
“டிக்..டிக்..டிக்’ என்று சீரான இடை வெளியில் வரும் சப்தம், மங்கலான வெளிச்சத்தில் பல்வைத்தியரின் சாய்வு நாற்காலி போன்ற ஒரு சோஃபாவில் – இதற்கு “ஷேஸ் லாங்’ என்று பெயர்- அரைக் கண்ணை மூடி படுத்திருந்த அபர்ணாவிற்கு ஒரு விதமான மயக்கத்தை ஏற்படுத்தியதென்றால், அவளுடைய இளமையான வளப்பமான கவர்ச்சியான உருவம் அவளை ஹிப்னாடிஸ தூக்கத்தில் ஆழ்த்திய இளம் சைக்கியாட்ரிஸ்ட் மனோஹருக்கு ஒரு கிறக்கத்தை ஏற்படுத்தியது. அவன் சமீபத்தில் ஒரு டிவி சேனலில் இளவயதினரின் டிப்ரஷனை பற்றியும், அதை எப்படி சரிசெய்யவேண்டும் என்றும் சொன்னதைக் கேட்டு இம்ப்ரஸாகி, தன்னைத் தொடர்ந்து ஆக்ரமிக்கும் கனவையும் தாளமுடியாத மன உளச்சலையும் இவனிடம் டிஸ்கஸ் செய்ய அபர்ணா வந்திருக்கிறாள். இந்த மாதிரி விஷயங்களின் மூலாதாரத்தை அறிய அவளை ஹிப்னாடிஸ தூக்கத்தில் ஆழ்த்தி அவளின் ஆழ்மனத்துடன் மனோஹர் பேசிக்கொண்டிருக்கிறான்.
“ம்.. உங்க கனவ பத்தி சொல்லுங்க.. போட்ல போய்கிட்டிருக்கீங்க… அப்புறம்? ” சைக்யாட்ரிஸ்ட் மனோஹர் தூண்டினான்
“திடீர்னு தண்ணிலேந்து ஒரு போலீஸ்காரர் தலையை எம்பி வர்ராரு.. நா..ஒரு பெரிய கட்டையை தூக்கி அவரை அடிக்க ஓங்கறேன்..”
“போலீஸா? தெரிஞ்சவரா? அவர் முகம் யாரையாவது நினைவு படுத்துதா?”
“அவர் முகம் தெளிவா தெரியுது..யாருன்னு தெரியல.. ஆனா, எங்கூட வந்தவ “ஓ’ன்னு கூச்சல் போடறா..”
“உங்க கூட யாரிருக்கிறாங்க..”
“ம்..ம்.. கூட காவ்யா இருக்கா…”
“காவ்யா யாரு?”
“என் ஃப்ரண்ட்.. இல்ல..இல்ல.. மோசக்காரி..”
“ஏன்? என்ன செஞ்சாங்க?”
“என்னோட மகேஷை எங்கிட்டேந்து பிடிங்கிகிட்டா..”
“மகேஷ் யாரு..”
“——-“
“அபர்ணா.. மகேஷ் யாரு?”
“ஓ அவன் பேர சொன்னேனா? அவனும் காவ்யாவும்தான் என்னோட இந்த நிலைக்கு காரணம்..” அவள் குரலில் ஆத்திரமும் ஆவேசமும் தெரிந்ததால்,
“ரிலாக்ஸ்..நிதானமா சொல்லுங்க..” என்று அவளை ஆசுவாசப்படுத்தினார் டாக்டர் மனோஹர். சோஃபாவி்ல் நன்கு சாய்ந்தமர்ந்து அபர்ணா பேச ஆரம்பித்தாள்
“மகேஷும் நானும் ஒரே ஊரு ஒரே காலேஜ். ரெண்டுபேருமே காம்ப்பஸ் இன்ட்டர்வ்யூல செலக்ட் ஆகி ஒரே கம்ப்பெனிலதான் ஒர்க் பண்றோம். எனக்கு அவன் மேல ஒரு க்ரஷ். அவனுக்கும் அப்படித்தான்னு நெனச்சுகிட்டு இருந்தேன் இந்த மூதேவி காவ்யா வரவரைக்கும். ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாலதான் எங்க கம்ப்பெனில ஹெச்.ஆர்ல சேந்தா. கொஞ்சம் கொஞ்சமா மகேஷ் அவ பக்கம் சாய ஆரம்பிச்சு இப்ப என்னடான்னா, “அவதான் என்னோட சோல்மேட். நீ என்னோட பெஸ்ட் ஃப்ரண்ட்’ னு ஓப்பனா சொல்றான். அதுலேந்து எனக்கு தூக்கம் போச்சு. போறாத்துக்கு இந்த சொப்பனம் தினம் தினம் வந்து கொஞ்ச நஞ்சம் தூக்கத்தையும் கலைக்குது… வேலையில கான்சன்ட்ரேட் பண்ணமுடியாம வார்னிங்க் வர ஆரம்பிச்சுது…என்ன பண்றதுன்னு யோசிச்சபோதுதான் உங்க இன்டர்வ்யூவை பாத்தேன்”
“கவலைப் படாதீங்க சரியாக்கிடலாம். உங்களுக்கு இந்த கனவு தெனம் வருதா? ஒரே மாதிரி வருதா?”
“ஆமா.. எக்சாக்டா அதேமாதிரி வருது. நான் அந்த போலீசை அடிக்க கம்பை ஓங்கிறப்போ டக்குனு முழிப்பு வருது”
இன்றைக்கு இத்துடன் போதுமென்று டாக்டர் மனோஹர் ‘டிக்..டிக்’ சத்தத்தை நிறுத்தி அபர்ணாவை ஹிப்னாடிச தூக்கத்திலிருந்து எழுப்பினார்.
கண்களை கசக்கிக்கொண்டே எழுந்த அபர்ணா, ”டாக்டர்.. என்ன நடந்தது.. உங்களுக்கு தேவையான டீடெய்ல்ஸ் சொன்னேனா?”
“எஸ்..எஸ்..உங்களோட சொப்னத்தோட டீடெய்ல்ஸ் நீங்க நினைவுல இருக்கும்போது சொல்லமுடியல. ஆனா, உங்க ஆழ்மனசிலேந்து தெரிஞ்சுகிட்டேன்”
“இத சரிபடுத்தமுடியுமா டாக்டர்? இந்த மாதிரி தொடர்ந்து வந்தா அது பலிக்கும்னுட்டு என் பாட்டி சொல்லுவாங்க” என்றதும் டாக்டர் பெரிதாக ச்சிரித்தபடி,
“இதெல்லாம் பாட்டி கதையில்லமா. கொஞ்சம் காம்பளிகேட்டட் விஷயம். சொப்பனம்ங்கறது அவங்கவங்க ஆழ்மனசுல அழுந்திக் கிடக்கற ஆசைகள், உணர்ச்சிகள், பயங்கள், ஆதங்கங்கள் இவைகளின் வெளிப்பாடுதான். இதுல பாக்கறதையெல்லாம் அப்படியே எடுத்துக்க கூடாது. இது என்ன சொல்றதுங்கறத எங்கள மாதிரி எக்ஸ்பர்ட்டாலதான் கண்டுபிடிக்கமுடியும். ஃப்ராய்ட் சொல்லுவார், ‘ஒரு காரோட ஸ்பேர் பார்ட்டை மட்டும் தனியா காட்டினா அது காரோடதுன்னு ஒரு கார் மெக்கானிக்காலதான் சொல்லமுடியும்.’ அது போல கனவுல வர சில விஷயங்களை வச்சு எங்களை மாதிரியான சைக்யாட்ரிஸ்ட்டாலதான் அதோட முழு வடிவத்தை கண்டுபிடிக்கமுடியும்.”
“டாக்டர், நீங்க சொல்றது சரியா புரியல. இந்த கனவுக்கும், காவ்யா மகேஷுக்கும் சம்மந்தம் இருக்கா?”
“ஆமா கண்டிப்பா இருக்கு. முதல்ல இத சொல்லுங்க. நீங்க மகேஷை இன்னும் விரும்பறீங்களா?”
“இல்லை. எப்ப அவன் காவ்யாவை பாத்தவுடன் எங்கிட்டேந்து அவகிட்ட தாவினானோ அப்பவே அவன் ஒரு சபலப் பேர்வழி; அவனை நம்ப முடியாதுன்னு தெரிஞ்சுபோச்சு. நவ் ஐ ஹேட் ஹிம்”
“தேங்க் காட்” என்று விஷமமாக சிரித்தபடியே சொன்ன மனோஹர் தொடர்ந்தான்.
“இந்த தொடர் கனவு விஷயத்ல ஒரு முக்கியமான பாய்ன்ட் என்னன்னா ஒரு நிகழ்ச்சி முடியுமுன் கனவு கலைஞ்சுட்டா அது தொடர்ந்து வந்துகிட்டே இருக்கும். அதாவது நாய் கடிக்க துரத்திகிட்ட வர கனவு முக்காவாசி அது கடிக்கறதுக்கு முன்னாடியே முழிப்பு வந்து கனவு கலைஞ்சுடும். என்னைக்கு அது கடிக்கறதோ அன்னையோட கனவு நின்னுடும். இப்போ உங்க கனவு கட்டையை ஓங்கறதோட நின்னுடுது. அதனாலதான் தொடர்ந்து வந்துகிட்டே இருக்கு. என்னைக்கு அந்த கட்டை தலைல அடிக்குதோ அன்னியோட உங்களுக்கு கனவு நின்னுடும்”
“அப்படியா? அதுக்கு என்ன பண்ணனும்?”
“சொல்றேன். நீங்க மகேஷை வெறுக்கறேன்னு சொன்னீங்க. அவன பழிவாங்கனும்னுட்டு விரும்பறீங்களா?”
“ஆமா. ஆனா, அவனவி ட இந்த காவ்யாவைதான் இன்னும் பழிவாங்கனும்னு ஆசை”
“ஓகே. எனக்கு ஒரு சூப்பர்ப் ப்ளான் இருக்கு. கவனமா கேளுங்க. கட்டையால தலைல அடிபட்டா உங்க கனவு நின்னுடும். ஆனா, அடிக்கறது நீங்க இல்ல காவ்யா. அதேமாதிரி அடிபடற தலை போலீஸ்காரர் தலை இல்லை மகேஷ் தலை”
“என்ன சொல்றீங்க? குழப்பறீங்களே?”
“தெளிவா சொல்றேன். இப்ப உங்களுக்கு வர கனவை காவ்யாக்குள்ளே இம்ப்ளான்ட் பண்ணிட்டு அவள மகேஷ் தலைல கட்டையால அடிக்கற மாதிரி செஞ்சோம்னா அத பாத்து உங்க கனவும் நின்னுடும் அவங்க ரெண்டு பேரும் மாட்டிக்குவாங்க. ஒரே கல்லுல மூணு மாங்கா. எப்படி என் ப்ளான்?”
“என்னது என் கனவ அவகிட்ட இம்ப்ளான்ட் பண்ணுவீங்களா? அது எப்படி முடியும்?”
“முடியும். நீங்க “இன்சப்ஷன்” படம் பாத்திருக்கீங்களா?”
“எஸ்.. க்ரிஸ்டஃபர் நோலன் படம். அதெல்லாம் நடைமுறைல சாத்தியமா?”
“சாத்தியம். அட்வான்ஸ்டு சைகோ அனாலிசிஸ் மூலம் ஒத்தரோட கனவை பார்க்கவோ மாற்றவோ இன்னொருத்தருக்குள்ள இம்ப்ளான்ட் பண்ணவோ, கனவுக்கும் நினைவுக்கும் வித்தியாசம் தெரியாம ஒத்தரோட மனச மேனுபலேட் பண்ணி குழப்புவதோ எல்லாமே சாத்தியம். வேணும்னா கூகுள் பண்ணிப் பாருங்க. இதையெல்லாம் என்ன நம்பி எங்கிட்ட விட்டுடுங்க. நீங்க பண்ணவேண்டியதெல்லாம் காவ்யாவை எப்படியாவது என் க்ளினிக்குக்கு வரவழைச்சு என்னோட செஷன்ல சில நாள் கலந்துக்க சொல்லுங்க. அப்புறம் நான் சொல்ற அன்னிக்கு நீங்க, காவ்யா, மகேஷ் மூணு பேரும் போட் க்ளப்ல போட்டிங் பண்ணுங்க. அப்ப சட்டுனு மகேஷை தண்ணில தள்ளிவிடுங்க. அவன் தத்தளிச்சு தலைய தூக்கற சமயத்தில காவ்யா கட்டையால ஓங்கி போடச்சொல்லி அவள மேனுபலேட் பண்ணிடறேன். அவன் செத்தாலும் அடிபட்டாலும் காவ்யாக்கு தண்டனை உண்டு. மகேஷ் பொழச்சாக்கூட அவள வெறுக்க ஆரம்பிச்சிடுவான். அவ்வளவுதான் ஆல் ப்ராப்ளம் சால்வ்டு”
“டாக்டர் கேக்கறதுக்கு நல்லாத்தான் இருக்கு. நாளைக்கே காவ்யாவை ஏதாவது சாக்கு சொல்லி இங்கே கூட்டிட்டு வரேன். அப்புறம் உங்க சாமர்த்தியம். இது மட்டும் நடந்துச்சுனா உங்களுக்கு என்ன வேணுமாலும் தரேன்” என்றவாறே கிளம்பினாள்
“என்ன வேணுமாலும் தருவேங்கறீங்களா இல்ல என்னைய வேணுமாலும் தருவேங்கறீங்களா?” மனோஹரின் குறும்பை ரசிப்பது போல் புன்னகைத்து அவன் கன்னத்தை தட்டிவிட்டு வெளியேறினாள்.
மறுநாள் காவ்யாவை மனோஹரிடம் கூட்டி வந்தாள். பாதிமுகம் மறைக்கும் அளவுக்கு கூந்தலை விரித்து ஜீன்ஸ் டி ஷர்ட் சகிதம் வந்த காவ்யாவுடன் மனோஹர் சிறிது நேரம் பேசி தான் செய்து கொண்டிருக்கும் ஆராய்ச்சிக்காக அவளை சில நாட்கள் ஒரு மணிநேரம் அவன் க்ளினிக்கிற்கு வர சம்மதிக்க வைத்தான். தினமும் அவளை ஷேஸ் லாங்கில் கிடத்தி, அந்த கனவை அவளுள் பதிக்க அவளை ஹிப்னாடிச தூக்கத்தில் ஆழ்த்தினான்.
அன்று பௌர்ணமி. அபர்ணா எதிர்பார்த்துக் கொண்டிருந்த நாள் வந்துவிட்டதாக மனோஹர் சொல்லவே, காவ்யாவையும் மகேஷையும் ஏதேதோ காரணம் சொல்லி போட்டிங்கிற்கு அழைத்து வந்து கொண்டிருக்கிறாள். மனோஹர் குறிப்பிட்ட அந்த இடம் வந்துவிட்டது. காவ்யாவிற்கு அருகில் அந்த பெரிய கட்டை இருப்பதை உறுதி செய்து கொண்டாள். அவளை அணைத்தவாறு நின்று கொண்டிருந்த மகேஷை அபர்ணா நெருங்கி வேண்டு மென்றே தன் ஹேண்ட் பேகை தண்ணீரில் தவற விட்டு, “மகேஷ் ..மகேஷ்.. என் பேக் விழுந்திடுச்சு. சீக்கிரம் எடுங்க” என்று அலறியதும் மகேஷ் குனிந்து போட்டின் விளிம்பிற்கு வெளியே தன் இடுப்பிற்கு மேல்பாகத்தை வளைத்து அந்த பேகை எடுக்க முயன்றபோது, சட்டென்று அவன் இரண்டு காலையும் அபர்ணா தூக்கிவிட, தடாலென மகேஷ் தண்ணீரில் குப்புற கவிழ்ந்து விழுந்தான். விழுந்த இடத்தில் ‘தளக் புளக்’கென்று சத்தத்துடன் ஏதேதோ நடக்க, காவ்யா அமைதியாக அமர்ந்திருந்ததை பார்த்த அபர்ணா, “ஏய் என்ன பேசாம இருக்க? இதோ இந்த கம்பை எடு” என்று கம்பை எடுத்து அவளிடம் கொடுக்கமுயலும்போது, தண்ணீர் மேல் மட்டத்தில் சலசலப்புடன் ஒரு தலை தத்தளித்து வெளிவர முயன்று கொண்டிருந்தது. “ஏய் காவ்யா..இந்தாடீ.. கம்பால அந்த தலைல போடு” என்று அபர்ணா கத்தினாலும், காவ்யா அமைதியாக கம்பை வாங்காமல் இருக்க கொஞ்சம் கொஞ்சமாக அந்த தலை வெளிவருவதைப் பார்த்து பதட்டமடைந்த அபர்ணா தன்னிச்சையாக கம்பை ஓங்கி அந்த தலையில் போட்டாள். ‘.. என்ன இது..கம்பு தலையை இல்லை அதன் மேலிருந்த தொப்பியில் பட்டு அது தெறித்து பக்கத்தில் விழ, போலீஸ் உடையில் வெளிவந்த அந்த முகத்தை பார்த்து வீரிட்டு மயங்கி விழுந்தாள் அபர்ணா.

மறுநாள் அடையார் போலீஸ் ஸ்டேஷனில் காவ்யா, அபர்ணா, மகேஷ், டாக்டர் மனோஹர், தண்ணிரிலிருந்து வெளிவந்த போலீஸ் அனைவரும் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் முன் ஆஜராகியிருந்தனர்.
“நடந்த விஷயத்தை தெளிவா உண்மையா ஒவ்வொருத்தரும் சொல்லனும். யார் ஆரம்பிக்கறீங்க?” என்று இன்ஸ்பெக்டர் கேட்டதும்,
“நான் சொல்றேன் இன்ஸ்பெக்டர்” என்று காவ்யா ஆரம்பித்தாள். அவளுக்கும் மகேஷுக்கும் ஏற்பட்ட நெருக்கமும் அதனால் அபர்ணாவிற்கு ஏற்பட்ட வெறுப்பும் பற்றி சொன்னபிறகு, அவள் டாக்டர் மனோஹர் பற்றியும் அவர் போட்ட திட்டத்தைப் பற்றியும் சொல்ல ஆரம்பித்தாள்.
“இன்ஸ்பெக்டர், நா ஒரு எம்.பி.ஏ., ஹெச் ஆரில். எங்களுக்கு ஹ்யூமன் பிஹேவியர், சைக்காலஜி போன்றவற்றில் அதிக படிப்பும் அனுபவமும் உண்டு. நான் இதுல இன்னுமே அதிகமா ஸ்பெஷலைஸ் பண்ணி ந்யூயோ லிங்க்வுஸ்டிக் ப்ரோக்ராமிங்ல டிப்ளமா வாங்கியிருக்கேன். ஹிப்னாடிசம் மைன்ட் ரீடிங் எல்லாம் ஓரளவு தெரியும். அதனால டாக்டர் மனோஹர் ரிசர்ச் பண்றார்னதும் ஆர்வமா கலந்துக்கிட்டேன். ஆனா, முதல் நாள்லேயே இவரோட சதி திட்டத்தை புரிஞ்சுகிட்டேன். இவர் என்னதான் பண்றாருன்னு தெரிஞ்சுக்கதான் அவரோட ஒத்துழைக்கற மாதிரி ஆக்ட் பண்ணினேன். அன்னைக்கு போட்ல மகேஷைத் தள்ளப்போற ப்ளானை தெரிஞ்சுகிட்டு உங்க போலீஸ் கிட்ட உதவி கேட்டேன். தண்ணீரில் இருந்த போலீசை சுட்டிக் காட்டி, இந்த சார் அதுக்கு ஒத்துகிட்டு அந்த இடத்துல மறைஞ்சு நின்னு சரியான சமயத்தில தண்ணீல குதிச்சு மகேஷை காப்பாத்தினார். ரொம்ப தாங்க்ஸ் சார்” என்று அவரைப் பார்த்து சொன்னாள். இதை கேட்டுக் கொண்டிருந்த அபர்ணா ஆத்திரத்தோடு,
”அடிப்பாவி, இப்படியெல்லாம் நாடகமாடினியா? ஹிப்னாடைஸ் ஆன மாதிரி கண்ணை மூடி மயங்கி கெடந்தியே எப்படி?”
“அதுக்கு காரணம் இதுதான்” என்று ஆப்பிள் ஏர் பாட்ஸை காண்பித்தாள்.
“இத போட்டுகிட்டா வெளி சத்தம் ஒன்னும் கேக்காது. இத மாட்டியிருக்கறது தெரியாதபடி என் ஹேரை விட்டு மூடிட்டேன் அந்த டி’க் டிக்’ ஓசை அவரோட பேச்சு இதெல்லாத்தையும் ப்ளாக் செஞ்சுட்டா நாம ஹிப்னாடைஸ் ஆக மாட்டோம். அதனால அவரால என் சப்கான்ஷியஸை ரீச் பண்ணமுடியாது. அதே சமயம் அந்த சானல் மூலமா நா அவரோட எண்ணங்களை அறிய முடியும். ஃபோன்ல ஒரு சைட ம்யூட் பண்ணிட்டு ஒரு சைட மட்டும் கேக்கற மாதிரி அப்படித்தான் அவரோட ப்ளானை புரிஞ்சுகிட்டேன்”
“சே என்னமா அப்படியே மயங்கறமாதிரி கண்ண மூடி கிடந்த”
“அது நடிப்பில்ல. உண்மையாவே மயங்கித்தான் கிடந்தேன். ஆனா, அது உன் டாக்டர் மனோஹர்னால இல்ல. இசைஞானி இளையராஜாவால. ஏன்னா அந்த ஏர் பாட்ல நா அவர் பாட்டுகளைத்தான் கேட்டு கிறங்கியிருந்தேன்”
“யோவ் டாக்டர் மனோஹர், கடைசிலே உங்க ஃப்ராய்டு தியரியெல்லாம் சுத்த ஃப்ராடாயிடுச்சே. என் பாட்டி சொன்னதுதான் பலிச்சது. இதோ இந்த போலீஸ்காரர் முகத்தைதான் அப்படியே அச்சு அசலா என் சொப்னத்தில பார்த்தேன்” என்றாள் அபர்ணா.