இணைய இதழ் 117கட்டுரைகள்

‘ஒரு திர்ஹமும் உள்ளூர் காசும்’ குறுநாவல் வாசிப்பனுபவம் – பாகை இறையடியான்

கட்டுரை | வாசகசாலை

வளைகுடாவில் பொருளாதார நிமித்தம் பணிபுரிகின்ற பல பேருடைய நினைவுகளில் இந்த நாவலுடைய தலைப்பு ஒரு இதய ஓசையாய் ஒழித்துக் கொண்டே இருக்கும்.
ஆம்! ஆசைப்பட்டு அருந்தும் தேநீரைக் கூட ஒரு திர்ஹத்தின் உள்ளூர் நாணய மதிப்பை கணக்கில் கொண்டு ஒரு குவளை வெந்நீர் அருந்தித் தீர்த்துக் கொண்டு அந்த ஒற்றை திர்ஹத்தை சேமித்து வைப்போருமுண்டு.
தமது குடும்ப பொருளாதார நிலைமையை சீர்தூக்கி தம்மை செப்பனிட்டுக் கொள்ள வளைகுடா பயணிக்கும் ஒரு வாலிபனின் வாழ்வில் நிகழும் சம்பவங்களே கதையின் கரு.

பலவித எதிர்பார்ப்புகளோடும், வண்ணக் கனவுகளோடும் வானில் பறக்கும் உலோகப் பறவையின் வயிறேறும் வாலிபன் செய்யதுவின் வான் பயணத்தினூடே தொடங்கி துபாய் மண்ணில் அவன் தமது பொதியுடன் வந்திறங்கியபடியே கிளம்புகிறது கதை, வளைகுடா வந்திறங்கியபின் விசா எடுத்தவனின் சுயநல சமிக்ஞையால் தம் பொதியில் அவனது பெரும் பகுதியை செய்யது சுமந்த சிரமத்தை போகிற போக்கில் நையாண்டி நடனமாட நளினமுடன் காட்சிப்படுத்துகிறார்.
அவ்வப்போது கதைக்குள் சமூக உள்முரண்களை கூறுபோட்டு குத்திச் செல்வதில் இத்ரீஸின் சமூக அவதானிப்புகள் சிலவிடங்களில் மெச்சிடச் செய்கிறது அதற்கு ஒரு பருக்காக “கடைநிலை ஊழியனாக வாழ்வு மொத்தம் வெளிநாட்டில் தொலைத்திட்ட வாப்பாக்களின் கனவையும், ஆசையையும் எத்தனை பிள்ளைகள் நிறைவேற்றி வைத்திருக்கின்றனர் “என்பதும் “மகன் என்றால் தொழில்; மகள் என்றால் கல்யாணம் என்ற நிலையிலிருந்து மகன் என்றால் படிப்பு; மகள் என்றால் அடுப்பு என்று சமூகம் அடுத்த நிலையை அடைந்திருந்தது” என்ற வாக்கியங்களில் நிலவிடும் சமூக எள்ளல் சமூகத்தில் நிலவும் பால்பேத உள்முரனை எள்ளி எகத்தாளமிட்டுச் செல்கிறது.

தற்போதும் வெளிநாடுகளில் தங்குகின்ற இடத்தில் உள்ளத்தில் நின்றுவிட்ட நண்பனை தங்கையின் கணவனாகவும் அல்லது நண்பனின் மகனை தம் மகளுக்கு வரனாகவும் பார்த்து அவர்களுக்குள் நின்றிடும் உறவுப் பாலத்தை உறுதியாக்கிக் கொள்வோருமுண்டு அப்படியாக நாயகன் செய்யதின் வாப்பா தமது அறை நண்பரான அமீரோடு தமது உறவுப்பாலத்தை பலப்படுத்திக் கொள்ள மேற்கொள்ளும் முயற்சியில் கக்கிலி (கைக்கூலி)யில் ஊறிக் கொழுத்த சம்பந்தி வீட்டாராக வந்தமர்ந்து கொள்ளும் அமீரின் குடும்பத்தையும், தம் கக்கிலி மருமகனையும் கண்டு உள்ளம் வெதும்பிப் போன தந்தையின் இழந்திட்ட சொத்துகளை மீட்டுருவாக்கம் செய்ய வளைகுடா பயணிக்கும் செய்யதுவுக்கு, அவனுக்கு வழிதந்த நன்றிக் கடனுக்காக தமது தமக்கை வயதொத்த பெண்ணிற்கு வரனாக பேசப்படுவதை எண்ணி புழுங்குவதிலும் அதே முதிர்கன்னியாய் வாழ்வைத் தொலைக்கும் அப்பெண்ணிற்காக பச்சாதாபப் படுவதிலும் அவனது நாயகத்தன்மையை நயப்படுத்துகிறார் ஆசிரியர்.

இந்தக் கதைக்குள் செய்யதுவுக்கு நடக்கும் பல சம்பவங்கள் வளைகுடா வாலிபர்கள் பலரின் வாழ்வோடு நிச்சயம் பொருந்திப் போகும். அந்தளவு நுணுகி பல்வேறு சம்பவங்களை காட்சிப் படுத்துகிறார், புதிதாக வளைகுடா மண்ணை மிதித்ததும் வியக்கும் அதன் புற அழகை, எதிர்கொள்ளும் ஏகபோகங்கள், தங்கும் அறையில் நிலவும் வினோதங்கள் வினோத மனிதர்கள் அவர்தம் ஏகடியங்கள், பகடிகள், பச்சாதாபங்கள், சுகங்கள், சோகங்கள் என இப்படி ஒட்டுமொத்த கலவையையும் வளைகுடா வாழ்வின் மிச்ச சொச்சங்களாக கண்முன் நிழலாட விட்டு நம்மை கதைக்குள் ஐக்கியப் படுத்துகிறார்.

அதிலும் நுட்பமாக தமது பள்ளி காலத்திற்குப் பின் காணும் பால்ய சிநேகிதி தங்கப்பொண்ணு வாய்வார்த்தை ஏதுமின்றி ஒரு பார்வையில் அலட்சியப்பாட்டோடு கடந்துவிடுவதை எண்ணிப் புழுங்குவதும் பின்னர் கணவனின் உறவு வட்டத்துக்குள் அவன் வலைவிரிக்கப்பட அதற்குப் பாலமாய் அவ்வேளையில் சிநேகம் பேணுவதும் என்னதான் பால்ய வயது தோழன் என்றாலும் அவனை அந்நியப்படுத்துவதை கணவனின் அசூயை பார்வையிலிருந்து பெண்சமூகம் தன்னை தற்காத்துக் கொள்ளும் கலையாகவே பயன்படுத்தி வருவதாக கூறும் நுணுக்கமும் விழிகளை விரிக்கிறது.
தங்குகின்ற அறைகளுக்குள் நிலவிடும் கேளிக்கைகள் அசலாக அப்படியே மனக்கண்களில் நிழலாடுகிறது, ஏற்கனவே பலமுறை கேட்டதாகினும் அந்த தமிழ் தொழுகை மற்றொருமுறையும் இதழ் பூக்கச் செய்தது, குத்தூஸ், சுலைமான், முஸ்தபா போன்ற நகையாடல்கள் கதாசிரியருக்குள் இருக்கும் நகைச்சுவைத் தனத்தை மேலும் நயப்படுத்துகிறது.

இத்ரீஸின் பல கதைகளை வாசிக்கையில் அதில் ஒழுகி வழியும் வார்த்தையாடல்களை நான் மிகவும் நேசிப்பதுண்டு, ஒரு சம்பவத்தை அணுகுவதிலும் அதனை நுணுகுவதிலும் தேர்ந்த எழுத்துகளை உடையவர் இத்ரீஸ் என்பதில் ஐயமில்லை.
முன்பெல்லாம் சாச்சி என்று மரியாதையொழுக அழைத்த வாய் எப்படித்தான் பணக்காரர்களுடன் கலக்கும்போது பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு சிறுமையாகிப்போனது என கதைக்குள் முஜீபின் அகமுரனை கண்டு நாயகன் செய்யதின் அகக்கொதிப்பை வார்த்தைகளில் வெளிப்படுத்தும் விதம் மெச்சத்தக்கது.
மகளுக்காக தம் உழைப்பு முழுதும் இழந்து இறுதியில் பொருளின்மையால் சிறுமையாகி சீர் இழந்தபின் செய்யதின் தந்தையின் குறுகும் இருப்பை, தமது சகோதரன் சுரண்டப்படுவதைக் கண்டு கொதித்தெழுந்து கணவனிடம் கண்களில் கனல் கொப்பளிக்க வெதும்பும் சபீனாவின் இயலாமையை, அண்ணன் மகளை மகனுக்கு முடிக்க அகம் முழுக்க அன்பொழுக அண்ணனையும் அண்ணனின் மகனையும் மனதுக்குள் ஏந்தி பொழியும் முத்து நாச்சியாவின் பாசத்தை, மாமன் மகளை மணமுடிக்காமல் போன ஏமாற்றத்தை இதயத்திலிருந்து இறக்கிவிட்டு அவளின் மணநாளில் இயல்பாக உதவும் அல்லாஹ் பிச்சையின் அக கனத்தை, அதுபோல் அயலக மண்ணில் அகமினிக்க செய்யதிடம் நட்பொழுகும் ஆறுமுகம் அண்ணன் மற்றும் காதர் பாயின் நேசத்தை இப்படி கதை முழுதும் சதை போர்த்திய மாந்தர்களாக நம் மனக்கண்ணில் நின்றாடுகிறார்கள்.
செய்யதின் ஒவ்வொரு பிரச்சினைகளையும் அதனை அவன் எதிர்கொள்ளும் முதிர்வையும், ஒவ்வொரு திருப்பமாக வாசிக்கத் தூண்டி இறுதியில் அவன் அப்பிரச்சினைகளிலிருந்து மீண்டானா? என்பதை விரல்கள் முழுக்க வித்தைகள் நிறைத்து அதற்கு வார்த்தைகள் போர்த்தி நம் மனதை வசீகரப்படுத்தி ஒரு முழுநீள சினிமா பார்த்த உணர்வலைகளை உள்ளத்துள் விதைக்கிறார் எழுத்து வித்தகர் இத்ரீஸ்.

மொத்தத்தில் இந்த ஒரு திர்ஹமும் உள்ளூர் காசும் நாவலின் வாசிப்பனுபவங்கள் பல திர்ஹ பல்பொருள் அங்காடிக்குள் பிரவேசித்து உள்ளங்கவர் பல்பொருட்களை வாங்கிய அனுபவத்தை வாசிப்பின் சுகங்களாக உள்ளத்தில் விரித்து நம்மை வசீகரிக்கும் என்பது நிதர்சனம்.
நவீனகால எழுத்துலகில் தமது படைப்புத் திறனால் ஒரு நாவல், இரு சிறுகதை தொகுப்பென கோலோச்சிக் கொண்டிருக்கும் அன்பர் இத்ரீஸ் யாக்கூபின் எழுத்துலகப் பயணம் மண்வெளிப் பயணத்தினூடே மந்தைவெளி மானுட சமூகத்தின் சிந்தை நிறைத்து சிறப்படைய வாழ்த்தி வரவேற்போம்.

iraiyadiyanpkr@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button