
சாயல்
நதியில் புகுந்த அந்திகாவலனைத்
தன் உள்ளங்கையில்
சிறை பிடிக்க எண்ணுகிறாள்
என் சேட்டைக்காரச் சிறுமி
ரெட்டைச் ஜடை நனையாமலும்
முழுக்கால் பாவாடையை அரைக்காலுக்காக்கி
மெல்ல மெல்ல இறங்கி
ஜடையிலிருந்து நீர் சொட்டச் சொட்ட
கை நிரம்ப நதி நீரை அள்ளுகிறாள்
இப்படியே அயராமல்
மீண்டும் மீண்டும் அள்ளுகிறாள்
நான் கரையிலிருந்து நோக்கினால்
பார்ப்பதற்கு ரெட்டைக் குழந்தைகள்
கிச்சு கிச்சுத் தாம்பூலம்
விளையாடுவதைப் போன்றுள்ளது!
****
உத்தமம்
பௌர்ணமி நாளிலெல்லாம்
மிக மிக வெளிச்சமாய் மிரட்டுகின்றது
அந்த வட்ட நிலவு
அது என்னை நெருங்காதபடி
கருவேலம் முற்களால் வேலியிட்ட
ஓரடி சந்தனச் செடியாய்
ஓர் அறைக்குள் புகுந்து கொண்டாலும்
சன்னல் இடைவெளியில் நுழையும்
ஒளிக்கற்றைகள்
ரொம்ப நாளாக எடுக்க மறந்து
மடித்து வைத்த சட்டையை
எடுப்பதைப் போல
எடுத்துப்போடுகின்றது
உன் நினைவுகளை
பழையதின் நெடி தாளாது
சட்டென மூக்கைச் சிந்தி
கண்களைச் சிவக்க வைக்கும்
நோய்மையைத் தந்து விடுகின்றது
இந்தப் பௌர்ணமி நிலவு
அடுத்த மாதப் பௌர்ணமியின்போது
பேசாமல் மரத் தொம்பைக்குள்
குதித்து விடுவதுதான்
உத்தமமென்று நினைக்கிறேன்.
*****
எது நீ?
துள்ளியோடும் பருவத்தில்
அறிவின் தணல் எவ்வளவோ எச்சரித்தாலும்
மனத்தின் சுள்ளி நச்சரித்துக்கொண்டேதான் இருக்கும்
இரண்டும் போராடி அணையும்போதோ
நரை கூடி கிழம் பருவ மெய்திவிடும்
அடச்சே…என்ன வாழ்க்கை இது?
என்ற கேள்விக்கும்
அடடே !இதுவல்லவோ வாழ்க்கை
என்ற நிம்மதிப் பெருமூச்சிற்குமிடையே
ஒய்யாரமாய் நிற்கிறது
உனதே உனதான பிம்பம்!
*****
காற்றில் பறக்கும் வண்ணங்கள்
எண்ணிலடங்கா வண்ணங்களை
ஓர் அற்புதமான ஊதுபையில் நிரப்பி
ஊரெல்லாம் அலைய விடுகிறேன்
வெய்யோனின் வெம்மையில்
வெடித்துச் சிதறி
அரிதாரம் பூசிக் கொள்கின்றன
அத்தனை அத்தனை
கண் திருஷ்டிப் பொம்மைகளும்
சோளக்காட்டுப் பொம்மைகளும்!
*********