
இத்தாலி, இங்கிலாந்து மற்றும் ஃபிரான்ஸால் காலனியாக்கப்பட்ட, ஆப்பிரிக்காவின் கொம்பு தேசமெனவும் கவிஞர்களின் பூமி எனவும் அழைக்கப்படும் சோமாலியா விடுதலை பெற்று ஒரு தேசமாக உருவாகி வந்து கொண்டிருந்த சூழலில், அதன் முதல் ஜனாதிபதி Abdirashid Ali Shermarke 1969ல் கொலை செய்யப்படுகிறார். அதைத் தொடர்ந்து ராணுவம் மூலம் புரட்சி செய்து அதிகாரத்தை கைப்பற்றுகிறார் அப்போதைய தலைமை தளபதியாய் இருந்த மேஜர் ஜெனரல்.சாத் பர்ரே. (Siaad Barre)
இந்த சாத் பர்ரே இனிவரும் கருப்பு சரித்திரத்தின் நீக்க முடியாத தலைவராவார் என யாரும் அந்த நேரத்தில் எதிர்பார்க்கவில்லை.
1969 -70 என்பது கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களின் காலம். க்யூபாவின் பிடலும், சே குவேராவும் ஆப்பிரிக்க நாடுகளில் காலனி ஆதிக்கத்துக்கு எதிராகவும் அரசாட்சிக்கு எதிராகவும் களம் கண்டு கொண்டிருந்த நேரம். சோவியத் ரஷ்யா கம்யூனிஸம் மூலம் உலகெங்கும் தொடர்பை உருவாக்கி உலகத்தின் வல்லாதிக்க சக்தியாக உருவெடுத்துக் கொண்டிருந்த காலம்.
ராணுவ புரட்சியின் மூலம் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த சாத் பர்ரெ, சோமாலியா இனி சோஷியலிச நாடாக மாறும் என அறிவித்தார்.அதனைத் தொடர்ந்து புதிய சோமாலியா பிறந்தது. பல்வேறு இனக்குழுக்களாக பிரிந்திருந்த சோமாலியாவை, இனக்குழு உணர்வை ஒதுக்கி ஒற்றை சோமாலியாவாக மாற்ற பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார் சாத் பர்ரெ.
ராணுவ ஆட்சியில் மாற்றங்கள்:
உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் உள்ளடக்கிய Supreme Revolutionary Council ஒன்றை உருவாக்கினார் சாத் பர்ரே. இவர்கள் நாட்டின் நிர்வாகத்தை நடத்தி வந்தனர். இது நம்மூர் மந்திரி சபை போன்றதொரு நிர்வாக முறை ஆகும். மாவட்ட ஆட்சியாளர்களாகவும், மாநில நிர்வாகிகளாகவும் ராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டார்கள்.
பொருளாதாரத்தை மேம்படுத்தவும், கால் நடை வர்த்தகத்தை பெருக்கவும் பெரும் திட்டங்கள் தீட்டப்பட்டன. ரஷ்ய வல்லுனர்களோடு ஐரோப்பாவில் கல்வி பயின்ற சோமாலியர்கள் பெரும் முனைப்போடு சோமாலியாவை சோஷியலிச நாடாக்கும் கனவை முன்னெடுக்க ஆரம்பித்தார்கள். அதே வேளையில் புதியதாக உருவாகிய ரஷ்ய நெருக்கம் ராணுவ பலத்தை கூட்டியது. இந்தச் சூழலில் அகண்ட சோமாலிய கனவாகிய சோமாலி மக்கள் வாழும் எத்தியோப்பிய நிலப்பகுதியான உலாடன் பகுதி மற்றும் கென்ய நிலப்பகுதியை சோமாலியாவுடன் இணைக்கும் கனவு சாத் பர்ரே ராணுவ ஆட்சியில் மெல்ல மெல்ல வலுப்பெற்றுக் கொண்டிருந்தது.
ஒரு சோமாலிய கவிதை :
“காலம் காலமாக மனிதர்கள் மீது
நான் கருணைகளை பொழிந்த வண்ணம் இருக்கிறேன்.
நான் கருணை பொழிந்து கொண்டே இருக்கிறேன்.
அவர்களுக்கு இன்னும் நிறைவு கொள்ளவில்லையா?
உறங்க அவர்களுக்கு படுக்கை அளித்து
அவர்களை தூங்க அழைத்தேன்.
அவர்களுக்கு இன்னும் நிறைவு கொள்ளவில்லையா?
ஒட்டகத்துப் பாலை நாளொன்றுக்கு
மும்முறை கறந்தேன்.
அவர்களை அருந்த அழைத்தேன்.
அவர்களுக்கு இன்னும் நிறைவு கொள்ளவில்லையா?
கொழுத்த கிடாய் அடித்து உண்ண அழைத்தேன்.
அவர்களுக்கு இன்னும் நிறைவு கொள்ளவில்லையா?
அவர்கள் இலையில் நெய் ஊற்றினேன்.
அவர்களுக்கு இன்னும் நிறைவு கொள்ளவில்லையா?
அழகிய மணப்பெண்னை தந்து மணம் முடிக்க அழைத்தேன்.
அவர்களுக்கு இன்னும் நிறைவு கொள்ளவில்லையா?
மணப்பெண்ணோடு இன்னும்
மத்தையில் சில மாடுகளை தனியே ஒதுக்கிவைத்தேன்
வெகுமதியாக
அவர்களுக்கு அளிக்க.
இன்னும் நிறைவு கொள்ளவில்லையா?
புகழ்ச்சி சொற்கள் ஆயிரம் கூறினேன்.
அவர்களுக்கு இன்னும் நிறைவு கொள்ளவில்லையா?
ஒரு அதிகாலையில் என் குதிரையை தயார் செய்து
என் ஈட்டியால் தசையினோடு நுழைத்து அதன் இருதயத்தை பிளந்தேன்.
அதன் பின் அவர்கள் மன நிறைவு கொண்டனர்.”
சாத் பர்ரெயின் ராணுவ சர்வாதிகார ஆட்சியில் சோமாலிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், சோமாலிய தேசத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லவும் பல புதிய திட்டங்கள் தீட்டப்பட்டன. அதில் முக்கியமான திட்டம் ‘சோமாலி நிலச் சட்டம்’ ஆகும். 1975 -இல் நில நிர்வாகத்தை முறைப்படுத்தவும், நில உரிமையை சட்டபூர்வமாக பதிவு செய்யவும் கொண்டு வரப்பட்டது இச்சட்டம். இதன் மூலம் ‘இது வரை அனுபவித்ததெல்லாம் செல்லாது – நில உரிமையை சட்டபூர்வமாக புதியதாக பதிவு செய்ய வேண்டும்’ என்று பர்ரெ அரசு ஆணையிட்டது. கிட்டதட்ட நம் பண மதிப்பிழப்பு போல.
இந்த சட்டத்தின் மூலம் சோமாலிய நாட்டின் அனைத்து நிலமும் நாட்டின் பொது சொத்தாக்கப்பட்டது.
இதில் தனி நபர் தன் நிலத்தின் உரிமையை நிரூபித்து தன் உரிமையை சட்டபூர்வமாக்கிக் கொள்ளலாம். பரம்பரை பரம்பரையாக எந்த பெரிய ஆதாரமும் இல்லாமலே, வாய்மொழியாகவும் நம்பிக்கையின் அடிப்படையிலும் இயங்கி வந்த மக்கள், இப்படி திடீரென அரசு அறிவித்த நில சட்டத்தால் ஆடிப் போனார்கள்.
இது என் நிலம் என எப்படி நிரூபிப்பது எனத் தெரியாமலும், அப்படி நிரூபிக்க ஆகும் செலவு அதிகமானதாக இருந்ததாலும், மக்களுக்கு இப்படி நிரூபிக்கும் முறை மிகவும் சிக்கலானதாக இருந்தது. மேலும் பல நேரங்களில் மக்கள் தங்கள் நிலத்தின் மீது உரிமை கோரிய பொழுது அரசாங்க அதிகாரத்தில் பங்கு வகித்தவர்களும் அதே நிலத்துக்கு உரிமை கோரினார்கள். அரசின் முறைகளை நன்கு தெரிந்திருந்ததால் , அரசு அதிகார நிர்வாகத்தின் மூலம் இவர்களால் அடுத்தவர்களின் நிலத்தை எளிதாக தங்களுடயதாக ஆக்க முடிந்தது .
இதன் மூலம் மெல்ல மெல்ல பெரும் வளமான நிலங்கள் அனைத்தும் அதுவரை அனுபவத்துக் கொண்டிருந்தவர்களை விட்டு, ராணுவ மற்றும் நிர்வாக அதிகாரிகளிடம் சென்றது. அதிபர் சாத் பர்ரெயின் இனக் குழுவினர் இதனைத் தங்களுக்குச் சாதகமாக்கி நில வளங்களை தங்களுடையதாக்கிக் கொண்டிருந்தனர்.
நிலங்களை கைபற்றிய அரசாங்கம், அந்த நிலங்களை வைத்தே அரசியலும் செய்தது. எவனாவது அரசாங்கத்திற்கு எதிராக பேசினால் போட்டு தள்ளுவது, அரசாங்கத்திற்கு இணக்கமாக சென்றால் நில உரிமையை வழங்குவது என நிலத்தைக் கொண்டே தன் சர்வாதிகார அரசை தற்காத்துக் கொண்டார் அதிபர். தன் நிலத்தை எடுத்து இன்னொருவனுக்கு கொடுத்தால் அதை இழந்த குழு என்ன செய்யும். மெல்ல மெல்ல இனக் குழுக்களிடையே பகை, மூடி வைத்த குக்கர் போல எகிறிக் கொண்டே இருந்தது.
இரு இனக் குழுக்களின் பிரச்சனைகளை அது வரை இருவரும் உட்கார்ந்து பேசி முடித்த நிலை மாறி, அரசு அதிகாரிகளின் கைகளுக்கு சென்றது. வழக்கம் போல் தனக்கு தேவையானவர்கள், மற்றும் அதிகாரிகளின் இனக் குழுக்களுக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கப்பட்டது. அந்த தீர்ப்பு ராணுவ பலத்தால் மக்களின் மேல் திணிக்கப்பட்டது.
நில உரிமை சட்டத்தால் கைமாறிய நிலங்கள், பின்னர் நிலங்களை வைத்து அரசு செய்த அரசியல் அனைத்தும் சோமாலியா என்கிற தேசம் சிதறி போனதற்கும், இயற்கை வறட்சியை எதிர்கொள்ள முடியாமல் பசி பட்டினியால் மக்கள் மாண்டதற்கும் மிக முக்கியக் காரணம் ஆகும்.
சோமாலியாவில் எல்லாமே கவிதைகள் தான். திட்ட, மகிழ, அழ, காதலிக்க…. அதிலும் போத்தேரி என்கிறவன் தன் காதலி ஹோதானு க்கு எழுதிய காதல் கவிதைகள் அவ்வளவு புகழ் பெற்றதாம்.
Bodheri தன் காதலி Hodhanனுக்கு எழுதிய காதல் கவிதை இது.
“இருதயத்தை நிரப்பக் கூடிய அற்புதத்தை கண்களால் கண்டுவிட முடியுமென்றால்…
கண் பார்க்கும் அழகு மட்டுமே மனிதனை திருப்திபடுத்தி விட
முடியுமென்றால்…
ஹோதானின் பேரழகை கண்டவன் நான்.”
-எல்மி போத்தேரி.
ஒவ்வொரு சோமாலியும் தன் இனக் குழுவை தன்னை விட அதிகம் நேசிப்பவனாக இருந்ததால், இந்த நிலச் சட்டம் இனக் குழுவினரிடையே பகையையும், விரோதத்தையும் எந்த காலத்திலும் இல்லாத அளவுக்கு அதிகமாக வளர்ந்துக் கொண்டிருந்தது.
இந்தச் சூழலில் தான் 1977 / 78 ல் சோமாலியா ஒரு மிக முக்கியமான போரை ஆரம்பித்தது.
Ogaden war 1977 / 78 – உகடான் என்பது சோமாலி மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட நிலப்பகுதி. ஆனால், அது சோமாலி நாட்டின் அண்டை நாடான எத்தியோப்பியாவிடம் இருந்தது. Greater Somalia என்பது சோமாலிய தேசியவாத முழக்கங்களில் ஒன்று, அதாவது உகடான் நிலப்பகுதி மற்றும் கென்யாவில் இருக்கும் சிறு நிலப்பகுதிகளை சோமாலியாவுடன் இணைக்கும் கனவு அது.
சோமாலியாவுக்கு மேற்கில் இருக்கும் எத்தியோப்பியாவில் அதுவரை நடந்து கொண்டிருந்த மன்னர் ஆட்சியை கவிழ்த்து ராணுவ புரட்சியால் கம்யூனிஸ்ட் புரட்சி படைகள் அதிகாரத்தை கைப்பற்றிய தருணம் அது. இந்த புதிய கம்யூனிஸ்ட் புரட்சியில் க்யூபாவும், சோவியத் ரஷ்யாவும் பெரும் பங்கு வகித்தன.
எத்தியோப்பிய மன்னருக்கு அமெரிக்கா வழங்கி வந்த உதவி இனி இடது சாரி ராணுவ அரசாங்கத்திற்கு கிடைக்காது என்பதை அறிந்து கொண்டு, தனது நீண்ட நாள் கனவான அகண்ட சோமாலியா கனவை நனவாக்கத் தொடுக்கப்பட்டதே இந்த உகடான் போர். ஆனால் சோமாலியா இந்த போரில் படு தோல்வியை அடைந்தது. இப்போரில் புதிய எத்தியோப்பிய அரசாங்கத்திற்கு ஆதரவாக க்யூபா களமிறங்கி போரிட்டது. சோமாலிய படையினரை அதன் எல்லை பகுதிக்கு துரத்தி விட்டனர் க்யூபா படையினர்.
அதுவரை சோமாலியாவுக்கு ஆதரவாக செயல்பட்ட சோவியத் ரஷ்யா திடீரென அணி மாறி எத்தியோப்பியாவிற்கு துணை நின்றது. க்யூபா சோமாலியாவிற்கு எதிராக தனது படை கொண்டு அவர்களை தோற்கடித்தது, அமெரிக்கா சோமாலியாவுக்கு முழு ராணுவ உதவி வழங்காதது போன்ற காரணங்களால் ‘அகண்ட சோமாலியா’ எனும் கனவு தோற்றது. இந்தப் போருக்கு பின் எத்தியோப்பியாவில் இருந்த இன்னும் பல ஆயிர சோமாலியர்கள் அகதிகளாக சோமாலியாவுக்குள் புகுந்தனர். இது ஏற்கனவே நிலத்தை மையப்படுத்தி நடந்து கொண்டிருக்கும் இனக்குழுப் பகையோடு சேர்த்து இனி வருங்காலத்தில் தீர்க்க முடியாத வன்முறைக் களமாக நாடு மாறப் போகும் சூழலுக்கு வித்திட்டது.
தொடரும்..