
ஒரு பழைய புகைப்படச் சுருளில்
இன்னும்
ஒளிந்திருக்கின்றன
நேர்மறைப் புகைப்படங்கள்.
என்றோ
நமக்கென உணவு தயாரித்தலுக்கு
எரிக்கப்பட்ட மரக்கட்டைகளின் மிச்சம்
கரித்துண்டுகளாக
பூமிக்குள் புதைந்திருக்கலாம்.
கண்கள் மீது வைத்த
கண்ணப்ப நாயனாரின்
காலில் வழிந்த
கருணைத் துளிகள்
இப்பூமியின் வேர்களில்
இன்னும் ஒளிர்கின்றன.
ஒளியாண்டு கடந்தும்
இவ்வேர்களின் வழியே
எங்கோ பூத்தபடியிருக்கின்றன
பூங்கொத்தோடு
மென்னியலின் புகைப்படங்கள்.
*
பிளாசிபோவை உண்பவன்
எதைத் தின்றால் பித்தம் தெளியுமென
அலையுமொருவன்
தன்னை சரி செய்துகொள்ள
கிடைக்காத மருந்துகளின்
பெயர்களையெல்லாம் தேடிப் பார்க்கிறான்.
ஒரு மழைப்பொழுதில்
சமன் செய்யப்பாடத
நிலத்தில் சேர்ந்து ஓடும்
சேற்றின் நிறமென
மனதின் அடுக்குகளைப்
பிரித்தறிய முற்படுகிறான்.
எட்டாத நிலவு காட்டி
உணவு ஊட்டப்பட்டதும்
பச்சைச் செடிகளை பார்க்கச் சொல்லி
காலில் தைத்த முட்கள்
களையப்பட்டதும்
கண் முன் வந்து போகின்றன
பரிந்துரைக்கப்பட்ட
பிளாசிபோவென்னும்
ஏதுமற்ற மாயக் குளிகையில்
எல்லாம் சரி ஆக்கப்பட்டதாகவே
நம்பத் தொடங்குகையில்
பிணைக்கப்பட்ட சங்கிலிகள்
தெறித்தோடத் தொடங்கின.
அப்போது உரக்கப் பாடும்
பாடலின் வழியே பிளாசிபோவினுள்
வலிகள் மாறியிருந்தன
ஓர் அதிசயக் குளிகையாக.
*
பெருந்தவிப்பின்
எல்லைகளை வரையறுக்கயிலா
கையறு நிலையின்
நிழல் படர்ந்து கிடக்கிறது
கைரேகைக் கோடுகள் முழுதும்.
மாங்கொழுந்தின்
வண்ண மாறுதலை
அறியும் பொருட்டு
வேர்களின் நுனி
இன்னும் இன்னும்
அடி ஆழம் போகிறது.
விலகலும்
ஒரு பெருநேசத்தின்
பிம்பம்தான்.
அப்பிம்பம் பொதிந்த
பெரிக்கார்டியல் திரவத்தில்
மிதந்து வரும் நினைவலைகளால்
மோதிய இதயம் வரையும்
ஓவியக் கோடுகளில் ஒளிர்கிறது
இதய மின்துடிப்புப் பதிவு.
ஆதிப்புள்ளியின் தேடல்
அன்பின்
உயிர்ச் சுவடுகள்.