இணைய இதழ்இணைய இதழ் 64சிறுகதைகள்

எல்லோருக்கும் பெய்யும் மழை! – ஷாராஜ்

சிறுகதை | வாசகசாலை

ரவு மணி பதினொன்று. பலத்த காற்றுடன் கன மழை பெய்துகொண்டிருக்க, சேலத்திலிருந்து கோவை செல்லும் அந்தப் பேருந்து, கருமத்தம்பட்டி தாண்டி சென்றுகொண்டிருந்தது. பயணிகளில் சிலர் முகக் கவசத்தோடு தூங்கிக்கொண்டிருந்தனர். மழைச் சத்தத்தால் பலருக்கும் தூக்கமில்லை.

பயணிகள் குறைவாக இருந்ததால் முன் பகுதியில் அமர்ந்துகொண்டிருந்த நடத்துனர், இருளார்ந்த இரவு விளக்கு வெளிச்சத்தில் உள்ளே வந்து, வர்ஷிணியிடம், “இன்னும் அஞ்சு நிமுசத்துல அரசூர் வந்துரும்மா” எனத் தெரிவித்துவிட்டு சென்றார். 

பேருந்து அவிநாசியை அடைந்ததுமே அலைபேசி செய்யச் சொல்லியிருந்தார் தாமோதரன். “அவனாசிலருந்து அரசூர் இரவது நிமுசம். நம்மூருலருந்து அரசூர் வாறக்குப் பத்து நிமுசம் கூட ஆகாது. நீ ப்போன் பண்ணுனதும் நான் எந்திரிச்சுக் காரை எடுத்துட்டு, பஸ்ஸு அரசூர் வாறக்கு மிந்தியே வந்து சேந்து வெய்ட் பண்ணீட்டிப்பேன்” என்றிருந்தார். 

அவிநாசி வந்ததிலிலிருந்தே வர்ஷிணி அலைபேசி செய்துகொண்டிருக்கிறாள். ரிங் போய்க்கொண்டே இருக்கிறது; எடுக்கவில்லை. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து, அழைப்பொலி கேட்கவில்லையோ என்னவோ. ஒலியளவைக் குறைத்து வைத்திருப்பதால் உறக்கத்தில் கேட்காமல் இருக்கலாம். அல்லது சைலன்ட் மோடில் போட்டு வைத்துவிட்டாரா? வழக்கமாக அப்படி செய்வது சரி; இப்போது, இவளை வந்து கூட்டிக்கொண்டு போக வேண்டும் என்ற நிலையிலுமா அவ்வாறு செய்திருக்கிறார்? அல்லது மழைச் சத்தத்தால் கேட்கவில்லையா?

அவரது மனைவி, மகன், மகள் ஆகியோரிடமும் அலைபேசி இருக்கவே செய்யும். ஆனால், அவர்களின் எண் இவளிடம் இல்லை. 

தாமோதரன் தூரத்து உறவினர். ஊரும் தொலை தூரம். பணக்காரர்கள் வேறு. அவ்வளவாகப் போக்கு வரவு இல்லை. பல வருட இடைவெளிகளில், திருமணம், மரணம் போன்ற முக்கியமான குடும்ப காரியங்களின்போது மட்டும் வருவது – போவது இருக்கும். அதுவும் இங்கிருந்து தாமோதரன் மட்டுமே வருவாரேயன்றி, குடும்பத்தார் யாரும் வர மாட்டார்கள். அதிலும் அவரது மனைவி, இவர்களைப் போன்ற ஏழை உறவினர்களுடன் பழகவும் மாட்டாள்; மதிக்கவும் மாட்டாள். மகன், மகள் ஆகியோரும், பார்த்தால் சம்பிரதாயத்துக்குக் குசலம் விசாரித்துவிட்டுப் போய்விடுவார்களே தவிர, அணுக்கம் காட்ட மாட்டார்கள். 

இக்கட்டான சூழல், அத்தியாவசியமான தேவை என்பதால்தான், இன்று இரவில் மட்டும் அவரது வீட்டில் தங்குவதற்கு தாமோதரனிடம் உதவி கேட்டு, அவரும் சம்மதித்திருந்தார். ஆனால், இப்போது அழைப்பை எடுக்கவில்லையே! என்ன செய்வது? 

வர்ஷிணிக்குப் பதற்றமாகியது. 

இந் நேரத்தில் அரசூரில் இறங்கிக் காத்திருக்கவோ, அங்கிருந்து பக்கவாட்டில் ஆறு கி.மீ. தொலைவிலான கிராமத்தில் உள்ள தாமோதரன் வீட்டுக்குத் தானே செல்லவோ முடியாது. பகல் நேரமாக இருந்தாலாவது தேவலாம். அல்லது, இரவு எனினும் ஆண் துணையாவது இருக்க வேண்டும். இந்த நள்ளிரவில் ஓர் இளம் பெண், தனியாக, அதுவும் அந்நிய ஊரில், யாருமற்ற பொது இடத்தில் எப்படிக் காத்திருக்க முடியும்? தாமோதரன் அலைபேசியை எடுக்காததினால், இவளை அழைத்துச் செல்ல வருவார் என்பதற்கும் இப்போது எந்த உத்தரவாதமும் இல்லையே! 

என்ன செய்வது என்று தெரியாமல், வேறு வழியும் இல்லாமல், ஒருவேளை அவருக்கு விழிப்பு வந்து எடுக்கவோ, வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு அழைப்புச் சத்தம் கேட்டு, அவர்களாவது வந்து அலைபேசியை எடுக்கவோ கூடும் என்ற நம்பிக்கையில், பதற்றம், கவலை, ஏமாற்றம் ஆகிய உணர்ச்சிக் கலவையோடு, மீண்டும் மீண்டும் பித்தானை அழுத்தி, அழைப்பு விடுத்துக்கொண்டே இருந்தாள். 

வர்ஷிணிக்கு சொந்த ஊர் (பவானி) அம்மாபேட்டை. வளர்ந்தது, படித்தது, நெருங்கிய சொந்த பந்தங்கள் இருப்பது யாவும் உள்ளூர், சேலம், பவானி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில்தான். கோவை, திருப்பூர் ஆகிய ஊர்களுக்கும், தாமோதரன் வீட்டுக்கும் சில தடவை வந்திருந்தாலும், இங்கே அவ்வளவாகப் பழக்கமில்லை. 

வர்ஷிணி குடும்பத்தில் தாய், அவள், தங்கை ஆகிய மூன்று பேர் மட்டுமே. இவளின் பள்ளிக் காலத்திலேயே தந்தை இறந்துவிட, தாய்தான் கூலி வேலை செய்து, கஷ்டப்பட்டு இவர்களைப் படிக்க வைத்தாள். கல்லூரி முடித்ததுமே வர்ஷிணிக்கு சென்னையில் வேலை கிடைத்திருந்தது. சில மாதங்களிலேயே கொரோனா காரணமான ஆட்குறைப்பில் வேலை போய், ஊர் திரும்பினாள். கொரோனாவால் அம்மாவுக்கும் சரிவர வேலை இல்லை. மீண்டும் கஷ்ட நிலை, சாப்பாடுக்கே பாடு. சிறிது காலம் சும்மா இருந்துவிட்டு, பிறகு குறைந்த சம்பளத்தில், இவளது படிப்புக்கு சம்மந்தமற்ற தனியார் பணியில் சேர்ந்தாள். அங்கே வேலைப் பளுவும், கெடுபிடிகளும் அதிகம். எனினும், அந்த சம்பளத்தில்தான் குடும்பம் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதால் பணிக் கஷ்டங்களைத் தாங்கிக்கொண்டிருக்கிறாள்.

பெருந்தொற்று தாக்கம் குறைந்து, பொது முடக்கங்கள் விலகியுள்ள தற்போதைய நிலையில், கேரளா, பாலக்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில், இவளது படிப்பு மற்றும் தகுதிக்கு ஏற்ற, நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைக்கு வாய்ப்பு. நாளை காலையில் நேர்முகத் தேர்வு. எவ்வளவுதான் நேரத்தில் புறப்பட்டாலும், ஊரிலிருந்து உரிய நேரத்துக்கு சென்று சேர்வது சிரமம். அதனால்தான் இன்று இங்கே வந்து இரவில் தங்கிவிட்டு, காலையில் பயணம் தொடர ஏற்பாடாகியிருந்தது. 

தற்போதைய பணியிடத்தின் கெடுபிடி காரணமாக, நேரத்திலேயே கிளம்ப முடியவில்லை. நேர்முகத் தேர்வுக்கு என்று சொன்னால், அந்த வேலை கிடைக்காத பட்சத்தில், பிற்பாடு இந்தப் பணியிடத்தில் மேலாளர் குத்தல் பேச்சுகளால் தொந்தரவு செய்யக் கூடும் என்று, உறவினர் வீட்டுத் திருமணம் என்று சொல்லிதான் நாளைக்கு விடுப்பே எடுத்திருந்தாள். பணி முடிந்து வீட்டுக்குக் கூட போகாமல், கையோடு கொண்டு சென்றிருந்த மாற்று உடை, சான்றிதழ்கள் ஆகியவற்றுடன், அப்படியே பேருந்து பிடித்து சேலம் வந்து, அங்கிருந்து இந்தப் பேருந்தைப் பிடித்திருந்தாள். 

அரசூரை நெருங்கும் முன்பே நடத்துநர் முன் பகுதியில் பிரகாச விளக்குப் போட்டுக்கொண்டு, வர்ஷிணியை வருமாறு சைகை காட்டினார். அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பையையும் குடையையும் எடுத்துக்கொண்டு, தயக்கத்தோடு எழுந்து சென்றாள். அவளது முகம் கலவரமாகக் காணப்பட்டது. 

“ஏம்மா,… என்னாச்சு? ஒரு மாதிரி… பயத்தோட இருக்கற மாதிரி தெரியுதே…!” நடத்துனர் கேட்டார்.

“கார்ல வந்து பிக்கப் பண்ணிக்கறேன்னு சொன்ன சொந்தக்கார்ரு, இப்ப ஃபோனை எடுக்கலீங்ணா. சேலத்துல பஸ் பொறப்பட்டதுமே தெரிவிச்சிருந்தேன். அதை வெச்சு, இப்ப வந்துருவாரா… இல்ல தூங்கிட்டாரா என்னன்னு தெரியல. அதான்….” என்றாள் பதற்றத்தோடு. ஐம்பது வயதுக்கு மேற்பட்டவரான ஓட்டுநரும் அதைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தார். 

“அப்புடியா? செரி, பதட்டப்படாத. ஏதாச்சு ஏற்பாடு பண்ணலாம்” என்ற நடத்துநர், ஓட்டுநரிடம் சென்று பேச, அவரும் ஆமோதிப்பாகத் தலையாட்டிக்கொண்டார்.

அரசூரில் பேருந்து நிறுத்த நிழற்குடையருகே பேருந்து நின்றது மட்டுமன்றி, ஓட்டுநர் எஞ்சினையும் அணைத்தார். விழித்திருந்த பயணிகள் என்னவோ ஏதோ என்று பார்க்க, நடத்துநர் எழுந்து, உள் விளக்குகளையும் போட்டுக்கொண்டு பேருந்தின் மத்தியப் பகுதிக்கு சென்று நின்றுகொண்டார். வர்ஷிணியைக் காட்டி, பயணிகளிடம் நிலவரத்தைத் தெரிவித்த அவர், “வயசுப் பொண்ணு. தனியா இருக்குது. இந்த அர்த்த ராத்தில, யாரும் இல்லாத எடத்துல, தனியா எறக்கிவிட்டுட்டுப் போறது நல்லதில்ல. அவுங்க சொந்தக்கார்ரு வர்ற வரைக்கும், ஒரு பத்து நிமுசம் பஸ்ஸை நிப்பாட்டி வெய்ட் பண்ணிப் பாத்துட்டு, அப்பறம் போலாம்னு இருக்கறம். உங்குளுக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லையே!” என்றார். 

இல்லை, இல்லை என்று பலரும் தெரிவிக்க, “மனிதாபிமானத்தோட கண்டக்டரும், ட்ரைவருமே இதுக்குத் தயாருங்கும்போது, பேசஞ்சருக நாங்க வாண்டாம்னா சொல்லப்போறம்!” என்றார் குரங்குக் குல்லா அணிந்த முதியவர்.

நடத்துனர் திரும்பி, உள் பகுதி விளக்குகளை மீண்டும் அணைத்தார். 

“செரி, நாம போயி ஷெல்டர்ல வெய்ட் பண்ணலாம். உங்க சொந்தக்கார்ரு வந்தா ஈஸியாத் தெரியும்” என ஓட்டுநர் தன் இருக்கையருகே வைத்திருந்த குடையை எடுத்துக்கொண்டு, இந்தப் பக்கமாகவே வந்து முன் படிக்கட்டு வழியில் இறங்க, அக் குடையில் நடத்துநரும் சேர்ந்துகொண்டார். 

மழை இன்னும் பெய்துகொண்டிருக்க, அவர்களும், வர்ஷிணியும் நிழற்குடையை அடைந்தனர். 

“கோடை மளயா இருந்தா இடி – மின்னலும் இருக்கும். கொங்க மளைங்கறதுனால அந்தப் பாடு இல்ல. அதனாலதான் கரண்டும் போகாமிருக்குது” என அக்கம் பக்கத்து விளக்கு வெளிச்சங்களைப் பார்த்துக்கொண்டே, ஓட்டுநர் பீடி பற்ற வைத்துக்கொண்டார். 

வர்ஷிணி தொடர்ந்து அலைபேசியில் முயன்றுகொண்டிருந்தாள். எடுக்கப்படவே இல்லை. கால் மணி நேரமாகியும் தாமோதரன் வரவும் இல்லை. 

நடத்துநர் குடையுடன் பேருந்துக்குள் சென்று, “இன்னும் ஒரு தகவலும் இல்ல. இன்னொரு கால் மணி நேரம் பாக்கலாமா?” என்று கேட்டார். 

“அரை மணி நேரம், ஒரு மணி நேரமே ஆனாலும் பாக்கலாம் தம்பி. இந்த அர்த்த ராத்திரில, கொட்டற மளைல, ஒரு வயிசுப் புள்ளைய எப்புடி ஆபத்துல உட்டுட்டுப் போறது?” என்றனர் பலரும்.

“ரயில்ல போனா ஒவ்வொருக்காலைக்கு ஒரு மணி நேரம், ரெண்டு மணி நேரம் தாமதமாகறதில்லையா? அப்புடி நெனைச்சுக்கறம்” என்றார் ஒருவர்

பச்சை சேலைப் பெண்மணி, “கரெக்ட் டயத்துக்கு கோயமுத்தூரு போனாலும் இந்த ராத்திரில நாங்க என்ன பண்ணப் போறம்? ஊடு போயித் தூங்கறதுதான! அத இங்கயே செஞ்சுட்டாப் போச்சு” என்றாள். 

ஒரு வழியாக தாமோதரன் அழைப்பை எடுத்தார். வர்ஷிணிக்கு போன உயிர் திரும்பி வந்தது போல் இருந்தது. “ரொம்ப நேரமாக் கூப்புட்டுட்டிருக்கறயா? அசந்து தூங்கீட்டனாட்டிருக்குது. மளச் சத்தம் வேற. ரிங் டோன் வால்யூவும் கம்மியா இருந்ததுனால கேக்குல. உன்னைக் கூப்படறக்கு வரோணும்கறதுனால, அதுக்கு சவுரீமா இருக்குட்டும்னு, ஹால்லயே சோபாவுல படுத்துட்டிருந்தேன். அதனால சம்சாரத்துக்கும் கேக்க வளியில்ல. பையனும் புள்ளையும் அவீகவீக ரூம்புல தூங்கீட்டிருப்பாங்களாச்சு. அவுங்குளுக்கும் கேட்டிருக்காது. இப்பத்தான் எனக்கு முளிப்பு வந்து, ரிங் சத்தமும் கேட்டு எந்திரிச்சேன்” தூக்கக் கலக்கக் குரலில் தன்னிலை விளக்கமளித்தவர், “பத்தே நிமுசத்துல வந்தர்றேன்” என்றார்.

ஆனாலும், இருபது நிமிடங்கள் கழித்தே வந்து சேர்ந்தார். முகத்தில் உறக்கக் கலக்கம் அப்பட்டமாகவே தெரிந்தது.

வர்ஷிணி, “ஓரு நிமுஷம் மாமா” என அவரிடம் சொல்லிக்கொண்டு, பேருந்தில் ஏறி, “இவ்வளவு நேரம் எனக்காக நீங்க எல்லாரும் பொறுமையாக் காத்திருந்ததுக்கு நன்றி!” எனக் கை கூப்பினாள். 

“இதுக்கெலாம் எதுக்கும்மா நன்றி?” என குரங்குக் குல்லா முதியவர் சொல்ல, பச்சை சேலைப் பெண்மணி முகக் கவசத்தை விலக்கி, “நீ பத்தரமா ஊடு போயி சேந்தீன்னா, அதுவே எங்குளுக்குப் போதும்” என்றார். நடத்துனருக்கும், ஓட்டுனருக்கும் அதே போல நன்றி தெரிவிக்க, “ஒரு வகைல இதுவும் எங்க கடமைதாம்மா!” என்றார் நடத்துனர். 

இருவரிடமும் அவள் விடைபெற்றுக்கொண்டு காரில் ஏற, தாமோதரன் காரைக் கிளப்பினார். 

நடத்துனர், ஓட்டுனர் ஆகியோரிடமாவது, சம்பிரதாயத்துக்காகவாவது, நன்றி என்று ஒரு வார்த்தை கூட அவர் சொல்லாதது அவளுக்கு ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளித்தது. அதற்குக் காரணம் அவரது பணக்கார அகந்தை மட்டுமா, இவள் விரும்பத் தகாத ஏழை உறவு என்பதும்தானா என எண்ணிக்கொண்டாள். 

ஓரிரு நிமிடங்கள் கழிந்து கார் அத்துவானக் காடாக உள்ள கிராமத்து மண் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையோரம் தனிமையாக உள்ள ஒரு பழைய, ஓட்டு வீட்டிலிருந்து ஆண், பெண் மற்றும் குழந்தைகளின் அலறல்களும், வீறிட்ட அழுகையும், கடவுளிடம் முறையிடுகிற அபயக் குரல்களும் கேட்டன. தாமோதரனுக்கு அது காதில் விழுந்ததா இல்லையா என்று தெரியவில்லை. 

“மாமா,… காரை நிறுத்துங்க. அந்த வீட்டுல ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்குதாட்ட இருக்குது. பக்கத்துல வேற வீடுகளும் இல்ல. என்ன, ஏதுன்னு பாத்துட்டுப் போயறலாம்” என்றாள். 

“அது யாரோ எவுரோ, அங்க என்ன பிரச்சனையோ? நமக்கெதுக்கு அதெல்லாம்?” என்றபடியே நிறுத்தாமல் சென்றுகொண்டிருந்தார். 

“மாமா,… தயவு செஞ்சு நிறுத்துங்க. நானாவது என்ன ஏதுன்னு பாத்துட்டு வந்தர்றேன்.” 

வேண்டா வெறுப்பாக நிறுத்தினார். அதற்குள் அந்த வீட்டை விட்டு கொஞ்ச தூரம் கார் போய்விட்டது. வர்ஷிணி குடையுடன் இறங்கி, அலைபேசியில் விளக்கை எரிய வைத்துக்கொண்டு, இருளில், சேறும் சகதியுமாக உள்ள வழியில் நடந்து சென்றாள். 

பழைய காலத்து செங்கல் சுவர் வீடு அது. ஏற்கனவே சிதிலமடைந்திருந்தது, இப்போதைய கன மழையால் ஒரு புறச் சுவர் இடிந்து, அந்தப் பகுதிக் கூரையும் விழுந்துவிட்டது. உறங்கிக்கொண்டிருந்த கணவனுக்குக் காலிலும், எட்டு வயது மகளுக்குத் தலையிலும் பலத்த காயங்கள். மனைவிக்கும் ஆங்காங்கே அடி. ஐந்து வயது மகனுக்கு மட்டும் அடி எதுவும் இல்லை. ஆனால், அவன் பயத்தாலும், குடும்பத்தாருக்கு அடி பட்டிருப்பதைக் கண்டு வருந்தியும், ஓலமிட்டு அழுதுகொண்டிருந்தான். மகளும் கணவனும் வலியால் துடித்துக்கொண்டிருக்க, மனைவி தனது காயங்களையும் வலிகளையும் பொருட்படுத்தாமல், கணவனுக்கும் மகளுக்கும் பழந்துணியைக் கிழித்து ரத்தத்தைத் துடைத்து, காயங்களுக்குக் கட்டுப் போட்டுக் கொண்டிருந்தாள். 

“திக்கத்தவங்களுக்கு தெய்வந்தான் தொணைம்பாங்க. நம்முளுக்கு அந்த தெய்வமும் தொணையில்லாமப் போயிருச்சே…!” என அவள் அரற்றிக்கொண்டிருக்க, “நீ என்னைய உடு. புள்ளையப் பாரு” என சொல்லிக்கொண்டிருந்தான் கணவன். 

வர்ஷிணி அவர்கள் வீட்டு வாசலில் நின்று குரல் கொடுத்ததுமே, அவர்களுக்கு வியப்பு. “இந்த நேரத்துல இங்க யாரு…?” என்றபடி, அடிபட்ட காலை விந்திக்கொண்டே மனைவி வர, சிறுவனும் உடன் வந்தான். வர்ஷிணியைக் கண்டு அவள் அதிசயிக்க, கதறலும் அபயக் குரலும் கேட்டு வந்ததைத் தெரிவித்தாள். 

“ஏங்க கொரல் கேட்டு தெய்வமே வந்த மாற இருக்குது! வா கண்ணு, வா, வா…!” பிடிமானம் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியோடு அவளை அழைத்தாள் அந்தப் பெண். 

வர்ஷிணி உள்ளே சென்றாள். அரதப் பழையதும், கிழிந்ததும், ஓட்டுப் போட்டதுமான ஆடைகளை அணிந்திருக்கும் அவர்களைப் பார்த்தாலே வறுமையின் கொடும் பிடியில் இருப்பவர்கள் என்பது தெரிந்துவிடும். சிதைவுகளும் இடிபாடுகளும் கொண்ட அந்த வீடும், மரணத்தின் கூடாரம் மாதிரித்தான் இருந்தது. 

முதல் உதவிக்கு மருந்தாக அந்த வீட்டில் எந்த மருந்தும் இல்லை. மகளுக்குத் தலையில் பலத்த அடி. கட்டுப் போட்டிருந்ததை மீறி ரத்தம் கசிந்துகொண்டே இருந்தது. அவள் மெல்ல மெல்ல சோர்ந்துகொண்டிருந்தாள். உயிருக்கு ஆபத்தான நிலை என்பது புரிந்தது. 

வெளியே வாசலுக்கு அப்பால் கார் ஹாரன் ஒலித்தது. வர்ஷிணி விரைந்து சென்றாள். தாமோதரன் ரிவர்ஸில் வந்து சாலையில் காரை நிறுத்தியிருந்தார். 

அவரிடம் நிலவரத்தைத் தெரிவித்தவள், “மாமா… அந்தப் பொண்ணை உடனடியா ஹாஸ்பிட்டல்ல சேத்தியாகணும். அரசூர்லயோ, கருமத்தம்பட்டிலயோ, இந்த நேரத்துக்கு டாக்டர்ஸ் இருக்கற ஹாஸ்பிட்டல் இருக்கா? அப்படி இல்லேன்னா, எங்க இருக்குமோ, அங்க போலாம். புருசன் – பொண்டாட்டி ரெண்டு பேருக்கும் பலமா அடி பட்டிருக்குது. அதனால, நீங்க கொஞ்சம் எறங்கி வந்தீங்கன்னா, நாம ரெண்டு பேருமா சேந்து அந்தப் பொண்ணத் தூக்கிட்டு வந்து கார்ல உக்கார வெச்சர்லாம்” என்றாள். 

“இரு, இரு! என்ன, நீ பாட்டுக்குப் பேசீட்டே போற? நேரமாச்சு, சீக்கிரம் வான்னு உன்னைக் கூப்படத்தான் ரிவர்ஸ்ல வந்தேன். கண்டவங்களையும் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போறக்கு இதென்ன ஆம்புலன்ஸா? நான் என்ன அதோட ட்ரைவரா? அதுவும் இந்த அர்த்த ராத்திரில – இந்த அடை மளைல! அதெல்லாம் நம்மனால முடியாது. போனாப் போச்சாது, நம்ம தூரத்து சொந்தமாச்சேன்னு, தூக்கத்தைக் கெடுத்துட்டு வந்து உன்னைய ஊட்டுக்குக் கூட்டீட்டுப் போறதே பெருசு. வா, வா! வந்து வண்டில ஏறு. அதுக என்னுமோ பண்ணித் தொலையட்டும்.” 

வர்ஷிணிக்கு அவர் தன்னைப் பற்றிச் சொன்னது மிகுந்த அவமதிப்பாக இருந்தது. எனினும், அதைப் பொருட்படுத்தாமல், “மாமா,… அந்தப் பொண்ணு ரொம்ப ஆபத்துல இருக்கறா. இங்க உதவிக்குப் பக்கத்துல யாரும் இல்ல. உதவி கேட்டு இப்ப அந்த ஆளாலயோ, பொம்பளையாலயோ எங்கயும் நடந்து போகவும் முடியாது. ப்ளீஸ் மாமா…” என்றாள். 

“நீ இப்ப வர்றயா இல்லையா?” 

அவரிடம் பேசிப் பிரயோஜனம் இல்லை என்பது உறுதியாகிவிட்டது. “என்னோட பேக்கை எடுத்துக்கறேன்” என்றுவிட்டு, கதவைத் திறந்து தன் பையை எடுத்துக்கொண்டாள். 

சேற்று நீரையும் சகதியையும் அவள் மீது தெறித்தபடி கார் விரைந்துவிட்டது. 

வர்ஷிணி அந்த வீட்டுக்குத் திரும்பி, 108-க்கு அலைபேசி செய்தாள். 

மறு நாள் முற்பகலில் மருத்துவமனையிலிருந்து அந்தக் குடும்பத்தாரிடம் அவள் விடைபெறும்போது, “நீ யாரோ – நாங்க யாரோ. அப்புடி இருந்தும், அந்த நேரத்துல, எதுக்காகவோ அந்தப் பக்கம் வந்துட்டிருந்தவ, சத்தம் கேட்டு எங்குளுக்கு உதவி செஞ்சு, எங்க மக உசுரைக் காப்பாத்திட்ட. கடவுள்தான் உன்னைய அனுப்பி வெச்சிருக்கணும்” என நெகிழ்ந்தான் அந்த ஏழைத் தகப்பன். 

“இருந்தாலும் இதனால உனக்குக் கெடைக்க வேண்டிய நல்ல வேலை கெடைக்காமப் போயிருச்சே கண்ணு…” என வருந்தினாள் அந்தத் தாய்.

ஆம், அது இவளுக்கு இழப்புதான். ஒருவேளை அந்த வேலை கிடைத்திருந்தால், குடும்ப கஷ்டங்களும், இவளது பணிக் கஷ்டங்களும் ஒருங்கே தீர வழி ஏற்பட்டிருக்கும். இருப்பினும் அதை அவள் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. தற்போதைய வேலையில் தொடர்ந்து சக்கையாகப் பிழிந்து எடுக்கப்படப்போவதும், மேலாளரின் கெடுபிடிகள் மற்றும் ஏச்சுகளும் நினைவில் வந்து அச்சுறுத்தின. அது என்ன புதுசா என எண்ணிக்கொண்டாள். 

“இன்ட்டர்வியூவுக்குப் போக முடியல; அவ்வளவுதானுங்க்கா. மத்தபடி, அந்த வேலை எனக்கே கெடைச்சிருக்கும்னு உறுதியில்ல. அதுவுமில்லாம, இந்த வேலை இல்லன்னா, வேற ஒண்ணு. இருக்கற வேலையே போனாலும், வேற வேலை சம்பாதிச்சுக்கலாம். ஆனா, மானமோ, உயிரோ போச்சுன்னா அப்படியா?” என்றாள் அந்தப் பெண்ணிடம். 

“உன்னை மாதிரி நல்லவங்க எங்கியாச்சும் இருக்கறதுனாலதான் கண்ணு நாட்டுல மள பேயுது” என்றாள் அவள்.

அந்தத் தம்பதியினரிடமும், குழந்தைகளிடமும் வர்ஷிணி விடைபெற்றுக்கொண்டாள். ஒரு பேருந்து முழுக்க இருந்த நல்லவர்களை நினைத்துக்கொண்டே மருத்துவமனையை விட்டு வெளியே வருகையிலும் மழை பெய்துகொண்டிருந்தது. 

(தனுஷ்கோடி ராமசாமி நினைவு சிறுகதைப் போட்டி – 2022ல் ஆறுதல் பரிசு பெற்றது).

********

shahrajscape@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button