நினைவின் ஒளி
யாரும் யாருடனும்
பேசிக்கொள்ளாத இரவு
நிலவுகிறது ஒரு மௌனப் பிளவு
பெருமூச்சுகளே பெரிதும் கேட்கும் அவ்வேளையின்
நிசப்தத்தில் நிழலாடுகிறது
இறப்பின் கரிய ஒளி
சட்டென நினைவு வந்தவர்களாய்
மீந்த சோற்றில் தண்ணீர் ஊற்ற
குழந்தையின் அழுகைக்குப் பால் கலக்க
கதவை அடைத்துத் தாழிட என
ஆளுக்கொன்றாய் நகர்ந்த பின்னரும்
படிந்திருக்கிறது
நகர மறுக்கும் ஒரு நினைவு
அவரவர் மனதை
ஆங்காங்கே இறுக்கியபடி…
*
தொடரும் முடிவுகள்
எல்லார் முகமதிலும்
குடி கொண்டிருக்கிறது புன்னகை
இடைவேளைகளின்றி
அளக்கப்படுகிறது ஊர்க் கதை
ஒருவரையொருவர் துரத்தி
ஓடிக் கொண்டிருக்கும் குழந்தைகள்
மிகுந்த ஆரவாரத்தோடு
இசைக்கும் இசைக்குழுவினர்
அங்கும் இங்குமாய்
அவசரக் கால்களில் பெற்றோர்
காட்சிப் பொருளாய் மத்தியில் இவள்
சம்பிரதாயப்படி சரிவர நடந்துகொண்டிருக்கும்
கடைசி நிமிடங்களை
தலைதூக்கிப் பார்க்கிறாள்
உள்ளங்கைகளுக்குள்
உலர்ந்த உதிரிப் பூக்கள்
நல்லாசி வாங்கிக்கொண்டு
மேடையேறும் அட்சயத் தட்டு
கண் முன் கொழுந்துவிட்டு
எரியும் தீ
கெட்டி மேளம் கெட்டி மேளம்
என்ற வார்த்தை மேலோங்க
முப்பெரும் முடிச்சுகளால்
குறுகியது இவள் கழுத்து
அதுவரை அடக்கி வைத்திருந்த
மனதுக்குக் குரல் கொடுத்த மழலையை
மடியில் வாங்கி
அழாதே அழாதே எனத் தேற்றிக் கொண்டிருந்தாள்
அழ வைத்துக்கொண்டே அவளைத் தேற்றிக்கொண்டிருந்தது வாழ்க்கை.
*
இரங்கல் அலைகள்
கடற்காற்றின் கால்களையும்
கடலலையின் கைகளையும்
கடன் வாங்கிக்கொண்டு
கடுகடுக்க தேடிக் கொண்டிருக்கும் அவனுக்கு
கிடைக்கப் போவதில்லை அவள்
தான் தொலைத்துவிட்டது
நிச்சயம் எனத் தெரிந்தும்
ஏதோ ஒன்றின் உந்துதலில்
ஏதோ ஒன்றினை ஊன்றியபடி
தேய்ந்த நிலவின் சாயலாய்
தேம்பி நிற்கிறான் அவன்
யாரும் தேற்றிப் பார்க்க வேண்டாம்
தோற்றுப் போவீர்கள்
அதற்குத்தானே இருக்கிறான் கடலில்
அதற்குத்தானே இருக்கிறது கடலும்.
Email: shinnodolly1028@gmail.com