
5.நீர் மேலாண்மை
தமிழர்கள் தங்களது வாழ்விடங்களை மட்டுமல்லாது தற்சார்பு வாழ்வுக்கு துணைநிற்கிற நீர் மேலாண்மையையும் போற்றி பாதுகாத்து வந்திருக்கிறார்கள். குறிஞ்சி, முல்லை மருதம், நெய்தல் என்று நால்வகை நிலங்களைப்பிரித்த தமிழர்கள் அந்த நால்வகை நிலங்களும் அதன் தன்மையை இழந்துவிடாமல் இருக்கவேண்டுமானால் நீர் அவசியம் என்பதை உணர்ந்து கொண்டார்கள்.
நால்வகை நிலங்களிலும் நீர் இருக்கும். அதில் நீர் வற்றிப்போனால் ‘பாலை’யாக திரியும். தங்களுக்கு நல்வாழ்வு தரும் நிலங்கள் நீர் இல்லாமல் பாழ்பட்டுப்போவதை யார் விரும்புவார்?
ஆதலால், ஆங்காங்கே நிலங்களைப் பிளந்து வெட்டி மழையினால் கிடைக்கிற நீரை ஓரிடத்தில் தேக்கி பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.
அப்படித் தேக்கும் நீர் நிலைகளையும் தங்களது உடலமைப்பை மனதில் கொண்டே வடிவமைத்தார்கள். கரைபுரண்டோடும் காட்டாற்று வெள்ளம் கண்மாய்க்கு போய்சேரும் வழித்தடங்களை ‘கால்’வாய் என்றும், கண்மாயிலிருந்து நீர் வெளியேறும் பாதையை ‘வாய்’கால் என்றும் பெயரிட்டு அழைத்தனர்.
மழைநீரை தேக்கினால் வேளாண்மை செழிப்பதைப் போல, மழைநீரை சேகரித்து குடித்தால் தங்களது உடலும் நலம் பெறும் என்பதை உணர்ந்து கொண்ட தமிழர்கள் அதை செயல்படுத்தியும் வந்திருக்கிறார்கள்.
பின்னாட்களில் உங்கள் வேளாண் பண்ணையில் அமையப்போகும் ஆநிரைக்கூடம், மற்றும் வீட்டிலிருந்து கிடைக்கும் மழைநீரை மணல், கூழாங்கற்கள், கரி போன்றவற்றை உள்ளடக்கிய தொட்டியில் சேகரித்து வருடம் முழுவதும் குடிநீருக்காக பயன்படுத்தலாம். கொஞ்ச காலம் பொறுத்திருங்கள் பூமிக்கு கீழே உள்ள நீரை சொந்தம் கொண்டாட உங்களுக்கு உரிமையில்லை என்கிற செய்தியை இந்திய ஒன்றியம்உங்களுக்கு பரிசாகத்தரும். அப்போது தெரியும் மழைநீரைத்தேக்கி குடிக்க வேண்டிய அவசியம். ஆதலால் இப்போதே அதற்கு தயாராவது சாலச்சிறந்தது.
நிலத்தை சீர் செய்து வேலியமைக்க ஆரம்பிக்கும் போது ஒரு மழை பெய்தால் நீங்கள் ரொம்ப கொடுத்து வைத்தவர்கள் என்று அர்த்தம். காரணம் தோட்டத்திற்கு வந்து செல்லும் மழைநீர் வழித்தடங்களை மிகச்சரியாக கணித்து அகழியும், பண்ணைக்குட்டையும் அமைக்க முடியும்.
அகழி :
வேலியிலிருந்து பத்தடி இடைவெளியில் 2*2 என்கிற அளவில் தோட்டத்தைச்சுற்றிலும் இயந்திரத்தின் துணைகொண்டு குழியெடுக்க வேண்டும்.
உங்களுடைய நிலத்திற்குள் பெய்யும் மழைநீரின் உபரிநீர் பாய்ந்தோடும் வடிகாலாகவும், பின்னாட்களில் அமைக்கப்போகும் உயிர்வேலிக்கு நீராதாரமாகவும், நிலத்தடி நீர்மட்டத்தை தக்கவைப்பதிலும் அகழிக்கு முக்கிய பங்குண்டு.
பண்ணைக்குட்டை:
தோட்டத்தின் மிகமிக பள்ளமான பகுதியில் பண்ணைக்குட்டையை அமைக்க வேண்டும். பத்து ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் சிறு, குறு வேளாண்குடிமக்களுக்கு ‘மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்பு’ திட்டத்தின் கீழ் டிராக்டர் வாங்க, பண்ணைக்குட்டை வெட்ட, நவீன முறையில் ஆடு, மாடு, கோழி, காளாண் வளர்க்க, பூ வேளாண்மை, சொட்டுநீர் பாசனம் அமைக்க, கொடிக்காய்கறிகளுக்கு பந்தல் அமைக்க என்று ஒன்பது வகையான செயல்பாடுகளுக்கு மானியம் வழங்குகிறது அரசு.
அந்தத்திட்டத்தின் கீழ் தங்களிடம் உள்ள பட்டா, சிட்டா, அடங்கல் உள்ளிட்டவைகளைக் கொடுத்து பண்ணைக்குட்டை வெட்டிக்கொள்ள அரசை அனுகலாம். அரசு நிர்வாகம் என்று வந்தபிறகு கையூட்டு பெறாத அரசு இயந்திரம் உலகில் எங்கேனும் உண்டா என்ன? மேசைக்கு மேலேயோ, அல்லது கீழேயோ அது நீங்கள் அவர்களை அனுகும்போது தெரிய வரும். அது தவிர அந்த வட்டாரத்தில் இயங்கும் வேளாண் அதிகாரிக்கும் உங்களுக்கும் இருக்கும் உறவை பசுமையாக பாதுகாப்பதின் மூலம் ‘நூறுநாள் வேலைத்திட்டத்தில்’ இருக்கும் பணியாட்களையும் உங்கள் பண்ணைக்குத்திருப்ப முடியும்.
ஒரு குழந்தை பெற்ற தாயிடம் முத்தத்தை பிச்சை கேட்டுப் பெற முடியாது, எனினும் அழுத பிள்ளைதானே பால் குடிக்கும்?!
பாதை விரியும்…
முந்தைய பகுதிகள்: