
’காலநதி’ எனும் பதத்தின் பின்னணியில் இருப்பது காலம் குறித்த நமது புரிதலே. ’காலம் எப்பொழுதும் முன்னோக்கி மட்டுமே, அதாவது ஒற்றைத் திசையில் மட்டுமே செல்லக்கூடிய தன்மை கொண்டதாக இருக்கிறது என்பதாலேயே காலத்தை நதியென உருவகம் செய்கிறோம். நதி ஒரு போதும் பின்னால் போகாது இல்லையா!’ – இதுவே நியூட்டன் அறிவியலின் புரிதலாக இருந்தது. ஆனால் ஐன்ஸ்டைன் உள்ளிட்ட பல இயற்பியலாளர்களின் பங்களிப்பில் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் உருவான குவாண்டம் இயற்பியல் அதுவரையிலான வெளி-காலம் (Space-Time) குறித்த புரிதலை, இப்பிரபஞ்சம் குறித்து நமக்கு அதுவரையிருந்த மானுட அறிவியல் பார்வையை ஒட்டு மொத்தமாக கலைத்துப் போட்டு புதிய பார்வையை வழங்கியது.
குவாண்டம் இயற்பியலின் பிரபஞ்சத்தில் நிலையானது என்ற தன்மை கொண்டது ஏதுமில்லை என்பதையே முன்வைக்கிறது. இருக்கிற எல்லா யதார்த்தங்களும் (Realities) சாத்தியங்களின் அடிப்படையிலானவை. அதாவது நம்மைச் சுற்றியுள்ள அனைத்தின் இருப்பும், அவை ஒன்றோடொன்று தொடர்பு கொள்ளும் விதமும் முற்றிலும் நிகழ்தகவின் அடிப்படையிலானவை. வேறு வகையில் சுருங்கச் சொல்வதானால் அறுதியிட்டு இன்ன விசயம் இப்படித் தான் இருக்குமென ஊர்ஜிதமாக இயற்பியலால் ஒரு போதும் சொல்ல இயலாது. மேலும் ஐன்ஸ்டைனின் சார்பியல் கொள்கை அதுவரையில் முற்றிலும் தொடர்பற்ற அம்சங்களாக கருதப்பட்ட காலத்திற்கும் வெளிக்கும் இடையேயான தொடர்பை பற்றியும் புதிய பார்வையை வழங்கியது. அதாவது அவையிரண்டும் பிரிக்கவே இயலாதபடி பிணைக்கப்பட்ட காலவெளி(Spacetime) எனும் ஒற்றை அம்சமாக இருப்பவை. கூடவே காலம் குறித்த ஆச்சரியமூட்டும் புதிர்களும் இதன் தொடர்ச்சியாக வெளிப்படத் துவங்கின.
ஜெர்மன் மொழியில் ஒரு வலைத் தொடரை தயாரிக்கும் எண்ணத்தில் இருந்த நெட்பிளிக்ஸ் நிறுவனம் 2014 ஆம் ஆண்டில் இயக்குநர் பாரன் போ ஓடார் (Baran bo Odar) இயக்கத்தில் வெளியான Who Am I – No System is Safe எனும் டெக்னோ த்ரில்லர் திரைப்படத்தைப் பார்த்து பிடித்துப் போய், அதனையே அடிப்படையாகக் கொண்டு ஒரு வலைத் தொடரை இயக்குமாறு அணுகிட, அதற்கு புதிதாகவே ஒரு கதையை உருவாக்குவதாக சொல்லி இயக்குனர் தனது மனைவியும் திரைக்கதை எழுத்தாளருமான யான்ஷே ப்ரீஷே (Jantje Friese) உடன் இணைந்து உருவாக்கியது தான் ’டார்க்’.
விண்டன் (Winden) எனும் ஊர் உண்மையில் ஜெர்மனியில் இருக்கும் போதிலும், திரைக்கதை இணையர் அந்த பெயரை மட்டுமே எடுத்தாண்டு தங்களது கதைக்கு முற்றிலும் வேறான ஒரு புனைவு நகரத்தைத் தான் உருவாக்கி இருக்கிறார்கள். வின்டன் நகரத்தில் இருக்கிற ஒரு அணுமின் நிலையத்தையும், அதனையொட்டி இருக்கக் கூடிய ஒரு நீண்ட குகையும் கதையின் மிக முக்கிய களங்களாக இருக்கின்றன. 2019 ஆம் ஆண்டு 43 வயதான மைக்கேல் கான்வால்டின் தற்கொலையில் துவங்குகிறது கதை.
துவக்கத்தில் அங்கே காணமல் போன எரிக் எனும் ஒரு பதின்மன் குறித்து தேடுதல் நடந்து கொண்டிருக்கும் போதே மிக்கேல் எனும் பதின்மனும் தொலைந்து போக அவனைத் தேடித் துவங்குகிற ஒரு வேட்டை அந்நகரில் வசிக்கிற நான்கு குடும்பங்களின் (கான்வால்ட் குடும்பத்தினர், டீடமன் குடும்பத்தினர், டாப்ளர் குடும்பத்தினர் மற்றும் நீல்சன் குடும்பத்தினர்) இயல்பு வாழ்க்கை குலைத்துப் போடுகிறது. அவர்களது வாழ்க்கை ஒன்றோடு ஒன்று ஏதோ ஒரு விதத்தில் பின்னப்பட்டதாக இருக்கிறது. மிக்கேலின் தந்தையும் அந்நகரின் காவல் துறை அதிகாரியுமான உல்ரிச் நீல்சனின் மகனை எப்படியேனும் மீட்க முனைப்புடன் தீவிரமாக விசாரணையை முடுக்கி விடுகிறார்.
எரிக் ஒரு போதைப் பொருள் விற்பனையாளனாக இருக்க, அவன் தொலைந்த பிறகு, விண்டன் குகைக்குள் அவனது சேகரிப்புகள் இன்னுமிருப்பதாக அறியவருகிற இக்குடும்பங்களின் பதின்மர்கள் அதனைத் தேடி இரவில் செல்லும் போது நிகழும் களேபரத்தில் தான் மிக்கேல் தொலைந்து போகிறான். ஏதோ ஒரு வகையில் அவன் காணாமல் போவதற்கும், அதன் பிறகு அவ்வூரில் அரங்கேறும் அசாதாரணமான திருப்பங்களுக்கும் அவர்களே துவக்கமாய் இருந்து விடுகின்றனர். 2019 இல் நடைபெறுகிற இச்சம்பவம் மிக்கேலின் தந்தை உல்ரிச் நீல்சனுக்கு சரியாக 33 வருடங்களுக்கு முன்னர் தனது சொந்த சகோதரன் மாட்ஸ் நீல்சன் காணாமற் போன சம்பவத்தினை நினைவூட்டுவதாக அமைகிறது, இன்னும் விடை தெரியாத அச்சம்பவத்தின் ஞாபங்களை இயல்பாகவே உல்ரிச்சுக்கு கலக்கத்தை ஊட்டுகின்றன. இம்மூன்று பதின்மர்கள் தொலைந்து போன சம்பவங்களுக்கும் ஏதோ தொடர்பிருப்பதாய் அவருக்கு தோன்ற ஆரம்பிக்கிறது.
கதையின் துவங்கத்தை மட்டும் பகிரலாம் எனும் எண்ணத்தில் தான் இவ்வளவையும் சொல்கிறேன். மற்றபடி கதையின் மறுகூறல் நேர விரயமென்றே தோன்றுகிறது. அந்த அளவில் சிக்கல்கள் நிறைந்த, கால வரிசை குலைந்த, பார்வையாளரிடம் நிறைய நிறைய கவனிப்பை கோருகிற ஒரு திரைக்கதையாகவே இது எழுதப்பட்டுள்ளது. பொதுவாக அறிவியற் புனைவுகளின் அடிப்படை வெற்றியானது அவை எந்த அளவிற்கு தாம் முன்வைக்கிற கதைச்சரடிற்குள் அறிவியல் நிஜங்களை எடுத்தாள்கிறார்கள்; அது எந்த அளவிற்கு கதையோட்டத்துடன் தர்க்க ஒழுக்கோடு இயைந்து போய், அதன் வழியாக ஒரு நம்பகத்தன்மையை ஏற்படுத்துகிறது என்பதைப் பொறுத்ததே. முதல் இரண்டு பருவங்களில் இது ஏறக்குறைய மிகக் கச்சிதமாகவே நடந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ’எளிமைப்படுத்தப்பட்ட எல்லோருக்குமான அறிவியல்’ (Popular Science) புத்தகங்களில் ஒரு அறிவியல் தேடலுடைய ஒருவர் காலப்பயணம் (Time Travel) குறித்து என்னவெல்லாம் தேடிப் படித்திருப்பாரோ அவற்றை எல்லாம் கவனமாகத் தொகுத்து, தம் கதையுலகிற்குள் அத்தனையையும் ஒன்று விடாமல் குழைத்துச் செய்தது போன்ற ஒரு ஈர்க்கிற திரைக்கதையாகவே இத்தொடரின் திரைக்கதை இருக்கிறது.
அதுவே மிகப் பரவலாக இத்தொடர் பார்வையாளர்களை சென்றடைந்ததற்கான முதல் காரணமாகத் தோன்றுகிறது. வெறும் அறிவியல் சாத்தியங்களாகப் படிக்கிறபோதே மிகுந்த சுவாரசியத்தன்மையும், புதிர் தன்மையையும் தம்மளவில் கொண்ட அந்த இயற்பியல் சங்கதிகளை எல்லாம், அவற்றின் அறிவியல் தர்க்கங்கள் துலக்கமான விதத்தில் சரிந்து விடாத வண்ணம் புனைவாக வார்த்திருப்பது இன்னும் மேலதிக சுவாரசியமான அனுபவமகவே இருக்கிறது. கால இயந்திரம் (Time Travel Device), புழுத்துளை கோட்பாடு (Wormhole Theory), இணை பிரபஞ்சங்கள் கோட்பாடு (Theory of Parallel Universes), கருந்துளை கருத்துப்படிவம் (Concept of Black Holes) போன்ற பலப்பல சிக்கலான கருத்துகளை இலகுவான வடிவில் நாம் வாசித்தும், கேட்டுமிருக்கிற பல விசயங்களை அழகாக புனைவின் ஓட்டத்திற்குள் உள்வாங்கிக் கொண்டிருக்கிறது கதை.
இது போக பார்வையனுபவத்தில் ஏனைய அறிவியற் புனைவுகளின் இருந்து விலகித் தெரிந்த அம்சம், இக்கதை மீண்டும் மீண்டும் சுழன்று வருகிற இரு மையப்புள்ளிகளாக இருப்பவை கிருத்துவ புராணிகம் சார்ந்த நம்பிக்கைகளும், நவீன குவாண்டம் இயற்பியல் கருத்தாக்கங்களுமாக இருப்பது தான். இவை இரண்டும் யதார்த்தத்தில் ஒன்றுகொன்று முரண்பட்டவை. சொல்லப் போனால் முற்றிலும் எதிர்துருவ தன்மையுடையவை. கதை ஒரு பக்கம் காலப் பயணம், புழுத்துளை வாயில்கள் என அதீதமான அறிவியற் சாயம் பூசிக் கொண்டாலும், மறுபுறம் கதாபாத்திர உருவாக்கப் பின்னணியில் ஆதாம் ஏவாள் போன்ற கிருத்துவம் சார்ந்த புராணிக அடையாளங்களைக் எடுத்தாண்டும் கொள்கிறது. மொத்த கதையில் பற்பல முறைகள் பிரயோகிப்படும், பல கதாபாத்திரங்களும் உச்சரிக்கிற வார்த்தையுமான அப்போகேலிப்ஸ் (apocalypse) முற்றிலுமான கிருத்துவ நம்பிக்கை அடிப்படையிலானது. விவிலியத்தின் வெளிப்பாட்டு நூல் பகுதியில் (The Book of Revelation) வருகின்ற அது, உலகின் இறுதி நாள் குறித்து பேசுவது.
கதையாக்கத்தின் இன்னொரு சுவாரசியம் அதன் இன்னொரு அடுக்கு. ஒரு தளத்தில் சிக்கலான இயற்பியல் கோட்பாடுகளை அடிநாதமாகக் கொண்டு கதை வளரும் அதே வேளையில் இன்னொரு தளத்தில் அது மனிதர்களுக்கிடையே எழுகின்ற சிக்கல்களை இருத்தலியல் பார்வையில் முன்வைத்து, அது குறித்த ஒரு உளவியற்பூர்வமான அணுகலையும் முன்வைக்கிறது. அதாவது இக்கதை முன்வைக்கிற இயற்பியல் அடிப்படைகள் எதுவுமே தெரியாத ஒரு பார்வையாளனும் கூட கதையின் இந்த இருத்தலியல் பரிமாணத்தை உள்வாங்கிக் கொண்டு கதையோட்டத்துடன் தன்னை பொருத்திக் கொள்ள முடியும். கதாபத்திரங்களுக்கிடையே நிகழ்கின்ற மோதல்கள் சார்ந்த நாடகமயமான தருணங்களில் அவர் தன்னை பொருத்திக் கொண்டு கதையைத் தொடர முடியும்.
என்ன! ஒரே கதாபாத்திரம், வேறொரு காலத்தைச் சேர்ந்த தன்னையே கதையின் ஓரிடத்தில் அல்ல பல இடங்களில் சந்தித்துக் கொள்வது, நிகழ்காலத்தின் நிகழ்வுகளோ, எதிர்காலத்தின் நிகழ்வுகளோ கடந்த காலத்தை பாதிப்பது போன்ற சங்கதிகளை மட்டும் கொஞ்சம் விசித்திரமாக தோன்றி அவற்றை தர்க்கப்பூர்வமாக விளங்கிக் கொள்ள சிரமப்பட வாய்ப்பிருக்கிறது. ஒரு வேளை காலத்தின் வடிவம் (The Shape of Time) குறித்த இயற்பியல் பார்வையை வாசித்து இருப்பினும் அதன் புதிர்தன்மை விலகா வண்ணமே இருக்கும். (நானறிய இப்போது வரை தமிழில் வெளியான மிகச் சிறந்த அறிவியல் புனைவு திரைப்படமான இன்று நேற்று நாளை (2015) மிக அழகாக ஒரு ரசிகனிடம் காலப் பயணம் குறித்த புரிதல் பலருக்கும் இந்த வலைத்தொடரை பார்க்கும் போது பயன்பட்டிருக்கும்.)
33 ஆண்டுகள் இடைவெளியில் கதையின் காலம் முன் பின்னாக நகர்ந்து கொண்டிருக்க, களமாக அதே விண்டன் நகரமே மீண்டும் மீண்டும் வேறு அரிதாரம் பூசியது போலவும், நாம் பார்த்துப் பழகியிருந்த கதை மாந்தர்களே வேறு வேறு வயதினராக வருவது ஒரு விதமான புதிர் போட்டியின் விடைகளைத் தேடுகிற பங்கேற்பாளனது மனநிலைக்கு நம்மைத் தள்ளுகின்றன. ஒரு கட்டத்தில் அது ஒரு சுவாரசியம் நிறைந்த விளையாட்டாக மாறிப் போகிறது. 2019 இல் துவங்குகிற கதையானது 1986/87, 1953 என பின்னோக்கி பயணிக்கிறது ஒரு கட்டம் வரையிலும். பின் முன்னோக்கியும் 2019/20 எனவும் (வலைத்தொடர் 2017 முதல் ஒளிபரப்பானது) பின்னர் 2052/53 எனவும் பயணமாகிறது. பின் ஒரு தருணத்தில் இன்னும் பின்னகர்ந்து 1921 மற்றும் 1888க்கும் செல்கிறது. இந்த கலைத்துப் போடபட்ட காலக்கோட்டிற்கு இடையில், கால இயந்திரத்தின் துணையோடு ஒன்றுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் வெவ்வேறு காலகட்டத்திற்கு பயணப்பட்டு கதையின் போக்கை மேலும் மேலும் உள்முகமாக சிக்கலானதாக மாற்றிக் கொண்டே இருக்கின்றனர்.
குறிப்பாக ஹானா கதாபாத்திரத்தின் மகனாக வருகின்ற யோனஸ் கான்வால்ட் கதையின் மிக முக்கியமான கதாபாத்திரமாக இருக்கிறான் என்பதை நாம் சில அத்தியாயங்களிலேயே புரிந்து கொள்ள முடிகிறது. நோவா எனும் மர்மமான கதாபாத்திரத்தின் வருகை கதையின் புதிர் முடிச்சை போடுகிறது என்றால், அதற்கும் மேலாக ஆதம் கதபாத்திரத்தின் வருகை அம்முடிச்சை இறுக்கமானதாக்குகிறது. அதற்கு அடுத்ததாக மார்த்தா நீல்சன் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
ஊரில் இருக்கக்கூடிய விண்டன் குகைக்குள் காலப்பயணம் செய்வதற்கான வழி இருக்க (”sic mundus creatus est” எனும் லத்தீன் மொழியிலான வாக்கியம் பொறிக்கப்பட்ட ஒரு கதவு அது. அதற்கு ‘இதனால், உலகம் உருவாக்கப்பட்டது’ என்பது பொருள். ஒரு கட்டத்தில் sic mundus என்பது ஒரு அமைப்பென்றும் ஆதம் அதைச் சேர்ந்தவர் எனவும் அறிந்து கொள்கிறோம்.) அதன் வழியாக கால இயந்திரம் இல்லாமலேயே கடந்த காலத்திற்கும், எதிர் காலத்திற்கும் பயணிக்கிறான் யோனஸ். அவன் வழியாகவே நாம் கதையின் பல திருப்பங்களை அறிந்து கொள்கிறோம். கதை வளர வளர அவன் பல திருப்பங்களை உருவாக்குபவனாகவும் இருப்பதையும் சேர்த்தே தெரிந்து கொள்கிறோம்.
காலம் என்பது நாம் நினைப்பது போல நேற்று, இன்று, நாளை எனும் காலவரிசைப்படி ஒன்றன்பின் ஒன்றென வருவதில்லை எனவும், ஏககாலத்தில் அது எல்லாமாகவுமே இருக்கிறது எனும் தர்கத்தை புனைவிற்குள் எதிர்கொள்கிற போது கொஞ்சம் விசித்திரமாகவும், நம்ப இயலாததாகவும் நிச்சயம் இருக்கும். எனினும் இதற்கான சாத்தியப்பாடுகள் இருப்பதாகவே நவீன இயற்பியல் பார்வை சொல்கின்றன. காலத்தின் இந்த தொடர்பை நாம் விளங்கிக் கொள்ள நாம் கொஞ்சம் போல காலத்தின் வடிவம் (The Shape of Time) குறித்து வாசித்தல் நலம். மேலும் நாம் பிரஞ்சத்தினைப் பொறுத்தவரை கடந்த காலத்தைப் பார்ப்பது என்றால் என்ன என்பது குறித்த புரிதலை நமக்கு சார்பியல் கொள்கை முன்வைக்கிற ஒளிக் கூம்பு (Light Cone) எனும் கருத்து ஏற்படுத்தும். மேற்சொன்னவைகளையும், இன்னும் பிற இக்கதை முன்வைக்கிற கொஞ்சம் சிரமாமன இயற்பியல் கருத்துகளை எளிமையாக விளங்கிக் கொள்ள இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹாக்கிங் எழுதிய The Universe in a Nutshell (2001) எனும் நூல் மிகமிக உதவியாக இருக்கும்.
கதைக்குள்ளும் ஒரு புத்தகம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கடிகாரம் செய்பவரும், கோட்பாட்டு இயற்பியல் துறை விரிவுரையாளருமான H.G. தான்ஹௌஸ் எழுதிய A Journey Through Time எனும் நூல் தான் அது. (உல்ரிச் நீல்சனுடன் பணியாற்றும் விண்டன் நகரின் தலைமை காவலதிகாரியாக வருகின்ற சார்லோட் டாப்ளர் இவரது வளர்ப்பு மகள். மூன்றாம் பருவத்தின் இறுதி அத்தியாயங்கள் வழியாகவே நாம் இவரே மொத்த கதையில் நிகழும் பிரளயங்களுக்கெல்லாம் ஆதிப் புள்ளியாக இருந்திருப்பதை அறிந்து கொள்கிறோம்.) அவரால் எழுதப்படாமலே எதிர்காலத்தில் இருக்கிற அப்புத்தகம் ஒரு கட்டத்தில் அவரது கரங்களில் கிடைப்பதும், முதல் கால இயந்திரத்தை உருவாக்குவதற்கான வரைபடம் அவருக்கு எதிர்காலத்தில் இருந்து வருகிற ஒரு காலப் பயணியின் (Time Traveler) வழியாக கிடைப்பதும் கதையோட்டத்தில் இருக்கிற சுவாரசியமான தருணங்கள்.
கதையின் போக்கில் மிக முக்கியமானதென வருகின்ற விண்டன் நகரத்தின் அணுமின் நிலையம் ஏன் இருக்கிறது என்பதுவும், அதன் தலைவர்களாக வெவ்வேறு காலகட்டங்களில் இருக்கின்ற அலெக்ஸாண்டர் டீடமன் மற்றும் அவரது மாமியார் க்ளௌடியா டீடமன் போன்ற கதாபாத்திரங்களின் முக்கியத்துவங்கள் துவக்கத்தில் புரியாவிடினும் போகப் போக புரிய வருகிறது. குறிப்பாக இரண்டாம் பருவத்தின் பிற்பாதி முதலே க்ளௌடியா (’ளௌ’ எனும் எழுத்து வழக்கத்தில் பயன்படுத்தப்படுவது இல்லை எனினும் உச்சரிப்பு பொருத்தத்திற்காக கையாளப்பட்டுள்ளது.) பாத்திரம் கதையின் மையத்திற்கு நகரத் துவங்கி மூன்றாம் பருவத்தில் அது வரை இருந்த Adam-Eva இருமைத் தன்மையை (Duality) தகர்த்து தன்னையும் இணைத்துக் கொள்வதன் மூலமாக மூன்றாவது பரிமாணமாக மாற்றம் பெறுகிறார். இதுவும் கூட அடிப்படையில் கிருத்துவ மரபின் வழி வரும் திரித்துவத்தின் (Trinity) புனைவு உருவகம் தான். கூடவே கால இயந்திரத்தின் இயக்கத்திற்கு மிக முக்கியமான கச்சா பொருளாக கதிரியக்க சீசியம் இருக்கிறது என அறியவருவதன் மூலம் கதையில் அணுமின் நிலையத்தின் பங்கு குறித்தும் விளங்கிக் கொள்கிறோம்.
முதல் இரண்டு பருவங்களின் பதினெட்டு அத்தியாயங்களிலும் பல்வேறு காலகட்டத்திற்குள் பயணிக்கிற கதாபாத்திரங்கள், அவர்களுடையதாகவே இருக்கிற எதிர்கால சுய உருக்களை (Future Self) அவர்கள் சந்திக்கிற இடங்கள் கூட ஒரு தர்க்க ஒழுங்கிற்குள் வந்து விடுகின்றன. மேலும் யோனஸ் மற்றும் மார்த்தாவின் முக்கியத்துவம் குறித்த காரண காரியங்களை, கதையில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை யோனஸ் மார்த்தாவை நோக்கிச் சொல்கிற “We are the glitch in the matrix” வசனமே பறைசாற்றி விடுகிறது. அதனை தாராளமாக நாம் புனைவு தர்க்கமென (Narrative Logic) எனக் கொள்ளலாம். ஆனால் பிற்பகுதியில் மூன்றாம் பரிமாணமாக உருவெடுக்கிற க்ளௌடியா பாத்திரத்திற்கு அப்படியான எந்த ஒரு தர்க்கரீதியிலான விளக்கமும் இருப்பதாக தெரியவில்லை.
மேலும் இரண்டாம் பருவத்தின் முடிவு வரையிலும் வேவ்வேறு காலகட்டமாயினும் கதை ஒரே உலகத்திற்குள் தான் நடக்கிறது. ஆனால் மூன்றாம் பருவத்தில் கதை இரு இணை உலகங்களில் மாறி மாறி நடக்கிறது. இதில் பல இடங்களில் தர்க்க மீறல்கள் இருப்பது கண்கூடு (ஓர் உதாரணத்திற்கு இறுதி அழிவிற்கு பிறகு அணுமின் நிலையத்திற்குள் யோனஸும் க்ளௌடியாவும் ஏறத்தாழ 20 ஆண்டுகள் தற்சார்போடு இயங்கி வருகிற கடவுள் துகளை ஒரு காலப் பயண நுழைவாயிலாக மாற்ற முற்படுகிற காட்சிகளைச் சொல்லலாம். கடவுள் துகள் தற்சார்புடனே இயங்க வல்லது எனக் கொண்டாலும், அதற்கு இவர்கள் அளிக்கின்ற அபரிதமான மின்காந்த சக்தியை இவர்கள் எப்படி ஆண்டுக் கணக்கில் உற்பத்தி செய்ய இயலுகிறது எனும் கேள்வி எழுவது இயல்பானதே. இயற்பியலாளர் ஹிக்ஸ் அனுமானித்த ஹிக்ஸ் போஸான் எனும் அணுத்துகளின் இருப்பு பரிசோதனை ரீதியில் கழிந்த 2012 ஆம் ஆண்டு நிரூபிக்கப்பட்டது. அதற்கென அவருக்கு 2013ஆம் வருடத்தின் இயற்பியலுக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது. ஹிக்ஸ் போஸானுக்கு ஊடகங்கள் கடவுள் துகள் [God Particle] எனும் பட்டப்பெயரை சூட்டியபோது ஹிக்ஸ் உள்பட பல இயற்பியலாளர்கள் அது ஏற்புடைய பெயரல்ல என்றே சொல்லி வந்தனர். எனினும் பொது வெளியில் அப்பெயரே பிரபலமானது).
பொதுவாக மிகப் பிரம்மாண்டமாக விரிவு கொள்ளும் விதமாக எழுதப்படுகிற புனைவுகளை அவற்றில் இருந்து கிளைப் பிரிந்த கதையின் அத்தனை புள்ளிகளும் ஒரே இணைப்பு புள்ளிக்குள் சங்கமிக்க வைப்பது மிக கடினமான காரியம் எனும் போதிலும், இத்தொடரைப் பொறுத்தவரையில் அது மூன்றாவது மற்றும் இறுதியான் பருவத்தில் முதல் இரண்டு பருவங்களில் களமாடிய இருத்தலியல் பார்வையில் இருந்து விலகி ஆண்-பெண் என பாலின ஆதிக்கத்தை (Gender Domination) நிறுவ முயலுகிற சாயலை எடுத்துக் கொண்டது போல தோற்றம் கொள்கிறது. மேலும் இரு உலகங்களிலும் கதைகள் நடப்பதாக குறியீட்டு ரீதியில் அவைகளுக்கு இடையேயான வேறுபாடுகளை காட்சிகளில் தனித்துவமாக காட்ட நினைத்து கதாபாத்திரங்கள் புழங்குகிற இடங்களின் சுவர் வண்ண வேறுபாடுகள் (விண்டன் பள்ளி போன்ற) அவர்களது வாழிடங்களில் காட்டப்படுகின்ற இடவல மாற்றங்கள் (Lateral Inversion) போன்ற நுணுக்கமான விவரணைகள் கவனமாக செய்யப்பட்டிருப்பினும், கதாபாத்திரங்களுக்கு இடையெயான உறவுகள் இரு வேறு உலகங்களிலும் வெவ்வேறாக இருப்பது போன்ற மாற்றம் சுவாரசியத்திற்கு பதிலாக குழப்பமாகவே எஞ்சுகிறது. ஒரு கட்டத்தில் அதுவே அயற்சியைத் தருகின்ற ஒரு முட்டுக் கட்டையாகவும் ஆகிப் போகின்றன. ஆனால் இத்தகைய பெரிய மாற்றம் கதையின் போக்கு மற்றும் வளர்ச்சிக்கு சொல்லிக் கொள்ளும்படியாக பங்களிக்கவில்லை எனும் போது அது ஏனென்றே புரியாத இடைச்செருகலாகவே தொக்கி நிற்பது போன்று உணர்வதை தவிர்க்க இயலவில்லை.
இவை எல்லாம் கடந்தும் நமது காலத்தின் மிக முக்கியமான அறிவியல் புனைவாக இவ்வலைத் தொடர் நிச்சயம் இருக்கிறது. முதல் பருவம் தொட்டே பலராலும் பார்க்கப்பட்டு, சமூக ஊடகங்களில் இது குறித்த உரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு, அதன் வழியாக இயற்பியலின் மீதான் ஆர்வமும் பலருக்கும் ஏற்பட்டது என்பதை கவனிக்க முடிந்தது. ஒரு வகையில் அறிவியல் புனைவு என்பதே அடிப்படையில் அறிவியலின் சாத்தியங்கள் குறித்து அறிவியல் தர்க்க (Scientific Logic) எல்லைக்குள் இருந்து கொண்டு கற்பனை தொட்டு புனையப்படுவதே. அதன் அடிப்படை நோக்கம் அறிவுப்பூர்வமான ஒரு பொழுதுபோக்காகவும், அதோடு கூடவே அறிவியலின் பால் ஒரு பார்வையாளனுக்கு இருக்கும் ஆவலைத் தூண்டுவதாகவும் (பல சமயங்களில் எதிர்கால அறிவியலுக்கு கலங்கரை விளக்கு போலவும்) இருக்க முயல்வதே. இவை இரண்டுமே Dark வலைத் தொடரில் சாத்தியப்பட்டிருக்கின்றன.