
அழியா வனம்
ஓர் அனுமானம் அவிழ்த்துவிட்ட முடிச்சில்
பின்னிக்கொண்டிருக்கிறேன்
திசை சொட்ட
நிகழ்ந்திடவோ
திரும்பி வரவோ
வளியற அறுந்துவிட்ட தீர்மானம்
படபடத்து
விரல் பொறுக்கும் தருணத்தில்
ரேகை தீர
சொட்டும் நதி
உன் பிடிப்பு
வழி நகர
அலைமேவும் மனம்
அணங்காட பண் செய்யும் பார்வைக்குள்
பசி பொறுக்க
பின்னிக் கொள்கிறேன்
ஓர் பேருண்மை கண்டெடுத்த திசை சேர்த்து..
****
உருண்டோடும் வலி
அநேக தருணங்களில் முன்வைத்த
உன் அத்தனை குற்றச்சாட்டுகளும்
மலையாகி முன் நிற்கும் தருணத்தை
ஒரு சொல் முனைக்கு பலியாக
ஒப்படைத்தாய்
கூர் ஆயுதம் தான்
வெட்டப்பட்ட அர்த்தங்கள் திசைக்கொன்றாகி
சிதறிய பின்னும்
கடந்து வந்த பாதை
காட்டும் தூரம்
மௌனம்
கையளவே என் சிறுநதி
அது கண்டெடுத்த வழியில்
நகரும்
கூழாங்கல்லென குற்றச்சாட்டு
****
ஓசை நயம்
அத்தனை அருகாமைக்குள்
அமிழ்ந்த ஆழம்
இன்னும் அலை சத்தமொன்றோடு
அறையில் பத்திரம்
நீ மட்டுமான பொழுதை
நினைவு தகர்த்தா மதிலில்
ஒட்டிவைக்கிறேன்
கடல் சங்கின் ஓசையோடு
வெயில் படபடத்து வந்து அமரும்
மதில் மேல்
கிளை வரைந்து வைக்கிறாய்
உன் அநேக கரங்கள் கொண்டு
நிழல் பெரிதாக
என் ஜன்னல் கம்பி தொட்டு வந்த
நிறம்
சிறையாகி சமைக்கும் மதில் மேல்
இரண்டு நிலவு
முன்னும் பின்னுமாய்
நகரும் பொழுதில்
மடி அமர்த்திக் கொள்ளும் அந்த நிலவை
வளரும் பொழுதாக்கி
என்னில் உயர்ந்துகொண்டிருக்கிறது
கடலோசை
******