
அப்பா நான் தில்லிக்கு போயாக வேண்டும் எனத் தீர்மானமாக சொல்லிவிட்டார். மூன்றாண்டுகள் சென்னை கிறித்தவ கல்லூரியில், விடுதியில் தங்கிப் படிக்கும் போது, நான் மருந்துக்குக் கூட யுபிஎஸ்சி தேர்வுக்காக அலமாரியில் வாங்கி அடுக்கியிருந்த புத்தகங்களைப் புரட்டிப் பார்க்கவில்லை என்ற ஏமாற்றம் அவருக்கு. இன்னும் நான்கு ஆண்டுகளில் அவருக்குப் பணி ஓய்வு. நாற்பதாண்டுகள் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணிப்புரிந்த அவரும், கரும்புகளைப் போலவே கசக்கிப் பிழியப்பட்டிருந்தார். பென்சனும் கிடையாது. அண்ணனைப் போல நானும் பொறியியல் படித்திருந்தால், இந்நேரம் எனக்கும் ஏதேனும் பெருநிறுவனத்தில் வேலை கிடைத்திருக்கும் என்பது அவரின் உறுதியான நம்பிக்கை. துளியும் இஷ்டமில்லாமல்தான் வரலாறு படிப்பதற்காக என்னை சென்னைக்கு அனுப்பினார். ஆனால், முதல் செமஸ்டர் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த என்னிடம், படிப்பைப் பற்றி விசாரித்துவிட்டு, யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகுமாறு உத்தரவிட்டு விட்டார். அதைத் தவிர நான் வாழ்க்கையில் உருப்படுவதற்கு வேறு மார்க்கமே கிடையாது எனும் சிந்தனை அவரைத் தீவிரமாக ஆட்கொண்டிருந்தது.
அதனால்தான், இளங்கலைப் படிப்பு முடித்துவிட்டு, நான் விடுதியில் இருந்து வீட்டுக்கு கொண்டு வந்த பொருட்களில், யுபிஎஸ்சி தேர்வுக்கான புத்தகங்கள் புதிது போல பளபளத்துக் கொண்டிருந்தை கண்டு நொந்துப் போனார். தினம் காலை அலாரம் வைத்து எழுந்து, வாசன் நகர் மைதானத்தில் நான் கிரிக்கெட் ஆடப் போவதும், மற்ற நேரங்களில் மும்முரமாக மொபைல் நோண்டிக் கொண்டும், முதுகலைப் படிப்பதற்காக வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் விண்ணப்பித்துக் கொண்டும் இருந்தது அவரின் ரத்தக் கொதிப்பை அதிகரிக்கச் செய்தது. அந்த சமயத்தில், அவரது உயர் அதிகாரியின் மகள் ஒருவர் தில்லியில் உள்ள கோச்சிங் செண்டர் ஒன்றில் படித்து, யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றிருந்தார். விசயம் அறிந்த அடுத்த ஒரு வாரத்திற்குள், அந்த பெண் படித்த அதே ’வாஜிராம்’ தேர்வு பயிற்சி நிறுவனத்தில் இரண்டு லட்ச ருபாய் கட்டிவிட்டு, என்னையும் தில்லிக்கு அழைத்துக் கொண்டுப் போனார்.
தில்லியில் யுபிஎஸ்சி தேர்வு பயிற்சி மையங்கள் நிரம்பி வழியும் ஏரியாவாக கரோல் பாக் இருந்தது. ஏதேனும் கல்லூரி – பல்கலைக்கழகத்தில் கூட இத்தனை மாணவர்களைப் பார்க்க முடியுமா எனத் தெரியவில்லை. தங்குவதற்கு அறை தேடி கரோல் பாக் வீதிகளில் நானும் அப்பாவும் அலைந்து கொண்டிருக்கையில், புத்தகப் பைகளோடு அங்குமிங்குமாய் புற்றீசலைப் போல அலைந்து கொண்டிருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை என்னை மிரட்சியடையச் செய்தது. எங்களுடன் வந்திருந்த புரோக்கரிடம், தோராயாமாக எத்தனை பேர் கரோல் பாக்கில் தங்கிப் படிக்கிறார்கள் என கேட்டதற்கு, நிச்சயம் லட்சத்திற்கு குறைவில்லை என்றார். தில்லியில் சமீப காலத்தில், இது போல வேறு சில இடங்களும் உருவாகி வருவதாகவும் அவர் சொன்ன போது, என் வயிற்றில் புளியைக் கரைத்தது. தில்லியில் மட்டும் இத்தனை லட்சம் பேர் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகிறார்கள் என்றால், நாடு முழுவதும் தயாராகிறவர்களின் எண்ணிக்கையை மனக் கணக்குப் போடத் தொடங்கினேன். பிரம்மாண்டாமனதொரு எலி ஓட்டப்பந்தயத்தில், சேர்க்கப்பட்டவனாக உணர்ந்தேன். இதற்கு பேசாமல் பொறியில் கல்லூரியிலேயே சேர்ந்திருக்கலாம் என்றும் நினைத்துக் கொண்டேன்.
வாஜிராம் நிறுவனத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருந்த குரு நாநக் ஆண்கள் விடுதியில் என்னை சேர்த்துவிட்டார் அப்பா. தில்லியில் பயிற்சி பெறுபவர்கள் பலர் தனி வீடெடுத்தும் தங்கியிருந்தார்கள். அப்படி தனியே இருந்தால், சமைப்பதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். அப்பாவிற்கு அதில் விருப்பமில்லை. என்னை சேர்த்துவிட்ட விடுதியில், அறைக்கான மாத வாடகை பன்னிரெண்டாயிரம் ருபாய். சாப்பாட்டுக்கு ஏழாயிரம் ருபாய் கூடுதலாக கட்ட வேண்டும். நிறைய தென்னிந்திய மாணவர்களும் அங்கு தங்கியிருந்ததால், வாரம் இரண்டு மூன்று நாட்கள் இட்லி தோசையும் கிடைக்கும் என்றார், நீண்ட தாடியும் தலைப்பாகையில் அணிந்திருந்த விடுதியின் மேனேஜர். வாரமொருமுறை அசைவமும் சமைத்துத் தரப்படுமாம் அப்பாவிற்கு பரம திருப்தி. அன்றிரவே, தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் ஊர் திரும்பினார்.
அந்த விடுதிக்கு உண்மையில் பாரத விலாஸ் என்றுதான் பெயர் சூட்டியிருக்க வேண்டும். ஏறத்தாழ இந்தியாவின் எல்லா மாநிலங்களை சேர்ந்தவர்களும் அங்கு தங்கியிருந்தார்கள். அங்கு வசித்து ஒவ்வொருவரின் கதைகளும், பின்புலம்கூட தனித்துவமானதே. சிலர், கல்லூரியில் படித்துக் கொண்டே, மாலை நேரத்தில் பயிற்சி நிலையத்திற்கு செல்பவர்கள். சிலர், என்னைப் போலவே இளங்கலைப் படிப்பு முடிந்த மறுநாளே தில்லி வந்து, முழு நேரமாக தயாரிப்பில் மூழ்கிக் கிடப்பவர்கள். சிலர், ஏதேனும் அலுவலகத்தில் வேலைப் பார்த்துக் கொண்டே பகுதி நேரமாக பயிற்சி பெறுபவர்கள். சிலர், வகுப்பு முடிந்ததும் பகுதி நேர வேலையில் ஈடுபட்டிருப்பவர்கள். சிலர், நல்ல வருமானம் தரக்கூடிய உத்யோகத்தை துறந்துவிட்டு யுபிஎஸ்சி பரிட்சைக்குத் தயாராபவர்கள். இப்படி, குரு நாநக் விடுதியில், இல்லை பாரத விலாஸில், ஒவ்வொருவரும் ஒரு விதம்.
விடுதியின் இரண்டாம் தளத்தில், என்னையும் சேர்த்து மொத்தம் இருபது பேர். வெவ்வேறு பயிற்சி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் என்றாலும், பெரும்பாலானவர்களின் வகுப்பு காலை ஆறு மணிக்கெல்லாம் தொடங்கிவிடும். ஆனால், நானூறு மாணவர்கள் பயிலும் வகுப்பறையில், முன் வரிசைகளில் அமர இடம் கிடைக்க வேண்டும் என்றால் ஐந்தரை மணிக்கெல்லாம் கோச்சிங்க் செண்டர் வாசலுக்கு சென்றுவிட வேண்டும். அதற்கு ஏற்றது போலவே, சீக்கிரமே காலை உணவை தயாரித்து, அதை டிபன் பாக்ஸில் அடைத்துக் கொடுத்துவிடுவார்கள் விடுதிப் பணியாளர்கள். எட்டு மணிக்கு முதல் வகுப்பு முடிந்ததும், வழங்கப்படும் இடைவேளையில் அதை சாப்பிடுவதை நான் வாடிக்கையாக் கொண்டிருந்தேன். மதியம் ஒரு மணிக்கு, அன்றைய தினத்தின் வகுப்புகள் நிறைவடைந்ததும், விடுதிக்கு வந்து நான்கு சப்பாத்திகளை விழுங்கிவிட்டு, தி ஹிந்து நாளிதழ் வாசிப்பு. பிறகு குட்டி தூக்கம். மாலை மீண்டும் படிப்பு. அவ்வவபோது, கிரிக்கெட் ஆட வேண்டும் என்கிற ஏக்கம் எழும்போதெல்லாம், மொபைலில் அதை விளையாடிக் கொள்வேன். அப்புறம் எப்போதேனும் ஒரு சிகரெட்.
எனது தளத்தில் வசிக்கும் பெரும்பான்மையினரின் நடவடிக்கைகள், பிரதியெடுத்ததைப் போல இவ்வாறுதான் இருந்தது. ஒரு சிலரைத் தவிர. அவர்களில் ஒருவன், எனக்கு நேரெதிரே இருந்த அறையில் தங்கியிருந்த சியாம். மலையாளியான அவனும், சென்னை கிறித்த கல்லூரியில் நான் பார்த்த மற்ற கேரளா பையன்களைப் போலவே, எப்போதும் போதையில் மிதந்துக் கொண்டிருந்தான். முப்பது வயதான சியாம், டாக்டருக்குப் படித்துவிட்டு, அவனுடைய குடும்பத்தினருக்கு கொச்சியில் சொந்தமாக இருந்த மருத்துவமனையில் சில மாதங்கள் பணியாற்றினான். ஆனால், வேலையில் அவனுக்கு சீக்கிரமே சலிப்புத் தட்டிவிட்டது. அதிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காக, தனக்கு கலெக்டராக வேண்டும் என்கிற லட்சிய வெறி தோன்றிவிட்டதாக வீட்டில் கதைக்கட்டிவிட்டு, கடந்த ஓராண்டாக தில்லியில் உல்லாசமாக இருந்து வருகிறான். மாதமிருமுறை அவன் பயிற்சி நிலையத்திற்கு சென்றால் அதிசயம். பெரும்பாலான நேரங்களில், அறையில் அமர்ந்தபடி படம் பார்த்துக் கொண்டே சிகரெட்டுகளை ஊதித் தள்ளிக் கொண்டிருப்பான். வார இறுதியில், ரிஷிகேஷ், ஜெய்ப்பூர் என தில்லிக்கு அருகாமையில் இருக்கும் ஏதேனும் ஊர்களுக்குப் போய் வருவான். சில இரவுகள், விடுதி மேனேஜருக்குத் தெரியாமல், அனைவரும் உறங்கியப் பிறகு அவனது காதலியை அறைக்கு அழைத்து வருவதும் உண்டு. அவ்வவப்போது, ராத்திரி சரக்கடித்துவிட்டு, போதையில் எனது அறைக் கதவைத் தட்டி தீப்பெட்டி இரவல் வாங்குவதுண்டு.
அன்றொரு நள்ளிரவு இரண்டு மணிக்கு, கதவை பலமாகத் தட்டி என்னை எழுப்பிவிட்டு தீப்பெட்டி வாங்கினான் சியாம். அவன் சென்ற பிறகு, மீண்டும் உறக்கத்திற்குள் நுழைய எனக்கு சற்று சிரமமாக இருந்தது. என்னுடைய அறையிலேயெ கொஞ்ச நேரம் நடந்தேன். பிறகு, வாங்கி வைத்திருந்த ஒற்றை கோல்டு ஃபில்டரை உதட்டில் வைத்து, பற்ற வைப்பதற்காக அலாமாரியில் வைத்திருந்த தீப்பெட்டியைத் தேடினேன். எதுவும் அகப்படவில்லை. சியாம் மீது சுருக்கென்று எனக்கு கோபம் வந்தது. அதே கோபத்தோடு, அவனது கதவை ஓங்கித் தட்டுவதற்காக வெளியேறினேன். அவனது அறைக்குள் பெண் குரல் கேட்டதும், இந்நேரத்தில் அவர்களைத் தொந்தரவு செய்வது எனக்கு நாகரீகமாகப்படவில்லை. வேறு யாரிடமாவது கேட்கலாமா என மற்ற அறைகளைப் பார்வையிட்டேன். அந்த நடுஜாமத்தில் அத்தனை அறைகளும் அடைக்கப்பட்டிருக்க, அத்தளத்தின் கடைசி அறையில் மட்டும் விளக்கு ஒளிர்ந்துக் கொண்டிருந்தது. ஆச்சரியம் என்னவென்றால், நான் அங்கு தங்கியிருந்த கடந்த நான்கு மாதங்களில் அந்த அறை திறந்திருந்து நான் பார்த்ததே கிடையாது. அங்கு யாரும் வசிக்கவில்லை என்பதே என் எண்ணமாக இருந்தது. தீப்பெட்டி வாங்க வேண்டும் என்பதை விட, அங்கு யார் இருக்கிறார்கள் எனும் ஆர்வத்துடன்தான் அவ்வறையின் கதைவைத் தட்டினேன்.
மெலிந்த தேகமும், வலுக்கைத் தலையுமாய் இருந்த ஒருவன் கதவைத் திறந்தான். இதற்கு முன்பு நான் அவனை விடுதியில் பார்த்ததாக சுத்தமாக நினைவில்லை. புதிதாக விடுதியில் சேர்ந்தவனக இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டு, அவனிடம் ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினேன்
”என் பெயர் கேசவன். இந்த நேரத்தில் உங்களுக்கு தொல்லை கொடுப்பதற்கு மன்னிக்கவும். இந்த அறையில் மட்டும்தான் விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது. அதனால்தான் தட்டினேன். தீப்பெட்டி கிடைக்குமா?”
“பரவாயில்லை. உள்ளே வாருங்கள். நான் படித்துக் கொண்டுதான் இருந்தேன். இன்னும் தூங்கவில்லை.”
அந்த சிறிய அறைக்குள் – ஒரு கட்டில், மேஜை, நாற்காலி, யுபிஎஸ்சி படிப்பவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் புத்தகங்கள், சமைப்பதற்கான அடுப்பு, பாத்திரங்கள், மளிகை சாமான்கள் என அனைத்தும் இருந்தது. இத்தனை பொருட்களையும் விடுதி அறைக்குள் வைக்க முடியும் என்பதே எனக்கு சற்ற வியப்பாக இருந்தது. அவன் என்னிடம் தீப்பெட்டியைக் கொடுத்ததும், சிகரெட்டைப் பற்ற வைக்க முயன்றேன். உடனே அவன்,
“இல்லை. இங்கே வேண்டான். எனக்கு இதன் புகை ஒத்துக்கொள்ளாது. உங்கள் அறைக்குள் சென்று புகைத்துக் கொள்ளவும்.”
“மன்னிக்கவும். அப்படியே செய்கிறேன். ஆமாம், உங்கள் பெயரென்ன? சமீபத்தில் தான் விடுதியில் சேர்ந்திருக்கிறீர்களா?”
“அட, என்னை அறிமுகப்படத்த மறந்துவிட்டேனே! நான் ஜவஹர். ஒடிசாவில் என்னுடைய ஊர் இருக்கிறது. இந்த விடுதியில் நான் வசிக்கத் தொடங்கி ஆறு வருடங்களுக்கு மேலாகிவிட்டது.”
“அப்படியா! நான் இங்கு மூன்று-நான்கு மாதங்களாக இருக்கிறேன். இருவரும் ஒரே விடுதியில், ஒரே தளத்தில் தான் இருக்கிறோம். ஆனால், உங்களை நான் இதற்கு முன்பு இங்கு பார்த்ததேயில்லையே.”
“இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. நான் பகலெல்லாம் ஒரு உணவகத்தில் வேலைப்பார்க்கிறேன். இரவு கடை சாத்தியப் பிறகுதான், விடுதிக்கு வருவேன். பிறகு அதிகாலை வரை படித்துவிட்டு, கொஞம் நேரம் தூங்குவேன். கண் விழித்ததும், மீண்டும் வேலைக்கு போய்விடுவேன்”
“இங்கு ஏதும் பயிற்சி நிறுவனத்தில் நீங்கள் இணைந்திருக்கவில்லையா? யுபிஎஸ்சி தேர்வுக்குதானே படிக்கிறீர்கள்? வேலை பார்த்துக் கொண்டே தேர்வுக்குத் தயாராக முடிகிறதா?”
”நான்தான் சொன்னேனே. நான் தில்லிக்கு வந்து ஆறு வருடங்களாகிவிட்டது. முதல் வருடம் மட்டும் வாஜிராமில் சேர்ந்து முழு நேரமாகப் படித்தேன். அதன் பிறகு, எனது தந்தை இறந்துவிட்டார். ஒரு சிறிய தையல் கடை நடத்திதான் அம்மா எனது சகோதரிகள் இருவரையும் கிராமத்தில் படிக்க வைக்கிறார். எனக்கு பணம் அனுப்பவது அவரால் முடியாத காரியம். எனவே, நான் கடையில் வேலைப்பார்த்துக் கொண்டே படிக்கிறேன். இப்போது வகுப்புகள் எதற்கும் போவதில்லை. மாதமொருமுறை, நிறுவனத்தில் நடத்தும் மாதிரித் தேர்வில் மட்டும் கலந்துக் கொள்கிறேன். இந்த ஆண்டோடு, எனக்கு முப்பத்தியேழு வயது பூர்த்தியாகிறது. எனவே, யுபிஎஸ்சி தேர்வு எழுதுவதற்கு எனக்கு கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பிது. ஆனால் என்ன செய்வது. வேலைக்கு போகாவிட்டால், விடுதிக்கு வாடகை கொடுக்க முடியாதே? அதனால்தான் பகலில் வேலை பார்த்துவிட்டு, இரவில் படிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறேன்.”
ஜவஹர் பேசி முடித்ததும், அங்கு பெரும் நிசப்தம் நிலவியது. மேற்கொண்டு அவனின் ஏதும் கேட்கவோ, பேசவோ என்னால் முடியவில்லை. தீப்பெட்டிக்கு நன்றி சொல்லிவிட்டு, அறைக்கு வந்தேன். சிகரெட் பற்ற வைத்தாலும், என்னால் புகையை இழுக்க முடியவில்லை. நான்கு ஆண்டுகளில் அப்பா பணிவோய்வுப் பெற்றுவிடுவார். அதற்குள், ஏதேனும் அரசு வேலைக்குள் நுழைந்துவிட வேண்டும் என்கிற பதட்டம் என்னை ஆட்கொண்டது. ஆனால், ஜவகரின் தந்தையை போல எனது அப்பாவும் அதற்கு முன்பாகவே இறந்து விட்டால்! அண்ணனிடமும் பணம் கேட்க முடியாது. அவனுக்கு திருமணமாகி, இப்போது தனியாக குடும்பம் இருக்கிறது. அம்மாவை வேண்டுமானால் அவன் தன்னோடு அழைத்துக் கொள்வான். ஆனால், இந்த வயதில் அவனை சார்ந்து என்னால் இருக்க முடியாதே! திருமணம் ஆகாது, நல்ல உத்தியோகம் கிடைக்காது, தலையில் வழுக்கை விழுந்து முப்பது – முப்பத்தியைந்து வயது வரை நானும் யுபிஎஸ்சி தேர்வுக்கு படித்துக் கொண்டேயிருக்கும் சித்திரத்தை என் மனம் தூரிகையின்றி தீட்டியது. இத்தகைய கொடும் கற்பனைகளும், எண்ணங்களும் என்னை தீவிரமாக பயமுறுத்த, நள்ளிரவையும் படிப்பிற்காக பயன்படுத்திக் கொள்ளத் தீர்மானித்தேன்.
எப்போதும் இரவு பதினோரு மணிக்கே தூங்கும் பழக்கத்தை மறுநாள் சற்று மாற்ற முயன்றேன். பன்னிரெண்டு மணிக்கு லேசாக தூக்கம் கண்களை அழுத்தியது. ஒரு டீயோ, காப்பியோ கிடைத்தால் நலம் எனத் தோன்றியது. விடுதியில் இருந்து ஐந்து நிமிடம் நடந்தால், இருபத்தி நான்கு மணி நேரம் செயல்படுகிற ஒரு தேநீர் கடையை அடைந்துவிடலாம். ஆனால், அங்கு சென்றால் சிகரெட் பிடிக்கத் தோன்றும். வேண்டாம் என தீர்மானித்துவிட்டு, மெஸ்ஸில் நானே டீ போட்டுக் கொள்வதற்காக, அறையைவிட்டு வெளியேறினேன். முந்தைய தினத்தைப் போலவே, ஜவஹரின் அறை மட்டும் ஒளிர்ந்துக் கொண்டிருந்தது. ஏனோ, மெஸ்ஸுக்கு போகாமல், அவன் அறையைத் தட்டினேன். அவன் புன்னகையோடு வரவேற்றதோடு, பாலில்லாத கடுங்காப்பியும் போட்டுக் கொடுத்தான்.
ஜவஹரின் அறிவுத் திறன் மிகவும் அசாத்தியமானதாக இருந்தது. வகுப்பில் பாடம் எடுக்கும் அனுபவமிக்க ஆசிரியர்கள் பலரைக் காட்டிலும் அவனது அறிவு கூர்மையனதாக இருந்ததை என்னால் அவனோடு பழகத் தொடங்கிய ஓரிரு நாட்களிலேயே உணர முடிந்தது. எந்த பாடத்தில் சந்தேகம் கேட்டாலும், அதை மிக திறமையாக தீர்த்து வைக்ககூடிய அவனிடம் இருந்து நான் நிறையவே கற்றுக் கொண்டேன். ராத்திரி பன்னிரெண்டு மணிக்கு மேல்தான், அவன் அறைகுள் விளக்கு எரியும். அவன் வேலையில் இருந்து விடுதிக்கு திரும்பிவிட்டான் என்பதன் சமிக்ஞை அதுதான். அதன் பிறகு, புத்தகங்களை எடுத்துக் கொண்டு அங்கு நான் சென்றுவிடுவேன். கடுங்காப்பி குடித்துக் கொண்டே, எனது சந்தேகங்களுக்கு அவன் அளிக்கும் பதில்களை உன்னிப்பாகக் கவனித்து குறிப்பெடுத்துக் கொள்வேன். தேர்வு தயாரிப்பைத் தாண்டி வேறு எந்த பெரிய உரையாடலும் எங்களுக்குள் நிகழவே இல்லை. என்னைப் பற்றிய அடிப்படையான தகவல்களை அறிந்துக் கொள்ளும் ஆர்வம் கூட அவனுக்கு இருக்கவில்லை. ஒரு எந்திர மனிதனைப் போல, அவனுடைய சிந்தையும், செயலுமெல்லாம் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராவதிலேயே குவிந்திருந்தது.
ஜவஹரோடு அறிமுகமாகி மூன்று நான்கு மாதங்கள் கடந்திருக்கும். குளிர் காலம் தொடங்கியிருந்தது தில்லியில். எல்லோரும் மூன்று அடுக்குகள் உடையணிந்துதான் தெருக்களிலும், வகுப்பறையிலும் காணப்பட்டார்கள். யுபிஎஸ்சி தேர்வுக்கு சென்ற ஆண்டு விண்ணப்பித்தவர்கள், தற்போது முதனிலை தேர்வை எழுதிவிட்டு, ரிசல்டுக்காக காத்திருந்தார்கள். இதில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு, கடுமையான இரண்டாம் கட்டத் தேர்வும், நேர்காணலும் நடத்தப்பட்டும். ஜவஹரும் தீவிர பதட்டத்தோடுதான் இருப்பான் என்று நான் நினைத்தேன். ஆனால், அவனுடைய மனநிலையிலும், உடல்மொழியிலும் யாதொரு மாற்றத்தையும் என்னால் அடையாளம் காண முடியவில்லை. எப்போம் போலவே, தீவிரத்தன்மையோடு படித்துக் கொண்டிருந்தானேத் தவிர, தேர்வு முடிவு குறித்தான பயம் அவனிடம் தென்படாதது எனக்கு வியப்பளித்தது. இவ்வருடம் தேர்ச்சி பெறாமல் போனால், அவன் எதிர்காலம் என்னவாகும் என நான் தான் மெலிதாய் நடுங்கினேன். உண்மையில், அவன் இம்முறை தேர்வு எழுதினானா இல்லையா என்றுகூட என்னை யோசிக்க வைத்தது ஜவஹரின் பதட்டமின்மை.
அப்படி தேர்வு முடிவுகளுக்காக, அவனைவிட கூடுதல் ஆர்வத்தோடு நான் காத்துக் கொண்டிருந்த நாட்களது. ஒரு முறை, வகுப்பு முடிந்ததும் எனக்கு ஏனோ விடுதிக்கு உடனேப் போக மனமில்லை. தினம் மதியம் சப்பாத்தியும், பருப்பும் காயும் சாப்பிட்டு நாக்கு சலித்துவிட்டது. அசைவம் சாப்பிட வேண்டும் என்கிற ஏக்கம். விடுதியில் சமைக்கப்படும் கோழி வறுவலுக்காக ஞாயிற்று கிழமை இரவு வரை காத்திருக்கவும் விருப்பமில்லை. எந்த கடைக்குப் போய் சாப்பிடலாம் என யோசிக்கையில், சட்டென ஜவஹர் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஹோட்டல் கரீம்ஸ் நியாபகத்திற்கு வந்தது. பழைய தில்லியில், ஜமா மஸ்ஜித்துக்கு அருகாமையில் இருக்கும் அந்த ஹோட்டலில் எல்லா பண்டங்களும் கொஞ்சம் விலை அதிகம் என ஒரு முறை ஜவஹர் கூறியிருக்கிறான். மாதத் தொடக்கம் என்பதால், அப்பா விடுதி வாடகைக்கும் எனது கை செலவிற்கும், சமீபத்தில்தான் பணம் அனுப்பியிருந்தார். எனவே, தைரியமாக மெட்ரோ பிடித்துப் போனேன்.
உணவை ஆர்டர் செய்து, சாப்பிட்டு முடிக்கும் வரை எனது கண்கள் ஜவஹரைத் தேடின. ஆனால், அவன் தென்படவில்லை. பில் கட்டும் போது, கவுண்டரில் அமர்ந்திருப்பவரிடம் எனக்கு தெரிந்த இந்தியில் ஜவஹர் பற்றி கேட்டேன், ”யஹான் ஜவஹர் நாம் கா கோயி நஹீ ஹை” – இங்கு ஜவஹர் எனும் பெயரில் யாரும் இல்லை என்றார்கள். எனக்கு சற்று குழப்பமாக இருந்தது. ஜவஹரிடம் செல் போனும் இல்லாததால், உடனே அழைத்து விசாரிக்கவும் முடியவில்லை. எனவே மீண்டும் கடைக்காரரிடம் கேட்டேன்,
“என் நண்பன் தான் அவன். வழுக்கை தலையோடு இருப்பான். ஐஏஎஸ் தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருக்கிறான். இங்குதான் வேலைப் பார்ப்பதாக சொன்னான் என்னிடம்..”
என்னைப் போலவே சற்று குழப்பமடைந்த கடைக்காரர் சற்று யோசித்துவிட்டு,
“ஆமாம். நீங்கள் கூறிய மாதிரி ஒரு ஆள் இங்கு வேலை பார்த்தான். ஆனால் தற்போது அல்ல. சில வருடங்களுக்கு முன்பு வரை”
அன்றிரவு ஜவஹரை பார்த்து, இது பற்றி கேட்டேன்.
“நீ கரீம்ஸ் உணவகத்தில்தானே பணிப்புரிகிறாய்”
“ஆமாம். அதில் என்ன புதிதாக சந்தேகம். அங்குதான் எனக்கு சர்வர் வேலை.”
“நான் இன்று உன்னுடைய கடைக்கு வந்தேன். உன்னை பார்க்க முடியவில்லை. அங்கிருப்பவர்களிடமும் விசாரித்தேன். நீ அங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வரைதான் வேலை பார்த்தாய் என்றார்கள். இப்போது எந்த ஜவஹரும் அங்கும் பணிப் புரியவில்லையாம்.”
”என்ன உளறுகிறாய். நான் பகல் முழுக்க அங்குதான் இருப்பேன். ஒரு வேளை நீ வேறு ஏதோ கடைக்குள் தவறுதலாக நுழைந்திருப்பாய். பழைய தில்லியில் ஒரே பெயரில் பல உணவகங்கள் இருக்கின்றன” என்று அலட்டிக் கொள்ளாமல் கூறிவிட்டு, மீண்டும் புத்தகத்தை வாசித்து குறிப்பெடுக்கத் தொடங்கினான்.
மேற்கொண்டு எதுவும் பேசாமல், எனது அறைக்கு திரும்பி, படுக்கையில் விழுந்தேன். ஏனோ அவனது பதில் எனக்கு திருப்தி அளிக்கவில்லை. ஏதோ சரியில்லை என்று மட்டும் மனதிற்கு தோன்றியது.
மறுநாள் முதனிலைத் தேர்வு முடிவுகள் என்பதால், அத்தனை கோச்சிங் நிறுவனங்களும் விடுமுறை அறிவித்திருந்தன. எனவே, சாவகாசமாக எழுந்துக் கொள்ளலாம் என படுக்கையிலேயே இருந்தேன். எனது கதவை யாரோ பலமாக தட்டினார்கள். அன்று பகலிலும் போதையில் என்னிடம் தீப்பெட்டி கேட்டான் சியாம். கொடுத்ததும், சிகரெட்டை பற்ற வைத்துவிட்டு, மகிழ்ச்சியாக கத்தினான்.
”யடா கேஷவா! ஞான் பரீக்ஷ பாசாய்”
அவன் பரிட்சையில் தேறியது எனக்கு மட்டுமல்ல, அவனுக்கே ஆச்சரியமாகதான் இருந்திருக்க வேண்டும். இது எப்படி சாத்தியமானது என்பதை புலனாய்வு துறையினர் தான் விசாரிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன். சட்டென என் மனம் ஜவஹர் குறித்து அறிய ஆவல்பட்டது. அவனுடைய அறையை எட்டிப்பார்த்தேன். எப்போதும் போலவே, அறை வெளியே தாழிடப்பட்டிருந்தது. சற்று ஏமாற்றமடைந்தேன். முடிவுகள் வெளியாகும் நாளில்கூட, அவன் ஏன் வேலைக்கு சென்றான் என புரியவில்லை. ஒரு நாள் சம்பளம் போனால்கூட அவனால் மாத செலவை சமாளிக்க முடியாதா என்ன? அவனது நடத்தையெல்லாம் எனக்கு புதிராகவே இருந்தது.
அன்று எனது விடுதியை சேர்ந்த சேலத்துப் பையன் ஒருவன் முதனிலைத் தேர்வில் தோல்வியடைந்ததால், தற்கொலைக்கு முயன்றிருந்தான். பத்து தூக்க மாத்திரைகளை விழுங்கிவிட்டான். நல்லப்படியாக மருத்துவமனையில் சேர்த்து அவனை காப்பாற்றிவிட்டார்கள். அந்த பையனின் பெற்றோர்கள், விமானம் பிடித்து தில்லிக்கு மறுநாள் காலைதான் வந்து சேர்வார்களாம். நானும் தமிழ் என்பதால், மருத்துவமனையில் அன்றிரவு மட்டும் அவனோடு துணைக்கு இருக்க முடியுமா என விடுதி மேனேஜர் என்னிடம் கேட்டார். மறுக்க முடியவில்லை. அந்த பையன், இரவெல்லாம் அமைதியாத் தான் உறங்கிக் கொண்டிருந்தான். ஆனால், என்னால், ஜவஹரைப் பற்றி அறிந்துக் கொள்ளாமல் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. அவனும் இதே போல ஏதும் மடத்தனமாக செய்துக் கொள்வானோ என்கிற பயம்தான். சியாமுக்கு போன் செய்து, ஜவஹர் வந்துவிட்டானா என அடிக்கடி விசாரித்தேன். ஒரு மணிக்கு அவன் அறையில் வெளிச்சம் தெரிவதைப் பார்த்ததாக எனக்கு குறுஞ்செய்தி அனுப்பினான் சியாம். அதற்கு பிறகுதான் சற்று கண்ணயற்ந்தேன்.
மறுநாள் விடுதிக்கு திரும்ப காலை எட்டு மணியாகிவிட்டது. எனது அறைக்குள் நுழைகையில், ஜவஹரின் அறை பூட்டப்பட்டிருப்பதை கண்டேன். வேலைக்கு கிளம்பிவிட்டான். அவனுக்கு ஒன்றுமாகவில்லை என்பது உறுதி. ஆனால், அவன் பரிட்சையில் தேறினானா, இல்லையா என்பது தெரியவில்லை. நிச்சயம் இரவு கேட்க வேண்டும். பாசாகி இருந்தால், அவனுக்கு கொடுக்க ஒரு ஸ்வீட் பாக்ஸும் வாங்க வேண்டும்.
தேர்வு முடிவுகள் வெளியானதும், எங்கள் விடுதியில் மட்டுமில்லாது, கரோல் பாக் பகுதியில் வேறு சிலரும் தற்கொலைக்கு முயன்றிருந்தார்கள். மூவர் காப்பாற்றப்பட இயலாமல் இறந்துவிட்டார்கள். அப்படி இறந்தவர்களுக்கு, அன்று மாலை வாஜிராம் பயிற்சி நிலையத்திற்கு அருகாமையில் உள்ள ஒரு பூங்காவில் அஞ்சலி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்றைய தினம் இறந்த மூவரின் புகைப்படங்களோடு, கடந்த காலங்களில் யுபிஎஸ்சி தேர்வில் தோல்வி அடைந்ததாலோ, மன அழுத்தம் காரணமாக கரோல் பாக் பகுதியில் தற்கொலை செய்துக்கொண்ட மாணவர்களின் படங்களையும் அஞ்சலி செலுத்தும் இடத்தில் காட்சிப்படுத்தியிருந்தார்கள். நானும் மெழுகு வர்த்தியோடு பூங்காவிற்கு சென்றிருந்தேன்.
அங்கு நான் பார்த்த படங்களில் ஜவஹரின் போட்டோவும் இருந்தது !
அய்யோ என என்னையும் அறியாமல் கத்தினேன்
கண்களில் நீரோடு, அவனது புகைப்படத்தை இன்னும் கூர்ந்து நோக்கினேன்.
அவன் நான்கு ஆண்டுகளுக்கு முன்னாலேயே மரித்துவிட்டதாக எழுதியிருந்தது.
எனக்குள் இருந்த வலியும் வேதனையும், குழப்பமாகவும் பின்னர் பயமாகவும் பரிணமித்தது.
நேரே, என் விடுதிக்கு ஓடினேன். சியாமிடம் விசயத்தை சொன்னேன். அவன் நம்ப மறுத்தான். சில இரவுகளில் அவனும் ஜவஹரிடம் தீப்பெட்டி கடன் வாங்கியதாக கூறினான். சற்று பொறுமையாக, அவன் வேலை முடித்து வரும் வரை காத்திருக்கும்படி கூறினான். நான் அவனது யோசனையை பொருட்படுத்தவில்லை. என்னிடம் இருந்த சுத்தியலை கொண்டு, ஜவஹரின் கதவில் தொங்கிக் கொண்டிருந்த பூட்டை உடைத்தேன். சியாம் என்னை தடுக்கவில்லை.
கதவு திறக்கப்பட்டதும், எங்கள் முன்பு ஒரு காலியான தூசி படிந்த அறையே காட்சி கொடுத்தது. கடந்த சில மாதங்களாக, ஒவ்வொரு நள்ளிரவும் அந்த அறையில் பார்த்துவந்த கட்டில், மேஜை, நாற்காலி, புத்தகங்கள், சமையல் பாத்திரங்கள் என எதுவுமே அங்கில்லை. நானும், சியாமும் பேயறைந்ததைப் போல ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்துக் கொண்டே, எனது அறைக்கு வந்து சேர்ந்தோம். ஒன்றுமே பேசிக்கொள்ளாது, நீண்ட நேரம் இருவரும் மௌனமாக இருந்தோம்.
நான் அந்த அறையின் பூட்டை உடைத்ததை அறிந்த விடுதி மேனேஜர் என்னிடம் வந்து கத்தினார்,
“காரணமாகதான் அந்த அறையை பூட்டியே வைத்திருக்கிறோம். நான்கு வருடங்களுக்கு முன்பு அங்கு ஒரு ஒடிசா பையன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். வேறு ஏதும் கெட்ட விசயங்கள் நடக்கக் கூடாது என்றுதான் நிஜாமுதீன் தர்காவில் மந்திரிக்கப்பட்ட பூட்டை வைத்து அந்த அறையை தாழிட்டு அடைத்து வைத்திருக்கிறோம். அதை போய் இப்படி உடைத்துவிட்டீர்களே. இப்போது மீண்டும் அந்த ஃபக்கீரை அழைத்து மந்திரிக்க வேண்டும்”
எனக் கோபமாகப் பேசிவிட்டு, தற்காலிகமாக வேறொரு பூட்டை வைத்து ஜவஹரின் அறையை அடைத்தார்.
அன்றிரவு, சியாமும் என்னுடைய அறையிலேயே தங்கினான். இருவரும், தூங்காமல், ஜவஹரின் அறையையே உற்று பார்த்துக் கொண்டிருந்தோம். பன்னிரெண்டு மணியானதும், உள்ளே விளக்கு ஒளிர்ந்தது. வெளியில் தொங்கிக் கொண்டிருந்த பூட்டு மறைந்து விட்டது. நான்கு மணியளவில், விளக்கு அணைந்தது. கதவு மீண்டும் தாழிடப்பட்டது. எல்லாம் தானாகவே!
எந்த தாமதமும் செய்யமால், மறுநாளே நானும் சியாமும் எங்கள் விடுதி அறையைக் காலி செய்துவிட்டோம்.



