கௌதாரியும் குஞ்சுகளும்….
(கதைப்பாடல்)
குடியானவன் ஒருவன் வயலினிலே
குஞ்சுகளோடு கௌதாரி ஒன்று
கூடு கட்டி பலநாட்கள்
குதூகலமாக வாழ்ந்து வந்தது…
இரை தேடிச் சென்ற அது
இரவு முழுதாய் கவிழ்வதற்குள்
இல்லம் வந்து சேர்ந்தது
இறகால் குஞ்சினை அணைத்தது..
அம்மா அம்மா என்றேதான்
அழைத்தன குஞ்சுகள் யாவுமே!
வேறு வீடு கட்டுங்கள்
விடை பெறவேண்டும் விரைவினிலே!
என்றே கூறிப் புலம்பின
எதற்கென்று தாயும் கேட்டிடவே
எல்லாக் கதிரும் முற்றியதால்
அறுவடை செய்திடப் போவதாய்
நில்லாது நடந்து சென்றேதான்
சொல்லிச் சென்றார் விவசாயி..
நாளைக் காலை வந்திடவே
வேலையாளினை அமர்த்தியதாய் அவரும் உரைத்திடக் கேட்டிட்டோம்…
பதிலேதும் சொல்லாமல் பறந்து சென்றது மறுநாளும் இரையினைத் தேடியே கௌதாரி…
பகல் முடிந்த வேளையில் பதற்றமின்றி வந்தே பக்கத்தில் அமர்ந்தது குஞ்சுகளுடனே!
வேலையாள் கிடைக்கலையாம்..
வேண்டும் மட்டும் தேடியும்..
விடியலில் அவரே வருவாராம்..
வயலில் கதிரை அறுப்பாராம்…
இன்று பேசியதைக் கேட்டிருந்து
எடுத்துக் கூறின குஞ்சுகள்..
நின்று ஓய்வு எடுக்காமல்
நிமிடத்தில் பரபரவென இயங்கியது..
சென்று நல்லதொரு வயலினை
மூன்று நாழிகையில் கண்டது
திரும்பி வந்து குஞ்சுகளை
திட்டமாய் அழைத்துச் சென்றது..
பிறரை நம்பி இறங்கிடில்
பணிகள் தாமதம் ஆகிடுமே!
நமதுப் பணியை நாமேசெய்திட
நன்மைகள் விளைந்திடும் விரைவினிலே!
***************************************
சர்க்கரைக் கட்டியும் எறும்பும்…(கதைப்பாடல்)
எறும்புகள் ஒன்று கூடி
எழிலாய் வாழ்ந்து வந்தன..
பெரும்பாறை ஏறியும் பொருள்கள் சுமந்து வந்தன…
புற்று வீடு ஒன்றினை
பூமிக் கடியில் கட்டின
சற்றும் ஓய்வு கொள்ளாமல்
சுறுசுறுப் பாக இயங்கின…
கிடைத்த உணவை எடுத்துவந்து
இல்லத்தில் சேமித்து வைத்தன..
எல்லோர் பொருளும் ஓரிடத்தே
குன்று போல குவிந்தன…
செல்லம் என்ற எறும்பு
வெல்லம் ஒன்றைக் கண்டது..
மெல்ல சுவைத்துப் பார்த்தது..
மெய் மயக்கம் கொண்டது..
தான் மட்டும் தின்றிடவே
தந்திரம் ஒன்றைச் செய்தது..
தளிர் இலை கொண்டேதான்
தகுந்த கதவு போட்டது..
இலைக்கு அடியில் காலுமே
இழுக்க முடியாமல் சிக்கியது..
மலைத்து நின்ற எறும்புமே
மற்ற எறும்பினை அழைத்தது…
கூக்குரல் கேட்டு எறும்புகள்
குடுகுடுவெனக் குவிந்தன..
பக்கம் சென்று காலினை
பதமாய் விலக்கி விட்டன..
வெட்கம் கொண்ட செல்லமோ
வேண்டும் ஒற்றுமை என்பதையே
வேதமாய் அறிந்து ஏற்றது..
பகுத்துண்டு வாழ்ந்திட பல நலம் பெருகுமே!
வகுத்து வைப்போம் நம்மிடையே
நூலோர் தொகுத்த நன்மையே!
***********************************
புறாவும் வேடனும்
(கதைப்பாடல்)
பறந்து செல்லும் போதில்
பார்த்து விட்டன புறாக்கள்
விரைந்து கீழே இறங்கி
விரும்பி தின்றன நெல்லை…
அதனைக் கண்ட வேடன்
அருகில் பிடிக்க நெருங்க
துரத்திச் சென்றான் வேடன்
பறந்து சென்றன புறாக்கள்
அடுத்த அடுத்த நாளும்
அவைகள் வந்து சென்றன
இதற்கு முடிவு கட்டிட
இறங்கி விட்டான் வேடனும்
புறாக்கள் பிடிக்க எண்ணி
புதிய வலையை விரித்து
மணிகள் நிறையத் தூவி
மறைந்து நின்றான் அவனுமே
என்றும் போல புறாக்கள்
எல்லை யற்ற ஆவலாய்
எடுக்கச் செல்ல வேண்டாம்
தடுத்து நின்றது தலைவனும்
பசியில் இருந்த பறவைகள்
ஆசை மிகுந்து வழிந்திட
மறுத்துப் பேசிப் போயின
மணிகள் கொத்தித் தின்றன
வேடன் விரித்த வலையில்
வசமாய் மாட்டிக் கொண்டன
சிறகை விரிக்க முயல்கையில்
சிக்கிக் கொண்டதை உணர்ந்தன..
புரிந்து கொண்ட தலைவனும்
விரைந்து சேர்ந்து கொண்டது
எந்தன் பேச்சை மதியாமல்
எளிதில் மாட்டிக் கொண்டீர்கள்
இருந்த போதும் உங்களை
இழக்க மாட்டேன் நானுமே!
ஒன்றாய் சேர்ந்து எழுங்கள்
என்றே கேட்டுக் கொண்டது
புறாக்கள் அனைத்தும் ஒருசேர
பறக்க சிறகை விரித்தன
வலையோடு ஒன்றாய் எழுந்து
வானில் பறந்து சென்றன
வலையுடன் புறாக்கள் பறப்பதை
வியந்து பார்த்து நின்றனன்
மலைத்துப் போன வேடனும்
சிலை என்றே ஆயினன்
வலையுடன் சென்ற புறாக்கள்
கிளையில் அமர்ந்து கொண்டன
எலிகள் ஒன்று கூடியே
எளிதாய் வலையை நீக்கின
மூத்தோர் சொல்லை மதிக்கணும்
முறையாய் வாழப் பழகணும்
கண்ணில் கண்ட எவற்றையும்
கண்டு மயங்கக் கூடாது
யார் இங்கே வேடனோ?
எந்த வலை இருக்குமோ?
சேரிடம் பார்த்து தெளிந்து
சேர்ந்து வாழ்வோம் அறிவுடனே!