சிறுகதைகள்

சூசனின் பிரதி

ரமேஷ் கண்ணன்

ரேயின் முதல் தொடுகை சூசனின் மிருதுவான உள்ள கையில் மின்சாரத்தைப் போலத் தான் பாய்ந்தது. பின்பு தினந்தோறும் அவர்கள் சந்தித்துக் கொண்டனர்.சொல்லப்போனால் சந்தித்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதில் இருவரும் முனைப்புடன் இருந்தனர்.

ரேயின் காரியதரிசி ஒரு குறிப்புச்சீட்டை அவனிடம் தந்துவிட்டுச் சென்றாள்.பெரும்பாலும் அதிவிசேஷமான குறிப்புகளை மட்டுமே அவள் கொடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டதால் ரே அதனை சற்று கவனமாக படித்தான்.

சூசனுக்கான அஞ்சலி குறிப்புகள் தயாராகி விட்டதாகவும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிற்கான நேரம் பிற்பகல் 4.30 மணி என்பதையும் நினைவுபடுத்தியிருந்தாள்.இன்னும் ஒரு மணி நேரம் உள்ளது.அவனுக்கு சூசன் தன்னோடு இல்லையென்பதை முழுமையானபடிக்கு உணரமுடியாத அவகாசமின்றி தவித்தபடி இருக்கையில் இதுவொரு தவிர்க்க முடியாத வழமையானதொரு நடைமுறை.

ஓர் துர்மரணத்தில் சில விளக்கங்களை நாம் ஊடகங்களோடு உரையாட வேண்டியுள்ளது.உண்மையில் இப்படியான ஏற்பாட்டை சூசனின் பெற்றோர் தான் ஏற்பாடு செய்திருந்தனர்.ரேயின் மீதான நம்பிக்கையை சிதைக்கும் ஊடகங்களின் கதையாடல்கள் சூசனின் இழப்பைக் காட்டிலும் அவர்களுக்கு மனதை வலிக்கச் செய்தது.

ரேயும் ஜுனியர் ரேயும் இதன் தாக்கத்தால் எவ்வளவு பாதிக்கப்படுவர் என்பதை அவர்கள் முற்றாய் உணர்ந்திருந்தனர்.சூசனின் தாயார் ரேவுக்கு இந்த ஏற்பாடு குறித்து கூறிய போது அவன் அதை தவிர்க்க விரும்பினான்.அதற்கு அவன் ஜுனியர் ரேவை நான் அப்படியாக நிறுத்தி வைக்க விரும்பவில்லை என்பதை காரணமாகச் சொன்னான்.இருப்பினும் சூசனின் பெற்றோர் தன்மீதாகக் கொண்டிருக்கும் அபிமானம் ஆறுதல் அளிப்பதாக இருந்தது.பின்பு அவன் அதற்கான தேதியையும் நேரத்தையும் இறுதி செய்து காரியதரிசி மூலம் ஏற்பாடு செய்தான்.ரேயின் ஒரே வேண்டுகோள் அவ்வமயம் சூசனின் பெற்றோர் உடனிருப்பது அவனுக்கொரு ஒருவிதமான அனுசரணையாகக் கூடுமெனக் கேட்டு வைத்தான்.

நேற்றிரவு அவர்கள் பண்ணை வீட்டுக்கு வந்திருந்தனர்.ஜுனியர் ரேவும் அவர்களோடு நன்கு ஒட்டிக்கொள்வான்.அவன் தன்னுடைய தாத்தாவிற்கு இரவு முழுக்க கதை சொன்னதாகவும் அவன் வரைந்த ஓவியங்கள் குறித்தும் சூசனின் தந்தை பெருமிதத்துடன் கூறினார்.

அறிக்கையை ரே வாசிக்கத் துவங்கினான்.கண்களில் கண்ணீர் ததும்பி நின்றது.சூசனைப் பற்றிய அறிமுகமும் அவளின் நுண்ணுர்வையும் கலாரசனையும் குறித்தும் உவகையளிக்கும் வரிகளை எழுதியிருந்தான்.அவள் ஒருபோதும் கவலையளிக்கும் முகத்தோடு இருந்ததேயில்லை.அவளுக்கு நாட்குறிப்பு எழுதும் பழக்கமும் இல்லை.தன்னால் அவளின் முடிவை ஒரு துளி கூட உணரமுடியாததில் மிகப்பெரும் பிழை செய்தவன் என்ற வரிகளை வாசிக்கையில் அவனது கன்னங்களில் நீர் படரத் துவங்கி விட்டது.ஜுனியர் ரேவிடம் மன்னிப்பு கேட்பதாகவும் சூசனின் பெற்றோருக்கு பதில் சொல்ல முடியாது மொழியற்றவனாயிருக்கிறேன் என்றான்.

சூசன் தனது பெற்றோரை தேவாலயத்தில் தான் அறிமுகப்படுத்தி வைத்தாள் ரேவிடம்.ரேயின் விருப்பமும் தங்களது மகளின் தேர்வும் உண்மையிலேயே அவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.தேவனுக்கு நன்றி சொல்லியபடி அவர்களின் திருமணம் குறித்த முடிவினை அன்றிரவே அவர்கள் பேசத்தொடங்கி விட்டனர்.

ரேவின் தந்தை சற்று தொலைவிலுள்ள நகரத்தில் வசித்து வருகிறார்.அனைவரும் சந்திக்கும் ஒரு நிறை நாளை ரே ஏற்பாடு செய்தான்.அந்த இரவு ஆச்சரியமூட்டும் வகையில் ஒளியுடன் இருந்தது.விண்மீன்கள் வானில் அடித்து பிடித்து இடம் பிடித்தன போல் அருகருகே இருந்தன.அவற்றின் வியர்வைத் துளிகள் அவ்வளவு குளுமையாய் பூமியை நோக்கி வந்தன.மிகப்பெரிய விருந்தொன்றை ரேயின் தந்தை ஏற்பாடு செய்து பிரமாதப்படுத்தி  விட்டார்.ஏறக்குறைய உறவினர்கள் நண்பர்கள் குடும்பம் சகிதமாக கலந்து கொண்டனர்.மோதிரம் மாட்டாத குறை தான்.தோழிகளின் கேலியும் கிண்டலமாய் ரேயும் சூசனும் அன்றைய பொழுதைக் கடந்தனர்.

இரு பத்து நாட்களுக்குள்ளாக வந்த ஞாயிற்றுக்கிழமையில் அவர்களின் திருமணம் வெகு விமர்சையாக நடந்தேறியது.ரேயின் தந்தையின் வணிக சாதனையின் அடையாளமாக நகரின் பொது விழாவாகவே மாறியது.எல்லா கோமான்களும் சீமாட்டிகளும் வயதுக்கு மீறிய ஒப்பனைகளோடு நடனம் புரிந்தனர்.போலவே சூசனின் சுற்றத்தாரும் ரேயின் நிறுவன ஊழியர்களின் குடும்பமும் நிறைந்து நகரமே மூச்சு முட்ட திளைத்தது.

ரேவுக்கும் சூசனுக்குமான வாழ்வின் மென்மையான துவக்கமாக அமைந்தது.

ரேயினுடான திருமணத்திற்கு பின்பு அவனுடைய நிறுவன பொறுப்புகள் சூசனின் கவனத்திற்கு வந்தன.அவள் ரேயின் எல்லாவிதமான தினப்பணிகளிலும் உற்சாகமாக துணை நின்றாள்.சூசனின் இசை நுகரும் தன்மை அலாதியானது.அவள் தனது அறை முழுக்க ஓவியங்களைத் தானாகவே வரைந்து முடித்தாள்.ரே அலுவலகப்பணிகளை முடித்து விட்டு வரும் சமயங்களில் அவளின் நுட்பமான வரைதிறனை அதன் ஆகிருதியை ரசித்து சில எண்ணங்களைப் பகிர்வான்.

அவளின் தனியறை கிட்டத்தட்ட ஓர் ஓவியக்கூடமாகவே இருந்ததாய் உணர்ந்தான்.ஒரு பழைய மாதிரி கிராமஃபோன் கருவியை கண்காட்சியொன்றில் ஆர்டர் செய்து ரே அவளுக்கு முதல் திருமண நாளில் பரிசளித்தான்.அவள் அன்று தான் வாழ்வில் மிக மகிழ்வாய் உணர்ந்ததாய் கூறினாள்.தெரிவு செய்யப்பட்ட இசை தட்டுகளை ஓர் இசை நூலகத்திலிருந்து தருவித்துக் கொடுத்தான்.

அவளின் அறையில் ஓவியங்களும் இசைக்கருவிகளும் கலவி கொள்வதாய் அவ்வப்போது சூசனிடம் கூறுவான்.ஒவ்வொரு முறையும் அழுந்த பற்றிய முத்தங்களை ரேவுக்குப் பதிலாகத் தருவாள் சூசன்.நாளடைவில் முத்தங்களைப் பெறுவதற்கான கடவுச்சொல்லாகவே மாறிவிட்டது.சூசனுக்கும் ஆட்சேபனை ஒன்றுமில்லை.அதையும் அவள் விரும்பியே செய்தாள்.

உலகில் விலைமதிக்கமுடியாத ஒன்று உண்டெனில் அதையொரு பெண்ணின் மனப்பூர்வமான முத்தமெனலாம்.இதழைக்கவ்விக் கொண்டு ஒருவரையொருவர் விழுங்கிக் கொள்வதான எத்தனிப்புகளை என்னவென்பது!

சூசனின் பெற்றோர் கண்களில் கண்ணீர் மல்க இருந்த நிலையில் காமிரா வெளிச்சம் அவர்களின் பக்கம் திரும்பியது.இன்றைய திகதியில் நகரின் பரபரப்பான நிகழ்வாக இருந்தது.ஊடகக்காரர்கள் தங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தனர்.சூசனின் தாயார் ஜுனியர் ரேவை கைகளால் இறுகப்பற்றியபடி பேசினார்.

“வி ஆர் வித் ஹிம் !” “ஹி இஸ் நன் அதர் தேன் அவர் சன்!”

என்றபடி மற்றொரு கையால் சூசனின் தந்தையை பிடித்துக்கொண்டார்

ரேயின் பாதுகாவலர்கள் திஸ் இஸ் எனஃப் என்றவாறே செய்தியாளர்களைச் சுற்றி வளைத்து அப்புறப்படுத்தினர்.

தொலைக்காட்சியில் செய்தி ஸ்கோர்லிங்காக ஓடியபடியே இருந்தது.ரேயால் அந்த இரவைத் தாங்க முடியவில்லை.அன்றிரவு முழுவதும் கோப்பையால் நிறைந்தது.

எது அவளை அப்படியொரு முடிவுக்குத் தள்ளியிருக்கும் என அறிந்து கொள்ள வேண்டுமென அவன் மனம் விசும்ப ஆரம்பித்தது.ஓர் பூ தன்னைத்தானே சிதைத்துக் கொண்டதைப் போல அன்று காலை அந்தக் காட்சி மீண்டும் மீண்டும் கண்முன் தோன்றி மறைந்தது.

ஓர் வரைந்து முடிக்கப்பட்ட ஓவியம் போல படுக்கையில் அன்று விழுந்து கிடந்த அவளை வழக்கத்திற்கு விநோதமான தாமதத்தால் சூசனை அழைத்தபடி வந்தவனுக்கு ஏதோவொரு விபரீதம் நிகழ்ந்து விட்டதென யூகித்தான்.அவளருகில் அமர்ந்து சூசனைத் தொட்டபோது இதுவரை உணராதவொரு குளிர்ச்சியில் இருந்தாள்.கண்ணிமைக்கும் பொழுதில் அவனால் தான் உயிரற்ற உடலைத் தொட்டுக்கொண்டிருப்பதை உணர முடிந்தது.முன்பொரு முறை அவன் தனது அம்மாவைத் தொட்ட நினைவும் வந்து குழம்பியபடி இருந்தான்.

அவள் அவனை விட்டு நீங்கியதற்கான காரணமாக மாத்திரைக் குப்பிகள் சாய்ந்து கிடந்தன.இப்போது அவன் அழத்துவங்கினான்.மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஜுனியர் ரேவை நினைக்கையில் மேலும் கண்ணீர் பெருகியது.அரைமணிநேரத்தில் அந்த இடம் அவன் கையை மீறத் தொடங்கியது.

மருத்துவர்கள், பாதுகாவலர்கள், காவல் துறை அதிகாரிகள் குழுவென குவியத் துவங்கினர்,சூசனின் அறை ஓவியங்களையும் சூசனையும் மாறி மாறி புகைப்படமெடுத்துக் கொண்டனர்.முற்றிலும் அந்த அறை சீலிடப்பட்டது.

விசாரணை விசாரணை உளவியல் ரீதியாக எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலளிப்பதில் அவன் தேர்ந்தவனாய் சூழ்நிலை மாற்றியபடி இருந்தது.அவனை இப்போது கேள்விகளே சூழ்ந்திருந்தன. அவனுக்குள்ளே அவனிடமும் அவனுக்கே எனக் கேள்விகள்.அவன் சூசனை நினைத்தபடியே கூறிய பதில்களுக்கிடையே சூசனும் காதில் முணுமுணுத்தபடி இருந்தாள்.

சில நாள்களுக்குப் பின்பு அவன் அந்த அறைக்குள் சென்றான்.ஒவ்வொரு பகுதியிலும் ஏதேனும் வித்தியாசமாகத் தென்படுகிறதா எனத் துழாவினான்.சூசனின் அறையில் சூசனில்லாமல் அன்றுதான் நுழைகிறான்.இப்படியொரு தனியறை தேவையில்லை என்பதாக சூசன் கூறினாள்.அவன்தான் உனக்கான சுதந்திரம் எப்போதும் தொடர வேண்டும்.உன் பிரத்யேக விருப்பங்களை நிரப்பிக்கொள்ள வெளி தேவை என வற்புறுத்தி அவளை சம்மதிக்க வைத்தான்.அவளது அறை முழுக்க புத்தகங்களும் ஓவியங்களுமே அழகு செய்தன.கலைநேர்த்தியோடு அமைந்த அறையின் எல்லாவற்றையும் அவளே தீர்மானித்து இறுதி செய்தாள்.அவளது புத்தக அலமாரிகளில் சில புத்தகங்கள் மட்டுமே கண்ணுக்கு வித்தியாசமாய் பட்டது.அந்த புத்தகங்கள் அனைத்தும் பூர்வ ஜென்ம நம்பிக்கை குறித்தவையாக இருந்தன.இதை பற்றி அவள் தன்னிடம் பேசிக்கொண்டதேயில்லை.அவனுக்கு சிறிது புலப்பட ஆரம்பித்தது.

அவளின் கணினியில் ஏதேனும் அறியக்கூடுமென அவளுடைய மின்னஞ்சல்களை பார்த்தான்.அநேகமாக காவல் துறை எல்லாவற்றையும் பார்த்திருக்கக்கூடும்.

அவள் சில எண்களில் தொடர்ச்சியாகப் பேசியதையும் கண்டறிய முடிந்தது.

அந்த எண்களனைத்துமே உளவியல் நிபுணர்களுக்குரியதாக இருந்தது.

அவர்களோடு பேசியதிலிருந்து சூசன் சில மனஅழுத்தத்திற்கென ஆலோசனைப் பெற்றுக்கொண்டதை அவனால் அறிய முடிந்தது.

பின்பு அறை முழுக்க நிரம்பியுள்ள ஓவியங்களில் ஏதேனும் துப்பு கிடைக்கிறதா என அறிய முற்பட்டான்.ஓவியத்தில் சிறந்த நிலை வகிக்கக் கூடியவர்கள் சூசனின் ஓவியங்களைப் பார்த்தவுடனே அதன் கலைத்தன்மையை வியந்து பாராட்டினர்.

சூசன் தீரா மனஅழுத்தத்தில் இருந்திருக்கலாமென கூறினர்.அவள் மிகுதியாக பயன்படுத்தியுள்ள அடர்வண்ணங்களை இறைத்த விதத்தை வைத்து கூறலாமென்றார் ஓவியர் ஜான்.சில எண்கள் சில பெயர்கள் சில ஊர்களைப் பற்றிய விபரங்களை ஓவியங்களிலிருந்து கண்டறிந்ததாக ஓவியர் லூயி அவனிடம் குறிப்பாக அளித்தார்.

அதுவொரு பின்தங்கிய பகுதி ஜாஸ்மின் என்ற பெயரும் கூட இருந்தது.சில எண்கள் குறியீட்டு எண்ணாக இருந்தன.அவை தொலைபேசி எண்களாக இல்லை.அதை முழுமையாய் தொகுத்தால் அதுவொரு ஊரின் பெயராய் மாறியது.

ரே தனக்குத் தெரிந்த துப்பறியும் நிறுவனத்தை தொடர்பு கொண்டான்.கம்பனி நிர்வாகத்தில் அவர்கள் நம்பிக்கையோடு சில விஷயங்களை அவனுக்கு செய்து கொடுத்துள்ளனர்.அவர்களின் ஏற்பாட்டின்படி ஜுலி அவனோடு இணைந்து கொண்டாள்.

சொல்லப்போனால் ஜுலி தான் எல்லாப்புதிர்களையும் ஒவ்வொன்றாக விடுவித்தாள்.ரேயின் காரியதரிசி தொழில்முறை பயணமாக செல்வதாக அந்த ஊருக்கு அருகேயுள்ள பெருநகரத்தில் கூட்டமொன்றை ஏற்பாடு செய்தாள்.மேலும் பயணத்திற்கான அனைத்து திட்டமிடலையும் முடித்த கோப்பை ரேயின் கவனத்திற்கு கொண்டு சென்றாள்.எல்லாம் கச்சிதமாக இருந்தன.

ஜூலி தனியாக பயணம் மேற்கொள்ளும் திட்டமும் சரியாக இறுதி செய்யப்பட்டது.அயலகத்தில் யாரும் அறியாவண்ணம் அவர்கள் ஊருக்கு செல்வதற்கான ஏற்பாட்டை தரைமார்க்கமாக முடிவு செய்தனர்.

திட்டமிட்டதைப் போல ஜுலியும் ரேயும் வாடகை காரொன்றை பேசி அந்த ஊருக்கு பயணப்பட்டனர்.இவர்கள் காரில் ஏறிய இடத்திற்கும் அந்த ஊருக்கும் தொலைவு அதிகம்.ஊரைச் சொன்னவுடன் டிரைவர் மலைத்தான்.ரே காட்டிய பணக்கட்டுகள் அவனை வேறுவழியின்றி ஒத்துக்கொள்ள வைத்தன.

இடையில் எரிபொருள் நிரப்பவும் தேநீர் அருந்துவதற்குமென மூன்று முறை ரேயின் அனுமதிக்கென காத்திராமல் டிரைவர் நிறுத்தினான்.ரேவுக்கும் ஜுலிக்கும் கூட அவசியமாகவே தோன்றியது.அந்த ஊரை நெருங்கியவுடன் கார் ஓரிடத்தில் செயலிழந்தது போல நின்றுவிட்டது.இறங்கி முறுவலித்த ஜுலி தான் அதை கண்ணுற்றாள்.சுவரில் சிறிது பெரிதுமாக ஒட்டப்பட்டிருந்தது.அச்சு அசல் சூசனின் படம்.அதனைத் தவிர அந்த சுவரொட்டியயில் இருந்தவைகளை அவர்களால் வாசிக்க இயலவில்லை.ஆனால் ………..

அதில் குறிப்பிடப்பட்டிருந்த தேதிகள் சூசனின் பிறந்த இறந்த தினங்களாகும்.ஜுலிக்கும் தெரிந்த விஷயம். ரே மேற்கொண்டு ஏதும் அறிவதற்கு ஒன்றுமில்லை காரை சரிசெய்தவுடன் ஊரை நோக்கி திருப்பு என்றான்.அருகிலிருந்த மெக்கானிக்கை அழைத்து வந்து சரிசெய்வதற்குள் ரே யிடம் பதட்டம் தொற்றிக்கொண்டதை ஜுலி கண்டு கொண்டாள்.

டிரைவர் கார் சரியாகி விட்டதென்றவுடன் அவனது கைகளில் இரண்டு பணக்கட்டுகளைத் திணித்து விட்டு வேறொரு காரை ஏற்பாடு செய்து கிளம்பினான்.

தொழில்முறை கூட்டத்தை பிற நிர்வாக ஊழியரைக் கொண்டு நடத்தி முடிக்கச் சொல்லி விட்டு ரேயும் ஜுலியும் திரும்பினர்.ஜுலி அவனிடம் ஏதும் பேசிக்கொள்ளவில்லை.

விமான நிலையத்தில் இறங்கி வெளியேற முற்படுகையில் சூசனைக் கொலை செய்திருக்கலாமென சந்தேகத்தின் பேரில் போலீசால் கைது செய்யப்பட்டான்.

சூசனின் பிரதி தான் இந்த சிடுக்கை ஓபன் செய்ததாக ஜூலியும் காவல் துறையும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

சூசனின் தாயார் ஜுனியர் ரேவைக் கையில் பிடித்தபடி தேம்பிக்கொண்டிருந்தார்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button