இணைய இதழ்இணைய இதழ் 50கட்டுரைகள்

செவ்வக வடிவக் கதைகள் – அழகுநிலா 

கட்டுரை | வாசகசாலை

ழுத்தாளர் நரன் ‘கேசம்’ என்ற சிறுகதைத் தொகுப்பை 2017-ஆம் ஆண்டும் ‘சரீரம்’ என்ற சிறுகதைத் தொகுப்பை 2019- ஆம் ஆண்டும் தனது ‘சால்ட்’ பதிப்பகம் மூலமாக வெளியிட்டுள்ளார். இரண்டிலும் சேர்த்து மொத்தமாக இருபத்தி மூன்று சிறுகதைகள் உள்ளன. இவரது சிறுகதைகளில் ஒரு கதையின் தலைப்பு ‘செவ்வக வடிவப் பெண்கள்’ . இந்தத் தலைப்பு இவரது அனைத்து கதைகளையும் ஒரு குடையின் கீழ் தொகுத்துக்கொள்ள எனக்கு உதவியது. அதாவது ‘செவ்வக வடிவக் கதைகள்’ என்ற தலைப்பில்.

எனது வாசிப்பில் இவரது சிறுகதைகளை ஒரு செவ்வக வடிவத்திற்குள் அடக்கிவிட முடிந்தது. நரன் கதைகள் அடங்கிய செவ்வக வடிவத்திற்கு கலைகள், கிறிஸ்துவ தொன்மம், உடல், திரிபு அல்லது பிறழ்வு என்ற நான்கு முனைகள் உள்ளன.

கலைகள்: 

சிற்பம், இசை, ஓவியம் போன்ற கலைகள் அல்லது கலைஞர்கள். சாதாரண மனிதர்களால் எளிதில் புரிந்துகொள்ள இயலாத கலைஞர்களின் மனதை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளன சில சிறுகதைகள். ஒரு கலைஞனின் லௌகீக வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளிலிருந்து கலை எழுந்து வருதல் அல்லது வேறொன்றாக திரிபடைதலின் அடிப்படையில் எழுதப்பட்ட சிறுகதைகள் இவை. உதாரணத்திற்கு ‘உடல்’ சிறுகதையில் தான் முதன் முதலாக நிர்வாணமாக பார்த்த பெண்ணின் மரணம் அவனது கலை மனதை திரிபடையச் செய்கிறது. தான் பார்க்கும் எல்லா பெண்களிலும் அல்லது நிர்வாணங்களிலும் அவளையே பிரதி எடுப்பவனாக அவன் மாறுகிறான். ‘மானேந்தி’ கதையில் ஸ்தபதியாக இருக்கும் மானேந்திக்கு அவனது தந்தை கண் திறக்காமல் விட்ட அம்மன் சிலையின் கண்ணைத் திறக்க நாச்சி என்கிற சிலையோடு கலவியும், தன் தாயின் மரணமும் தேவையாக இருக்கின்றன. ‘நீல நிறம்’ கதையில் தாய்மையையும் கருணையையும் கூட்டிக் காண்பிக்க மேரியின் ஓவியத்தில் கதைநாயகன் பயன்படுத்தும் நீல நிறம் அவனுக்குள் கிளர்த்தும் காமத்தையும் அதன் விளைவால் திரிபடையும் அவனது ஓவியங்களையும் காட்டுகிறது. ‘இதோ என் சரீரம்’ கதையில் நாயகி புகைப்படத்தில் மட்டுமே பார்த்த லீவிஸின் மீதும் அவனது கவிதைகளின் மீதும் மோகம் கொண்டு அதன் தாக்கத்தில் தனது ஓவியத்தை வரைகிறாள். மற்ற கலைகளை விட ஓவியத்தின் பாதிப்பு நரனின் கதைகளில் அதிகம் காணப்படுகிறது. உதாரணத்திற்கு ‘வாசனாதி’ கதையில் அந்தப்புரத்திற்கு போகும் வழியில் காணப்படும் ரோஜா வனத்தின் நடுவே முக்காடிட்டு நடந்து செல்லும் இளம்பெண் ஒருவளின் ஓவியமும் பெருமுலை தாங்கிய பெண் ஒருத்தி நீண்ட ஆண்குறி கொண்டவனோடு சம்போகம் கொள்ளும் ஓவியமும் கதையோடு ஓரிடத்தில் பொருத்தமாக இணைந்து கொள்கின்றன. ‘அமரந்தா’ சிறுகதையில் அமரந்தாவும் அவள் நண்பனும் ஓவியர்களாக இருக்கிறார்கள். ‘உடைப்பு’ சிறுகதையில் சிறைக்குள் அடைக்கப்பட்ட ஆதிவாசி ஒருவன் சிறைக்குள் அவனது அறை முழுக்க அடுப்புக் கரித்துண்டால் ஓவியங்களை வரைந்து தள்ளுகிறான். அவன் வரைந்த கருப்பு பாம்பு இறுதியில் நாயகனின் மனதுக்குள் ஏறிக்கொள்ள வீடே சிறைச்சாலையாக மாறுகிறது. இப்படியாக கலைகளும் கலைஞர்களும் நரனின் கதைகளில் முக்கியமானவர்களாய் இருக்கிறார்கள்.

கிறிஸ்துவ தொன்மம்: 

தமிழ் சிறுகதைச் சூழலில் இந்துத்தொன்மங்களையும் மரபுகளையும் சிறுகதைக்குள் கொண்டு வருவது புதிது கிடையாது. தொன்மங்களை படிமமாக மாற்றுவதையும் தொன்மங்களை மீட்டுருவாக்கம் செய்வதையும் பழைய எழுத்தாளர்கள் தொடங்கி நவீன எழுத்தாளர்கள் வரை அனைவரும் தங்கள் படைப்புகளில் முயற்சித்துக்கொண்டே இருக்கிறார்கள். சிலர் அதில் பெரும் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். நரன் இவர்களிடமிருந்து வேறுபட்டு கிறிஸ்துவ தொன்மங்களையும் மரபுகளையும் தனது சிறுகதைகளில் கொண்டு வருகிறார். ‘இதோ என் சரீரம்’ , ‘யேசு’ போன்ற சிறுகதையின் தலைப்புகளே அதை உறுதி செய்கின்றன. ‘கேசம்’ சிறுகதையில் மக்தலீனா ஏசுநாதரின் பாதங்களுக்குத் தன் கூந்தலால் தைலம் தோய்த்ததைப் போல ஆவுடை, ஆத்தியப்பனின் புண்ணான கால்களுக்குத் தனது கூந்தலால் மருந்திடுகிறாள். ‘யேசு’ சிறுகதையில் யேசுவின் வாழ்வில் நடப்பதைப் போன்றே தனது வாழ்விலும் நடைபெறும் சம்பவங்களால் பதற்றமடையும் நாயகன் இறுதியில் மரணத்தைச் சந்திக்கிறான். ‘நீல நிறம்’ கதையில் ஏசுவின் பிறப்பு ஓவியத்தை வரைபவனுக்கு ஏசுவே பிறக்கிறார். இப்படியாக பல கதைகளில் விவிலியக் கதாபாத்திரங்களும் கிறிஸ்துவ நெடியும் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. 

உடல்:

உடல் அல்லது உடல் உறுப்புகள். இவரது சிறுகதைத் தொகுப்புகளின் தலைப்புகளே (கேசம் & சரீரம்) இந்த முனைக்கு சரியான உதாரணம். மனதின் எல்லையில்லாத ஆற்றல் உடல் என்ற பரு வடிவத்தால் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இயங்க வேண்டிய கட்டாயம் மனித பிறப்பிற்கு விதிக்கப்பட்டுள்ளது. காமம் மனதோடு தொடர்புடையதாக இருந்தாலும் அதை  நிறைவேற்றிக்கொள்ளும் வாகனமாக உடல்தான் இருக்கிறது. உடலின் வழியாகத்தான் உலகத்தையும் அருகிலிருப்பவர்களின் உணர்வுகளையும் அறிந்துகொள்கிறோம். நாசி இருந்தும் நுகர்வுத்திறன் இல்லாமலிருந்தால் நம் வாழ்க்கை எப்படி இருக்கும்? திருமண பந்தத்தில் நம் துணை நாம் சொல்வதற்கு காது கொடுக்காதவராக இருந்தால் வாழ்க்கை சுகிக்குமா? இரைச்சலோடு வாழ்ந்த மனிதருக்கு நிசப்தம் நிம்மதியைக் கொடுக்குமா? (பெண் காது) கண்களை இழந்தவர்களை இசை இறுக்க அணைத்துக்கொள்கிறதா? (வாசனாதி) பார்வை இல்லாவிட்டால் அம்மன் கூட தடுமாறி விழுவாளா? (மானேந்தி) நோய்மை கொண்ட உடல் காமம் கொள்ளத் தகுதியற்றதா? (கேசம்) நிர்வாண உடல் எப்போதும் மோகம் கொள்ளக்கூடியதாகத்தான் இருக்கிறதா? (உடல்) இப்படி பல கேள்விகளை நரனின் கதைகள் மூலம் வாசகர் எழுப்புவதன் வழி உடல் அல்லது உடல் உறுப்புகள் மனித வாழ்வில் என்னவாக இருக்கின்றன என்பதை ஆழமாகப் புரிந்துகொள்ளலாம். 

திரிபு அல்லது பிறழ்வு: 

இது நரனின் கதைகளில் மிக முக்கியமான ஒன்றாய் இருக்கிறது. வாழ்வின் இருண்ட கட்டங்களில் மனிதர்களில் ஏற்படும் திரிபு அல்லது பிறழ்வு இவரது பெரும்பாலான கதைகளில் காணப்படுகிறது. ‘ரோமம்’ கதையில் தீயில் கருகி இறந்த அம்மாவின் முடி பொசுங்கும் மணம் அம்மாவின் வாசத்தைக் கொண்டு வருவதாக எண்ணுபவன், மெல்ல முடியை பொசுக்கி நுகரும் பழக்கத்திற்கு அடிமையாகிறான். அந்தப் போதையில் தன்னையே இழக்கிறான். இறுதியில் பெண்களின் ரோமத்தால் தன்னைத் தானே எரித்துக்கொள்கிறான். ‘மூன்று சீலைகள்’ சிறுகதையில் ஒரு வருடத்திற்குள் தனது குடும்பத்தில் மூன்று மரணங்களை எதிர்கொள்பவன் மனதளவில் பிறழ்ந்து இறுதியில் தூக்கில் தொங்குகிறான். ‘செவ்வக வடிவப் பெண்கள்’ கதை லீலா தாமஸ் தனது துணிக்கடை பொம்மையைப் புணர்வதும் இறுதியில் அதை அடித்து சின்னாபின்னமாய் ஆக்குவதும் முறிந்து போன திருமணத்தால் ஏற்பட்ட பிறழ்வு மனதைக் காட்டுகிறது. ‘மயில்’ சிறுகதையில் அதீத தனிமை தரும் பிறழ்வால் டெபோரா தன்னைச் சுற்றி இருக்கும் அத்தனை உயிர்களையும் கொன்றுவிட்டு தன்னையும் மரித்துக்கொள்கிறாள். ‘உடைப்பு’ சிறுகதையில் வீடு சிறையாக மாறிவிட்டதாக எண்ணி மனதளவில் திரிபடையும் நாயகன் வீட்டை இடித்து தள்ளுகிறான்.

இப்படியாக கலைகள், கிறிஸ்துவ தொன்மம், உடல், திரிபு அல்லது பிறழ்வு என்ற நான்கு முனைகளைக் கொண்ட செவ்வக வடிவத்திற்குள் நரனின் கதைகளை அடக்க முடிகிறது. சொல்முறையும் கவித்துவமான மொழியும் இவரது கதைகளின் பலமாக இருக்கின்றன. 

எழுத்தாளர் நரன்

இவரது கதைகளில் எனக்குச் சில விமர்சனங்களும் இருக்கின்றன. இவரது பெரும்பான்மையான கதைகள் ‘யதார்த்தவாதக் கதைகள்’ (ரியலிசம்) கிடையாது. ‘மீ யதார்த்தவாதம்’ (சர்ரியலிசம்) எனக் கருதலாமா என்றால் சில கதைகளை அப்படிச் சொல்லலாம். ‘மீ யதார்த்தவாதம்’ என்பது நம் ஆழ் மனம் அறியக்கூடிய வேறு ஒரு யதார்த்தம். ‘உடல்’ , ‘உடைப்பு’ , ‘மூன்று சீலைகள்’ , ‘ரோமம்’ இந்த நான்கு கதைகளும் எனது வாசிப்பில் சர்ரியலிசக் கதைகளாகத் தோன்றின. ஆனால், சில கதைகள் சர்ரியலிசக் கதையாக மாறாமல் வெறும் கற்பனாவாதக் கதையாகவே நின்று போகின்றன. உதாரணத்திற்கு ‘கேசம்’ சிறுகதையில் புண்ணான கால்களைக் குழந்தையாக பார்ப்பதென்பது அதீக கற்பனையாக எனக்குத் தோன்றியது. கிறிஸ்துவ தொன்மத்தைப் பயன்படுத்த வேண்டுமென்ற நிர்ப்பந்தத்தில் ஒரு சட்டகம் போட்டு அதற்குள் முடிவை முன்கூட்டியே தீர்மானித்து எழுதியது போலிருந்தது. 

சிறப்பான சொல் முறையும் கவித்துவமான மொழியும் கொண்டு வாசகனை விரைவாக உள்ளிழுத்துக் கொள்ளும் ‘மரிய புஷ்பத்தின் சைக்கிள்கள்’ , ‘சிறை’ ,‘பரிராஜா’ , ‘லயன் சர்க்கஸ்’ போன்ற கதைகள் பலவீனமான முடிவால் ஏமாற்றத்தை ஏற்படுத்துகின்றன. பெரும்பாலான கதைகள் பழைய காலகட்டத்தைத் தனது களமாகக் கொண்டிருக்கின்றன. இப்படி எழுதக்கூடாது என்றில்லை. ஆனால், பழைய காலகட்டம் பழைய சிறுகதைகளின் சாயலைக் கொண்டிருக்கக் கூடாது. பிரிட்டிஷ் காலகட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட ‘1921’ நல்ல வாசிப்பனுபவத்தைத் தந்த சிறுகதை. ஆனால், அதே சமயம் ‘வாரணாசி’ சிறுகதை ஜெயகாந்தன் சிறுகதையைப் படித்தது போன்றதோர் உணர்வை ஏற்படுத்தியது. 

“ஒரு நல்ல சிறுகதை தன்னைத் தானே எழுதிக்கொள்ளும்”என்பது வெற்றி பெற்ற எழுத்தாளர்கள் சொல்லும் தாரக மந்திரம். நரன் அப்படி எழுதிக்கொள்ள அனுமதிக்காமல் எல்லாவற்றையும் தீர்மானித்துவிட்டு எழுதுகிறாரோ என்ற ஐயம் தோன்றுகிறது. 

இரண்டு சிறுகதைத் தொகுப்புகளையும் வாசித்து முடித்தவுடன் சில கதைகளைத் தவிர மற்றவை நினைவிலிருந்து மறைந்து போகும் அபாயமிருந்தாலும் பல காட்சிகள் அப்படியே நினைவில் நிற்கின்றன. ‘சிறை’ சிறுகதையில் பழனியின் சட்டை மின்சார வயர்களில் மாட்டிக்கொண்டு அவனது வாழ்வைப் போலவே சிதைந்து போகும் சித்திரம், ‘உடல்’ கதையில் நூற்றுக்கணக்கான உடல்கள் அசைந்தபடியே வந்து நாயகனின் உடலின் மேல் விழுந்து மூடும் சித்திரம், ‘மானேந்தி’ கதையில் எரியூட்டிய அம்மாவின் உடலை அவளது நிறைய கைகளால் மூடி வைத்தது போன்ற சித்திரம், ‘உடைப்பு’ கதையில் பாதை மறந்து தன் கூட்டத்தோடு இணைய முடியாது தினமும் இரவெல்லாம் பிளிறிக்கொண்டே இருக்கும் காட்டு யானையைப் போல மனப்பிசகாகி குரல் வற்றி, மெலிந்து சிறைக்குள் செத்துப்போகும் பழங்குடியின் சித்திரம் என சொல்லிக்கொண்டே போகலாம். என்றென்றும் எனது மனதை விட்டு நீங்காத இக்காட்சிகள் சிறுகதைக்குள் கவிஞராக நரன் வெற்றியடைந்த தருணங்களென நான் எண்ணுகிறேன். 

******

azhagunila@yahoo.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button