பிரார்த்தனை
எலும்பெல்லாம் சரியாக வெந்திருக்க வேண்டும்
கைகூப்பி வேண்டி உறுதி செய்தார்…
சொர்க்க ரதத்திற்கு பேரம் பேசாமல்
கேட்டதைக் கொடுத்தாயிற்று
மருத்துவமனையின் கடைசி
நிமிடங்களில் கூட ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம்
சச்சரவின்றி சுமூகமாக முடிந்தது
இரவில் வயிறு முழுக்கக் குடித்துவிட்டு
எப்போதும் போல் கத்திவிடாமல்
மாலையிட்ட போட்டோ முன்பு அமர்ந்து
மௌன அஞ்சலி
எல்லாம் சரிதான்…
உயிரோடு இருந்தபோதும் கொஞ்சம்
வாழ்ந்திருக்கலாம் அம்மாவோடு.
இயக்கம்
முதன்முறை நாற்காலி
பிடிப்பதற்கு மட்டும்தான்
கொள்கைகளுடன் கொஞ்சம்
சமரசம் செய்துகொள்ள
வேண்டிவந்தது
தக்கவைத்துக்கொள்ளும்
வித்தைகளையெல்லாம்
அமர்ந்திருக்கும் நாற்காலியே
கவனித்துக்கொண்டது.
தொலைதல்
நிலாச்சோறும் அம்மாவும்
அப்படியேதானிருக்கிறார்கள்
தொலைந்து போனது
பிள்ளைகள் மட்டுமே.
ஏக்கத் தாகம்
முடிவிலியாய் வியாபித்து
விரிந்து தழலை
நகலெடுத்த பாலையின்
மணல் துகள்கள் போல
எங்கு தொட்டாலும் இனிமை
இறைக்கிற மலர்தாதுக்களின்
கூட்டமைப்பாய் ஈர்க்கிற
இசைக்கருவியின் தந்தியைப் போல
அடர்வனத்தில் அரிந்து
உள்வைத்த முகிழின்
சுகந்தம் வழி நெடுக
நீக்கமற நிறைந்திருப்பதைப் போல
பிளவுபடாத புகையெனத் தோன்றுகிற
அடர்ந்து உறைந்திருக்கும் கூதிர்காலப் பனியைப் போல
எதிர்பாரா நேரத்தில்
திடுக்கெனக் கிடைக்கிற
அழுந்தமான உதட்டு முத்தமென
தீண்டிச் செல்கிற அரவத்தின் விடம்
யாக்கையை ஆக்கிரமித்து போல
பனிச்சில்லுகள் நிரப்பி
குளிர்மையைப் பிரசவிக்கும்
மலைப்பிரதேசத்து வைகறைக்
காற்றைப் போல
அழுகையோடு விழித்தது முதல்
கூன் விழுகிற சாக்காடு வரை
தீருவதேயில்லை
ஆசைகளின் ஏக்கத் தாகம்.
***
- vidaniru@gmail.com