
கடினமான காலங்களில்
இளைப்பாறுதல் தந்த மலர்களாய்ப்
பூத்துக் குலுங்கிய செடி!
நான் மகிழ்ச்சியில் ஆடிய அன்று வாடிப் போயிருந்தது.
நான் எப்படி அதற்கு ஆறுதல் சொல்வேன்?
என் துக்கத்தில் அதற்கு நீரூற்ற மறந்தவனல்லவா நான்?
****
என்னிடம் ஒரு உவமை உள்ளது
அதற்கான கவிதை இல்லை
எந்தக் கவிதையில் ஒட்டி வைத்தாலும்
பிய்த்துக்கொண்டு விழும்
அந்த உவமைக்கு
வயதேயில்லை!
அதனையொரு சவலைப்பிள்ளையை
அழைத்துச் சென்று
பள்ளியில் சேர்க்கப் பாடுபடும்
தகப்பனாக எங்கேயாவது சேர்த்துவிடலாம் என்று பார்க்கிறேன்
அதுவோ, முட்டாள்தனத்தின் உச்சத்தில் நின்று அடம்பிடிக்கும்
ஒரு பூமர் அங்கிளைப் போல
யாருடனும் ஒட்ட மாட்டேன் என்று படுத்துகிறது
பாதி புகைத்து முடித்த சிகரெட்டை
அப்பாவைப் பார்த்ததும் தூர எறிவதைப் போல
இப்போதைக்கு எறிந்து விட்டேன்
இன்னும் எரிந்தபடியிருக்கும் அதன் கங்கு
விரைவில் அணைந்துவிடும்.
*****
மலையின் நிழல் நினைத்துக் கொண்டது மலைதான் தன் நிழலென்று
மலையைக் கடந்து பறந்து கொண்டிருந்த
கழுகின் நிழலைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்
மலையின் நிழலில்
மலை மீது மேகங்கள் முட்டுவதைக் கண்டு
வியந்த குருவிக் குஞ்சுக்கு
மேகக்கூட்டமெல்லாம்
அம்மாக்குருவியாகத் தெரிந்தன
மழையால் மூடப்பட்ட மலையில் குடைபிடித்துச் செல்பவனை
எப்படி மன்னிப்பது?
*****
விட்டுச் செல்கிறார்கள்
எல்லோரும்
விட்டுச் செல்கிறார்கள்
யாருக்காக நீ அழுதாயோ
யாருடன் நீ சிரித்தாயோ
யாருக்காக நீ உழைத்தாயோ
யாருடன் வாழ நினைத்தாயோ
அனைவரும் ஒவ்வொருவராக
தானியத்தைக் கொத்தியபடி நகரும் சிட்டென
நகர்ந்தபடியிருக்கிறார்கள்
நானொரு மேகமாய் அழுகிறேன்
தனி மேகமாய் நகர்கிறேன்
மரங்களெல்லாம் கைகொட்டிச் சிரிக்க
அவற்றின் மீது மாரியாய் பொழிந்தபடி!!
*****
யதேச்சையாக உதடு குவித்து
ஒரு முத்தத்தைப் பறக்க விடுகிறாள்,
பொம்மைகளோடு விளையாடி கொண்டிருக்கும் சிறுமி
அவள் அருகில் யாருமேயில்லை…
அய்யோ!
காற்று அம்முத்தத்தை எங்கு கொண்டு சேர்க்குமோ தெரியாது
ஆனால்
அந்த முத்தம் இப்போதைக்குப்
பறந்து கொண்டேயிருக்கிறது…
இரவின் வானத்தில் மிதக்கும்
நட்சத்திங்களின் மீது சென்று
இப்போது இடித்துக் கொண்டேயிருக்கிறது
நட்சத்திரங்கள்
ஒவ்வொன்றாய்
பல்லிளிக்கின்றன!
*****
தூரத்தில் ஒரு பெயரற்ற மலை இருக்கிறது
என் வண்டி அதை நெருங்க நெருங்க
குதூகலமாய்
காற்றை அனுப்புகிறது
புலிகளற்ற
சிங்கங்களற்ற
பெயரற்ற மலைகளை
யாருமே மதிப்பதில்லை
சுவாரஸ்யமற்ற எதையும்
மனிதன் திறந்து பார்ப்பதில்லை
ஆனால் சுவாரஸ்யமற்ற எல்லாவற்றினுள்ளும்
மறைந்திருக்கின்றன
அத்தனைப் புறக்கணிப்பின் கதைகள்.
*********