
துளித் துளியாய்…
வாங்க வாங்க வாங்கென்று
வணக்கம் சொல்லி வரவேற்க
தாங்கிய முகத்தில் புன்னகையே
தவழ வந்தனர் விருந்தினரே
விருந்து உண்டு மகிழ்ந்தாரே
விரைந்து கை,வாய் கழுவத்தான்
திறந்த குழாயை மூடாமல்
திரும்பி விட்டதைப் பார்த்தேனே
நன்றே குழாயை அடைக்காமல்
நாமும் திரும்புதல் தப்பாகும்
ஒன்று இரண்டு மூன்றென்று
ஒழுகும் தண்ணீர் வீணாகும்
சிந்தித் தீர்த்த தண்ணீரை
சிந்தை உணரச் சேமிப்பின்
முந்தி வரும் எழுவரின்
மொத்த தாகம் தீருமென்றேன்
சரிதான் உந்தன் பேச்சென்று
சரியாய்ப் புரிந்த அதிலொருவர்
விரித்த கரத்தால் அள்ளியெனை
வாரி முத்தம் தந்தாரே!
சுத்தம் கற்போம்
அப்பாவோடு சேர்ந்து நான்
ஆற்றங்கரைக்குச் சென்றேனே
இனிப்புப் பண்டம் கேட்டேனே
“ஈக்கள் மொய்த்த பண்டத்தை
உண்ணுதல் என்றும் கூடாது;
ஊறுகள் பலவும் விளைந்திடுமே”
என்றார் எனது அப்பாவும்.
ஏமாற்றத்துடன் நானுந்தான்
’ஐயா’ என்று கெஞ்சினேன்
ஒன்றும் பேசாதிருந்த அப்பாவிடம்
ஓடிச் சென்றேன் உடனடியாய்!
‘ஒளடதம் என்போம் சுத்தத்தை’
அஃதை உணர்த்தினார் அப்பாவும்.