறைக்குள் சென்று தாழிட்டுவிட்டுப் படுக்க முயற்சித்தேன். அறையில் மர ஸ்டூலில் வைக்கப்பட்டிருந்த இனிப்புப்பொட்டலம் மீது கோர்வையாக ஊறத் தொடங்கியிருந்த சித்தெறும்புகள் நீங்கிவிட்டதாயென்று பார்த்தேன். இல்லை. இரவு விளக்கின் ஒளி எல்லாவற்றையும் மறைத்துவிட்டது.
“இருள் என்று ஒன்று இல்லை. இருப்பது ஒளியின் கூடுதலும், குறைவுமான தர அளவுகள்தாம். உலகின் ஒவ்வொரு உயிரையும் சந்திக்க அமைந்த அளவுகள் அவை.”
–மிர்தாத்
******