கடவுச் சொற்களும் வரிசை எண்களும்
இந்தக் கட்டுரை கடவுச்சொல்லில் தொடங்கும். கணினியின் விசைப் பலகையில் முடியும். எனில், இந்தக் கட்டுரை இணையத்தைப் பற்றியதல்ல, கணினியைப் பற்றியதுமல்ல. இதில் வரிசை எண்கள் வரும். அவற்றை வசந்த காலம் என்றும் வாசிக்கலாம். எல்லோருக்கும் அவரவர் கல்லூரிக் காலம் வசந்தமயமானது. எங்களுக்கும் அந்தக் காலம் வந்தது.
அ.முத்துலிங்கம், ‘கடவுச்சொல்’ என்றொரு கதை எழுதியிருக்கிறார். சிவபாக்கியம் நியூயார்க்கிலிருந்து 80 மைல் தூரத்தில் இருக்கும் ஒரு முதியோர் காப்பகத்தில் வசிக்கிறார். மகள்தான் அவரை அங்கே சேர்த்துவிட்டது. காப்பகத்தில் குறையொன்றுமில்லை. பேரன் அபிரகாமைப் பார்த்து ஐந்து ஆண்டுகளாகிவிட்டன என்பதைத் தவிர. ஒருநாள் 14 வயதுப் பேரன் திடீரென்று வருகிறான். ஒரு நாள் முழுவதையும் பாட்டியோடு கழிக்கிறான். அவன் விடைபெறும்போது சிவபாக்கியம் கேட்கிறார்: ‘நீ என்னை மறந்துபோக மாட்டாயே?’.
அபிரகாம் சொல்கிறான்: ‘இல்லை, அம்மம்மா. எப்படி மறப்பேன்? என்னுடைய itune, amazon, netflix, facebook, icloud, youmanage எல்லா கணக்குகளுக்கும் உங்களுடைய பெயரைத்தானே கடவுச்சொல்லாக வைத்திருக்கிறேன். ஒருநாளைக்கு 10 தரமாவது உங்களை நினைக்கிறேன் அம்மம்மா.’ சிவபாக்கியம் இந்தச் செயலிகளையோ தளங்களையோ அறியார். ஆனால் பேரன் தன்னை மறக்கவில்லை. அது அவருக்குப் புரிகிறது.
நமக்கும் எண்ணற்ற தளங்கள் கைகட்டிச் சேவை புரிகின்றன. கடவுச்சொல்லைப் பதிந்தால் அலிபாபாவின் கதவுகள் திறக்கின்றன. நாமும் பல சேவைகளுக்கு ஒரே கடவுச்சொல்லை வைத்திருக்கிறோம். ஆனால் நாங்கள் மாணவர்களாக இருந்த காலத்தில் உலகம் கணினி மயம் ஆகவில்லை. இணையம் உருவாகவில்லை. ஆதலால் கடவுச் சொற்களும் இல்லை. ஆனால் எங்கள் எல்லோருக்கும் வரிசை எண் (roll number) இருந்தது. கல்லூரிக் காலத்தில் அந்த எண்தான் எங்களுக்குப் பல கதவுகளைத் திறந்துவிட்டது.
1976 ஆகஸ்ட் 2ஆம் நாள், விழிகளில் மருட்சியோடும் கைகளில் டிரங்குப் பெட்டியோடும் துணைக்கு அப்பாவோடும் கோவை தொழில்நுட்பக் கல்லூரி (Coimbatore Institute of Technology- CIT) வாயிலைக் கடந்து உள்நுழைந்தோம். எம்மில் முக்காலே மூணு வீசம் பேர் கல்லூரிக்குள் காலடி வைக்கும் முதல் தலைமுறையினர். முதல் நாளே எங்களுக்கு வரிசை எண் வழங்கப்பட்டது. அடுத்த ஐந்தாண்டுக் காலம் அது எங்கள் அடையாளமாக இருந்தது. அதற்குப் பிறகும் அது நெஞ்சில் தேங்கி நிற்கிறது, ஒரு வசந்த காலத்தை எப்போதும் நினைவூட்டியபடி.
வருகைப் பதிவேடுகள் வரிசை எண்களால் ஆனவை. வகுப்புக்கு வந்தாரும் வராதாரும் அவரவர் வரிசை எண்ணாலேயே அறியப்படுவர். செமஸ்டர் தோறும் தேர்ந்தாரும் தேராதாரும் அவ்விதமே அறிவிக்கப்படுவர். உதவித் தொகைகளும் புலமைப் பரிசில்களும் கட்டம் கட்டமாக வழங்கப் பெறும். பெறுவோரின் வரிசை எண்கள் அறிவிப்புப் பலகையில் இடம்பெறும்.
அறிவிப்புப் பலகைதான் சங்கப் பலகை. மெஸ் கட்டணமும் அதில்தான் வெளியாகும். முப்பது நாளும் முடங்காமல் வழங்கப்பட்ட மூன்று வேளை உணவுக்கும் மாலை நேர இடைப் பலகாரத்திற்குமான கட்டணம் அது. விடுதி நிர்வாகத்தில் மாணவப் பிரதிநிதிகளும் அங்கம் வகித்தார்கள். மொத்தச் செலவு தலையெண்ணிப் பிரிக்கப்படும். இன்று சொன்னால் நம்புவதற்குச் சிரமமாக இருக்கலாம். எங்கள் முதலாண்டில் (1976) உணவுக் கட்டணம் நாள் ஒன்றுக்கு இரண்டரை ரூபாயிலிருந்து மூன்று ரூபாயாக இருந்தது. இறுதியாண்டில் (1981) ஆறு ரூபாய் வரை உயர்ந்தது. இது அசைவ உணவகத்தில். சைவ உணவகக் கட்டணம் இறுதியாண்டில் சுமார் ஐந்து ரூபாயாக இருந்தது. விடுதியில் சிறிய அங்காடியுமிருந்தது. சோப்பு, சீப்பு, மிட்டாய், ரொட்டி, குளிர் பானம் எல்லாம் மொத்த விலைக்குக் கொள்முதல் செய்யப்பட்டு, அதே விலையில் விற்கப்படும். இதற்காக அதிகபட்சம் முப்பது ரூபாய்க்கான கூப்பன்களை விடுதி அலுவலகத்தில் வாங்கிக்கொள்ளலாம். மெஸ்ஸில் விருந்தினர்களையும் உபசரிக்கலாம், உணவிடலாம். கட்டணம் தனி. இவை யாவும் மெஸ் பில்லில் கூட்டப்பெறும். பால்ஸ் என்றழைக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் விடுதிக் கணக்காளர். அவரது மணி மணியான கையெழுத்தில் மாணவர்தம் வரிசை எண்ணோடு அவரவர் கட்ட வேண்டிய தொகை மாதத்தின் முதல் வாரத்தில் சங்கப் பலகையேறும்.
வரிசை எண்களுக்கு வேறொரு பயனுமிருந்தது. அனந்த கிருஷ்ணன் இதற்கு எடுத்துக்காட்டாக அமையலாம். அனந்த கிருஷ்ணன் அழகாயிருப்பான். அது முக்கியமில்லை. அவனுக்குப் பொங்கல் பிடிக்காது. அது முக்கியம். செவ்வாய்க் கிழமை காலை தோறும் அவன் மெஸ்ஸில் போடப்படும் பொங்கலைப் புறக்கணித்து காண்டீனுக்குப் போவான். மெஸ்ஸில் பொங்கலுக்கு அளவில்லை, அதாவது வேண்டியவரை உண்ணலாம். அது அவரவரின் மனோதைரியத்தையும், ஆரோக்கியத்தையும் பொறுத்தது. பொங்கலோடு வடையும் பரிமாறப்படும். மற்றவர்களுக்கு முன்னால் மெஸ்ஸிற்குப் போய் அவனது வரிசை எண்ணைச் சொன்னால் ஒரு வடை உபரியாகக் கிடைக்கும். தாமதமாகப் போய் அவனது வரிசை எண்ணைச் சொல்வாரும் உண்டு. ‘வடை போச்சே’ என்று வருந்துவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி இராது.
அவினாசி சாலையில் அமைந்திருக்கிறது CIT. விமான நிலையம் கூப்பிடு தூரம். அருகாமை வளாகம் பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரி. எதிரில் இருக்கிறது அரசு மருத்துவக் கல்லூரி. இந்தக் கல்வி நிலையங்கள் இன்று நகரின் பிரதானப் பகுதியின் அங்கங்களாகிவிட்டன. அந்நாளில் இவை நகருக்கு வெளியே இருந்தன. CIT நண்பர்கள் அவ்வப்போது ஊர் சுற்றவோ சினிமாப் பார்க்கவோ நகரத்திற்குப் போவார்கள். சாப்பிடுகிற நேரத்திற்குத் திரும்ப மாட்டார்கள். அது வெள்ளிக்கிழமை இரவாய் இருந்தால் அவர்களின் வரிசை எண் ஒரு தட்டு மட்டன் வறுவலைக் கூடுதலாகத் தருவிக்கும். புதன்கிழமை மாலையாக இருந்தால் கேக் கிடைக்கும். ஆனால், ஞாயிற்றுக் கிழமை மதியம் சினிமாவிற்குப் போகிற தவறை யாரும் செய்ததில்லை. அசைவ உணவகத்தில் பிரியாணி- சிக்கன் கறியும் சைவ உணவகத்தில் வெஜிடபிள் பிரியாணி-தயிர் பச்சடியும் பரிமாறப்படும். அவற்றுக்கு இணையான சினிமா கோடம்பாக்கத்திலும் ஹாலிவுட்டிலும் அப்போது எடுக்கப்படவில்லை.
சினிமாவிற்குப் போவதெல்லாம் செலவு பிடிக்கிற காரியமில்லை. அப்போது CITயிலிருந்து உப்பிலிப்பாளையத்திற்குப் பேருந்துக் கட்டணம் 35 காசுகள், டவுன் ஹாலுக்கு 40 காசுகள், வடகோவைக்கு 50 காசுகள். சென்ட்ரல், கீதாலயா, ரீகல் திரையரங்குகளில் இரண்டாம் வகுப்புக் கட்டணம் இரண்டு ரூபாய் சொச்சம். மலையாளப் படங்களுக்கு அறியப்பட்ட ஸ்ரீனிவாஸா திரையரங்கில் அதுவே முதல் வகுப்புக் கட்டணம். கடைசிப் பேருந்திற்கு அவகாசம் இருந்தால் கெளரிசங்கரில் சாம்பாரில் முக்கிய இட்லிகள் சாப்பிடலாம். அவகாசம் இல்லையென்றால் CITக்கு முந்தின நிறுத்தமான ஹோப் காலேஜில் இறங்கி, சேலம் ரெஸ்டாரண்டில் முட்டை புரோட்டா சாப்பிடலாம். நட்சத்திர உணவகங்களில் உயர்தர சமையல் கலைஞர்களால் தயாரிக்கப்பட்டு வெள்ளுடைப் பரிசாரகர்களால் கைபடாமல் பரிமாறப்படும் எந்த உணவு வகையும் அதற்குப் பக்கத்தில் கூட வர முடியாது.
பீளமேடு வசந்தி டாக்கீஸ் ஒரு டெண்ட் கொட்டகை. இரவுச் சாப்பாட்டை முடித்துவிட்டு நடந்து போய் படம் பார்த்துவிட்டு வந்துவிடலாம். மருதமாலை மாமணியே பாட்டுப் போட்டால் அடுத்து படம் துவங்கப் போகிறது என்று பொருள். மெஸ்ஸில் தாமதமானால் சொல்லியனுப்பலாம். பதினைந்து நிமிடம் வரைக் காத்திருப்பார்கள். அந்தக் கொட்டகையே சொந்த வீடு போலத்தான். உரிமையோடு புழங்கலாம். ‘நாடோடி மன்னன்’ மாதிரிப் படங்களுக்கு மூன்று இடைவேளைகள் விடுவார்கள் என்பதைத் தவிர வேறு குறை சொல்ல முடியாது. திரும்புகிற போது மெல்லிய பனி பெய்து கொண்டிருக்கும். மாலை நேரம் கைலி கட்டிய CIT மாணவர்களால் நிரம்பி வழியும் நாயர் கடையும், TB என்று அழைக்கப்பட்ட தேநீர்க் கடையும் மூடியிருக்கும். ஆனால் மணீஸ் கபே திறந்திருக்கும். தேங்காய் பன் சாப்பிடலாம்.
வகுப்பறைகளைத் தாண்டி ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி மன்றங்கள் இருந்தன. துறை சார்ந்த வல்லுனர்கள் உரையாற்றுவார்கள். மாணவர்கள் பொறியியல் கட்டுரை வாசிப்பார்கள். துறை சாராத மன்றங்களும் பிரபலமானவை. தமிழ் மன்றம் அவற்றில் ஒன்று. பேராசிரியர் க.அன்பழகன், இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், சி.சுப்பிரமணியம் விடுதலை விரும்பி முதலான அரசியலர்களும்; குன்றக்குடி அடிகளார், புலவர் கீரன், கிரிதாரி பிரசாத் முதலான ஆன்மீகர்களும்; அ.ச.ஞானசம்பந்தன், கி.வா.ஜெகன்நாதன், ம.ரா.போ. குருசாமி முதலான தமிழறிஞர்களும் உரையாற்றியிருக்கிறார்கள். அது புதுக்கவிதைகளின் காலம். கோவைதான் வானம்பாடிக் கவிஞர்களின் தாய் வீடாக இருந்தது. கவிஞர்கள் புவியரசு, சிற்பி, சக்திக்கனல் முதலானோர் பங்கேற்றிருக்கிறார்கள்.
மாணவர் யூனியன் விழாக்களுக்கு கோவை மாவட்ட அமைச்சர்களும் (செ.அரங்கநாயகம், ப.குழந்தைவேலு), சாதனை படைத்த தொழிலதிபர்களும், அறியப்பட்ட அதிகாரிகளும் வருவார்கள். இன்னும் பல மன்றங்களிருந்தன. நாடக மன்றம், இசை மன்றம், சமூக சேவை மன்றம், மலையேறும் கழகம் இன்ன பிற. ரோட்டரி கிளப்பும் பிரபலமாக இருந்தது. Debating Club பீட்டர்களுக்கானது. எல்லா மன்றங்களும் மாணவர்களாலேயே நடத்தப்பட்டன.
நான் CITயைப் பற்றிப் பேசுகிற போதெல்லாம் எனது கண்களில் வீசுகிற ஒளி, வீட்டுக் காரியங்களைப் பற்றிப் பேசுகிற போது மங்கி விடுவதாக எனது மனைவி எப்போதும் புகார் சொல்கிறார். CITயில் மாணவர்கள் உள்ளபடியே படித்தார்களா என்பதும் அவரது சந்தேகங்களுள் ஒன்று.
எங்களுக்கு ஒரு வருடம் முன்பு வரை படித்தவர்கள் ஆண்டிற்கு ஒரு முறைதான் தேர்வு எழுதினார்கள்- Integrated System. செமஸ்டர் முறை நாங்கள் முதலாண்டு படித்தபோதுதான் ஆரம்பமாகியது. நாங்கள் கல்லூரியிலிருந்து வெளியேறுகிற வரை காத்திருந்த பல்கலைக்கழகம், அதற்குப் பிற்பாடு பொறியியற் படிப்பை நான்காண்டாகக் குறைத்துவிட்டது. அதாவது எங்களுக்கு முன்னால் படித்தவர்கள் ஆண்டிற்கு ஒரு முறைதான் தேர்வு எழுதினார்கள். எங்களுக்குச் சில ஆண்டுகளே பின்னால் படித்தவர்கள் நான்காண்டுகளில் பட்டம் பெற்றார்கள். நாங்களோ ஐந்தாண்டுகள், ஆண்டிற்கு இரண்டு முறை தேர்வு எழுதினோம். ஆனால் தேர்வுகள் எங்களுக்கு அச்சமூட்டவில்லை. வகுப்பறைகள் களைப்படையச் செய்யவில்லை. ஆசிரியர்களில் பலரும் எங்களை நண்பர்கள் போலவே நடத்தினார்கள். பயிற்றுவிப்பதை அவர்கள் தீவிரமாக எடுத்துக்கொண்டார்கள். விசாலமான வகுப்பறைகளிலும் சோதனைக் கூடங்களிலும் மெல்லிய காற்றுப் போல் பொறியியற் கல்விப் பரவிக் கிடந்தது. உணர்ந்தும் உணராமலும் நாங்கள் அதை சுவாசித்தோம். தேர்வுக்கு முன்பு பகலிரவாகப் படித்தோம். நள்ளிரவிற்குப் பல மணி நேரங்கள் பின்னாலும் விடுதி அறைகளில் விளக்குகள் எரியும். திருவண்ணாமலை கார்த்திகை தீபம், சபரிமலை மகர ஜோதி மாதிரி அப்போது பழனி, திருமலை, மருதமலை என்றழைக்கப்பட்ட CIT விடுதிகள் எல்லாம் ஜோதிப் பிழம்பாக விளங்கும். Thermodynamics-உம், Theory of Structures-உம் எங்களுக்கு வெகு அருகாமையில் வருவதும் அப்போதுதான்.
ஒவ்வொரு ஆண்டும் கடைசி மாதம் களை கட்டிவிடும். திருவிழாக் கோலாகலம் நிறைந்துவிடும். நாடக விழாக்கள், இசை நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், அனைத்துக் கல்லுரிப் போட்டிகள், Sports Day, விருந்தினர்கள் நிரம்பி வழியும் Hostel Day, இளையவர்கள் சீனியர்களுக்கு வழங்கும் Farewell விருந்து, இறுதியாண்டு மாணவர்கள் விடைபெறும் At-home Party, அப்போது இசைக்கப்படும், ‘பசுமை நிறைந்த நினைவுகளே’ பாடல்.
இதில் சில நிகழ்வுகள் இடை நின்றுவிட்டதாகத் தெரிகிறது. எனினும் கல்லூரி தொடங்கப்பட்ட காலம் முதல் இன்று வரை முன்னாள் மாணவர் தினம் முடங்கியதில்லை. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் இரண்டாம் சனிக்கிழமை நடைபெறும். இறுதியாண்டு மாணவர்கள்தான் சிறப்பு விருந்தினர்கள். வாய்ப்புள்ள முன்னாள் மாணவர்கள் நிகழ்வைத் தவறவிடுவதில்லை. எல்லா ஆசிரியர்களும் பங்கேற்பார்கள். அரங்கில் தொடங்கும் முன்னாள்- இந்நாள் மாணவர் உரையாடல் நிகழ்ச்சி முடிந்தபின் அரங்கிற்கு முன்புள்ள திறந்தவெளி முற்றத்திலும் நீளும். கடந்த சில ஆண்டுகளாக இந்த நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட முன்னாள் மாணவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. 2018இல் எனக்கு அந்தப் பேறு வாய்த்தது.
2018ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் நாள். நான் அப்போது மும்பையில் ஓர் உள்கட்டமைப்புத் திட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். முன்னதாகவே கல்லூரிக்குப் போய்விட்டேன். விறாந்தையிலும் நடைபாதையிலும் மாணவர்கள் (இப்போது மாணவிகளும்) கொத்துக் கொத்தாக நின்றார்கள்; சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். வகுப்பறைக்கோ சோதனைக் கூடத்துக்கோ நூலகத்துக்கோ விரைந்தவர்களும் இருந்தார்கள். எனக்கு ஏக்கமாகிவிட்டது.
அப்போது அ. முத்துலிங்கம் நினைவுக்கு வந்தார். அவரது, ‘ஐந்தாவது கதிரை’ சிறுகதையில் வரும் தங்கராசா கணினி நிரல் எழுதுவதில் வல்லவர். அவர் நிரல்களைப் பூச்சி அரிப்பதில்லை. ஒரு முறை எழுதினால் எழுதினதுதான். அதைச் சரிபார்க்க வேண்டிய அவசியமேயிராது. Backspace விசையை ஒடித்துவிட்டாலும் அவர் நிரல் எழுதுவார். எல்லோராலும் தங்கராசா ஆக முடியுமா? கணினியின் விசைப்பலகையில் 101 விசைகள் இருக்கின்றன. நான் அதிகம் பயன்படுத்துவது Backspace விசையைத்தான். அதாவது எழுதியதை விட அழித்தவைதான் அதிகம். அப்போதுதான் எனக்கு அந்த வினோதமான ஆசை எழுந்தது.
40 ஆண்டுகளை ஒரு Backspace விசையால் அழித்துவிட்டு, மீண்டும் மாணவனாகி இந்தப் பிள்ளைகளோடு வகுப்பறைக்குப் போனால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ஆனால் அது முடியாது. கால இயந்திரங்கள் கதைகளில் மட்டுமே இயங்கக் கூடியவை. காலம் முன்னோக்கி மட்டுமே செல்லும். பாரதி சொல்லியிருக்கிறான்: ‘சென்றதினி மீளாது’. ஆனாலும் நினைவேக்கத்தை என்ன செய்ய?
CIT வகுப்பறைகளால் மட்டும் ஆனதில்லை. அது எமக்குப் பல விழுமியங்களையும் கற்றுத் தந்தது. வகுப்பறைக்கு உள்ளே பொறியில் கல்வி, வெளியே வாழ்வியல் கல்வி. இவ்விரண்டு கல்வியும்தான் காரியாபட்டியிலிருந்து கலிபோர்னியா வரை விரவிக் கிடக்கும் CIT மாணவர்களின் கவச குண்டலங்கள். இப்போது ஒன்று புரிகிறது. CITயின் வரிசை எண், வெறும் எண் மட்டுமல்ல, அதுவே ஒரு கடவுச்சொல், வாழ்க்கையில் பிரவேசிப்பதற்கான கடவுச்சொல்; வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான கடவுச்சொல்.
அனுபவம் தொடரும்…