
ஹரியானாவில் கிடைத்த உறவுகள்
பயணங்களில் பல வகைகள் உண்டு. பல வருடங்களாக தேசாந்திரியாக இந்தியா முழுவதும் சுற்றிக் கொண்டு வருகிறேன். என்னுடைய மிகப்பெரிய ஆசான் என்னுடைய அனுபவம் மட்டுமே. அப்படி என்னுடைய பயண அனுபவங்களை, சில நிகழ்வுகளைப் பகிர்கிறேன். அதற்கு முன்பாக, ‘பயணம்’ பற்றி சில தகவல்களைக் கூற விரும்புகிறேன். என்னைப் போல திட்டமிடாமல் தேசாந்திரியாகச் சுற்றி, அல்லது ஒரு நோக்கத்துக்காக நெடுந்தூரம் போவதுதான் பயணம். என்னைப் போல பயணம் செய்பவர்கள் பயணப்படுவதை எப்போதும் உலகத்திற்கு தெரிவிக்கமாட்டார்கள். “லாங் வீக்என்ட் ஐ அனுபவிப்பதற்காக இணையதளத்தில் முன்கூட்டியே பெரும் வசதியாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டுச் செல்வதற்குப் பெயர், ‘சுற்றுலா’ (Tour/Trip).
சுற்றுலா என்பது உறவுகளும் உணவுகளும் சம்பந்தப்பட்டது. தேசாந்திரி பயணம் (Journey/Voyage) என்பது உணர்வுகள் சம்பந்தப்பட்டது. எடுத்துக்காட்டிற்கு என்னைப் போல எப்பொழுதும் ஒரு புதிய இடத்திற்குப் போய் அங்கே சில மாதங்கள் தங்கியிருந்து, அந்நிலப்பரப்பு, மக்கள், மொழி, உணவு, கலாச்சாரம் அத்தனையையும் ஓரளவு கற்றுக் கொள்வதுதான் பயணம். அப்படி என்னுடைய பயணம் எப்போதுமே என்னை செழுமையாக்குகின்றது, முழுமையாக்குகின்றது, செறிவான மனிதனாக்குகிறது மற்றும் பூமியைக் கடந்து பிரபஞ்சத்தையே கண்டடைய வைக்கிறது. எனது வாழ்வின் மிக முக்கியமான பயணமான, ’ஹிரியானா பயணம்’ பற்றி இக்கட்டுரையின் மூலம் பகிர்கிறேன்.

ஹரியானாவில், ‘Faridabad’ ல் சாலை ஓரமாக நண்பகல் 12மணி அளவில் பசியின் உச்சத்தில் சோர்வோடு நடந்து கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு சிறிய பையன் அவன் மொழியில் இளநீரை விற்றுக் கொண்டிருந்தான். பிறகு சாப்பிடலாம், முதலில் ஒரு இளநீர் குடிக்கலாம் என அவனை நோக்கிச் சென்றேன். அங்கே ஒரு சிலர் ஒரு இளநீரோடு வாங்கிக் கிளம்பிவிட்டனர். நான் அவன் வைத்திருந்த அனைத்து இளநீரையும் சீவி அதன் தண்ணீரை நான் வைத்திருந்த எனது பாட்டிலில் அடைத்துக் கொண்டேன். மேலும் அந்தத் தேங்காய்களை ஒரு டப்பாவில் வைத்துக் கொண்டேன். நான் போகும் வழியில் யாராவது சாலையோரம் இருப்பவர்கள் சாப்பிடாமல் இருந்தால் அவர்களுக்குக் கொடுக்கலாம் என்று நினைத்தேன். அப்படியே நடந்தது. நான் ஏன் அனைத்து இளநீரையும் வாங்குகிறேன் என அந்த சின்னப் பையனும் மிகவும் அதிர்ச்சியாக என்னையே கூர்ந்து பார்த்தான், பிறகு அவனிடம் ஒன்று சொன்னேன், “ஒன்றும் இல்லை, நீ வைத்திருக்கும் அனைத்தையும் எனக்குக் கொடு, ஏன் படிக்காமல் இருக்கிறாய்? போய் படி, என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன்” எனக் கூறினேன். பிறகு அடுத்த சில மணித்துளிகளில் அக்கடையில் இளநீர் குடிக்க ஒரு வெள்ளைக்காரர் ஒருவர் வந்தார். Home Care ஒன்று வைத்துள்ளதாகக் கூறினார். அப்பா-அம்மா இல்லாத குழந்தைகளுக்கு படிப்பு, தங்கும் வசதி எல்லாம் செய்து கொடுப்பதாகவும் கூறினார். மறு நொடியிலேயே இந்தப் பையனைப் பற்றி எடுத்துக் கூறினேன். உடனே சம்மதித்தார். அந்த ஒரு நொடியிலேயே அவன் வாழ்க்கை மாறியது. இறுதியில் அவன் என்னைக் கட்டியணைத்துக் கொண்டு அழுது முத்தமிட்டுச் சொன்னான், “ஒரு இளநீரை வாங்குவதே பெரிது, நீங்கள் நான் வைத்திருந்த அனைத்தையும் வாங்கி எனது பசியைப் போக்கிவிட்டீர்கள் மற்றும் எனக்கு வாழ்வு கொடுத்துள்ளீர்கள். I love you my Queen”. அவனைப் பார்த்த நிமிடத்தலே ஏதோ எனக்குள் தோன்றியது, அவனுக்கு ஏதாவது செய்திட வேண்டும் என்று. அப்படி ஒரு பாவப்பட்ட தோற்றம். அப்பா-அம்மா யாரும் இல்லை அவனுக்கு. வேறு யாரிடமோ இளநீர் வாங்கிக்கொண்டு இந்த இளநீரை விற்றுக் கிடைக்கிற காசை வைத்து வாழ்வதுதான் அவனது அன்றாட வாழ்க்கை. சில நேரம் இளநீர் விற்காமலும் போகும் எனச் சொன்னான் என்னிடம். பிறகு, ‘டாடா’ சொல்லிக் கிளம்பினேன்.
அடுத்ததாக நான் போகும் வழியில் எனது கண் முன்னே ஒரு மிகப்பெரிய துணிக்கடை ஒன்று இருந்தது. அதற்குள் நுழைந்தேன். பிரமாண்டமான துணிக்கடை. ஆடம்பரமாக ஆடைகளை அணிந்துகொண்டு சாமானியர்கள் அங்கும் இங்கும் நடந்தேறிய காட்சிகள் ஆச்சர்யமாக இருந்தன. ஆனால் அங்கே நான் எனக்கு துணி வாங்குவதற்காகச் செல்லவில்லை.
கடையைச் சுற்றிப் பார்த்துக்கொண்டே போகும்போது, ஓரே ஒரு இடத்தில் மட்டும் இருளாக இருந்தது. யாரிடமும் கேட்காமலே அங்கே சென்றேன். நான் எப்போதும் இருளில் வாழ்பவள். அதனால் இருள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு சின்ன அறை. அந்த அறை முழுவதும் சி்ன்னச் சின்ன பெண்கள். தங்கள் அன்றாட பிழைப்பிற்காக துணிகளை நெய்து வேலை செய்கிறவர்கள். அதில் ஒரு பெண் மட்டும் என்னைப் பார்த்துச் சிரித்தாள். அவள் அருகில் சென்று கண்ணத்தைக் கிள்ளினேன். முகத்தில் அப்படி ஒரு நாணம் கலந்த ஒரு புன்னகை. ஹிந்தியில் உரையாடினோம். என்ன வயது எனக் கேட்டேன். “எனக்கு வயது 13. அப்பா குடித்தே இறந்துவிட்டார். அம்மா உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார். எனது பாட்டியுடன் இருக்கிறேன், அவருக்கும் வயதாகிவிட்டது, நான் வேலைக்குப் போனால்தான் அவர் உயிரோடு இருக்க முடியும்” எனக் கூறினார். அந்தப் பெண் தனது கைகளை மறைத்துக் கொண்டே இருந்தாள். துணி தைக்கும் கைகள் எல்லாம் புண்ணாகியிருந்தன. “மருந்து போடலாமல் ஏன் இருக்கிறீர்கள்?” எனக் கேட்டேன். “மருந்து வாங்கினால் எனக்கும் எனது பாட்டிக்கும் ஒருவேளை சாப்பாட்டிற்கான பணம் போய்விடும்” என்றாள். “சற்று இருங்கள், வருகிறேன்” எனச் சொல்லி, கடைக்கு வெளியே இருந்த மருந்தகத்தில் மருந்துகளை வாங்கிக்கொண்டு வந்து அவளிடம் கொடுத்தேன். எனது கையைப் பிடித்து வாய்விட்டுச் சத்தமிட்டு அழுதாள் அந்தச் சிறிய பெண். அவளைப் போலவே அங்கே நிறைய பெண்கள், சிறுமிகள், வயதானவர்கள் இந்த வேலையைச் செய்து கொண்டிருந்தனர். இக்கடையில் தினமும் அல்ல, ஒவ்வொரு நொடியும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து போகின்றனர். ஆனால் இங்கே ஒருவரும் வந்ததில்லை. எங்களைப் பார்த்ததில்லை. ஒருவேளை எங்களை வெளியே யாரேனும் பார்த்தால் கூட முகம் சுழித்து ஏளனமாகத்தான் பார்ப்பார்கள்” எனக் கூறினார்கள். அப்படி அந்த அறைகளில் வேலை செய்யும் ஒவ்வொருவர்களின் கதைகளைக் கேட்டுக் கொண்டே நகர்ந்து சென்றேன். இறுதியில் ஒரு அக்கா திடீரென எனது கையைப் பிடித்து அவரது அருகில் இழுத்து அவர் முதுகையும் உடம்பில் உள்ள சிறு காயங்களையும் காண்பித்து அழுதார். எனது மணம் நொறுங்கியது. பகலில் துணிகளை நெய்வது, இரவில் பாலியல் தொழில் என மேலும் பல பிரச்சனைகளை அடுக்கிக்கொண்டே போனார்.

அங்கே இருந்த ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் நினைத்து எனது மணம் கனத்துப் போனது. பிறகு எல்லோருமே ஒன்று சொன்னார்கள், “இங்கே இருக்கும் மனிதர்கள் தங்களை மிகவும் ஆடம்பரமாகக் காண்பித்துக்கொள்ள நாங்கள் நெய்த துணிகளை அணிகிறார்கள். ஆனால் எங்கள் வாழ்வில் நாங்கள் ஒருநாளும் நல்ல ஆடைகளை அணிந்ததே இல்லை”. அங்கே இருப்பவர்களில் என்னுடன் முதலில் பேசிய, ‘ஆஷா’ வின் வாழ்க்கை மிகவும் மோசமான நிலையில் இருப்பதை என்னால் உணர முடிந்தது. “ஒருநாள் கூட நான் இந்த மிகப்பெரிய கடையை முழுதாகப் பார்த்ததே இல்லை” எனக் கூறினாள். பிறகு அவளை கடைக்குள் அழைத்துச் சென்றேன். அங்கே இருப்பவர்கள் அவர்களது, ‘LuxuryPeople’ என்ற மிகப்பெரிய மட்டமான அடையாளத்தோடும் அதிகாரத்தோடும் என்னைத் திட்டீனார்கள், “ஏன் இவளை அழைத்துக் கொண்டு வருகிறீர்கள்?” என்று… நான் அவர்களிடம் ஒன்றே ஒன்றுதான் சொன்னேன், “She is my sister, u don’t have rights to say anything about her, I just want to buy some dress for her that’s நor else I will call the Police” என்றுச் சொன்னேன்.பிறகு அவளுக்கு என்னால் முடிந்த அளவிற்கு ஆடைகளை வாங்கிக் கொடுத்தேன். அவள் விழிகளில் பரிதாபத்தை என்னால் உணர முடிந்தது. பிறகு அவளுக்கு ஆடையும் கிடைத்தது. அந்த அறையில் இருக்கும் எல்லோரிடமும் விடைபெற்றுக் கிளம்பினேன். நான் அங்கிருந்து கிளம்பும்போது ஒருத்தி மட்டும் மிகுந்த கவலையோடு என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் வேறு யாருமல்ல, ஆஷாதான். இறுதியாக, “நீங்கள் யார், எனக்காக ஏன் இதெல்லாம் செய்கிறீர்கள்?” என்று கேட்டாள். “நீ எனது தங்கை” என மறுபடியும் கூறினேன். “எப்படி?” எனக் கேட்டாள். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என பதிலளித்தேன். அவளுக்குப் புரியவில்லை. ஹிந்தியில் மொழிபெயர்த்துச் சொன்னேன். அவள் எனது கையை விடவேயில்லை. “உங்களை நான் எப்போதும் மறக்க மாட்டேன், நீங்கள் இங்கேயே இருக்கலாமே, அடிக்கடி உங்களை எனது வாழ்வில் நினைத்துக்கொள்வேன்” எனக் கூறினாள். வேறென்ன வேண்டும் இதற்கு மேல்? பிரியாவிடைப்பெற்றேன் அங்கிருந்து..
வாழ்வதற்குப் பொருள் வேண்டும்தான். இருந்தாலும், வாழ்வதிலும் பொருள் வேண்டும். நாம் சேர்த்து வைக்கும் பொருட்களிலும், சொத்துகளிலும் இல்லை மகிழ்ச்சி. நல்ல மனிதர்களை சேமிப்பதில் உள்ளது மகிழ்ச்சி.
பணத்திலேயே குறியாக இருக்கும் மனிதனால் அன்பையே அடிப்படையாக கொண்டிருக்கும் ஒரு மனிதனைப் புரிந்து கொள்ள முடியாது. எந்த மிருகமும் அன்பைப் பெற்று கொண்டு துரோகத்தை வெளிப்படுத்துவதில்லை, மனிதனைத் தவிர. யாரிடம் யார் வெல்கிறோம் என்பதிலில்லை, யாரால் யார் மகிழ்விக்கப்படுகின்றோம் என்பதில்தான் ஒளிந்துள்ளது உறவின் ஆழம்.
தொடரும்…