
உரிமை!
என் புடவையை
அங்கு காயப்போடாதே
இங்கு காயப்போடாதே
என்றார்கள்.
ஈரப்புடவையை
உடுத்தியபடியே
நடந்தேன்.
இங்கே,
வெயிலுக்கா
பஞ்சம்?
உரிமைக்குத்தானே!
*****
சந்தோஷச் சிறுமி!
விடுமுறை நாளில்
‘நான் எட்டு வயசுலயே
சைக்கிள் ஓட்டக்
கத்துக்கிட்டேன்’
என்றபடியே
சித்தி மகளுக்கு
சைக்கிள் ஓட்ட
கற்றுத் தருகிறாள் அம்மா.
அவ்வப்போது
அம்மாவே நொண்டியடித்து
சைக்கிளில் ஏறி அமர்ந்து
சைக்கிளை ஓட்டவும் செய்கிறாள்.
சோகக் கதைகளிலே
அம்மாவின்
பால்ய வயதை அறிந்தவள்
தற்போது
எட்டு வயது சந்தோஷச்
சிறுமியைக் காண்கிறாள்.
****
ஆறிலிருந்து அறுபது!
‘ஐந்து
நான்கு
மூன்று
இரண்டு
ஒன்று
‘கால இராக்கெட்’ லான்ச்
செய்யப்படுகிறது’
என்கிறாள் ஷனா.
தன் கட்டைவிரலாலும்
ஆள்காட்டி விரலாலுமே
லான்ச் செய்யப்பட்ட
கால இராக்கெட்
புத்தகம் படித்துக் கொண்டிருக்கும்
தாத்தாவின் மேல் விழுகிறது
இராக்கெட்டை எடுத்த
தாத்தா தனது நடுவிரல்களாலும்
ஆள்காட்டி விரல்காளாலும்
இராக்கெட்டை ஷனாவிடம்
மீண்டும் அனுப்புகிறார்.
‘கால இராக்கெட்
காலங்கடந்துச் சென்று
தனது
பயணத்தை வெற்றிகரமாக
முடித்துவிட்டுத் திரும்பியது’
என்கிறாள் ஷனா.
கால இராக்கெட்
பயணித்த தூரம்
ஆறிலிருந்து
அறுபது.
*****