இணைய இதழ்இணைய இதழ் 77சிறுகதைகள்

வந்தட்டி – ரக்‌ஷன் கிருத்திக்

சிறுகதை | வாசகசாலை

ள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருந்த சமயம். ஓரிரு பரிட்சைகள் மட்டுமே மீதமிருந்தது. அணைக்கட்டுகளில் இருந்து பாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட நீர் வரத்தால் குளம் இன்னுமே நிரம்பிய நிலையிலதான் இருந்தது. இந்த கோடை விடுமுறை முழுவதையும் குளியல் போட்டே கழித்துவிட வேண்டியதுதான் என்கிற நினைப்பில்தான் நானும் என் நண்பர்களும் இருந்தோம். துரதிஷ்டம் விடுமுறைக்கு முன்னதாக எனது நண்பர்கள் எல்லோரும் அவர்களின் பெற்றோர்களுடன் மூட்டை முடிச்சுகளுடன் லாரியில் ஊரைவிட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இவ்வாறு மூட்டை முடிச்சுகளோடு வெளியேறுவது ஒன்றும் புதிதல்ல. வெளியூருக்கு பனையேறுவதற்கு செல்கிறோம் என்று சொல்லிக்கொண்டு ஐந்து குடும்பங்கள், பத்து குடும்பங்கள் என சேர்ந்தார்போல ஆரம்ப பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளையும் அவர்களது கல்வியை பொருட்டாக கருதாமல் உடன் அழைத்து கொண்டு பாண்டிச்சேரிக்கு பனையேற செல்கிறோம். கீழ காட்டுக்கு பனையேற செல்கிறோம் (கீழ காடு என்பது திருச்செந்தூர், சாத்தான்குளம், உடன்குடி பகுதிகள்.) என்று சொல்லிக்கொண்டு செல்வதும், சென்ற ஓரிரு மாதங்களில் கையில் கொஞ்சம் பணத்தோடு திரும்பி வருவது வழக்கம்தான்.

எனது அப்பா, அம்மாகூட இப்படித்தான். நெல் அறுவடை காலங்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் இராதாபுரம் தாலுகாவைவிட நாங்குநேரி தாலுகா கொஞ்சம் நெல் விளைச்சல் மிகுந்த பகுதி என்பதால் திருநெல்வேலி, கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலைக்கு மேற்கு திசையில களக்காட்டிலிருந்து திருநெல்வேலி வரை உள்ள பகுதிகளில் ஏதாவது ஒரு ஊருக்கு சென்று தங்கி இருந்து அறுவடை செய்துவிட்டு அறுவடைகள் முடிந்து ஊருக்கு திரும்பி வரும்போது பத்து மூட்டைகள், பதினைந்து மூட்டைகள் என மூட்டை நெல்லோடுதான் திரும்பி வருவார்கள். அவர்கள் கொண்டு வருவது எத்தனை மூட்டையாக இருந்தாலும் அதுதான் அடுத்த ஆண்டு அறுவடை வருகிற வரை எங்களது பசியாற்றுவதற்கு உபயோகமாக இருந்து வந்தது.

எனது பெற்றோர்களும்கூட நாங்கள் பள்ளி செல்கின்ற வயது வரும்வரை எங்களை அவர்களோடு அழைத்து செல்பவர்களாகத்தான் இருந்தனர். பள்ளி செல்லும் பருவம் வந்ததும் தங்களது பொழப்புதான் நாடோடி பொழப்பாக போச்சிதென்று எங்களை நன்றாக படித்து ஒரு நிரந்தர பணிக்கு செல்ல வேண்டுமென்று விரும்புபவர்களாய் இருந்ததினால், எங்களை அவர்களோடு அழைத்து செல்வதை அறவே நிறுத்திக்கொண்டிருந்தனர். ஆனாலும் எனது நண்பர்களின் பெற்றோர்கள் குழந்தைகளை படிக்க வைப்பதில்லையென்று சொல்லிவிட முடியாது. நாடோடிகளாய் செல்லாத நாட்களில் பள்ளிக்கு படிக்க அனுப்புகிறவர்களாகதான் இருந்தார்கள். அதுவும்கூட ஆரம்ப பள்ளிக்கு மட்டும்தான் அனுப்புவர். அதன்பிறகு ஒரு சில பெற்றோர்கள் ஆடு வாங்கி கொடுத்து மேய்த்து வர சொல்லி விடுவார்கள். சிலர் இராதாபுரம் மளிகை கடைகளுக்கு பொட்டலம் மடிச்சி கொடுக்கவும் தையல் கடைகளுக்கு காஜா போடுவதற்கும் அனுப்பிடுவார்கள். அவர்களும் ஐந்தாறு வருடத்தில் ஓரளவுக்கு வியாபாரத்தை கத்து கொண்டு ஒரு மளிகை கடையவோ தையல் கடையவோ நடத்துகிற அளவில் வளர்ந்து நிற்பார்கள். இன்னும் சிலர் மும்பை போன்ற பெரும் நகரங்களுக்கு இதற்கு முன் சென்றவர்களோடு இட்லி வியாபாரம் செய்ய அனுப்பி வைத்து விடுவர். அவர்களும் ஐந்தாறு வருஷம் இருந்துவிட்டு கொஞ்சம் பணத்தோடு திரும்பி வந்து ஊரில் இருக்கும்போது பின்புறம் ஓட்டை விழுந்த டவுசருடன் ஊரை வலம் வந்தவர்கள் மும்பையில் இருந்து ஏதோ ஒரு கடையில் நாகரிகத்தை வாங்கிகொண்டு வந்ததைபோல பேண்ட், சட்டை, முக்கால் டவுசரோடு பவுசு காட்டிக்கொண்டு திரிவார்கள். ஆனாலும் எங்களை ஒரு போதும் மறந்துவிடுவதில்லை.

பனையேற்றத்திற்கு வெளியூர் செல்லும் சமயங்களில் எங்களின் பெற்றோர்களிடம் வந்து சிரித்த முகத்தோடு “போயிட்டு வர்றோம் புனிதா, போயிட்டு வர்றோம் அருணகிரி”என்று முக மலர்ச்சியோடு சொல்லிவிட்டுதான் செல்வார்கள். ஆனால், அன்று அவர்களின் முகபாவனை அவ்வாறு இல்லாது, முற்றிலும் மாறுபட்டதொரு மனநிலையில் இருப்பதாகவே எங்களுக்கு காட்டியது.

தாயின் மடியைவிட்டு இறங்கி இந்த மண்ணில் கால் பதித்த நாள் முதல் எந்த நண்பர்கள்களுடன் சேர்ந்து ஐம்பூதங்களிலும் பறந்து திரிந்துகொண்டிருந்தோமோ! அவர்கள் எங்களுக்கு ஒரு டாட்டாகூட சொல்லாது விரோதிகள் போல சென்றார்கள்.

அவர்களுக்கும் எங்களுக்குமான உறவென்பது இரத்தமும் சதையும் கலந்ததல்ல, அதையும் தாண்டிய ஒன்றென்று மனிதர்களுக்குள் இருக்குமேயானால் அதுதான் எங்களுக்கு ஆனது. விளையாட்டில் அடிபட்டபோது காயத்தின் மீது பழைய நாளிதழை கிழித்து அதை நாவால் நக்கி நனைத்தெடுத்து ஒட்டினால் ஈக்கள் வந்து அமராதென்ற சூட்சமத்தை சொல்லி கொடுத்தவர்கள். கதவு விளையாட்டில் என்னோடு பல ஊர்களுக்கும் பயணித்தவர்கள். கிளியான் தட்டு, கபடி, கண்ணாமூச்சி, கில்லி என்று இடைவிடாத ஆட்டங்கள் மூலம் கணப்பொழுதேனும் எங்களைவிட்டு பிரியாதிருந்தவர்கள். இரவு பொழுதானதும் ஊர் பொது இடத்தில் அமர்ந்து எங்களோடு நித்தம் கதைகள் பேசிக்கொண்டிருந்தவர்கள். கார்த்திகை திருநாளில் சூந்து கொழுத்தி இரவை பகலாக்கி மகிழ்ந்தவர்கள். பகல் முழுவதும் பனையேறி களைத்து போயி இரவில் உடல் அசதிக்கு அவர்களின் அப்பா குடிக்க வைத்திருக்கிற கள் பாத்திரத்தில் இருந்து அளவு குறையாத அளவிற்கு புளித்த கஞ்சித் தண்ணிய ஊற்றி அளவை சமன்செய்துவிட்டு கள்ளத்தனமாக கள் கொண்டு வந்து குடிக்க கொடுத்து போதை என்றால் என்ன என்று உணர வைத்து மகிழ்ச்சியில் திழைக்க செய்தவர்கள். கற்றாழை நாரில் கயிறு திரிக்க சொல்லி கொடுத்து அந்த கயிற்றில் கண்ணிகள் செய்து கௌதாரி பிடிக்க கற்றுக் கொடுத்தவர்கள். முயல் வேட்டைக்கு நாய் இல்லாமலே முயல்களின் போக்குவரத்து பாதைகளை துல்லியமாக கணித்து கண்ணிகள் வைத்து முயல் பிடிக்க கற்று தந்தவர்கள். அவர்களின் அம்மா பதநீர் காய்ச்சும் இடங்களுக்கு அழைத்து சென்று கருப்பட்டிக்கு முந்தைய பதமான கூப்பதநீர் சுவைக்க கொடுத்தவர்கள். பனை மர காடுகளுக்கு அழைத்து சென்று நுங்கு வெட்டி கொடுத்து அதை எப்படி சாப்பிட வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தவர்கள். நீர் நிறைந்த குளத்துக்குள் கருவேல மரத்தில் கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொறித்திருக்கும் மணிப்புறா முட்டைகளையும் குஞ்சுகளையும் எடுத்து சென்று குஞ்சுகளுக்கு உப்பு காரம் வைத்து சுட்டுத்தின்னவும் முட்டைகளை மாட்டு சாணத்தில் பொதிந்து சுட்டுத்தின்னவும் கற்று கொடுத்தவர்கள். பக்கத்து ஊரில் இருந்த ஆரம்ப பள்ளிக்கு எங்கள் கால்களோடு சேர்ந்து துணை கால்களாய் நடையை பகிர்ந்து கொண்டவர்கள் இப்படி எத்தனையோ அவர்களுக்கும் எங்களுக்குமான பிணைப்பை சொல்லலாம். அவர்கள் இல்லாத இந்த மண்ணில் எங்களால எப்படி தனியே வாழ்ந்திட முடியும். சற்று முன்பு வரை உயிரோடிருந்த வீட்டு சுவர்களும் இந்த தெருக்களும் பிணவடக்கம் செய்கிற ஒரு இடுகாட்டை போல காட்சி தந்தது.

எங்களது பெற்றோர்கள்கூட இதற்கு முன் அவர்கள் பிழைப்பு தேடி வெளியூர் செல்கிறார்களென்றால் ஓடி சென்று வழி அனுப்பி வைக்கிறவர்கள், இன்று ஏனோ வீட்டிலிருந்து வெளியே வரவில்லை. ஊரில் இருபத்தைந்து குடும்பங்கள் பனை ஏறி பொழப்பு நடத்துகிற குடும்பங்கள். அத்தனை பேரும் இப்படி ஒட்டு மொத்தமாக செல்வதென்பது இதுவே முதல் முறை. வீட்டின் கூரைகளைக்கூட பெயர்த்து எடுத்துக்கொண்டு சென்றார்கள். இந்த ஊரை பொறுத்தவரை கூரை மட்டுமே அவர்களுக்கானதாக மட்டும் இல்லை எங்களுக்கானதாகவும்கூட அதுதான் இருந்தது. கான்கிரீட் வீடுகளும் ஓட்டு வீடுகளும் மட்டுமே அப்படியே இருந்தது. ஆனாலும், நாங்கள் சிறுவர் என்பதால் நடந்த சூட்சமம் அறியாது எப்போதும் போல அவர்கள் நிச்சயம் திரும்பி வருவார்கள் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தோம். ஒரு நாள் ஆனது, இரண்டு நாள் ஆனது, தேர்வுகள் முடிந்து விடுமுறையும் வந்தது. அவர்கள் இல்லாமலே எதிர்காலத்தில் நினைத்து சந்தோஷப்பட்டுக் கொள்ள எந்த அனுபவத்தையும் தராமலே கழிந்தும் சென்றது. மறுபடியும் பள்ளிக்கு திரும்பிருந்தோம். அதன்பிறகும் ஓரிரு மாதங்கள் கடந்தது. அவர்கள் திரும்பி வரவே இல்லை.

“ஏன் இன்னும் செந்திலும் அவனோட அப்பா, அம்மாவும். ஜானகியும் அவளோட அப்பா, அம்மாவும் பச்சைமாலும் அவளோட அப்பா, அம்மாவும்…” என ஆரம்பித்து எனது நண்பர்கள் அனைவருடைய பேரையும் சொல்லி “யாரும் இன்னும் வரவில்லையே?” என்றேன் அப்பாவிடம்.

“அவர்கள் இனி எப்போதும் இந்த எழவெடுத்த ஊருக்கு திரும்ப போவதில்லை.” என்றார்.

“ஏன்? முன்னெல்லாம் இதுபோல போனார்களென்றால் ஒரு மாதம் ரெண்டு மாதத்துல திரும்பி வந்திருவாங்க தானே! இப்ப மட்டும் அவர்களுக்கு என்னாச்சிது?”

“அவங்க, இந்த ஊரைவிட்டுட்டு வேற ஊருக்கு குடி போயிட்டாங்க.”

“ஏன்? பொறந்து வளர்ந்த இந்த ஊர விட்டுட்டு இன்னொரு ஊருக்கு போகணும். ”

“போக சொல்லிட்டாங்க.”

“யாரு?”

“இந்த ஊருக்கு சொந்தக்காரங்க.”

“யாரு, இந்த ஊருக்கு சொந்தக்காரங்க?”

“மச்சி வீட்டுக்காரம்மா.”

“அப்ப, இது நம்ம ஊரு இல்லையா?”

“இல்லை.”

“நாமெல்லாம் யாரு எங்கிருந்து இங்க வந்தோம்.”

“இந்த ஊர உருவாக்கினது கானாத் தேவர். அதாவது மச்சி வீட்டுக்காரம்மாவோட புருஷன். நம்ம நாடு சுதந்திரம் பெற்றதுக்கு அப்புறம்தான் இந்த ஊரையே உருவாக்கினாரு. கானா தேவருக்கு சொந்த ஊரு வம்பளம். வம்பளத்துக்காரங்க, திருட்ட தொழிலா பண்ணிட்டு இருந்தவங்க. சுதந்திரத்துக்கு முன்ன குற்ற பரம்பரை சட்டம் அமுலில் இருந்ததால அடிக்கடி போலீஸ் ஸ்டேஷனுக்கு போறதும் வர்றதுமான வாழ்க்கை கானா தேவருக்கு பிடிக்கல. அதனால, அவரு கள்ள தோனியில ஏறி இலங்கைக்கு பிழைப்புக்காக போனவரு அங்க உள்ள தேயிலை தோட்டங்களுல வேலை செய்தார். அப்ப, நாட்டைவிட்டு போனவரு, நாடு சுதந்திரம் அடைந்ததுக்கு அப்புறம்தான் திரும்ப வந்தாரு. ஊருக்கு திரும்புன கானா வீட்டுக்குள்ள நுழைந்ததுமே “வாடா கானா. கள்ளாட்டு கறியும் கா நெல்லு சோறும் இருக்குது சாப்பிடு.” என்றாராம் அவரது தந்தை.
(திருடி கொண்டு வந்த ஆட்டை சமைத்த கறி குழம்பும் முழு விளைச்சலுக்கு வராத நெல் பயிரிலிருந்து திருட்டுத்தனமாக உருவி எடுத்து வந்த நெல்லை அரிசியாக்கி அதில் சமைத்த சோறு)
அந்த வார்த்தையில இருந்து இன்னும் அவரது ஊர்காரங்க திருட்டை விடவில்லையென்பதை உணர்ந்த கானா இந்த ஒத்தவேம்பு ஊர் இருக்கிற இடத்தை மருதனூரை சேர்ந்த பொம்முநாயக்கர் என்பவரிடம் இருந்து பணம் கொடுத்து வாங்கி அரசு உதவியோட வீடு கட்டி அவரோட இலங்கையில இருந்த நண்பர்கள்னு அவரோட சாதிக்காரனாக இல்லாதவங்களாக பார்த்து குடி எத்துனாரு. கானாத்தேவர் உயிரோட இருந்தவரைக்கும் அவரோட சாதிக்காரன் சொந்தக்காரன்னு யாரையும் ஊருக்குள்ளே விடல. அவ்வளவு கட்டுப்பாடாகவும் ஒற்றுமையாக இருந்த ஊர அவரோட மனைவியும் மருமகளும் சேர்ந்துட்டு எந்த ஊர வேணாம்னு சொல்லிட்டு வந்தாங்களோ, அந்த ஊருக்காரனுங்கள கூட்டிட்டு வந்து பஞ்சாயத்து பண்ணி ஊர அழிச்சிட்டாங்க.”

“அப்ப, நம்மளையும் போக சொல்லிடுவாங்களா?”

“இப்போதைக்கு இல்ல. அதுவும், ஒரு நாள் நடக்கலாம்.”

“அப்ப, நாம எங்க போவோம்.”

“நம்ம சொந்த ஊருக்கு?”

“அது எங்க இருக்கு?”

“இங்க இருந்து பத்து கிலோ மீட்டர் தள்ளி இருக்கிற அம்பலம்தான் நம்ம ஊரு.”

“அவங்கள மட்டும் ஏன் போக சொல்லிட்டாங்க?”

“அவங்க தப்பு பண்ணிட்டதா சொல்றாங்க.”

“அப்படி என்ன தப்பு பண்ணிட்டாங்க?”

பச்சமாலோட அப்பா பலவேசமும் காசியோட அப்பா வேலாயுத பெருமாளும் அண்ணன், தம்பிகள். இந்த ரெண்டு பேரும் மச்சி வீட்டு அம்மாவோட பனைமரத்துல பதநீர் இறக்குற வேலை செய்தாங்க. அப்படி இறக்குற பதனீர மரத்தோட சொந்தக்காரங்களான மச்சி வீட்டுக்கார அம்மாவுக்கும் ஒரு நாளும் அடுத்த நாள் இறக்குற பதநீர் பனையேறிக்கும்னு பேசி ஒப்புக்கொண்டுதான் பனையேறி வந்தாங்க.

மச்சி வீட்டுக்காரம்மாளோட முறை அன்றைக்கு வேலாயுத பெருமாள் பனையேறி பதநீர இறக்கி மச்சி வீட்டு அம்மாவுக்கு கொடுத்திருக்கிறான். அவங்களும் கொண்டு வந்த பாத்திரத்துல வாங்கிட்டு போயிட்டாங்க. மச்சி வீட்டுக்காரம்மா போனது தெரிந்ததும் வேலாயுதபெருமாள் மறுபடியும் எறின பனையில திரும்ப ஏறி இருக்கான். பதநீர் காய்ச்ச வந்த மச்சி வீட்டுக்காரம்மாவுக்கு பதநீர் காய்ச்ச பனை ஓலைகள் தேவைப்பட பதநீர் வாங்குறப்ப அந்த பனைமரத்துக்கு அடியில பனை ஓலைகள் கெடந்தது நினைவுக்கு வர அதை எடுக்க வந்த மச்சி வீட்டுக்காரம்மா பார்த்துட்டு எனக்கு பாதி பதநீர இறக்கி தந்துட்டு நான் போனதுக்கு அப்பறம் மீண்டும் பனையேறி மீதம் உள்ள பதனீர இறக்குறான். இவ்வளவு நாளா திருட்டுத்தனம் பண்ணி என்னை ஏமாத்திருக்கிறான்னு அவன்மேல குற்றத்த சுமத்தினாள்.

வேலாயுத பெருமாள கேட்டதுக்கு அவசரத்துல பாளைய சீவாம வந்துட்டேன். மறுபடியும் சீவுறதுக்குதான் ஏறினேன்னு சொல்றான். அவன் சொல்லுறத மச்சி விட்டுக்காரம்மா துளி அளவும் நம்பவே இல்ல. மச்சி வீட்டுக்காரம்மாவோட சாதிக்காரங்க மூன்று குடும்பம்தான் இருந்தது. பனையேறிகள் குடும்பம் இருபத்தைந்தாக இருந்ததாதால தங்களுக்கு ஆதரவாக பஞ்சாயத்து பேச வம்பலத்துல இருந்து ஒரு அஞ்சு பேர அழைச்சிட்டு வந்திருந்தாங்க மச்சி வீட்டுக்காரம்மா.

பஞ்சாயத்துக்கு வந்த அஞ்சு நீதி நீதிதேவன்களில் ஒருத்தன் வேலாயுத பெருமாள ஊரவிட்டு அனுப்புறதுல அலாதி ஆர்வம் காட்டினான். ஒரு முறை கோழியோட மலத்த யார் தின்னுறாங்களோ அவங்களுக்கு பத்து ரூபாயின்னு வம்பளத்துல இருந்த வயசு பசங்க எல்லாரும் சேர்ந்து ஒரு பந்தயத்த நடத்துனாங்க. அந்த பந்தயத்துல மலத்த தின்னு வெற்றி பெற்ற மகா சாதனைக்கு சொந்தக்காரன். பத்து வட்டிக்கு பணம் கொடுக்கிறதுதான் அவனது தொழிலு. பத்து ரூபா பந்தயத்துல ஜெயிச்சது. பத்து ரூபாய் வட்டிக்கு பணம் கொடுக்கிறது இப்படி இவனுக்கும் இவனது வாழ்க்கைக்கும் பத்து என்கிற எண்ணுக்கும் தொடர்பு இருந்ததால இவன் பேரு பத்தாம் நம்பரு. 1980-ல் கல்யாணிபுரம் பகுதியில புல்லட் பைக் வைத்திருந்ததில் குறிப்பிட தக்கவரில் இவனும் ஒருத்தன். புல்லட் பைக் வாங்குவதற்கு முன் சைக்கிள் வைத்திருந்தார்.

ஒரு நாள் வம்பளத்தில் இருந்து கல்யாணிபுரத்திற்கு சைக்கிளில் பத்தாம் நம்பர் சென்று கொண்டிருந்தபோது வேலாயுத பெருமாள் ஒத்தவேம்பு பகுதியில சாலையோரத்துல இருந்த பனை மரத்துல பதநீர் இறக்குற வேலையில இருந்தான். பனை மரத்துல வேலாயுத பெருமாளை பார்த்ததும் பத்தாம் நம்பருக்கு பதநீர் குடிக்கும் ஆசை வந்துவிட்டது.

பொதுவாக பனையேறிகளுக்கு உரிய நல்ல குணமே அவர்கள் பனை எறிக்கொண்டிருக்கும் போது யாராவது சென்று குடிக்க பதநீர் கொடுங்க என்று கேட்டார்களென்றால் பணம் வாங்காமலே கேட்டவங்க போதும் போதும்னு சொல்லுற அளவுக்கு பதநீரை குடிக்க கொடுக்கிற பண்பு உடையவர்கள்.

பத்தாம் நம்பர் ஓட்டி வந்த சைக்கிளை ரோட்டு ஓரத்தில் நிறுத்திவிட்டு வேலாயுத பெருமாள் எறி இருந்த பனை மரத்தின் அருகில வந்து நின்றுகொண்டு “ஏய், நாடான் பட்டை பிடிக்க ஒரு ஓலை போடுல.” என்று அதிகாரமாக உத்தரவு போடுறதுபோல சொன்னான். வேலாயுத பெருமாள் கொஞ்சம் கோபக்காரன் கோபம் வந்தால் என்ன செய்யுறோம்னு யோசனை செய்யாது செய்யக்கூடியவன்தான். அனாவசியமாக யார் பிரச்சினைக்கும் போகமாட்டான். ஆனால், வந்த பிரச்சனை எதுவென்றாலும் விட மாட்டான். ‘ஏய், நாடான்.’ என்று அழைத்தது அவனது தன்மானத்த கொஞ்சம் சீண்டியதை போல உணர்ந்தான் வேலாயுத பெருமாள்.

ஒரு முறை பக்கத்து ஊரான அம்பலம் கிராமத்து இளைஞர்கள் ஒரு பத்து பேரு சேர்ந்து வந்து வேலாயுத பெருமாள் பாதுகாப்புல இருந்த அம்பலத்து பண்ணையாரோட பனை மரத்துல கேட்காம கொள்ளாமல் நுங்கு வெட்டி சாப்பிட்டு இருக்காங்க. அந்த சமயத்துல வேலாயுத பெருமாள் அந்த பகுதியில இருந்து சற்று தள்ளி இருக்கக்கூடிய ஒரு பகுதியில பனையேறிட்டு இருந்திருக்கிறான். அவனோட மனைவி அந்த பகுதியிலதான் பதநீருல இருந்து கருப்பட்டி காய்ச்சி கொண்டிருந்திருக்கிறாள். அவ நுங்கு வெட்டுற சத்தம் கேட்டு வந்து நுங்கு வெட்டிட்டு இருந்தவங்ககிட்ட “ஐயா இது எங்க பாதுகாப்புல இருக்கிற பனை மரங்கள். இத வச்சுத்தான் எங்க பொழப்பு நடக்குது. நீங்க வந்து கேட்காம கொள்ளாம இப்படி நுங்க வெட்டுறீங்களே நியாயமான்னு கேட்டு கொஞ்சம் அடக்கமா சத்தம் கொடுத்து எல்லாரையும் அனுப்ப முயன்றிருக்கிறாள்.

அவங்க, அவளது பேச்ச சிறிதும் சட்ட பண்ணாம நுங்க வெட்டிட்டு இருந்திருக்காங்க. அப்புறம் அவ கொஞ்சம் கடிந்து சொல்லியிருக்கிறாள். “ஏய்… போடி உன் சோலிய பார்த்துட்டு. எங்க ஊரு பண்ணையாரு மரத்துல நாங்க நுங்க வெட்டுறோம். உனக்கு என்னடி மயிரு. என்னமோ உன் அப்பன் வீட்டு பனையில வெட்டுனது போல குதிக்கிற. பேசாம போயிடு இல்ல நுங்குக்கு பதிலு உன் சங்க அறுத்து இரத்தம் குடிச்சிபுடுவேன்.” என்று வாயிக்கு வந்தபடி வார்த்தையை கடத்தி பேசியிருக்கிறாங்க. அவள் அழுதுட்டே நேரே போயி வேலாயுத பெருமாளுகிட்ட சொல்லிட்டாள். அவன் கோபத்துல ஓடிப்போயி எல்லாரையும் பாளை சீவுற அரிவாளைக் கொண்டு வெட்டுறதுபோல போயி மிரட்டி அரிவாளை மாற்றி பிடித்து அடித்து துரத்தியிருக்கிறான். அதோட விடாம அம்பலம் ஊருக்கே போயி ஊர் பெரியவங்ககிட்ட சொல்லி மிரட்டிட்டு வந்திருக்கிறான். இப்படியான துணிச்சல்காரன்தான் வேலாயுத பெருமாள்.

பனையில இருந்தவாறே பத்தாம் நம்பரோட திமிரான பேச்சை கேட்டுட்டு பனை மரத்து கலசத்துல இருந்த பதநீரை குடுவையில மாற்றிட்டு பாளைய சீவி பழைய படி கலசத்துக்குள்ள நுழைச்சி கட்டிட்டு பட்டை பிடிக்கிற அளவுக்கு ஒரு ஓலையையும் வெட்டி கீழே போட்டுட்டு பனை மரத்துல இருந்து கீழே இறங்கி வந்தவன். கீழே கெடந்த ஓலையை எடுத்து பட்டைய பிடித்து பத்தாம் நம்பர் கையில கொடுத்துட்டு குடுவையில இருந்த பதநீரை எடுத்து பத்தாம் நம்பர் கையில் இருந்த பட்டையில் ஊற்றி இருக்கிறான். இரு கையாலும் பட்டையை பிடித்து நெஞ்சுக்கு நேரே வைத்துகொண்டு தலையை தாழ்த்தி கடைக்கண் போட்ட படி பதநீர குனிஞ்சி குடிக்க ஆரம்பிச்சான் பத்தாம் நம்பர். அந்த நேரம் வேலாயுத பெருமாள் அவனது தன்மானத்தை சீண்டிய பத்தாம் நம்பரை லேசாக பயமுறுத்துவோம்னு நினைத்து இடுப்பில் தொங்கி கொண்டிருந்த அரிவாள் பெட்டியில இருந்த அரிவாளை உருவி எடுத்திருக்கான். அவன் அரிவாளை உருவியதும்தான் குனிஞ்சி பதநீர் குடிச்சிட்டு இருந்த பத்தாம் நம்பர் பார்த்துட்டு ஆட்டு கடாவை பலி கொடுக்க தழையை தின்ன கொடுத்துவிட்டு கடா தலையை நீட்டி தழையை தின்னும்போது வெட்டி விடுறதுபோல தன்னையும் வெட்டுவதற்காகதான் அரிவாளை உருவுகிறான்னு நினைச்சிட்டு குடிச்சிட்டு இருந்த பதநீரை குடிக்காம அப்படியே கீழே போட்டுட்டு தலை தெறிக்க ஒடிட்டான். அவன் ஓடுறத பார்த்து “நில்லுல தாயோளி.” என்று குரலும் கொடுத்திருக்கான் வேலாயுத பெருமாள். பத்தாம் நம்பர் திரும்பி பார்க்காம ஓடி போயி சைக்கிள எடுத்தவன் ஓட்டி செல்ல மதி இல்லாது கொஞ்ச தூரம் உருட்டிட்டே ஓடிப்போயி அப்புறம்தான் சைக்கிள்ல ஏறி போயிருக்கான்.

வந்திருந்த நீதிமான்களும் வாதியிடம் மட்டும் புகாரை கேட்டுவிட்டு வேலாயுத பெருமாளையும் அவனோடு சேர்ந்து அவன் தம்பியையும் ஊரவிட்டு போக சொன்னாங்க. ஆனால் பிறதிவாதியோடு சேர்ந்த குடித்தனகாரங்க “அவன் தப்பு செய்திருந்தா, அபராதம் போடுங்க. இனிமேல உங்க பனைய ஏற வேண்டாம்னு சொல்லுங்க. அத விட்டுட்டு ஊரவிட்டு அனுப்ப நாங்க சம்மதிக்க மாட்டோம். இன்னைக்கு வேலாயுத பெருமாள ஊரவிட்டு போக சொல்றதுபோல நாளைக்கு இதே போல ஒரு தப்ப சொல்லி மத்தவங்களையும் போக சொல்ல மாட்டேங்கங்கிறது என்ன உத்தரவாதம் இருக்கு. கானா தேவரு தாயா, புள்ளையா இருக்கலாம்னு சொல்லிதான் எங்கள கூட்டிட்டு வந்தாரு. நீங்க அதெல்லாம் வேண்டாம் போன்னு சொல்றீங்க. நீங்க வான்னா வர்றதுக்கும், போன்னா போறதுக்கும் நாங்க ஒண்ணும் பொம்ம இல்ல. நாங்களும் உணர்வுள்ள மனுஷங்கதான். கானா தேவர் மேல உள்ள நம்பிக்கையில இந்த ஊருக்கு வந்தோம். அவரு இருந்திருந்தா, முதல்ல இந்த அஞ்சு பேரயும் ஊருக்குள்ள நுழையவே விட்டுருக்க மாட்டாரு.” என்று பஞ்சாயத்து பண்ண வந்தவர்களை காட்டி சொன்னதும் பஞ்சாயத்து பண்ண வந்தவர்களுக்கு கோபம் வந்து எதிர்தரப்பை அடிக்க வந்தனர். எதிர் தரப்பு எதிர்த்து நிற்க, கூட்டத்தில் லேசான சல சலப்பு ஏற்பட்டது. இவ்வளவு நடந்ததுக்கு அப்புறமும் மச்சு வீட்டுக்காரம்மா விட்டு கொடுத்து போக தயாரா இல்ல.

“அவங்கள அனுப்பலேன்னா, அவங்களோட சேர்ந்து நீங்களும் போங்க.” என்று மச்சு வீட்டுக்காரம்மாவின் மருமகள் சொல்ல அதற்கு சம்மதம் என்பது போல மச்சு வீட்டுக்காரம்மா இருக்க, “எங்கள ஊரவிட்டு போக சொல்ல நீங்க யாரு? கானா தேவரு உயிரோட இல்லாட்டியும் அவர் மேல உள்ள மரியாதையிலதான் இந்த பஞ்சாயத்துக்கு வந்தோம்.” என்று பிரதிவாதி தரப்பில் ஒருவர் பேச பஞ்சாயத்து பண்ண வந்த ஐவரில் ஒருவர் கடைசியாக பேசியவரை அடித்துவிட பிரதிவாதியின் தரப்பினர் பனையேற்றத்தின்போது பாளை சீவ வைத்திருக்கிற அரிவாளை தூக்கி கொண்டு வர தீர்ப்பு சொல்ல வந்த ஐவரும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று பயந்து போயி அவரவர் வாகனத்தில் கிளம்பி சென்றனர். பஞ்சாயத்து பேச வந்தவர்களை விரட்டியடித்தது போல விரட்டினாலும் இந்த சம்பவத்திற்கு பிறகு பனையேரும் குடியானவர்களால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. என்று இது சாதிய கலவரமாக வெடிக்கும் என்று அச்சம் கொண்டிருந்தனர். பயத்தின் விளைவால தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் உதவிய நாடினாங்க. சட்ட மன்ற உறுப்பினர் இரு தரப்பையும் அழைத்து சமரசம் பண்ண முயன்றார். குடியானவங்க எதிர்கால நலன் கருதி வெளியூர்ல தங்களுக்கு அரசு இடமளித்து குடியமர்த்தும்படி கேட்டு கொள்ள சட்ட மன்ற உறுப்பினரும் அரசிடம் பேசி சம்மதம் பெற்று பனையேரும் குடியானவர்கள் முழுவதுமாக இருக்கிற ஊர்ல நிலம் கொடுத்து வீடும் கட்டி கொடுத்தது. அவங்களும் அந்த ஊருக்கு நிம்மதியாக குடி போயிட்டாங்க.

“ஒரு குடும்பத்துக்காக மொத்த குடும்பமும் ஏன் போகணும்?”

“தாயா, புள்ளையா இவ்வளவு நாளும் பழகிட்டு எப்படி விட்டு கொடுத்திட முடியும்?”

“அதே பழக்கம்தானே நம்மோடவும் வச்சியிருந்தாங்க. நாம ஏன் அவங்களுக்காக பரிந்துபேசல?”

“அவங்க எல்லாரும் ஒரே சாதி. சுய சாதிக்காக ஒண்ணா நின்னாங்க.”

“சாதிய கடந்து நிற்க முடியாதா? இன்னைக்கு அவங்களுக்கு ஏற்பட்ட நிலம, நாளைக்கு நமக்கும் வரலாம்தானே! அன்னைக்கு நம்ம பக்கம் யாரு நிப்பாங்க?”

“யாரும் வந்து நிற்க போறதில்ல. அப்படியொரு நிலம வருவதற்கு முன்னமேயே நாம நம்ம ஊருக்கு போயிடனும்னு நினைக்கிறேன்.”

“இந்த ஊருக்கு நாம ஏன் வந்தோம்? நம்ம ஊருன்னு சொல்றோம் இல்லையா அந்த ஊருக்கு போயி எத்தனை வருஷமாச்சிது?”

“வருஷம் இல்ல. தலைமுறை கணக்கு ஆயிடுச்சிது. நான் மூனு வயசு குழந்தையாக இருக்கும்போது விதவையான எங்க அம்மா பொழப்புக்காக என்னை தூக்கிட்டு இந்த ஊருக்கு வந்தா. இப்ப உங்க அண்ணனுக்கே பதினேழு வயசாகுது”

“இப்ப, நாம போனோம்னா, அந்த ஊருக்காரனா நம்மள ஏத்துப்பாங்களா? நம்ம நாட்டுல இருந்து போனவங்க. இதே போல தலமுறை கடந்து வரும்போது நாம அவர்களை அகதின்னு, சொல்றோம் இல்லையா? அப்படி நம்மளையும் வந்தட்டின்னு சொல்லுவாங்க தானே?”

“சொல்றது சரிதான். ஒவ்வொரு மனுஷனுக்கும் பூர்வீகம் என்பது எங்கேயோ இருக்கலாம். அவன் பொறந்த நாளுல இருந்து எந்த மண்ணுல அவனோட உடல தோய்த்து இளமைய கொண்டாடி வளருகிறானோ! அந்த இடம்தான் அவனுக்கு சொந்த ஊரு, சொந்த தேசம் எல்லாமும். நம்மள சேர்ந்த ஐந்து குடும்பமும் அந்த இருபத்தைந்து குடும்பத்தோட தோள் கொடுத்து நின்றிருக்கணும். அப்படி நின்றிருந்தால் அது சாதியம் சார்ந்த பிரச்சனையாக உருவெடுத்திருக்காது. உரிமை சார்ந்த பிரச்சனையா மாறியிருக்கும். அதுவே மனிதத்துவமாகவும் இருந்திருக்கும். இந்த ஊரவிட்டு போகணும்னு நினைக்கும்போது மனசு வலிக்கதான் செய்யுது. என்னை போலதான அவங்களுக்கும் வலிச்சிருக்கும்.”

********

rakshankiruthik@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. மாப்ள வாழ்த்துகள்…????????????இப்படி தொடர்ந்து எழுதுமய்ய…????????????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button