
“வௌக்க அணைக்கச் சொன்னா, கேக்குறாளா அவ… உள்ள என்னாடி பண்ற… கரன்ட்டு பில்லு ங்கொக்காவா வந்து கட்டுறா..?”
“வௌக்க அணைச்சு அர மணி நேரம் ஆச்சு… பேசாம தூங்குறியளா என்னா சொல்றிய…”
அறைக்குள் படுத்திருக்கும் அம்மாவின் அதட்டலுக்கு, முன் வீட்டின் வெறுந்தரையில் நிறைபோதையில் சுருண்டு கிடக்கும் அப்பா, வாயையும் சூத்தையும் பொத்திக்கொள்வதுபோல் கேலி பாவனை செய்து அமைதியாகியிருப்பார் என்றுதான் நினைத்தேன். மாறாக, “அப்றம் எப்டிறி வெளிச்சம் அடிக்குது… இங்க நான் ஒரு ஆம்பள கத்திட்ருக்கேன்… ங்கொக்கா செவிடி மாரி ஒனக்கும் காது செத்துப் போச்சாடி…” என்று இரைந்தார். இந்த வார்த்தைகள் அம்மாவை மேலும் கோபத்துக்குள்ளாக்கும் என்பதால், பதிலடி என்னவாக இருக்கும் என்று யோசித்தேன். ஆனால், அதற்குள் யாரோ “சித்தி…” என்று அழைக்கும் குரல் கேட்டது. “சித்தியா..? யார்றா நீ இந்நேரத்துல…” அப்பா இப்பவும் கண்களைத் திறக்காமலேதான் கேட்டிருப்பார்.
“நான்தான் சித்தப்பா…” என்றது அந்தக் குரல். இது சின்ன அண்ணனின் குரல் போல இருக்கிறதே என்று படுக்கையில் இருந்து எழுந்தேன். அதற்குள் அப்பா, “நான்தான்னா… பேருல்லயா ஒனக்கு..?” என வம்பாய்க் கேட்க, “வாயிலயே மிதிச்சிப்புடுவேன்… ஒழுங்கு மரியாதையா இறுக்கிகிட்டுத் தூங்கு… குடிச்சா வாயி செத்த ஓயிரதுல்ல..?” வெறும் வார்த்தையாக மட்டும் சொல்லாமல், நிஜமாகவே மிதிப்பது போல் காலைத் தூக்கிக்கொண்டு அருகில் ஓடியது அம்மா. அப்பா இப்போது நிஜமாவே பயந்து ஒடுங்கினார்.
நான் அறையில் இருந்து வெளியில் வந்து விளக்கைப் போடவும், கேட்டைத் திறந்துவிட்ட அம்மா, “உள்ள வாய்யா..” என்று அண்ணனை வாஞ்சையாக அழைத்தது. அவர் லேசாகத் தயங்க, இருட்டுக்குள் நிறுத்தப்பட்டிருந்த பைக்கின் அருகே நின்றுகொண்டிருக்கும் பெரியப்பாவைப் பார்த்த அம்மா “அத்தான், ஏன் அங்கயே நிக்கிறிய… உள்ள வாங்க..” என்று அழைக்க, அண்ணன் “பராவல்ல சித்தி… நாங்க கௌம்புறோம்…” என்று திரும்பி நடக்க முற்பட்டது.
“ஏன்யா, என்னாச்சு..? எதாவது பிரச்சனையா..?”
“அதெல்லாம் ஒண்ணுல்ல சித்தி…” என்று அண்ணன் பைக் நோக்கிப் போக,
அம்மா அவரின் கையைப் பிடித்து நிறுத்தி, “வீடு வரைக்கும் வந்துட்டு, ஒண்ணுல்லங்குற… சொல்லு..?” என்று அழுத்த, அண்ணன் பெரியப்பாவை ஒருமுறை பார்த்துவிட்டு, அம்மாவிடம் திரும்பி கண்கள் கலங்க, “அம்மாவ காணும் சித்தி…” என்றது.
“என்னய்யா சொல்ற…?”
“இங்க வந்துருக்கும்னுதான் தேடி வந்தோம்… இங்கயும் இல்லன்னு தெரிஞ்சுருச்சு… அதான்…”
“இங்க வரலனா, வேற எங்கப் போயிருக்கும்..?”
“அதான் சித்தி தெரியல … எங்கயாச்சும் போயி வழி தெரியாம நின்னுட்ருக்கா.. இல்ல… வேற என்னமாச்சும்…” என்று சொல்லும்போதே குரல் உடைந்து விம்மி அழுதது. “அய்யய்யா… ஏம்புள்ள… அழதாய்யா… அம்மா அங்கதான்யா இருப்பா…” என்று அம்மாவும் அழ ஆரம்பிக்க, பெரியப்பா பார்வையை வேறுபக்கம் திருப்பிக்கொண்டார். அவர்களின் அழுகையில் என் கண்களும் லேசாகக் கலங்க, கண்களைத் துடைத்துக்கொண்ட அம்மா, என்னைப் பார்த்து “வண்டிய எடுயா..” என்று சொல்லிவிட்டு வீட்டுக் கேட்டை சாத்திப் பூட்டியது.
என் பைக்கில் அம்மாவும், அண்ணனின் பைக்கில் பெரியப்பாவும் ஏறிக்கொள்ள, “நேரா தவசி அண்ணன் வீட்டுக்குப் போயா…” என்றது அம்மா. அம்மா நினைப்பது போல் பெரியம்மா தவசி மாமா வீட்டிற்கெல்லாம் போயிருக்காது. இன்னும் சொல்லப்போனால், எங்க வீட்டைத் தவிர வேறு எங்கும் போகாது. ஓரிடத்தில் கொண்டுபோய் விட்டால்கூட, வழி கண்டுபிடித்து வீட்டுக்குத் திரும்பி வரத் தெரியாது. ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டதாகவே எனக்குத் தோன்றியது.
நான் சிறுவனாக இருக்கும்போது அம்மாச்சி வீட்டிற்குப் போகும்போதெல்லாம், பெரியம்மாவை அம்மாச்சி என்று தான் அழைப்பேன். பெரியப்பாதான் “அவ ஒனக்கு அம்மாச்சி இல்லடா… பெரியம்மா..” என்று திருத்துவார். அருகில் வேறு யாராவது இருந்தால் “அவன் கரெக்கிட்டாதான் சொல்றான்… அவங்க ரெண்டு பேரையும் பாத்தா, அக்கா தங்கச்சி மாரியா இருக்கு… ஆத்தா புள்ள மாரிதானே இருக்கு…” என்பார்கள். தோற்றத்தில் மட்டுமல்ல, அவர்களுக்குள் இருக்கும் பாசமும் தாய்க்கும் மகளுக்குமான பாசம்தான். அம்மாச்சிக்குப் பிறந்த இரண்டுமே பெண் பிள்ளைகள்தான். பெரியம்மா திருமணத்திற்குப் பிறகும்கூட வீட்டைத் தாண்டியதில்லை. பெரியப்பாதான் வாக்கப்பட்டு அம்மாச்சி வீட்டுக்கு வந்தார். அவர்களுக்குப் பிறந்தது இரண்டும் ஆண் பிள்ளைகள். பெரியம்மாவிற்கு அம்மாதான் ஒரே மகள்.
ஒருமுறை நானும் அம்மாவும் அம்மாச்சி வீட்டிற்குப் போயிருந்தபோது, பெரியம்மா கோழி அடித்தது. பெரியப்பாதான் தட்டுக்கூடை போட்டுக் கவிழ்த்து வைத்திருந்த சேவலைப் பிடித்து, கவிச்சி அரிவாள்மனையால் இளநீர் சீவுவது போல் ஒரே சீவாகச் சீவி தரையில் வீசினார். தலையில்லாத சேவல் தவளையைப் போல் தவ்வ, பெரியம்மா ஒரே அமுக்காக அமுக்கி வெந்நீரில் போட்டு அமிழ்த்தியது. றெக்கைகள் ஆய்ந்து மஞ்சள் பூசியதில் ஆரம்பித்து, குழம்பு கொதிக்கும் வரை பெரியம்மாவின் அருகில் இருந்து எல்லாவற்றையும் வேடிக்கையாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். சட்டியை இறக்கி வைக்கும்போது, வெளியே போயிருந்த பெரியப்பா சற்றுத் தள்ளாடியபடி வந்தார். லேசாகச் சாராய மணம் கமழ்ந்தது. பெரியம்மா இரண்டு பேருக்கும் தட்டு நிறைய சோறு போட்டுக்கொண்டு வந்து வைத்தது. பெரியப்பாவின் தட்டில் கோழித்தலை கிடக்க, அதைப் பார்த்த நான், எனக்குதான் கோழித்தலை வேண்டுமென்று அடம்பிடித்தேன். பெரியப்பாதான் “கோழித்தலைய பெரியாளுங்கதான்டா திங்கனும்… சின்னப் புள்ளைக தொடக்கூடாது…” என்றார். “புளுவாதீங்க… கோழித்தல இருந்தாதான் நான் சாப்புடுவேன்…” என்று சாப்பாட்டில் இருந்து எழுந்துகொண்டேன். என்னைப் பிடித்து அழுத்தி உட்கார வைத்த பெரியப்பா, “நீ கோழித்தலய தின்னா ஒன் பெரியாயிக்குத் தல ஆடுற மாரி ஒனக்குத் தல ஆடும்டா… கெழவனா ஆன பொறவு தின்னு… யாரு வேண்டான்னா…” என்று கோழித்தலையை எடுத்துக் கடித்தார். நான் சோற்றுக் கையை உதறியபடி எழுந்து அடுப்படியில் இருந்த பெரியம்மாவிடம் போனேன். பெரியம்மா “என்னய்யா..?” என்பதுபோல் பார்த்தது. அந்தப் பார்வை என்னைப் பேசவிடவில்லை. கவலை தோய்ந்த அந்த முகமும், நடுங்கிக் கொண்டிருக்கும் தலையும் அப்போதுதான் எனக்குள் பதிந்தன. அமர்ந்திருந்த பறவை பறந்து போனதும், அதிரும் கொடிக்கம்பியைப் போல பெரியம்மாவின் தலை நடுங்கிக்கொண்டிருந்தது. பிடித்து நிறுத்தினாலும் நிற்காது என்பது போலவே அது ஆடியது. எனக்குத் தோன்றும் பெரியம்மா தூங்கும்போதும் இப்படித்தான் நடுங்கிக்கொண்டே இருக்குமா என்று. அதற்காகவே பெரியம்மா எப்போது தூங்கும் என்று காத்துக்கொண்டிருப்பேன். ஆனால் ஒருமுறை கூட அது தூங்கியதை என்னால் பார்க்க முடிந்ததில்லை. சற்றுப் பெரியவன் ஆன பிறகு, ஒருநாள் பெரியம்மா எங்கள் வீட்டிற்கு வந்திருந்தது. அன்றிரவு தூக்கத்தின்போது ஒன்னுக்குப் போவதற்காக எழுந்து வெளியே வந்தேன். எங்களின் பழைய வீடு அது. பெரியம்மா திண்ணையில் படுத்திருந்து. நான் யதேச்சையாகத்தான் பார்த்தேன். அப்போதும் பெரியம்மாவின் தலை நடுங்கிக்கொண்டேதான் இருந்தது.
அப்பாதான் சொல்வார் “கல்யாணத்துக்கு முந்தி என் கொழுந்தியா மாரி எந்தப் பொம்பள இருந்தா..! ஒரு கெணத்துத் தண்ணிய ஒத்தையாளா எறைச்சி ஊத்திப்புடுவா… என் சகலை வந்த பொறவுதான், ஆளு பாதியா ஒடைஞ்சி சீரழிஞ்சா…” என்று. அம்மாச்சி வீட்டின் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் பெரியம்மாவும் பெரியப்பாவும் மணக்கோலத்தில் இருக்கும் போட்டோவில், தலை குனிந்திருந்தாலும் பெரியம்மா பெரியப்பாவின் தோள் உயரத்திற்கு இருக்கும். பெரியப்பா இப்பவும் எம்டன் போலதான் இருக்கிறார். அப்பா சொல்வார் “என் சகல நல்ல மனுசந்தான்… ஆனா, கோவம்தான் வெறிநாய்க்கு வர்ற மாரி… மனுசன் என்ன ஏதுன்னல்லாம் பாக்க மாட்டான்… கைல கால்ல கெடைச்சத எடுத்துக்கிட்டு அடிப்பான்… என் கொழுந்தியாவ பொறடிலயே அடிச்சு அடிச்சுத்தானே தல நிக்காம போச்சு.…” என்று. பெரியப்பா பெரியம்மாவை அடிக்கும்போது வேறு யாரும் தலையிட்டுத் தடுத்துவிட முடியாது. தடுத்தால் தடுத்தவர் பக்கம் அடியல் திரும்பிவிடும். அப்புறம் அவரைக் காப்பாற்றுவதே பெரும்பாடாகிப் போகும்.
ஒருமுறை இப்படித்தான் அம்மாச்சி வீட்டிற்குப் போயிருந்தபோது, பெரியப்பா திருவோணம் மாட்டுச் சந்தைக்குப் போய்விட்டு வந்தார். சந்தைக்குப் போனால் வெறும் கையோடு திரும்பமாட்டார். கருவாடோ கச்சப் பொடியோ கிடைத்ததை வாரிக்கொண்டுதான் வருவார். சாப்பாட்டு விசயத்தில் ரொம்பவும் கெடுபிடி. வெறும் ரசம் சோறாக இருந்தால் கூட, அவசரப்படாமல் ஆற அமர்ந்து சாப்பிடுவார். ஆனால், கடித்துக்கொள்ள வறுத்த பிஸ்க்குக் கருவாடு வேண்டும். இல்லையென்றால் சாப்பாட்டில் குந்த மாட்டார். அமாவாசை, கார்த்திகை நாளில் கூட கவிச்சியை ஒதுக்கமாட்டார். அன்று பச்சைத் திரிக்கையை வாங்கி வந்திருந்தார். பேக்கரியில் விற்கிற கேக்குகளைப் போலப் பெரிய பெரிய துண்டுகளாகப் போடப்பட்டு மண்சட்டி நிறைய இருந்தன. அவரே உப்பு போட்டு சுத்தமாக அலசி, மஞ்சள் பொடி தூவி அடுப்படியில் கொண்டு வந்து வைத்துவிட்டு, என் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு போனார்.
ஆறு நிறைய தண்ணீர் கரை மிதந்து ஓடியது. துணிமணிகளை அவிழ்க்காமல் அப்படியே இறங்கி அலசி குளித்தார். கரையில் அமர்ந்திருந்த என்னைப் பார்த்து, “ஒரு ஆம்பளப் புள்ள ஆத்துத் தண்ணியப் பாத்து அஞ்சுற…” என்று என்னைத் தண்ணிருக்குள் இழுத்துத் தள்ளிவிட்டார். நான் தத்தளித்து அவர் காலைப் பற்றிக்கொண்டேன். என்னை உப்பு மூட்டையாக முதுகில் ஏற்றிக்கொண்டு, நடாறு வரைக்கும் நீந்திவிட்டு வந்து கரை ஏற்றினார். இருவருக்கும் நல்ல பசி.
நாங்கள் தெருவில் வரும்போதே எங்களைப் பார்த்துவிட்ட பெரியம்மா, தட்டை எடுத்து வைத்துச் சோறு பரிமாறியது. சாப்பாட்டில் அமர்ந்த பெரியப்பா, ஏற்கனவே வாங்கி வைத்திருந்த நாட்டுச் சாராய பொட்டணத்தை உடைத்து, ஒரே மடக்காக வாயில் ஊற்றிக்கொண்டார். பெரியம்மா என் தட்டில் பெரிய துண்டுகளாக இரண்டு போட்டு “சாப்பிடு…” என்று என் முகத்தைப் பார்த்தது. நான் ஒரு துண்டை வாயில் வைக்க, போட்டார் பிடறியில் ஒரு போடு. பெரியம்மா அப்படியே தரையில் சாய்ந்து விழுந்தது. அதை அடி என்றும் சொல்ல முடியாது. குத்து என்றும் சொல்ல முடியாது. விரல்களை இறுக்கமாக மூடி ஓங்கி ஒரே அடி, அவ்வளவுதான். தலை உண்டியல் போலக் குலுங்கியிருக்கும். அதே வேகத்தில் குழம்புச் சட்டியைத் தூக்கி தரையில் அடித்து “செவுட்டுச் சிறுக்கி… அத்தன வாட்டி சொன்னேன்… உப்பு போட்டு அலசிருக்கேன்.. உப்ப ஒரு பிடி கொறைச்சுப் போடுன்னு… செவிடிக்குக் காதுல ஏறனாத்தான… இந்த வீட்டுல ஒரு நாளாச்சும் நல்ல சோறு திங்க முடியுதா… போயி ஆத்துத் தண்ணில விழுந்து போக வேண்டியதுதானடி..” என்று மீண்டும் ஒரு மிதி மிதித்தார். டிவி பார்த்துக்கொண்டிருந்த சின்ன அண்ணன் கோபமாகி விருட்டென்று எழுந்தது. பெரியண்ணன்தான், “புருசன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் இருக்கும்… நீ அதுல தலையிடாத…” என்று தடுத்தது.
பெரியண்ணன் சொல்வதும் சரிதான். பெரியப்பாவிடம் எவ்வளவுதான் அடி வாங்கினாலும், அந்த வலி ஒரு ராத்திரிக்குதான். விடியற் காலையில் ஊருக்கு முன்பே எழுந்து, கூஜாவை எடுத்துக்கொண்டு போய் கடைக்காரனை எழுப்பி, முதல் ஆளாய் டீ வாங்கிக்கொண்டு வந்து பெரியம்மாவை எழுப்புவார். இருவரும் சாவகாசமாக டீ குடித்துவிட்டு, வெற்றிலைப் பாக்கு பொட்டணத்தை விரித்துவைத்து மொசு மொசுவென்று ஊர்க்கதைகளைப் பேசிக் கொண்டிருப்பார்கள்.
தவசி மாமா வீட்டின் வாசலில் பைக்கை நிறுத்தினேன். வீட்டுக்காரர்கள் வெளிவிளக்கையும் கூட அணைத்துவிட்டுத் தூங்கிக்கொண்டிருந்தனர். பைக்கில் இருந்து இறங்கிய அம்மா, “அண்ணே… அண்ணே…” என்று அழைத்தபடி போய் வீட்டின் கதவைத் தட்டியது. நான், “பெரியம்மா இங்கயெல்லாம் வந்துருக்காது… மொதல்ல வீட்டுல போயி பாக்கலாம்…” என்றேன். அம்மா என்னை முறைத்துப் பார்த்துவிட்டு, மீண்டும் “அண்ணே… அண்ணே…” என்றது. தவசி மாமா வெளியே வந்தார். “அக்கா இங்க எதுமா வந்துச்சு…” எனக் கேட்க, “யாரு உங்க அக்காவா… அது என்னிக்கு இங்க வந்துருக்கு… வண்டி கட்டி தூக்கியாந்தாதான் உண்டு..” என்று அந்த நேரத்திலும் கிண்டலடித்தார். பெரியப்பாவும் அண்ணனும் சற்றுத் தூரத்தில் இருட்டில் நின்றுகொண்டிருந்தனர். “உன் அக்கா வாங்காத அடியா, அயிமானமா… அப்பயெல்லாம் போவாதது இப்பயா போயிறப்போது… எங்கயும் போயிருக்காது… வீட்டுகிட்டதான் எங்கனயாவது கிடுக்குல உக்காந்துருக்கும்… கவலபடாம போங்க… விடிஞ்சதும் வாசக் கரைச்சு போட வீட்டுக்கு வந்துரும்…” என்றார். அவர் சொல்வது சரிதான் என்றாலும், அம்மாவின் முகத்தில் அச்சம் தீயெனப் படர்ந்தது. அதைக் கவனித்தாரோ என்னவோ “இருங்க நானும் வர்றன்…” என்று வீட்டின் உள்ளே போய் சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு வெளியே வந்தார்.
அம்மாச்சி வீட்டுக்கு வந்தபோது, விளக்கு மட்டும் தனியாக எரிந்துகொண்டிருந்தது. ஒரே அமைதி. பைக்கை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் போனோம். போட்டவை போட்டபடிக் கிடந்தன. அடுப்படியில் இறக்கி வைத்திருந்த கஞ்சிப் பானையும், வதங்கிய எருக்க இலைகளும் இருந்தன. உலை வைத்திருக்கவில்லை. அடுப்படிக்கு ஓடிவந்த வீட்டுநாய் அம்மாவின் மீது கால்களைப் போட்டுத் தாவியது. அண்ணன் அருகில் இருந்த கரண்டியை எடுக்கவும் வாலை இறக்கிக் குழைந்துகொண்டே வெளியில் ஓடியது. பெரியண்ணன்தான் நடந்தவற்றைச் சொன்னது.
நாலாம் நாள் நடவு வைத்திருப்பதால் வயலில் வரப்பு வெட்டு வேலை நடந்திருக்கிறது. எவ்வளவு ஆள் பிடிக்கும் வேலையாக இருந்தாலும் கூலிக்கு ஆள் வைக்கமாட்டார்கள். அப்படியே கூப்பிட்டாலும் யாரும் வரமாட்டார்கள். இவர்களுக்குச் சமமாக ஈடுகொடுத்து வேலை செய்வது ரொம்பவும் சிரமம். எப்பேர்பட்ட வேலையாக இருந்தாலும் இவர்கள் மூன்று பேருமாகச் சேர்ந்தே முடித்துவிடுவார்கள். வெளிச்சம் உதிப்பதற்கு முன்பே வயலில் இறங்கிவிடும் வழக்கம் உடையவர்கள்.
வரப்பு வெட்டு என்பது பிற வயல் வேலைகளைப் போல அல்ல. மேழியைப் பிடிப்பவர் பொழுது இறங்குகிற வரைக்கும் கூட ஏர் பின்னால் நடந்துகொண்டிருப்பார். ஆனால், மண்வெட்டிப் பிடித்தால் உச்சிப் பொழுது தாண்ட முடியாது. நான்கு கொட்டு வரப்பு மண் எடுத்துப் பள்ளத்தில் வீசினால், சல சலவென்று வேர்த்து வடிந்து, உடம்பு வெடவெடத்துப் போகும். வரப்பு வெட்டுக்குப் போகிறவர்கள் புறப்படும்போதே, கடையில் நான்கு இட்லி சாப்பிட்டுவிட்டுதான் மண்வெட்டியைத் தோளில் வைப்பார்கள். பெரியப்பாவுக்கு அது வழக்கம் இல்லை. வீட்டிலிருந்தே தூக்கு நிறைய நீராகாரம் கரைத்து எடுத்துச் செல்வார். பெரியம்மா சோறு கொண்டு வரும் நேரம் தெரியும் என்பதால், அதுவரைக்கும் பகுதி பகுதியாகக் குடித்து நாவறட்சியைப் போக்கிக் கொள்வார். பசி தாங்க மாட்டார். தூக்கு வாளியில் இருந்த நீராகாரம் தீர்ந்து, நீரும் வெளியேறிவிட்டது. ஆனால், பெரியம்மாவை இன்னும் காணவில்லை. தூக்கிய மண்வெட்டியை இறக்கிவிட்டார். உடல் நடுங்கத் தொடங்கிவிட்டது. அண்ணன்கள் இருவரும் மளமளவென்று வெட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவுக்கும் பெரியப்பா வரப்பைச் சீவி உள்ளே எறிகிறார். அண்ணன்களோ வரப்பை உடைத்துக் கட்டிக்கொண்டிருக்கின்றனர். வரப்பில் குந்தியிருந்து வண்டிப் பாதையைப் பார்த்தபடி, “பள்ளிக்கோடத்துக்குப் போற புள்ளயெல்லாம் போயிருச்சு.. இன்னும் கஞ்சியக் காணும்… செவிடி செத்துகித்து போயிட்டாளா… வரட்டும் வச்சிக்கிறேன்…” என்று பொரிந்துகொண்டே இருந்திருக்கிறார். வாய்க்கால் நீரிலும் இரண்டு மடக்கு குடித்துவிட்டார். பசி வேறு கோபத்தை இரண்டு மடங்கு கூட்டிவிட்டது.
கஞ்சிப் பானை தார் சாலையில் இருந்து பிரிந்து, வண்டி சாலையில் இறங்குவது தெரிந்திருக்கிறது. அதைப் பார்த்ததும்தான் அண்ணன்களுக்கு ‘அப்பாடா’ என்றிருந்திருக்கிறது. பெரியம்மாவின் தலையில் இருக்கும் கஞ்சிப் பானை, தலையின் நடுக்கத்திற்கு ஏற்ப குலுங்கியிருக்கும். கையில் பால் சொட்டும் எருக்க இலைகள், காலைச் சுற்றிச் சுற்றி உரசிக்கொண்டே வரும் வீட்டுநாய். பெரியம்மாவின் முகம் ஏதோ தியானத்தில் இருப்பது போல்தான் இருந்திருக்கும்.
பெரியம்மாவைப் பார்த்ததுமே பெரியப்பாவிற்குக் கோபம் சுர்ரென்று ஏறிவிட்டது. எழுந்து நெறுநெறுவென்று போயிருக்கிறார். போகும்போதே வரப்பு உடைத்துப் போட்டு வைத்திருந்த மண்கட்டிகளை எடுத்து எறிந்துகொண்டே போயிருக்கிறார். “எங்கடி வர்ற செவிடி… அங்கயே நில்றி… மூணு ஆம்பளைய அண்ட வெட்டுறாங்கே… நேரத்துக்குக் கஞ்சி கொண்டு வரணும்னு ஒரு பொம்பளைக்குத் தெரிய வேண்டாம்… சொல்லிக்கிட்டே இருக்கேன்.. எங்கடி வர்ற… எட்டியேய்…” என்று மண்கட்டியை அள்ளி எறிந்திருக்கிறார். ஆனால், ஒரு மண்கட்டியும் பெரியம்மாவின் மீது படவில்லை. பசியின் நடுக்கத்தால் துல்லியம் தவறியிருக்கிறது. “எவனுக்கோ கஞ்சி ஊத்திட்டு இப்பதான் வர்றா, செவிட்டுச் சிறுக்கி…” என்று வார்த்தை விழுக, பெரியம்மா அப்படியே நின்றுவிட்டது. “கஞ்சிப்பானைய இறக்கி வைச்ச… அடிச்சே கொன்னுபுடுவேன்… ஒழுங்கு மரியாதையா அப்டியே போயிடு…” பெரியம்மா திரும்பி அண்ணன்களைப் பார்த்திருக்கிறது. “என்னடி நான் ஒருத்தன் சொல்லிக்கிட்டே இருக்கேன்… பெரிய இவ மாதிரி நின்னுகிட்டே இருக்க… போடி…” என்று கட்டியை வீச, அது பெரியம்மாவின் காலடியில் போய் விழுந்திருக்கிறது. அண்ணன்கள் இருவரும் சிலை போல நின்று பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். பெரியம்மா அதற்குமேல் ஒரு அடிகூட வைக்காமல், திரும்பியிருக்கிறது. “வீட்டுல போயி கால வச்சன்னா, கால முறிச்சுப்புடுவேன்… போற வழில ஆத்துல தண்ணில விழுந்து அப்டியே போயிரு…” என்று மண்வெட்டியைத் தூக்கி வீசியிருக்கிறார்.
அண்ணன்கள் அதற்கு மேல் வேலையைத் தொடராமல் கரையேறியிருக்கின்றனர். உடல் முழுவதும் தெறித்திருந்த சேற்றைக் கழுவிவிட்டு, மண்வெட்டிகளை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தபோது, பெரியம்மா வீட்டில் இல்லை. ‘இங்கதான் எங்கயாவது போயிருக்கும்’ என்று அவர்களாகவே கஞ்சியை ஊற்றிக் குடித்துவிட்டு அசதியில் படுத்துவிட்டனர்.
அந்தியில் கண்விழித்த போதும் பெரியம்மா வந்திருக்கவில்லை. அப்போதுதான் அவர்களுக்கு லேசாக உதறல் எடுத்திருக்கிறது. வீட்டைச் சுற்றி, பக்கத்து வீடுகள் என்று எல்லா இடங்களிலும் பார்த்துவிட்டுதான், எங்கள் வீட்டுக்கு வந்திருக்கின்றனர்.
அம்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை. டார்ச் லைட்டை எடுத்துக்கொண்டு வீட்டின் பின்பக்கம், வைக்கோல் போரடி, மாட்டுக் கொட்டகை என்று போய் பார்த்துவிட்டு வந்தது. தவசி மாமாதான் அண்ணனைத் தனியாக அழைத்துச் சென்று, ஏதோ கிசுகிசுவென்று பேசினார். பின், இருவரும் பைக்கை எடுத்துக்கொண்டு வேகமாகப் புறப்பட்டுப் போனார்கள். போகும்போது சும்மா போகாமல், அம்மாவைப் பார்த்து “ஆத்தா, அக்கா எங்கயும் போயிருக்காது… நீ ஒண்ணும் யோசனை பண்ணாம போயி செத்த குந்து… நாங்க வெட்டிக்காடு சட்ரஸ் வரைக்கும் போயி, ஒரு எட்டு பாத்துட்டு வந்துடுறோம்…” என்று சொல்லவும், அம்மா ‘ஓ’வென்று ஒப்பாரி சொல்லி அழ ஆரம்பித்துவிட்டது. பெரியப்பா அப்படியே சுவரில் சாய்ந்து அமர்ந்துவிட்டார். அம்மாவின் ஒப்பாரி சத்தம் கேட்டு, பக்கத்து வீடுகளில் எல்லாம் வெளிச்சம் எரிய ஆரம்பித்துவிட்டது. இருட்டுக்குள் எங்கிருந்தோ ஓடிவந்த வீட்டுநாய், அம்மாவின் மீது கால் போட்டு தாவியது. பெரியப்பா அதட்டவும் ஒரே ஓட்டமாக ஓடி மாட்டுக்கொட்டகையில் இருந்த பத்தாயத்தின் அடியில் போய் படுத்துக்கொண்டது. அதைப் பார்த்த அம்மா என்ன நினைத்ததோ தெரியாது, சடாரென்று எழுந்து மாட்டுக்கொட்டகைக்கு ஓடியது. நானும் பின்னால் ஓட, அம்மா வேகவேகமாகப் பத்தாயத்தின் மீது ஏறியது. நான் ஒன்றும் புரியாமல் பார்க்க, “எலே தம்பி லைட்ட எடுத்தாடா…” என்றது. நான் ஓடிப்போய் டார்ச் லைட்டை எடுத்து வந்து தரவும், பத்தாயத்தின் உள்ளே வெளிச்சத்தை அடித்துப் பார்த்து, “என் ஆத்தா…!” என்று அலறியது. நான் பதற்றமாகி பத்தாயத்தில் ஏற, அலறியடித்து ஓடி வந்த பெரியப்பா எனக்கு முன்பாகத் தாவி ஏறினார். நான் அவரைப் பார்க்க, அவர் பத்தாயத்தின் உள்ளே பார்த்து அப்படியே உறைந்து போனார். நான் எக்கி உள்ளே பார்த்தேன். பெரியம்மா பத்தாயத்தின் ஓரத்தில் சரிந்து கிடந்தது. அதன் தலை எப்போதும் போல நடுங்கிக் கொண்டிருந்தது. அம்மா “ஆத்தா… ஆத்தா…” என்று அழைக்க, பெரியம்மா திரும்பிகூடப் பார்க்கவில்லை. பெரியப்பா பத்தாயத்திற்குள்ளே குதித்தார். அந்த அதிர்வில் பெரியம்மா திடுக்கென்று எழுந்து அமர்ந்தது. பெரியப்பா பெரியம்மாவின் கையைப் பிடித்துத் தூக்கினார். அவர் கையை உதறிவிட்ட பெரியம்மா, “என்னைத் தொடதே” என்பதுபோல் பத்தாயத்தின் சுவரில் ஒன்றிக்கொண்டது. சிறிது நேரம் பெரியம்மாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த பெரியப்பா, கண்ணில் நீர் பெருக காலடியில் மண்டியிட்டு விழுந்தார். “என்னை மன்னிச்சிருடி சரசு… இனிமே ஓம்மேல என் வெரலுக்கூடப் படாதுடி… எழுந்துருச்சு வாடி…” என்று காலைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினார். பெரியம்மா அசையவே இல்லை. “எந்திரிடி சரசு… தோளுக்கு மேல வளந்த ஆம்பளப் புள்ள அழுததை, என்னால பாக்கல முடியலடி… என்னை மன்னிச்சிருடி…” என்றார். பெரியம்மா சட்டென்று திரும்பி அவரைப் பார்த்தது. அப்போது, அதன் தலை எப்போதும் போல அசைந்துகொண்டிந்தது “உன்னை மன்னிக்கவே மாட்டேன்டா…” என்பது போல.
***
செல்வசாமியன் எழுதிய கதை நெஞ்சைத் தொடுகிறது. பெண்கள் தலை நிமிர்ந்தால் ஆணாதிக்கம் மண்டியிடும் என்பதை கீழத்தஞ்சை மண்வாசம் மணக்க சொல்கிறார். செவுடி தலைப்பு மேம்போக்கில் கொச்சையாகத் தெரிந்தாலும் அது ஒருவகைக் குறியீடாக – பெண்கள் செவிமடுக்கத் தொடங்கினால் ஆணாதிக்கம் மண்டியிடும் – என்றுணர்த்துவது போல் உள்ளது. இந்தக் கதைக்கு வேறொரு தலைப்பை செல்வசாமியன் யோசிக்கலாம். முந்தைய தலைமுறை போல் நாமும் பெண்களைப் புரிந்து கொள்ளாமல் கொச்சைப் படுத்தக் கூடாதல்லவா.