
பட்டாம்பூச்சிகளை
பிடிப்பதே
வேலையாகக் கொண்ட
தன் மகளிடம்
ஒரு செடி இருக்கின்றது
அதில் நிறைய பூ இருக்கின்றது
அவள் குலுங்கி குலுங்கிச் சிரிக்கிறாள்
பூ பூத்துப் பூத்து குலுங்குகிறது
படை சூழப் பறந்து வந்து
அமர ஆரம்பிக்கின்றன
பட்டாம்பூச்சிகள்
அவள் மேனியெங்கும்
படந்திருக்கின்றன
ஒரு பூவும்
பல பட்டாம்பூச்சிகளும்.
****
இரண்டாம்
வகுப்பு பாடப்புத்தகத்தில்
நான்காவது பக்கத்தில்
வரைந்திருந்த
வரைபடத்தில்
மரம் இருக்கிறது
யானை இருக்கிறது
சிங்கம் இருக்கிறது
குரங்கு இருக்கிறது
பாம்பு இருக்கிறது
புலி இருக்கிறது
இப்படி விலங்குகளால்
சூழப்பட்டதுதான்
காடு என்று சொல்லும்
ஆசிரியர்
இப்பொழுது
அந்தக் காடு எங்கிருக்கிறதென்று
சொல்லவேயில்லை
கடைசி நிமிட
வகுப்பு முடியும் வரையிலும்.
****
சிலுவையை
வரைந்த கையோடு
அப்பாவை வரைகிறேன்
வரைந்த
சிலுவையை
நான் சுமந்துகொண்டு செல்கிறேன்
என்னை அப்பா
சுமந்து செல்கிறார்
மேலிருந்தவாறு இரட்சித்துக்கொண்டிருக்கிறார் ஏசு
அவருடைய
தோலிலும் ஓர் சிலுவை
நகரும் பாதையெங்கும்
பலரின் கல்லறைகள்
ஆமென் ஆமென் என
கரவொலி சப்தங்களால்
வெடித்துச் சிதறி
பூமியில் விழுகிறது
மழைத்துளியாய்
ஓர் வெந்நிற வானம்.
****
சிறு ஓடையில்
விழுந்த சருகுகாகத்தான்
பயணத்தைத் தொடங்குகிறது வாழ்க்கை
வழியெங்கும் சிறு சிறு
பூவைத் தூவி வழியனுப்புகிறது
புங்கை மரங்களும்
சிலரது புன்னகையும்
மெல்ல மெல்ல
நகரத் தொடங்குகிறது
பெரும் நதியை நோக்கிய
என் படகுப் பயணம்.
***********