
நுண்கதை:1
௦௦௦
அநேகமா பத்தாவது இல்லை பதினொன்னாவது படிக்கிறப்பவா இருக்கும் எனக்கு பாண்டினு ஒரு நெருக்கமான நண்பன் இருந்தான். எதேதோ பேசிட்டு இருந்தப்போ ‘மயிர்ங்கறது இறந்துபோன உடல் செல்களோட தொகுப்பு; அதாவது மயிர்ங்கறது செத்து வளருதுன்னு சொல்லிட்டேன்’. பயபுள்ள அப்போ இருந்து இப்போ வரைக்கும் ‘ஏன் பங்கு அதெப்படி பங்கு அது செத்து வளரும்னு கேட்டுட்டே இருக்கான்’. நானும் வழக்கம்போல சிரிச்சுட்டே இருக்கேன்.
0௦0
நுண்கதை:2
௦௦௦
“எந்தச் சாமிக்கும் சொட்டையே இல்லையே, கவனிச்சீங்களா?” எனக் கேட்டவாறு தமது ஆன்மீகச் சுற்றுலாவை நிறைவு செய்த கல்லான், நண்பரான பச்சோந்தியைக் கேட்டார். இது பற்றி எள்ளளவும் யோசித்திராத பச்சோந்தி ‘ஏமையா, குமரியில இருந்து வேங்கடம் வரைக்கும் சுத்துனது இதைத் தெரிஞ்சுக்கவா! என ஆச்சர்யப்பட, இறையையே வசீகரம் செய்யும் புன்னகை பூத்த கல்லான் தமது வழுக்கை மண்டையை பச்சையின் மூக்கினை நோக்கி குனிந்துக் காட்டினார். இவரது இச் செய்கையை சற்றும் எதிர்பாராத பச்சை மெலிதாய் சிரிக்க “குடுமி உள்ள நீர் ஏன்யா அதைக் கவனிக்கப்போறீர்” என்று சொன்ன கல்லானை நோக்கி சரிய்யா ‘ஏன் இல்லைனு’ நீதான் சொல்லேன் என்றார் பச்சை. தம் குரலைச் சற்றேத் தாழ்த்தி அவரின் காதருகே சென்ற கல்லான் “நாமத்தான் மயிரைக் காணிக்கையா குடுத்துட்டே இருக்கம்ல பிறகேன் வரப்போகுது கடவுளுக்கு சொட்டை” எனச் சொல்ல இதைக் கேட்ட கணம் முதல் தம் வயிற்றைப் பிடித்தவாறு அங்கும் இங்கும் அமர்ந்தும் சாய்ந்தும் நின்றும் புரண்டு புரண்டு வெடித்து சிரித்துக் கொண்டிருந்தார் பச்சை. சுற்றம் வழமைபோல பரதேசிகளின் சுவாரசியத்தில் பங்கெடுத்துக் கொள்ளவில்லை.
000
நுண்கதை:3
௦௦௦
“நல்லா வழவழனு செரைச்சுட்டு சுத்துறவங்களாம் சுறுசுறுப்பானவங்க தாடியோட திரியறவங்க சோம்பேரிங்க”. இதுதான் பொதுப் புத்தி.
௦௦௦
இந்த தியரியக் கண்டுபுடிச்சவன் அநேகமா மூஞ்சியில மயிர் முளைக்காதவனா இருப்பான்னு நினைக்கிறேன். ஏன்னா சொந்த அனுபவத்துல சொல்றேன் மயிரை செரைக்கிறது ரொம்ப ஈஸி; (அந்த மயிரையும் கடையில போயித்தான் பண்ணுவானுங்க; அதோட போனசா கம்முக்கூட்டு மயிரையும் எடும்பானுங்க) ஆனா பாருங்க அதே மயிரை வச்சிக்கிறது ரொம்ப கஷ்டம். ஏன் கஷ்டம்? ஏன்னா மயிர சுத்தமா வச்சுக்கனும் இல்லாங்காட்டா செரங்கு வந்தவனாட்டும் வறட்டு வறட்டுனு சொரிஞ்சுட்டே இருக்கனும். “பாத்தானுங்க நம்மாளுங்க இவ்ளோ மயிர வச்சுக்கிட்டு சொகுசா நக்கித் தள்ள முடியாது. அதுனால செரைக்காதவன் சோம்பேரினு சொல்லிட்டானுங்க”. தாடி உள்ளவன் சோம்பேரினு சொல்லுற மயிர் முளைச்சவங்கள்ல யார் வேணும்னாலும் ஓப்பன் சேலஞ்ச்க்கு வரலாம். ஒரு ஆறு மாசத்துக்கு தாடி வளத்துக் காமிக்கனும். ஒரே நிபந்தனை சொரியப்படாது. அம்புட்டுத்தான்.
0௦0
நுண்கதை:4
௦௦௦
எனக்குத் தெரிஞ்ச மேதைகள்ல 90% பேருக்கு மூஞ்சியில மயிரு இருந்துருக்கு. உதாரணமா மார்க்ஸ், எங்கல்ஸ், வள்ளுவன், பாரதி, சே, காஸ்ட்ரோ, தாகூர், பெரியார்… ம்ம்ம்.. இப்போதைக்கு ஐயா மோடி ஜி அப்படீனு பட்டியல் போகும்; ஆனா பாருங்க ஒரு சிலையில கூட தாடி இருக்காது. ஏன்னா ‘தாடிங்கறது வெறும் மயிரு மட்டும் இல்லை’.
000
நுண்கதை:5
௦௦௦
“மயிர் உதட்டிற்கு மேல் என்றால் மீசை; அதாவது பெருமை. அதே மயிர் உதட்டிற்கு கீழ் என்றால் தாடி; அதாவது சிறுமை” என கொத்தவரங்காய் சொல்ல அதனைக் கேட்ட புடலங்காய், ‘ஆமா, மயிர்ல என்ன டா மேல கீழ! எல்லா மயிரும் ஒரே மயிருதான்’ எனத் திரும்பிச் சொல்ல கொத்து முகத்தைச் சுழித்தவாறு புடலையைப் பார்க்க புடலையின் உதடுகளோ மெல்லிய விசிலைச் சுமந்தபடி காற்றில் அலைந்து கொண்டிருந்தது.
000
நுண்கதை:6
௦௦௦
ஆண்டவரே. சொல் மகனே. என்னத்த சொல்ல. ஏனிந்த சலிப்பு மகவே! சொல் நான் இருக்கிறேன். நீ என்னத்த இருந்து பாழாப்போனயோ என முணுமுணுக்க ஆண்டவர் தம் கண்களை ஓர் முறை திருதிருவென சுழற்றிக்கொண்டதோடு அடச் சொல் அப்பனே என்கிறார். மூக்குச்சளி எனப் பெயர் கொண்ட அவன் ஆண்டவனின் தாவானில் வளர்ந்துள்ள மயிர்களை சுட்டி இதன் பெயர் என்னவெனக் கேட்க ‘தாடி’ என்கிறார். மீண்டும் அவரின் மேலுதட்டின் மேல் பகுதியை சுட்டி அதன் பெயர் என்ன என்கிறான் ‘மீசை’ என்கிறார். இப்போது மனதுள் சளியானவன் என்ன சொல்லப்போகிறானோ என்ற பயம் தொற்ற பதற்றத்தை மீசைதாடியை வருடுவதன் மூலம் மறைத்துக்கொண்டவாறே காத்திருக்க ‘மூஞ்சீல இருக்க மசுருக்கு எதுக்கு ஆண்டவரே ரெண்டு பேரு?’ ஆண்டவரின் தொண்டையிலிருந்து இப்போது ‘அவ்வ்’ என்கிற சப்தம் பீறிடுகிறது. அதுலயும் ‘மீசை மயிருனா சிங்கமாம் தாடி மயிருனா அசிங்கமாம். இதெல்லாம் என்ன கருமம் மயிரு’ எனக் கண்ணோடு கண் பார்த்துக் கேட்க என்ன பதில் சொல்லி இவனைச் சமாளிக்கலாம் என்ற சிந்தையோடு சளியைத் தோளோடு அணைத்துக்கொண்ட பகவான் ‘சாந்தி மகனே சாந்தி’ என்கிறார். ஏனோ அவன் காதில் ‘மயிர் மகனே மயிர்’ என்றே விழுகிறது.
0௦0
நுண்கதை:7
௦௦௦
‘ஆதியில் மானுடர்கள் தாவரங்களாகவே இருந்தனர்’ என்ற தழல் வாசற்படியில் தோண்டப்பட்டிருந்த பல்லாங்குழியில் சாரையின் விரல்களில் இருந்து பங்கிடப்படும் கற்களை ஊன்றிக் கவனித்த வண்ணம் இருந்தாள். சாரையும் மிகச் சிரத்தையுடன் எதை வைத்து இப்படிச் சொல்கிறாய் என்றாள். சாரையின் வலப்பக்கத் தோள்வழி சரிந்துக்கிடந்த கூந்தலை சுட்டிய தழல் ‘ இவை மயிர்கள் அல்ல; வேர்கள். புயலில் அடிபட்டு வீழ்ந்துக்கிடந்த போது தன் உயிர் காக்க வேண்டி கிளைகளால் நகரத் துவங்கினர் நம் முன்னோர். பின்னர் அதுவே கால் கை ஆனதுடன் வேர்களும் வெளுத்து வறண்டு மயிரானது’ என்றாள். அப்படியென்றால் குரங்கிலிருந்து நாம் வரவில்லையா! என சாரை கேட்க இது ‘நம் மூதாதைக் குரங்கு வந்தக் கதை என வைத்துக் கொள்ளேன்’ என்றாள் தழல். பிறகு இருவரும் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைத்தவாறு விளையாட்டைத் துவங்கினர்.
0௦0
நுண்கதை:8
௦௦௦
பூமியில தரைமேல வாழக்கூடிய உயிரினங்களோட ஒப்புமை படுத்திப் பாக்குறப்போ அதுங்களுக்கு உடெம்பெல்லாம் மயிரா இருக்கும். ஆனா, மனுசனுக்கு அப்படி இல்லை; அது மட்டுமா? அதுங்களுக்கு மயிர்தான் ஆடை; மயிர்தான் போர்வை; மயிர்தான் பாதுகாப்பு. ஆனா, நாம ஆடைனு ஒன்னை கண்டுப்பிடிச்சு மயிரை வளரவிடாமப் பண்ணிட்டோம். அதான் நம்பளால வெயிலையும் தாங்க முடியலை; குளிரையும் தாங்க முடிலை. அதுமட்டுமா? மயிரோட இருக்குற எந்த உயிரும் நம்ப பார்வைக்கி விரசமாத் தெரியலை. ஆனா எவனாது ஒருத்தன்/ஒருத்தி ஆடை கிழிஞ்சிருந்தா ஒருத்தன்/ஒருத்தி பார்வை இருக்கே..
தொடர்வோம்..
0௦0
நுண்கதை:9
௦௦௦
ஒரு கொலையோ அல்லது கொள்ளையோ நடக்குதுன்னு வச்சுப்பமே அங்க ஒரு மயிர் இருந்தாப் போதும் அதுல டிஎன்ஏ பரிசோசனை பண்ணி அதைவச்சு குற்றவாளிய கண்டுபிடிச்சுடலாம் இல்லையா? அப்போ அங்க ஒளிஞ்சு இருக்கதுக்குப் பேரு வெறும் டிஎன்ஏ மட்டும்தானா? ஒரு உயிர் இல்லையா? அப்படி அது உயிர்னா அதுக்குப் பேரு பிரபஞ்சம் இல்லையா! என்பது போன்ற கேள்விகள் தனியனின் உறக்கத்தை தொலைக்கும்படி செய்து கொண்டிருந்தன.
0௦0
நுண்கதை:10
௦௦௦
அருக்காணி தன்னோட எண்ணெய் இல்லாத தலைய கையையே சீப்பா மாத்தி சீவிட்டு இருந்தப்போ செம்பட்டை மயிர் ஒன்னு புடுங்கிட்டு விழ அப்போதைக்கி அடிச்ச பேய்க்காத்து புழுதியோட இந்த மயிரையும் மேல எடுத்துட்டுப் போயிடுச்சு. ஒரு கட்டத்துல பேய்காத்துல வந்த குப்பை கூளம்லாம் தனித்தனியா பிரிஞ்சுப்போக இந்த செம்பட்டை மட்டும் மேல மேல மேலனு கடந்து போயிட்டே இருந்துச்சு. பிறகு காத்து இல்லாத ஆகாயத்துல மிதந்து தம்போக்குல சுத்திட்டு இருந்தப்போ யதேச்சையா அந்தப்பக்கமா வந்த கருந்துளைக்குள்ள நுழைஞ்சு வெளியேறி வேற ஒரு புது நிலப்பரப்புல கீழ விழுந்துச்சு. உடனே செம்பட்டை தன்னை சுத்தி கம்பளிப்பூச்சி கூடு மாதிரி ஒன்னை உருவாக்கிக்கிட்டு அந்த நிலத்துல இருந்து ஒரு தாவரம்போல வளரத் துவங்குச்சு. அது வளர வளர கூடு பிச்சுட்டுப் போக இதுவும் கிளையா பிரிஞ்சு நம்ம ஊருல உள்ள புளிய மரம்போல அடர்த்தியா கொப்பு கொப்பா வளரத் துவங்குச்சு. ஒரு கட்டத்துல செம்பழுப்பு நிறத்துல பூ பூக்கத் துவங்கி பிஞ்சும் விடத் துவங்குச்சு. அந்த பிஞ்சு வளரவளர தொப்புள் கொடியோட ஒட்டி இருக்குற ஒரு குழந்தைப் போலவே இருந்துச்சு. இப்படி மயிர் மரம் முழுக்க பூவும் அரும்பும் இருக்க, மழையில அழுகிப்போனது, வெயில்ல வெம்பிப்போயி விழுந்தது போக மத்த எல்லாம் கொஞ்சக் கொஞ்சமா வளரத் துவங்குச்சு. இப்படித்தான் அந்தப் புது கிரகத்துல மயிர் மரம் உயிரினங்களைப் பெத்தெடுக்கத் துவங்குச்சு.
0௦0
நுண்கதை:11
௦௦௦
அண்ணே என்னண்ணே இவளோ தாடி!
ஏன்டா உனக்கு வளரலியா?
அது இல்லைண்ணே முசுலிம் மாதிரி வச்சிருக்கீங்க
ஏன்டா தாகூர் வள்ளுவன்லாம் வச்சிருக்கலையா!
ஐயோ நா போறேன்ணே
போப்போ போய்த்தொலை…
௦௦௦
ஆமா… எந்த மதமா இருந்தா உங்களுக்கு எங்கடா எரியிது?
௦௦௦
மயிரு இருந்தா இருக்குன்றானுங்க!
இல்லைனா ஐயோ கொட்டீருச்சான்றானுங்க!
உங்களுக்குலாம் என்னதான் பிரச்சனை?
௦௦௦
நல்லவேளை டா டவுசர்னு ஒன்னை கண்டுபுடுச்சானுங்க. இல்லாட்டா இன்னும் கசுடம்.
0௦0
நுண்கதை:12
௦௦௦
கார்ல் மார்க்ஸ் கிட்டப்போயி தாடி இருக்கதோட நோக்கம் அல்லது முக்கியத்துவம் என்ன அப்படீன்னு உங்களால கேட்டுட முடியுமா?
அந்த மனுசன்தான் செத்துப் போயிட்டானே அப்படீங்கறீங்களா! அதனால என்ன? அவனோட எழுத்துக்களை வாசிக்கிறது மூலமா நாம அவனோட தொடர்பை ஏற்படுத்திக்க முடியும். இனி உங்களுக்கு பதிலை வாங்கிறதுல பிரச்சனை இருக்காது இல்லையா. பேசுங்க பேசிட்டு பதிலோட வாங்க நாம உட்காந்துப் பேசலாம்.
0௦0
நுண்கதை:13
௦௦௦
ஆதியில எல்லா உயிர்களுக்கும் உடம்பு முழுக்க மயிர்கள் இருந்திருக்கும் இல்லையா? இதுல சந்தேகப்பட எதுவும் இல்லை நிச்சயமா இருந்திருக்கும். பிறகு இப்போ ஏன் மனுச இனம் மேல மயிர்கள் இல்லாம இருக்கு?
௦௦௦
அப்படியே வாங்க.. ஆதி காலத்துல ஒவ்வொரு மனுசனும் தனித்தனியா உணவைத் தேடியிருப்பான். சில ஆண்டுகள்ல சில உசுருங்க கூட்டமா சேந்து மனுசங்களையும் மத்த உசுருங்களையும் வேட்டை ஆடுறதைப் பாத்து இவங்களும் ஒரு குழுவா வேட்டை ஆடத் துவங்கி இருப்பாங்க.
௦௦௦
குளிர் அல்லது மழை அதிகமான காலங்கள்ல மரத்தடியில நின்னுட்டு இருந்தவன் மரத்தோட பொந்துக்குள்ள நுழைஞ்சுருப்பான். அது கதகதப்பா இருந்துருக்கும்.
௦௦௦
அந்தமாதிரி அவன் வாழ்ந்துட்டு இருந்தப்போ ஏதோ ஒரு உயிர் அதீதப் பசியில அவனை வேட்டையாட வந்துருக்கும். இரண்டு மிருகமும் தங்களோட உயிர்ப் போராட்டத்துல இருக்கும்போது தன்னோட கொம்புகளால அது மனுசனை குத்தவர இவன் முத்திபோயி மழையிலயும் வெயிலுலையும் கிடந்து வைரமா மாறிப்போயி பக்கத்துல கிடந்த மரத்தோட பட்டைய தன்னிச்சையா எடுத்து உடம்பு மேல போட்டுகிட்டு இருந்திருப்பான். அது அவனோட உடம்பைப் பாதுகாத்து இருக்கும்.
௦௦௦
பிறகு ஒவ்வொரு முறையும் வேட்டையாடி உணவை சேகரிக்கப் போறபோது தன்னோட உடம்புமேல மரப்பட்டையை அணிஞ்சுக்கிற பழக்கம் வந்திருக்கும். எங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம் மரப்பட்டைய காட்டுக்கொடி வச்சு கட்டிக்கிட்டு வேட்டைய நடத்திருப்பான். அது கொஞ்ச கொஞ்சமா மேம்பாடு அடைஞ்சு ஆடைகளா மாறியிருக்கும்.
௦௦௦
இதுல உடம்புமேல பாதுகாப்புக்குனு எதையோ ஒன்னை போட்டு யுகயுகமா போட்டு அழுத்தி அழுத்தி மயிர்கள் மரபுலேயே ரொம்பக் கொறைச்சலா வளருறதுபோல அல்லது வளராமலேப் போயிடுச்சு.
௦௦௦
இருந்தாலும் கூட உடம்புல எங்கெங்க திறப்புகள் இருக்கோ அங்கெல்லாம் அதுக்குள்ளாற போற தூசியைத் தடுக்க இன்னிக்கிவரை மயிர்கள் வளர்ந்துட்டே இருக்கு. அதுலையும் மூக்குல மட்டும் உள்ளாறையும் ஏனைய இடத்துல வெளியிலையும் வளர்ந்து உடம்பைப் பாதுகாக்குது.
௦௦௦
மிஸ்டர்.ஹேரரின் ‘மயிரின் தோற்றம்; வளர்ச்சி; பரவல் மற்றும் அதனைக் கட்டுப்படுத்தும் காரணிகள்’ என்ற கருதுகோளிலிருந்து..
0௦0
நுண்கதை:14
௦௦௦
“பாரதி ஏன் முண்டாசு கட்டி இருந்தான்? எனக்கு என்னமோ அவனோட தலை வழுக்கையா இருந்ததை மறைக்கிறதுக்காகத்தான்னு தோணுது”.
௦௦௦
“உடல் முழுமைக்கும் மூளையாக வைத்துக்கொண்டு இருப்பவர்கள் ‘எப்படியடா நீ பாரதியைப் பற்றிச் இப்படியாகச் சொல்லப் போயிற்று என வரிந்து கட்டிக்கொண்டு வராது இருப்பீராக’. ஏனென்றால் இந்தக் கணக்கை நான் பாரதியுடனேயே நேர்செய்து கொள்கிறேன்”.
௦௦௦
மற்றபடி தாடி என்பது எப்படி அறிவின் அடையாளமாக கருதப்படுகிறதோ அதேபோல்தான் வழுக்கையும் அறிவின் அடையாளமாக கருதப்படுகிறது இல்லையா? பிறகு என்ன பிரச்சனை பாரதிக்கு?
௦௦௦
இந்த விசயத்துல அவனோட சுய விருப்பம் அப்படீங்கறதத் தாண்டி வேறெதுவும் இருக்க முடியாதில்லையா!.
0௦0
நுண்கதை:15
௦௦௦
மயிர் ஏன் தன்மேல ஈர்களை அனுமதிக்க வேண்டும்? என்கிற கேள்வியைத் தனக்குள்ளே கேட்டுக்கொண்ட நுங்காயி ‘மயிரோடத் தூரும் அதுல ஒட்டிக்கிட்டு இருக்குற ஈரும் ஒன்னு போலவே’ இருக்கும். அதனால ‘ நம்மளோட வேர்தான் வெளியில வந்து வேடிக்கைப் பாக்குதுனு’ மயிர் நினைச்சுக்கிட்டு தனக்குள்ள அதை அனுமதிக்கிது. அதனாலதான் நம்பக் கவிஞர் ஒருத்தர் ‘பேனுங்களோடக் காடு மயிர்கள்னு சொல்லறாரு’ என தமக்குள் பதில் சொல்லிக் கொண்டு பிங்கியின் தலையை இன்னும் சற்று குனிய வைத்து தம் இரு கட்டை விரலின் முதுகில் உள்ள நகநுனியால் அவளின் தலையில் இருந்த ஈர்களை ‘படக் படக்’ என சப்தம் எழ கொன்று கொண்டிருந்தாள்.
0௦0
நுண்கதை:16
௦௦௦
“ஆத்துல குளிக்கிறபோ ரொம்பப் பிடிச்சுப் போயி யாரையாவது தண்ணி அடிச்சு இழுத்துக்கிட்டுப் போனாலோ அல்லது கிணத்துல குளிக்கிறப்போ மூழ்கிப் போனாலோ மயிரைப் புடுச்சு இழுத்துதான் காப்பாத்தனும்னு சொல்வாங்க. ஏன்னா ‘மத்த இடங்களும் புடிச்சு தூக்குறப்ப நழுவிட வாய்ப்பு அதிகம்’. அதனால மயிர்ங்கிறது மயிர் மட்டும் இல்லை நம்ப உயிருங்கூட” என நடுங்கும் தன் விரல்களால் சுருட்டினைப் பற்றிக் கொண்டிருந்தவாறு கதை சொல்லிக் கொண்டிருந்தார் அழகர் தாத்தா.
0௦0
நுண்கதை:17
௦௦௦
‘ஒரு பறவை இறந்து போகலாம் ஆனா, அதோட மயிர் ஒருபோதும் இறந்து போகாது; உயிர்ப்போட பறந்துட்டே இருக்கும்’ என்றவர் பிரபல குண்டான் சுவாமி.
0௦0
நுண்கதை:18
௦௦௦
மாவோ தன்னோட அடிமைப்பட்ட மக்களுக்கு ஒரு கத்திரிக்கோலை வாங்கி அனுப்புறான். எதுக்கு? முதல்ல நீங்க சடையா போட்டு இருக்குற மயிரை வெட்டுங்கடா அப்படீன்னு. அதனால மயிர்ங்கறது இருக்குறதால மட்டும் இல்லை இல்லாம இருக்கதாலக்கூட புரட்சிய உண்டுபண்ணும்.
0௦0
நுண்கதை:19
௦௦௦
ஒருவரின் உடலில் உள்ள நரம்பின் நீளமானது புவியின் சுற்றளவற்குச் சமம் எனில் பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு உடலில் வளரும் மயிர்களின் ஒட்டுமொத்த நீளமானது அவரின் உடலில் உள்ள நரம்பின் நீளத்திற்கு சமம்” என்பது புவியின் மயிர் பற்றிய ஆய்வின் சுருக்கமாகும்.
0௦0
நுண்கதை:20
௦௦௦
பூமியில கருப்பு வண்ண மலர்கள் இல்லாமல் இருப்பதற்கும் மானுட மயிர்கள் கருப்பு வண்ணத்தில் இருப்பதற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்றது வண்ணத்துப்பூச்சி. தட்டான் பூச்சி அதன் காதருகேச் சென்று ஏதோ கிசுகிசுத்தது. அதனைக் கேட்டதும் மூச்சைப் பிடித்துக் கொண்டு விக்கித்துப்போய் நின்றது வண்ணம். சரியாகிடும் சரியாகிடும் எனச் சொன்னவாறு பறக்கத் துவங்கியது தட்டான்.
0௦0
நுண்கதை:21
௦௦௦
பூமியோட மயிர்கள்தான் தாவரங்கள்னு சொன்னா உங்களோட பதில் என்னவா இருக்கும்?
௦௦௦
பொது சமூகம் பெண்களுக்கு ஏன் நீளமான மயிர்களை அனுமதிக்கிது?
௦௦௦
உதிர்ந்து கீழ விழற மயிர் உடனே பறந்து போறதுக்கு என்ன காரணம்?
௦௦௦
மேலை நாடுகள்ல தலையோ தாடியோ ஆண்களும் பின்னல் போட்டுக்கலாம்; குடுமி வச்சுக்கலாம்; ஆனா, இங்க அனுமதி இல்லையே ஏன்?
௦௦௦
இப்போல்லாம் மயிரை பெரிய மயிரா மதிக்காததெல்லாம் கருப்பு நிறம் வெளுப்பா மாறத் துவங்குன உடனேயே பெயிண்டை எடுத்து மண்டையிலையும் மீசையலையும் பூசிக்கிதுங்க. மயிரை வெறும் மயிருனு சொல்லறவங்களால ஏன் இந்த நிறமாறலை ஏத்துக்க முடியலை? உதாரணத்துக்கு சொல்லனும்னா மயிலுக்கு பல வண்ணங்கள்ல மினுங்கிட்டு இருக்கும் மயிர்..அதே நேரத்துல ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு வண்ணத்துல இன்னும் சொல்லனும்னா புறாக்களோ பூனைகளோ நாய்களோ ஆடு மாடுகளோ ஓவ்வொன்னும் தனித்தனி நிறத்தோட இருக்கே!
இதெல்லாம் ஏன்?
௦௦௦
ரத்தனை எல்லோரும் ஐயத்திற்குப் பிறந்தவன் என்றனர். ஆம் ஐயம் அவனை சீராட்டிக் கொண்டாடியது.
0௦0
நுண்கதை:22
௦௦௦
தன் மனைவியடம் ‘புள்ளை விளையாட என்னடி பண்ணும்? தாடி இருந்தா புடிச்சு விளையாடும்னுதான் வம்பாடுப்பட்டு வளக்குறேன்’ என்றான்.
0௦0
நுண்கதை:23
௦௦௦
“இந்தச் சமூகத்துல நம்பளால ஒரு மயிரைக் கூட நிம்மதியா வளர்த்தெடுக்க முடியாது” அப்படீங்கறதுக்கு பேரு யதார்த்தம்.
ஆனா அதையும் மீறி “ஒரு மயிரா இருந்தாலும் வளத்தெடுக்குறதுக்கான முன்னெடுப்பு இருக்கு இல்லையா அதுக்கு பேருதான் புரட்சி”- ‘சொம்பனின் தத்துவங்கள்’ நூலிலிருந்து..
0௦0
நுண்கதை:24
௦௦௦
தாடி ஏன் இவளோ பெரிசா வச்சிருக்கீங்க? என்று மிக மெல்லிய புன்னகையுடன் கேட்டாள் ‘வளருது’ என்பதோடு முடித்துக் கொண்டேன்.
0௦0
நுண்கதை:25
௦௦௦
முளைச்சு மூனு இலை விடாத பயபுள்ளைனு சொல்வாங்கள்ல. அப்டீன்னா ஒருத்தன் வயசுக்கு வந்துட்டானா இல்லை வரலையானு முடிவு பண்ற காரணியே மயிர்தான் இல்லையா!? என்ற வினாவிற்கு ‘இலையா என்ன இலை’ எனக் கேட்டுக் கொண்டிருந்தார் உத்தமர்.
0௦0
நுண்கதை:26
௦௦௦
அரசு அலுவலகத்துல தாடி வைச்சுக்க அனுமதி வாங்கனுமாமே? உங்களுக்குத் தெரியுமா? நீங்க வாங்கி இருக்கீங்களா? எனக் கேட்டவளிடம் ‘யம்மா உண்மைதான்மா. அனுமதி வாங்கனும். ஆனா, நான் வாங்கலை. இதுவரை அனுமதி வாங்கீட்டீங்களானு என்னை யாரும் கேட்டதும் இல்லை. நானும் யாராவது ஒருத்தராவது கேட்பாங்கனு பாக்குறேன். ம்கூம். கேட்டதேயில்லை. சரிங்க, யாராவது கேட்டா என்ன சொல்வீங்க? என்றவளிடம் ‘ஏய்யா நீங்க பண்ற நல்ல விசயங்களால போகாத உங்கத் துறையோட மானம் எம் மூஞ்சியில இருக்குற இந்த மயிராலயாப் போயிடப் போகுது?’ அப்படீனுதான் கேக்கனும் என்றேன். அவள் மென்னகைத்தாள்.
0௦0
நுண்கதை:27
௦௦௦
வீட்ல ஏதும் விசேசமா? இவளோ தாடி இருக்கு என்றான் பனி. சிரித்துவிட்டு நான் பொறந்ததுல இருந்தே தாடி வச்சுருக்கேங்க என்றான் சனி. யோவ் யாருக்குய்யா பொறக்குறப்பவே தாடி இருக்கும் என பனி கேட்க ஏங்க நான் தாடி பொறந்ததுல இருந்து அதை அப்படியே வச்சிருக்கேனு சொன்னேங்க என்றான் சனி. பனி முறைக்க அட உண்மைதாங்க. நான் இதுவரை அதிகபட்சம் இரண்டுமுறை ஃபுல்சேவ் பண்ணிருந்தா பண்ணிருப்பேன். மத்தபடி டிரிம்மிங்தான் என்றான் சனி. தனது கைகளை இறுக்கமாக கட்டியிருந்த பனி முதலில் கேட்ட கேள்வியை மீண்டும் கேட்க ‘இப்போ இந்தத் தாடிய நான் மழிக்கிறேன்னு வச்சுப்போம். ஒருவேளை விசேசம் இருந்தா இல்லைனு ஆகிடுமா என சனி கேட்க, பனி தன் தலையை இருபுறமும் பற்றிக்கொண்டு அமர்ந்துவிட்டான். சனி அதுபற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் பனியின் அவஸ்தைகளை ரசித்துக் கொண்டிருந்தான்.
0௦0
நுண்கதை:28
௦௦௦
தன் மூக்கின் நுனியை வலது ஆட்காட்டி விரலால் சொரிந்தபடி இருந்த அறிவாளி ‘என்னங்க இவளோ பெரிய தாடி வச்சிருக்கீங்க ஏதும் லவ் பெயிலியரா?’ என்றான். சுற்றும் முற்றும் பார்த்தபடி இருந்த கூமுட்டை ‘ஏங்க தாடிக்கும் லவ் பெயிலியருக்கும் என்னங்க சம்மந்தம்!? நீங்க சொல்லறதப் பாத்தா ஃபுல் சேவ் பண்ணிட்டு சுத்தறவங்கள்லாம் லவ்ல ஏதோ சென்டம் எடுத்த கோல்ட் மெடலிஸ்ட் மாதிரில புரிஞ்சுக்கனும்போல’ என்றான். ‘அப்படியில்லாம் ஏதும் இல்லைங்க’ என நெளிந்த அறிவாளி ‘எல்லாம் கேக்குறதுதானங்க அதான் நானுங் கேட்டேன்’ எனச் சொல்ல அருகே நிறுத்தப்பட்டிருந்த ஸ்ப்ளண்டர் பைக்கின் முன் சக்கரத்தை நுகர்ந்திருந்த செவலை நாயைப் பார்த்தபடி இருந்த கூமுட்டை ‘நம்ம மக்கள் உருப்படாமப் போறதுக்கு மொத காரணமே இப்படி அடுத்தவன் கேக்கறான் அதுனால நானும் கேக்கறேன் அடுத்தவன் சொல்லறான் அதுனால நானும் சொல்லறேன் அப்படீங்கறதுதாங்க’ என்றான். அறிவாளியின் முகம் சற்று சோர்ந்துப்போக ‘இல்லைங்க உங்களை கஷ்டப்படுத்தனுங்கறது நோக்கம் இல்லைங்க அதுக்காக உண்மையச் சொல்லாம இருக்க முடியாது இல்லையா!?’ என்பதோடு ‘நம்பள்லாம் ஏதோ பெரிய பெரிய விசயங்கள்ல சந்தோசத்தை தேடித்தேடி ஏமாந்து போறோங்க. ஆனா, உண்மையில நம்பக் கண்ணு முன்னால இருக்குற ஆயிரம் குட்டி குட்டி விசயங்கள்ல அது நிரம்பிக்கிடக்குறத நாம கவனிக்கிறது இல்லை; ஏன்னா அதோட எளிமையான தோற்றம் நம்மளை ஏமாத்திடுது’ என்றான். அறிவாளி இப்போது தானொரு பைத்தியத்திடம் சிக்கிக்கொண்ட தோரணையில் விழித்துக் கொண்டிருக்க முன்சக்கரத்தில் நாய் போன உச்சா காற்றில் மறைந்து கொண்டிருக்கும் நுண்மையை கூமுட்டை இரசித்தபடி இருந்தான்.
0௦0
நுண்கதை:29
௦௦௦
ஏன்யா எப்ப பாத்தாலும் தாடி வச்சிருக்க; ‘வேற எதையாவது / யாரயாவது வச்சிருந்தா பொண்டாட்டி சோத்துல வெசத்தை வைச்சுடுவாங்கன்ற பயந்தாங்க’ என்றான் சொங்கியன்.
0௦0
நுண்கதை:30
௦௦௦
‘மயிர் ஒரு ஆணா பெண்ணா என்பது குறித்த உரையாடல் கடந்த காலங்கள்ல இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனா வருங்காலங்கள்ல அப்படியான உரையாடல்களோட தேவை அதிகப்படியா இருக்கும்’. ஏன்? ஏன்? ஏன்? அப்படீங்கற கேள்வி எல்லாருக்குள்ளையும் வரதான் செய்யும். காலம் அதற்கான பதிலை உங்களுக்கு நிச்சயமாச் சொல்லும் என்றவாறு கொசு எனப் பெயர் கொண்ட அந்த ரோபோட் தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டது..
000
******
மயிரைக் கட்டி மலையை இழுத்து பார்த்த நுண்கதை கவிஞரின் கதைநடை அற்புதம் வாழ்த்துகள் ??