சிறுகதைகள்

மூநு பெண்ணுங்கள் – எம் கே மணி

சிறுகதைகள் | வாசகசாலை

நமது பார்வைக்கு தாசன் பாந்தமாகத்தான் இருப்பான். ஆனால், பாந்தமாக இருப்பவர்களின் மனம் அதுவல்ல. குழந்தையாக இருக்கும்போது திரண்டு எழுகிற அறியும் ஆர்வம், எந்த ஒழுங்கிலும் நிற்க முடியாததைப் போல, அவன் தனது மனதை வளர்த்துக்கொண்டான். அவனது பெண் பித்தைக்கூட அவனது தத்தளிப்பாகத்தான் நாம் காண வேண்டும். சம்பந்தமுள்ள பெண்களுக்குத் தெரியாதபோதிலும் அவன் நிறைய பெண்களைக் காதலித்தான். அதன் பெருமையை, மயக்கத்தை, வலியை அனுபவித்துக் கொண்டேயிருந்தான். ஒருமுறை, அது அவனுடைய பதினாறாம் வயது, கேரளாவில் இருந்த அவனுடைய ஒன்றுவிட்ட அக்கா, தனது மச்சினனின் திருமணத்துக்குக் கூப்பிட்டிருந்தபோது, அங்கே அவளது குட்டி நாத்தனாரான நீலிமாவை அவன் சந்தித்ததும், அவளை நோக்கி நாமிருவரும் திருமணம் செய்துகொள்ளலாமா என்று கேட்டதையும் உங்களிடம் சொல்ல வேண்டும். இத்தனைக்கும் அந்த நேரத்தில் சென்னையில் அவன் உருகிக்கொண்டிருந்த பால்ய கால சகி ஒருத்தி கள்ளப் பார்வை பார்த்தவாறு இருந்து கொண்டிருந்தாள்.

மூநு பெண்ணுங்களில் ஒருத்தியான நீலிமாவை அவன் உடனடியாக பொருட்படுத்திவிடவில்லை. கல்யாண நெருக்கடியில் கொறச்சு சுந்தரிகள் அவனுக்கு உடனடியாக நெருக்கம் கொடுத்து, கூட்டமாகவும் தனித்தனியாகவும் சில்லறைகள் இறைத்து, அவனை பொறுக்கவைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். சொல்லப்போனால் அவன் தரையில் கால் பாவ ஆகாமல் புகை போல பரவிக்கொண்டிருந்தான். நல்லவேளையாக அவ்வப்போது அவனுடைய அக்காவே அவ்வளவு அவசரங்களுக்கு நடுவிலும், டீ காப்பி சம்பாரம் நாரைங்கா வெள்ளம் கள்ளப்பம் மீன் சோறு நெய் சோறு கோழி இறைச்சி என்றெல்லாம் ஊட்டிக் கொண்டிருந்ததால், மயக்கம் போட்டு எங்கேயும் விழுந்து வைக்கவில்லை. கல்யாணத்துக்க்கு முந்தைய நாள் நள்ளிரவு வரை விழித்திருந்து, அதற்கு அப்புறம் கொஞ்சம் தூங்கவேண்டிய அவசியம் வந்தபோது, அவன் அக்காவோடுதான் படுத்துக்கொண்டான். முக்கியமான விஷயம், அந்தப் பெண்கள் அத்தனை பேரும் அங்கேதான் நெருக்கியடித்துப் படுத்துக்கொண்டார்கள். அக்கா அதட்டவேதான் தூங்கினார்கள். அப்போதும் நீலிமாவின் கரம் அவனுடைய விரல்களைப் பற்றிக்கொண்டிருந்தது.

நீலிமா எட்டாவது படிக்கிற சிறுமி. பெண்கள் கூட்டத்தில் நானும் இருக்கிறேன் என்று அவனுக்கு உறைக்கவைக்க முயன்று, அவள் தோற்றவாறு இருந்தது அவனுக்குத் தெரியாமலில்லை. எதற்கு இது என்று உள்ளுக்குள்ளே நொடித்துக்கொண்டான். கொஞ்சம் கேவலமாக சொல்லுவதென்றால், இந்த வயசிலேவா என்று எண்ணிக்கொண்டான். அவள் அவனை ஒரு கணத்தில் விழுங்கிக்கொள்வது திக்கென்று ஆகவே, பலமுறை தன்னை அங்கிருந்து நகர்த்திக்கொண்டான். மறுநாள் கல்யாணம் நடக்கும்போது, தனது பெண் படையில் அவளை நிறுத்திக்கொள்ள பிடிக்காமல் சற்று கடுமையாகவே அதட்டி ஒழுக்கம் கற்றுக்கொடுத்தான். அதாவது, நீ உன் அக்கா அம்மா எல்லோரும் இருக்கிற இடத்தில்தான் இருக்க வேண்டும் என்பதாக அது இருந்தது. அப்புறம், அவள் இவனிடம் வரவில்லை. ஒருமுறை இவன் அதைக் கவனித்து பாதிப்படைந்து, இவனாகவே அவளை அணுகி ஒரு ஜோக்கு அடித்தபோது, அது செல்லாமல் தொப்பென்று கீழே விழுந்தது. இவன் அருகில் இருப்பதாக அவள் பொருட்படுத்தவே இல்லை. அது நடந்த முடிந்த பிறகு, அவனுக்கு உள்ளே வெடி முழக்கங்கள் கேட்டன. அது கல்யாண சம்பிரதாயம்தான். என்றாலும் அது உள்ளே கேட்டு அதிர்ந்தவாறு இருந்தான். படை அழகிகள் யாவரும் முகத்தில் பொந்துகள் கொண்டவர்களாகத் தென்பட்டார்கள்.

அக்கா அவனிடம் கொடுத்த அரிசி பூக்களை மணமக்கள் மீது விசிய பிறகு, அவனுடைய மனம் நீலிமாவை தேடியது.

எங்குமே காணோம்.

கல்யாண மக்கள் நிழலுக்காகக் குழுமியிருந்த திட்டுக்களில் லாவகமாக ஊடுருவி, மொகமது மாமா வீட்டுக்குள் புகுந்து, தண்ணீர் குடித்துவிட்டு அவளைத் தேடியவாறு வரும்போது, பாத்திமா சேச்சியின் தையல் அறையில் உள்ள பெஞ்சின் மீது படுத்திருக்கிறாள். இவன் அக்கம்பக்கம் மக்களை உறுதி செய்துகொண்டு அவளை நெருங்கினான். மல்லாந்திருந்தாள். கண்களின் மீது கரத்தைக் குறுக்காகப் போட்டுக்கொண்டு படுத்திருப்பது மேலே விழுகிற ஒளியைத் தடுக்கத்தான். அல்லது அது சோகத்தின் அறிகுறி? அவளைப் பார்த்துக்கொண்டு நின்றான். முதலில் கண்களை உறுத்தின முலைகளில் இருந்து விலகி, அவளது கரங்களைத் தொட்டான்.

அவள் அசையவே இல்லை. “ நீ என்னே தொடரது!” என்றாள்.

கொஞ்சம் நேரம் இருவருக்கும் அசைவில்லை.

இவன் மெதுவாக பென்ச்சுக்குப் பக்கத்தில் தரையில் படுத்துக்கொண்டான்.

“சாரி, இனிமே நான் உன்ன தொட மாட்டேன்!”

“நீ துஷ்டனா !”

“ ஆமா. அதுக்கும் சாரி.”

“எனிக்கு நின்னே இஷ்டமில்லா!”

“ஏய், ங்கோத்தா. அத மட்டும் சொல்லாத.”

“ங்கோத்தா ன்னு பறஞ்சா எந்தா?”

“அதுவா இப்ப முக்கியம்? ஐ லவ் ய!”

“அய்யே!”

“ஐ லவ் யு. ஐ லவ் யு. ஐ லவ் யு!”

“அய்யே! அய்யே! அய்யே!”

அதற்கு அப்புறம் அந்தப் பெண் படை உறுப்பினர்கள் பற்றியெல்லாம் ஒவ்வொன்றாகக் கேட்டாள். அவன் சங்கோஜமேயில்லாமல் ஒவ்வொருத்தியும் எந்த விதத்தில் வேஸ்ட் என்று விவரித்து சொன்னான். அவள் அத்தனையையும் ஏற்றுக்கொண்டு வருவது போலிருக்கவே, இவன் உற்சாகம் பெற்று, பல பொய்களை அடுக்கிக்கொண்டு வந்தான். முடிவு வேறாக இருந்தது. நீ சொல்லுவது அத்தனையும் பொய்யென்று கூறிவிட்டு, முன்புபோலவே படுத்துக் கொண்டுவிட்டாள். திரை மூடிக்கொண்டுவிட்டது.
மீண்டும் அதே அமைதி.

இவன் எழுந்து உட்கார்ந்தான்.

அவளைப் பார்த்தான். கரத்தின் மீது முத்தமிட்டான். வலுக்கட்டாயமாக கரத்தை இழுத்து, அவளது முகத்தில் பார்த்து ப்ளீஸ் என்று கெஞ்சினான். அவள் கண்களைத் திறக்கவே இல்லை. அதையே சொல்லிக் கொண்டிருந்தான். அவளது முகம் இப்போது எதற்கோ முக்குவது போலிருந்தது. அவ்வளவு முறுக்கிப் பிடித்திருந்தாள் தன்னை.

“ஏய் பொறுக்கி முண்ட. கொஞ்ச நாள் போனதும் ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்டி!”

“டேய்!”

சொன்னது அவள் அல்ல. சன்னலில் பார்த்துக் கொண்டிருந்த அக்கா. நீலிமா எழுந்து ஓடிவிட்டாள். வெளியே வா என்று மிகவும் உறுதியாக சைகைக் காட்டவே, இவன் அவமானத்துடன் வெளியேறி வந்தான். அக்கா அவனது கன்னத்தில் கிள்ளினாள். தோலின் மீது அடித்தாள். “சிறிய பெண் ! அவளிடம் இப்படியெல்லாம் பேசலாமா?” இப்படி கொஞ்சம் கேட்டாள். பிறகு, அவள் தனது வேலைகளுக்கு ஓடியபோது இவன் ஒரு ஒதுக்குப்புறத்தில் சோர்வுடன் உட்கார்ந்திருந்தான். அக்காவிடம் பிடிபட்ட வெட்கம், அது வேறு தனியாக! ஒரு பெரிய கிளாசில் பிரதமனைக் கொண்டுவந்து தந்த அக்கா, குடித்துப் பார்க்கச் சொன்னாள். குடித்துப் பார்த்து நன்றாக இருக்கிறது என்ற பின்னர், “கல்யாணம் பண்ணுகிற அளவுக்கு உனக்கு முட்டை விரிந்துவிட்டதா?” என்று கேட்டுவிட்டு சென்றாள். பெண் வீட்டார் வந்து மாப்பிள்ளையை அழைத்துசென்ற பிறகு, ஒவ்வொரு கும்பலாகப் புறப்பட்டு கூட்டம் குறையத் துவங்கியது. இவனும் அப்படி ஒரு தருணத்தில் கிளம்பியபோது, உள்ளே ஆங்கே ஒரு சன்னலில் தட்டுப்பட்ட நீலிமாவின் கண்களில் ஈரம் ஒளிர்ந்ததைக் கண்டிப்பாகப் பார்த்தான். துயருடன் திரும்பினாலும் சென்னை அவனை ஆற்றியது. இரண்டொரு நாட்களில் பால்ய சகி திருட்டுப் பார்வையுடன் வீட்டுக்கு வந்துபோகவே கவனம் அதில் குதித்தது. மறந்தேபோனான். பின்னே வந்த வருடங்களில் நீலிமா என்று உதிக்கிற ஒரு பெயரும் முகமும் ஒரு கணமேனும் மூச்சை நிறுத்தும் அவ்வளவுதான்.

தாசன் வாழ்வின் போக்கில் எந்தவொன்றும் நேர்வாக்கில் இல்லாதபோது, அதையெல்லாம் சொல்ல முயல்வது குழப்பத்தைதான் உண்டுபண்ணும். பால்ய சகி எல்லாம்கூடத் தனது புருஷனுடன் இந்த நகரத்தைவிட்டே போயாயிற்று. அதில் ஏதுமில்லை. காதலித்தவளை கல்யாணம் செய்துகொள்கிற மரபை தாசன் விரும்பவில்லை. அது அர்த்தமற்றது என்றான். இயல்பு வாழ்க்கை தனது அலுவலைப் பார்க்க நகர்ந்துவிட்டது. அவன் மறப்பதற்காக படித்துக் கொண்டிருந்தான். கிழித்துப் போடுவதற்கு எழுதிக் கொண்டிருந்தான். கொஞ்ச நாட்கள் நாடகம். எப்போதும் நண்பர்கள், ஊர் சுற்றல். ஒருமுறை ஆன்மீகத்தில் கண் விழுந்துவிட்டது. அதற்கான பல விஷயங்களுக்கு நடுவே சபரிமலை ஏறி இறங்கி, அப்படியே ஒரு மலையாள எழுத்தாளரை பார்க்கப் போனான். அது முடிந்து அவருடைய மகன் இவனைக் காரில் கொண்டுவந்து அக்கா வீட்டில் இறக்கிவிட்டு சென்றான். முன்புபோலவே அங்கேயே தான் தாசன் தனது இரண்டாவது பெண்ணைப் பார்த்தான்.

நாம் பொதுவாக பாவிக்கிற இங்கிதங்கள் அவனிடம் குறைவு. ஜனக் கூட்டத்தை மதிக்கிற அவசியம் இல்லை. மனிதர்களிடம் தனியான உறவு பேணுவதில் அர்த்தமில்லை போன்ற அபிப்ராயங்களினால் ஒருவிதமான துணிவை அவன் அடைந்துவிட்டிருந்தான். எப்படியும் அக்கா கொல்லைப் பக்கம்தான் இருக்க முடியும் என்கிற உறுதியால், அமைதியாக நீண்டு கிடந்த அந்த வீட்டில் தன் பாட்டுக்கு நடந்தான். சேச்சி என்று குரல் கொடுத்து முடிப்பதற்குள், பக்கவாட்டில் இருக்கிற அறையைப் பார்த்துத் திடுக்கிட்டான். கடந்துசென்று பதற்றத்துடன் கொல்லைப்புறத்தில் இருந்து தோட்டத்துக்கு இறங்கி, ஓரிரு முறை அழைத்துப் பார்த்தவிட்டு கொஞ்ச நேரம் வெறுமனே நின்றான். அந்த அறையில் ஒரு பெண் தனது குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். உடலின் மேற்பகுதி சீலைகளை முற்றிலுமாக அவிழ்த்துவிட்டுக்கொண்டு அரைகுறை தூக்கத்தில். அவள் திடுக்கிட்டாள். இவன் சேச்சி என்று சப்தம் செய்ததை நிறுத்தினான். ஒரிருகணம் இருவரும் ஒருவரையொருவர் மலைத்திருந்தார்கள். அவள் வேறு யாராக இருக்க முடியும்?
நீலிமாதான்.

மெதுவாக இவன் மறுபடி உள்ளே வந்தபோது, அவள் அறையிலிருந்து வெளியே வந்தாள். ஜாக்கெட்டைப் போட்டுக்கொண்டு மேலே ஒரு துவர்த்து முண்டைப் போட்டுக் கொண்டிருந்தாள்.

“அறியோ?”

“ம்”

“நீ தெண்டியாயிந்து கேட்டல்லோ?”

அவள், `நீ ஒரு பொறுக்கி ஆகிவிட்டாயாமே’ என்று கேட்கிறாள். மழுப்பி சிரித்துவைத்தான். இலேசாக அடித்த மழையில் அக்கா எங்கிருந்தோ ஆடுகளைப் பிடித்துக்கொண்டு ஓடிவந்தது பரிதாபமாக இருந்தது. இவனைப் பார்த்ததும் அவளுக்குச் சந்தோஷத்தில் மனம் நிற்கவில்லை. கொஞ்சம் நேரம் எதுவுமே பேசாமல் இவனையே பார்த்துக்கொண்டு நின்றது சங்கோஜமாக இருந்தது. அப்புறம் தோளில் ஒரு அடித்து கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். தாசன் உன்னைப் பார்ப்பதற்குதான் வந்தேன் என்கிற பொய்யை நம்புகிற அளவிற்குப் பலவீனமாக, உடலாலும்கூட இளைத்து புன்னகையால் மட்டுமே அக்காவாக மிச்சமிருந்தாள். மகள் பெரிய பெண்ணாகிவிட்டதை சொன்னாள். பள்ளிக்குப் போயிருக்கிறாள். கணவர் ஜங்சனில் பேக்கரி வைத்திருக்கிறார். மூன்று பேரும் உட்கார்ந்து மீன்கறியுடன் சோறு சாப்பிடும்போது தாசன் தனது புகழ்பெற்ற இங்கிதமின்மையால் சாப்பிட்டுக் கொண்டும், சிரித்துக்கொண்டும் நீலிமாவை நோக்கி, “நான் உன்னிடம் திருமணம் செய்துகொள்ளலாம் என்று வற்புறுத்தினேன் நினைவிருக்கிறதா?” என்று கேட்டான். அவனால் அப்படித்தான் கேட்க முடிந்தது. அவள் இல்லை என்பது போல உதட்டைப் பிதுக்கினாள். அக்கா ஒரு புன்னகை செய்துகொண்டதுடன் அதுபற்றி பேசவில்லை. நினைவுகளின் அழுத்தம் பெருகிக் குவிந்ததால், தாசன் அவற்றை பற்றி மேலும் விஸ்தீரணம் செய்து சிரித்துக் கொண்டிருந்தான் என்பது வெளிப்படை. கிளம்புகிற நேரத்தில் ஒரு தனிமை கிடைத்தபோது நீலிமா அவனிடம் புன்னகை செய்தாள்.

உடல் ஒரு கணம் அதிர்ந்தது.

அந்தக் கணத்தில் அவள் அநக்ச் சிறுமியாக இருந்தாள்.

இவனுக்குப் புன்னகை செய்யமுடியவில்லை.

“ஏய், ங்கோத்தா!” என்றாள்.

இப்போது சிரிக்கப் பார்த்தான். நடக்கவில்லை.

“ஏய் பொறுக்கி முண்ட. கொஞ்ச நாள் போனதும் ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்டி!”

அவனது அக்காலத்து உச்சரிப்பில் அதைச் சொல்லிக் காட்டுகிறாள்.

இந்தமுறை சென்னை வந்போது அதே சென்னை அவனை அவ்வளவு சீக்கிரம் ஆற்றவில்லை. சுமந்துகொண்டு அலைந்தான். இதற்கெல்லாம் ஒன்றுமே செய்திருக்க முடியாது என்கிற புதிரை அவன் நம்பமுடியாமல் திகைத்துக் கொண்டிருந்தான். நீலிமாவையோ, பால்ய சகியையோ திருமணம் செய்வதுகொள்வதுதான் வாழ்க்கையா? அதுதான் திருப்தியா, அதுதான் வெற்றியா? நம்மை நம்பி நம்மில் நுழைந்து கொள்ளுகிறவர்களை கதவடைத்துப் பூட்டு போட்டுவிட வேண்டுமா?

அவன் தனது வாழ்வையே சரியானது என்று தீர்க்கமாக நம்பிக்கொள்ளும்போது, ஒருமுறை அக்கா ஏதோ வேலையாகக் கணவருடனும் மகளுடனும் சென்னைக்கு வந்திருந்தாள். அவள் நினைப்பேகூட அவனுக்கு இல்லாமல் இருந்திருந்தது. “சிவதாசா, உன்னைப் பார்க்க முடியுமா?” என்று செல்லில் கேட்டாள். தாசன் இருந்தது ஒரு முக்கியமான திரைக்கதை விவாதத்தில்தான். நகர்வதற்கு வாய்ப்பில்லை என்றுமே இருந்தது. ஆனால், மிகுந்த உள்ளில் கிளர்ந்துவிட்ட ஆசையுடன் அவளைப் பார்க்கப் போனான். அவளுமே அவனை அப்படிக் கண்களால் அள்ளிக்கொண்டாள். “நல்லா ஒருதடவை உன்னைப் பார்த்துககொண்டேன். திருப்தியாக இருக்கிறது” என்று சொல்லி டிரெயினில் ஏறினவளை மட்டுமல்ல, உலகின் ஒட்டுமொத்த பெண்களையுமே அக்காலமெல்லாம் உருகிக் கொண்டிருந்தான். ஒருநாள் அவள் இறந்துவிட்டதாக போன் வரவே செய்தது.

சாவு வீட்டில் மூன்றாமவள் இருந்தாள்.

அக்காவின் தலைமாட்டில் அவளது மகளும், மகளுக்கு மகளும் இருந்தார்கள். மூன்று பேருக்கும் இருக்கக்கூடிய சாயலைப் பற்றின, மூன்று பேரும் மூன்று உலகத்தில் இருப்பது பற்றின தத்துவ விசாரம், தாசனின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அக்காவின் பேத்தி மீதிருந்து கண்களை அகற்ற முடியவில்லை. மொபைலை உருட்டிக்கொண்டு, துருதுருவென்று ஒரு மரணத்துக்கு அலட்டிக்கொள்ளாமல் வாழ்வின் முதலாம் படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டு… அவளை தட்டிக் கொடுக்க விரும்பினான். புரியாது. விசித்திரமாகப் பார்த்து ஒதுங்கிக்கொள்வாள்.

நீலிமா வந்து கடும் சாயா கொடுத்துவிட்டுப் போனாள்.

சவ அடக்கம் முடிந்து அக்காள் கணவரும் அவரது இரண்டு நண்பர்களுமாகத் தோட்டத்தில் குடிக்க உட்கார்ந்தார்கள். பல பேச்சுகளும் ஓடிற்று. அக்காவுக்கு வாழ்வில் எந்தக் குறைகளுமே இருந்திருக்கவில்லை. கஷ்டம் என்கிற ஒன்று எட்டிப் பார்த்ததேயில்லை. அவள் விழுந்து விழுந்து நேசித்த கணவன். அவளை கண்ணில் வைத்துப் பார்த்துக்கொண்ட மகள். எல்லாமே சரி, ஒன்றைத் தவிர. அது கேட்டதும் தாசன் திடுக்கிட்டான். இன்னதென்று சொல்லமுடியாத நீலிமாவின் வெறுப்பு. நிரந்தரமான ஒரு பகையை அவள் இடைவிடாமல் வளர்த்ததில், அக்கா எப்போதும் தளர்ந்தவாறு இருந்திருக்கிறாள். அக்காவின் நம்பிக்கை தூண்களை எல்லாம் நீலிமா இடித்துத் தள்ளியவாறு இருந்தாள் என்றார் மாமா. வீட்டில் வந்து தங்கும்போது, அவளுடைய வீட்டில் இருந்தவாறு அவள் கக்கிய விஷத்தினால், நானே அவளை அடித்துத் துவைக்கவேண்டி வந்திருக்கிறது என்றார். அவளுடைய புருஷன்கூட அவளை அதனால் வெறுத்தார் என்பதையெல்லாம் கேட்க கேட்க தாசன் அலை பாய்ந்தான். இறுதியாக, உன் அக்காவைக் கொன்ற பிசாசு அந்த நீலிமாதான் என்றதும், அத்தனை பேரும் ஆமோதித்தார்கள்.

இரவு தூக்கம் பிடிக்கவில்லை.

யாரோ வருவது போல.

தாசன் எழுந்து லைட்டைப் போட்டான்.

நீலிமா அவனது மார்பில் சாய்ந்து தேம்பி, அப்புறம் வாய்விட்டு கதறி அழுவதும் துவங்கியது. அண்ணி அண்ணி என்பதுவாகதான் சொல்லிக் கொண்டிருந்தாள். தாசனால் அவளைக் கட்டுபடுத்த முடியவில்லை. கட்டுப்படுத்த நினைக்கவுமில்லை. இதற்கெல்லாம் ஒருவேளை நான்தான் காரணமா என்கிற நினைப்பைத் தவிர அவனுக்குள் வேறு ஒன்றுமேயில்லை. மனதில் ஒரு கடல் புரள, அவளது தலையை வருடினான்.
அவள் மேலும் சப்தமாக அழுதாள்.

எல்லா அறைகளிலும் விளக்கு எரிவது தெரிந்தது.

***

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button