
என் உடம்பில் பொருத்தப்பட்ட ஒவ்வொரு கருவியின் பயன்பாடும் என்னவென்று என் பயிற்றுவிப்பாளர் ஒரு கிளிப்பிள்ளைக்கு கூறுவதைப்போல் என்னிடம் விளக்கி கூறிக்கொண்டிருந்தார். நேரம் நெருங்க நெருங்க என்னுடய இதயம் மின்னலின் வேகத்தை விட பன்மடங்கு வேகமாகத் துடித்தது, லப் டப் லப் டப்.
“லெட்சுமி, இட்ஸ் யுவர் டர்ன் நவ், லெட்ஸ் கோ!!”. என்னுடைய பயிற்றுவிப்பாளாரைப் பின்தொடர்ந்து ஒரு சிறிய விமானத்தில் ஏறினேன். சரியாக கடலின் மட்டத்திலிருந்து 15,000 அடி தூரத்தில் அந்த விமானம் பறந்து கொண்டிருக்கையில், விமானி பச்சை விளக்கை அழுத்தி, “இது உனக்கான நேரம், லெட்சுமி!” என்று “thumbs up” காட்டினார். விமானத்தின் நுழைவாயிலில் என்னுடைய பாதங்கள் பலமாக ஒட்டிக் கொண்டன. எட்டிப்\ பார்த்தால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒன்றுமே தெரியவில்லை.
ஒன்று….
இரண்ட…
மூ……
லெட்சுமி என்கிற நான், வானில் பறக்கத் தொடங்கினேன்.
அடப்பாவி மனுசா!! 1,2,3 சொல்லிய பிறகு நாம் குதிப்போம் என்று கூறிவிட்டு, மூன்று சொல்வதற்கு முன்பே என்னை வானத்தில் தள்ளிவிட்ட என்னுடைய பயிற்றுவிப்பாளாரின் மீது கடுங்கோபம் வந்தது. ஆனால், அது ஒரு வினாடிக்கூட நிலைக்கவில்லை. காரணம் நான் ஒரு பறவையைப்போல் பறக்க உதவி புரிந்த அந்த ஜீவனிடம் நான் எப்படி என்னுடய சீற்றத்தைக் காண்பிக்க முடியும்? 5 வினாடிகள் “free fall”-க்கு (எந்தவொரு தடையுமின்றி வீழ்தல்) பிறகு என்னுடய பயிற்றுவிப்பாளர் பாராசூட் பட்டனைக் கிளிக் செய்தார். துப்பாக்கியின் தோட்டாவைப்போல் என்னுடைய உடம்பு சர்ரென மேலே இழுத்துச் செல்லப்பட, என் வயிற்றில் யாரோ ஓங்கி உதைத்தது போல் ஓர் உணர்வு. மறுபடியும் அதே உதை.
“அம்மா ஆஆஆஆ…” என்று கத்தியபடியே திடுக்கிட்டு எழுந்தேன். அட! இவ்வளவு நேரம் என் மகள் தூக்கத்தில் உதைத்ததால் ஏற்பட்ட வலிதான் அது என்பதை உணர்ந்தேன். என்ன ஒரு அசாதாரணமான கனவு. நான் கண்ட கனவு நிச்சயமாக மெய்ப்படும் என்ற நம்பிக்கையோடு படுக்கையிலிருந்து எழுந்து என்னுடய அன்றைய வேலைகளைப் பார்க்கத் தயாரானேன்.
அவளின் உடல் பல வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாலும், அவளது மனம் முழுவதும் அவள் கண்ட கனவே ஆக்கிரமித்திருந்தது. லெட்சுமி அன்றைய இரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். ஏனெனில் அவள் ஒரு சுதந்திரப் பறவையாக வாழ்வது அந்த இரவு நேர தூக்கத்தில் வரும் கனவுகளில் மட்டும்தான். நேற்றைய கனவில் ‘ஸ்கை டைவிங்’ செய்தாள். ஆனால், தரையிறங்கும் முன்பே அவளின் கனவு கலைந்து விட்டது.
இன்றைய கனவில் எப்படியும் தரையிறங்காமல் அவள் நித்திரையிலிருந்து எழப்போவதில்லை.
******