
1
ஜீனத் அம்மன் மளிகை ஸ்டோர் நான் முன்பு வேலை பார்த்த அலுவலகத்துக்கு எதிரே இருந்தது. அது திருவாரூரில் உள்ள சிறிய நகரம். தொடர்ந்து சிறிதாகவே இருக்க விருப்பமில்லாமல் விரிந்து கொண்டே போனது. நகரின் இரண்டு பக்கமும் ஆறு ஓடியதால் பெருக்க முடியாமல் வீங்கிக் கொண்டு போனது என்று சொல்வது சரியாக இருக்கும். அந்த வீக்கம் கடைத்தெருவில் நன்றாகவே தெரியும். ஜீனத் அம்மன் மளிகையிலும்தான். நான் அந்நகருக்கு வந்த புதிதில் மூன்று ஆண்களும் ஆறு பெண்களும் அங்கு வேலை செய்தனர். கடைக்குள் வாடிக்கையாளர்கள் நுழைந்து பொருட்களை எடுக்குமளவு இடைவெளி இருக்கும். இன்று அப்படி இல்லை. பணியாளர்களே ஏறத்தாழ இருபதுபேர். முழுக்க பொருட்களால் நிரம்பித் ததும்புகிறது ஜீனத் அம்மன் மளிகை ஸ்டோர். ஆனால் முதலாளி ‘வஹாப் பாய்’ அமர்ந்திருக்கும் இடம் மட்டும் அப்படியே இருக்கிறது. அவரும்தான். நம் மனநிலைக்கு ஏற்றவாறு கறுப்பென்றோ வெள்ளையென்றோ விளக்கம் கொடுத்துக் கொள்ளும்படியான தாடி. தாடியைத் தவிர தலைமுடி முழு வெள்ளை. வெண்ணிறக் கதர் வேட்டி சட்டை. தங்க பிரேம் போட்ட கண்ணாடி. அவர் அமர்ந்திருக்கும் இடம் மட்டும் கடையில் ஒளியூட்டப்பட்டது போல இருக்கும். அங்கு ஏதாவது குழல் விளக்கு இருக்கும் என்றுதான் முதலில் நினைத்தேன். கொஞ்ச நாள் கழித்து அவர் கடைக்கு இடது பக்கமிருக்கும் தூங்குமூஞ்சி மரத்துக்குக்கீழே நின்று ஒரு தள்ளுவண்டிக் கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். வெளிச்சத்தை அண்டவிடாத அந்த செழிப்பான மரத்துக்குக் கீழே கூட குழல்விளக்கு போட்ட மாதிரி வஹாப் பாய் பளிச்சென நின்று கொண்டிருந்தார்.
கடைக்குப் போகும் போதெல்லாம் “என்ன தம்பிசார் தொழில் எப்படி நடக்குது” என்று விசாரிப்பார். நானும் சிரித்துக் கொண்டு எதையாவது சொல்லி வைப்பேன். என் அப்பா வயது ஆட்களைக் கண்டால் கூடுமானவரை விலகிப்போகும் பழக்கம் எனக்கிருந்தது. யோசித்துப் பார்த்தால் எல்லோரிடமிருந்தும் விலகிதான் இருந்திருக்கிறேன். அலுவலகத்தில் இருக்கும்போது எப்போது அறைக்குப் போவோம் என்றிருக்கும். அறையில் மறுநாள் அலுவலகம் கிளம்ப வேண்டுமே என்று கவலையுடன் உட்கார்ந்திருப்பேன். எந்தப் பொழுதுபோக்கிலும் எனக்கு ஆர்வமில்லை. சம்பளப் பணத்தில் கொஞ்சத்தை செலவுக்கு வைத்துக் கொண்டு மீதியை வீட்டுக்கு அனுப்பி விடுவேன். அப்பா நான் எவ்வளவு கொடுப்பேன் என்று கணித்து வைத்திருப்பதைவிட சற்று அதிகமாகவே கொடுப்பேன். அப்போதுதான் வீட்டை எதிர்கொள்ள வேண்டிய அவசியமிராது. எனக்கடுத்துள்ள இரண்டு தங்கைகளின் திருமணத்தை ஒட்டி என் வீடு வேள்விக் குண்டமென எப்போதும் எரிந்து கொண்டிருந்தது. அதில் என் பாகத்தை நான் போட்டாக வேண்டும். போட்டுவிட்டால் அவர்கள் நினைப்பிலிருந்து மறைந்து போய்விடலாம். அப்படி மறைந்து வாழ்வது எனக்குப் பிடித்தும் இருந்தது. அதற்குத் தேவையும் இருந்தது.
பியூன் குமரேசன் “சார் ஆபீஸுக்கு வர்றதும் தெரியல போறதும் தெரியல” என்பார். எனக்கு அதுவே சங்கடமாக இருக்கும். ஒருநாள் காலில் அடிபட்டு வேட்டி கட்டிப் போயிருந்தேன். மொத்த அலுவலகமும் விசேஷமாக என்னைப் பார்த்தது. என்னை எப்போதும் கண்டுகொள்ளாத ஜொனிட்டா கூட கண்களால் சிரித்தாள். அன்று முழுக்க அலுவலகத்தில் மிதப்பாக இருந்தது. ஆனால் மாலை என் அறைக்கு வந்ததும் அஞ்சத் தொடங்கிவிட்டேன். என்னை அத்தனை பேர் கவனித்தது அவர்கள் முன்னேபோய் ஆடையின்றி நின்றது போலிருந்தது. ஆனால் வஹாப் பாயிடம் அப்படியில்லை. ஒரு பூ உதிர்வது மரத்துக்கு அளிக்கும் சங்கடத்தைக்கூட அவருடன் பேசுவது எனக்கு அளிக்கவில்லை. என்னைப் பற்றி எதுவுமே கேட்கமாட்டார். தன்னைப் பற்றியும் எதுவும் சொல்லமாட்டார். அவரைப்பற்றி பெருமையாக சொல்லிக் கொள்ள அவருக்கு நிறையவே இருந்தது. ஏழு லாரிகள், இரண்டு பேருந்துகள், இரண்டு ரைஸ் மில், திருவாரூரில் ஒரு பெரிய வணிக வளாகம், குவைத்தில் ஒரு பெரிய ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ், கப்பல் போக்குவரத்து முதலீடு என்று அவருடைய தொழிற்பரப்பு மிக விரிந்தது.
ஆனால் “என்ன தம்பிசார் நேத்தவிட கொஞ்சம் பூரிப்பா தெரியிரியளே எதும் பிள்ளையோ நெருங்கிப் பேசிச்சோ” என்று குறும்புடன் கேட்பார். அது அப்படியே உண்மையாகத்தான் இருக்கும்.
“அடிக்கிற கலரில் சட்ட போடாதிய தம்பிசார். இந்த கம்ப்யூட்டர் கலருன்றானுவளே அதான் ஒங்களுக்கு எடுப்பு”
இதெல்லாம் இவர் எப்படி கவனிக்கிறார் என்று முதலில் ஆச்சரியமாக இருந்தது. போகப்போக அது அவர் குணமெனப் புரிந்தது.
“இந்தா வாரா பாருங்க. இவளப் பாத்தா மூணு புள்ளையப் பெத்தவன்னு யாருஞ் சொல்லுவாவளா தம்பிசார். முருங்கக்குச்சி மாதிரி இருக்கா. கழுத்துல பொட்டு நகையில்ல. புருசங்கார நெதமும் குடிச்சிட்டு போட்டு அடிக்கிறான். அந்தக் கழுத்துல அசிங்கமா கறுத்துப் போய் தொங்குதே அதை அத்துப் போட்டுட்டு வந்தாதான் என்ன!”“
இது அவர் கடையில் வேலை செய்யும் பாக்கியலட்சுமி பற்றிய அவர் கருத்து. அவர் “பாக்கி பாக்கி” என்று கூப்பிடுவார். அன்று அபலைப் பெண்களுக்கு எல்லாம் வாழ்வு கொடுக்க வேண்டும் என்ற வெறி எனக்கு இருந்தது. ஆகவே வஹாப் பாய் அவளை அப்படிக் கூப்பிட்டது எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் பாக்கியலட்சுமி பற்றி அவர் சொன்னபோது அவர் கண்களில் விசனம் தெரிந்தது. அவர் பலவற்றுக்கும் விசனப்பட்டார். பலரைப் பற்றியும் என்னுடன் பேசினார். பலருக்குப் பல உதவிகள் செய்தார். வஹாப் பாயின் தயாளம் அவர் மளிகை ஊழியர்களிடம் ஒரு மாதிரியான தெனாவெட்டாக வெளிப்படும். ஒரு மரியாதைக்காக அவர் இருக்கையில் யாரும் அமரமாட்டார்கள். மற்றபடி கல்லாவில் காசு வாங்கிப் போடுவது கணக்குப் பார்ப்பது என்பதெல்லாம் அங்கு யாரும் செய்யும் வேலைதான்.
பேருக்கு கடையைத் திறந்துவிட்டு வஹாப் பாய் பெரும்பாலும் அந்த தூங்குமூஞ்சி மரத்துக்கு கீழே உள்ள பெஞ்சில் அமர்ந்திருப்பார். மரத்துக்கு கீழிருந்த டீக்கடையில் மதியத்துக்கு தயிர்சாதம், புளிசாதம் எல்லாம் இருபது ரூபாய்க்கு கிடைக்கும். அவை சுவையாகவும் இருக்கும். பாயுடன் பேசத் தொடங்கியது அப்படி சாப்பாடு வாங்கப்போன தருணங்களில்தான். மதியம் இரண்டு மணிக்குப் பிறகு அந்த தூங்குமூஞ்சி மரத்தடி வெறிச்சோடிவிடும். அப்படி வெறிச்சோடிய ஒருநாளில் தான் வஹாப் பாய் அவர் நண்பர் கிருஷ்ணமூர்த்தி பற்றிச் சொன்னார். அதாவது நான் சொன்ன ஒரு சம்பவம் அவரை கிருஷ்ணமூர்த்தி பற்றி சொல்லத் தூண்டியது.
2
சனிக்கிழமை மதியம். ஆஞ்சநேயர் கோவிலில் நடக்கும் மதியவேளை அர்ச்சனை முடிந்து மொத்த ஊரும் நிசப்தமாகி இருந்தது. அன்று அரைநாள் பள்ளி இருந்தது. மாலையில் பள்ளி முடிந்தால் தோன்றும் மகிழ்ச்சி ஏனோ மதியம் பள்ளி முடியும்போது தோன்றுவதில்லை. நரம்புப் பையை தோளில் மாட்டிக் கொண்டு வீட்டை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தேன். வழக்கம்போல் தனியாக. மேற்கு திசைக்கு லேசாக நகர்ந்திருந்த வைகாசி மாதச் சூரியன் தலையை கொதிக்கச் செய்து கொண்டிருந்தது. அப்பா வீட்டிலிருக்கும் போது அம்மா எங்களைக் கொஞ்ச அனுமதிக்கமாட்டார். அந்த மாதிரி அந்த மதியச் சூரியனும் சாலையோர புங்க மரங்கள் நிழல் தருவதை தடுத்து நிறுத்தியிருந்தது. வேகமாக வீட்டுக்கு வந்தேன். வீட்டில் யாருமே இல்லை. இதுபோல வெளியே போகும் சமயங்களில் வீட்டுச்சாவியை அம்மா தேனம்மா ஆத்தாவிடம் கொடுத்துச் செல்லும். எனக்கு தலைசுற்றுவது போல இருந்தது. கொஞ்சம் அலுப்பாகவும். பேசாமல் படலை உடைத்துவிட்டு உள்ளே போகலாமா என்று யோசித்தேன். மூங்கில் படல்தான். பச்சையை எல்லாம் இழந்து தேனம்மா ஆத்தாவைப்போலவே குடுகுடுவென நின்றிருந்தது அந்தப்படல். தேனம்மா ஆத்தா வீட்டுக்கு வந்த வழியிலேயே பத்து வீடு தள்ளிப்போக வேண்டும். சென்றேன். இருபக்கமும் திண்ணை வைத்த தாழ்வான கூரைவீடு. வீடு உள்ளே பூட்டியிருந்தது. “கருமாரி கருணையினால் கவலை மறக்குது” பாடல் அந்த நேரத்தில் சம்மந்தமே இல்லாமல் ஒலித்துக் கொண்டிருந்தது. தேனம்மா ஆத்தா இடப்பக்க திண்ணையில் உட்கார்ந்திருந்தது.
“அம்மா சாவி குடுத்துச்சா?” என்றேன்.
“அங்கிட்டு இருக்கு பாரு” என்று மாடத்தைக் காட்டியது. எடுத்துவந்து வீட்டைத் திறந்தேன். சோறும் புளிக்குழம்பும் சூடு ஆறாமல் இருந்தன. புளிக்குழம்பில் கிடந்த உருளைக்கிழங்குகள் அம்மா என்னை தனியே விட்டுப் போனதற்காக என்னிடம் மன்னிப்பு கேட்டன. வடுமாங்காய்கள் சிறிதாகவோ பெரிதாகவோ இல்லாமல் துண்டாக்கப்பட்டு உப்பும் மிளகாயும் போட்டு குலுக்கி ஒரு சிறிய சம்புடத்தில் வைக்கப்பட்டிருந்தன. “அவ்வளவும் எனக்கு” என்று ஆனந்தமாக இருந்தது. சீரூடையைக்கூட மாற்றாமல் சாணி போட்டு மெழுகிய தரையில் பாய்கூட விரிக்காமல் உட்கார்ந்து சாப்பிட்டேன். ஏறத்தாழ எவர்சில்வர் பானையில் இருந்த பாதி சோற்றைத் தின்றுவிட்டேன். குழம்பில் கிடந்த எல்லா உருளைக்கிழங்குகளையும் தின்றதுடன் முருங்கைக்காயிலும் கத்தரிக்காயிலும் பாதியை தின்று தீர்த்துவிட்டேன். ஏப்பம் விட்டு தண்ணீர் குடித்து அப்படியே படுத்துக் கொண்டேன். தெருக்கதவும் வாசல் தட்டியும் திறந்தே கிடந்திருக்கின்றன. எழுந்தபோது இன்னமும் விடியவில்லை என்று தோன்றியது. ஊரே நிசப்தமாக இருந்தது. குருவிகளின் ஒலிகூட இல்லை. நான் பல் துலக்கிக் கொண்டிருந்தபோது டிவிஎஸ் பிஃப்டியில் அப்பாவும் அம்மாவும் இரு தங்கைகளுடன் வந்தனர். அப்போதுதான் அது மாலை எனப் புரிந்தது. தேனம்மா ஆத்தா இறந்து ஒருவாரம் ஆனதும் அப்போதுதான் ஞாபகம் வந்தது.
“நீங்க இத நம்பமாட்டீங்க பாய். அப்பா அம்மா முன்னாடி மதியம் சாப்பிட மொத்தத்தையும் வாந்தி எடுத்தேன். அம்மா வந்து தலைய பிடிச்சிகிட்டு.”
வஹாப் பாய் என்னை பிரம்மித்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தார். நான் பொய்யாக எதையும் சொல்லமாட்டேன் என்று அவருக்குத் தெரியும். நான் சொல்ல வந்ததை இனிதான் அவரிடம் சொல்லவிருந்தேன். என் உண்மையான பிரச்சினை அதுதான். இதையெல்லாம் இப்படி தொகுத்துச் சொல்ல ஒரு ஆள் எனக்குத் தேவைப்பட்டார். உள்ளுக்குள் சிரித்தாலும் அதை குறைந்தபட்சம் முகத்தில் காட்டிக் கொள்ளாத ஒருத்தர் எனக்குத் தேவைப்பட்டார்.
மறுநாள் எனக்கு கடுமையான ஜூரம் வந்தது. பிணம் எரியும் வாடை நாசியில் நிரந்தரமாகத் தங்கிவிட்டது. தேனம்மா ஆத்தாவை நான் பார்த்தது பொய் என்று நம்ப விரும்பினேன். அன்று வெயில் அதிகம். ஊரே நிசப்தமாக இருந்தது. வீட்டில் யாருமில்லை என்ற சோர்வு. எல்லாம் சேர்ந்து என்னை அப்படி ஒரு பிரம்மைக்கு ஆளாக்கி விட்டது என்று இன்று நானதற்கு விளக்கம் அளிக்க முடியும். அப்போது எனக்கு ஒன்பது வயது. உண்மைகள் உறுதியுடன் கண்முன்னே தெரியும் வயது. எந்தவொரு அதிர்ச்சியும் உள்ளே திணிக்கப்படும்போதுதான் சிரமம் கொடுக்கும். கொஞ்ச நாளில் அதையும் ஏற்று வாழ பழகிவிடுவோம் இல்லையா? நானும் அப்படித்தான் ஆகிப்போனேன். ஆனால் உபரியாகத் திணிக்கப்பட்ட பொருள் உப்பித் தெரிவது போல தேனம்மா ஆத்தா என்னுள் ஒரு கோணலை விதைத்திருந்தாள். சொன்னால் நம்ப மாட்டீர்கள். அடுத்த மூன்று வருடங்கள் என்னால் சரியாகத் தூங்க முடிந்ததில்லை. அதிலும் ஊரில் யாராவது இறந்துவிட்டால் கனவுகளால் அலைகழிக்கப்படும் தூக்கம்கூடப் போய் முழுமையாக விழித்திருப்பேன். ஆனால் என்னால் தூங்க முடியாது என்று கண்டு கொண்ட கொஞ்ச நாளிலேயே கண்களை மூடித் தூங்குவது போல நடிக்கப் பழகிக் கொண்டேன். தூங்குவது போல நடிக்கும்போது முகத்தசைகள் இறுகியிருக்கும். எளிதாக கண்டுபிடித்துவிடுவார்கள். அதனாலேயே பாயில் குப்புறக் கிடப்பேன். தூங்காமல் குப்புறப் படுப்பது ரொம்பவும் சிரமம். வேண்டுமானால் முயன்று பாருங்கள்! கொஞ்ச நாளில் முகத்தில் தசை நெகிழ்ந்து தூங்குவது போலவும் நடிக்க முடியும் என்று கண்டு கொண்டேன். அந்த நடிப்புதான் உண்மையான தூக்கம் என்றும் நம்பத் தொடங்கிவிட்டேன். ஆனால் அப்படித் தூங்காமல் இருந்தது மெல்ல மெல்ல பலனளிக்கத் தொடங்கியது. இறந்தவர்களுடன் தொடர்பு கொள்ள நான் எனக்கே தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக என்னை தயாரித்து வந்திருக்கிறேன்! இறந்தவர்களுடன் பேசுவது உயிரோடு இருப்பவர்களுடன் பேசுவதைவிட எந்த விதத்திலும் வேறானது அல்ல. காதலிக்கும் போது இதை உணர்ந்திருக்கலாம். சொற்கள் அவசியமற்றுப் போய் நம்மால் வெகு இயல்பாக நம் இணையின் மனதுக்குள் உலாவ முடிகிறது இல்லையா! அப்படித்தான் அல்லது அதைவிட இன்னும் நெருக்கமாக இறந்தவர்களுடன் பேச முடியும். பேய்கள் அப்படி ஒன்றும் ஆபத்தானவை அல்ல. சொல்லப்போனால் பேய்களில் எந்த ஆபத்துமே கிடையாது. அதைப் புரிந்து கொள்ள எனக்கு மேலும் சில வருடங்கள் ஆனது. முதலில் எனக்கு ஏதும் உளக்கோளாறு இருக்கும் என்றுதான் நினைத்தேன். நமக்குப் பின்னே ஒரு நல்லபாம்பு படமெடுத்து நின்றால் எப்படி இருக்கும்! அது மாதிரியான அச்சம் பேய்கள் என்னைத் தொடர்பு கொள்ள முற்படும்போது எனக்குத் தோன்றும். தொடக்கத்தில் இறந்தவர்களை சாதாரணமாகப் பார்ப்பேன். முதல்நாள் பள்ளியைவிட்டுப் போய் விஷமருந்தி இறந்துபோன செபாஸ்டியன் சார் மறுநாள் “ஸ்டாஃப் ரூமில்” வழக்கம்போல உட்கார்ந்திருந்தார். விபத்தில் இறந்த அத்தை மகள் தன் பிணத்தை கவலையுடன் பார்த்தபடி அதன் தலைமாட்டில் உட்கார்ந்திருந்தாள். சில சமயம் அவர்கள் என்னிடம் பேசவும் செய்வார்கள். அரங்கராஜ் மாமா இறந்த அன்று நான் பள்ளிக்குச் சென்றிருந்தேன். திரும்பி வரும்போது பனையேறியான அவர் பனைமரத்தில் உட்கார்ந்து கொண்டு “சீக்கணம் வூட்டுக்குப்போ” என்றார். அப்போது உடலுடன் தெரிந்தாலும் பேய் எது மனிதர் எது என்ற வித்தியாசம் எனக்குத் தெரியத் தொடங்கி இருந்தது. அதனால் பனைமரத்தில் இருந்து விழுந்து முதுகெலும்பு முறிந்து அரங்கராஜ் மாமா செத்துப்போயிருந்தது ஊருக்கு முன்பாகவே எனக்குத் தெரிந்துவிட்டது. வேகு வேகென சைக்கிளை மிதித்தேன். அப்பாவை நெஞ்சில் மிதித்துக் கொண்டு அம்மா கையில் அரிவாள்மனையுடன் நின்றிருந்தது. நான் சில நொடிகள் கழித்துப் போயிருந்தால் நாங்கள் மூன்று பேரும் அனாதை ஆகியிருப்போம்.
பிறகுதான் பேய்களின் உருவம் தெரிவது உள்ளுணர்வு சார்ந்த ஒரு பலவீனம் என்று புரிந்தது. ஏதாவது வீட்டைக் கடக்கும்போது அடிக்கும் மசாலா வாசனையை வைத்து அது என்ன கறி என்று ஊகிக்கிற மாதிரி ஒன்றுதான் பேய்களின் இருப்பை உணர்வது. கற்பனையோ பயிற்சியோ இல்லாதவர்களால் உணவை காட்சியாகவே கற்பனை செய்ய முடியும். தேர்ந்த சுவைஞர்களே உணவை அதன் சுவையாக மட்டுமே கற்பனை செய்வார்கள். அதுபோல நானும் பேய்களை ஒரு உணர்விருப்பாக அறிந்து கொள்ளத் தொடங்கினேன். என் ஊரைச் சுற்றி நடக்கும் பெரும்பாலான சாவுகளின் போது நான் பேய்களை உணரத் தொடங்கினேன். மனதிலிருந்து மனதிற்கு நிகழும் உரையாடலாக அது அமைந்திருக்கும். அதை என்ன முயன்றும் இன்னொருவரிடம் சொல்லிவிட முடியாது. நாம் நினைத்துக் கொண்டிருக்கும் விதத்தில் இறந்து போனவர் இந்த உலகத்துடன் தொடர்பு கொள்வதில்லை. இறந்த ஒருவருக்கு அவர் இருக்கும்போது ஏற்பட்ட எந்த பந்தமும் ஒரு பொருட்டல்ல. மூன்று வயதுக் குழந்தையை விட்டு இறந்து போனத் தாயானாலும், மணமாகி நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும்போது கணவனை இழந்த பெண்ணென்றாலும் அவர்களுக்கு இந்த உலகத்துடனான தொடர்பு வேறு வகையானது. அவர்களுக்கு நான் செய்யக்கூடுவது என்றும் ஏதும் கிடையாது. நான் அவர்களுக்கு ஒரு பற்றுக்கோல் மட்டுமே. வேரற்ற காற்று மரத்தை அசைப்பதன் வழியாக கொஞ்ச நேரமேனும் வேர்ப்பிடிப்பின் நிம்மதியை உணர்கிறது இல்லையா அந்த மாதிரிதான் இறந்தவர்கள் என்னில் ஒரு பிடிப்பை உணர்ந்தனர்.
3
“அப்ப தம்பி பவர்ஃபுல் ஆளு”
இதைச் சொன்னபோது பாயின் குரலை தழுவியிருக்கும் சினேகம் வற்றிப்போயிருந்தது.
“நாஞ்சொன்னதெல்லாம் நம்புறீங்களா பாய்”
“நம்பாம” என்று எதையோ சொல்லாமல் நிறுத்தினார். நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
“நம்புறதாலதான தம்பி மனசு வாடிடிச்சு”
“இல்ல. வேற எதையோ மறைக்கிறீங்க. இத வேற யார்கிட்டயும் சொன்னா பயந்திருப்பாவோ இல்லன்னா என்ன கேலி பேசி இருப்பாவோ. இப்படி சோந்து போயிருக்கமாட்டவோ”
“எல்லா எஞ்சினேகிதன் கிட்ணன நெனச்சுதான் தம்பிசார்”
அவனுக்கு காயத்திரின்னு ஒரு தங்கச்சி இருந்தா. எனக்கும் கூட்டுக்காரிதான்னு வச்சிக்கிடுங்களேன். கிட்ணன் அவ்வளவா படிக்கமாட்டான். ஆனா காயத்திரி நல்ல சூட்டிகை. எல்லா க்ளாஸிலேயும் ஃபர்ஸ்ட் மார்க்தான் வாங்கும். நானும் கிட்ணனும் ஒரு க்ளாஸ். இந்தப்பய ஏளாங்கிளாஸ் பெயிலாயிட்டான். எனக்கானா எட்டாவதுல இருப்பு கொள்ளல. அவன் ஞாபகமாகவே இருக்கு. நானும் ஏளாங்கிளாஸ்ல போய் ஒக்காந்துட்டேன்.
பாய் எதையோ நினைத்து சிரித்தார்.
“தம்பிசார் இப்ப யோசிச்சா நான் அவனுக்காக போகல. காயத்திரிக்காக போனேன்னு தோணுது”
மீண்டும் அதே சிரிப்பு. ஆனால் உடனே அவர் முகம் கறுத்துப் போனது.
“அப்படி செஞ்சிருக்கக்கூடாது தம்பிசார். நாப்பது வருஷம் ஓடிப்போச்சு. இப்பயும் அப்படி செஞ்சது தப்புன்னு தோணுது.”
அத்தா வந்து ஸ்கூலுல பேசி என்னைய ஏளாங்க்ளாஸ்லய இருக்க வச்சாரு. காயத்திரிக்கும் எனக்கும் நேரடியா போட்டி ஆரம்பமாச்சுது. ஒரு பரீட்சையில அவ மொத ரேங்க் வாங்குவா. இன்னொன்னுல நானு. ரெண்டுபேரும் நல்லா பேசிக்க ஆரம்பிச்சோம் தம்பிசார். கிட்ணன் வீட்டுக்கெல்லாங்கூட போவ ஆரம்பிச்சேன். கிட்ணன் அய்யிரூட்டு பையன்னு அவன் வீட்டுக்கு போயிதான் தெரிஞ்சது. தரித்திரியம் பிடிச்ச குடும்பம். கிட்ணனும் காயத்திரியும் ஒரு அம்மாவுக்கு பொறக்கல. கிட்ணன்னோட அம்மா செத்ததுக்கே காயத்திரி அம்மாவ கிட்ணன் அப்பா வச்சிருந்ததுதான் காரணம்னு பேசிகிட்டாங்க. அந்த வீட்டுல ஒரு கெட்டநெடி இருந்துச்சு. அந்த அக்கிரஹாரத் தெருவுல கிட்ணன் வூடு மட்டுந்தான் அய்யிரூடு. மத்தவங்க எல்லாம் நெலத்த குத்தகைக்கு விட்டுட்டு ஊர காலி பண்ணிட்டு டவுனுக்கு போயிட்டாங்க. வீட்டு பக்கத்துலயே இருந்த சிவங்கோயிலுக்கு வர்ற கொஞ்ச பேர நம்பித்தான் அந்தக் குடும்பம் ஓடியிருக்கு. ஆனா வீடு ரொம்பப் பெருசு. எனக்கு அந்த வீட்டுக்குள்ள போகுறப்பல்லாம் பாம்பு புத்துக்குள்ள நொழையிற மாதிரி இருக்கும். ஆனா என்னவோ ஒன்னு அங்க இழுத்துட்டே இருந்துச்சு தம்பிசார். அத்தா அப்ப ஒன்றிய கவுன்சிலரா இருந்தாரு. அதனாலயோ என்னவோ கிட்ணன் அப்பாவும் எங்கிட்ட சிரிச்சு சிரிச்சு பேசுவாரு. வெள்ளைப்பல்லி மாதிரி இருப்பாரு அந்த மனுசன். பேரு தியாகய்யர். கிட்ணன் சின்னம்மாதான் தம்பிசார் நான் மொதலும் கடோசியுமா பாத்து பயந்த பொம்பள. பேரு சுலோச்சனா. கறுப்புக் கலர் பொண்டுகள எனக்குப் பிடிக்கும். ஏன் காயத்திரியே கறுப்புத்தான். அவ அம்மா ஒரு மாதிரி கொடூரமான நெறம். ரெண்டு தடவ பார்த்துட்டா எப்பேர்ப்பட்ட சுத்தமானவனும் அந்த சாக்கடையில குதிக்க நெனப்பான். அப்படி ஒரு ஒடம்பு. என் அண்ணனுக்கு வேற அந்த சமயம் கல்யாணமாயிருந்துச்சா, என் ஒடம்பு ஒரு நிதானத்துல இல்ல. காயத்திரி கூடவே இருக்கணும்னு நெனச்சதுக்கு காரணம் அவ வாசந்தான் தம்பிசார். ஆனா கொஞ்ச கொஞ்சமா காயத்திரிகிட்டயிருந்து அவ அம்மா மேல என் கவனம் போக ஆரம்பிச்சுச்சு. சொன்ன நம்ப மாட்டிய, அந்தப் பொம்பள எப்பயாவது மொகங்கழுவி பூவுகீவு வச்சிருந்தான்னா எனக்கு அம்புட்டு கோவம் வரும். பரட்டத்தலையும் ஊத்துற வேர்வையும் அழுக்குப்புடவையுமா அவ இருந்தாத்தான் எனக்குப் புடிக்கும் தம்பிசார்.
பாய் சட்டென நிறுத்தினார். என்னைப் பார்த்துச் சிரித்தார்.
“தம்பிசாருக்கு நாஞ்சொல்றது பிடிக்கயலோன்னு தப்பா நெனச்சிட்டேன்”
சொல்லிவிட்டு சிரிசிரியென சிரித்தார்.
“காயத்திரி கொஞ்சங்கொஞ்சமா என் நெனப்புலேந்து கழண்டு போனா தம்பிசார். பக்கத்துல நிக்கிற மனுஷன கண்ணாலயா தம்பிசார் தெரிஞ்சிக்கிடுறோம்? மனுசுல்ல பாக்குது! கிட்ணன் வீட்ட பாத்ததுமே அவன் சின்னம்மா எங்க இருப்பான்னு மனசுக்கு தெரிஞ்சிடும் தம்பிசார். அவ அன்னிக்கு வீட்டுக்குள்ளதான் இருக்கான்னு தோணுச்சு. நெலகதவு சும்மா ஒப்புக்கு சாத்திருந்துச்சு. லேசா தெறந்து உள்ள போறேன். கூடத்த ஒட்டி இருந்த நீளமான ரூமு கடோசியில இவன் கிட்ணன் ட்ரெஸ் இல்லாம குப்புற கெடக்குறான். சூத்தாம்பட்டை எல்லாம் ஒரு மாதிரி பூஞ்ச பிடிச்சு கறுத்துப் போயிருக்கு. அவன் குமுறிக் குமுறி அழுவுறது முதுகில் தெரியுது. இந்தப் பொம்பள பொடவைய தூக்கி மேல போட்டுட்டு சாவகாசமா கொண்டயும் போட்டுட்டு சொல்றா.”
“காயத்திரிய நான் என்ன ஒன் தோப்பானாருக்கா பெத்தேன். என்னமோ ரொம்பத்தான் வேஷங்கட்டி காமிக்கிற”
சொல்லி முடிச்ச நிமிஷம் என்னைய பார்த்துட்டா தம்பி.
பாயின் முகம் இறுகுகிறது. முகத்தில் வைராக்கியம் குடியேறுகிறது. அவர் சொல்லவிருப்பதை நான் ஒருவாறு ஊகித்துவிட்டேன். தான்பட்ட அவமானமாத்தை சொல்லப் போகிறார். என் சிந்தனையின் தொடர்ச்சி போலச் சொன்னார்.
“மனுஷன்னா ஒருவாட்டியாவது அப்படி அவமானப்படணும் தம்பி. ஒன்னு மனசு பாறையாட்டம் இறுகிரும் இல்லன்னா இளகிப்போய் செத்துரும்”
அந்த மொகத்த இப்பவர மறக்கவே முடியல. மனுஷ மனசுன்னா என்னமோ ஆளம் பாலம்னு பேசிட்டு இருக்கோம். ஒரு நிமிட்டு இல்லல்ல ஒரு செக்கண்டு போதும் தம்பிசார் ஒரு ஆளா இன்னொருத்தர் புரிஞ்சிக்கிட.
“டேய் துலுக்கா எம்பொண்ண என்னடால பண்ணினே”
ஒடம்பெல்லாம் ஆடிப்போயிடுச்சு தம்பிசார். எப்படித்தான் எம்பக்கத்துல வந்தான்னு தெரியல. மொழங்காலுல ஒதச்சா. அப்படியே மடங்கி கீழ விழுந்தேன். காறிக்காறி துப்பிகிட்டே காலைத்தூக்கி ஒதச்சா தம்பிசார். அந்த நேரத்துலயும் பொடவைக்குள்ள அவ தொடையெல்லாம் எண்ணெய் போட்டு தொடச்ச சில்பம் மாதிரி வேர்த்துப் பளபளன்னு தெரியுது. வேர்வையில ஊறி தொடையில மொளச்ச முடியெல்லாம் முத்துன கதிர் மாதிரி ஸாஞ்சு கெடக்கு.
காயத்திரி அப்பதான் உள்வீட்ல இருந்து தூங்கி எழுந்து வர்றா. அப்படியே செவுத்துல சாஞ்சு உக்காந்து அழ ஆரம்பிச்சிட்டா.
கிட்ணன்தான் தம்பி என்னைய காப்பாத்தினான். நேரா அவ காலில போய் விழுந்தான்.
“அவன விட்ரு சித்தி”
அவன் மேலயும் அவ துப்புறா. ஆனா அன்னிக்கு அதிர்ஷ்டமான நாளுதான் தம்பிசார். தியாகய்யர் நல்லா குடிச்சிட்டு பெரக்கணை இல்லாம கெடக்குறார். என் வாப்பா ஊர்ல இருந்தார். கிட்ணன் அவரைப் போய் அழச்சிட்டு வந்தான்.
சுலோச்சனா ஆங்காரமா நின்னுட்டு இருக்கா. என் வாப்பா அவளை கையெடுத்து கும்பிட்டார்.
“கஷ்டஜீவனம்றதாலதான ஒம்பிள்ள என் ஆத்து பொண்ணு மேல கைய வச்சான்”
அவ ஆரம்பிச்சதும் வாப்பா எதையும் யோசிக்கல. நேரா அவ காலில போய் விழுந்தார். என்ன கைக்குழந்தை மாதிரி தூக்கி தொடச்சிவிட்டு புல்லட்ல உட்கார வச்சாரு. மறுநாளே ஊருக்கு வெளில இருந்த ஒரு ஏக்கர் நெலத்தையும் பண்ணைவீட்டையும் தியாகய்யருக்கு கொடுத்தாரு. ஆனா அத்தா அதைப்பத்தி சாகுறவரை ஒரு வார்த்தை என்னை கேக்கல. அதை அவ்வளவு பெருமையாவும் சொல்லிக்க முடியாது. அடுத்து மூணு மாசத்துல அத்தா மௌத்தாயிட்டாரு!
வஹாப் பாயின் முகத்தில் அவ்வளவு கசப்பு மண்டியதைக்காண சங்கடமாக இருந்தது. ஆனால் தந்தையின் மரணத்துக்காக அவர் கசப்படைந்ததாக சொல்ல முடியாது. அடுத்து அவர் சொன்னதற்காகத்தான் அவர் முகம் அப்படிப் போயிருக்கிறது.
“எங்க பண்ணை வீட்ல தியாகய்யர் குடும்பம் குடிபோன எட்டாவது நாள் காயத்திரி கொளுத்திகிட்டு செத்தா. அடுத்தவாரம் அவ அம்மா ஒட்டுத் துணி இல்லாம பட்டப்பகல்ல ஊருக்குள்ள ஓடினா. எங்க வீடிருந்த தெசையப் பாத்து மண்ணள்ளி தூத்துனதா கேள்விப்பட்டேன். அத்தா படுக்கையில விழுந்தாரு. மொத்தக் குடும்பமும் அவர் மௌத்தான ஆறு மாசத்துல ஏறத்தாழ நடுத்தெருவுக்கு வந்துச்சு. அதத்தூக்கி நிறுத்துறவரை எதையுமே யோசிக்கல தம்பிசார். வெளியூரு வெளிநாடுன்னு பிஸினஸ் பண்ணிட்டு சொந்த ஊரில் வந்து இந்த மளிகைக்கடையை வச்சிகிட்டு அக்கடான்னு ஒக்காந்திருக்கும் போதுதான் இதெல்லாம் ஞாபகத்துல வந்து தொலைக்குது. இன்னி வரைக்கும் ஒரு பொம்பளைய தொட்டது கிடையாது. பொம்பளன்னா உள்ளுக்குள்ள அவ்வளவு விலக்கம்”
எனக்கு வஹாப் பாயின் கையை பிடித்துக் கொள்ளத் தோன்றியது.
“ஒரேயொரு ஆசைதான் தம்பிசார். அவகிட்ட பேசணும். ஏன் கொளுத்திகிட்டான்னு கேக்கணும்”
கொஞ்சம் இடைவெளிவிட்டுச் சொன்னார்.
“இல்ல வேறமாதிரி ஏதும் நடந்ததான்னு தெரியணும்”
வஹாப் பாய் முதல்முறையாக காயத்திரி என்ற பெயரை உச்சரித்தது முதலே அவள் என்னுடன்தான் இருக்கிறாள். வஹாப் பாய் சொன்ன கதையை வரிக்குவரி அவளும் என்னிடம் சொன்னாள். தான் எப்படி இறந்தேன் என்பதையும் சொன்னாள். ஆனால் அதை அவரிடம் சொல்ல வேண்டாம் என்று காயத்திரி சொன்னபோது
“அவர் மீது உனக்கு அவ்வளவு அன்பா? அந்த அன்புதான் உன்னை நாற்பது வருடங்களாக கரைந்துபோக விடாமல் காக்கிறதா?” என்று கேட்டேன்.
அவள் “நா சுலோச்சனா பெத்த பொண்ணு” என்று மட்டும் சொன்னாள்.
வஹாப் பாய்க்காக மட்டுமல்ல எனக்காகவும் நான் பரிதாபப்பட்டுக் கொண்டேன்.
*****