கட்டுரைகள்

எஸ்.அர்ஷியாவின் “அப்பாஸ்பாய் தோப்பு” – வாசிப்பனுபவம்

நரேன் கிருஷ்ணா

புத்தகத்திற்குள் கதை இருப்பது போல அந்தப் புத்தகம் நமக்கு அறிமுகமான கதைகளும் உண்டு. போன வருடம் வாசிப்புப் பழக்கத்தை ஆரம்பித்த போது நிறைய புத்தகங்களின் அறிமுக வீடியோக்களை யூடூயூபில் பார்ப்பேன். அப்படி பார்த்தபோது இயக்குனர் ராம் அவர்களால் அறிமுகமான நாவல் “அப்பாஸ்பாய் தோப்பு”. அதைக் குறித்துக்கொண்டு சென்னை புத்தகக்கண்காட்சியில் தேடினேன் கிடைக்கவில்லை. சமீபத்தில் தஞ்சை NCBH பதிப்பகத்தில் வாங்கி, தூசியை தட்டிக்கொண்டு எடுத்துவந்தேன். எனது வாசிப்பை பொறுத்தவரை அதுவரையிலும் எஸ் அர்ஷியா அறிமுகமில்லாத எழுத்தாளர்.  ” அர்ஷியா” என அவருடைய மகளின் பெயரில் எழுதுகிறார்.அவரின் இயற்பெயர் சையத் உசேன் பாஷா என பின்னர் அறிந்துக்கொண்டேன்.

இதுவரை நான் படித்த இஸ்லாமிய இலக்கியங்கள் அனைத்தும் இஸ்லாமிய மதத்தால் இருட்டடிப்பு செய்யப்பட்ட அந்த மக்களின்.., குறிப்பாக பெண்களின் வாழ்வியலைக் கூறியது. இந்த நாவல் அதற்கு நேரெதிரானது.

அப்பாஸ்பாய் தோப்பு மதுரையில் அதிகமான இஸ்லாமியர்கள் வாழும் ஒரு குடியிருப்புப் பகுதி.  முக்கியமாக நிறைய விளிம்பு நிலை மக்களைக் கொண்ட பகுதி. இங்கிருக்கும் தோப்பு வீட்டில் அடிக்கடி கூட்டமாக பெண்கள் கூடுகிறார்கள், பொறணி பேசுகிறார்கள், அங்கிருக்கும் ஐயர் கடை வடையையும், அப்துல்லா கடையின் பஜ்ஜியையும் சுவைத்துக்கொண்டே சீட்டாடுகிறார்கள். உசேன் என்பவன் மைய  கதாபாத்திரமாக இருந்தாலும் இந்த நாவல் தனி தனியாய் அங்கு நடந்த நிறைய நிகழ்வுகளைப் பற்றியும், நிகழ்வுகளில் வரும் கதாபாத்திரத்தின் பின்னணிக் கதைகளையும் விவரித்துக்கொண்டே போகிறது. நிறைய குடும்பங்கள் வாழும் ஒரு பகுதியின் வாழ்வியலைக் கூறுவதால் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் வருகிறது.

அர்ஷியாவும் தவிர்க்கமுடியாமல் தான் எழுதியிருக்கிறார். ஆனால் குறிப்பிட்ட கதாபாத்திரங்கள் மட்டுமே நினைவில் நிற்கிறது. நாவலில் தனி தனியாக நிறைய நிகழ்வுகளை விவரித்தாலும் அனைத்தையும் இணைப்பது அங்கு வாழும் மக்கள் அனைவருக்கும் பிடித்தமான உசேனின் திருமண ஒப்புதல்.

கணவனின் நோயைக் குணப்படுத்த மலை உச்சியில் இருக்கும் சிக்காந்தர் தர்ஹாவில் தீ மிதித்து வேண்டுதல் விடுக்கும் தாதிபீ, ஆண்களின் மோப்பப் பிடியிலிருந்து தப்பித்துக்கொண்டிருக்கும் ஒடுக்கி, MGR-இன் தீவிர ரசிகையான ‘MGR பெத்தா’ என்னும் மூதாட்டி, பெண்தன்மைக் கொண்ட ரோசா பூ பாய் போன்ற கதாபாத்திரங்களின் வெளிப்பாடுகளில் அர்ஷியா கவர்கிறார். கம்யூனிஸ்ட் கட்சி வாசகசாலையில் ஒன்னு விடாமல் அனைத்தையும் படிக்கும் மூசா, திமுக காட்சியைச் சேர்ந்த மகாராஜன், ‘கடவுள் இல்லை’ துரைராஜ், தனது கழுதைக்கு சாமி பெயர்களை வைத்து ‘சனாதன’ எதிர்பைக் காட்டிய சேத்தியப்பனின் அப்பா, என அந்தப் பகுதியில் வாழும் மக்களின் அரசியல் உணர்வுகள் யதார்த்தை இன்னும் கூடுதலாகக் கொடுக்கின்றன.

உருது பேசும் முஸ்லீம் – தமிழ்பேசும் முஸ்லீம்களால் இழிவுபடுத்தப்படும் அபுனு – பாத்திமா கதாபாத்திரத்தின் மூலமாக அவர்களுக்குள் இருக்கும் படிநிலைகளைத் தொட்டு செல்கிறார். குடித்துவிட்டு தந்தையைத் திட்டித் தீர்க்கும் அப்சர் பெற்றோர்களால் கவனிக்கப்படாமல் கைவிட்ட குழந்தைகளுக்கு எடுத்துக்காட்டு. உசேன் – சுஜா காதலின் எதிர்ப்புகளால் நிகழும் ஒரு சம்பவத்தின் தொடர்ச்சியாக அவனின் கனவில் வரும் ஒரு நிகழ்வை அர்ஷியா மிக அழகாக விவரித்திருக்கிறார். கண்டிப்பாக படிக்கும்போது ஒரு புது உணர்வைத் தரும். அந்தத் ஊருக்கு வெள்ளம் வந்த போதுக் கூட கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஒருவர்  எதையோ நினைத்துக்கொண்டு பீடி பிடித்திக்கொண்டிருக்கும் காட்சியை  “அவருடைய நினைவு இங்கில்லை அநேகமாக ரஷியாவிலோ,சீனாவிலோ இருக்கும்” போன்ற பகடிகளும் எழுத்தாளரிடம் ஆங்காங்கே உண்டு .வைரமணி – தங்கம் தம்பதிகளுக்கு குழந்தை இல்லாததை விவரித்திருக்கும் அர்ஷியா ‘வரப்புத்தாண்டும்’ நிகழ்வையும் விவரித்திருக்கிறார்.

மாதொருபாகனுக்கு முன்னரே இந்தப் பழக்கத்தைப் பற்றி வெளிக்கொண்டு வந்துவிட்டார். சரியான ஆட்களின் கண்களுக்கு படாமல் போனதால் யாரும் இதுகுறித்தும் பேசவில்லை, பேசியிருந்தால் நிறைய புத்தகங்கள் விற்று தீர்ந்திருக்கும் என்பது என் கணிப்பு.

அப்பாஸ்பாய் தோப்பில் கலந்து ஒன்றிணைந்துப் போன அந்த மக்கள் கூட்டம் அங்கு வந்த வெள்ளத்தின் பாதிப்புகளால் கூட சிதையாதக் கூட்டம் அரசாங்கத்தால் கொஞ்சம் கொஞ்சமாக சிதைகிறது. ஆற்றுக்கு இரண்டு பக்கமும் ரோடு எழுப்ப அளவெடுக்க வரும் அதிகாரிகள் தோப்புக்குள் நுழையும்போது ‘என் வீடு போய்டுமா’ என்கிற பரிதவிப்பு அந்த மக்களோடு சேர்த்து நமக்கும் தொற்றிக்கொள்கிறது. ஆதரவற்று நிக்கும் வசந்த மீனாவை தன் மகளாக ஏற்றுக்கொள்ளும் ரோசாப்பூ பாய் என்று மக்களால் அழைக்கப்படும் யூசுப், இறுதிக்கட்டத்தில் மாறுதலாகும் உசேனின் திருமணம் கொஞ்சம் யதார்தத்திற்கு வெளியில் நகர்கிறது. இறுதியில் சிதைவது அப்பாஸ்பாய் தோப்பு மட்டும் இல்லை அங்கு வாழும் மக்களின் வாழ்வியலும் என்பதை அழுக்கு மூட்டை ராமையாவின் மூலம் அழுத்தமாக சொல்கிறார்.

பவா செல்லத்துரை அடிக்கடி சொல்லுவதுபோல் ஒரு நல்ல படைப்பு இன்னொரு நல்ல படைப்பை ஞாபகப்படுத்தும், அதுபோல எனக்கு இதைப் படிக்கும்போது வண்ணநிலவனின் ‘ரெயினீஸ் ஐயர் தெரு’, ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ நாவல்களைப் படித்தபோது ஏற்பட்ட அனுபவங்களை இந்த நாவல் பல இடங்களில் தொட்டுச் செல்கிறது. ஆரம்ப நிலை வாசகர்களும் படிக்கும்படி எளிமையான எழுத்து நடையில் அங்கு வாழும் மக்களின் வாழ்வியலை நம்முள் கடத்துகிறார் எழுத்தாளர் எஸ்.அர்ஷியா.

 

 

 

நூல் : அப்பாஸ்பாய் தோப்பு ( நாவல்)

ஆசிரியர் : எஸ்.அர்ஷியா

பதிப்பகம்: : நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்

விலை: ரூ 185

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button