இணைய இதழ்இணைய இதழ் 90சிறார் இலக்கியம்

சிரிப்பு ராஜா சிங்கமுகன் – யுவா – அத்தியாயம் 1 

சிறார் தொடர் | வாசகசாலை

உரைகல் செய்தி

“தொடரும் சுரங்கக் கொள்ளை… தூங்கும் சிங்க அரசு… படியுங்கள் உரைகல்! இரண்டே வெள்ளிக் காசுகள். தொடரும் சுரங்கக் கொள்ளை… தூங்கும் சிங்க அரசு… படியுங்கள் உரைகல்!”

தூங்கிக்கொண்டிருந்த மன்னர் சிங்கமுகன், இந்தக் குரலைக் கேட்டு கண்களைத் திறந்தார். கோபமாகப் படுக்கையை விட்டு எழுந்து, உப்பரிகைக்கு வந்து கீழே பார்த்தார்.

அரண்மனைக்கு வெளியே ஒரு சிறிய கூட்டம் இருந்தது. அந்தக் கூட்டத்துக்குள் நுழைந்து நுழைந்து, கைகள் நிறைய இருந்த ‘உரைகல்’ ஓலைப் பத்திரிக்கையைக் கூவி கூவி விற்றுக்கொண்டிருந்தான் அந்தச் சிறுவன்.

சிங்கமுகன் முகம் கடுகடுத்தது. “யாரங்கே?” என்று சத்தம் போட்டார்.

ஒரு காவலாளி ஓடிவந்து, “அரசே…” என்றான் பணிவாக.

“நல்லா…வெளியே கூவிக்கொண்டிருக்கும் அந்தச் சிறுவனைப் பிடித்து இழுத்து வா” என்றார்.

“ஆகட்டும் அரசே…” என்றபடி வீரன் நல்லான் பின்னோக்கியே நகர்ந்தான்.

“அடேய் நல்லா… நீ மிகவும் துடிப்பானவன்தான் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக இப்படி பின்னோக்கிச் சென்று தடுக்கி விழுந்து மண்டையை உடைத்துக்கொள்ளாதே. பணி நேரத்தில் விபத்து நடந்தது, அரசர்தான் இழப்பீடு தரவேண்டும் என்று உங்களது வீ.பா.ச. (வீரர்கள் பாதுகாப்பு சங்கம்) என் உயிரை எடுக்கும். திரும்பி ஒழுங்காக நட” என்று சிடுசிடுத்தார் சிங்கமுகன்.

“மன்னிக்கவும் அரசே…” என்றபடி திரும்பி விரைந்துச் சென்றான் நல்லான்.

அந்தச் சிறுவனை நல்லான் அழைத்து வருவதற்குள் ஒரு சிறிய அறிமுகம்.

அரிமாபுரி நாட்டின் அரசன் வீரசிங்கம். அவரது மகன்தான் இந்த சிங்கமுகன். வீரசிங்கம் மிகச் சிறந்த வீரர். அதேபோல மக்கள் மீதும் மிகுந்த அக்கறை படைத்தவர். மக்கள் என்பவர்கள் நமக்குக் கீழானவர்களோ, அடிமைகளோ அல்ல. அவர்களும் நமக்குச் சமமானவர்களே என்று கருதியவர். அதனால், சுற்றியுள்ள எந்த நாட்டிலும் இல்லாத பல்வேறு புரட்சிக்கரமான சட்டங்களை அரிமாபுரி நாட்டில் இயற்றியவர். திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் மரணம் அடைந்துவிட்டார்.

அவருக்குப் பிறகு பதவிக்கு வந்த சிங்கமுகன் நல்லவர்தான். எனினும், தந்தையின் வீரமோ, சிந்தனைகளோ இல்லாதவர். மக்களுக்கு சிங்கமுகனின் பல செயல்கள் பிடிக்காவிட்டாலும் அவரது தந்தை மீதான மதிப்பு காரணமாகப் பொறுத்துச் செல்கிறார்கள்.

உப்பரிகையை விட்டு நகர்ந்த சிங்கமுகன், அங்கே மேடையில் வைத்திருந்த வாய் அகன்ற மண்பாத்திரத்தில் இருந்த தண்ணீரில் முகம் கழுவிக்கொண்டார். ஆளுயர கண்ணாடியை நெருங்கி கிரீடத்தை எடுத்து தலையில் வைத்துக்கொண்டார். வாளையும் கையில் பிடித்துகொள்ளலாமா என்று யோசித்தார். பிறகு, ‘வேண்டாம்… சிறுவன் பயந்துவிடுவான்’ என்று அந்த எண்ணத்தை கைவிட்டார்.

ஆனால், அங்கே வந்த சிறுவன் முகத்தில் சிறிதும் அச்சமில்லை. “சொல்லுங்கள் ராஜா… என்னை அழைத்துவரச் சொன்னீர்களாமே… என்ன விஷயம்? உரைகல் வேண்டுமா? அதுதான் ஆண்டுச் சந்தா செலுத்தி, அரண்மனையைத் தேடி வருகிறதே” என்றான்.

“அடேய் பொடியா…  என்ன கேலி செய்கிறாயா? உனக்கு எவ்வளவு துணிவு இருந்தால், அரண்மனை வாசலிலேயே நின்றுகொண்டு தூங்கும் சிங்க அரசு என்று கூவிக்கொண்டிருப்பாய்” என்றார் மிரட்டலான குரலில்.

ம்ஹூம்… அப்படியும் சிறுவன் அஞ்சவில்லை.

“அரசே… நான் பத்து தெருக்களுக்குச் சென்று கூவி கூவி விற்பதை  அரண்மனை வீதிக்கு வந்தால் பத்தே நிமிடங்களில் விற்றுவிடுவேன். ஏனென்றால், இங்கேதான் விடியற்காலையிலேயே பெரிய கூட்டம் தங்களின் கோரிக்கை மனுக்களுடன் வரிசையாகக் காத்திருப்பார்கள். பொழுதுபோக இதை வாங்கிப் படிப்பார்கள். நானும் சீக்கிரம் விற்றுவிட்டு பாடசாலைக்குச் செல்வேன்’’ என்றான்.

“என்ன திமிர் உனக்கு… சிறுவனாக இருக்கிறாயே என்று தயங்குகிறேன். இல்லாவிட்டால், இந்த நிமிடமே கைது செய்து பாதாளச் சிறையில் அடைத்துவிடுவேன்” என்றபடி அவனை நோக்கி ஓரடி முன்னால் வந்தார்.

ம்ஹூம்… அப்போதும் சிறுவன் குரலில் நடுக்கமில்லை.

“பெரியவனாக இருந்தாலும் கைது செய்ய முடியாது மன்னா… நான் திருடினேனா… அரசுக்கு எதிராக முழக்கம் இட்டேனா? ஒரு பொருளை விற்கிறேன். மாம்பழம் விற்பவர் அது எங்கிருந்து வந்தது, அதன் சுவை எப்படி இருக்கும் என்று சொல்லி விற்பார்கள் அல்லவா? அதுபோல பத்திரிகையில் என்ன விஷயம் உள்ளது என்று சொல்லி விற்கிறேன். வியாபாரம் செய்பவனை சட்டப்படி கைது செய்ய முடியாது மன்னா. இது நம் பெரிய அரசர் இயற்றிவிட்டுச் சென்ற சட்டம்” என்றான்.

சிங்கமுகன் முகம் சிடுசிடுப்பாக மாறியது. “ஆ… என் அப்பா ஏடாகூடமாக ஏகப்பட்ட சட்டங்களை இயற்றிவிட்டுப் போய்விட்டார். இப்போது உங்களிடம் நான் மாட்டிக்கொண்டு அவதிப்படுகிறேன். இப்போதே ஒரு புதிய சட்டம் கொண்டுவருகிறேன். 18 வயதுக்கு உட்பட்டவர்கள், படிக்க மட்டுமே செல்ல வேண்டும். வியாபாரமோ, வேலையோ செய்யக் கூடாது. அப்படிச் செய்தால் கைது” என்றார்.

ம்ஹூம்… சிறுவன் அலட்டிக்கொள்ளவே இல்லை.

“அரசே… அப்போதும் நீங்கள் என்னைக் கைது செய்ய முடியாது. சிறுவர்கள் படிக்கத்தான் வேண்டுமென்றால், நீங்கள் என்னைப் பாடசாலைக்குத்தான் அனுப்ப வேண்டும். சிறைக்கு அல்ல. தவிர, சிறுவர்கள் வேலை செய்து பிழைக்கும் அளவுக்கு இன்று நாட்டின் நிலை இறங்கிவிட்டதற்கு யார் காரணமோ, அவர்களே கைது செய்யப்பட வேண்டும்” என்றான்.

“என்ன… என்ன… நீ சொல்வதைப் பார்த்தால் என்னையே கைது செய்ய வேண்டும் என்கிறாயா?” என்று ஆத்திரத்துடன் அவனை நெருங்கி, அவன் கையில் இருந்த ‘உரைகல்’ ஓலைகளைப் பிடிங்கி தூக்கி வீசினார்.

“அன்பே… அன்பே… அமைதி.. அமைதி…” என்றபடி வேகமாக வந்தார் கிளியோமித்ரா.

சிங்கமுகனின் மனைவி. இவரது இயற்பெயர் மித்ரா தேவி. அயல்நாட்டில் கிளியோபாட்ரா என்ற ஒரு பேரழகி இருப்பதாகவும், உலகின் சிறந்த அழகி அவள் என்றும் அரண்மனைக்கு வந்த ஓர் அயல்நாட்டு வணிகர் சொன்னார். அந்த அழகியின் ஓவியத்தையும் காண்பித்தார். அதைப் பார்த்த ராணிக்கு மிகவும் பிடித்துவிட்டது. தானும் அந்த அழகிக்குச் சற்றும் குறைந்தவளில்லை என்று சொல்லி, தனது பெயரையும், ‘கிளியோமித்ரா’ என்று மாற்றிக்கொண்டார்.

“கிளியோ… இந்தப் பொடியனின் திமிரைப் பார்த்தாயா?” என்று சீறினார் சிங்கமுகன்.

“கோபம் வேண்டாம். இந்தாருங்கள் பாதாம் பால் குடியுங்கள்” என்று கையில் பானம் நிறைந்த தங்கக் கோப்பையை நீட்டினார் கிளியோமித்ரா.

கிழக்கிந்திய கம்பெனி என்ற ஓர் அயல்நாட்டுக்கார நிறுவனம் இந்தியாவுக்குள் புதிதாக வந்துள்ளது. அவர்கள் பல இடங்களில் தங்கள் வணிகத்தைச் செய்துவருகிறார்கள். இந்தப் பகுதியின் பொறுப்பாளரான ‘கிங்விங்சன்’ என்பவர் கொடுத்த அன்பளிப்பு இது.

பெயர்… ஏதோ பாதாம் பருப்பு. உடலுக்கு மிகவும் நல்லதாம். ஒரு மூட்டை பாதாம் பருப்பு கொடுத்திருக்கிறார். அதை அரைத்து பாலில் கலந்து தினமும் குடிப்பது சிங்கமுகனுக்குப் பிடிக்கும். சிங்கமுகன் அந்தக் கோப்பையை வாங்கிப் பருக ஆரம்பித்தார்.

சிறுவன் அவரையே பார்த்துகொண்டிருந்தான்.

“பொடியா… உன் பெயர் என்ன?” என்று கேட்டார் சிங்கமுகன்.

“குழலன்” என்றான்.

“அழகான பெயர்… பாதாம் பால் குடிக்கிறியா?” என்று கேட்டார்.

“வேண்டாம் அரசே” என்றான் குழலன்.

“அடேய் குடியடா… நன்றாக இருக்கும். நமக்குள் இருக்கும் சண்டை வேறு… இது வேறு… கிளியோ, பயலுக்கு ஒரு கோப்பையில் கொண்டு வரச்சொல்” என்றார் சிங்கமுகன்.

“இல்லை அரசே வேண்டாம். இதெல்லாம் அரசரும் நிலப்பிரபுக்களும் பருகும் உயர்ந்த வகை பானம். தவிர, வீட்டில் என் தம்பியும் தங்கையும் இருக்கிறார்கள். அவர்கள் அங்கே இந்நேரம் நீராகாரம் குடிக்கும்போது, நான் மட்டும் பாதாம் பால் குடிக்க மனதில்லை” என்றான் குழலன்.

“அடடா… இவ்வளவு நல்ல பிள்ளையாக இருக்கிறாய். எதற்கு இப்படிச் செய்கிறாய்? எல்லாம் அந்த உரைகல் பத்திரிகை ஆசிரியரான உத்தமன் செய்கிற வேலை. புரட்சி, ஜனநாயகம் என்று ஏதேதோ எழுதிக்கொண்டு இருக்கிறான். சின்னப் பிள்ளைகளான உங்களையும் கெடுத்து வைத்திருக்கிறான். சரியான காரணம் கிடைக்கட்டும். அவனைக் கைது செய்து சிறையில் தள்ளுகிறேன்” என்றார் சிங்கமுகன்.

“மன்னா… இப்போதும் சொல்கிறேன். நானோ, உத்தமன் அண்ணாவோ தவறு எதுவும் செய்யவில்லை. நான் போகலாமா? எஞ்சி இருக்கும் பிரதிகளை விற்றுவிட்டு சீக்கிரம் சென்றால்தான் பாடசாலைக்கு செல்லமுடியும்” என்றான் குழலன்.

“சரி… சரி… மொத்தம் எத்தனை பிரதிகள் உள்ளன?”

“பன்னிரண்டு மன்னா”

“ம்… அவை அப்படியே இருக்கட்டும். சீக்கிரம் பாடசாலைக்குச் செல். கிளியோ… பயலுக்கு 24 வெள்ளிக் காசுகள் கொடுத்து அனுப்பு” என்றார்.

“சரிங்க பிரபு” என்றபடி சிறுவனுடன் வெளியேறினார் கிளியோமித்ரா.

சிங்கமுகன் கீழே சிதறிக் கிடந்த உரைகல் ஓலைப் பத்திரிகைகளில் ஒன்றை எடுத்துப் புரட்டி பார்வையை ஓடவிட்டார்.

‘தொடரும் சுரங்கக் கொள்ளையர்களின் அட்டூழியம்’ என்ற தலைப்பில் விரிவான செய்தி இருந்தது.

“யாரங்கே?” என்று குரல் கொடுக்க மீண்டும் காவலாளி நல்லான் வந்து நின்றான்.

“மந்திரியும் தளபதியும் எங்கிருந்தாலும் இன்னும் பத்து நிமிடங்களில் என் முன்னால் இருக்க வேண்டும்” என்றார் சிங்கமுகன்.

“ஆகட்டும் அரசே…” என்று நல்லான் திரும்பிச் செல்ல முற்பட…

“அடேய் அடேய் இரு… இரு… நான் காலைக்கடனை முடிக்க வேண்டும். ஆகவே, இருபது நிமிடங்களுக்குப் பிறகு வரச்சொல்” என்றார்.

“அப்படியே ஆகட்டும் அரசே…” என்ற நல்லான் அங்கிருந்து அரண்மனை வாசலுக்கு வந்தான். 

சுற்றுச்சுவர் மீது இருந்த மாடத்தில் முரசு அறிவிப்பவன் உரைகல் படித்துக்கொண்டிருந்தான்.

“அடேய் முகிலா” என்று கீழே இருந்து கூவினான் நல்லான்.

குனிந்து பார்த்த முகிலன், “என்ன நல்லா?” என்று கேட்டான்.

“அரசரின் அவசர ஆணை… நம் மதிப்புகுரிய மந்திரியும் மாவீரர் தளபதியும் எங்கிருந்தாலும் இன்னும் பத்து நிமிடத்தில் அரசர் முன்பு இருக்க வேண்டும்” என்றான் நல்லான்.

“ஆகட்டும்…” என்ற முகிலன் முரசு கொம்புகளைக் கையில் எடுக்க…

“இரு… இரு… அரசர் காலைக்கடன்களை முடிக்க வேண்டும். ஆகவே இருபது நிமிடங்களுக்குப் பிறகு இருக்க வேண்டும்” என்றான் நல்லான்.

முகிலன் முரசு கொட்டினான்… ‘தொம்…. தொம்… தொம்’ 

“நமது மகாகணம் பொருந்திய அரசரின் அவசர ஆணை… அறிவின் ஒளிவிளக்கு மந்திரியார் நிலாமதி சந்திரன் அவர்களும் வீரத்தின் விளைநிலம் தளபதியார் கம்பீரனும் எங்கிருந்தாலும் இன்னும் பத்து நிமிடங்களில் அரசர் முன்பு இருக்க வேண்டும்”

‘தொம்… தொம்… தொம்’

அரண்மனைக்கு வெளியே சில வீரர்கள் காவலுக்கு இருந்தார்கள். அவர்களில் ஒருவன் தனது புரவியில் ஏறிக்கொள்ள…

“இரு… இரு… அரசர் காலைக்கடன்களை முடிக்க வேண்டும். ஆகவே, இருபது நிமிடங்களுக்குப் பிறகு இருக்க வேண்டும்…”

‘தொம்…. தொம்… தொம்’

வீரனின் புரவி புழுதியைக் கிளப்பியவாறு கிளம்பியது. சற்று தூரம் வந்ததும் ஒரு பெரிய வீதியின் முனையில் நிறுத்தினான். நிலப்பிரபுக்கள், அரண்மனை உயர் பதவியில் இருப்பவர்கள் வசிக்கும் மாளிகைகள் நிறைந்த வீதி அது.

தனது கைகளை வாயருகே குவித்து… “அரசரின் அவசர ஆணை… நம் அறிவுச்சுடர் மந்திரியார் நிலாமதிசந்திரனும் நாட்டின் காக்கும் கவசம் தளபதி கம்பீரனும் பத்து நிமிடத்தில் அரசர் முன்பு இருக்க வேண்டும். இருங்கள்… இருங்கள்… அரசர் காலைக்கடன்களை முடிக்க இருப்பதால் இருபது நிமிடங்கள் கழித்து இருக்க வேண்டும்” என்று அறிவித்தான்.

அந்த வீதியில்தான் மந்திரி மற்றும் தளபதியின் மாளிகைகள் எதிரெதிரே இருந்தன. அவற்றின் வாசலில் இருந்த காவலாளிகள், செய்தியைச் சொல்ல அவரவர் மாளிகைக்குள் அவசரமாக நுழைந்தார்கள்.

தளபதி கம்பீரன் மாளிகைக்குள்… கம்பீரன் எதிரே கைகளைக் கட்டிக்கொண்டு ஒருவன் நின்றிருந்தான். பேசிக்கொண்டு இருந்த இருவரும் சட்டென அமைதியானார்கள்.

“இரு… இரு… வெளியே ஏதோ அறிவிப்பு” என்றான் கம்பீரன்.

எதிரே நின்றிருந்தவன் வேகமாகச் சாளரம் அருகே சென்று மெல்ல திரையை விலக்கிப் பார்த்து சில நிமிடம் நின்றான். வீதிமுனையில் நின்றபடி குதிரை வீரன் அறிவித்ததை அவனும் கேட்டான். சட்டென முகம் மாறியது.

“தளபதியாரே… அரசரின் அறிவிப்பு… உங்களை உடனே அழைக்கிறார். உரைகல் அவர் பார்வைக்குச் சென்றுவிட்டது போலும்” என்றான்.

“சரி சுகந்தா… நாம் பிறகு பேசிக்கொள்வோம். நீ உடனே கிளம்பு” என்று பரபரப்புடன் எழுந்தான் கம்பீரன்.

சுகந்தன் என்கிற அவன் வேகமாக அறையின் ஒரு பக்கம் வந்து அங்கிருந்த மேஜையை நகர்த்தினான். தரைவிரிப்பை விலக்கினான். தரையோடு தரையாக இருந்த ஒரு கதவை மேலே தூக்கிவிட்டு உள்ளே இறங்கி மூடிக்கொண்டான்.

கம்பீரன் அங்கே நெருங்கி விரிப்பை சரியாகப் போட்டு மேஜையை இழுத்து பழையபடி மாற்றினான். அதேநேரம் காவலாளி அறைக்கு வெளியே வந்து பணிவுடன் நின்றான்.

“என்ன?”

“அரசரின் உத்தரவு வந்துள்ளது. உங்களை வரச்சொல்லி…”

“ம்…ம்… என் காதிலும் விழுந்தது. நீ போ” என்றான்.

வீரன் விலகிச் சென்றான். கம்பீரனின் பார்வை அறையின் மூலையில் இருந்த மூட்டை மீது சென்றது. சுகந்தன் கொண்டுவந்த மூட்டை.

அதில் இருக்கும் பொற்காசுகளையும் ஆபரணங்களையும் கண்ணுக்குள் கொண்டுவந்த கம்பீரன் முகத்தில் புன்னகை தோன்றியது.

(தொடரும்…)

iamraj77@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button