பெட்ரோல்ட் பிரெக்டின் ’கலிலியோ’ – பொது ‘உண்மைகளுக்கு’ மத்தியில் ஒரு உண்மை – முஜ்ஜம்மில்
கட்டுரை | வாசகசாலை
பெட்ரோல்ட் பிரெக்ட் (Betrolt brecht) என்ற ஜெர்மானிய நாடகாசிரியர் எழுதிய ‘கலிலியோ கலிலி’ என்ற நாடகம் மிக முக்கியமானது. இந்நாடகம் தமிழில் தி.கா.சதாசிவம் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் கலிலியோவின் வாழ்க்கை பற்றிய வரலாற்று நாடகமாகும். நாடகம் நிகழும் காலம் 17-ஆம் நூற்றாண்டு. பாரம்பரியமாக மதகுருமார்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு நம்பப்பட்டு வரும் பூமி மையக் கோட்பாட்டிற்கும், கலிலியோ முன்வைக்கும் சூரிய மையக் கோட்பாட்டுக்கும் இடையே நடக்கின்ற மோதல்தான் இந்நாடகத்தின் பேசு பொருள். கலிலியோவின் கோட்பாடு மதத்திற்கு எதிரானது. ஆகையால் அவர் கடவுள் மறுப்பாளர் என்று குற்றம் சாட்டப்படுகிறார். ஆனால், கலிலியோ அதை மறுத்து தான் ஒரு கடவுள் நம்பிக்கையாளன் என்றும், பைபிளுக்கு எதிராகத் தான் எந்த கருத்தையும் கூறவில்லை; நீங்கள் பைபிளை புரிந்து கொண்டது வேறு வகையில் இருக்கலாம் என்று கூறுகிறார்.
யூகத்தின் அடிப்படையில் அரிஸ்டாட்டிலாலும், பிறகு தாலமி என்றவராலும் முன் வைக்கப்பட்ட பூமி மையக் கோட்பாட்டைத் தான் மதகுருமார்களும் நம்பிக்கையாளர்களும் காலம்காலமாக நம்பி வந்த நிலையில், எதையும் ஆதாரப்பூர்வமாக செயல்முறை மூலம் நிரூபித்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியும்; யூகங்கள் தேவையில்லை என்று கலிலியோ வாதிடுகிறார். கலிலியோவிற்கு முன்னோடியாக நிக்கோலஸ் காப்பர்நிக்கஸும், அதற்கு முன் அரிஸ்டாட்டில் காலத்தை நெருங்கி வாழ்ந்த அரிஸ்டோ கிரேஸ் என்பவரும் பூமி மையக் கோட்பாட்டை எதிர்த்தவர்கள். அந்த எதிர்மரபில் வருபவர்தான் கலிலியோ. அவர்கள் யூக அடிப்படையிலான அறிவியலை பின்பற்றுபவர்கள். ஆனால், இவர்கள் செயல்முறை அடிப்படையிலான அறிவியலை பின்பற்றுகிறார்கள்.
நாடகத்தில் எழும் மிக முக்கியமான ஒரு கேள்வி, கலிலியோவை மதத்திற்கு விரோதமானவர் என்று கூறும் உரிமையை மத குருமார்களுக்கு கொடுத்தது யார்? கலிலியோவின் சிந்தனை இத்தனை வருடங்களாக மத குருமார்களால் பின்பற்றப்பட்டு வரும் அரிஸ்டாட்டில் கோட்பாட்டை கேள்விக்கு உள்ளாகிறது. உண்மையிலேயே கலிலியோ மதத்திற்கும் இறைவனுக்கும் எதிரானவரா என்ற கேள்விக்கு பதில் ‘’தான் மத குருமார்களின் சிந்தனைக்குத்தான் எதிரி; அவர்களின் சிந்தனையில் புரிதலில் தவறு ஏற்பட்டு இருக்கலாம்’ என்று கலிலியோ கூறுகிறார். அறிவியல் சார்ந்த ஆராய்ச்சியை மத நம்பிக்கையோடு போட்டு குழப்பிக்கொள்ளாமல் கலிலியோ பயணிக்கிறார். இதே போன்ற இன்னொரு உதாரணம் அல் பீருணி என்ற அறிஞர் குறித்தது. அவர் இஸ்லாமிய வாழ்க்கை முறைகொண்டவர். ஆனால், அவருடைய கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்த ஆய்வுகளை, மத நம்பிக்கைகளோடு போட்டு குழப்பிக்கொள்ளாமல் அதில் முழுமையோடு ஈடுபடுவார். சயீத் அக்தர் மிர்சா என்ற முக்கியமான இந்திய திரைப்பட இயக்குனர் எழுதிய ‘THE MONK,THE MOOR AND MOSES BEN JALLOUN’ என்ற நூலில் அல் பீருணி குறித்து மிக சுவாரசியமாக எழுதியுள்ளார்.
மத குருமார்களின் அதிகாரத்திற்கும் அவர்களுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கிற்கும் மத்தியில் கலிலியோவின் குரல் எழுவதை இங்கு நாம் கவனிக்க வேண்டும். கலிலியோவின் கோட்பாடு நம்பிக்கை சார்ந்தது அல்ல, வெறுமனே ஒரு கருத்து அல்ல, செயல்முறை விளக்கம் மூலம் நிரூபிக்க முயல்வது. அதற்கு பதில் அளிக்க வேண்டியது மதகுருமார்களின் கடமை. எங்களுக்கு அறிவியல் பற்றி தெரியாது என்று அவர்கள் விலகி இருக்கலாம். ஆனால், அதற்கு பதிலாக கலிலியோவை அவர்கள் மத விசாரணை (Inquisition) செய்கிறார்கள். அதுமட்டுமின்றி அவருடைய கோட்பாட்டை கைவிடுமாறு அவரை மிரட்டுகிறார்கள். ‘’உண்மையைத் தெரியாமல் இருப்பதைவிட தெரிந்த உண்மையை மறைப்பது தவறு’ என்று கலிலியோ ஓரிடத்தில் கூறுகிறார். ஆனாலும் சித்திரவதைக்கும் கடும் தண்டனைகளுக்கும் பயந்து அவர் தன்னுடைய கோட்பாடுகளை எல்லாம் திரும்ப பெற்றுக் கொள்வதாக கூறி வெளியேறுகிறார். அதைப்பற்றி பின்னர் ஆந்திரே என்ற நண்பர கோபமாகக் கேட்கும்பொழுது கலிலியோ அதற்கு “அங்கே சித்திரவதை செய்யும் கருவிகளை வைத்திருந்தனர். அதற்கு பயந்துதான் அப்படி செய்தேன்” என்று கூறுகிறார். உண்மையில் அவர் அங்கு மத குருமார்களுக்கு அடிபணிந்து போனது அவர்களிடமிருந்து விடுதலை பெறுவதற்கு. வெளியே வந்தால்தான் தன்னுடைய கோட்பாட்டை உலகிற்கு தெரியப்படுத்த முடியும் என்ற ஒரு விவேகத்தில்தான் அவர் அப்படிச் செய்தார். அதன் பிறகு அவர் வீட்டுக்காவலில் வைக்கப்படுகிறார். எழுதுவதற்கான சுதந்திரத்தை அவர்கள் கொடுத்திருந்தாலும் கலிலியோ எழுதுவதை எல்லாம் கண்காணித்து அதை தனியாக பெட்டியில் பூட்டி வைக்கிறார்கள் அதிகாரிகள்.
அப்போதுதான் அவருடைய புகழ்பெற்ற அறிவியல் நூலான டிஸ்கோர்ஸை (Discourse) எழுதுகிறார். அவர் எழுதுவதை எல்லாம் அதிகாரிகள் கண்காணித்து அவற்றை எடுத்து தனியாக ஒரு பெட்டியில் பூட்டி வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் கூட தொடர்ந்து கலிலியோ எழுதிக் கொண்டே இருப்பதை பார்த்து, “எப்படி நீங்கள் இவ்வளவு எதிர்ப்புக்கு மத்தியில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்” என்று ஆந்திரே கேட்கிறார். “அது எனக்கு பழக்கம் ஆகிவிட்டது; கைவிட முடியாது” என்கிறார் கலிலியோ. பிறகு தான் எழுதிய எழுத்துக்களை ரகசியமாக பிரதி எடுத்து அருகில் உள்ள உலக உருண்டைக்குள் போட்டு வைத்திருப்பதாகக் கூறுகிறார். “அவற்றை ரகசியமாக எடுத்துச் சென்று இந்த நகரத்தை விட்டு வெளியேறி உலகின் வெளிச்சத்திற்கு கொண்டு போ” என்று கூறுகிறார். கடைசியாக ஆந்திரே அவர் எழுதியவற்றையெல்லாம் ரகசியமாக நகர எல்லைக்கு கொண்டு செல்வதோடு இந்த நாடகம் முடிகிறது.
அதன் பிறகு என்ன நடந்தது என்பதை இந்த உலகம் உணர்ந்திருக்கிறது . 300 ஆண்டுகள் கடந்து விட்டது. இன்று அளவிலும் சூரிய மையக் கோட்பாடுதான் அறிவியல் உலகத்தில் பேசப்படக் கூடியதாக இருக்கிறது. பாடத்திட்டங்களில் எல்லாம் இந்த கோட்பாட்டைத்தான் மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சிந்தனை அல்லது ஒரு கோட்பாடு என்பது தொடர்ந்து ஒரே போன்றதாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை; அவ்வப்போது அது அடுத்தடுத்து கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கலாம். இந்த அறிவியல் கோட்பாட்டை, அடுத்து வரக்கூடிய காலத்தில் தவறு என்று நிரூபித்து வேறு கோட்பாட்டை நிறுவுபவர்கள் வரலாம். ஆனால், இவையெல்லாம் ஒரு வறட்டுத்தனமான கெடுபிடிகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் உள்ளாக்கப்படாமல் திறந்த மனதோடு, தேடலோடு அணுகப்பட வேண்டும்.
இரண்டு வகையில் இந்நாடகம் முக்கியமானது. ஒன்று எப்போதைக்கும் இருக்கும், நம்பப்படும் பொது உண்மைகளுக்கும், தனி நபர் கண்டுபிடிக்கும் அல்லது உணரும் உண்மைக்குமான முரண்; அதன் விளைவாக நடக்கும் மோதல். இன்னொரு முக்கியமான விஷயம் இந்நாடகம் வெளிவந்த காலம். நாஜி வெறியர்களின் அடக்குமுறையில் ஜெர்மனி முடக்கப்பட்டிருந்த காலம். அடக்குமுறைகளுக்கு மத்தியில் தான் கண்டுபிடித்த உண்மையை கூறும் கலிலியோவைப் போலவே, நாஜி அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் இந்நாடகத்தை வெளியிட்டு அதை நிகழ்த்தவும் செய்கிறார் பிரெக்ட். அவர்களால் கடும் துன்பங்களுக்கும் ஆளாகுகிறார். இதுபோலவே பொது ‘உண்மைகளுக்கு’ மத்தியில் தாங்கள் உணர்ந்த அல்லது கண்டுபிடித்த உண்மைகளை வெளிபடுத்தும் அறிவியல் அறிஞர்கள், எழுத்தாளர்கள், தத்துவவாதிகள், ஏன் பல ஆன்மீகவாதிகள் கூட பெரும் இன்னல்களுக்கும் துயரங்களுக்கும் ஆளாகியிருக்கிறார்கள் என்பதை வரலாறு முழுக்க பார்க்கலாம்.
இந்த நாடகத்தில் உள்ள இன்னொரு முக்கியமான ஒரு அம்சம் அறிவு சார் உழைப்பிற்கும், உடல் சார்ந்த உழைப்பிற்கும் உள்ள சில வித்தியாசங்கள். அதைப் பற்றிய உரையாடல்கள். நாடகத்தின் ஆரம்பத்திலேயே கலிலியோ வீட்டில் வேலை பார்க்கும் ஒரு பெண், பால்காரனுக்கு காசு கொடுக்கவே மிக கஷ்டமாக இருக்கும் பொழுது எதற்கு இந்த அறிவியல் ஆராய்ச்சி போன்ற தேவையற்ற வேலைகள் என்று கூறுவாள். அவளை பொறுத்தவரையில் இந்த மூளை சார்ந்த சிந்தனைகள் எல்லாம் எதற்கும் பிரயோஜனம் அற்றது என்பதாக நினைக்கிறாள். ஆனால், கலிலியோவின் இந்த கோட்பாட்டிற்குப் பிறகுதான் மாலுமிகளுக்கு கப்பலை சரியான திசையில் செலுத்துவதற்கு இந்த கோட்பாடு உதவியாக இருக்கிறது என்ற செய்தி வரும். அதேபோல கலிலியோவை மத விசாரணைக்கு உட்படுத்தும்போது கூட உடல் நோகாமல் வேலை செய்வதுதான் இவருக்குப் பிடிக்கும் என்று ஒரு ஏளனமான குற்றச்சாட்டு வைக்கப்படும். இது அறிவியல் துறைக்கு மட்டுமல்ல அறிவு சார்ந்த, சிந்தனை சார்ந்த எல்லா துறையினர் மீதும், மிக மேலோட்டமாகவும், புரிதலற்றும் ஏளனமாக வைக்கப்படுகின்ற ஒரு அபத்த குற்றச்சாட்டு. கற்பனையும் சிந்தனையும் மூளை சார்ந்த உழைப்பும்தான் இந்த உலகத்தையே இயக்கிக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளாத மனிதர்கள்தான் இப்படிக் கூறுவார்கள்.
புகழ்பெற்ற ரஷ்ய சிறுகதை ஆசிரியர் ஆன்டன் செகாவ் அவர்களுடைய சிறுகதைகளை இன்று உலக இலக்கியம் வாசிக்கின்ற அனைத்து வாசகர்களும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர் சிறுகதைகளை எழுதும் பொழுது அவருடைய குடும்பத்தார்களும் உறவினர்களும் அவற்றை வெறும் கிறுக்கல்கள் என்பதாக ஏளனம் செய்திருக்கிறார்கள். உடல் உழைப்பை விட மூளை சார்ந்த உழைப்பிற்கு இரண்டு மடங்கு உடல் சக்தி செலவாகிறது என்று சில மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். என்ன செய்வது வைரத்தின் மதிப்பை எல்லோருமா அறிந்திருக்கிறார்கள்?
********