சிறுகதைகள்

சுமத்தல்  –  கா.சிவா

சிறுகதைகள் | வாசகசாலை

ரலாற்றுப் பாடத்தை படித்துக்கொண்டிருந்த ஏழாம் வகுப்பு பயிலும்  என் மகள் என்னிடம், ” ஏப்பா, ராணி லட்சுமிபாய் சண்டை போடும்போது ஏன் தோள்ல தன் பையனையும் வச்சுக்கிட்டு இருந்தாங்க?”  எனக் கேட்டாள்.

எனக்கு சட்டென லட்சுமி டீச்சர் நினைவில் தோன்றினார். ஊரிலிருந்து சென்னைக்கு வந்தபோது, பத்தடி உயரத்தில் கட்டப்பட்ட சிவப்பு வண்ண சென்னை குடிநீர் வளாகச் சுற்றுச்சுவரைப் பார்க்கும்படி கட்டப்பட்ட வீட்டுக்குத்தான் வாடகைக்குக் குடிவந்தோம். அங்கிருந்து நடந்துசெல்லும்  தூரத்தில், அயனாவரம் சயானி திரையரங்கத்துக்கு எதிரில் இருந்த  தங்கய்யா நாயுடு உயர்நிலைப் பள்ளியில், ஏழாவதிலிருந்து பத்தாவது வரை படித்தேன்.

இந்தத் தனியார் பள்ளியின் உயரமான வாயிற்கதவை திறந்து உள்ளே செல்லும்போது, வலப்பக்கமாக தாளாளரின் தளம் போட்ட வீடும், இடப்பக்கமாக நீளவாக்கில், ஒடு வேய்ந்த பள்ளிக் கட்டடமும்  இருக்கும். இங்கு ஆறாவதிலிருந்து எட்டாவது வரைக்குமான வகுப்புகள் நடக்கும் . நடுவே மணல் பரப்பப்பட்ட மைதானம். அதில் ஒரு வேம்பும், இரண்டு கல்யாண முருங்கைகளும் பரந்து நிழல் பரப்பி நின்றன. அதற்குப் பின்னே கட்டப்பட்டிருந்த தளம் போட்ட கட்டடத்தில், ஒன்பதாவது மற்றும்  பத்தாம் வகுப்புக்கான அறைகள் இருந்தன.

ஊரிலிருந்து புதிதாக சென்னைக்கு வந்திருந்தாலும், பழகத் தோன்றிய மூன்று நண்பர்களுடன் மட்டும் பேசி சிரித்துத் திரிவேன். தாளாளர் இல்லத்திலிருந்து சாலைக்குச் செல்ல முன்பக்கம் தனி வழி இருந்தது. அந்த வீட்டின்  பின்வாசல் வழியாக வாரம் ஒருமுறை மட்டும் பெரிய முன்நெற்றியுடன்  பாதி நரைத்த தலையுடன் உயரமான கடுத்து கறுத்த முகம்கொண்ட தாளாளர், பள்ளிக்குள் வந்து தலைமையாசிரின் அறைக்குள் சென்று, ஒரு மணி நேரத்துக்குப் பின் திரும்பி இல்லத்துக்குள்  செல்வார். அவர் வெளியே வரும் பொழுதுகளில் பிள்ளைகள் யாரும் குறுக்கே செல்வதில்லை. எப்படி அந்த வழக்கம் உண்டானதென்பது தெரியாது. ஆயினும் யாரும் அதை மீறவில்லை.

இரண்டு மாதங்களுக்குப் பின் இடைவேளை நேரத்தில், தாளாளரின் இல்லத்திலிருந்து முப்பது வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் பள்ளிக்குள் வந்தார். நெற்றியில் புரளும் முடியுடனும், பெரிய விழிகளுடனும்  இருந்தார். அந்த வீட்டிலிருந்து வந்ததால் மாணவர்களெல்லாம் சற்று ஒதுங்கி ஒடுங்கினார்கள். எனக்கு அவரைப் பார்த்தவுடன் எங்கள் ஊர் சரளாக்கா ஞாபகம் வந்தது. எனவே,  என்னை அவர் பார்த்தபோது சட்டென தோன்றியதால் புன்னகைத்தேன். அவர் ஒருகணம் குழம்பி மறுபடி என்னைப் பார்த்துவிட்டு எவ்வுணர்ச்சியையும் காட்டாமல் ஒன்பதாம் வகுப்புகள் பக்கம் சென்றார். என் நண்பர்கள்தான் இரண்டு நாட்களுக்குப் பிறகு சொன்னார்கள், அவர் தாளாளரின் மருமகள் லட்சுமி டீச்சர் என்றும், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கு வரலாற்றுப் பாடம் எடுக்கும் ஆசிரியை என்றும்.

சிறிய வகுப்புகளுக்கு கால் மணி நேரம் முன்னதாகவே மதிய இடைவேளை விட்டுவிடுவார்கள். நானும் என் நண்பர்களும் வேப்ப மரத்தடியில் அமர்ந்து,  கொண்டுவந்திருந்த தயிர், புளி, தேங்காய்ச் சோறுகளை ஊறுகாய்,  துவயல் , வடாம் இவற்றோடு கலந்து திண்போம். என் பேச்சும் சிரிப்பும் பல காத தூரம் கேட்கும். கிராமத்திலிருந்து புதிதாக வந்திருந்ததால்,  நகரத்தின் நாசூக்கை  நண்பர்கள் கூறிக்கொண்டேயிருந்தாலும் கற்றுக்கொள்ளாமல் இருந்தேன். மேல் வகுப்புகளுக்கு இடைவேளை விட்டவுடன் லட்சுமி டீச்சர் எங்களை கடந்ததுதான் தன் வீட்டுக்குச் செல்வார். என் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தவரிடம், எப்போதும் போலவே சிரித்துவைத்தேன். அவரும் எவ்வுணர்ச்சியும் காட்டாது திரும்பிச் சென்றார்.

சில மாதங்களுக்குப் பிறகு நண்பர்கள் மூலம், ஒன்பது பத்தாம் வகுப்புகளில் அவருக்கு, `ஜான்சி ராணி’ என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது எனத்  தெரியவந்தது. எப்பவுமே இறுக்கமான முகத்துடன் இருப்பதால் இப்பெயரை இட்டிருப்பார்கள் என எண்ணிக்கொண்டேன். ஒருமுறை, “என்னடா, ரஜினி ஒரு சண்டகூடப் போடல. படம் நல்லாவே இல்லடா” என சயானியில் ஸ்ரீ ராகவேந்திரா படம் பார்த்துவிட்டு வந்து  எப்போதும்போல சத்தமாகக் கூறிக்கொண்டிருந்ததை கேட்டபடியே கடந்தவர், லேசாக புன்னகைத்ததாகத் தோன்றியது.

இரண்டாண்டுகளுக்குப் பிறகு, ஒன்பதாம் வகுப்புக்குச் சென்றபோதுதான் லட்சுமி டீச்சர் முதல்முதலாக நான் இருந்த வகுப்புக்கு பாடமெடுக்க வந்தார். முதலில் அறிமுகப் படலம். ஒவ்வொருவராக பெயர்களைச்  சொன்ன பிறகு, கடைசி இருக்கையில் இருந்த எங்களை நோக்கினார். எனது இடப்பக்கம் ராஜசேகரும், வலப்பக்கம் தாஜுதீனும் இருக்க, நடுவே நான் இருந்தேன். மூவரும் பெயரைக் கூறியதும் “இதேமாதிரி நாடு முழுக்க ஒண்ணா இருந்தா எந்தப் பிரச்னையும் வராது” எனக் கூறியபோது, மற்றவர்களிடம் காட்டாத  சிநேகபாவம் லேசாகத்  தெரிந்தது.

வரலாற்றுப் பாடம்தான் என்பதால், எந்த உணர்ச்சியும் காட்டாது சில வாக்கியங்களை வாசித்து, வருடங்களைக் கூறியபின்,  வினாக்களுக்கான விடைகளை குறித்துக்கொள்ளச் சொல்லியதோடு வகுப்பை முடித்தார். இத்தனை வகுப்புகளில் பார்த்த ஆசிரியைகளுக்கும் இவருக்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் தெரியவில்லை. நான் சராசரியாகப் படிப்பவன் என்பதால், நன்றாக நடத்தினாலும் மோசமாக நடத்தினாலும் எனக்கு கவலையில்லை. அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்கும் மதிப்பெண்ணே எடுக்க முடியாதவர்களுக்கும்தான் அந்தக் கவலை.

ஒரு மாதத்துக்குப் பிறகு அடர் சிவப்பு நிற புடவையணிந்து வந்திருந்தார். இடைவேளைக்குப் பிறகான மூன்றாவது பீரியட். கொண்டுவந்திருத்த புத்தகத்தை டேபிள் மேல் வைத்தவர், கடைசி இரண்டு இருக்கைகளில் இருந்தவர்களை முன்னே வரச் சொன்னார். அவரின் இருக்கைக்கும் மாணவர்களின் இருக்கைக்கும் இடையிலிருந்த தரையில் அமரச் சொன்னார். எதுவும் சொல்லாமல் அமர்ந்தோம்.

“இன்றைக்கு ஜான்சி ராணி லட்சுமிபாய் பற்றிய பாடம் எடுக்கப்போறேன். பேசாம அமைதியா இருக்கணும்” என்றபடி ஆரம்பித்தார். அப்போதுதான் கவனித்தேன் அவர் முகம் இறுக்கமின்றி நெகிழ்வுடன் மிக அழகாகத் தோன்றியது.

லட்சுமிபாயின் தாய் தந்தையைப் பற்றி கூறிவிட்டு, அவரின் பிறப்பையும் அவரின் பெயர் மணிகர்ணிகா என்பதையும் நிதானமாகக் கூறிவந்தார். 1842-ல் ஜான்சியின் மன்னர் கங்காதர ராவுக்கு மணமுடித்து பெயரை லட்சுமிபாய் என மாற்றியதையும் கூறியபோது, உணர்ச்சிவசப்பட்டவராக மாறினார். பையன் பிறந்து அவனுக்கு தாமோதர ராவ் எனப் பெயரிட்டதையும், நான்கு மாதத்தில் அவன் இறந்ததையும் விவரித்தபோது, அவரின் விழிகள் கலங்கியிருந்தன. வகுப்பில் இருப்பவர் போலவேயில்லை. ஜான்சியின் அரண்மனையில் நடப்பதை நேரில் பார்த்துக் கூறுவதுபோலத் தோன்றினார். வேறொரு பிள்ளையைத் தத்தெடுத்து அதே பெயரையிட்டதையும், மன்னர் அடுத்த ஆண்டே மறைந்ததையும் கூறியபோது, விழிகளிலிருந்து நீர் வடிந்தது.

முதல்முறையாக நாங்களெல்லாம் வரலாற்று வகுப்பை எந்தப் பக்கமும் திரும்பாமல், எதுவும் பேசாமல் ஆசிரியையின் முகத்தையே நோக்கி கவனித்தோம்.

டல்ஹௌசிப் பிரபுவின் வாரிசு இழப்புக் கொள்கையைக் கூறி, அதன் வஞ்சக நோக்கத்தை விளக்கியபோது, அவரின் முகத்தில் வெறுப்பு படர்ந்தது. மன்னருக்கு சட்டபடியான வாரிசு இல்லாததால் அறுபதாயிரம் ரூபாய் ஓய்வூதியமாகப் பெற்றுக்கொண்டு அரண்மனையைவிட்டு வெளியேறுமாறு ஆங்கிலேய அரசு சொன்னதை சொல்லியபோது, கண்கள் சிவந்திருந்தன. ராணி லட்சுமிபாய் மீது ஆங்கிலேயர்கள் சிலரைக் கொன்றதாகப் பழி சுமத்தி, அவரின் நாட்டைக் கைப்பற்ற படை கொண்டுவந்ததையும், அவர்களிடமிருந்து தன் மகனுடன் குதிரையிலேறி மதிலைத் தாண்டித் தப்பித்ததையும் கண்கள் விரிய பித்தெழுந்தவர்போல் விவரித்தார்.

அண்டை நாட்டைச் சேர்ந்த தாந்தியா தோபேயின் உதவியுடன் ஆங்கிலேயப் படைகளிடம் தீரத்துடன் போரிட்டதைக் கண்களில் தீப்பொறி பறக்க இவரே போர் களத்தில் நின்று போரிடுவதைப் போன்ற உணர்ச்சியுடன் கைகளை நீட்டி, குதிரையை ஒரு கையால் ஓட்டிக்கொண்டு மறு கையால் வாள் வீசி ஆங்கிலேயர்கள் தலையை வெட்டிவீழ்த்தி, குருதி கொப்பளிக்க வைத்ததை விவரித்தபோது, எங்கள் மேலெல்லாம் சில துளிகள் தெறித்தது.

அந்த  ஆவேசத்துடனேயே ராணி லட்சுமிபாய்  வீழ்ந்ததை எந்த உணர்ச்சியுமின்றி கூறி, வீரமரணமடைந்தார் என்று செல்லிவிட்டு அமர்ந்தார். கேட்டுக்கொண்டிருந்த அனைவரும் கண்ணீர் வழிய   தன்னிலையழிய அமர்ந்திருந்தோம். அவர் கண்களில் கலக்கமோ கண்ணீரோ இல்லை. இறுக்கமான மிடுக்கே திகழ்ந்தது. இவர் இந்தப் பாடம் நடத்துவதைக் கண்ட  ஆசிரியைகள் அறிவுறுத்தியதால் பக்கத்து வகுப்பறை மாணவர்களும் அமைதியாகவே இருந்ததால், வெளியே நின்றிருந்த வேப்ப மரத்தில் விளையாடிய அணிலின் கீச்சொலி கேட்குமளவுக்கு வகுப்பறை நிசப்தமாக இருந்தது.

தனது இருக்கையில் அமர்ந்திருந்தவர் மீண்டு, கைக்குட்டையால் முகத்தில் துளிர்த்திருந்த வியர்வையை துடைத்தபடி என்னைப் பார்த்தார். டேபிளில் இருந்த மூங்கில் குச்சியை எடுத்துவந்து, என் தலையில் சத்தம் வருமாறு தட்டினார். அப்போதுதான் நான் செய்துகொண்டிருந்தது என்ன என்பது எனக்குப் புரிந்தது. சாதாரணமாகவே நான் நகம் கடிக்கும் பழக்கம் கொண்டவன். இப்போது கதையின் சுவாரசியத்தில் கை விரல்களில் இருந்த நகங்களெல்லாம் தீர்ந்த நிலையில், கால் விரல் நகத்தைக் கடித்துக்கொண்டிருந்தேன். வீட்டில் சில நேரம் இதற்காகத் திட்டு வாங்கியிருந்தாலும், பள்ளியில் கால் நகத்தை கடித்ததில்லை. தரையில் அமர்ந்ததால், எளிதாகக் கால் விரல் வாய்க்கு எட்டியுள்ளது. எல்லோரும் என்னையே ஆச்சர்யமாகவும், என்ன நடந்ததென்று புரியாமலும் நோக்கினார்கள். லட்சுமி டீச்சர், “என்னோடு வா” என்று கூறியபடி ஆசிரியர்களின் ஓய்வறைக்குச் சென்றார்.

எல்லா ஆசிரியைகளும் வகுப்புகளில் இருந்ததால், அந்த அறையில் இருந்த ஏழு மர நாற்காலிகளும் காலியாக இருந்தன. முதலிலிருந்த நாற்காலியில் அமர்ந்த டீச்சர், ” எத்தனை வருசமா இந்தப் பழக்கம்?” என்றார்.

” சின்ன வயசிலேர்ந்து” என்றேன், தலைகுனிந்து உடலை ஒடுக்கியவாறு. 

“எங்கெங்கேயோ நடக்கிற. எதையெதையாவது மிதிப்பியே. இப்படி வாயில வச்சா, ரோட்ல இருந்ததெல்லாம் வாயில போயிடாதா?” 

“ஆமா டீச்சர். என்னயே அறியாமத்தான்…” என்றேன்.

” இன்னொரு தடவ நகங்கடிக்கிற பார்த்தால் கிரவுண்ட்ல முட்டிபோட வச்சிடுவேன்… பாத்துக்க” என்று கூறி, செல்லுமாறு கையசைத்தார். அதன்பிறகு நான் கடித்ததில்லை கால் நகத்தை.

எந்த டீச்சருமே மாணவனை எல்லோரும் பார்க்கவே கண்டிப்பார்கள். இவர் அப்படிச் செய்யவில்லை. அன்று இரண்டு விசயங்கள் எனக்குப் புரிந்தன. ஒன்று,  அவர் ஜான்சி ராணி என அழைக்கப்படுவதற்கான காரணம். மற்றொன்று, என் மீது லேசான கரிசனத்தோடு இருக்கிறார் என்பது. ஆனால், எப்போதும் விறைப்பாகவும், மாணவர்கள் ஆசிரியைகள் எவரிடமும் சிரித்து பேசாத இறுக்கத்துடனுமே இருந்தார். அழவோ, சிரிக்கவோ தெரியாதவர் போன்றே காணப்பட்டார்.

மாணவர்களிடம் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த அரசு கொண்டுவந்த   `சஞ்சயிகா சேமிப்பு திட்டம்’ எங்கள் பள்ளியிலும் இருந்தது. இத்திட்டத்தில் சேரும் மாணவர்கள் தினம் கையில் கிடைக்கும் பணமோ, காசோ அதற்கென நியமிக்கப்பட்ட ஆசிரியையிடம் கொடுக்க வேண்டும். அந்த ஆசிரியை தபால் நிலையத்தில் வாரம் ஒருமுறை செலுத்திவிடுவார். ஆண்டின் முடிவில் மொத்தமாக கையில் கொடுப்பார்கள். இதில் அதிகம் சேமிப்பவருக்கு சான்றிதழும் பதக்கமும் உண்டு. இதற்கான ஆசிரியையாக லட்சுமி டீச்சரே இருந்தார். ஆண்டின் கடைசி வாரத்தில் என்னிடம், “ஒரு இருபது ரூபாய் போட்டால், பி செக்சன் சுனிலைவிட மேலே வந்துவிடுவாய். உனக்குதான் மெடல் ” என்றார். நானே மெடலை வாங்கினேன்.

விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டபோது நான், ” சாக் ரேசில் ” கலந்துகொண்டேன். இறுதிச் சுற்றில் எல்லைக் கோட்டை தொடுவதற்கு முன் கீழே சாய்ந்து விழுந்துவிட்டேன். உருண்டு எல்லைக் கோட்டைத் தொட்டேன். என் அருகில் குதித்து வந்த சுந்தர், என்னைப் போலவே விழுந்து நான் தொடுவதற்குள் கையால் கோட்டைத் தொட்டுவிட்டான். கண்காணிப்பாளராக இருந்த லட்சுமி டீச்சர்தான்  கையால் தொட்டது பிழையெனக் கூறி நான் வென்றதாக அறிவித்தார்.

எனக்கு ஏற்கனவே லட்சுமி டீச்சரை பிடித்திருந்தாலும் இந்தச் சம்பவங்களால் அவர் மீது மிகவும் மதிப்பு கூடியது. அப்போது, ஆண்டுத் தேர்வுக்குப் படிப்பதற்காகப் பள்ளிக்குப் பத்து நாட்கள் விடுமுறை  விடப்பட்டது. அந்த விடுமுறை நாட்களில் எனக்குப் பிறந்தநாள் வந்தது. இந்தப் பிறந்தநாளுக்கு லட்சுமி டீச்சரிடம் வாழ்த்துப் பெறவேண்டுமென்ற ஆவல் தோன்றியது. அம்மாவிடம் கூறியபோது, அதற்கென்ன சென்று வா எனக் கூறி, “அவங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?” என்று கேட்டார். கேள்வியைக் கேட்டு திகைத்தேன். அம்மாக்களுக்கெல்லாம் எப்பவும் பிள்ளைகள் நினைப்புதான்.

“இன்னும் இல்லம்மா” என்று கூறியபடி கிளம்பினேன்.

பக்கத்தில் சோமசுந்தரம் தெருவிலிருந்த நண்பன் ராஜசேகரை அழைத்தபோது, சற்று தயங்கினாலும் ஒத்துக்கொண்டு உடன் வந்தான். அம்மா எடுத்துக்கொடுத்த, எனக்குப் பிடித்த நீலவண்ண புதுச் சட்டையின் காலரில் மஞ்சள் தடவி  அணிந்துகொண்டேன். வெங்கடேஷ்வராவில் மைசூர் பாகு, லட்டு, ஜாங்கிரி எல்லாம் கலந்த மாதிரி அரை கிலோ இனிப்பு வாங்கிக்கொண்டு ராஜசேகரோடு பள்ளியை அடைந்தேன்.

பள்ளியின் உயரக் கதவு உள்புறம் தாளிடப்பட்டிருந்தது. நான் திகைத்தபோது, ராஜசேகர்தான் வீட்டுக்கான தனி வாசல் வழியாகச் செல்லலாம் என சந்துக்குள் அழைத்துச் சென்றான். சந்தில் நுழையும்போது, டீச்சரின் கணவர் வந்தார். இவரை ஒன்றிரண்டு முறை டீச்சரோடு மார்க்கெட்டில் பார்த்திருக்கிறேன். மாநிறத் தோற்றத்தில்,  டீச்சருக்கு பொறுத்தமானவராகவே தெரிந்தார். ராஜசேகர் அவருக்கு வணக்கம் வைத்தான். நானும் வணங்கினேன்.

அவர் கேட்க தொடங்கும் கணத்தில், “சார், இவனுக்குப் பொறந்த நாள். அதான் டீச்சருக்கு ஸ்வீட் கொடுத்திட்டு போகலாம்னு வந்தோம்”  என்றான்.

“வாழ்த்துகள்பா… சரி போய் டீச்சரப் பாருங்க. நான் கடைக்குப் போயிட்டு வர்றேன்” என்றபடி சென்றார்.

நாங்கள் படிகளில் ஒரு பக்கம் ரோஜா செடியும், மறு பக்கம் செம்பருத்தி செடிகளும் வைக்கப்பட்டிருந்த தொட்டிகளை இடித்துவிடாமல் இரண்டு படிகளில் ஏறி, வாசலை அடைந்தோம். தாமரையில் அமர்ந்திருக்கும் மகாலட்சுமி செதுக்கப்பட்டிருந்த கதவு பளபளப்பாக இருந்தது.  நான் அழைப்பு மணியை அழுத்தியபோது, ராஜசேகர் மலர்ந்திருந்த ரோஜாவிடம் மனதைக் கொடுத்திருந்தான்.

மணிச் சத்தம் கேட்டவுடனேயே கதவு திறந்தது. பழைய புடவை கட்டியிருந்த டீச்சர் என்னைப் பார்த்தவுடன் திகைத்து, சட்டென கன்னத்தில் வழிந்துகொண்டிருந்த  கண்ணீரைத்  துடைத்துவிட்டு, வரவழைத்த புன்னகையுடன் வாங்க என்றார். செயற்கையானதென்றாலும் புன்னகை அவர் முகத்தை மிக அழகாக்கியது. தானும் புன்னகைத்துவிட்டு, திரும்பி ராஜசேகரின் கையைத் தொட்டேன். அவன் திரும்பி டீச்சரை பார்த்து வணக்கம் சொன்னான். அதன்பிறகுதான் நானும்,  “வணக்கம் டீச்சர் ” என்றேன்.

இருவரும் உள்ளே சென்றோம். நான் ஒருமுறை வேகமாக சுற்றிலும் பார்த்தேன். இளம்பச்சை நிறத்தில் வண்ணமடிக்கப்பட்ட சுவர் தூய்மையாக இருந்தது. சுவரின் நடுவில் பொன்னிற சட்டகத்தினுள் ஆலிலை மேல் படுத்திருந்த கருநீலக் கண்ணன் தன் கால் விரலை வாயில் வைத்து சுவைத்துக் கொண்டிருந்தான்.

” வாங்க.. என்ன லீவு நாள்லயும் டீச்சர்கிட்ட சந்தேகம் கேக்க வந்தீங்களா?” என்றார்.

“பாடத்திலேயெல்லாம் எங்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்ல டீச்சர். படிக்கிறவனுக்கில்ல அது வரும். இவனுக்கு இன்னிக்கி  பொறந்தநாளு. டீச்சர்கிட்ட ஆசிர்வாதம் வாங்கணும்னு சொன்னான். அதான் கூட்டிக்கிட்டு வந்தேன்” என்று ராஜசேகர் கூறினான்.

“ஆமா டீச்சர்” என்றபடி இனிப்பை அவரிடம் நீட்டினேன்.

” ரொம்ப சந்தோசம்.  பிறந்தநாள் வாழ்த்துகள்பா, இன்னும் பல்லாண்டு நல்லா வாழணும்” என்றபடி ஒரு லட்டு மட்டும் எடுத்துக்கொண்டு இனிப்பை திருப்பியளித்தார்.

“எல்லாம் உங்களுக்காகத்தான். வச்சுக்குங்க டீச்சர்” என்று கூறினேன்.

” இதுவே போதும்.  நீங்க சாப்பிடுங்க ” என அவர் கூறியபின், அதை வாங்கிக்கொண்டு, ” போயிட்டு வர்றோம் டீச்சர்” என்று வெளியே வந்தோம்.

” ஒழுங்காப் படிங்க. எக்ஸாம் நல்லா எழுதுங்க. ஆல் தி பெஸ்ட் ” என்று கூறினார். 

நாங்கள் நன்றி கூறியபடி வெளியேறினோம். வெளியே வந்தவுடன் பெரும்பாரம் ஏற்றியதுபோல மனம் சோர்ந்தது. தைரியமான உறுதியான பெண் என்று நினைத்திருத்தவர், கண்ணீர் வழிய நின்றதைப் பார்த்தவுடன் மனதில் உறுதியாக எழும்பியிருந்த ஒன்று சரிந்து விழுந்தது.  தூசியாகி மனதெங்கும் வெண்படலமெனப் பரவி, வேறெதையும் யோசிக்கவிடாமல் திகைக்கவைத்தது.

சோர்வாக நடந்துவருவதைப் பார்த்த ராஜசேகர்,  ” என்னாச்சுடா?” என்று கேட்டதற்கு, ” என்னவோ டயர்டா இருக்குடா. சரி, நீ வீட்டுக்குப் போ.  நான் போயிக்கிறேன்” என்று அவனுக்கு இரண்டு இனிப்பைக் கொடுத்துவிட்டு வீட்டுக்குச் சென்றேன். அவனிடம் அதைக் கூற வேண்டாமென எதுவோ தடுத்தது.

தேர்வுகள் முடிந்து பத்தாம் வகுப்புக்குச் சென்றபிறகும், நான் இதுபற்றி எவரிடமும் கூறவில்லை. டீச்சரும் எப்போதும் போலவே மிடுக்கும் இறுக்கமுமாக வலம்வந்தார். என்னைப் பார்க்கும்போது மட்டும் காற்றில் அசையும்  தீபம் போல ஒரு கணம் பார்வை சற்று மாறிவிட்டு, இயல்புக்குத் திரும்பும். அப்படியே பத்தாம் வகுப்புத் தேர்வுகளும் முடிந்தன.

விடுமுறைக்கு  ஊருக்குப் போயிருந்ததால் தேர்வு முடிவுகள் வெளியாகி ஒரு வாரத்துக்குப் பின் மதிப்பெண் சான்றிதழ் வாங்குவதற்காகப் பள்ளிக்குச் சென்றேன். அன்று தலைமையாசிரியர் வராததால், லட்சுமி டீச்சர்தான் இருந்தார். என் சான்றிதழை எனக்கு வழங்கி வாழ்த்து சொல்லிவிட்டு, “ஜான்சி ராணியவிட நீதான்டா பெரிய வீரன். ஒரு விஷயத்தை தெரிஞ்சுக்கிட்டு யாருக்கிட்டேயும் சொல்லாம ஒரு வருசமா மனசுலேயே வச்சிக்கிட்டு இருக்கியே இதுதான் வீரம். இது எவ்ளோ கஷ்டம்னு எனக்குத் தெரியும். ரொம்ப நன்றிடா. எல்லோரும் என்னய பாக்கிற பார்வ மாறிடுமோன்னு நெனச்சேன். அது மாறல” என்றார் அதே கம்பீரத்தோடு.

” நீங்க மட்டும் ஏன் டீச்சர் மத்தவங்க மாதிரி உணர்ச்சிகள காட்டாம இருக்கீங்க?” – இதுதான் அவரைப் பார்க்கும் கடைசி நாள் என்பதால், மனதில் தோன்றிய சிறு தைரியத்தில் கேட்டுவிட்டேன்.

என் கேள்வியை எதிர்பாராததால், சற்று திகைத்தது அவர் விழிகளில் தெரிந்தது. சில வினாடிகள் யோசித்துவிட்டு…

” என்னய அம்மாதான் தனியா வளத்தாங்க. அவங்கதான் உணர்ச்சிய வெளிய காட்னா மத்தவங்க அத தனக்கு சாதகமா பயன்படுத்திக்குவாங்கன்னு சொல்லிச் சொல்லி வளத்தாங்க. என்னோட பேருதான ஜான்சி ராணிக்கும்.” என்றபடி நிமிர்ந்து, என் முகத்தை தீர்க்கமாகப் பார்த்து கூறினார். அவர் உண்மையைக் கூறவில்லை என்று எனக்குத் தோன்றியது. என்னிடம் சொல்ல முடியாததாகவும் இருக்கக்கூடும் என்ற எண்ணமும் தோன்றியது.

நான் நன்றி சொல்லி வணங்கியபோது, மேலெழுந்த கையை பின்னுக்கிழுத்தபடி, ” மேல படிச்சு முன்னுக்கு வா ” எனக் கூறினார். நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தேன். ஆனால், பிறகு இதைப் பற்றிய நினைவு வரும்போதெல்லாம் தோன்றியது, ” பிறரிடம் சொல்லாத எதற்கும் ஆறுதலும் அனுசரணையும்கூட கிடைக்காது டீச்சர்”  எனச் சொல்லிவிட்டு வந்திருக்கலாம் என. அடுத்த மாதமே வில்லிவாக்கத்துக்கு வீடு மாறியதால் அவரை அதற்குப் பின் சந்திக்கவேயில்லை.

“அப்பாஆஆ… நான் ஒரு கேள்வி கேட்டேன். தெரியாதுன்னா  தெரியாதுன்னு சொல்ல வேண்டியதுதானே… ஏன் இப்படி யோசிச்சிட்டு இருக்கீங்க?” என்று என் மகள் உழுப்பினாள்.

நினைவிலிருந்து மீண்டு, “ஜான்சி ராணி பிள்ளையோட உரிமைக்காகத்தானே போராடுனாங்க. அதான் பிள்ளைய கூடவே வச்சிருந்தாங்க. பல பேரு புள்ளைய உடம்புல சுமந்துகிட்டுப் போராடுறாங்க. சில பேரு மனசுல சுமந்துகிட்டுப் போராடுறாங்க ” என்று கூறியதைக் கேட்டு புரிந்தும் புரியாமல் தலையாட்டினாள் என் மகள்.

 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button