
நீங்க உங்க வீட்டுல இருந்து உங்க அலுவலகத்துக்கோ, கல்லூரிக்கோ போகும் போது நடக்கும் தொழில் முறைகளை கவனிச்சுருக்கீங்களா?
உங்க வீட்டத் தாண்டி அடுத்த தெருவில் நடக்குற பெட்டிக்கடை வணிகத்தை கவனிச்சுருக்கீங்களா?
அந்த பெட்டிக்கடையைத் தாண்டி உள்ள மளிகைக் கடை வியாபாரம்?
மளிகைக் கடைக்கு அப்புறம் உள்ள கையேந்தி பவன் வணிகம்?
கையேந்திபவனுக்கு அருகில இருக்குற ரெஸ்டாரன்ட்?
இதெல்லாம் நான் கவனிச்சதில்லனு சொன்னீங்கன்னா நாம கொஞ்சம் காலம் கடந்து பின்னாடி போவோம்.
1498, மே மாதம் 17 ஆம் தேதி.
பொழுது விடிஞ்ச போது இந்திய சரித்திரத்தில, அந்த நாள் பிற்காலத்தில ஏற்படுத்த இருக்குற கலாச்சார, அரசியல் மாற்றங்களைப் பத்தி ஒருத்தருக்கும் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல.
ஆமா! அன்னிக்கி தான்..பார்த்தலோமிய டயஸ் காட்டியிருந்த நல்வழியைப் பயன்படுத்திக்கிட்டு, நன்னம்பிக்கை முனையைத் தாண்டி, இந்தியாவோட மேற்குக் கடற்கரையோரமா, கேரளப் பகுதியான கோழிக்கோட்டுக்கு ‘வாஸ்கோடகாமா’ன்ற போர்த்துக்கீசியர் முதன் முதலா வந்த நாள்.
கி.பி 12 ஆம் நூற்றாண்டில இருந்து, 16 ஆம் நூற்றாண்டு வரையான ஐந்நூறு ஆண்டுகள்ல இந்தியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையில இருந்த வர்த்தக உறவுகள் ரொம்ப வலுவானதாய் இருந்துச்சு. குறிப்பாக ஐரோப்பாவில அதிகம் உட்கொள்ளப்படுற அசைவ உணவுகளுக்கு சுவையூட்டுற ஏலம், மிளகு, மிளகாய், இலவங்கம் போன்ற வாசனைப் பொருட்களுக்கு ஐரோப்பிய சந்தைகள்ல மிக அதிகமான தேவை இருந்துச்சு. 15 ஆம் நூற்றாண்டில இந்தியாவுக்கும் மேலை நாடுகளுக்கும் இடைல வணிகம் நடைபெற மூன்று கடல் வழி மார்க்கங்கள் இருந்துச்சு.
1.எகிப்தின் வழியா ஐரோப்பாவை அடையுற மார்க்கம்.
2.ஆக்ஸஸ், காஸ்பியன் மற்றும் கருங்கடல் வழியாக ஐரோப்பாவை அடையுற வடக்கு வழி மார்க்கம்.
3.சிரியாவிலிருந்து மத்திய தரைக்கடல் மூலமா ஐரோப்பாவை அடையுற இடைப்பட்ட மார்க்கம்.
ஆனா, இந்த மூணு வியாபார மார்க்கங்களும் துருக்கிப் பேரரசோட கட்டுப்பாட்டுல இருந்துச்சு. அதனால துருக்கியர்கள் விதிச்ச தீர்வுக்குட்பட்டு தான் எல்லாரும் வணிகம் செய்ய வேண்டியதா இருந்துச்சு. அதுமட்டுமில்லாம, ஐரோப்பிய, துருக்கி அரசுகளுக்கிடையில இருந்த பகைமை உறவும் பெரும் பிரச்சினையா இருந்துச்சு.
இந்த காரணங்களால ஐரோப்பாவுக்கும் இந்தியாவுக்குமிடையில புதிய மற்றும் நேரடிக் கடல்வழி மார்க்கத்தை கண்டு பிடிக்க வேண்டியது ரொம்ப முக்கியத்துவமானதா இருந்துச்சு. இந்த முயற்சியை முதன்முதல்ல தொடங்குனவங்க ஸ்பானியர்களும் போர்த்துக்கீசியர்களும் தான். இதுல, முதல்ல வெற்றி கண்டவங்க போர்த்துக்கீசியர்கள் தான்.
அப்போதைய இளவரசர் ஹென்றி இதுக்கு தேவையான முழு உதவியையும், ஆதரவையும் கொடுத்தாரு. இதைப் பயன்படுத்தி ஆப்பிரிக்கக் கடற்கரைப்பகுதியில காலூன்றி, 1471ல பூமத்திய ரேகையைக் கடந்தாங்க. 27 வருட கடும் முயற்சிக்குப் பின்னாடி 1498ல இந்தியா வந்தடைஞ்சாரு வாஸ்கோடாகாமா.
“இந்தியாவுக்குச் செல்வதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கடல் மார்க்கம், பண்பாட்டு உலகத்தின் மீது ஏற்படுத்திய விளைவுகளைப் போன்று வேறெந்தச் செயலும் இடைக்கால வரலாற்றில் ஏற்படுத்தியிருக்கவில்லை” அப்டின்னு “சர்.டெனிஸன் ராஸ்” என்கிற அறிஞர் குறிப்பிடுறார்.
நாம கொஞ்சம் யோசிப்போம். “27 வருட கடும் முயற்சிக்கு பின்னாடி தான் வாஸ்கோடாகாமா இந்தியாவ வந்தடைஞ்சார்”,இத்தன வருஷங்கள்ல ஏராளமான திட்டங்கள், கணக்கீடுகள், வியூகங்கள், தோல்விகள், இழப்புகள் இதெல்லாம் சந்திச்சு தான் இந்தியாவை அவரால அடைஞ்சுருக்க முடியும்.
வாஸ்கோடாகாமா வந்தப்ப இந்திய வணிகத்துல ஏற்பட்ட மாற்றங்கள விட இப்போ ரெண்டு மடங்கு மாற்றங்கள் இன்றைய இந்திய வணிகத்தில தேவையா இருக்கு. அதே அளவு திட்டங்களும், வியூகங்களும், கணக்கீடுகளும் நமக்கு தொழில் புரிய தேவையா இருக்கு.
உள்நாட்டு வணிகம் மூலமாகத் தான் இந்தியப் பொருளாதாரத்தத் தூக்கி நிறுத்த வேண்டிய நிலையில நாம் நிக்கிறோம்.
நாம எல்லோரும் தொழில்ல இறங்க வேண்டிய காலகட்டம் வந்துருச்சு. ஆமா! தொழில் முறைகளைக் கவனிக்க வேண்டிய காலகட்டமும் வந்துருச்சு. இப்ப முதல் பத்திய திரும்ப வாசிங்க.
தொழில் செய்ய ஆசையும் ஐடியாவும் இருந்தா போதும் முதலீடெல்லாம் அப்புறம் தான். முதல்ல உங்கள சுத்தி என்ன வணிகமெல்லாம் நடக்குதுன்னு கவனிங்க.
“வணிகத்துல மக்கள் தான் முக்கியம்”. உங்களைச் சுத்தி உள்ள மக்கள கவனிங்க, அவங்களுக்கு பொருளோ அல்லது சேவையோ தேவை என்ன இருக்குன்னு பாருங்க. மக்கள்னு வந்துட்டா அதுல தொழில்முனையப் போற நீங்களும் ஒருத்தர் தான். உங்களுடைய தேவையையும் உங்க நிலப்பரப்புல வாழக்கூடிய மக்களுடைய தேவையையும் பூர்த்தி பண்ற ஐடியா தான் நீங்க ஆரம்பிக்க போற தொழில்.
ஐடியா அது எங்க கிடைக்கும்?
எப்படித் தேடுறது?
ஐடியா உங்க கிட்ட தான் இருக்கும். உதாரணமா நீங்க ஒரு பஞ்சர் கடையில வேலை செய்றீங்க உங்களுக்கு சொந்தமா தொழில் பண்ணனும்னு தோணிடுச்சு.
உங்களுக்கு தெரிஞ்சது பஞ்சர் ஒட்டுற தொழில் தான், உடனே பஞ்சர் கடை போடறதுக்கான முயற்சியில இறங்குவீங்க ஆனா கடைக்கு முன்பணம் குடுக்குறதுக்கு உங்க கிட்ட பணம் இருக்காது.
இப்ப என்ன பண்றது எப்படி தொழில் ஆரம்பிக்குறது முதல் அடியே கீழ விழுகுற மாதிரி ஆகிடுச்சேன்னு யோசிப்பிங்க. ஆனா மதுரையில பஞ்சர் விருமாண்டின்னு ஒரு அண்ணன் இருக்காரு அவர் பஞ்சர் தொழில்ல என்ன புதுமையான ஐடியா கொண்டு வந்தாருன்னா, மொபைல் பஞ்சர் சர்வீஸ்ன்னு அவர் பைக்கவே பஞ்சர் கடையா மாத்துனாரு. ஊர் முழுவதும் உங்கள் “வண்டி பஞ்சரானால் அழையுங்கள்” அப்படின்னு ஒரு வாசகத்த 150ரூபா செலவுல பேப்பர்ல பிரின்ட் அவுட் எடுத்து ஒட்டுனாரு.
தொழில் ஆரம்பிச்ச அன்னைக்கே பதினைஞ்சு போன் வந்தது. முதல் நாள் வியாபாரமே 1500 ரூபா. அவருக்கான செலவு வெறும் 250 ரூபா. ஒரு நாள் லாபம் 1250 ரூபா. இன்னைக்கு ஒரு நாளைக்கு 25 பஞ்சர் ஒட்டுறாரு.
ஒரு ஐடியா மாசம் 7000 ரூபாய் சம்பளம் வாங்குனவரை தினமும் ஆயிரக்கணக்குல சம்பாதிக்க வைச்சுடுச்சு. அதே பஞ்சர் ஒட்டுற வேலை தான். ஆனா ஐடியா புதுசு இது தான் இந்த தொழில் முனைவோட வெற்றி.
நீங்க உங்க ஏரியா களநிலவரத்த கவனிங்க, என்ன தொழில் அங்க ஆரம்பிக்கலாம்னு யோசிங்க. நம்ம மார்க்கெட் ரொம்ப பெருசு நீங்க யோசிக்குற ஐடியா புதுசுன்னா முதலீடு ஒரு பெரிய விஷயமா இருக்காது. மக்களுக்கு நிறைய தேவைகள் இருக்கு அதை பூர்த்தி பண்ற தொழில்முனைவோர்கள் ரொம்ப கம்மி.
தொழில் செய்றதால எனக்கு என்ன நன்மைன்னு நீங்க கேட்டிங்கன்னா?
நல்ல முறையில மக்களுக்கு எந்த தீங்கும் விளைவிக்காத அவங்களுக்கு தேவையான பொருளை நீங்க வணிகம் செஞ்சீங்கன்னா உங்க பை நிரம்பும் மக்களோட மனசும் நிரம்பும். இது மட்டுமில்லாம தொழில்ல எப்பயுமே சுதந்திரம் இருக்கும் கூடவே உங்க தன்னம்பிக்கையும், வாழ்க்கையும் மேம்படும்.
ஏன்னா “தொழில்ன்றது ஒரு வாழ்க்கை முறை” வாழ்க்கை முறைங்குற அடிப்படையில உங்க தொழிலை கட்டமைச்சீங்கன்னா உங்க தொழில்ல நீங்க எப்போதும் வெற்றியாளர்கள் தான்.
நாம எப்போதும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதான்னு காத்திருக்கோம். இல்ல ஒரு நல்ல வாய்ப்பு அமையாதான்னு ஏங்குறோம். உண்மை என்னன்னா, அந்த சந்தர்ப்பம், அந்த வாய்ப்பு எப்போதும் நம்ம கூட தான் இருக்கு. கையில இருக்குறத வச்சுக்கிட்டு ஒரு சின்னத் துளி மாற்றத்த கொண்டு வரனும். சுத்தி முத்தி பாருங்க.
உங்க கண்ணுல படுற ஒவ்வொரு முன்னேற்றமும் நடந்தது ஒரு தனி மனுசனால தான். “கொடுத்த வேலையை மட்டும் செஞ்சுட்டு போனா போதும்”ன்னு நினைக்காத தனிமனிசனால தான்.
அந்த ஒரு துளி மாற்றத்தை கொண்டு வர “தொழில் செய்து பழகுங்க”.
அட்டகாசமான கட்டுரை. ரொம்ப எளிமையான வார்த்தைகள் கொண்ட, இயல்பான நடையுள்ள கட்டுரை. பல பக்கங்கள்ல முன்னணி பத்திரிக்கையில வர்றத விட இது நல்லாருக்கு.