
அந்தரங்கச் செல்ஃபி
ஒரு பக்கார்டி லெமனில்
பூட்டிவைத்த காதல் வாசனையற்றது
மதுக்குவளையின் இறுதிச்சொட்டினை
அவள் தொப்புள்குழியிலிட்டுச் சுவைப்பதில்
அரங்கேறுகிறது வாசனையுடனான ஆராதனை
முடி முதல் அடியென
முத்தம் முதல் சத்தம்வரை
அவளுக்கென்று
தனித்த பிரத்யேக சொற்களில்
அவளை வர்ணிப்பது ரோம மேளதாள நாட்களின் தாளநயம்
அந்தக் கடைசி குறுஞ்செய்தியில்
பகிரப்பட்ட மச்சத்தினைக் கண்டடைதலே
அவள் அழகினைச் சுருங்கச்சொல்லி விளங்க வைத்தலிற்கான ஏற்பாடு
தீராத காதல்
திணராத விரகத்தின் முடிவில்
அதிகாலை 5 மணிக்கு
ஆடைகளைத் துழாவும் தீவிரத்தில்
அணைத்துக்கொண்டு புரள்வதில்
இருவருக்குமிடையில் முழங்குகிற வெப்பமானது
கூடல் நிமித்தத்தின் குட்டித் தூக்கத்திற்கானது
அதன்பின் இடுகிற
ஒரு குட்டி முத்தம்
ஒரு குட்டி செல்லக் கடிபோல்
கூடலில் உச்சமேதுமில்லை
திடீரெனப் பரவுகிற தீ போல
தலைக்கேறும் சிருங்கார இரசவாதம்
அந்தரங்கச் செல்ஃபிகளில் ஒளிர்ந்து நிறைவடைகிறது.
****
தூவானம்
RX100ல் அவன் தோளிறுகப் பற்றியணைத்து
பறக்குமவளின் தோடு
அங்குமிங்குமாய் ஆட்டுகிறதென்னை
கரட்டூர் சாலையின் பள்ளங்களில்
இறங்கி ஏறி ஏறி இறங்கும்
எனது RX100ன் மேலெலும்பிச் சுழலும் சேற்றுநீரோடு
புலியென உறுமும் புத்திக்குள்
கலர்கலர் புறாக்கள்
வானிற்குச் சிறகுதரப் பறக்கின்றன
இறுகத் தழுவும் சுகந்தத்தில் தொலைதல்
எள்ளளவெனினும்
அதன் கொள்ளளவு பெரிது
அதிலும்
இருசக்கர வாகனத்தின் பின்னமர்ந்து
ஆணின் முதுகு துளைத்து
இதயம் கொய்தலென்பது
கண்கள்மூடி
கைகளை விரித்து காற்றில்விட்டபடி
காரணமேதுமின்றி
காதலூட்டுதலாகும்.
****
டபுள்சைடு கட்டிங் காளையர்கள்
டபுள்சைடு பாக்ஸ் கட்டிங்கிற்கு
கிறங்காத பெண்களேயில்லை
டபுள்சைடு பாக்ஸ் கட்டிங்கென்பது
வீட்டு முகப்பின் இருபுறமும்
ஏற்கனவே அழகழகாய்
நீண்டுவளர்ந்து பூத்துக்குலுங்கும் செடியை
ஓரஞ்சாரமெல்லாம் ஒண்ட வெட்டி
மண்டைமீது மட்டும் சமவெளிபோல் நேர்த்தியாய்க் கத்தரித்தல்
‘நாயே… நாயே… என்னடா முடி வெட்டியிருக்க
முள்ளம்பன்றிக்கு அல்லைல முள்ளெடுத்தமாதிரி’ ஒவ்வொருமுறையும்
பி.டி மாஸ்டர் வார்த்தைகளால் பிய்த்தெடுக்கையிலும்
கொழகொழவென்ற கன்னங்களுடன்
பேரழகான பெண்ணொருத்தி
சிங்கத்தின் பிடரிமயிருக்குள் விரல்கோதிப் ஸ்பரிசிப்பது போலிருக்கும்
இதுவொன்றும்
முடிவளர்த்த வெறும் பரட்டையல்ல
அழிவுறும் காடுகளை அறியாதவர்களுக்கு காட்டுவதற்கான
எச்சரிக்கைக் குறுங்காடு
வலசைபோன பறவைகள் திரும்பியபின்
கூடடையும் பெருங்காடு
சுக்குநூறாய்க் கசக்கி வளைத்துத் தூக்கியெறியப்பட்ட
கட்டுக்கம்பிகளால் கட்டமைக்கப்பட்டு
கபாலத்தின்மீது கண்காட்சிக்கு வைக்கப்பட்ட
சிறு வடிவிலான
நவீன செயற்கைப் பூங்கா
வெற்றிக்கு ஆறு ஓட்டங்கள்
தேவையென்ற நிலையில் பறக்கவிடப்பட்ட
120மீ சிக்ஸர் பந்தின் மீது
திரும்பாத கண்களை
மகேந்திரசிங் தோனியின் தலைமேல் திருப்பியது
இந்த டபுள்சைடு பாக்ஸ் கட்டிங்தான்
போதி மரத்தடியில்
தவமிருக்கும் புத்தர்களல்ல – இவர்கள்
போதி மரத்தையே தலையில் வளர்த்து
வர்ணச்சாயமிட்ட நீள்மயிர்களினால் யுத்தமிட்டு
கன்னிகளின் இதயத்தைக் கட்டியிழுக்கும்
2k kids காலத்தின் குட்டிச் சித்தர்கள்
டபுள்சைடு கட்டிங் காளையர்கள்
பெரும்பாலும்
சிங்கிளாக இருப்பதில்லை என்பதாலோ என்னவோ
இப்பெயர் தோன்றிற்றெனத் தெரியவில்லை
என்றாலும்,
சிங்கிள்கள் டபுள்சைடு கட்டிங் வெட்டத் தகுதியற்றவர்கள்.
******