சில நாள்களுக்கு முன்பு தன்னுடன் மிக சகஜமாக உரையாடிக் கொண்டிருந்த தந்தை, பள்ளிக்கூடத்தில் தன்னை இறக்கிவிட்டு வீடு சேர்ந்த பிறகு இல்லாமலானார் எனும் தகவலை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை பகலவனின் மூளை. உற்ற நண்பன், வழிகாட்டி, பாசமிகு அண்ணன், தன்னிகரற்ற தலைவன், மனம் விரும்பும் கோமாளி, மாபெரும் அறிவாளி – இத்தனை பேரின் தனித்தனி இறப்புகள் எத்தகைய வலியைக் கொடுக்குமோ அத்தனை வலியையும் பகலவனுக்கு ஒருசேரக் கிடைத்தது அவன் தந்தையின் எதிர்பாரா மரணத்தில். ஆனால், நேரம் நகர்ந்தாக வேண்டுமல்லவா? ஆற்றங்கரைக்குச் செல்ல வாகனம் காத்துக் கொண்டிருந்தது. அப்பாவுடனான எத்தனையோ பயணங்களை நினைத்தபடியே இறுதியாக ஒருமுறை இருளடர்ந்த மனத்துடன் தன் தந்தையோடு அவ்வாகனத்தில் ஏறிப் பயணித்தான். தன்னை நன்முறையில் வளர்த்த தந்தைக்கு நன்றியுடன் கண்ணீர் மல்க அப்பயணத்தில் ஆற்றங்கரையை வந்தடைந்தான் பகலவன்.
அம்மகானின் அஸ்தியைக் கரைத்து, முடியிறக்கி வரும்போது தன்னுடைய ஆன்மாவிலும் பெரும்பகுதியை அங்கேயே விட்டு வருவதைப் போல பகலவன் உணர்ந்தான். அவன் அப்பாவின் மொட்டைத் தலை மட்டும் தனக்கு வரவில்லை; அவரது பொறுப்புகளும் இனி அவனுடையதுதான் என உணர்ந்தவாறு வீடு வந்து சேர்ந்தான். உறவினர்களுள் சில கலாச்சாரக் காவலர்கள் வெளியே கூடாரத்தில் குடித்தபடியும் சீட்டாடியபடியும் இருந்தனர். அதில் பகலவனின் மாமா மகன் வர்மாவும் அவனது நெருங்கிய நண்பன் ஷர்வினும் அமர்ந்து சீட்டாடிக் குதூகலித்துக் கொண்டிருந்தனர். அத்தனை வலியும் வேதனையும் அனுபவித்து வந்திருக்கும் பகலவனைப் பார்த்த இருவரும்,
“டேய்! பகலவன் அப்டியே கருப்பு கமலஹாசன் மாதிரியே இருக்காண்டா!”
“அதென்ன படம் அது? கடவுள் பாதி மிருகம் பாதி?”
“ஆளவந்தான்.. ஆமாமா.. ஆளவந்தா…” எனக் குரைக்கத் தொடங்கிவிட்டனர்.
போதை ஒரு மனிதனை என்னவெல்லாம் செய்யவைக்கும் என்று பல எடுத்துக்காட்டுகளைப் பகலவன் செய்திகளில் பார்த்திருந்தாலும், நொந்துபோன மனநிலையில் இருந்த பகலவனுக்கு மனதுக்குள் தனது தந்தை இருந்திருந்தால் இவையெல்லாம் நடந்திருக்காதே என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது.
அருகிலிருந்த பூச்செடிகளைத் தூக்கி மண்டையில் வீசிவிடலாமா?
அவர்களது மோட்டார் சைக்கிளை எட்டி மிதித்து அவர்கள் மீது விழவைத்து விடலாமா?
அவர்களது பாட்டில்களை உடைத்து அவர்கள் அடிவயிற்றில் சொருகிவிடலாமா?
இத்தனை எண்ணங்களும் மடமடவெனத் தன்னை ஆட்கொள்வதை அறிந்துகொண்ட பகலவன் உடனே வீட்டினுள் ஓடிச்சென்று தனியறையில் அடைத்துத் தலையணையில் முகத்தைப் புதைத்துத் தனது ஓலம் யாருக்கும் கேட்காவண்ணம் அழுதுகொண்டிருந்தான். ஏதோவொன்று அடித்தொண்டையைக் கவ்வுகிற உணர்வு அவனுக்கு ஏற்பட்டது.
– – – – –
தந்தை இறந்து ஆறு மாதங்களாகிவிட்டன. வாழ்க்கை இன்னும் நகர்ந்துகொண்டுதான் இருக்கிறது எனும் உண்மை புலப்படத் தொடங்கியது பகலவனுக்கு. அவனது எஸ்.பி.எம் தேர்வு முடிவுகளுக்கேற்றார்போல ஒரு நல்ல கல்லூரியில் உயர்கல்வியைத் தொடரும் வாய்ப்பு கிட்டியதைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது சீனக் கடையில் ஒரு சிறிய இரவு உணவு விருந்து. பகலவன், அம்மா, அத்தை, மாமா நால்வரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் மாமாவின் கைப்பேசிக்கு ஓர் அழைப்பு வந்திருந்தது.
“சொல்லுப்பா.. நாங்களா.. நாங்க வீட்டுல இல்லையே.. லாய்வோங் சீனக் கடையில சாப்டுட்டு இருக்கோம்.. வர்றியா? வா வா.. ஓகே.. சரி சரி.. ஓகே பாய்..”
அத்தையும் கண்களால் என்னவென்று வினவ, மாமா, “ஷர்வின்தான் போன் பண்னான்.. குரல் ஒரு மாதிரியா இருந்தது.. இங்கே வர்றேன்னான்.. சரின்னுட்டேன்..” என்றார்.
ஜப்பானீஸ் தௌ சுடச் சுட ஆவி பறக்க வந்துகொண்டிருந்தது. அதனை மேசைமீது வைக்க உணவகத்தின் ஊழியர் தடுமாறும்போது பகலவன் சற்று எழுந்து மற்ற உணவுப் பண்டங்களை அப்புறப்படுத்தி மேசையில் இடத்தை ஒதுக்கிக் கொடுத்தான். அப்போதுதான் அவனுக்கோர் எண்ணம் தோன்றியது. “ஷர்வின்-ஆ? ஆளவந்தான்னு சொல்லிக் கலாய்ச்சவனாச்சே? அவன் எதுக்கு இங்க வர்றான்?” அவன் உடல் அருவருப்படையத் தொடங்குவதற்கும் ஷர்வின் பைக் வந்து சேர்வதற்கும் சரியாக இருந்தது.
வந்தவன் உடனே மாமாவைக் கட்டிப்பிடித்து அழத்தொடங்கிவிட்டான்! அத்தையும் அம்மாவும்கூடப் பதறிப்போய் விட்டனர். என்ன சொல்வதென்று தெரியாமல் பகலவனும் ஒருநிமிடம் அரண்டுவிட்டான். ஷர்வினுடைய வீட்டில் திருடுபோய்விட்டதாம். வந்தவர்கள் ஷர்வினுடைய தந்தையையும் பலத்த காயத்துக்குள்ளாக்கிவிட்டார்களாம். ஷர்வினின் அண்ணன்தான் அவனது தந்தையை அவசரமாக மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகத் தெரிந்தது. அவன் அழுது அழுது பேசியதில் இவை மட்டும்தான் சரியாக விளங்கியது.
ஏதோவொரு இனம்புரியாக் காரணத்தினால் பகலவனுக்கு அவனது கண்களிலிருந்து வந்த கண்ணீரைப் பார்க்கப் பிடித்திருந்தது. தவறென்று உணர்ந்ததும் அதை இரசிப்பதை நிறுத்திக்கொண்டான் என்றாலும், போலீசாரிடம் புகார் கொடுக்கச் செல்லும் வழியெல்லாம் காருக்குள் அமர்ந்து ஷர்வினின் வாடிய முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான் பகலவன்.
– – – – –
தன்னைக் காயப்படுத்திய ஷர்வின் விட்ட கண்ணீரைப் பற்றியெல்லாம் பகலவன் மறந்து பல காலமாகிவிட்டது. டிசம்பர் மாதக் கல்லூரி விடுமுறைக் காலத்தில் எதேச்சையாக மாமாவின் வீட்டிற்குச் சென்ற பகலவனுக்கும் அவன் தாயாருக்கும் மற்றுமொரு பேரதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. மாமாவின் மகன் வர்மா அவ்வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்து கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தான்!
சூதாட்டத்தில் ஜெயிக்கப் போனவன் அவனது துரதிர்ஷ்டத்தால் சேர்த்துவைத்திருந்த மொத்தத் தொகையையும் இழந்து வீடு வந்து சேர்ந்திருக்கிறான். அத்தையும் ஒரு பக்கம் அழுதுகொண்டிருந்தார். மாமா இன்னும் வேலை முடிந்து வரவில்லை. பகலவனுக்கு அச்சமயத்தில் ஓர் எண்ணம் தோன்றியது. ‘தன்னைக் கேலி செய்த இரண்டு பேரின் கண்ணீரையும் ஒரு வருட காலத்திற்குள் பார்த்துவிட்டோமே?’ என்றெண்ணி ஒருவித நமட்டுச் சிரிப்பு சிரித்துக்கொண்டான். சட்டெனத் ‘தப்பு’ என்பதுபோல தலையாட்டிக்கொண்டு, தனது எண்ணம் சரியல்ல என்று தனக்குத் தானே ஊர்ஜிதப்படுத்திக் கொண்டான்.
– – – – –
தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையிலான ‘நறுந்தமிழ் விழா’வில் பல போட்டிகள் நடத்தப்படும். ஆனால், கல்லூரியைப் பிரதிநிதித்து அப்போட்டிகளுக்குச் செல்லும் வாய்ப்பு வெகு சிலருக்கே கிடைக்கும். அத்தகைய திறன்களுக்கான தேடல் பகலவனது கல்லூரியிலும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நாடகப் போட்டியில் நடிக்க வேண்டுமென நினைத்த பகலவன் நேர்முகத் தேர்விற்குச் சென்றான். ஆனால், நடிக்கவேண்டியவர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை விரிவுரையாளர்கள் சீனியர்களிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றிருக்கின்றனர். ஏற்கனவே அந்தச் சீனியர்களில் ஒருவரான ஷாலினியைப் பட்டிமன்றத்தில் தோற்கடித்துவிட்டான் பகலவன். அதை மனத்தில் வைத்து ஏதும் செய்துவிடுவாரோ என்ற பயம் அவனுக்குள் வளர்ந்துகொண்டுதான் இருந்தது.
பகலவன் உள்ளம் மட்டுமே உயர்ந்திருந்ததே தவிர உடல் அல்ல. அதுவே அங்கு அவனுக்கொரு தடையாகிவிட்டது. “மூளை வளர்ந்தா மட்டும் பத்தாது.. ஆளும் கொஞ்சமாவது வளரனும்.. கீழே உக்காந்து பாக்குற ஆடியன்ஸ் எக்கி நின்னு பாக்கற அளவுக்கு இருக்கக்கூடாதுல்ல.. அவ்வளவு உயரமான ஸ்டூலுக்கு நாங்க எங்க போறது?” அவனது சீனியர் ஷாலினி வேறொருவரிடம் கூறியது அவனது செவி வரை எட்டித் தொலைந்துவிட்டது. சிறுவயது முதலே தனது உயரத்தைப் பற்றி சற்றும் கவலை கொள்ளாத பகலவன் அக்கல்லூரியில் பலரும் உயரமாக இருப்பதைப் பார்த்து அசந்திருக்கிறான். ஆனால், அவனது தன்னம்பிக்கை அவர் கூறிய அக்கூற்றைக் கேட்டதும் நொறுங்கிவிட்டது. அவன் நினைத்திருந்தால் அவரிடம் வாதம் செய்தோ, அல்லது விரிவுரையாளரிடம் புகார் அளித்தோ போட்டியினுள் நுழைந்திருக்கலாம். ஆனால், விருட்டென ஏதோவொன்று அவன் தொண்டையைக் கவ்வும் உணர்வு எழுந்த கணமே, அழுகை வருவதை உணர்ந்தவன் தனது அறைக்கு விரைந்தோடிவிட்டான்.
தனது கல்லூரி வாழ்க்கை முடிய இன்னும் ஒரு வருடம் இருக்கும் பட்சத்தில், ஒருநாள் அவனது சீனியர் கல்லூரியின் சிற்றுண்டிச் சாலையில் தனியாக அமர்ந்து யாரிடமோ கைப்பேசியில் உரையாடிக் கொண்டிருந்தார். வெளியில் செல்ல தனது ஊபருக்காகக் காத்துக்கொண்டிருந்த பகலவன் யாரும் இல்லாத அவ்விடத்தில் இவர் மட்டும் என்ன செய்கிறார் என்று ஓரமாய் நின்று கவனிக்கலானான். சற்று நேரத்தில் உரையாடல் சினுங்கலாகி, விசும்பலாகி, கேவலாகி, ஓலமாகி அழத்தொடங்கிவிட்டார் ஷாலினி சீனியர். அவரது காதலன் அவரை விட்டுச் சென்றுவிட்டார் போலும்.. அந்நேரத்தில் சரியாக ஊபர் வந்ததும் அதில் ஏறிச் சென்றுவிட்டான் பகலவன்.
பயணம் முழுதும் சிந்தித்துக்கொண்டே வந்த பகலவனுக்கு ஒரு விஷயம் பிடிபட்டது. தன்னை யாரெல்லாம் காயப்படுத்துகிறார்களோ, அவர்களது கண்ணீரெல்லாம் பகலவனது கண்ணில் தென்பட்டுவிடுகிறது. இது அவனது தந்தையின் இறப்பிற்குப் பிறகு நடக்கிறதா, அல்லது எப்போதிருந்தோ நடப்பதை இவன் இப்போதுதான் கவனிக்கத் தொடங்குகிறானா என்று சிந்திக்கத் தொடங்கியவனுக்குத் தொண்டை மேலும் அடைப்பது போன்றாகிவிட்டது. ஏனென்றால், சிறுவயது முதலே அவன் கவனிக்கத் தவறிய காட்சிகளின் தொகுப்பை அப்போதுதான் அவன் மூளை மறுஒளிபரப்பு செய்தது.
பகலவனின் நினைவுப்பெட்டகத்திலிருந்து சில சம்பவங்கள் :
- சிறுவயதில் பகலவன் செய்யாத தவறுக்காக அவனைத் தண்டித்த ஆசிரியர் மறுநாள் பள்ளியின் வாசலிலேயே விபத்துக்குள்ளாகியிருந்தார்.
- பகலவனிடமிருந்து சாக்லேட்டைப் பிடுங்கித் தின்ற பக்கத்துவீட்டுச் சிறுவன் கால்வாயில் விழுந்து கால்கள் உடைந்திருக்கின்றன.
- பந்துவிளையாட்டில் அவனைத் தள்ளிவிட்டவனைத் திடலில் பாம்பு தீண்டியிருக்கின்றது.
- ஆயிரம் பேர் முன்னால் தன்னை அவமானப்படுத்திய பெண்மணி ஒருவர் வட்டி முதலைகளிடம் சிக்கிக்கொண்டார்.
இதுபோன்ற பல காட்சிகள் அவனுக்குள் அடுக்கடுக்காகத் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. ஆக, தனக்குள் ஏதோவொரு சக்தி இருந்திருப்பதையும் அதைத் தான் இப்போதுதான் உணர்ந்திருப்பதாகவும் அறிந்துகொண்ட பகலவன் காரிலிருந்து சூப்பர் ஹீரோவாக இறங்கினான். இதனால் தனக்கென்ன இலாபம்? இது வரமா சாபமா என்றெல்லாம் அவன் யோசிக்கவில்லை. தன்னை நோகடிப்பவர்களின் கண்ணீரைக் காண்பது ஒரு சக்தியென்றே நம்பினான். அந்த நம்பிக்கையிலேயே கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துவிட்டான். தனது திறமைக்குத் தீனி போடும் வகையில் மலேசியாவிலேயே சிறந்ததொரு அலுவலகத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியமர்த்தப்பட்டான்.
– – – – –
பணியிடத்தில் மிகவும் நேர்த்தியாகவே தனக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளைச் செய்து முடிக்கின்ற பகலவனுக்கு அவனது சிரமங்களைப் புரிந்துகொள்ளாத மேலாளர் ஒருவர் அமைந்திருந்தார். திருமதி ஜனனி வந்தாலே அலுவலகத்தில் இருக்கும் அனைவரும் பதறிவிடுவர். மற்ற மேலாளர்களைப் பற்றிப் புறம்பேசும் அக்குழு, இவரைப் பற்றிப் புறம் பேசக்கூட அஞ்சும்.
ஆனால், பகலவனுக்கு அவரைப் பார்த்துப் பயமேதும் இல்லை. நெருக்கடியான திகதிகளில் அவனுக்கு வேலை வைப்பதும், நேற்று கொடுத்த வேலைகளை இன்று கேட்பதுவுமாகவே இருந்தார் அவர். இறுதி கணத்தில் அவர் கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் முடித்துக் கொடுப்பதால் தூக்கமின்மை, உடல்நலக் குறைவுகள் ஏற்படுவதை அவரிடம் சொல்வதற்குச் சரியான நேரத்தை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தான் பகலவன். ஆனால், அச்சமயம் அவனுக்குக் கிடைப்பதில் சில சிக்கல்கள் இருந்தன.
மேலாளரின் கணவர் எப்போதும் வெளியே காரில் காத்துக்கொண்டிருப்பார். அவர் கர்ப்பமான காலத்திலிருந்தே இவர்தான் அலுவலகத்திற்கு வந்து அவரை ஏற்றிக்கொண்டு செல்வார். அதுவும் இது ஒன்பதாவது மாதம் என்பதால் அக்கறை ஒன்பது மடங்கு அதிகமாக இருந்தது. இருப்பினும், தனது நியாயமான கோரிக்கைகளை அவர் கேட்டே தீரவேண்டுமென்ற எண்ணம் மட்டும் பகலவனுக்குள் என்றும் இருந்தது.
ஒருநாள் வேலை முடிந்து வீடு திரும்புவதற்கு முன்பாக அவரது அறையில் சென்று சந்திக்க முடிவு செய்திருந்தான் பகலவன். இப்பணியிடத்தில் அவன் இதுவரை எதிர்கொண்ட சவால்களையும் அதனை மேம்படுத்தும் வழிமுறைகளையும் தெளிவாக எடுத்துக்கூறி அவருக்குப் புரியவைத்துவிட முடியும் எனும் நம்பிக்கையுடன் சென்ற பகலவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
“வந்து மூணு மாசத்துக்கே இவ்ளோ பேசறீங்க? எப்படி இதே வேலையில சஸ்டைன் பண்ணப்போறீங்க நீங்க? பேசாம இந்த வேலைய விட்டு, வேற வேல தேடிக்கோங்க.. அதுதான் உங்களுக்கு பெட்டர் ஆப்ஷன்” – என்று கூறியவாறே அறையிலிருந்து வெளியேறினார். பகலவனோ, “மேடம்.. ஸாரி மேடம்.. அப்படிச் சொல்ல வரல மேடம்” என்று சொல்லப்போனான். “Back Off Please, Mister!” என்று அவர் முகத்தில் அடித்தது போல் கூறியது பகலவனின் மனத்தைப் பெருமளவு சங்கடப்படுத்தி அவமானத்தின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டது.
மேலாளர் ஜனனி மெதுவாக நடந்து அலுவலகத்திற்கு வெளியே சென்றார். காரினுள் ஏறினாரா இல்லையா என்றெல்லாம் தெரியாது. பகலவன் அவர் சென்ற தடத்தைத் திரும்பிப் பார்க்கவே வெட்கப்பட்டு நின்றுகொண்டிருந்தான். அடித்தொண்டையை ஏதோ கவ்வுவது போன்ற மனவுணர்வு. சற்றும் எதிர்பாரா கணப்பொழுதில் திருமதி ஜனனியின் அலறல் கேட்டது! அலுவலகத்தின் அத்தனை ஊழியர்களும் உடனே அவரது காரை நோக்கி ஓடத் துவங்கினர்.
பகலவன் தனது இருக்கைக்கு வந்து அமர்ந்தான். நீண்ட பெருமூச்சொன்றை இழுத்துவிட்டு, கண்களை மூடிக்கொண்டான். மேலாளர் ஜனனிக்கு நன்முறையில் குழந்தை பிறந்து, அக்குழந்தையை அவர் கையில் ஏந்தும்போது அவருக்கு வரக்கூடிய ஆனந்தக் கண்ணீரைக் கற்பனை செய்துகொண்டான்.