இணைய இதழ்இணைய இதழ் 100சிறுகதைகள்

ரூட்டு தல – பிரவின் குமார்

சிறுகதை | வாசகசாலை

நீதிமன்றத்திற்குச் செல்லும் ஒவ்வொரு முறையும் மனம் வழக்கின் இறுதி நாளை எண்ணிதான் ஏங்குகிறது. காலத்தை பின்னோக்கி சுழலவிட்டால் இன்று அலைக்கழித்துக் கொண்டிருப்பதற்கான தேவையை நிச்சயம் தடுத்திருப்பேன். அதுபோன்ற சந்தர்பம் இனி எப்போதும் வாய்க்கப்போவதில்லை. எல்லாம் உணரும் போதுதான் வாழ்வின் அர்த்தம் புரிகிறது. கண்ணாடி முன் நின்று சட்டை பொத்தான்களை அணிந்துக்கொண்டிருக்கும் போது மாமா என் எண்ணிற்கு அழைத்திருந்தார்.

“கோர்ட்டு முடிச்சுட்டு என்ன ஆச்சுனு கால் பண்ணு, வக்கீல் வேற ஹியரிங் பீஸ் கேட்டுட்டே இருக்கான்”

ம்ம்… என்ற சொல்லை உச்சரிப்பதற்கு கூட திடமற்றவனாக இருந்தேன். அந்நாளிற்கான தொடக்கத்தை முழுவதும் வெறுத்தேன்.

“மாமா… இன்னைக்கு அவசியம் கோர்ட்டுக்கு போய்தான் ஆகணுமா… வக்கீல் கிட்ட சொல்லி இன்னைக்கும் 317 பெட்டிஷன் போட முடியுமான்னு பாரேன்”

“என்னடா வெளாடுற… இப்படியே 317 பெட்டிஷன் போட்டுட்டு இருந்தா எப்போ கேஸ் நடத்தி முடிக்குறது…? சீக்கிரம் ட்ரையல் முடிஞ்சாதான் ஐகோர்ட்ல அப்பீல் எதனா போட முடியும். ஏற்கனவே ஐகோர்ட்ல போட்ட Quash பெட்டிஷன் டிஸ்மிஸ் ஆய்டுச்சி. நான் மறுபடியும் Quash பெட்டிஷன் போட முடியுமானு வக்கீல்கிட்ட கேட்டு சொல்லுறேன்”

“சீக்கிரம் எதனா பண்ணு மாமா. முன்ன மாதிரி ஆபிஸ்ல பர்மிஷனோ லீவோ போட முடியல. மேனேஜர் திட்டிட்டே இருக்கான். இப்படியே வாய்தா மேல வாய்தா வாங்கிட்டு எத்தன நாளிக்கு அலைஞ்சினு இருக்க சொல்ற”

“இத எல்லாம் ரூட்டு தலனு சொல்லிட்டு காலர தூக்கினு தவ்லத்தா சுத்திட்டு இருந்த பார்த்தியா… அப்போ யோசிச்சு இருக்கணும். வை போன”

அம்மா அலுவலகம் செல்வதற்கு மதிய உணவை தயார் செய்யும் வேலையில் மும்முரமாக இயங்கிக்கொண்டிருந்தாள். அதற்காகவெல்லாம் காத்திருக்கும் நேரம் என்னிடமில்லை. சட்டென்று பைக் சாவியை எடுத்துக்கொண்டு கோர்ட்டுக்கு விரைந்தேன்.

கடந்து செல்லும் பேருந்து ஒவ்வொன்றிலும் சீருடை அணிந்த மாணவர்கள் பேருந்தை துரத்திக்கொண்டும், படியில் தொங்கிக்கொண்டும் வித்தைகள் பல காட்டிக்கொண்டிருந்தார்கள். சுற்றியுள்ளவர்களின் கவனம் தங்கள் வசம் திரும்ப வேண்டும் என்பதற்காகவே உயிரை பணயம் வைத்து பல சாகசங்களை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். இளம் ரத்தம் ஆபத்துக்களை உணர்வதில்லை; அதைப்பற்றி கவலைப்படுவதுமில்லை. கொஞ்ச வருடங்களுக்கு முன் நான் செய்ததைத்தான் இவர்களும் செய்கிறார்கள்.

அவ்வப்போது அலைக்கழிக்கப்படும் வழக்கிலிருந்து முழுவதும் வெளியேறுவதற்கான நாளை எதிர்ப்பார்த்துதான் ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்திற்கு செல்கிறேன். செய்த வினைகள் கால்பந்தைப் போல் என்னை அங்குமிங்குமாக விரட்டிக் கொண்டிருக்கிறது. இரண்டு வருடத்திற்கு முன் நிகழ்ந்த அந்த சம்பவம் நிகழாமல் இருந்திருந்தால் கடந்த காலத்தை எண்ணிக்கொண்டு நாட்களை நகர்த்திக்கொண்டிருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது.

**********

“தல, நம்ம ரூட்டு பையன் வின்சன்ட்ட கலாய்ச்சானுங்கள அதுல ஒரு பையன் தொக்கா மாட்டிகிட்டான். நம்ம கிரவுண்ட்ல வெச்சுதான் ட்ரீட்மெண்ட் குடுத்துனு இருக்கோம் சீக்கிரம் வா”

ஏரியா நண்பர்களோடு கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்த சமயத்தில் தான் மதி என் எண்ணிற்கு அழைத்து விசயத்தைச் சொன்னான். அப்போதே அவனை விட்டுவிடும்படி நான் சொல்லி இருந்தால் நிச்சயம் என் ரூட்டு நண்பர்கள் அவனை விடுவித்திருப்பார்கள். ஏனோ அப்போது அந்த வார்த்தை சொல்ல எனக்கு மனம் வரவில்லை. “அவன அப்பிடியே வுக்கார வை கொஞ்ச நேரத்துல வந்துர்றேன்” அழைப்பை துண்டித்துவிட்டு ஆட்டத்தில் கவனம் செலுத்தினேன். என்னுடைய தாமதத்தினால்தான் அவன் பல கொடுமைகளை அப்போது அனுபவிக்க நேர்ந்தது.

ஸ்டீபன் வீட்டின் அருகில் பாதி இடிந்த நிலையில் இருக்கும் பாழடைந்துபோன இடத்தில்தான் எனது ரூட்டு நண்பர்கள் அவனை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருந்தார்கள். நான் செல்லும் போது கண்கள் கலங்கிய நிலையில் பாவப்பட்டவனாய் சுவற்றின் ஓரமாக அமர்த்தி வைக்கப்பட்டிருந்தான். என் நண்பர்களைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். எந்தெந்த வகையில் எல்லாம் அவனை அடித்து புண்படுத்தியிருப்பார்கள் என்று எவரும் விளக்க வேண்டிய அவசியமில்லை. அவன் நிலையை பார்த்தே என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்துக்கொண்டேன்.

“ஹே… போதும் அவன விட்ருங்கடா”

“இன்னா தல வுட்ற சொல்ற. நம்ம காலேஜ் பையனோட செல்போன புடிங்கி என்னென்ன வேல எல்லாம் காட்டுனானுங்கோ. பதிலுக்கு நாம சிறப்பா எதனா செய்ய வேணா. இரு.. அவங்க காலேஜ் பையனுக்கு வாய்ஸ் நோட் அனுப்பி இருக்கேன். எவன் வந்து இவன கூட்டிட்டு போறானுங்கனு பாப்போம்”

மதி தலையை ஆட்டிக்கொண்டே என் முடிவிற்கு உடன்படாதவனாய் அவன் தரப்பு நியாயங்களை சொல்லிக்கொண்டிருந்தான். ஆனாலும் நீண்ட நேரத்திற்கு அவனை வைத்திருப்பது சரியில்லை என்று தோன்றியது. அவனை விடுவிப்பதை தவிர வேறு வழி இருப்பதாகவும் எனக்குத் தெரியவில்லை. சந்தர்பம் கிடைக்கும் போது வேறொரு நாளில் பழி தீர்த்துக் கொள்ளலாம் என்று எடுத்துச் சொன்னேன். நண்பர்கள் என் முடிவிற்கு செவி சாய்த்தார்கள்.  

நானாகத்தான் அவனை என் பைக்கில் அழைத்துச் சென்று பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டேன். அவனது கண்கள் கலங்கியிருந்த போதிலும் அவன் மேல் துளியும் அனுதாபம் ஏற்படவில்லை. “இனிமே இந்த பக்கம் தல காட்டுன சாவட்ச்சுறுவேன்” அவனிடம் நான் விடுத்த கடைசி எச்சரிக்கை வார்த்தைகள் அவனுள் இப்படி ஓர் முடிவை எடுக்கத் தூண்டும் என்று அப்போது நான் நினைக்கவில்லை. அவன் இறந்துபோன விஷயத்தை அறிந்ததிலிருந்து தசைகள் எங்கும் திராவகத்தால் வெந்துக்கொண்டிருப்பது போல் இருந்தது. குற்றவுணர்ச்சி மேலும் என்னை நெறித்துக்கொண்டிருந்தது. தற்கொலைக்கான காரணம் தேடி போலீசார் என்னை நெருங்குவதற்கு முன் இவ்வுலகில் இருந்து என்னை நான் மறைத்துக்கொள்ள வேண்டும். பதற்றமும் பயமும் முன்னெச்சரிக்கைக்கான தடயங்களை என்னுள் தேடிக்கொண்டிருந்தன.

namma bus stop pinnadi iruka grounduku yellarum vanthudunga”

எங்களது TPC Route Rowdies வாட்ஸ்சப் குரூப்பில் மெசேஜ் தட்டியதும் பைக்கை எடுத்துக்கொண்டு எப்போதும் சந்திக்கும் கிரவுண்டிற்கு விரைந்து கொண்டிருந்தேன். எங்களது திட்டங்களை பெரிதும் கலந்தாலோசிப்பது அந்த கிரவுண்டில்தான். செய்யும் தவறுகளை திருத்திக்கொள்வதை விட அதிலிருந்து தப்பிப்பதற்கான விழியைத்தான் அதிகம் எங்களுக்குள் கலந்தாலோசிப்போம். அன்றும் அப்பிடித்தான் நிகழ்ந்தது.

130 சொச்சம் நபர்கள் கொண்ட எங்கள் Route Rowdies குரூப்பில் உள்ள அனைவரும் செல்போனே கண்களாக இந்நேரம் விழித்துக்கொண்டிருப்பார்கள். நிமிடத்திற்கு நிமிடம் கல்லூரி நண்பர்களிடமிருந்தும், ஏரியா நண்பர்களிடமிருந்தும், மற்ற கல்லூரி மாணவர்களிடமிருந்தும் அழைப்புகள் வந்துக்கொண்டே இருந்தன. எடுத்துபேசும் துணிவு என்னிடமிருந்தாலும் சாட்சியங்களை உருவாக்க நான் விரும்பவில்லை. அடுத்து என்ன செய்யவேண்டுமென்பதை யோசித்தபடி தட்டச்சு இயந்திரமாக மனது இயங்கிக் கொண்டிருந்தது. நான் கிரவுண்டை தஞ்சம் அடைவதற்கு முன்பே மதியும் நித்யாவும் அங்கு நின்றிருந்தனர். என்னைக் கண்டதும் மதி பதற்றத்துடன்

“இன்னா தல இப்படி சொதப்பிடுச்சி…!”

“ஓத்தா உங்க இஷ்டத்துக்கு பண்ணீங்கனா இப்படிதான் ஆவும்.. எதடா என்ன கேட்டு பண்ணியிருக்கீங்கோ”

நான் மதியிடம் கத்திக்கொண்டிருந்த நேரத்தில் ஸ்டீபன், ஹரி, பார்த்தி மூவரும் ஒன்றாக பைக்கில் வந்திறங்கினார்கள். பொழுது சாய்ந்து இருள் எங்களை மெல்ல சூழ்ந்துக்கொண்டிருந்தது. உண்மையில் வாழ்வின் இருளுக்குள் முதல்முறை நாங்கள் அடைக்கப்பட்டுக் கொண்டிருப்பதை அப்போது உணர்ந்தோம்.

“தல… உனக்கு போட்டோஸ் வந்துச்சா…! இங்க பாரு பையன் ரணக்கொடூரமா செத்துருக்கான்”

ஸ்டீபன் தன் செல்போனிலிருந்து வேற ஒருவன் அனுப்பிய புகைப்படங்களை காட்டிக்கொண்டிருந்தான். புகைப்படங்களை பார்க்கும் போது நான் பஸ் ஸ்டாப்பில் இறக்கி விட்டவன் இவன்தானா என்று சந்தேகிக்கும்படி இருந்தது. கழுத்துப் பகுதி நசுங்கி கண்கள் இரண்டும் வெளியே பிதுங்கியிருந்தது. உடலில் உள்ள ரத்தம் முழுவதும் அவன் உடலை சுற்றி சிவப்பு கம்பளம் விரித்தது போல் காட்சியளித்தது. இடது பக்கமாக ஒவ்வொரு புகைப்படங்களையும் தள்ளிக்கொண்டிருக்கும் போதே அருவருப்பின் ரேகைகள் என் முகத்தில் தோன்றிக் கொண்டிருந்தன. அதற்கு மேல் பார்க்க விருப்பமில்லாமல் செல்போனை ஸ்டீபனிடமே திருப்பிக் கொடுத்தேன்.

“ச்சை… இன்னடா இது.. ஆள் அடையாளமே தெரியாம செத்துருக்கான்”

“தல அத வுடு… இன்னைக்கு நைட்குள்ள கன்பார்மா நம்மள புடுச்சுடுவாங்கோ… அதுக்குள்ள நாமளே போய் ஆஜராய்ட்லாமா”

ஸ்டீபன் முன்னமே முடிவெடுத்தவனாக யோசனை கேட்கும் தோரணையில் அவன் முடிவைச் சொன்னான். ஸ்டீபன் அப்படிச் சொன்னதும் மதி சட்டென்று நாக்கை கடித்துக்கொண்டு அவனை நெருங்கினான்.

“சூத்த மூடு… நீ ஆஜராவுறதாருந்தா ஆவு… எங்களால எல்லாம் முடியாது. அவனா செத்ததுக்கு நாம இன்னா பண்ண முடியும். ஓத்தா நாமளா சாவ சொன்னோம். போடா…”

“நாம ஒன்னும் அவன சாவ சொல்லல… ஆனா அவன் செத்ததுக்கு நாமதான் காரணம்ங்குற மாதிரி எவிடென்ஸ் கிரியேட் பண்ணி செத்துருக்கான். அவன் காலேஜ் குரூப்ல வாய்ஸ் நோட் போட்டுதான் செத்துருக்கான். இங்க பாரு பர்ஸ்டு. டேய் பார்த்தி அத காட்றா”

பார்த்தி தயார் நிலையில் அந்த வாய்ஸ் நோட் மெசேஜை ப்ளே செய்தான். ஆறு பேரும் சுற்றி நின்றுக்கொண்டு அதை தெளிவாகக் கேட்டோம்.

“மச்சான் என்ன மன்னிச்சுர்றா…! TPC காலேஜ் பசங்க போட்ட உயிர் பிச்சைல நான் வாழ விரும்பலடா… நான் சாவுறேன் மச்சான்”

மரணத்தின் கடைசி குரலை அவன் இறப்பிற்கு காரணமாக இருந்த நாங்கள் ஆறு பேரும் கேட்டுக்கொண்டிருந்தோம். நெருங்கிய நண்பன் ஒருவனுக்கு அந்த வாய்ஸ் நோட் மெசேஜை அவன் அனுப்பி இருந்தான். அவன் இவ்வுலகிற்கு சொல்ல விரும்பியது ஒன்றுதான். தன்மானம் அவன் உயிரோடு கலந்தது; உயிரை கொடுத்தேனும் அதை தன் எதிரிகளுக்கு நிரூபணம் செய்யவேண்டுமென்பதே. அவனுக்கான ஒரு சொட்டு கண்ணீர்த்துளி எனக்குள்ளும் ஒளிந்திருப்பதை அதுநாள் வரை நான் அறிந்திருக்கவில்லை. வன்மங்களுக்கு இடையேதான் அனுதாபங்கள் சொரூபம் எடுக்கின்றன. விழியோரம் நின்றிருந்த கண்ணீர் துளியை துடைத்துக்கொண்டே பைக்கில் சாய்ந்த வாக்கில் கொஞ்ச நேரத்திற்கு அமைதியாக நின்று கொண்டிருந்தேன்.

“உன்ன யார்டா அவங்க காலேஜ் பசங்களுக்கு வாய்ஸ் நோட் அனுப்ப சொன்னது… தனியா மாட்னா அவன கலாய்ச்சி வார்ன் பண்ணி அனுப்பனுமானு இருக்கணும். அத வுட்டு உங்க காலேஜ் பையன் ஒருத்தன் எங்ககிட்ட சிக்கிட்டான் அவன காப்பாத்த மாட்டீங்களா… நீங்க என்ன சொம்பைங்களானு அவங்க காலேஜ் பசங்களுக்கே பெரிய மயிறு மாதிரி வாய்ஸ் நோட் அனுப்பி இருக்க. எதையும் யோசிக்காம துர் துர்னு பண்ணிர்ற மதி.. இப்போ பாரு எவ்ளோ பெரிய ப்ராப்ளம்ல மாட்டிகிட்டோம். இது எல்லாமே எவிடன்சு… நம்மளால தப்பிக்கவே முடியாது”

பதற்றமும் பயமும் ஸ்டீபனை நிலைக்கொள்ளாமல் செய்தது. தலையை சொரிந்துக்கொண்டு அங்குமிங்குமாக நடந்துக்கொண்டே மதியை திட்டிக்கொண்டிருந்தான்.

“ஆங்… ஓத்தா இப்போ பேசுற. உங்க முன்னாடிதானே அனுப்புனேன். அப்போ எல்லாம் அமிதியா இருந்துட்டு இப்போ கத்துற… அவனாதான் ஓடுற பஸ்சு முன்னாடி வுய்ந்து செத்தான். நாம ஒன்னும் அவன பஸ்ல இருந்து புடிச்சு தள்ளி வுடல. இது சூசைடு… நாம ஒன்னும் பண்ண முடியாது. என்ன காப்பாத்திக்க எனக்கு தெரியும். நீங்க வேணா போய் ஆஜராவுங்கோ”

கோபமும், துணிச்சலும் மட்டுமே தன் வாழ்வின் பெரும் அங்கமென்று வாழ்ந்து கொண்டிருப்பவன் மதி. அவனை நிதானப்படுத்தி புரிய வைக்க முயற்சிப்பதெல்லாம் ஈர மணலில் முகம் துடைப்பது போன்றது. அவனாக உணர்ந்தாலொழிய எதையுமே அவனுக்கு விளங்க வைக்க முடியாது. யோசிப்பதற்கும், நிதானித்து செயல்படுவதற்கும் நேரம் இல்லாமல் போனது. ஏதோ ஓர் முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருந்தோம்.

“டேய் எங்க மாமா ஹை கோர்ட்ல கிளர்க்கா வேல செய்யுறாரு, அவர கேட்காம என்னால எந்த முடிவும் இப்போ எடுக்க முடியாது. பர்ஸ்ட்டு இன்னைக்கு நைட்டு எங்கியாவது எஸ் ஆய்டுவோம். அப்புறம் என்ன பண்ணலாம்னு யோசிப்போம். எல்லாரும் குரூப்ல இருந்து எக்ஸ்சிட் ஆவுங்க. ரூட்டு பசங்க எல்லாரையும் எக்சிட் ஆக சொல்லி எல்லா ஹிஸ்ட்ரியும் அழிக்க சொல்லுங்க. கால்ஸ், மெசேஜ், சாட், மத்த காலேஜ் பசங்கள மெரட்டி எடுத்த வீடிடோஸ் எல்லாத்தையும் டிலீட் பண்ணி போன ஸ்விட்ச் ஆப் பண்ணுங்கோ. யாரோட போன்லியும் ஒரு எவிடென்ஸும் இருக்க கூடாது. விஷயம் லீக் ஆயி இந்நேரம் நம்மள தேட ஆரம்பிச்சுருப்பாங்க”

தடயங்களை சேகரிப்பதை காட்டிலும் அதை அழிப்பதென்பது சவாலுக்குரிய காரியமாக எனக்குப் பட்டது. பல தடயங்கள் சர்ப்பங்களாக உருவெடுத்து என்னை விரட்டுவது போல் தோன்றியது. கடக்கும் நிமிடங்கள் ஒவ்வொன்றும் ரத்தக்கசிவைப் போன்றொரு ரணத்தை கொடுத்தன. திட்டமிட்டது போல் தனித்தனியாக பிரிந்து மதி சொன்ன அவன் உறவினர் வீட்டை தஞ்சம் அடைந்தோம். மதியின் குடும்பம் அவனை தற்காத்துக்கொள்வதைத்தான் முதன்மை கடமையாக நினைத்தார்கள். அவனது நண்பர்களும் உறவினர்களும் அன்றிரவு அந்த ரகசிய இடத்தில் முகாமிட்டிருந்தார்கள். யார் யாருக்கோ கால் செய்து தப்பிப்பதற்கான வழித் தடத்தை உருவாக்கிக்கொண்டிருந்தார்கள். மதியின் குடும்பத்தினர்களைத் தவிர பணத்தை கரைத்து வழக்கு நடத்தும் திராணி நிச்சயம் எங்கள் குடும்பத்தினருக்கு இல்லை. இந்நேரம் என் குடும்பத்தில் உள்ளவர்கள் எந்த காவல் நிலையத்தின் வாசல் முன் அழுதுகொண்டிருக்கிறார்களோ? இறந்தவனின் உறவும் நட்பும் எப்படி எல்லாம் எங்களை சபித்துக்கொண்டிருக்கிறார்களோ? ஏதேதோ எண்ணங்கள் அன்றிரவு என்னை வஞ்சித்தபடி இருந்தன. பிறரால் சபிக்கப்படும் நிலையை பாவத்தின் சம்பளமாகத்தான் வாழ்நாள் முழுக்க ஈன்றுகொண்டிருக்கமுடியும் என்று அப்போது நினைத்துக்கொண்டேன். ரூட் நண்பர்கள் என் வாய் கட்டளைக்காக காத்துக்கொண்டிருந்தார்கள். “நீ சொல்லு தல… நீ சொன்ன ஆஜர் ஆய்டலாம். நம்மளால மத்தவங்களுக்கு எதுக்கு கஷ்டம்? கொஞ்ச நாளிக்கு மும்பை, டெல்லினு எங்கனா போய்டலாமா தல” எதற்கும் செவிமடுக்கும் நிலையில் நான் இல்லை. சிந்தனை முழுவதும் இறந்தவனின் குடும்பத்தை நினைத்தும், விஷயம் அறிந்து அவதிக்குள்ளாகும் என் குடும்பத்தை நினைத்தும் சுற்றிக்கொண்டிருந்தது.

ரூட்டு தல என்பவன் நிஜத்தில் யார்? அராஜாகங்களுக்கும், அக்கிரமங்களுக்கும் முன்னின்று அணிவகுக்கும் தலைவனா அல்லது பல வன்முறைகளுக்கு பின்நின்று காய் நகர்த்தும் சூழ்ச்சிவாதியா. யோசித்துப்பார்த்தால் இரண்டையும் நான் செய்திருக்கிறேன். நான் சொன்னேன் என்பதற்காக பிற கல்லூரி மாணவர்களை என் ரூட் மாணவர்கள் மிரட்டி இருக்கிறார்கள், பணிந்து போகாதே என்பதற்காக பஸ் படிக்கட்டிலும், ஜன்னலிலும் தொங்கிக்கொண்டே பயணம் செய்திருக்கிறார்கள். இதை எல்லாம் செய்யத் தூண்டியது வாலிபத்தின் பேதைமை என்றாலும் செய்யும் செயல் தவறு என்று புத்திக்கு ஏன் உறைக்கவில்லை என்று இப்போது நினைக்கிறேன்.

உண்மையில் ரூட்டுத் தலைவனின் கடமை தான் என்ன? பிறரின் மேல் விழும் அடியை தன் மேல் தாங்கிக்கொள்ளும் தியாகியின் வடிவம்தான் ரூட்டு தலையோ? இல்லை… பிறருக்கு நம்பிக்கை கொடுப்பதும், தைரியம் கொடுப்பதும், அரணாக நிற்பதும் ரூட்டு தலையின் கடமைதான். ஆனால், இவற்றுள் எதில் நான் வேறுபட்டிருக்கிறேன் என்பதைத்தான் இப்போது வரை என்னால் விளங்கிக்கொள்ள முடியாமல் இருக்கிறது. இதில் அனைத்திலும் என் பங்கை கொடுத்திருக்கிறேன் ஆனால், செய்யும் செயலை பொருத்துதான் நன்மைகளும் தீமைகளும். ரூட்டு தலையாக அடையாளம் காணப்பட்டதிலிருந்து என்னால் எந்த நன்மையையும் நடந்திருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

நண்பர்களிடம் விடைபெறுவதாகச் சொல்லிவிட்டு மறுநாள் மதியம் மாமா சொன்ன இடத்திற்குச் சென்றேன். மாமா எனக்கு முன்னமே அங்கு காத்திருந்தார். என்னைக் கண்டதும் மாமாவின் கோவம் முழுவதும் என் மேல் திரும்பியது. பல வசைச் சொற்களை என் மீது வீசிக்கொண்டே ஆத்திரம் தீரும் வரை என்னை அறைந்தார். கொஞ்சமேனும் என் குற்றவுணர்ச்சியில் இருந்து விடுபட அந்த அறைகள் எனக்குத் அப்போது தேவையாய் இருந்தன.

“உன்னால எவ்ளோ பிரச்சன தெரியுமாடா… தாத்தாவையும் அப்பாவையும் போலிஸ்காரங்கோ புடிச்சுனு போய்ட்டாங்க. நைட்டெல்லாம் தூங்காம அவங்கள வெளிய கொண்டு வரதுக்குள்ள போதும் போதும்னு ஆய்டுச்சி.. உங்க ரூட் பசங்க ஒவ்வொருத்தனையும் தூக்கினு போய் விசாரிச்சுட்டு இருக்காங்க. இந்த விஷயம்தான் எல்லா சேனல்லியும் ஓடிட்டு இருக்கு. காலேஜ் முடிய இன்னும் நாலு மாசம் தானடா இருக்கு. அதுக்குள்ள இப்படி பண்ணிட்ட”

“பசங்கதான் அவன கலாய்ச்சி அசிங்கப்பத்துனானுங்க மாமா, நான் அப்போ ஸ்பாட்லியே இல்ல. மேட்ச் விளையாட போயிருந்தேன். அங்க போய் பசங்கள தடுத்து நான்தான் அவன பஸ் ஸ்டாப் வரைக்கும் டிராப் பண்ட்டு வந்தேன்… நான் வேணும்னா ஆஜர் ஆய்டுறேன் மாமா… நீயே கூட்டிட்டு போய் ஸ்டேஷன்ல ஆஜர் படுத்திடு”

“ஆஜர் படுத்துறது ஒரு விசயமே இல்ல அஜய்.. உள்ள போனா உன்ன உரிச்சுடுவானுங்க… அதுவுமில்லாம ஸ்டேஷன் பக்கம் போய்ட்டுதான் வந்தேன். அந்த காலேஜ் பசங்க மொத்தமும் அங்கதான் இருக்கானுங்க. கொல வெறில இருக்கானுங்க. மாட்ன அங்கியே உன்ன சம்பவம் பண்ணுவானுங்க”

முன்னமே நான் கணித்திருந்ததைத்தான் மாமா விளக்கிக்கொண்டிருந்தார். என் சுயநலத்திற்காக என் குடும்பத்தை பலியிட நான் விரும்பவில்லை. தீர்மானமாய் என் முடிவை மாமவிடம் சொன்னேன்.

“பரவால மாமா… என்னால அப்பா அம்மா எல்லாம் கஷ்டப்பட கூடாது… நான் ஆஜர் ஆய்ட்டா அவங்கள தொந்தரவு பண்ண மாட்டாங்கள. நான் ஆஜர் ஆவுறதுதான் எல்லாருக்கும் நல்லது”

“லூசு மாதிரி பேசாத அஜய். FIR-ல உன் பேரு மூணாவதா இருக்கு, எவன கேட்டாலும் ரூட்டு தல அஜய்… ரூட்டு தல அஜய்னு உன்னதான் கை காட்டுறானுங்க. நியூஸ் பேப்பர்ல கூட உன் பேரு வந்துடுச்சு. இப்போ உன்ன ஆஜர் படுத்துறது நல்லது இல்ல. அதுவும் நீ பர்ஸ்டு ஆளா ஆஜரானா உன்ன வெளில எடுக்குறது ரொம்ப கஷ்டமாயிடும். நான் அப்பா அம்மா எல்லாரையும் ஊருக்கு அனுப்பிட்டேன். நீ அவங்கள பத்தி எல்லாம் யோசிக்காத. நான் சொல்லுறத மட்டும் செய் போதும்”

மாமா அவர் பைக்கில் அமர்த்திக்கொண்டு எங்கே செல்கிறோம் என்பதைக் கூட சொல்லாமல் நீண்ட நேரமாக எங்கேயோ போய்க்கொண்டிருந்தார். தற்கொலை செய்துகொண்ட மாணவன் எங்களிடம் சிக்கிய பொழுது நாங்கள் என்னவெல்லாம் அவனை துன்புறுத்தினோம், இதற்குமுன் எப்படி எல்லாம் எங்கள் இரு கல்லூரிகளுக்கு இடையே பகை மூண்டது போன்ற விவரங்களை கேட்டுக்கொண்டே வந்தார். நான் சொல்லும் பதில்களில் எனக்கு சாதகமான சாட்சியங்களை ஏதேனும் திரட்ட முடியுமாவென்று சிந்தித்தபடியே இருந்தார்.

ஹோட்டல் ஒன்றை கண்டடைந்து சாப்பிடத் தொடங்கினோம். அப்பொழுதுதான் மாமா ஒரு முறை நம்மேல் பதியப்படும் வழக்கு எப்படியெல்லாம் நம் வாழ்வை சீர்குலைக்கும் என்பதை விளக்கினார். சரியாக வேலைக்கு செல்ல முடியாமல், அரசாங்க வேலை கிடைக்காமல், திருமணம் செய்ய முடியாமல், வெளியூருக்கு செல்ல முடியாமல் இப்படி வாழ்வில் முன்னேறிச் செல்ல கிடைக்கும் பல வாய்ப்புகளுக்கு எப்.ஐ.ஆரில் பெயர் பதிந்தததால் ஏற்படும் விளைவுகளை எடுத்துரைத்தார். உண்மையில் அதுபோன்ற நிலையைத்தான் இப்பொழுது அனுபவித்துக்கொண்டிருக்கிறேன். அதைக்காட்டிலும் ஓர் உயிர் இவ்வுலகில் இருந்து மறைய நானும் காரணமாக இருந்ததை நினைக்கையில் மனிதனாக இருப்பதற்கே நான் தகுதியற்றவன் என நினைக்கத் தோன்றுகிறது.

நான்கு மணிநேரம் பயணம் செய்து சென்னையைத் தாண்டி ஏதோ ஓர் வீட்டிற்கு மாமா அழைத்துச் சென்றார். தன் நண்பனின் வீடு என்றும் நிலைமை சரியாகும் வரை தான் அங்கேயே தங்க வேண்டுமென்றும் கட்டளையிட்டார். மாமாவின் நண்பரும் எந்த ஒரு குறையுமில்லாமல் என்னைப் பார்த்துக்கொண்டார். ஓயாமல் டி.வி பார்ப்பதும், மாமா நண்பரின் பிள்ளைகளுடன் சேர்த்து கேரம் ஆடுவதுமாக நேரம் கரைந்துக்கொண்டிருந்தது. மதி, ஸ்டீபன் என்று ஒவ்வொருவராக போலீசிடம் சிக்கிய செய்தியை டி.வி.யில் பார்த்து தெரிந்துக்கொண்டேன். வீட்டின் நிலை குறித்து அறிய நினைத்தும் நானாக கூப்பிடும் வரை யார் எண்ணிற்கும் அழைக்கக் கூடாது என்றும், அப்படியே அழைத்தாலும் வாட்ஸ்சப் கால் வழியாகத்தான் அழைக்க வேண்டுமென்றும் மாமா தீர்க்கமாக சொல்லிவிட்டார். உறவினர்கள், நண்பர்கள் என்று பேச்சு துணைக்கு ஒருவரும் இல்லாமல் எல்லா வசதிகளும் இருந்தும் அவ்விடத்தை அந்நியமாக உணர்ந்தேன். செல்போன் இல்லாத உலகம் வனத்தில் தனித்து விடப்பட்ட நிலை போல் இருந்தது.

உள்ளே இருப்பவர்களுக்கு பெயில் கிடைக்காத வரை எனக்கும் பெயில் கிடைக்கப் போவதில்லை. அதை முன்னமே கணித்திருந்த மாமா அதற்குப் பிறகு சாமார்த்தியமாக காய் நகர்த்தினார். என்னை தலைமறைவாக வைத்துக்கொண்டே பெயில் வாங்கும் முயற்சியில் இறங்கினார். முதலில் மதிக்கு பெயில் கிடைத்ததும் அந்த ஆணையை வைத்து அடுத்த நாளே எனக்கும் Anticipatory Bail முயற்சித்தார். மாமாவின் நம்பிக்கை வீண் போகவில்லை. அவர் எதிர்பார்த்தது போல் எனக்கும் பெயில் கிடைத்தது. ஒரு மாதமாக நீடித்த தலைமறைவு வாழ்க்கை நிறைவுக்கு வந்தது. கண்டிஷன் பெயிலில் முப்பது நாட்களும் தொடர்ந்து காவல் நிலையத்திற்கு சென்று கையெழுத்திடும் வனவாசம் அன்றிலிருந்து தொடங்கியது.

**********

நீதிமன்றத்திற்குள் நுழையும் பொழுதே உடல் வியர்க்கத் தொடங்கியது. பார்கிங்கில் பைக்கை நிறுத்திவிட்டு வக்கீலுக்காக காத்திருக்கத் தொடங்கினேன். சிறையிலிருந்து அழைத்து வந்திருந்த குற்றவாளிகள் வேனில் இருந்து ஒவ்வொருவறாக இறங்குவதைப் பார்த்தேன். காவலாளிகள் சூழ அவர்கள் நீதிமன்றத்திற்குள் பிரவேசித்துக்கொண்டிருந்தார்கள். சிலர் முகத்தில் வாழ்வின் சகிப்புத் தன்மையும், சிலர் முகத்தில் பெரிதாக சாதித்ததின் வெற்றிக் களிப்பும் ஊசலாடுவதைப் பார்த்தேன். வழக்கு முடிந்து குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் நானும் இது போன்று நீதிமன்றத்திற்கு வந்து செல்லும் நிலைமைக்கு ஆளாக்கப்படுவேன். நான் விரும்பிய ரூட்டு தலை பொறுப்பு இதுபோன்ற பாதையை அமைத்துக்கொடுப்பதில் வியப்பேதுமில்லை.

கல்லூரியில் சேர்ந்த நாளிலிருந்து வகுப்புக்கு செல்வதைக் காட்டிலும் பேருந்தில் ரூட் எடுக்கும் நிகழ்வு ஒன்றுதான் கல்லூரி வாழ்க்கையையே அழகானதாக மாற்றியது. கல்லூரிக்கு காரில் வந்து செல்வதையோ, பைக்கில் வந்து செல்வதையோ கூட பெருமைக்குரிய விசயமாக ஒருபோதும் நாங்கள் கருதியதில்லை. மாணவர்கள் நிரம்ப அரசாங்கப் பேருந்தை எங்களுக்கென்றே குத்தகைக்கு எடுத்தது போல் பாட்டு பாடிக்கொண்டும், பேருந்தின் மீது தொங்கிக்கொண்டும் குழுவாக கல்லூரி வாசல் முன் இறங்குவதில்தான் எங்களுக்கான பெருமை அடங்கியிருந்தது. சிப்பாய்களாக பழக்கப்பட்டவன் ஒவ்வொருவனும் பஸ் ரூட்டில் கலந்துகொள்ளும் போது ராஜாவாகத்தான் தன்னை கற்பிதம் செய்துக்கொள்வான். ஒவ்வொரு நிறுத்தத்திலும் எங்கள் கல்லூரி பெயரை உரக்கக் கத்திக்கொண்டு செல்வதில்தான் எல்லா நாளுக்கான தொடக்கமும் இருந்தது. பேருந்து ஜன்னலில் தொங்கிக்கொண்டு வித்தைகள் பல காட்டும் சாகசக்காரர்கள் எங்களுள் பலர் இருந்தார்கள். பேருந்துக்குள் தாளம் போடுவதற்கும், அந்த தாளத்திற்கு ஏற்ப மெட்டிசைப்பதற்கும் கானா பாடகர்கள் தயாராகவே இருப்பார்கள். சொல்லப்போனால் எங்கள் ரூட்டை அலங்கரிக்கும் அணிகலன்களே அவர்கள்தான்.

ரூட்டு தல பொறுப்பை ஏற்றதிலிருந்து ஜன்னலில் தொங்குவதையோ, பஸ் மீதி ஏறி நிற்பதையோ அறவே நிறுத்திவிட்டேன். ரூட்டு தலைவனுக்கு அது அழகும் அல்ல. எந்நேரமும் விசிலடித்துக்கொண்டு, புத்தகம் என்று கருதப்படும் ஏதோ ஒன்றை கையில் சுருட்டிக்கொண்டு படிக்கட்டின் மீது சாய்ந்தவாக்கில் நின்றபடி பேருந்துக்குள்ளேயும் வெளியேயும் நடந்துகொண்டிருப்பவகைளை கண்காணித்து கொண்டே இருக்க வேண்டும். ரூட்டு தலைவனுக்கான லட்சணங்களில் அவை முதன்மையானவை. என் இடத்தில் நின்று யாரும் பயணிக்க முடியாது. பயணிக்கவும் கூடாது அது எனக்கான இடம் இல்லை… ரூட்டு தலைவனுக்கான இடம்.

பஸ் ரூட் எடுக்கும் போது எங்களுக்கென்று சில விதி முறைகள் இருந்தன. ரூட்டில் கலந்து கொள்ளும் மாணவர்கள் அனைவரும் சங்கமித்தே பிறகே ரூட் எடுக்க வேண்டும். எவ்வளவு நேரமானாலும் சரி அதுவரை டிப்போவில் காத்திருக்க வேண்டும். மாநகரத்தில் வட்டமடித்துக்கொண்டிருக்கும் பல பஸ்களில் ரூட் எடுக்கும் கல்லூரி மாணவர்களும் இதையேதான் பின்பற்றுவார்கள். முதலாம் ஆண்டு மாணவர்கள் பேருந்துக்குள்ளே பயணிக்க வேண்டும். படியில் நிற்பதற்கோ பேருந்தில் தொங்குவதற்கோ அவர்களுக்கு அனுமதி கிடையாது. இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் பாட்டு பாடிக்கொண்டும், தாளம் போட்டுக் கொண்டும் ரூட் எடுக்க வேண்டும். முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு இவை பயிற்சி வகுப்புகளாக எடுத்துக்கொள்ளப்படும். ஏனென்றால் இரண்டாம் ஆண்டு செல்லும் போது அந்த இடத்தை சிறப்பிக்க இருக்கும் முக்கியஸ்தவர்கள் அவர்கள். மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே ஜன்னலில் தொங்குவதற்கும், படிக்கட்டில் நிற்பதற்கும் அனுமதி உண்டு. கல்லூரியை விட்டு விலகும் வரை அந்த இருப்பு அவர்களின் வசம் மட்டுமே நீடித்துக்கொண்டிருக்கும். பெண்கள் பின்னால் சுற்றுபவர்களுக்கு நிச்சயம் ரூட்டில் இடமில்லை. பஸ் ரூட் பொறுத்த வரை கல்லூரிக்கு செல்லும் பொழுதும், கல்லூரியை விட்டு வீடு திரும்பும் பொழுதும் பஸ் ரூட்டிற்காக தங்களை அர்பணித்துக்கொள்ள வேண்டும். இதை விரும்பாதவனுக்கு பஸ் ரூட்டில் எந்த ஒரு காலத்திற்கும் இடமில்லை.

பிறந்த நாள் மாணவனை எப்படி எல்லாம் மகிழ்விக்க வேண்டுமென்று முன்கூட்டியே திட்டமிடுவோம். பஸ் டிப்போவிற்குள் அந்த மாணவன் நுழையும் போது மாலை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துகளைச் சொல்லி கத்திக்கொண்டே அவனை வரவேற்பது, குழுவாக போட்டோ எடுப்பது, பேருந்து கூரையின் மேல் ஏறி நிற்க வைத்து குழுவாக கேக் வெட்டச் செய்வது, அவனுக்கென்று பிரத்யேகமாக தயார் செய்து வைத்திருந்த பாடலை பாடி அவனை குஷிபடுத்துவது, போன்ற ஆக்கப்பூர்வமான விஷயங்கள் அவ்வப்போது எங்கள் ரூட்டில் நடப்பது உண்டு. அதற்கு பிரதிபலனாக போலீசாரிடம் வசைச் சொற்களை பாராட்டுகளாக பெற்றுக்கொண்டு அதைக் எங்களுக்குள் பகிர்ந்துக்கொண்டே கல்லூரிக்குள் நுழைவோம்.

ரூட்டு தல பொறுப்பை நான் ஏற்றதும், Maintenance பொறுப்புப் பதவியை ஸ்டீபன் விரும்பி ஏற்றுக்கொண்டான். மாணவர்களிடம் பணம் வசூலிப்பது, மாணவர்களின் வீட்டு விழாவிற்கு ஒருங்கிணைத்து அவர்களை அழைத்துச் செல்வது, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பாதுகாப்பாக இருப்பது போன்ற அனைத்து காரியங்களுக்கு பின்பும் ஸ்டீபன் முதன்மை ஆளாக நிற்பான். நண்பர்கள் நீண்ட நாட்களாக கேட்டுக்கொண்டிருந்த பஸ் டே கொண்டாட்டத்தையும் நடத்தத் துணிந்தேன். கல்லூரி முடிந்ததும் அனைவரையும் பஸ் டிப்போவிற்கு வரச் செய்து மீட்டிங் ஒன்றை ஏற்பாடு செய்தேன். பழைய ரூட்டு தலைகளை வரவைத்து, ஏரியா முக்கிய புள்ளிகள் என கருதப்படுபவர்களிடம் உதவி கேட்டு அனுமதி நாடி காவல் நிலையத்திற்கு ஓயாது நடந்துகொண்டிருந்தேன். ஒரு வழியாக அனுமதி கிடைத்ததும் பணம் வசூலித்து பஸ் டே கொண்டாடுவதற்கான வேலைகளில் இறங்கினோம். பேனர் அடிப்பது, பேருந்தை அலங்கரிக்க மாலைகள் வாங்குவது போன்ற வேலைகளை மதி மும்முரமாக கவனித்துக்கொண்டான். எல்லா மாணவர்களையும் ஒருங்கிணைத்து, பட்டாசு வெடிப்பது, மேளம் அடிப்பது போன்ற காரியங்களை ஸ்டீபன் கவனித்துக்கொண்டான். நான் பேருந்து நடந்துநரிடமும், டிரைவரிடமும் பேச்சு வார்த்தை செய்துகொண்டிருந்தேன். இப்படியே ஆளுக்கு ஒரு வேலையாக பிரித்து விசில் அடித்துக்கொண்டும் கத்திக்கொண்டும் பஸ் டேவைத் தொடங்கினோம். எங்கள் ரூட்டில் சிறந்த பாடகரான சின்னா பஸ் டே முடியும் வரை எங்கள் ரூட்டின் அருமை பெருமைகளை பாடலில் இணைத்து பாடிக்கொண்டே வந்தான்.

சட்டையில செட்டிங் பட்டனூ… ஒன்னு வலிச்சுவுட்டா வுழும் பட்டுனு….

பெரட்டி மெரட்டி போடுவோம் மொட்டுன்னு… எல்லா காலேஜயும் அலறவுடுவோம் நூத்திஎட்டுனு…

அட்டியில மச்சான் அட்டியில… வாலு புள்ளீங்கோனு பேரு எடுத்தோம் சென்னை சிட்டியில…

TPC காலேஜின்னா ரூட்டு தல யாருப்பா… யோசிக்காம சொல்லுவோமப்பா எங்க தல அஜய்னுபா…

இது ஜாலியான ரூட்டு… நீ புரிஞ்சு நடந்துக்க கேட்டு…

சட்டையில செட்டிங் பட்டனூ… ஒன்னு வலிச்சுவுட்டா வுழும் பட்டுனு….

பெரட்டி மெரட்டி போடுவோம் மொட்டுன்னு… எல்லா காலேஜயும் அலறவுடுவோம் நூத்திஎட்டுனு…

சிக்கமா எங்க ரூட்டு சிக்கமா… நாங்க எதிர்க வந்தா ஒதுங்கி போகணும் கமுக்கமா…

மத்த காலேஜூ பசங்க வந்தா சாமாவ பெரட்டனும்… எங்கள முறைக்குறவன ஓட ஓட வெரட்டனும்….

இது மோசமான ரூட்டு… நீ புரிஞ்சு நடந்துக்க கேட்டு..

சட்டையில செட்டிங் பட்டனூ… ஒன்னு வலிச்சுவுட்டா வுழும் பட்டுனு….

பெரட்டி மெரட்டி போடுவோம் மொட்டுன்னு… எல்லா காலேஜயும் அலறவுடுவோம் நூத்திஎட்டுனு…

பஸ் டேக்களில் அதுவரை காணாத ரகளையை வரலாற்றில் நாங்கள் அப்போது பதிவு செய்தோம். ரூட்டு நண்பர்கள் கோரசாக பாடிக்கொண்டும் பலவித குரல்களில் ஒலியெழுப்பிக்கொண்டும் கத்திக்கொண்டிருந்தார்கள். டிப்போவில் தொடங்கி கல்லூரி வாசலை நெருங்கும் வரை எங்களது ரூட்டின் கரகோஷ முழக்கங்களும், கானா பாடல்களும் ஒலித்தபடியே இருந்தது. பைக் வைத்திருக்கும் மாணவர்கள் பேருந்தைச் சுற்றி முன்னேயும் பின்னேயும் வந்துக்கொண்டிருந்தார்கள். எங்களது கல்லூரி பெயரும், பஸ் ரூட் நம்பரும் கொண்ட பதாகைகளை தாங்கியபடி மாணவர்கள் பேருந்து முன்னே ஆட்டம் போட்டுட்கொண்டு நடந்து சென்றார்கள். ஓர் தேரை அலங்கரிப்பது போல் எங்கள் பஸ் ரூட் பேருந்தை பூக்களாலும், மாலைகளாலும் அலங்கரித்தோம். பேருந்து கூரைகள் மேல் ஏறி நின்று மாணவர்கள் ஆட்டம் போடத் தொடங்கினார்கள். எங்களுக்கான எல்லையை ஒருவராலும் நிர்ணயிக்க இயலாது. கொண்டாட்டம் எனும் பெயரில் கத்திகளை தரையில் தேய்த்துக்கொண்டும், அதை சுற்றிக்கொண்டும் பல ரகளைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தோம். பஸ் டே முடிந்து கல்லூரிக்குள் நுழையும் முன் ரூட் மாணவர்கள் யானை தும்பிக்கையின் வடிவம் ஒத்திய பெரிய ரோஜா மாலையை எனக்கு அணிவித்தார்கள். “எங்க ரூட்டு தல அஜய்க்கு ஜே… TPCக்கு ஜே” எனும் கோஷங்கள் எங்கள் கல்லூரியைத் தாண்டியும் சாலைகளில் நடந்துக்கொண்டிருப்பவர்களுக்கு கேட்டது. பெரிதாக சாதித்ததின் புலனை என் ஒவ்வொரு செல்லிலும் உணரத் தொடங்கினேன். பல ரூட்டு தலைகள் என்னைக்கண்டு உள்ளுக்குள் பொறாமையால் வெதும்பிக்கொண்டிருந்தார்கள். ரூட் தலைகளிலே சிறந்த ரூட் தல எனும் அங்கீகாரத்தை கல்லூரி மாணவர்கள் எனக்கு கொடுத்தார்கள்.

**********

நான் பார்க்கிங்கில் நின்றுகொண்டிருப்பதை பார்த்ததும் வக்கீல் என்னை நெருங்கினார்.

“ஏன்பா, எத்தன தடவ உனக்கு கால் பண்ணுறது. எடுக்கவே மாட்டேங்குற. உன் மாமா கால் பண்ணாலும் எடுக்க மாட்டேங்குரியாம்”

நினைவு திரும்பி செல்போனை எடுத்துப் பார்த்தேன். வக்கீலிடமிருந்தும், மாமாவிடமிருந்தும் ஏகப்பட்ட மிஸ்டு கால்கள் வந்திருந்தன.

“சாரி சார்… கவனிக்கல ரொம்ப டைம் ஆய்டுச்சா போலாமா”

“அதுக்கெல்லாம் அவசியமே இல்ல… இன்னைக்கு ஜட்ஜூ Sitting இல்ல. கோர்ட்டுக்கு வர வேணானு சொல்லத்தான் கால் பண்ணேன்.. நீ காலே எடுக்கல. அடுத்த மாசம் டேட் போட்டுருக்காங்க”

“இன்னும் எத்தன வருஷத்துக்கு சார் கேஸ் நடக்கும்”

“அத குறிப்பிட்டு எல்லாம் சொல்ல முடியாது அஜய்… கேஸ் பொருத்துதான் Trail நடக்கும். உனக்கு விஷயம் தெரியுமா..? நேத்து உங்க காலேஜ் பசங்களுக்கும், Madras Union காலேஜ் பசங்களுக்கும் ஏதோ ரூட் பிரச்சனையாம். உங்க காலேஜ் பசங்க அவனுங்க ரூட் எடுக்கும் போது ஏதோ கலவரம் ஆகி, பஸ் கண்ணாடி எல்லாம் உடைச்சு இருக்கானுங்க. விஷயம் தெரிஞ்சதும் பசங்கள புடிச்சு ரிமாண்ட் பண்ணிட்டாங்க. அந்த கேசும் நம்ம கிட்டதான் வந்துருக்கு. இன்னைக்குதான் பெயில் பைல் பண்ணிருக்கேன் நாளைக்கு கேஸ் வரும்”

“ம்… கேள்விபட்டேன் சார்.. ஆனா, புல் டீடைல்ஸ் தெரியாது”

“சீரியஸ்னஸ் தெரியாம இவனுங்க வெளாடிட்டு இருக்கானுங்க. பிரச்சன வந்தா அடிச்சுகோங்க, வெட்டிக்கோங்கோ பப்ளிக்க ஏன் டிஸ்டர்ப் பண்ணனும். எப்போதான் இவனுங்க திருந்த போறானுங்களோ”

அவரிடமிருந்து வந்த வார்த்தைகள் மாணவனாக இல்லாத போதிலும் என்னையும் சேர்த்து சபிப்பது போல் இருந்தது. அலுவலகம் செல்வதாக சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினேன்.

TPC கல்லூரி மாணவர்களுக்கும் Madras Union கல்லூரி மாணவர்களுக்கும் இடையே இருக்கும் பகை இன்று நேற்று தொடங்கியது அல்ல. அது பல வருட கால வன்மத்தின் நீட்சி. தலைமுறைகள் பல கடந்தாலும் கூட அடுத்தடுத்த தலைமுறைக்கு அந்த வன்மத்தை கடத்த வேண்டும் என்பது தான் எங்கள் கல்லூரி மாணவன் ஒவ்வொருவனுக்கும் போதிக்கப்பட்டவை. கல்லூரியை விட்டு விலகும் மாணவர்கள் அதை சிறப்பாகவே செய்தார்கள். ரூட்டு தலைகள் உருவாவதும் உருவாக்கப்படுவதும் அந்த காரணத்தினால் தான். இதை பல கல்லூரிகளும் நன்கு அறிந்தே இருந்தது.

பிற கல்லூரி மாணவர்களோடு மட்டுமல்லாமல் எங்கள் கல்லூரிக்குள்ளேயும் பல பஸ் ரூட் பிரச்சனைகள் நீடிப்பது உண்டு. எங்கள் பஸ் ரூட் தவிர சிறந்த ரூட் எதுவுமில்லை என்பது எங்கள் ஆழ் மனதுக்குள் நாங்களாகவே விதைத்துக்கொண்டவை. அதை எப்பொழுதும் யாரிடமும் விட்டுக்கொடுக்க நான் முனைந்தது இல்லை. எங்கள் ரூட்டை சீண்டுபவர்கள் எவராயினும் அன்றே வழி மறித்து அவர்களுக்கான சிறந்த பரிசு வழங்கப்படும். பொது மக்களை கணக்கில் கொண்டு எல்லாம் நாங்கள் ரூட் எடுப்பது இல்லை. நாங்கள் எடுக்கும் ரூட் எங்களுக்கானது.. எங்கள் கல்லூரிக்கானது. ‘TPCக்கு ஜே…!’ என்ற முழக்கத்தின் பலத்தை இவ்வுலகம் அறியவேண்டும். அதற்காக எத்தனை கலவரங்களிலும் என் ரூட்டு மாணவர்கள் ஈடுபடத் தயாராக இருந்தார்கள். சண்டைக்கு போதுமான ஆட்கள் பலம் இல்லாத நிலையில் வேறொரு ரூட் மாணவர்களிடம் பேசி எங்களோடு இனையும்படி alliance கேட்போம். எங்கள் ரூட்டின் மீதான நன்மதிப்பு அவர்களிடம் இருக்கும் பட்சத்தில் எங்களோடு alliance போடுவார்கள். இதை அனைத்தும் ரூட் தலைவன் ஒருவனே செய்யவேண்டும். பஸ் ரூட் எடுப்பது போலவே இரயிலில் ரூட் எடுக்கும் அணிகளும் எங்கள் கல்லூரியில் உண்டு. பேருந்தில் வரும் பொழுது அவர்களும் எங்களுடன் இணைந்து கொள்வார்கள். அப்படி பல ரூட்டு தலைகளிடம் பேசி எங்களோடு alliance போடவைத்து பல வன்முறைகளை நிகழ்த்தி இருக்கிறேன். பெரும்பாலானவற்றில் வெற்றியும் கண்டிருக்கிறேன். வன்முறைக்கான நேரமும் தேதியும் குறிக்கப்பட்ட பிறகு பட்டை தீட்டப்படும் கத்தியை போல் எங்களை நாங்களே தயார்படுத்திக் கொள்வோம். குறிப்பிட்ட இடத்தில் ரூட் மெம்பர்களை வரவைத்து மீட்டிங் போட்டபின் பணம் வசூலிப்போம். ஆயுதங்கள் செய்ய அம்பத்தூரில் அதற்கென பிரத்தியேகமான தகடுகளை வாங்கி கத்திகள் தயார் செய்யும் இடத்திற்கு ரகசியமாகச் சென்று பல வடிவங்களில் ஆயுதங்களை தயார் செய்வோம்.

எங்களுடன் மோத இருக்கும் வேறொரு பஸ் ரூட் மாணவர்கள் டிப்போவிற்குள் நுழையும் சமயம் பார்த்து பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை கையில் எடுத்துக்கொண்டு நானும் எனது ரூட் நண்பர்களும் விடாது அவர்களை துரத்துவோம். பையில் மறைத்து வைத்திருந்த பீர் பாட்டில்களையும், கற்களையும் கொண்டு என் பஸ் ரூட் மாணவர்கள் அவர்களை விரட்டுவார்கள். வன்மம் ஒவ்வொருக்குள்ளும் அப்போது தலை தூக்க தொடங்கிவிடும். சிதறி ஓடும் மாணவர்களில் நிச்சயம் ஒருவரேனும் எங்களிடம் சிக்காமல் போவதில்லை. அப்படி சிக்கும் மாணவன்தான் எங்களுக்கான போதை. அவன் ஒருவனை வைத்தே எங்களின் வீரத்தை நிலைநாட்டிக்கொள்வோம். எங்களிடம் மன்னிப்பு கேட்க வைத்தும், எங்கள் கல்லூரிக்கும் எங்கள் ரூட்டிற்கும் ஜே போட வைத்தும், பல வசைச் சொற்களால் அவனைத் திட்டியும் உதைத்தும் துன்புறுத்துவோம். அதை வீடியோ எடுத்து அவர்களின் பஸ் ரூட் தலைவனுக்கே அனுப்புவோம். எங்கள் ரூட்டின் முழுமையான கொண்டாட்டமாக கருதுவது அது ஒன்றைத்தான். நாங்கள் நடத்திய வன்முறைகள் தலைப்பு செய்திகளாக எங்கும் பரவிக்கொண்டிருக்கும். செய்த சம்பவங்களைப் பற்றி பல கல்லூரிகளிலும், ரூட்களிலும் குறைந்தது ஒரு மாதத்திற்கேனும் என்னை “சூப்பர் தல” “கலக்கிட்ட தல..” “மாஸ் பண்ணிட்ட தல” என்றெல்லாம் புகழ் பாடிக்கொண்டிருப்பார்கள். ரூட் தலையாக எனது புகழ் ஓங்குவதைத்தான் அப்போது அதிகம் விரும்பினேன்.   

ரூட்டு தலையாக இருப்பதிலேயும் சில சலுகைகள் கிடைக்கவே செய்யும். ரூட் நண்பர்களோடு குழுவாக சினிமாவிற்கோ, பீச்சிற்கோ, மால்களுக்கோ செல்லும் போது தன் சுய பணத்தைக் கொண்டு செலவு செய்ய வேண்டிய தேவை ரூட் தலைகளுக்கு இருப்பதில்லை. ரூட் மாணவர்களே பணம் வசூலித்து ரூட் தலைவனுக்கான செலவுகள் அனைத்தையும் பார்த்துக்கொள்வார்கள். ஆனால், அதே சமயம் ரூட் நண்பர்கள் ஏதேனும் விசயத்திற்கு ஆசைப்படுகிறார்கள் என்றால் எப்படி ஒரு நிலையிலும் அவர்களின் ஆசையை நிறைவேற்றுவது ரூட்டு தலையின் தலையாய கடமை. ஒரு முறை ரூட்டு நண்பர்களுடன் சேர்ந்து மாலுக்குச் சென்றுகொண்டிருந்தேன். புள்ளபூச்சி என்று நாங்கள் அழைக்கும் வசதி படைத்த வேறு கல்லூரி மாணவர்கள் எங்கள் எதிரில் வந்துகொண்டிருந்தார்கள். முன்பே எங்களை கவனித்திருந்தால் நிச்சயம் சாலையை கடந்து வேறு பக்கம் சென்றிருப்பார்கள். அன்று அவர்களை அறியாமலே எங்களிடம் சிக்கிக்கொள்ளும்படி நேர்ந்துவிட்டது. புள்ளபூச்சி மாணவர்கள் எதிரில் வருவதைக் கண்டதும் மதி என்னை சீண்டினான்;

“தல கோய்ந்தனுங்கோ வரானுங்கோ அவங்கள புடிச்சி எதனா சிக்குதானு பார்ப்போமா”

பயந்துக்கொண்டே பார்வையை வேறு எங்கோ திருப்பிக்கொண்டு எங்களை கடந்து போக முயற்சி செய்தனர் அந்த புள்ளப்பூச்சி மாணவர்கள்.

“ஏய்… இங்க வா…”

ரூட்டு தலை எனும் ஆணவம் என்னுள் எட்டிப்பார்த்தது. அவர்களை முறைத்துக் கொண்டே “இங்க வாங்கடா” என்று மீண்டும் மிரட்டும் தொனியில் அழைத்தேன். அருகே வந்த மாணவர்களை பூஜை செய்வதற்கு நடைபாதை ஓரத்திற்கு அழைத்துச் சென்றேன். புள்ள பூச்சிகள் கண்ணாடி அணிந்துகொண்டும், விலை உயர்ந்த வாட்ச்சும், ஹெட் செட்டும், மொபைல் போனும் வைத்திருந்தார்கள். அதில் ஹெட் செட் மாட்டி இருந்த மாணவனை நித்யா நெருங்கிக்கொண்டே

“இன்னா கம்பெனிடா இது மஜாவா இருக்கு… கழட்டு பார்ப்போம்”

அவன் அனுமதி பெறாமலே அவன் கழுத்தில் மாட்டியிருந்த ஹெட் செட்டை பிடுங்கி நித்யா அவன் காதில் மாட்டிக்கொண்டான். எப்படி எல்லாம் துன்புறுத்த போகிறார்களோ எனும் பயம் ஒவ்வொருவரின் கண்களிலும் நிழலாடிக்கொண்டிருந்தது.

“ஏன்டா… ஜெயின் காலேஜ் பசங்கதானே நீங்கோ… மரேதி தெரியாத பசங்களா இருக்கீங்கோ. தல எதுர்க்க வருது.. வா தல… எப்புடி இருக்க…! இன்னா இந்த பக்கம்னு நலம் விசாரிக்க மாட்டீங்கோ. சரி… நலம் விசாரிக்கலனா கூட பரவால. வா தல டீ சாப்புடு, ஜூஸ் சாப்புடுனு கவனிக்க கூட மாட்டீங்களா. எனக்கு ரொம்ப வர்த்தம்பா…”

மதி அவர்களிடம் நடந்துகொண்ட விதத்தைப் பார்த்து எங்கள் ரூட் மாணவர்கள் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தார்கள். “இவன் இன்னாட ரிக்கி பாண்டிங் மாதிரி இருக்கான்” பார்ப்பதற்கு வெள்ளையாக வெளிநாட்டவன் போல் இருக்கும் இன்னொரு மாணவனின் தோள் மீது ஸ்டீபன் கை போட்டபடி நின்றுகொண்டான். எங்கள் கல்லூரி மாணவர்கள் அவர்களை நக்கல் அடித்துக் கொண்டிருப்பதை கொஞ்ச நேரத்திற்கு சிரித்தபடி ரசித்துக்கொண்டிருந்தேன்.

“அண்ணா ஸாரினா விட்ருங்கனா” என்று கண்களில் நீர் தேங்க அவர்கள் எங்களிடம் கெஞ்சிக்கொண்டிருந்தார்கள்.

“ஓத்தா, இன்னா பண்ண வுன்ன… பிரென்ட்லியாதானே பேசிட்டு இருக்கேன். அது என்ன கைல வாட்ச்சு. நேரம் நல்லா இருக்கும் போது கைல வாட்ச்சு கட்டுறது எல்லாம் கெட்ட பழக்கம். அத கழட்டு பர்ஸ்ட்டு”

தயங்கிக்கொண்டே அந்த வாட்ச்சை கழட்டி என்னிடம் கொடுத்தான். அதை என் ரூட் மாணவர்களில் ஒருவனான திலீபனிடம் கொடுக்கும் போது அந்த மாணவன் “அண்ணா, தங்கச்சி வாங்கி கொடுத்ததுனா ப்ளீஸ்னா” என்று திலீபனிடம் மன்றாடினான்.

“டேய் கதகாரன்டா இவன்… இது உன் பிகரு வாங்கி கொடுத்ததுதானே.. நம்மகிட்டே ஓல் ஓக்குற பார்த்தியா. ரெண்டு நாள் யூஸ் பண்ண்ட்டு கொடுத்துர்றேன் பயப்படாத என்ன. நீ எப்போ வேண்ணாலும் எங்க காலேஜாண்ட வந்து வாய்ங்கலாம் சரியா”

திலீபன் அவனை சமாதானம் செய்துகொண்டிருந்தான். நான் அந்த மாணவர்களிடம் “சரி வுட்டுறேன். படத்துக்கு போகணும் காசு கம்மியா இருக்கு. ஒரு ஐநூருபா மட்டும் இருந்தா கொடுத்துட்டு போங்கோ”

கையில் இருந்த பணத்தை திரட்டி ஐந்நூறு ரூபாயைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார்கள். இதுபோன்ற பல கல்லூரி மாணவர்களை மிரட்டி என் தேவைக்காக அவர்களை பகடைக்காயாக பயன்படுத்தி இருக்கிறேன். எங்களைப் பற்றி போலிசிடமும், கல்லூரியிடமும் புகார் கொடுக்கும் தைரியமோ துணிவோ அவர்களிடம் இருந்ததில்லை. எப்படியேனும் அடுத்து மூன்று ஆண்டுகள் அந்த கல்லூரியில்தான் அவர்கள் படிக்க வேண்டும். இன்று இல்லை என்றாலும் என்றோ ஒரு நாள் அவர்கள் எங்களிடம் சிக்கப்போவது உறுதி. அப்படி சிக்க இருக்கும் நாளை எண்ணிதான் எங்களிடம் அடிபணிந்து போவார்கள். ரூட்டு தலைவனால் எல்லாம் முடியும்.. எதுவும் முடியும். அதை என் ரூட்டு நண்பர்களுக்காக செவ்வனே செய்துகொண்டிருந்தேன்.

**********

அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது. ஆவடியில் உள்ள மற்ற ஷோரூம்களுக்கு சென்று கம்பெனி பிராடக்டை விவரித்து ஆர்டர் எடுக்கும்படி பிற கம்பெனிகளிடம் கேட்டுக்கொண்டிருந்தேன். இல்லை.. கெஞ்சிக்கொண்டிருந்தேன். சிலர் ஆர்டர் எடுப்பதாக சொல்லி விசிடிங் கார்டை வாங்கிக்கொண்டு அங்கிருந்து என்னை அப்புறப்படுத்த முயற்சி செய்தார்கள். எல்லா ஷோரூம்களிலும் கிடைக்கும் அதே செயற்கையான புன்சிரிப்பே கிடைத்தது. தேநீர் ஏதாவது குடிக்கலாம் என்று நினைக்கும் போதுதான் மதியம் சாப்பிடாமல் இருந்தது நினைவுக்கு வந்தது. காலையிலிருந்து பசியை மறந்திருந்தேன். இருந்தும் எனக்கு சாப்பிடத் தோன்றவில்லை. பேருந்து நிலையம் அருகில் இருக்கும் தேநீர் கடையில் பைக்கை நிறுத்திவிட்டு தேநீர் ஒன்று சொல்லிவிட்டுக் காத்திருந்தேன். சற்று தொலைவில் சிகரெட் புகைத்துக்கொண்டே தேநீர் அருந்திக்கொண்டிருந்தவனைப் பார்த்தேன். உற்று நோக்கியதில் என் ரூட் நண்பன் திலீபன் என்பது உறுதியானது.

“ஹே… திலீபா…! இங்க இன்னாடா பண்ணுற… எப்புடி இருக்க”

“வா தல…! நான் நல்லா இருக்கேன்… நீ எப்புடி இருக்க… என்ன தல கேஸ் வாங்குனதுல இருந்து ஆளையே காணோம்.. எங்கள எல்லாம் மறந்துட்டியா..?”

“ஏன்டா நீ வேற… கேஸ் வாங்குனதுக்கு அப்புறம் லைப்ல ஏகப்பட்ட பிரச்சன… எங்க இருந்து உங்கள பார்க்க வர்றது… நீ இன்னா இங்க… ரிச்சி ஸ்ட்ரீட்ல தானே வேல செய்யுறதா சொன்ன”

“ஆமா தல. அதுக்கு அப்புறம் வூடு மாறினு ஆவடி வந்துட்டேன். அதுக்கு அப்புறம் இங்கியே வேல தேடினு செட்டில் ஆய்ட்டேன். தோ… இங்க பூர்விகாலதான் மொபைல் சேல்ஸ் மேனா இருக்கேன்”

தான் அணிந்திருந்த கம்பெனியின் டீசர்ட்டை காண்பித்துக்கொண்டு தன்னை அடையாளப்படுத்திக்கொண்டான். முகத்தில் தோன்றிய அவனது சிரிப்பில் எவ்வித சந்தோஷமும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. வேதனையையும், இயலாமையையும் மறைத்துக்கொள்ள காலத்தின் நிர்பந்தத்திலான ஒரு சிரிப்பு அனைவருக்கும் தேவைப்படுகிறது. உண்மையில் விதிக்கப்பட்ட வாழ்வின் துயரத்தைத்தான் அவனது முகத்தில் கண்டேன்.

எனக்கான தேநீர் தயாரானதும் புகைத்துகொண்டிருந்த சிகரெட்டை கீழே போட்டு அணைத்துவிட்டு தேநீரை வாங்கி என்னிடம் நீட்டினான்.

“நீ இப்போ இன்னா செய்யுற? கேஸ் எல்லாம் முடிஞ்சுடுச்சா இல்லியா?”

“நானும் உன்ன மாதிரி தான்டா. நீ ஷோரூம்குள்ள சேல் பண்ற. நான் ஷோரூம் ஷோரூமா எங்க கம்பனி பிராடக்ட சேல் பண்றேன் அவ்ளோதான் வித்யாசம். இன்னிக்கு கூட கோர்ட்டுக்கு போய்ட்டுதான் வந்தேன். வழக்கம் போல வாய்தா ஆயிடுச்சு.. பசங்களும் கோர்டுக்கு வந்துருப்பானுங்கோ. எனக்கு வேல இருந்துச்சு. போன் கூட பண்ணாம கிளம்பி வந்துட்டேன்”

அடுத்து என்ன பேசுவது என்பதைத்தான் இருவரும் யோசித்துக் கொண்டிருந்தோம். பகிர்ந்து கொள்ள பல விஷயங்கள் இருந்தும் கடந்த கால நினைவுகளே எங்கள் இருவரின் மனதிலும் ஓடிக்கொண்டிருந்தது.

“ஏதோ படிச்சோம்.. ஏதோ வேலைல சேர்ந்தோம்னுதானே தல நம்ம லைப் போகுது… எல்லா அரியரும் க்ளியர் பண்ணியாச்சு… ஆனாலும் எதுக்கு பி.ஏ படிச்சேன்னு எனக்கே தெரில… நாம எத்தன காலேஜ் பசங்கள கலாய்ச்சு அவனுங்ககிட்ட இருந்து போனு வாட்ச்சுனு புடிங்கி இருப்போம். போன வாரம் ஐ போன் வாங்க ஒருத்தன் ஷோரூம்க்கு வந்தான் தல. எனக்கு அவன சரியா ஞாபகம் இல்ல ஆனா, அவன் என்ன நல்லா ஞாபகம் வெச்சுருக்கான் போலருக்கு… “என்ன மிரட்டி என்கிட்டயிருந்து என் வாட்ச் புடுங்குணீங்களே பழைய TPC காலேஜ் ஸ்டூடண்ட்தானே நீங்க… என்னோட வாட்ச் இன்னும் பத்துரமா இருக்கா?” னு சிரிச்சுகிட்டே எல்லார் முன்னாடியும் கேட்டுட்டான். ரொம்ப அசிங்கமாயிடுச்சு. ‘ஸாரி சார். வீட்ல எங்கனா இருக்கும். தேடி எடுத்துனு வந்து தர்றேன்’னு சொன்னதுக்கு இல்ல “அது உங்ககிட்டயே இருக்கட்டும். ஆனா, பத்துரமா மட்டும் வெச்சுச்கோங்க” னு சொல்ட்டான். உங்க காலேஜுக்கு நல்ல பேர வாங்கிகொடுத்துட்டேனு கூட வேல செய்யுற பசங்க எல்லாம் கலாய்ச்சானுங்கோ.. ஒரே ஸ்வைப்ல ஒன்னேகால் லட்ச ரூபா மொபைல் போன அசால்ட்டா வாங்கிட்டு போறான் தல. நல்ல வேலைல இருப்பான் போலருக்கு… அவன் போனதுக்கு அப்புறம் கணக்கு பண்ணி பாக்குறேன் என்னோட எட்டு மாசம் சம்பளத்த ஒரே செகண்ட்ல செலவு பண்ணியிருக்கான்”

பேசிக்கொண்டே அவனுக்கும் எனக்கும் சேர்த்து தேநீர்க்கான காசை கடைக்காரரிடம் கொடுத்தான். “நான் கொடுக்குறேன் திலீபா” என்று பின்பாக்கெட்டிலிருந்து பர்சை எடுக்க முயற்சித்ததும், “இருக்கட்டும் தல” என்று என் கையை பேண்ட் பாக்கெட்டிலிருந்து விடுவித்தான். “வேற எதனா சாப்டுறியா தல” என்று கேட்டதற்கு வேண்டாமென்று தலையசைத்தேன். கொஞ்ச நேர அமைதிக்குப்பின் மீண்டும் அவனே தொடர்ந்தான்.

“ஆனா ஒன்னு தல… ஷோரூம்ல இருந்து வெளிய போகும்போது திரும்பி என்ன பார்த்துட்டே போனான். அந்த பார்வ இருக்கே… நீ இப்போ வாழுற வாழ்க்க எல்லாம் என் மயிருக்கு சமானம்னு சொல்ட்டு போன மாதிரி இருந்துச்சு… என்னால இன்னா பண்ண முடியும். ப்பியூச்சர யோசிக்காம விட்டோமேனு இங்க வந்து தம்முதான் அடிக்கத் முடிஞ்சுது. நான் மட்டும் இல்ல தல. நம்ம ரூட்டு பசங்க எல்லாரும் இப்படிதான் இருக்கானுங்கோ. அரியர் கிளியர் பண்ண முடியாம டிரைவர் வேல செஞ்சுனு, டெலிவரி ஜாப்க்கு போய்னு அவனவனுக்கு என்ன வேல கிடைக்குதோ அத செஞ்சுட்டு இருக்கானுங்க”

உண்மையில் எதிர்கால சிந்தனையற்றுதான் எங்கள் கல்லூரி வாழ்க்கையை கடத்திக் கொண்டிருந்தோம். நாங்களாக தேடிக்கொண்ட அவமானங்களுக்கு எவர் மீதும் பழி சுமத்த இயலாது. எதிரில் இருந்த நிறுத்தத்தில் பேருந்து ஒன்று வந்து நின்றது. சீருடை அணிந்த மாணவர்கள் பேருந்தை துரத்திச் செல்லவும், படிக்கட்டின் மீது தொங்கவும் தயார் நிலையில் இருந்தார்கள்.

“தல, நீ பஸ்ல கடேசியா எப்போ போன?”

“தெர்லடா வேலைக்கு சேர்ந்ததுக்கு அப்புறம் பைக்தான் எல்லாமே. பஸ்ல போய் ரொம்ப நாள்… இல்ல ரொம்ப மாசமாச்சு. சரி.. அத ஏன் இப்போ கேக்குற”

“ஒன்னும் இல்ல நானும் பஸ்ல போய் ரொம்ப நாளாச்சு தல… பைக்லதான் வேலைக்கு வருவேன் போவேன். இங்க இருந்து வீடு பக்கம். நாலு ஸ்டாப்தான் தல. வாயேன்.. சும்மா பஸ்ல போய் பாப்போம் எப்புடி இருக்குனு. நம்ம பசங்க யாருமே இல்ல. நீ ஒருத்தன்தான் இருக்க.. அதான் சட்டுனு தோனுச்சு”

திலீபன் அப்படி கேட்டதும் அவன் ஆசையை நிவர்த்தி செய்ய மீண்டும் பழைய ரூட்டு தலயாக உருவெடுக்க நேருவதை . ரூட்டு தலயாக இல்லாத போதிலும் ஓர் நண்பனாக அவன் ஆசையை நிவர்த்தி செய்ய மனம் இணங்கியது.

“அட வா தல… பஸ்ஸூ எடுக்கப் போறாங்க”

என் கையை பிடித்து இழுத்துக்கொண்டே என்னை கட்டாயப்படுத்தினான்.

பேருந்து எடுக்கும் சமயத்தில் சட்டென்று இருவரும் பேருந்து பின்னே ஓடத் தொடங்கினோம். தங்கள் இருப்பை நிலைநாட்டத் துடிக்கும் பள்ளி மாணவர்கள் “எண்ணோவ்… ரன்னிங்ல எல்லாம் ஏறாதனா. டேஞ்சர்னா… உள்ள போனா… போனா…” என்று என்னையும் திலீபனையும் பேருந்துக்குள் செல்லும்படி கட்டாயப்படுத்தினார்கள்.

நானும் திலீபனும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டோம். மாணவர்கள் பேருந்தை துரத்திக்கொண்டு படிக்கட்டில் தொங்கிக்கொண்டு தேனீயை போல் மொய்த்துக்கொண்டிருந்தார்கள். பேருந்துக்குள் அந்த அளவிற்கு கூட்டம் இல்லாததால் முன்னும் பின்னும் இருந்த அடுத்தடுத்த காலி இருக்கையில் நானும் திலீபனும் அமர்ந்து கொண்டோம்.

பேருந்து வேகம் பிடித்த ஒரு சில விநாடிகளிலே தாளம் போட்டுக்கொண்டு மாணவர்கள் பாடத் துடங்கினார்கள். பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தவர்களின் மொத்த கவனமும் அவர்களின் பக்கம் திரும்பியது. ஆனாலும் அவர்கள் பெண்களைப் பற்றி மெட்டெடுத்துக் கொண்டிருந்த பாடல் வரிகள் அனைவருக்கும் சிரிப்பையே வரவைத்தது. அதை உள்ளுக்குள் ரசித்தவர்களாக அனைவரும் அந்த மாணவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். திலீபனும் அதை ரசித்துக்கொண்டே “குசுமிங்க இன்னாமா பாடுறானுங்க” என்று தொடையில் தாளம் போட்டுக்கொண்டிருந்தான். அவர்களின் பாடலுக்கு என்னை அறியாமல் நானும் உதட்டசைத்துக் கொண்டிருந்தேன். விசில் அடிக்க என் கைவிரல்கள் என்னை அவசரப்படுத்தியது. நீண்ட வருடங்களாக என்னுள் புதையுண்டிருந்த ரூட்டு தல மெல்ல வெளிவரத் துடிப்பதை அப்போது உணர்ந்தேன். ஆனாலும் கடந்தகால சம்பவங்கள் மனதுக்குள் அடுக்கடுக்காக தலை விரித்து ஆடியது.

புத்தகங்களுக்கு இடையில் கிழிக்கப்பட்ட அந்தியாயங்களாகவே எனது ரூட்டு தல வாழ்க்கை நிறைவு பெறட்டும். மீண்டும் அதை கையில் எடுத்து புரட்டி பார்ப்பதற்கோ, அதை இணைப்பதற்கோ நான் விரும்பவில்லை. பகிர விரும்பாத அந்நினைவுகளை என்னுள் எரிக்கவும் முயற்சி செய்தேன். சாம்பலாகிப்போன துகள்களை அப்புறப்படுத்திக் கொண்டே ஜன்னலுக்கு வெளியே நகர்ந்து கொண்டிருப்பவைகளை பார்த்துக் கொண்டிருந்தேன். அடுத்து ஓரிரு நிறுத்ததிற்குள் நிறைவு பெறாமல் கொஞ்ச நேரத்திற்காவது இப்பயணம் நீடித்துக் கொண்டிருக்க வேண்டுமென்று மனம் ஏங்கத் தொடங்கியது.

-pravee004jvv@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button