
இந்தக் கதையின் பெரும்பகுதி ஜேஆர் – ராஜிவ் காந்தி இடையே நடந்த ஒப்பந்தத்தின் முன்னரான இரண்டு வருடங்களுக்குரியது. ஆனாலும் இந்தக் கதையின் மாந்தரை இன்றைய பொழுதிலேயே நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தப் போகிறேன்.
கூட்டுப் பெட்டி காங்கையேறி வெடித்துக் கொண்டிருக்கிறது. இந்த முறையும் வெளுப்பும் சரியில்லை. நீலமும் சரியில்லை.
‘ஏதோ கழிச்சிவிட்டாப் போதும் என்ற கணக்குலதான் நீலப்பத்திய பிடிச்சிருக்கான்…. அந்த சுருட்டப்பயலுக்கு வண்ணாமைய பத்தி என்ன தெரியும். ரெண்டு சாரனை பிடிச்சி கோப்பாத்த தெரியாத தெப்பிராட்டிய காரனுட்ட நீலம் புழியக்குடுத்திருக்காரு… கட்டடிச்சுப்போய் எல்லா சாரனும் மோசமாக் கிடக்கு…. ‘
குசினிக்குள் ஒரு தாவலும் கூட்டுப் பெட்டியில் ஒரு கண்ணுமாய் நிற்கிற கமயன் கிழவி கத்திக்கொண்டே இருக்கிறாள்.
வத்தாளையர் இதை குறித்தெல்லாம் சட்டை செய்வதில்லை. கமயன் கிழவியை கட்டிய காலத்தில இருந்து இந்தக் கத்தல்தான் அவருக்கு பூபாளம். இந்தக் கத்தல்தான் அவருக்கு ராத்திரி ராகம். கமயன் கிழவி மட்டும் லொட லொடவென எதுக்காவது, யாருக்காவது திட்டிக்கிட்டே இருக்கும். யாரும் கிடைக்காவிட்டால் கூட தூரத்தில் பேலுற காகத்தையாவது ரெண்டு தூஷணம் சொல்லி ஏசாட்டி கிழவிக்கு நித்திரை வராது.
இந்தக் கிழவி குடுக்கிற கால் வயித்துக் கஞ்சியோடவே வத்தாளையர் காலம் தள்ளிட்டார். முன்னப் போல இப்போதெல்லாம் வத்தாளையரால் வண்ணாமை செய்ய முடியவில்லை. இரண்டு மாராப்பு புடவையை சைக்கிள் கரியல்ல வச்சி கட்டவே அவருக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குது. இருபது சேட்டை ஒரு கையில புடிச்சு அடிச்சு வெளுத்தவருக்கு இப்போதெல்லாம் இரண்டு சேட்டை சுளுத்தான் போட்டு சுருக்கி வெளுக்கவே கூட ஒரு ஆளு தேவைப்படுது. என்னதான் இருந்தாலும் நாணயமா சோறு தின்ற மனிசருக்கு சாகுமட்டும் வண்ணாமை செஞ்சே வாழ்ந்திடனும், ஒரு பத்து ரூபாய்க்கும் கூட யாருட்டயும் கையேந்திரக் கூடாது, என்கிற நினைப்பு மட்டும் மனசுல ஆழமா இருக்குது. இந்த வத்தளையருட்ட காலத்துக்கும் கிடக்கிற பயலாத்தான் அவன் இருந்தான். ஊருக்குள்ள அவனுக்கு ரெண்டே ரெண்டு பேருதான் ஒன்று சூட, இன்னுமொன்று பூசா. ரெண்டு பேருமே அவனுக்கு அம்மா அப்பா வச்ச பெயரில்லை. அவனுக்கே அது மறந்திருக்கவும் வாய்ப்பிருக்கு. சூட இளந்தாரி எண்டுறதுக்கு அவனுக்கு ஒன்றும் இருபது வயசில்ல. இந்த ஐப்பசி கழிந்தால் அறுபது தாண்டி அறுபத்தி ஒண்ணாகப் போகுது. ஆனாலும் இன்னும் குழந்தைப்புள்ள புத்தி, வெள்ளந்தி மனசு, தும்பு முட்டாசிக்காரனுக்கு பின்னால் சாரனை மடித்துக் கட்டிய படி ஓடும் பழக்கம் இன்னமும் அவனிடம் இருக்கிறது. என்ன மீன் குழம்பு வைத்தாலும், எங்கட வீட்டில் சூடை மீன் கறி என்று சொல்கிற வெங்கத்திப்பய. இதே அவனுக்கு பெயராவும் போய்ட்டு. கருகருவெண்டு உடம்பு தெரிய அரைவாசி மடிச்சி விட்ட முழுக்கை சேட்டும், முகமெல்லாம் பவுடருமா அலைகிற ஒராளை ஊருக்குள் பார்த்தால் அது சூடையாகத்தான் இருக்கும்.
சூடைக்கு கலியாணமும் இல்லை பொண்டாட்டியும் இல்லை. அவன் காதலித்த பெண் இறந்து போனதோடு, அவன் புத்தியும் கொஞ்சம் இப்படியானதாக எல்லோரும் சொல்வதுமுண்டு. அப்படி சொல்லும் கொஞ்சம் வயசான ஆட்களும் அவனை சூட என்று கூப்பிடாமல் பூசா… பூசா… என்றுதான் கூப்பிடுவார்கள். சூடையும் அவர்களுக்கெல்லாம் ஒசில் காட்டிவிட்டு கடந்து போய்க் கொண்டேயிருப்பான். இப்படி அரை மனிதனாவும், அரை அறிவுடனும் திரிகின்ற சூடை ஒன்றை மட்டும் எப்போதும் தவறாமல் செய்வது தான் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும்.
வத்தாளையர், வீட்டுக்குப் பின்புறமாகத்தான் புடவைக்கு குறி போட்றதும், அதை சுண்ணாம்புத்தண்ணியில் சுருக்கிறதுமா இருப்பார். அந்தப் பின்பக்க பனைமட்ட வேலிக்கு குறுக்காக நிற்கிற நாவல் மரத்தடியிலதான் சூடையின் தினசரி சங்கதி ஆரம்பமாகும். நாவல் மரத்தடிக்கு ஒரு பக்கமாக இருக்கிற வெள்ளாவியில புடவை அவிஞ்சாலும் அவியாட்டியும், கமயன் கிழவி வெள்ளாவிக்குள்ள ஊத்தையும் கவுச்சியுமா வடிஞ்சு போய்க்கிடக்குற களம்புத்தண்ணியை வெளிய இறைச்சாலும் இறைக்காட்டியும் சூடை நாவல் மரத்தின் அடுத்த பக்கம் நடத்தும் கூத்து மட்டும் மாறியபாடில்லை.
சூட எப்போது வத்தாளையார் வீட்டு கடப்புல கால் வச்சானோ அன்றைக்கு அவன் கொண்டு வந்தது, மூணே மூணு சொத்துதான். ஒன்று, இரண்டு சேட்டும் மூன்று சாரனும் சுருட்டிக்கட்டுன பொட்டணி, மற்றது சட்டைப்பையில கசங்கி சுருங்கி இருந்த நீலக்கலருல ஒரு பழைய ஐம்பது ரூபா காசு, மற்றது அந்தப் புடவைப்பொட்டணிக்குள்ள இருந்த ஒரு புத்தர் சிலை. இன்றைய தேதி வரைக்கும் அவன் அந்த புத்தரை வணங்குவதை நிறுத்தவேயில்லை. வெள்ளாவிக்கு மறுபக்கம் இருந்த நாவல் மரப்பொந்துக்குள் தான் அந்தப்புத்தர் சிலையை அவன் வைத்தான். இதற்கென்று அவனொன்றும் பௌத்தனும் இல்லை. ஆனாலும் அந்தப் புத்தர் சிலையை அவன் வணங்குவதை நிறுத்தவுமில்லை. தினசரி கொஞ்சம் மல்லிகை, கொஞ்சம் செம்பருத்தி பூவுமாக நாவல் மரத்திற்கு ஆஜராகி விடுவான். ஒரு சந்தணக்குச்சியை கொழுத்தி வைப்பான். வாய்க்குள் ஏதோ முணுமுணுத்தபடியே புத்தம் சரணம் கச்சாமி கச்சாமி கச்சாமி என திரும்பத்திரும்பக் கூறுவான். ஒரு கட்டத்துக்கு மேல் கச்சாமி கச்சாமி கச்சாமி என கச்சாமியை ஏலம் விட ஆரம்பித்துவிடுவான். தினசரி குளியலுக்குப்பின் அவன் செய்கிற இந்தப்புதினம் ஆரம்பத்தில் எல்லோருக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது.
கமயன் கிழவி கூட ‘என்னடா சூட சிங்களச் சாமியை வீட்டுக்குள்ள கொண்டாந்து வச்சிட்டு கூத்து காட்டுறாய்…. அள்ளித்து நடடா… என்று திட்டிக் கூடப் பார்த்தாள். சூட யாருடைய பேச்சையும் சட்டை செய்வதாயில்லை. கிழவி, “அதை உடைக்கிறனா இல்லையா பாரு” எண்டதும் தான் சுருட்டைக்கு கோபம் தலைக்கு மேல் வந்துவிட்டது. “உண்ட வீட்டுலதானே வைக்க கூடாது. பொறு” என்ற சூட, அந்தப் புத்தர் சிலையைத் தூக்கி கமயன் கிழவியின் பொதுவில் நின்ற நாவல் மரத்தின் மறுபக்கமாய் வைத்து விட்டான். அதிலிருந்து கிழவியும் அவனைக் கத்துவதை நிறுத்திக்கொண்டார். இப்போதெல்லாம் சூட அந்தப் புத்தருக்கு முன்னால் குந்திக்கொண்டும், நின்று கொண்டும் எதையோ முணுமுணுத்தபடி கச்சாமியை ஏலம் போடுவதை யாருமே புதினமாகப் பார்ப்பதில்லை.
சூடைக்கும் அந்தப் புத்தர் சிலைக்குமான தொடர்பு அவன் பூசா தடுப்பு முகாமில் இருந்து வந்ததோடு தான் ஆரம்பமானது. அவ்வளவு நாளும் முருகா முருகா என்று அலைந்த சூடையின் வாயில் பூசா தடுப்பு முகாமே கச்சாமியையும் சேர்த்து விட்டது.
1985 ல் ஒரு ஆவணி மாதமளவு இருக்கும். சூட தனது பிறந்த ஊரான பாண்டிருப்பில் இருந்த காலப்பகுதி அது. வழக்கமாக ஒரு பழைய உடைந்து போன கத்தியையும், கணவாய் ஓட்டையும் வைத்துக்கொண்டு சூட கூட்டுப்பெட்டியை கழுவிக் கொண்டிருந்தான். காலகாலமாக ஊத்தை வெளுத்தே பழக்கப்பட்ட பரம்பரை அவன், தூக்கி விடுவதற்கும், படிப்பிப்பதற்கும் அவனுக்கென்று யாருமில்லை. கிட்டத்தட்ட அனாதரவான வாழ்க்கையோடே அவன் வாழ்க்கை காலம் கழிந்து விட்டது. சொந்த தாய்மாமன் வீட்டில் வெளுக்கிறது, புடவை முறுக்கிறது, தோணா வரையும் மாராப்பை தலையில் வைத்து சுமந்து கொண்டு கொடுப்பது, கறுப்பு புடவைகளை அடிச்சுப்புழிஞ்சி கடற்கரை மணலில் விரிப்பது, கூட்டுப் பெட்டி பிடித்து புடவை மடிப்பது என்றே வாழ்ந்து விட்டவன், அன்று காலையிலும் அதே வாடிக்கையில் பொட்டியை கழுவி நடுவில் வலைக்கம்பியை வைத்து, கொஞ்சம் சிரட்டைக்கரியை வைத்து சூடு வைத்தான். பொட்டி காங்கையேறும் கையோடே, ஒரு சூடைக்கருவாட்டை பொட்டிக்கு நடுவில் எரியும் சிரட்டைக்கரிக்குள் சுடுவதற்காக வைத்துவிட்டு, பழைய சோறை கொஞ்சம் தேங்காய்ப்பூ போட்டு பிசைந்து விட்டுக்கொண்டிருந்தான். சின்ன வெங்காயம் ரெண்டை உரித்தெடுத்தவன், பொட்டிக்குள் பாதி சுடுபட்டும், பாதி சுடுபடாமலும் அரைவாசி கருக்கலில் கருவாட்டு மணம் மூக்கை துளைக்கின்ற வாட்டத்தில் சூடைக்கருவாட்டை வெளியே எடுத்து சதை தனியே முள்ளைத்தனியே பிரித்து நாக்கில் வைத்து உறிஞ்சிக் கொண்டே, சோத்துக்குள் தண்ணீர் விட்டு குழைத்துக் கொண்டான். ஒரு பிடி சோறும் ஒரு சின்னவெங்காயமுமாய் கால்வயிறுதான் சாப்பிட்டிருப்பான். தடதடவென இராணுவம் வீட்டுக்குள் புகுந்துவிட்டது.
சிங்களத்தில் ஏதோ கூறிக்கொண்டு “கொட்டி… கொட்டி…” என்று இவனை பிடித்திழுத்து போனார்கள். மேற்சட்டை போடாமல், அவிழ்ந்து விழும் சாரனை ஒரு கையிலும் , சோற்றுக்கோப்பையை மற்றைய கையிலுமாகப் பிடித்த படி சூடை தடுமாறி கீழே விழுந்தான். ஆமி அவனை விடாமல் தரதரவென்று இழுத்துக்கொண்டு போனது. வெளியில் மூக்கு உடைந்த நிலையில் நார் நாராகக் கிழிக்கப்பட்ட புஸ்பம் அக்காவின் மகன் சுந்தரம் அலறிக் கொண்டிருந்தான். “இவன் தான்…. இவன் தான்….” என்று அலறுவதை தவிர சுந்தரம் வேறு எதையும் சொல்லவில்லை. துவக்குப்பிடியால் சூடையின் தலையில் பலமாக ஒரு அடி விழுந்தது. அவனுக்கு அங்கு நடக்கும் யாவுமே மங்கலாய்ப்போனது.
சுந்தரம் , கொஞ்சம் வலுவானவன். பாண்டிருப்பில் இருந்த புளொட் இயக்கப் பெடியனுகளுக்கு அரசியல் வகுப்பெடுப்பது அவன்தான். கல்முனைப் பக்கத்தில் புளொட் இயக்கத்தின் இரண்டாம் மட்ட இணைப்பாளராக அவன்தான் இருந்தான். அந்த நேரம் மட்டக்களப்பு கல்முனைப்பக்கம் இருந்த புளொட் இயக்கத்திடம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒரு இருபது துவக்குத்தான் இருந்தது. அந்த இருபது துவக்குகளில் தரமான ஒரு துவக்கு வைத்திருந்தவன்தான் சுந்தரம். பாண்டிருப்பு கடற்கரை ஆலமரத்தடியில் நடக்கும் புளொட்டின் எல்லாக் கூட்டங்களுக்கும் சுந்தரம் பேச வருவான். அவன் பேசுவதைக் கேட்டாலே போதும் நீயா நானா என்று இளைஞர்கள் புளொட்டில் சேரத்துடிப்பார்கள். நெருக்கமானவர்கள் மட்டுமே அவனை சுந்தரம் என அழைப்பார்கள். வகுப்பிற்கு வரும் மற்ற எல்லோரும் அவனை மாஸ்டர் என்று அழைப்பதே வழக்கம். சூடைக்கும் , சுந்தரத்தின் பேச்சின் மீது அப்படியொரு ஈர்ப்பு இருந்தது. அது என்னவென்று அவனுக்கே தெரியவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல்தான் அது சுந்தரம் வைத்திருக்கின்ற துவக்கின் மீதான ஆசை என்பது சூடைக்கு விளங்கியது. சுந்தரம் வைத்திருக்கின்ற துவக்கில் சுடாவிட்டாலும் பரவாயில்லை அதைத் தூக்கி கையில் வைத்துப் பார்க்க வேண்டும் என்பது சூடைக்கு பெரிய கனவாக இருந்தது. நடக்கின்ற எல்லாக் கூட்டங்களுக்கும் சுந்தரம் துவக்கோடு வருவதில்லை. இலங்கைக்கு அப்போதுதான் சொப்பின் பேக்கு வந்நிருந்த காலம், கூடையில மரக்கறியும், அடம்பன் கொடித்தூக்கில செப்பலி மீனும் , கடதாசி பைக்குள்ள நண்டும், இறாலும் வாங்கித் திரிஞ்ச ஊர்ச்சனமெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சொப்பின் பேக்கிற்கு மாறிப்போனது. சுந்தரமும் ஒரு பெரிய கறுத்த சொப்பின் பேக்குலதான் அந்த துவக்கை சுத்தி சைக்கிள் நடுக்கம்பியில் கட்டி வைத்திருப்பான். ஊருக்குள் குடிச்சிட்டு அழிச்சாட்டியம் பண்ணுறவன், வேலித்தகராறு, பொண்டாட்டிக்கு அடிக்கிறவனெல்லாம் அடங்கிப் போனது சுந்தரம் வச்சிருந்த அந்த ஒற்றைத் துவக்குலதான். ராணியின்ட புருஷன் களுதாவளைக்கு குறுக்கால இறங்கி கள்ளுத்தவறணையில் குடிச்சிட்டு மப்புல ராணிக்கு போட்டு அடி அடியெண்டு அடிச்சுப்போட்டான். அன்றைக்கு இரவே கதை சுந்தரத்துக்கு தெரிய, மாயவலைத்தோணிக்கு போறதுக்கு நிண்ட செம்பன்ட வாய்க்குள்ள துவக்க வச்சிட்டான். அன்றைக்கு நடுங்கிப் போய் மாஸ்டர் என்று கும்பிட்டு மன்றாடி எந்திரிச்சவன்தான் அதுக்குப் பிறகு குடிக்கிறதுமில்லை. ராணியை அடிச்சதுமில்லை. இப்படி அந்த துவக்கிற்கு என்றே தனிக்கதையொன்றும் இருக்கிறது.
அந்த ரவுசு காட்டுன சுந்தரம்தான் சல்லி சல்லியாக நொறுக்கப்பட்டிருந்தான். போதாக்குறைக்கு மூக்கு வேறு உடைக்கப்பட்டிருந்தது. சூடையும் அவனும் இன்னும் இருபது பெடியளும் அன்று நடந்த ரவுண்டப்பில் சிக்கிக் கொண்டனர். களுவாஞ்சிக்குடி கேம்பிற்கு லொறி கிளம்பியது. லொறியில் இருந்த எல்லாமே இளந்தாரிகள். பெரும்பாலும் எல்லோரும் புளொட் கூட்டத்தில் கண்ட முகங்கள். ஓடாவி ராசனையும், அவனது மச்சினனையும் தவிர மற்ற எல்லோருமே ஏதோ ஒருவகையில் புளொட் பயலுகதான். குறைந்தபட்சம் புளொட் இயக்கத்தின் நோட்டீஸாவது பகிர்ந்து திரிந்தவர்கள் தான் அந்த ரவுண்டப்பில் சிக்கியிருந்தார்கள்.
களுவாஞ்சிக்குடி கேம்பில் கிட்டத்தட்ட சூடையோடு பிடிபட்டவர்களுடன் சேர்த்து எண்பது பேர் மட்டில் இருந்தார்கள். படுவான்கரைப்பக்கத்தில் இருந்து ரெண்டு குமருகளையும் பிடித்து வந்திருந்தார்கள். சூடையும் அவனுடன் பிடிபட்டவர்களும் ஒன்றாக ஒரு அறையில் அடைக்கப்பட, சுந்தரத்தை மட்டும் தனியாக அழைத்துச் சென்றனர். அன்று இராத்திரி முழுக்க அவர்களுக்கு தூக்கம் என்பது எட்டாக்கனியாகவே போய்விட்டது. அடுத்த நாள் காலையில்தான் திறந்து விட்டு குளிக்கச் சொன்னார்கள். ஓடாவி ராசனின் மச்சினனுக்கு ஒரு பன்னிரண்டு வயசுதான் அப்போது இருக்கும். அவனது அம்மா பெரிய மாத்தையாவின் காலில் விழுந்து அழுது புலம்பி வடிக்கவே அந்தாளுக்கு மனசு இரக்கப்பட்டு போயிருக்கணும். அடுத்த நாள் மதியமே அவனை மட்டும் விட்டு விட்டார்கள். மற்ற யாரையும் விடவுமில்லை விசாரணையுமில்லை. ஒரு குட்டி அறைக்குள் சுவரில் ஒட்டிய பல்லிகளைப் போல சூடையும் மற்றவர்களும் ஒட்டிக் கொண்டிருந்தார்கள். அந்தக் கேம்பில் பொலீசும் ஒரு பக்கத்தில் இருந்தது. ஒரேயொரு தமிழ் அண்ணன் மட்டுமே வேலை செய்து கொண்டிருந்தார். அந்தாள் முகம் காட்டுவதுமில்லை. ரவுண்டப்பில் பிடிபட்டவர்களோடு கதைப்பதுமில்லை. இப்படியாக ரெண்டு நாட்கள் ஓடியது. நான்காம் நாள் பின்னேரம் தான் ஒரு கிழட்டு போலீஸ் இவர்களது அறையை எட்டிப்பார்த்துவிட்டு, “சென்றி வெளியாக்கோணும் வா…” என்று சூடையையும் இன்னும் ஒரு பத்து பேரையும் கைகாட்டி அழைத்துச்சென்றார். அந்தக் கேம்பில் அப்போது அதிகமான குட்டி குட்டி சென்றிகள் உள்ளே அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது. தெற்கு மூலையில் இருந்த சென்றி கொஞ்சம் பழையதாக, முட்டுக்கு வைத்திருந்த பனைமரக்கட்டைகளெல்லாம் இறந்து போய் இருந்தது. அதையெல்லாம் தூக்கி அந்த மூலையில் அடுக்குங்க… என்றவாறு கிழட்டுப்போலீஸ் வெற்றிலையை பாதி கிழித்து போயிலையை பல்லுக்குள் வைத்து தேய்த்துக் கொண்டான்.
“டேய்… அங்கிட்டு போயிடாதீங்க… இதுக்குள்ளே நிண்டு வேலையை முடிங்க” என்று விட்டு கிழட்டு போலீஸ் போய்விட்டான். சூடை , கனகரத்தினம், ரவி, குணம் எல்லோரும் ஒவ்வொரு இறந்த கட்டையாக உருட்டி எடுத்து தோளில் தூக்கிக் கொண்டு கிழக்குப் பக்கமாக நடக்கத் தொடங்கினார்கள். ஒரு பத்துக்கட்டையை தான் தூக்கியிருப்பார்கள்.
சூடை கனகரத்திடம் கேட்டான்.
“டேய் ஒருவனும் இல்லை. இப்பிடியே கடற்கரை பக்கம் இறங்கி ஓடிருவமா….”
“பைத்தியமா உனக்கு அங்க பாரு கம்பி வேலி கட்டியிருக்கான். தாண்டுறதுக்கிடையில சுட்டுருவான்.”
“ஒருவரும் இல்லையேடா….. தப்பிருவம் இதுதான் வாய்ப்பு….”
“லூசு கதை கதைக்காதடா…. நம்ம ஓடினா மட்டும் விட்டுருவானா… திரும்ப தேடி வருவான். சிக்குனயெண்டா மவனே வெடிதான். போதாக்குறைக்கு இவனுகளையும் சுட்டுருவான்… வாய மூடித்து கட்டைய தூக்கு” என்றான் கனகரத்தினம்.
சூடைக்கும் அது சரியாகத்தான் பட்டது. தப்பியும் எங்க போறது. அடுத்த நாளே பிடிச்சிருவான். துவக்குப்பிடியால் தலையில் விழுந்த அடியை சூடை இன்னும் மறக்கவில்லை. ஆனாலும் அந்த நொச்சி மரத்துக்கு அங்கால என்னதான் இருக்கிறது என்றாவது பார்த்துவிட வேண்டும் என சூட முடிவெடுத்து விட்டான். கிழட்டுப் போலீஸ்காரன் வருவதற்கிடையில் ஓடிப்போய் வழித்தடம் பார்த்து விட்டாவது வந்துவிட வேண்டும். நாளைக்கு தப்பிக்கிற என்றாலும்கூட உதவியாக இருக்கும் என்று அவனை அவனே உந்திக்கொண்டான்.
சாரனை இறுக்கிக் கட்டிக் கொண்டு அந்த மேட்டுப்பக்கமாக நொச்சி மரங்களுக்குக்கூடாக சூட நடக்கத் தொடங்கினான். அங்கேயும் ஒரு பழைய சென்றி உடைந்து கிடந்தது. குப்பை கொட்டுவதற்காக ஒரு கிடங்கு வெட்டி வைத்திருந்தார்கள். அங்கு தான் சூடை அதைப் பார்த்தான். கிட்டத்தட்ட அலறியே விட்டான். திரும்பிப் பார்க்காமல் சாரனை மடித்துக்கட்டி மூச்சிரைக்க ஓடிவந்து விட்டான். நெஞ்சு திக் திக்கென அடித்துக் கொண்டது. சட்டையெல்லாம் நொச்சி மரத்துக்கிடையில் பின்னியிருந்த சிலந்தி வலைகள். கழுத்தால் வியர்வை வடிய பேயைக்கண்டவன் போல ஓடி வந்தான் சூடை. அவனுக்குள் படபடப்பு இன்னும் நிற்கவில்லை. நா வறண்டு போவதாக இருந்தது. அவன் கண்ட காட்சியை அவன் கண்களாலேயே நம்பமுடியவில்லை.
தன்னோடு பிடிக்கப்பட்ட சுந்தரம் பாதி எரிந்த பிணமாக குந்திக்கொண்டிருந்த காட்சி அது. தன்னுடைய சிறுபராயம் முதலே ஊருக்குள் கதாநாயகனாக வலம் வந்த சுந்தரத்தின் கைகளையும் கால்களையும் முட்கம்பியால் இறுக்கி கட்டி நொச்சி மரத்தோடு பிணைத்து எரித்து வைத்திருந்தார்கள். பழைய டிராக்டர் டயர்களை கழுத்துக்குள் வைத்து எரிக்கப்பட்ட சுந்தரத்தின் சடலம் பாதிமுகம் எரிந்திருக்க கண்களின் துவாரம் வழியே வெறித்துப்பார்ப்பது போல நிர்வாணமாக எரியாத கால்களும் எரிந்த தேகமுமாக இருந்ததை சூடையால் ஜீரணிக்க முடியவில்லை. எங்கேயோ குண்டடியிலோ , க்ளைமோரிலோ சுந்தரம் இறந்துவிட்டான் என்று யாராவது சொல்லியிருந்தால் நம்பியிருக்கலாம், ஆனால் அவனுக்கு இப்படியொரு சாவு இருக்கும் என்பதை சூடையோ, அவனோடு அன்று வந்தவர்களோ எதிர்பார்க்கவில்லை. மீண்டும் தூக்கமில்லாத ராத்திரியாகவே அன்றைய ராத்திரியும் கடந்து போனது. களுவாஞ்சிக்குடி கேம்பில் அடைக்கப்பட்டு ஒரு வாரமாகியும் எந்தப் பதிலும் இல்லை. அன்றைய இராத்திரிப் பயணம் தான் சூடையின் வாழ்க்கையை மாற்றப் போகிறது என்பது அப்போது சூடைக்கு கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அன்று இரவு அரைறாத்தல் பஸ் ஒன்று வந்தது. அப்போது இலங்கையில் அந்த குட்டிப் பேருந்துகள் தான் ஓடிக்கொண்டிருந்தது. அது அரை றாத்தல் பாணை போல இருப்பதால் ஊரில் எல்லோரும் அதை அரை றாத்தல் பஸ் என்றே அழைப்பார்கள். அப்படியொரு பஸ்ஸில்தான் எல்லோரையும் ஏற்றினார்கள். ஒரு நாற்பது பேர் ஏறக்கூடிய பஸ்ஸில் அன்று, அதற்கடுத்த நாளென பிடிக்கப்பட்ட எழுபது பேரை ஏற்றி விட்டார்கள். பாதிபேர் சீட்டுக்களில் முடங்கிக் கொண்டும், பாதி பேர் சீட்டுகளுக்கிடையில் தரையில் முட்டிக்கொண்டும் குந்தியிருக்க அரைறாத்தல் பஸ்ஸின் கதவின் படிக்கட்டில் துவக்குகளுடன் இரண்டு ஆமிக்காரர்களையும் ஏற்றி விட்டார்கள். பஸ் என்ஜின் ஒரு உலுப்பலுடன் கிளம்பத் தொடங்கியது. அது குலுங்கி நகர நகர களைப்பு மிகுதியில் சுருண்டு கிடந்த ஒவ்வொருவரும் மெது மெதுவாக கண்களை மூடிக்கொள்ள சூடையும் நித்திரையாகிப்போனான்.
பொழுது மெல்ல மெல்ல விடிந்து கொண்டிருந்தது. பேரூந்து நின்ற பாடில்லை. இன்னமும் ஓட்டத்திலேயே இருந்தது. மூத்திரம் பெய்யக்கூட யாரையும் இறக்கிவிடவில்லை. வாயைத் திறந்து கேட்பதற்கும் பயமாக இருந்தது. சூடைக்கு சாரனில் ஒழுகுவது போல இருந்தது. கொஞ்சம் இறுக்கி அடக்கி வைத்திருந்தான். கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் காடுகளே தெரிந்தது. சனநடமாட்டம் என்று எதுவுமில்லாத வெட்டாரங் காட்டுப்பிரதேசம். நேற்று இரவு நல்ல மழை பெய்திருக்க வேண்டும் ரோட்டெல்லாம் ஈரலிப்பாக இருந்தது. திடீரென பஸ் ஒரு பள்ளத்தாக்கில் இறங்கத் தொடங்கி விட்டது. மேட்டிலிருந்து உரலை யாரோ பள்ளத்துக்குள் உருட்டி விட்ட கணக்காக பஸ் உருளத்தொடங்கி விட்டது. தூரத்தில் ஒரு ஆமி கேம்ப் தெரிகிறது. பஸ்ஸின் சீட்டிலிருந்து கொட்டக்கொட்ட விழிப்பவர்கள் அதையே பார்த்துக் கொண்டிருக்க பஸ் தன்பாட்டுக்கு கிறவல் ரோட்டுக்குள் இறங்கி இடது பக்கமாக ஓடத் தொடங்கியது. கொஞ்ச நேரத்துக்கெல்லாம் முள்ளுக்கம்பி வேலி ஒன்றுக்குள்ளால் பஸ் நுழைய ஒரு கட்டிடத்தின் முன்னால் போய் நின்றது.
“பஹின்ன பஹின்ன” என பஸ் கடப்பில் நின்ற ஆமிக்காரன் கத்தத் தொடங்கி விட்டான். எல்லோரையும் கீழே இறங்கி குந்தச் சொன்னான். அவன் எதுவும் சொல்லாமல் துவக்கு முனையிலேயே எல்லா சைகைகளையும் காட்டிக் கொண்டிருந்தான். சூடையும் கூட்டத்தில் ஒருவனாக நடுங்கிய படி குந்திக்கொண்டான். இரண்டு ஆமிக்காரர்கள் ஒரு மேசையும், இரண்டு கதிரையும் தூக்கி வந்து முன்னே போட்டார்கள். கொஞ்ச நேரத்தில் ஒரு ஆமிக்காரன் ஒரு கட்டுப் பைலோடு வந்தான். பார்க்க கொஞ்சம் நோஞ்சான் போலத்தான் இருந்தான். இவனையெல்லாம் ஆமியில் எப்படி சேர்த்தார்கள் என்பது போல இருந்து அவன் தோற்றம். பாதி நரைத்த தலையுடனும், ஒரு தண்ணீர் போத்தலுடனும் அவன் வந்திருந்தான். இலங்கைக்கு சொப்பின் பேக், லீற்றர் தண்ணீர் போத்தலெல்லாம் அப்போது தான் வந்திருந்தது. ஆமி கேம்பில் நிறைய தண்ணீர் போத்தல்கள் கக்கூஸ் பக்கத்தில் கிடந்தன. அப்படியொரு தண்ணீர் போத்தலில் தான் அவன் தண்ணீர் கொண்டு வந்தான்.
“ம்….. ம்ரூம்…” என தொண்டையை செருமியவன். முன்னால் இருந்தவனை அழைத்து ‘நம கியன்ன… ‘ என்றுவிட்டு நாடியை சொறிந்து கொண்டான். போனவன் முழித்த முழிப்பில் பின்னர் எதையோ கண்டறிந்தவன் போல கொச்சையாக பேர் எந்தா…. என்றான். இப்படியாக ஒவ்வொரு கேள்விகளையும் அவன் வரிசையில் கேட்டு ஒரு காகிதத்தில் எழுதிக் கொண்டான். மேசை எடுத்து வந்து போட்ட ஆமிகளில் ஒருவன் பத்து விரலிலும் மையைத் தடவி இன்னுமொரு காகிதத்தில் ரேகை பதிந்து கொண்டான்.
சூடையின் வழக்கம் வர அவனும் மெல்ல எழும்பி நடந்தான். சாரன் ஈரமாகியிருந்தது. “பேர் எந்தா…” என்றான். இவன் சூட என்றான். “சூரியா?” என்று கேட்க இவன், “இல்ல…. இல்ல… சூட” என்றான். எழுதியவன் இவனை மேலும் கீழும் பார்த்துவிட்டு பக்கத்தில் நின்ற ஆமியிடம் ஏதோ முணுமுணுத்தான். அவன் துவக்கை திருப்பிக் கொண்டு சூடைக்கு பக்கத்தில் வந்தான். சூடைக்கு மீதி மூத்திரமும் பிய்த்துக்கொண்டு வந்தது. கிட்ட வந்த ஆமிக்காரன். “அடோ…. கெரி பள்ளா….” என்று திட்டிவிட்டு அறையக் கை ஓங்கவே சூடை நிலத்தில் குந்திக் கொண்டு அழுதுவிட்டான். கோபத்தில் வந்த ஆமிக்காரன் பூட்ஸ் காலால் ரெண்டு மிதி மிதித்து விட்டு இன்னுமொருவனை பார்க்க அந்த ஆமிக்காரன் அருகே இருந்த அறைக்குள் போய் ஒரு உர பேக்கை எடுத்து வந்து முன்னால் கொட்டினான். பூட்ஸ் காலால் மிதித்த ஆமிக்காரன் அதற்குள் இருந்து ஒரு யானைப்படம் போட்ட சாரனை துவக்கு முனையால் எடுத்து இவனை நோக்கி வீசினான். குளறிக் கொண்டே அதை எடுத்துக் கொண்டான் சூட. பின்னர் சூடையின் கைரேகையையும் பதித்து விட்டு ஆளுக்கு ஒரு சோடி உடுப்பும் கொடுத்து பக்கடிக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே பெரிய தொட்டிகள் நீளமாக கட்டப்பட்டிருந்தன ஏற்கனவே சிலர் குளித்துக் கொண்டுமிருந்தனர்.
அப்போது தான் தெரிந்தது வடக்கு, கிழக்கு எல்லாமுமாக சேர்த்து கிட்டத்தட்ட மூவாயிரம் பேரை பிடித்து வந்திருந்தார்கள். அன்றைய நாள் மட்டுமே நானூறு ஆட்களுக்கு மேல் பிடித்து வந்திருந்தார்கள். இயக்கங்களோடு நேரடித் தொடர்பிலிருந்தவர்கள் எனச் சந்தேகித்தவர்களை தனித்தனியே கம்பி போட்ட அறைக்குள் அடைத்து வைத்தனர். சூடை, கனகரத்தினம் எல்லோரையும் ஒரு பெரிய கம்பிக்கூண்டு அறைக்குள்ளே மொத்தமாக அடைத்து வைத்திருந்தார்கள். அதில் இருபத்தியொரு பெண்களும் அடக்கம். இதே போல மேற்குப்பக்கமாக இருந்த கம்பி அறைகளுக்குள்ளும் ஆட்கள். சுற்றி வர கம்பி வேலியும் காடுகளும் மட்டுமே தெரிகிறது. ஒரு பக்கம் மதிலும் கட்டியிருந்தார்கள். கொஞ்சம் சோறையும் பருப்புக்கறியையும், வாழைக்குடல் குழம்பையும் தட்டுக்களில் கொடுத்து பின்னேரம் நான்கு மணிக்கெல்லாம் கூண்டு அடைக்கப்பட்டு விட்டது. இனி அடுத்த நாள் தான் திறப்பார்களாம். இரவில் மூத்திரம், கக்கூசு வந்தால் என்ன செய்வதாம்? நீர்த்தொட்டிகளில் அருகில் கிடந்த இறப்பர் போத்தலையும் , கிடங்கில் கிடந்த பழைய சொப்பின் பேக்குகளையும் ஆபத்திற்கு பாவமில்லை என்று எடுத்து வைத்திருந்தார்கள்.
பெரிய மழையில் வெள்ளாவி உடைந்து போய்விட்டது. சூடையின் மாமா அவனை கத்திக்கொண்டிருக்கிறார். வெள்ளாவியை திருப்பிக் கட்ட வேண்டும். மழையிலிருந்து பாதுகாத்து வைக்க வெள்ளாவியின் மேல் கிடுகுகளை அடுக்கி பாரமேற்றி வைத்திருந்தான் சூட. அந்த மார்கழி மாதத்து அடை மழையில் காற்று சுழன்றடிக்க பேய்மழை பெய்து கொண்டிருக்கிறது. அடிக்கிற வாடை மழைக்கு குடியிருக்கிற வீட்டின் கூரையே பறந்து விடும் போல இருக்கின்ற நிலமையில் இந்த களிமண் கட்டு வெள்ளாவி உடையாதா என்ன…. சொணவாய்ப்பக்கத்தால் வடிந்து போன மழைத்தண்ணீர் ஒரு பக்க வெள்ளாவியையே உடைத்து தரை மட்டமாக்கி விட்டது. மாமாவின் கத்தலில் அதிர்ந்து போனவன் களிக்கிண்டி வருவதற்காக தோணாப் பக்கமாக நடந்து போனான். அப்போது தான் சுந்தரம் அவனது சைக்கிளில் வந்து கொண்டிருந்தான். அடிக்கிற மழையில் துவக்கு நனையாமல் இருக்க இன்னுமொரு சொப்பின் பேக்கால் அதை இறுகக் கட்டியிருக்கிறான். டேய் சூட இங்க வா என அவனைக் கூப்பிட்டு துவக்கை எடுத்து அவன் கைகளில் திணித்தான். சூடையும் அந்த துவக்கை சந்தோஷமாக கைகளில் வாங்கிக் கொண்டு தூரத்தில் இருக்கிற மரத்தை குறிவைக்கிறான்….
டுமீல்…. டப்… டப்…
சூடை தூக்கத்திலிருந்து அலறியடித்துக் கொண்டு எழும்புகிறான். அவன் கண்டது கனவுதான் ஆனால் அந்தச் சத்தம் கனவில்லை. அறைக்குள் ஒருக்களித்து படுத்திருந்த அனைவரையும் பயம் கவ்விக்கொண்டது. பூசாவின் மதிற்பக்கமாகவே அந்த துப்பாக்கிச் சத்தம் கேட்டது. அன்று இரவு யாருமே தூங்கவில்லை. சூடையும் கூடவே கோட்டான் போல விழித்துக்கொண்டிருந்தான்.
இப்படியாக இரவுகள் அவனை அலைக்கழித்துக் கொண்டிருந்தது. கண்ணை மூடினால் மாமா திட்டுவதாகவும், செத்துப் போன சுந்தரம் அதே எரிந்து போன உடலுடன் இவனை நோக்கி துப்பாக்கியால் சுடுவது போலவும், ஆமிக்காரர்கள் இவனது ஆண்குறியை வெட்டி எடுப்பது போலவும், அந்தக் காட்டுக்குள் இவனை யானை துரத்துவது போலவும் தினமும் அவன் ஏதோ ஒரு பயங்கரமான கனவினால் அவதியுற்றுக் கொண்டிருந்தான். காலைச் சாப்பாட்டிற்காக கொடுக்கப்படும் கால் றாத்தால் பாண் இவனுக்கு கொஞ்சமும் போதவில்லை. இவனுக்கு மட்டுமில்லை அங்கிருந்த பலருக்கு அது போதாமலே இருந்தது. சிலவேளை இவர்களுக்கு கௌபியும் கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு அரை வயிற்றோடே காலம் தள்ள வேண்டிய நிலை உருவாயிற்று. ஆனால் அங்கு வேலைகள் மட்டும் பெரிது பெரிதாக இருந்தது.
அப்போதுதான் சூடை அங்கிருந்த அரசமரத்தையும் புத்த பகவானையும் பார்த்தான். ஒரு பெரிய சமாதி நிலைப் புத்தரின் கீழே குட்டிக் குட்டியாக அநேக புத்தர் சிலைகளால் அந்த இடம் நிறைந்திருந்தது. அங்கிருந்த ஆமிக்காரர்களெல்லாம் பூட்ஸ்களை கழற்றி வைத்து விட்டு தினமும் அந்த சிலைகளை வணங்குவதை சூட கவனித்தான். இதுதான் சிங்களச் சாமி இதைத்தான் இவர்கள் கும்பிடுகிறார்கள் என அவன் தெரிந்து கொண்டான். காலையிலும், மாலையிலும் , சோறு சாப்பிடும் போதும், குளிக்கும் போதும், ஏன் பீ பேலப்போகும் போது கூட அவர் அந்த பெரிய புத்தர் சிலையையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த பிரமாண்டமான புத்தரின் வதனத்தில் குடி கொண்டிருக்கும் ஒரு விதமான அமைதி சூடையையும் கவ்விக் கொண்டது. சூட தானும் அமைதியாவதாக உணர்ந்து கொண்டான். சிங்களவர்கள், “புத்தம் சரணம் கச்சாமி தர்மம் சங்கம் கச்சாமி” என முணுமுணுத்து வழிபடுவதை அவன் உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கினான். அவனது இஷ்ட தெய்வம் முருகனைத்தான் இவர்கள் கச்சாமி என்று வழிபடுகிறார்கள் என அவனுக்கு அவனே கூறிக்கொண்டான். கோவணக் கச்சையோடு இருப்பது பழனி மலை முருகன்தானே. இந்தக் கச்சாமி; முருகன்தான் என சூடை எண்ணிக்கொண்டான். அடுத்த நாளில் இருந்து சூட அவனையறியாமலேயே புத்தபகவானை வணங்கத் தொடங்கி விட்டான். கச்சாமி கச்சாமி என வழிபடத்தொடங்கியவன். எதையோ முணுமுணுப்பதை மட்டும் வழக்கமாக வைத்திருந்தான்.
சூட புத்தபகவானை வழிபடத் தொடங்கிய காலம் முதலேயே அவனுக்குள் பெரும் மாற்றம் நிகழ்வதாக இருந்தது. இப்போதெல்லாம் அவனுக்கு பயங்கர கனவுகளே வருவதில்லை. எரிந்தெரிந்து விழுந்த ஆமிக்காரர்களும் அவனது செயலைக்கண்டு அன்போடு பழகுகிறார்கள். கூட இருந்தவர்களும் சூடையை ஏதோ சாமியார் போல பார்க்கத் தொடங்கி விட்டார்கள். இப்போதெல்லாம் அறைக்குள் அவனை யாரும் சூட என்றே அழைப்பதில்லை. மாறாக சாமி சாமி என்றே அழைக்கத் தொடங்கி விட்டார்கள். சூடையின் நடத்தையிலும் அப்படியானதொரு மாற்றமே காணப்பட்டது. திடீரென ஆகாயத்தை பார்த்தபடி நீண்ட நேரம் அமர்ந்து விடுகிறான். கண்களை மூடிக்கொண்டு தனது முணுமுணுத்தலை தொடங்கி விடுகிறான். ஆமிக்காரர்களை பார்த்து அன்போடு தலையில் தடவுகிறான். அவர்களும் இவனிடத்தில் குழைகிறார்கள். சூடை ஒரு ஜென் துறவியை போல மாறியிருந்தான். கச்சாமி கச்சாமி என்ற சொல் மட்டும் அவனது காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
இப்படியாக ஒரு எட்டுமாத காலம் உருண்டோடி விட்ட நிலையில், பூசாவிற்கு புதிதாக வந்த பொறுப்பாளர் இவர்களை காண வந்தார். அவர் சூடையின் தோற்றத்தையும், அவன் புத்தருக்கு முன்னால் இருந்து கொண்டு தியானம் செய்வது போன்று கண்களை மூடியிருப்பதையும் கண்டுவிட்டு அவனுக்குள் ஏதோ ஒரு சக்தி இருப்பதாகவே கருதிவிட்டார். சூடையைப் பற்றி விசாரிக்கத் தொடங்கியவர் அவரது பார்வை தெரியாத மகளோடு சூடையைத் தேடி வந்தார். சூடைக்கு அவர் பேசுவது எதுவுமே புரியவில்லை ஆனாலும் அந்தப் பெண் குழந்தையின் தலையில் கையை வைத்து ஆசிர்வதித்தான். சூடையை பார்த்து என்ன வேணும் எனச் சைகையில் கேட்டார். அவன் அரை றாத்தல் பாண் என்றான். அன்று முதல் பூசாவில் எல்லோருக்கும் காலைச் சாப்பாடாக அரை றாத்தல் பாண் கிடைத்தது. எப்படியோ இப்படித்தான் சூடை எல்லோரையும் வசியம் பண்ணியிருந்தான்.
நாட்கள் நகருகையில் சூடை இருந்த கட்டிடக் கூண்டிற்கு இன்னும் கொஞ்சப்பேரை கொண்டு வந்து சேர்த்தனர். அதில் பாலு என்கிறவன் சூடைக்கு ரொம்ப நெருக்கமாகிப் போனான். பாலு வாகரைப்பொடியன். திறமையான பாட்டுக்காரன். கண நேரத்தில் அவனாக பாட்டுக்கட்டி இசைபோட்டு பாட ஆரம்பித்து விடுவான். எல்லா இராத்திரிகளிலும் ஏதோ ஒரு புதுப்பாட்டும் , சில சினிமாப் பாட்டுக்களையும் பாலு பாடிக்கொண்டே இருப்பான். சூடைக்கும் அவனது குரலில் ஒரு ஈர்ப்பு இருந்தது. கம்பிகளில் தட்டிக்கொண்டும் , சாப்பாட்டு தட்டுகளில் விரலால் சத்தம் எழுப்பியவாறும் அவன் பாடும் பாடல்கள் எல்லாம் தாய் மண்ணை பற்றிய கனவுப் பாடல்களாகவே இருக்கும்.
“எங்களுக்கு என்று ஒரு பூமியில்லையே
இங்கு ஏர் உழவும் சால் விடவும் யாருமில்லையே
தென்றல் வந்து தீண்டும் நேரம் பூக்கள் இல்லையே
இத்தீவில் துண்டு நிலமில்லாமல் சாவதில்லையே……
தாயகமே தாயகமே எங்கிருக்கிறாய்
என் தாய்மடியே பூங்கொடியே எங்கிருக்கிறாய்
ஆசைகளைத் துறந்து நீயும் ஏன் இருக்கிறாய்
இப் பூசாவின் கூட்டுக்குள்ளே ஏன் தவிக்கிறாய்…
தன்னே தன்னே… தானே… தன்னே… தானனானனா….
தானே… தன்னே… தானே… தன்னா தானனானனா…”
என பாலு பாடும் ஒவ்வொரு பாடல்களும் தாயகத்தின் விடுதலைக்காக, “போராடப் போவோம் வா இளைஞனே” என்பது போலவே இருக்கும். இப்படியாக இன்னும் சில மாதங்கள் உருண்டு போய்விட்ட நிலையில் காலி பூசாவில் இருப்பவர்களை உறவினர்கள் பார்க்கலாம் என்கிற அறிவிப்பு அரசிடம் இருந்து வெளியாகியது. இவ் அறிவிப்பு வெளியாகிய ஒரு வாரமளவில் சூடையின் மாமா அவனைப் பார்க்கவென்று பூசாவிற்கு வந்திருந்தார்.
சூடையின் மாமாவை ஒரு கம்பி வேலிக்கு அந்தப்பக்கமாக நிறுத்தி வைத்திருந்தார்கள். அவரால் நம்பவே முடியவில்லை. சூடையின் நடையிலேயே அவ்வளவு மாறுபாடு தெரிந்தது. அவன் கண்கள் வானத்திற்குள் எதையோ தேடுவதை போல குத்திட்டு நின்றது. அந்தக் கண்களில் தெரிகின்ற ஒரு விதமான பிரகாசம், தான் தூக்கி வளர்த்த சூடையிடம் இருந்ததில்லை என்பதை அவர் உணர்ந்து கொண்டார். அவனது சிறுவயதில், அந்த தோணாவிற்குள் மீந்து போன சவ்வரிசிக் கஞ்சிப்பானையை அமிழ்த்தி வைத்து அதற்குள் குதிக்கின்ற கெளுத்தி மீன்களை பிடிக்கும் போது இல்லாத பரவசம் இப்போது அவன் முகத்தில் இருக்கிறது. வண்ணாரத்துறையில் நெடுசாக வளர்ந்திருக்கிற நாணற்புற்களினூடாக ஓடும் கூவாக் கோழிகளை துரத்தி துரத்தி பிடிக்கும் போது அடையாத சந்தோஷ முகத்தை அவன் அடைந்திருக்கிறான். இப்படியொரு கொடுமையான வாழ்க்கையில் இருந்து கொண்டும் அவன் எப்படி சிரித்துக் கொண்டிருக்கிறான். சில வேளைகளில் துன்பம் அதிகமாக அழுத்த அழுத்த சூடை ஞானியாகி விட்டானா! இல்லை பைத்தியமாகி விட்டானா? என்கிற கேள்விகளில் நிரம்பிய பார்வையிலே அவனை குடைந்து கொண்டிருந்தார் சூடையின் மாமா.
“சூட… எப்பிடியிருக்க….?”
………
“நல்லாயிருக்கியா?”
………
“எவ்வளவு தூரம் அலைஞ்சு திரிஞ்சு உன்னப் பார்க்க வந்தன். பேசன்டா சூட… டேய்… எதுவும் பிரச்சினையா….?”
………
ஆம், சூடைக்கு பைத்தியம் பிடித்து விட்டது. அவனது நடத்தைகளில் சந்தேக ரேகை பார்த்தவர் சூடைக்கு தலை பழுது என்கிற முடிவை அவராகவே எடுத்துக் கொண்டார். “டேய் சூட செல்வம் இத்தாலி போய் சேர்ந்துட்டான். கள்ளக்களவுலதான் போட்டுல போனவன். எப்பிடியோ மாட்டிராம போய்ச்சேர்ந்துட்டானடா…. நாங்களும் குடும்பத்தோட போக வெளிக்கிட்டம். உன்ன நினைக்கதான் கவலையா இருக்குது. இதெல்லாம் நடக்குமெண்டு நான் கனவுலையும் நினைக்கலடா….”
“அடேய்… களம்புத்தண்ணி நாயே… சொல்றது விளங்குதாடா…. பைத்தியமாவே போயிட்டியா…. நாங்க இன்னும் கொஞ்ச நாளில சுவிஷோ, பிரான்ஸோ போகப்போறம். அந்தப் பெரியவர் பெரியதம்பிரானும், பேச்சித் தாயாரும் தான் உன்னை காப்பாத்தணும். உன்ன விடுற மாதிரி இல்ல சூட. பார்த்து இருந்துக்கடா…..”
………………
என்னதான் சூடை அடிமாடு மாதிரி அவரிடம் கிடந்தாலும் மருமகன் என்கிற பாசம் எங்கேயோ அவரின் அடிமனதில் இருக்கத்தான் செய்தது. சூடை எதையும் கொண்டு வர விடல. இந்தாடா என்று அவர் மறைத்து வைத்திருந்த ஒரு கட்டு கோயாபீடியை மட்டும் கம்பி வேலிக்குள்ளால் நீட்ட அதை பறிப்பது போல வாங்கிக் கொண்டான் சூட.
சூடையும், அரசமரமும், புத்தரும் இந்த மூன்றுமாக சூடையின் வாழ்க்கை கழிந்து கொண்டிருந்தது. பூசாவிற்கு இன்னுமொரு பொறுப்பாளர் வந்தார். தேவாங்கு போல முகத்தை வைத்துக் கொண்டு அடிக்கடி வேலை வாங்கத் தொடங்கி விட்டார். மீண்டும் அரை இறாத்தல் பாண் கால் இறாத்தல் ஆகியது. சூடைக்கு மீண்டும் புத்தி கிறுகியது. இப்படி இருந்த நிலையில் இரண்டு வருடங்கள் அவ்வளவு வேகமாக உருண்டோடி விட்டது.
அந்தக் காலப் பகுதியிலேயே இந்தியாவின் பிரதமர் ராஜிவ் காந்திக்கும் – ஜே ஆர் ஜெயவர்த்தனேக்கும் இடையில் நடந்த ஒப்பந்தத்தின் மூலம் பகுதி பகுதியாக பூசாவில் இருப்பவர்களை விடுவிப்பது என்கிற முடிவிற்கு அரசாங்கம் தலைப்பட்டது. இரண்டாம் கட்டத்திலேயே சூடையும் வெளியாகி ஊருக்கு வந்தான். மாமா அங்கில்லை. வீட்டில் வேறு யாரோ இருந்தார்கள். ஊரில் தங்கவும் அவனுக்குப் பிடிக்கவில்லை. பூசாவின் அரசமரத்தடியில் இருந்து எடுத்து வந்த புத்தர் சிலையோடு நடக்கத் தொடங்கியவன் வத்தாளையரின் வீட்டுக் கடப்பில் கால் வைத்தான்.
அன்று ஊரில் பிரச்சனை வெடிக்கத் தொடங்கி விட்டது. ஊரின் இளந்தாரிகளெல்லாம் சாரனை மடித்துக் கட்டிக் கொண்டு போலீசாரோடு முண்டு பிடித்துக் கொண்டிருந்தனர். மட்டக்களப்பு சுதானந்த தேரரும் அவரது கோஷ்டியும் ஊர்வலமாகக் கிளம்பி வந்தனர். ஊரின் வடக்கு எல்லையில் காலம் காலமாக வழிப் பிள்ளையார் கோவில் இருந்த இடத்தில் புத்தர் சிலையை வைப்பதற்கான முயற்சி அது. ஊரே திரண்டு வழிந்தது. இரு பக்கத்தினரையும் தடுத்து நிறுத்த முடியாமல் போலீஸ் திண்டாடிக் கொண்டிருக்க, வேகமாக விசேட அதிரடிப் படையும் குவிக்கப்பட்டது.
“காலா காலமாக தமிழ் ஆட்கள் நாங்க மட்டும்தானே இருக்கம். இங்க யாரு சிங்களவன் இருக்கான். எதுக்கு இப்போ இங்க புத்தர் சிலை….”
“இப்போ புத்தரை தூக்கிட்டு வருவாங்க… பிறகு நாலு சிங்களக் குடும்பத்தையும் குடியேற்றி விடுவாங்க…”
“போற போக்கப் பார்த்தா… நம்மட குளத்தை நிரப்பிட்டு, வண்ணாரத்துறையையும் எங்கடது என்று உறுதி முடிச்சாலும் கேட்க ஆளில்லை…”
புத்தர் சிலையை வைக்கக்கூடாது என்று ஆளுக்கொரு பக்கமாக கத்திக் கொண்டிக்க….
சூடையும் அங்கு வந்து சேர்ந்தான்.
“கோர்ட் உத்தரவு இருக்கு. இந்த ஊர்வலத்துக்கே அனுமதியில்லை. யாரை கேட்டு புத்தரை கொண்டு வாறயல்……” கோவில் பூசாரி வெடிக்க, ஊரே உள்ளுக்குள் பற்றி எரிந்து கொண்டிருந்தது.
சூட மட்டும் ஓடிச் சென்று நாவல் மரப்பொந்திற்குள் இருந்த புத்தரை பார்த்தான். அந்தச் சிரிப்பு மாறாமல் அவர் அப்படியே இருந்தார். அதே சாந்தம் அவரது முகத்தில் குடி கொண்டிருந்து. அவசர அவசரமாக அந்தப் புத்தர் சிலையை துடைத்தான். அதை எடுத்துக் கொண்டு இவ்வளவு நாளும் பிள்ளையார் இருந்த அரசமரத்தடிக்கு வந்தான். பிள்ளையாருக்கு பக்கத்தில் புத்தரை வைத்துவிட்டு சூடை எல்லோரையும் பார்த்தான்.
கூட்டத்தின் ஒருபக்கத்தில் விசித்திரமான பார்வையும் , மறுபக்கத்தில் கோபக்கனலுமாக அடங்கிப்போனது.
சூட ஒரு சந்தணக்குச்சியை கொழுத்தினான். கண்களை மூடினான்…..
“என்னை எப்பிடியாவது தப்பிக்க வச்சிரு…
என்னை எப்பிடியாவது தப்பிக்க வச்சிரு… “
என வழக்கமாக முணுமுணுத்த படியே கச்சாமி கச்சாமி கச்சாமி என ஏலம் போட்டவன்….
தூரத்தில் மணியடித்துக் கொண்டிருந்த தும்பு முட்டாசிக்காரனை பார்த்ததும் சாரனை மடித்துக் கட்டிக் கொண்டு ஓடினான்…………
*** ***