
Period. End of Sentence (2018)
Dir : Rayka Zehtabchi | Documentary | 26 min | Hindi | Netflix
ஆவணப்படங்கள் சினிமா வகைமைகளுள் மிக முக்கியமானவை. புனைவுக் கதைகளைப் போல விறுவிறுப்போ வணிக அம்சங்களோ இவ்வகைப்படங்களில் இருக்காது என்கிற போதிலும், அவை உண்மைக்கு மிக நெருக்கமானவை என்பதாலும், அவை அந்த உண்மையை ஆவணப்படுத்திகின்றன என்பதாலும் அவை அதிமுக்கியத்துவம் வாய்ந்த கலைப்படைப்புகளாக கருத்தில் கொள்ளப்பட வேண்டியவை. இவற்றை காட்சிப்படுத்துவதும், அது பேசுகிற கருப்பொருள் குறித்த உரையாடலை முன்னெடுப்பதும் மிக முக்கியமான ஒரு சமூக செயல்பாடு.
நாம் ‘ரசிகனின் டைரி’ தொடரில் இதுவரையிலான எல்லா அத்தியாயங்களிலும் புனைவுப் படங்களைக் குறித்தே கவனத்தில் எடுத்துக் கொண்டோம். இம்முறை ஒரு மாறுதலுக்கென்று மட்டுமல்லாது, மேற்சொன்னது போல திரை ரசனையில் ஒரு முக்கிய அம்சமாக, ஒரு பார்வையாளராக நாம் ஆவணப்படங்கள் பார்க்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் பேசும் வாய்ப்பாக இத்தொடரின் இந்த அத்தியாயத்தை நான் எடுத்துக் கொள்கிறேன்.
************
உயிரின் தோற்றுவாய் பெண். உலகின் கற்பக விருட்சம் அவளே. ஆனால், புனிதங்களால் அவள் மூழ்கடிக்கப்பட்டு திணறுகிறாள். உலகத்தைப் புரிந்து கொள்வதை விடுங்கள்; ஒரு பெண் உயிரியல் ரீதியாக தன்னை எவ்வளவு தூரம் புரிந்து வைத்திருக்கிறாள் என்பது பெரிய கேள்விக்குறிதான். கல்வி மகளிர் வாழ்வினைப் பொருத்தவரை குன்றிலிட்ட விளக்குதான். மறுப்பதற்கில்லை. ஆனால், அவ்விளக்கின் வெளிச்சமே தீண்டாத எத்தனையோ லட்சோபலட்சம் பெண்களின் நிலை?
இந்திய சமூகத்தில் பரவலாக இருக்கின்ற சமூகவிலக்குகளில் (social taboos) மிக முக்கியமானது பெண்களின் மாதவிடாய் குறித்து பேசுவதில் காலங்காலமாய் நிலவுகிற மனத்தடை. ஆண் பெண் பேதமின்றி அதனை விலக்கப்பட்ட விடயமாகவே பாவிப்பதும் அது குறித்து பேசக் கூட தயங்குவதுமாகத்தான், வளர்ந்து முன்னேறிவிட்டதாக சொல்லித் திரிகிற இக்காலகட்டத்திலும் சமூக யதார்த்தமாக இருக்கிறது.
அந்த யதார்த்தத்தின் வாயிலில் இருந்து வீதிக்கு இறங்குகிற இரானிய- அமெரிக்க ஆவணப்பட இயக்குநர் Rayka Zehtabchi-இன் காமிரா, இந்தியத் துணைக்கண்டத்தின் தலைநகரம் புதுதில்லியில் இருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஹப்பூர் மாவட்டத்திற்குள் நுழைகிறது. ஏது குறித்தோ எழுப்பப்பட்ட ஏதோ ஒரு கேள்விக்கு வயது பேதமின்றி, சிறுமிகள் முதல் பாட்டிகள் வரையிலும் தங்கள் வெட்கம் பூசிய மௌனத்தை சிரிப்பைக் கொண்டு மெழுகுகிறார்கள். கேட்கப்பட்ட கேள்வி மாதவிடாய் பற்றியது. அவர்களின் வெட்கமும் மழுப்பல்களும் நமக்குச் சொல்வது அவர்களைக் குறித்து அல்ல; அவர்கள் சமூகத்தால் எவ்வளவு அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்பதையே. சில பெண்கள் தெரிந்தும் அது குறித்து பேசத் தயங்குவது ஒருபுறமிருக்க, பதின்ம வயதில் இருக்கிற பூப்பெய்திய இளையோர் அது குறித்த விழிப்புணர்வே இல்லாமல் இருப்பது கொஞ்சம் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியைத் தருவதாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக பதின்ம இளைஞர்கள் நால்வரிடம், ‘பெண்களின் மாதவிடாய் குறித்து உங்களுக்குத் தெரியுமா?’ என்ற கேள்விக்கு அவர்களது பதில், ‘ஆம். தெரியும்; அது பெண்களை மட்டும் தாக்குகிற ஒரு நோய்.’ என்பதாக இருப்பது இன்னும் அதிர்ச்சியூட்டுகிறது.
பிள்ளைகள் படிக்கின்ற கல்விக் கூடத்தில் வகுப்பறையில் இதே கேள்வி எழுப்பப்பட, அங்கோ பதில் தெரிந்திருந்தும் தயக்கம் தடை போடுகிறது. பின்புலம் எதுவாயினும் பெண்களின் பலர் மாதவிடாய் குறித்து பேசத் தயங்குகிறார்கள். அவர்களது தயக்கத்திற்கு ஆதாரக் காரணம் ஒன்றுதான். அதனை ஒட்டு மொத்த சமூகம் எவ்வாறு அணுகுகிறது என்பதே அது.
தொடர்ந்து பேசுகிற பல பெண்கள் தங்கள் வாழ்க்கைக் கதைகளை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்கள். பூப்பெய்துவது எப்படி தங்களது கல்விக் கனவினை கருக்கி வீட்டோடு முடக்கியது என்பதை அவர்களது கதைகள் விளக்குகிறது. அது தன்னை ஒரு கேலிப்பொருளாக மாற்றிவிடுமோ என்ற அச்சம் நிரந்தரமாக அவர்களது மனதில் படிந்து விட்டிருப்பதையும், அது எந்த அளவுக்கு உளச்சிக்கலை ஏற்படுத்துகிற ஒரு விடயமாக பெண்வாழ்வில் உருவெடுக்கிறது என்பதையும் நாம் விளங்கி கொள்கிறோம். மாறிவிட்ட வாழ்க்கை முறையில் போகிற இடங்களில் எல்லாம் அவ்வப்போது துணிகளை மாற்ற வேண்டிய நிர்பந்தம் இருந்தும், அதனைச் செய்ய சூழல் அனுமதியாத அசூயையே அவர்களுக்கு பெரிய மன உளைச்சலைத் தருவதாய் இருக்கிறது.
ஸ்நேகா எனும் யுவதி தான் காவலராக வேண்டுமெனும் லட்சியத்தை சொல்கிறார். அதற்கான அவரது முயற்சியையும் படம் பதிவு செய்கிறது. அவர் ஏன் வேலைக்குச் செல்ல விரும்புகிறார் என்பதற்கு அவர் சொல்கிற காரணம், தான் விரும்பாத, இளவயதில் திருமண முடிக்கப்படுகிற வாய்ப்பைத் தள்ளிப் போவது என்பதுதான். ஏன் குறிப்பாக காவலர் பணி என்பதற்கு அவர் சுட்டுவது, அவர்கள் ஊரில் இருக்கிற ஒரு பெண் காவலரையும், அவருக்கு அப்பணியால் கிடைக்கிற சமூக மதிப்பையுமே. இது ஒரு விதத்தில் இப்படத்தின் இன்னுமொரு கிளைக்கதையே.
இந்தியப் பெண்களில் பெருவாரியானோர் சுகாதாரமற்ற பழங்கால நடைமுறையான மாதவிடாய் நாட்களில் துணிகளை உபயோகிக்கிற பழக்கத்தையே இன்னுமும் பின்பற்றுகின்றனர். நகர்ப்புற பெண்கள் மத்தியில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஓரளவிற்கு வந்துவிட்ட போதிலும், கிராமப்புற பெண்களிடத்தில் அணையாடைகள் (sanitary napkins) உபயோகமோ அதன் அவசியம் குறித்த விழிப்புணர்வோ பெரிய அளவில் ஏற்படவே இல்லை. அப்படியே விழிப்புணர்வு இருக்கின்ற பட்சத்திலும் அவர்களதனை பயன்படுத்த பெருந்தடையாக இருப்பது அதன் விலைதான். அதுதான் கிராமப்புற பெண்களை அணையாடைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்ட பின்னரும் மீண்டும் துணிகளை நோக்கித் தள்ளுகிறது.
இந்த ஆவணப்படம் பெண்களின் எதிர்கொள்ளும் இந்த சவாலைப் பற்றியது மட்டுமல்ல. எப்படி பெண்கள் ஒன்று கூடி சவாலை வென்றெடுத்து சாதித்துக் காட்டினர் என்பதைப் பற்றிய கதையையும் முன்வைக்கிறது. அவர்களின் வெற்றிக் கதைக்குப் பின்னால் ஒரு ஆண் இருக்கிறார் என்பது சற்றே ஆச்சரியமான செய்திதான். அவர் ஒரு தமிழர் என்பது இன்னும் சுவாரசியம்.
*************
கோவையைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் இந்தியாவின் மிக மலிவான அணையாடைகள் (sanitary napkins) தயாரிப்பு இயந்திரத்தினை கண்டுபிடித்த சமூகத் தொழில்முனைவர். ‘Pad man of India’ என அழைக்கப்படுகிற இந்த ஒரு மனிதர் கணக்கற்ற இந்தியப் பெண்களின் வாழ்க்கையில் விடிவைத் தந்தவர். இவர் தனது திருமணதிற்குப் பின்னர், தனது மனைவி மாதவிடாய் காலங்களில் துணிகளை உபயோகித்து படுகின்ற சிரமங்களை, அவருடைய தனிப்பட்ட பிரச்சனையாக பாவிக்காமல் பொதுமைப்படுத்தி ஒட்டுமொத்த பெண்களின் சமூகப் பிரச்சனையாக உள்வாங்கினார்.
மலிவு விலையில் அணையாடைகளை உருவாக்க முயன்ற தொடர் தேடுதலின் பயனாகவே அவரால் அந்த இயந்திரத்தை உருவாக்க முடிந்தது. பெருநிறுவனங்கள் இவரோடு இணைந்து கொள்ள முயன்ற போதிலும் அவற்றையெல்லாம் புறந்தள்ளி, தனது கண்டுபிடிப்பை முழுக்க முழுக்க இந்தியாவின் பட்டி தொட்டிகளில் எல்லாம் இருக்கிற, பெண்களே நிர்வகிக்கிற, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மட்டும் விறபனை செய்ய வேண்டுமென முடிவு செய்தார், அதிலிருந்து வழுவாமல் இவரது நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இது அப்பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகளை எதிர்கொள்ள உதவுவதோடு மட்டும் நின்றுவிடாமல் அவர்கள் சொந்தக்காலில் நின்று சமூக அந்தஸ்த்தை உயர்த்திக் கொள்ளவும் உறுதுணையாக இருக்கிறது.
இந்த ஆவணப்படத்தின் ஒரு பகுதியாக மட்டும் நாம் சந்திக்கிற அருணாச்சலத்தின் வாழ்க்கை, இப்படம் வெளியான அதே காலகட்டத்தில் இரு வேறு திரைப்படங்களாக வெளிவந்தது. முதலாவது அபிஷேக் சக்சேனா இயக்கத்தில் 2017 இல் வெளியான ‘Phullu’. அருணாச்சலம் வாழ்க்கையில் நடந்த பல உண்மைச் சம்பவங்களை அப்படியே புனைவுக்குள் கொண்டு வந்திருந்த இப்படம் அசலான அந்த ஆளுமையை அறிமுகம் செய்யவில்லை என்றே சொல்ல வேண்டும். இப்படம் தற்போது அமேசான் பிரைமில் காணக் கிடைக்கிறது.
இரண்டாவது 2018 ஆம் ஆண்டு பால்கியின் இயக்கத்தில் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான ‘Pad man’. மேற்சொன்ன படத்தைப் போல இப்படமும் அருணாச்சலத்தின் கதையை மட்டும் எடுத்துக் கொண்டு அவரை லக்ஷ்மிகாந்த சௌகானாக மாற்றி இருந்தது. ஆனால், இதில் வியப்பேதும் இல்லை. வணிக சினிமாக்களில் இப்படி நிகழ்வது புதிதல்ல. இனி நிகழாமல் இருக்கப்போவதும் இல்லை. தமிழில் கூட கன்னடத்துக்காரரான கேப்டன் கோபிநாத், நெடுமாறன் ராஜாங்கமாக மாறவில்லையா? அது போலதான் இவைகளும்.
************
ஹப்பூர் மகளிர் அருணாச்சலத்தின் அணையாடை உற்பத்தி இயந்திரத்தின் உதவியோடு தங்களது பகுதிப் பெண்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டது மட்டுமல்லாது, கூடுதல் உற்பத்தியை சந்தைப்படுத்தவும் துவங்குகின்றனர். அவர்கள் தயாரிக்கிற அணையாடைகள் சந்தையில் விற்பனை செய்யப்படுகிற பிரபலமான நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு நிகரான தரத்தோடும், அதே வேளையில் அவற்றின் விலையோடு ஒப்பிடுகையில் ஏறத்தாழ மூன்று மடங்கு மலிவாகவும் இருக்கிறது. ஆவணப்படத்தின் இறுதியில் அவர்கள் அருகில் இருக்கிற பகுதிகளில் உள்ள பெண்களைச் சந்தித்து தங்களது தயாரிப்பின் தரத்தை செய்முறை விளக்கத்துடன் அவர்களிடம் நிரூபித்து, அவர்கள் நம்பிக்கையைப் பெற்று, வெற்றிகரமாக விற்பனையும் செய்வதைக் காண்கிறோம்.
ஹப்பூரில் சிறுதொழிலாய் துவங்கிய அணையாடைத் தயாரிப்பு வளர்ந்து, பல பெண்களின் வாழ்வாதாரத்தை வளமாக்கியதோடு சிலரை தொழில்முனைவோராகவும் மாற்றி இருக்கிறதை காண்கையில் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது. கிளைக்கதை வாயிலாக நமக்கு அறிமுகமான ஸ்னேகா இப்போது அணையாடை உற்பத்தியின் மூலமாக ஈட்டுகிற பணத்தின் உதவியுடன் தில்லியில் தனது காவலர் பணி கனவைத் துரத்திட போட்டித் தேர்வுக்கு தயாரிப்பு செய்கிற பயிற்சியகத்தில் சேர்ந்து பயில்வதையும் காண்கிறோம்.
இந்திய சமூகச் சூழலில் மாதவிடாய் என்பது பல பெண்களின் மனவெளியில் ஒரு மாதாந்திர சிறைச்சாலை, மாதந்தோறும் சில நாட்களுக்கு அவர்களதில் தண்டனையை அனுபவித்து வருகிறார்கள். ஆனால், இனி அது அன்றாடத்தின் இன்னொரு எதிர்கொள்ளக்கூடிய சவாலாக இருக்கும் நாள் அருகிலிருக்கிறது. அதைச் எடுத்துக்காட்டும் விதத்தில்தான் படத்தின் பெயரே இருக்கிறது என்பதை நாம் உணர முடிகிறது.
அறிவியல்பூர்வமாக மாதவிடாய் குறித்த போதுமான புரிதல் உள்ள ஆண் ஒரு போதும் பெண்களை ‘வீக்கர் செக்ஸ்’ என்று அழைக்க விரும்ப மாட்டான். ஏனெனில் மாதந்தோறும் அவ்வளவு உதிரப்போக்கையும் சமாளித்துக் கொண்டு, ஆண்களுக்கு நிகராக பெண்கள் பங்களிக்கிற உடலுழைப்பை கணக்கில் கொள்கையில், உண்மையில் அவர்களை அப்படி அழைப்பது பொருத்தமற்றது என்பதை அவன் உணர்ந்தே இருப்பான்.
இந்த ஆவணப்படம் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்கர் அகதமி விருது விழாவில் சிறந்த குறு ஆவணப்படத்திற்கான விருதினைப் வென்றது.
*********
(மீண்டும் வலியுறுத்திச் சொல்கிறேன்.) ஆவணப்படங்கள் சினிமா வகைமைகளில் மிக முக்கியமானவை. மிக குறைந்த நேரத்தில் மிக அதிகமான தரவுகளை காத்திரமாக ஆவணப்படங்கள் நமக்கு கடத்திவிடுகின்றன. புனைவுத் திரைப்பட படைப்பாளிகளைப் போல ஆவணப்பட படைப்பாளிகளோ அல்லது அவர்தம் படைப்புகளோ பரவலாக சென்றடைவதே இல்லை. இருப்பினும் அவர்கள் ஒவ்வொரு பட உருவாக்கத்திற்கும் செலுத்துகிற அசாத்தியமான உழைப்பு தன்னலமற்றது. அவர்களது சமூகக் கடப்பாடையும், மனிதர்களின் மீதான அன்பையும் அக்கறையையுமே ஆவணப்படைப்பாளிகளின் ஒவ்வொரு படைப்பும் பிரதிபலிக்கின்றன.
சினிமா ரசனை என்று வருகையில் அவ்வப்போது நல்ல ஆவணப்படங்களைத் தேடித் தேடிப் பார்ப்பது அவசியமானது. ஏனெனில் சமூகத்தின் பொது நன்மைக்குக் கேடான சித்தாந்தங்கள் திரைப்படங்கள் வழியாக புகுத்தப்படுவதை பிரித்தறிய ஆவணப்படங்கள் மூலமாக கைகூடுகிற பார்வையனுபவம் நிச்சயம் உதவும். மேலும் சமூகத் தீங்குகளை எப்படி நுட்பமாய் புரிந்து கொள்வது என்றும், அறிவார்ந்த தளத்தில் எவ்வாறு எதிர்வினையாற்றுவது என்றும் அவை நமக்கு கற்றுத் தரும்.
இந்த ஆவணப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் இணைப்பு இருந்தால் மட்டும்தான் பார்க்க முடியும் என்றில்லை. அவர்களது அதிகாரப்பூர்வ யூட்யூப் அலைவரிசையிலேயே கீழ்காணும் சுட்டியின் துணையோடு முழுவதுமாக இந்த ஆவணப்படத்தை காண முடியும்.
https://www.youtube.com/watch?v=Lrm2pD0qofM
(தொடரும்…)