(மு.இராமனாதன் எழுதிய “தமிழணங்கு என்ன நிறம் ?”- நூல் மதிப்புரை)
ஒரு நல்ல கட்டுரைக்கான இலக்கணம் என்ன?
தலைப்பு, வாசகனை வசீகரிக்க வேண்டும். படிக்கப் படிக்க ஆர்வத்தைத் தூண்டும் கருத்துகள் இருக்க வேண்டும். நடை எளிமையாக இருக்க வேண்டும். எழுதப்பட்ட சொற்கள் ரசிக்க வைக்க வேண்டும். செய்திகளும், விவரங்களும் வியப்பைத் தர வேண்டும். நிறைவாக, கட்டுரை மனதில் என்றென்றும் நிலைக்க வேண்டும். இந்த எல்லா அனுபவங்களும் ஒரு சேரக் கிடைக்க வேண்டுமானால் மு.இராமனாதன் எழுதிய கட்டுரை நூல் ஒன்றை நீங்கள் கையில் எடுக்க வேண்டும் !!
அவரது பல்வேறு கட்டுரைகள் தொகுக்கப்பட்டு பயனுள்ள நூல்களாகி உள்ளன. அவர் எழுதும் கட்டுரை ஒவ்வொன்றும் ஒரு நூலுக்கு ஈடானவை. கடுமையான உழைப்பில் உருவானவை.
தினமும் நம் கண்ணில் படும் சில செய்திகளை, அடிக்கடி சந்திக்கும் சிக்கல்களை, நமக்கு நேரும் அனுபவங்களைக் காலம், நேரம் கருதி நாம் கடந்து போய்விடுவது உண்டு. ஆனால், அந்தச் செய்திகள் நம்மைக் கடந்து போவதில்லை. அவை நம் மனதின் ஏதோ ஒரு மூலையில் இருந்து உறுத்திக்கொண்டே இருக்கும். இராமனாதன் அப்படிப்பட்ட விஷயங்களைக் கண்டறிந்து, அவை பற்றிய தகவல்களைத் தேடிப் பிடித்து, காரணத்தை அலசி அவற்றுக்கான தீர்வுகளையும் முன் வைக்கிறார்.
சமீபத்தில் அப்படி வெளியான ஒரு நூல் -“தமிழணங்கு என்ன நிறம்?” சமூகம், அரசியல் சார்ந்த 29 கட்டுரைகளின் தொகுப்பு. ஆசிரியரின் கருத்துகளுக்கு அணி சேர்க்கும் விதமாக திரு. பழ.அதியமான் அவர்கள் வழங்கியிருக்கும் அணிந்துரை இந்நூலின் மதிப்பைக் கூட்டுகிறது. “எதையும் யாரையும் புண்படுத்தாமல் இராமனாதனால் தன் கருத்தைக் கடத்திவிடமுடியும்” என்கிறார் அதியமான்.
நூலின் தலைப்புக் கட்டுரை- வெறும் நான்கு பக்கங்களில் என்னவெல்லாம் சொல்கிறது என்று பார்க்கலாம். 2022-இல் சமூக வலைதளங்களில் வெளியாகி “வைரல்” ஆன ஒரு சித்திரம் – உக்கிரமான கோலத்தில் ஒரு கருப்புப் பெண் – அவளைத் “தமிழணங்கு” என்று ஏற்பதில் பலருக்கும் வந்த தயக்கம் பற்றிய கட்டுரை. நம்மிடையே பரவலாக இருக்கும் ‘சிவப்புத் தோல் மோகம்’, பெண் பற்றிய பார்வை (‘அழகாக’, ‘அடக்கமாக’ , ‘சிவப்பாக’ இருக்கவேண்டும்), இந்தி மொழித் திணிப்புக்கு எதிர்ப்பு, பாரதியார் பாடிய “பேயவள் காண் எங்கள் அன்னை”, எம்.ஜி.ஆரின் “பொன்னின் நிறம்”, காரைக்குடியின் ‘தமிழ்த்தாய் ஆலயம்’….ஒரு சிறு பொறி இப்படி பெருந்தீயாகும் கட்டுரை. “அவளுக்குச் சில வேலைகள் உள்ளன. அதுவரை அவள் உக்கிரமாகத்தான் இருப்பாள்” என்று கட்டுரை முடிகிறது.
கொரோனா காலத்தின் கொடிய அனுபவங்களைக் குறித்த கட்டுரை, அறிவியலின் அவசியம், மனிதன் வாழ்வில் மட்டும் அல்ல சாவிலும் காக்க வேண்டிய கண்ணியம், பெருந்தொற்றின் விளைவால் பறி போன வேலைகள், பெண்கள் சந்தித்த குடும்ப வன்முறைகள், துப்புரவுப் பணியின் மேன்மை- இப்படி விவரமாகச் பேசுகிறது. “நம் பொதுவெளி புறத்தூய்மையோடும், மனம் அகத்தூய்மையோடும் துலங்க” செய்ய வேண்டியவற்றை இந்தக் கட்டுரைகள் பேசுகின்றன.
‘புலம் பெயர் தொழிலாளர்களின் அலைந்துழல்வு’, பொருளாதார முன்னேற்றத்தின் தவிர்க்க முடியாத ஒரு வாழ்வாதாரப் பிரச்சினை குறித்து அலசுகிறது. அரசு, இடம் பெயர் தொழிலாளர்களை முறையாகவும் மனிதாபிமானத்தோடும் நடத்த வேண்டும். அவர்களின் உழைப்பு நமக்கு அவசியமானது. ஆனால், அவர்கள் சுரண்டப்படுவதை அனுமதிக்கக் கூடாது. தரவுகள் சேகரிக்கப்பட வேண்டும். தேவையான சட்டங்களும் திட்டங்களும் அமல் படுத்தப்பட வேண்டும். தனது அனுபவங்களிலிருந்து கேரளாவிலும், வளைகுடா நாடுகளிலும், சீனாவிலும், மும்பையிலும் இது எப்படி நடக்கிறது என்பதை எடுத்துக் கூறும் இராமனாதன், வந்தாரும் வசிப்பாரும் கண்ணியமாக வாழ உதவும் நாடு செழிக்கும் என முடிக்கிறார்.
இன்னும் சில கட்டுரைகள் பெண்ணியம் பேசுகின்றன. அரசு வழங்கும் ‘உரிமைத் தொகை’ என்பது இதுவரை கண்டு கொள்ளப்படாத அவர்தம் உழைப்புக்கான அங்கீகாரம் என்பதில் தொடங்கி, தமிழ்த் திரைப்படங்களில் நாயகிகள் பற்றி ஆராய்ந்து, “பெண்களின் ஆடையைத் தீர்மானிப்பது யார்?” என்ற கேள்வியை எழுப்பி கலாச்சாரக் காவலர்களைக் கொஞ்சம் ஒதுங்கச் சொல்லும் கட்டுரை சிறப்பானது.
இன்னும் பல – தேர்தல்கள், அரசியல்வாதிகள், மக்கள்தொகை, புதிய நாடாளுமன்றம் குறித்த கட்டுரைகளும் வாசகனைக் கட்டிப் போடும் வல்லமை கொண்டவை. எல்லாவற்றையும் இரண்டு, மூன்று முறை படித்தாயிற்று. சரி, முடிந்தது என்று அலமாரியில் வைத்து மூட முடியாத நிலை. தினசரி வாழ்க்கையில் ஏதேனும் வந்து நினைவூட்டி மீண்டும் ஒரு முறை தேடி எடுத்து படிக்கத் தோன்றுவது இந்த நூலின் சிறப்பு.
சமூக அக்கறையும், சிறந்த மொழியாளுமையும், மானுடம் பற்றிய சீரிய சிந்தனைகளும் கொண்ட மு.இராமனாதன், தமிழ் கூறும் நல்லுலகம் போற்றத் தகுதியானவர் என்பதற்கு அவரது இந்தக் கட்டுரைகளே சாட்சி.
நூல்: தமிழணங்கு என்ன நிறம்?
ஆசிரியர்: மு.இராமனாதன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
பக்கங்கள்: 176 விலை: ரூ.170
தொடர்புக்கு: 7, இளங்கோ சாலை
தேனாம்பேட்டை, சென்னை – 600018
தொலைபேசி: 044-24332424, 24330024
*******