இணைய இதழ்இணைய இதழ் 100சிறுகதைகள்

செருப்பு – இரா.நாறும்பூநாதன்

சிறுகதை | வாசகசாலை

மகன் வீட்டில் அதிசயிக்கத்தக்க பொருட்கள் பலவும் இருந்தாலும், ரொம்பவும் மனதை ஈர்த்தது எது என்று சொன்னால், நீங்கள் வியப்பின் உச்சிக்குச் செல்வீர்கள். ஆமாம்.. உண்மைதான்.

வீட்டிற்குள் நுழைந்தவுடன் வலதுபுறம் அமைந்திருந்தது புத்தகங்கள் அடுக்கப்பட்ட அலமாரி என நினைத்து திறந்தபோதுதான் தெரிந்தது அது காலணிகள் வைக்கும் பீரோ என்று. நல்ல தேக்கு மரத்தில் இழைத்து செய்திருந்தான் அந்த ஊர் தச்சன். டொரோண்டோ நகரில் இப்படியான தச்சர்கள் இருக்கிறார்களா என்ன ?

அதில் இருந்த நான்கு அடுக்குகளிலுமே விதவிதமான செருப்புகள்.. பூட்ஸ்கள். .கேன்வாஸ் ஷூக்கள்..

ஆண்களுக்கானவை தனி வரிசையிலும், பெண்களுக்கானவை தனி வரிசையிலும் அழகுற அடுக்கப்பட்டிருந்தன. ‘அந்த மர அலமாரி என்ன விலை?’ என்று ஒருமுறை மகனிடம் கேட்டபோது ‘இருநூறு டாலர்கள்’ என்று சொல்லவும், மயக்கமே வந்து விட்டது.

ஊருக்குப்போன புதிதில், என்னுடைய செருப்பை இதில் எந்த வரிசையில், எந்த இடத்தில வைப்பது என்ற திகைப்பு ஏற்பட்டது.

மகன்தான் இரண்டாவது அடுக்கில் இடது ஓரத்தில் இருந்த இடத்தைக் காண்பித்து, “இங்கே வையுங்கப்பா” என்றான்.

அதன்பிறகு, வெளியே எங்கே சுற்றி விட்டு வந்தாலும், இந்த அலமாரியின் குமிழை நாசூக்காய் திறந்து நினைவாய், இரண்டாவது அடுக்கில் எனது செருப்புகளை வைத்து விடுவது வழக்கம்.

எதிர்புறம் உள்ள ஷோ கேஸைத் திறந்தால், அதில் குளிர் நேர உடைகளான ஜாக்கெட்டுகள் விதவிதமாய் ஹேங்கரில் தொங்கும்.

மிதமான குளிரைத்தாங்கும் ஜாக்கெட்டுகள், மழை நேரத்தில் அணியக்கூடிய ஜாக்கெட்டுகள், மிதமிஞ்சிய குளிருக்கு தாக்குப்பிடிக்கக்கூடிய ஜாக்கெட்டுகள், ஆட்டு ரோமத்தால் ஆன கதகதப்பான உடைகள் என பலவும் அவற்றில் உண்டு.

கனடா கிளம்பும்போதே எல்லோரும் சொன்ன விஷயம், “அங்கே உள்ள கிளைமேட்க்கு எதுக்கும் கூட ஒரு செட் செருப்பு எடுத்து வச்சுக்கோங்க” என்பதுதான்.

‘இருக்குற சுமை பத்தாது என்று, போடுற செருப்போடு இன்னொரு செட் செருப்பை வேற தூக்கி சுமக்கணுமா?’ என்று அமைதியாய் இருந்து விட்டேன். கனடாவை விடுங்கள்.. நம்ம ஊரிலேயே சிலர் வீட்டிற்குள் ஹவாய் செருப்பான ரப்பர் செருப்போடு அங்குமிங்கும் நடப்பதைப் பார்த்து அதிசயித்திருக்கிறேன். ‘வீட்டுக்குள் நடமாடுவதற்கு எதற்கு செருப்பு?’ என்றும் யோசித்ததுண்டு.

இந்த ரப்பர் செருப்பை முதன் முதலில் வாங்குவதற்கு காத்திருந்த தருணங்கள் நினைவுச் சேகரங்களில் எப்போதும் படிந்திருக்கும்.

அந்த நாள் இன்னமும் நினைவில் இருக்கிறது. அப்பாவின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்த அந்த நாள்.

அப்பா வீட்டிலிருந்து கிளம்பும் நேரம் எங்களுக்கு உற்சாகமான பொழுதாய் இருந்த காலம் அது. அப்பா இல்லாதபோது, வீடே வேறொரு வீடாக மாறி விடும். தாயக்கட்டங்களும், பல்லாங்குழியும் பட்டாசாலையின் நடுவே குடியேறும். சென்னை வானொலியில் இருந்த முள், வேகமாய் நகர்ந்து இலங்கை ஒளிபரப்பு கூட்டுஸ்தாபனத்திற்கு மாறும். அப்பா கண்டிப்பான ஆசிரியர். முழுப் பரீட்சை, அரைப் பரீட்சை விடுமுறை நாட்களில் மட்டுமே விளையாட அனுமதி தருபவர். ரேடியோவில் திரைப்பட பாடல்களை கேட்டு கெட்டுப்போவார்கள் என்ற அபிப்பிராயம் கொண்டவர். அவர் வீட்டுக்குள் நுழைந்து விட்டால்,எல்லோரும் கப்,சிப். ஏதாவது ஒரு பாடபுத்தகத்தை விரித்து வைத்தபடி உட்கார்ந்திருப்போம்.

இப்படியான சூழலில், வெளியே போன அப்பா எப்போது வீடு வருவார் என்று நாங்கள் மூவரும் (நான் மற்றும் எனது மூத்த சகோதரிகள் இருவர்) ஆவலுடன் எதிர்பார்த்துக்காத்திருந்தோம் என்றால் அது வியப்புக்குரிய செய்திதானே ?

மூத்த அக்காவிற்கு செருப்பு பிய்ந்து போய் விட்டது. பள்ளி திறக்கும் முன்பு புது செருப்பு வாங்க வேண்டும். இரண்டாவது அக்காவிற்கு முதன் முதலாக செருப்பு வாங்க தகுதி வந்து விட்டது.

அப்பா வகுத்த கொள்கைகள் உங்களுக்கு ஆச்சரியத்தையோ அல்லது எரிச்சலையோ ஏற்படுத்தக்கூடும். இருந்தாலும் கேளுங்கள்.

உயர்நிலைப் பள்ளியில், அதாவது, ஆறாம் வகுப்பு சேரும்போதுதான் செருப்பு வாங்கித்தர வேண்டும். ஐந்து வரை படிக்க, வீட்டிற்கு அருகாமையில் உள்ள பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளி. வீட்டில் இருந்து ஏழெட்டு வீடுகள் தள்ளிதான் பள்ளி இருந்ததால், செருப்பு அவ்வளவாய் தேவையில்லை என்பது அவரது கருத்து. ஐந்து பிள்ளைகள் பெற்றவர் என்பதால் அவராக, தனது பொருளாதாரக் கொள்கையை வகுத்துக் கொண்டார்.

அந்தக் கணக்குப்படி, ஆறாம் வகுப்பில் சேர இருக்கும் எனக்கு நேர் மூத்த சகோதரிக்கு புதிய செருப்பு எடுக்க வேண்டும்.

இந்தக் கணக்குப்படி பார்த்தால், செருப்பு வாங்க எனக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்றன. ஆனால், அதிர்ஷ்டம் எனது அம்மாவின் வழியே எனக்கு வந்தது என்றே சொல்ல வேண்டும்.

“பொம்பளைப் பிள்ளைகள் ரெண்டு பேருக்கும் புது செருப்பு எடுத்து தரப் போறீங்க.. அப்படியே, சின்னவனுக்கும் செருப்பு எடுத்து தந்துருங்களேன்..” என்று அம்மா, அப்பாவைப் பார்த்து சொன்னாள். சின்னவன் என்பது நான்தான்.

விதிமுறைகளை மீறுதல் என்பது அப்பாவின் சரித்திரத்திலேயே கிடையாது. அவராவது வாங்கித் தருவதாவது ?

இப்படி நினைத்துக்கொண்டிருந்த எங்களை அநியாயத்திற்கு ஏமாற்றி விட்டார் அப்பா அன்று.

“செருப்பு போட்டு நடந்துருவானா..?” ஒரு சின்னதான புன்னகை அப்பாவின் முகத்தில் தோன்றி மறைந்தது. அது ரொம்ப அபூர்வமாய் தோன்றும் புன்னகை. சம்மதத்திற்கான புன்னகையும் கூட.

அம்மாவின் இந்த சிபாரிசிற்காகவே நான் எத்தனை முறையும் தேங்காய் சில்லு வாங்கி வரத் தயாராய் இருந்தேன்.

கடைசியில் எனக்கும் புது செருப்பு வாங்குவது என்று முடிவானது.

அன்று மாலையில் அப்பா சம்பளம் வாங்கி வந்தவுடன், மூவருக்கும் புது செருப்பு வாங்கித்தருவதாக சொல்லி சென்றிருந்தார்.

டவுசர் பையில் கோலிக்காய் குலுங்க விளையாடச் செல்லும் நானோ, அன்று நல்ல பையனாய் கால் கை கழுவி, தலை சீவி அப்பாவை எதிர்பார்த்து காத்திருந்தேன். அக்கா இருவருக்கும் புது செருப்பு சந்தோசம் இருந்தபோதிலும், கடைக்குட்டி பயல் இரண்டு ஆண்டுகள் முன்பே வாங்குறானே என்ற சின்னதான பொறாமை இருந்தது.

“செருப்பை எங்கனையும் போட்டுட்டு வந்துறாதேல” என்று கிண்டல் செய்தார்கள்.

ஒரு வழியாய் அப்பா வந்து சேர்ந்தார். கை,கால் அலம்பி விட்டு, காபி குடித்து நிதானமாகி, சம்பள கவரை அம்மாவிடம் கொடுத்து விட்டு, கொஞ்ச ரூபாய் மட்டும் எடுத்து தனது உள்பாக்கெட்டில் வைத்துக் கொண்டு, எங்களை அழைத்துக்கொண்டு பஜாருக்கு கிளம்பினார். அப்பா முன்னதாகச் செல்ல, நாங்கள் மூவரும் அமைதியாய் அவரை பின்தொடர்ந்தோம். தெருவே எங்களை வேடிக்கை பார்த்தது.

என் சேக்காளி கண்ணன் சாடையில் கேட்டான் “எங்கே கிளம்பியாச்சு?”

கால்களைக் காண்பித்து ‘செருப்பு செருப்பு’ என்று மென்மையான கீச்சுக்குரலில் நான் சொல்லிவிட்டு நடந்தேன். அப்பாவின் கண்டிப்பு ஊரே அறிந்தது. பஜாரில், குஞ்சரம் செட்டியார் கிளப்புக்கடையை தாண்டி, அரிசி மண்டிக்கடை ஒன்று உண்டு. அதையடுத்து, கீழ கேட் ஆட்டுச்சந்தை.. அதை அடுத்து முக்கில் இருந்தது ஜலாலுதீன் பாய் செருப்புக் கடை. ஊரில் இருக்கும் ஒரே செருப்புக்கடை. அப்பாவைப் பார்த்ததும் ஜலாலுதீன் பாய், “சார் வணக்கம்..வாங்க வாங்க..” என்று வரவேற்றார். சின்ன ஊர்களில் ஆசிரியர்களுக்கு இருக்கும் ஒரே மதிப்பு இதுதான். பாய், அப்பாவின் மாணவர் என்று ஒருமுறை அப்பா சொல்லுவதைக் கேட்டிருக்கிறேன்.

“பிள்ளைங்களுக்கு செருப்பு வேணும்..நல்லதா எடுத்துக் காண்பிங்க.. முதல்ல, மூத்தவளுக்கு எடுத்துப் போடுங்க..” என்று சொல்லி விட்டு, மர நாற்காலியில் அமர்ந்தார் அப்பா.

மூத்த அக்காவோ, அதற்கு முன்பே ஓரத்தில் காட்சிக்கு வைத்திருந்த செருப்புகளை பார்க்க ஆரம்பித்திருந்தாள். எல்லாமே ரப்பர் செருப்புதான். ஊதாக் கலரில், பச்சைக்கலரில்..

சில, சாண்டக் செருப்புக்களும் இருந்தாலும், ரப்பர் செருப்புதான் கிடைக்கும் என்று முடிவு எடுத்தவளாய், ரப்பர் செருப்பில் சிறந்த வகை எது என்பதை ஆராய்ந்து கொண்டிருந்தாள். அவளுக்கு அனுபவம் ஜாஸ்தி அல்லவா. அவள் ஒன்பது படிக்கிறாள்.

சின்ன அக்காவோ, பெரிய அக்கா கூடவே ஒட்டிக்கொண்டு அவள் எடுத்துத் தருவதையே வாங்கத் தயாராக இருப்பது போல இருந்தாள்.

சிறுவர்களுக்கான செருப்பு எங்கே இருக்கிறது என்று எனது கண்கள் அலைபாய்ந்தன.

ஜலாலுதீன் பாய், சளைக்காமல் விதவிதமான மாடல் செருப்புகளை எடுத்துப் போட்டு கொண்டிருந்தார். அக்கா கால்களில் போட்டு, கொஞ்ச தூரம் பாயில் நடந்து பார்ப்பாள். பின்பு திரும்பி வருவாள். குதிகாலுக்குப் பின்புறம் ரொம்ப நீட்டிக்கொண்டிருக்கக் கூடாதாம். சரியான அளவில் இருந்தால்தான், மழைக்காலத்தில் சகதி ‘சளப் சளப்’பென்று அடிக்காதாம். ஓ..இப்படி எல்லாம் சங்கதி இருக்கிறதா?

ஒருவழியாய் அக்காக்கள் இருவரும் இளம்பச்சை நிற காலணிகளை தேர்வு செய்து விட்டனர்.

எனக்கோ ஊதா நிறம். முதன்முறையாக காலில் அணிந்து பார்த்து அங்குமிங்கும் நடந்தபோது, பூமியை விட்டு நாலு இன்ச் உயரத்தில் நடப்பது போன்றதொரு உணர்வு.

பெருமிதமாக இருந்தது எனக்கு. கால் பாதத்தின் அழுக்குப் படிந்து, செருப்பு அழுக்காகி விடுமோ என்ற அச்சம் கூட ஏற்பட்டது.

தினமும் தண்ணீரில் கழுவி வைக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டேன். அம்மை தேங்காய் சில்லு வாங்க எத்தனை மட்டம் அனுப்பினாலும், செருப்பு அணிந்தே கடைக்கு வரவேண்டும் என்று சங்கல்பம் செய்துகொண்டேன்.

மூவரும் செருப்புகளை அட்டைப்பெட்டியில் கட்டி எடுத்தபோது, அப்பா, “காலில் போட்டுட்டு வர வேண்டியது தான” என்றார்.

“இல்ல..வீட்ல போயி அம்மைகிட்ட காட்டிட்டு, அப்புறமா போடுறோம்.. இப்பன்னா, அழுக்காகி விடும் ” என்றேன் நான்.

கடைக்குட்டிப்பயல் என்பதால், சில சமயங்களில் இப்படி தைரியமாய் நான் பேசி விடுவேன்.

இப்படியாக மூவரும், செருப்புகள் இருந்த அட்டைப்பெட்டியை சுமந்தபடியே வீடு நோக்கி திரும்பினோம்.

என்னோட அந்த ரப்பர் செருப்பின் விலை நாலணா..இருபத்தைந்து பைசா. .இப்போது அணாவும் இருபத்தைந்து பைசா நாணயமுமே செல்லாத பணமாக்கி விட்டன.

* * * * * * * * * * * * * *

அன்று மாலை வெளியேபோய் விட்டு திரும்பும்போது, மகன் எனக்காக புதியவகை கேன்வாஸ் சூ வாங்கி வந்திருந்தான்.

“நாளைல இருந்து ஸ்னோ பெய்யும்ப்பா.. வெளியே போகாமல் இருப்பது நல்லது. ஒருவேளை வாக்கிங் கண்டிப்பா போகணும்னா, இந்த கேன்வாஸை போட்டுட்டுப்போங்க.. பனிக்கட்டி உறைஞ்சு இருந்தாலும், அதன் மேல் நடக்கிறப்ப வழுக்காது.. கிரிப் கிடைக்கும்..” என்றான். பனிக்கட்டி மேல் நடப்பதற்கு என ஒரு செருப்பா ?

எனக்கு சிரிப்பாக வந்தது.

நீலமும் சிவப்பும் கலந்த அந்த புதிய கேன்வாஸை எடுத்து, நம்ம ஊர் வழக்கப்படி விலைப்பட்டியலை கூர்ந்து நோக்கினேன்.

நூறு கனடியன் டாலர்கள்.. எனக்குத்தூக்கி வாரிப்போட்டது.

மனம் உடனே அறுபத்திரெண்டால் பெருக்கிப்பார்த்து விடும் தானே ..

ஆறாயிரத்து இருநூறு ரூபாயா …

“எதற்கப்பா இவ்வளவு ரூபாய்க்கு.. இன்னும் ஒரு மாத காலத்திற்கு மட்டுமே இங்க இருக்கபோறேன்.. அதன் பிறகு இதை நம்ம ஊருக்கும் கொண்டு போக முடியாது…” என்றேன்.

மகன் சிரித்தபடியே, “இருக்கட்டும்ப்பா.. நீ இங்கே வர்றப்ப போட்டுக்கோ. மற்ற நேரம் இந்த சூ ரேக்கில் இருந்துட்டுப்போகுது” என்று தேக்குமர அலமாரியைக் காட்டினான்.

மறுநாள் புதிய கேன்வாஸ் சூ வையும் போட்டுக்கொண்டு வெள்ளை மழை பெய்திருந்த டொரோண்டோ நகர வீதியில் நடந்து அருகில் இருந்த கரியா பூங்கா வரை சென்று வந்தேன். நம்ம ஊரில் சர்பத் டம்ளரில் போடும் ஐஸ்கட்டிகள் ஊர் முழுவதும் கொட்டிக்கிடந்தால் எப்படி இருக்குமோ அப்படிச் செல்லும் பாதையெல்லாம் பனி மூடிக்கிடந்தன. அது ஒரு ரசனையான அனுபவம்தான்.

கடைசியில் மகன் சொன்னதுபோலதான் நடந்தது.

அழகிய தேக்கு மர அலமாரியின் மேல் அடுக்கில் என்னுடைய மற்றும் எனது மனைவியுடைய பனிக்கால ஷூக்களும், எதிர்புறம் இருந்த வார்ட்ரோப்பில் எங்களின் குளிர்கால ஜாக்கெட்டுகளும் பத்திரமாக இருக்க, நாங்கள் எங்களின் வழக்கமான செருப்புகளோடு ஊர் திரும்பினோம்.

சூ ரேக்கின் கீழ் வரிசையில் வைத்திருக்கலாமே என்றெல்லாம் நான் சொல்லவில்லை மகனிடம்.

எனக்குத் தெரியும் அவன் ஏன் மேல் வரிசையில் வைத்திருக்கிறான் என்று.

narumpu@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button