கட்டுரைகள்

172 ரன்கள் எடுத்தும் நியூசிலாந்து வீழ்ந்தது எப்படி? – வில்சன்

கட்டுரை | வாசகசாலை

உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களின் நாக்-அவுட் போட்டிகளில் விளையாடுவது 500 அடி உயரத்தில் ஒரு கண்ணாடி பாலம் மீது நடப்பது போன்றாகும். என்ன தான் கண்ணாடி உங்களின் எடையை முழுவதுமாக தாங்கும் என்ற உத்தரவாதம் இருந்தாலும் கண்ணாடி வழியாக தெரியும் ஆழம் உங்களை நடக்க விடாது. அதே போல என்ன தான் பலமான அணியாக இருந்தாலும் இந்த அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் ஏற்படுத்தும் அழுத்தத்திலேயே பாதி அணி தோற்று விடும். அப்படி நேற்று உருவான ஒரு குட்டி அழுத்தத்தில் சிக்கிய அணி கோப்பையை இழந்துள்ளது.

உலகமே இடிந்து போனாலும் எவ்வித வருத்தமும் இல்லாமல் புன்னகைக்கும் வில்லியம்சன் ஒரு பக்கம். ஆண்டாண்டு காலமாய் உலகக்கோப்பை போன்ற தொடர்களில் எப்படி ஆட வேண்டும் என்று மற்ற அணிகளுக்கு பாடம் எடுக்கும் ஆஸ்திரேலியா மறுபக்கம். இந்தியா – பாகிஸ்தான் போன்ற அணிகள் விளையாடாததால் வழக்கத்திற்கு மாறாக துபாய் மைதானம் ரசிகர்களின் ஆரவாரம் அவ்வளவாக இல்லாமல் காணப்பட்டது. டி20 போட்டிகளில் டாஸ் வெல்வது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் வண்ணமாய் நேற்றும் டாஸை வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார் ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச்.

நியூசிலாந்து அணி திட்டத்தோடு வந்திருந்தது. ஸ்டார்க், ஹேசல்வுட், கம்மின்ஸ் என்ற ஆஸ்திரேலிய பந்துவீச்சை கண்டு அலறாமல், அவர்களை அடித்து துவம்சம் செய்ய வேண்டும் என்பது தான் அவர்களின் திட்டம். நினைத்தது போலவே ஆட்டத்தின் இரண்டாம் பந்தை பவுண்டரிக்கு பறக்க விட்டார் கப்தில். ரன்களை கட்டுப்படுத்த ஸ்பின்னரைக் கொண்டு வர, மேக்ஸ்வெல் வீசிய முதல் பந்தே சிக்சருக்கு சென்றது. நல்ல துவக்கத்துடன் இருந்த நியூசிலாந்து அணிக்கு டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் ஹேசல்வுட் முதல் அடியைக் கொடுத்தார். மெஷின் போல கட்டுக்கோப்பாக ஒரே இடத்தில் தொடர்ந்து பந்து வீசும் ஹேசல்வுட் சற்று வேகம் குறைந்த பந்தை வீசி முதல் விக்கெட்டை வீழ்த்தினார். இந்த அடியிலிருந்து நியூசிலாந்து மீளவே பத்து ஓவர்கள் ஆகிவிட்டது.

இக்கட்டான இறுதிப் போட்டியில் அடித்து ஆட முற்பட்டு விக்கெட்டுகளை இழந்துவிடக் கூடாது என கப்தில் மற்றும் கேப்டன் வில்லியம்சன் என இருவருமே பொறுமையாக ஆடினர். பொறுமை என்றால் பத்து ஓவருக்கு வெறும் 57 ரன்கள் எடுப்பது போன்ற பொறுமை. ஆனால் துபாய் மைதானம் ஒன்றும் ரன்கள் எடுக்க கஷ்டப்படுத்தும் மைதானம் ஒன்றும் இல்லை. பத்து ஓவர்களுக்கு பிறகு வில்லியம்சனின் ஆட்டம் இதைத் தான் கூறியது.

பொதுவாக வில்லியம்சனின் ஆட்டம் ஒரு மாதிரி எலைட்டாக தெரியும். பந்துவீச்சாளர்கள் ஆயிரம் வித்தியாசமான முறையில் பந்தை வீசினாலும் அதை எளிதாக ஒரு பேக்ஃபூட் டிரைவ் ஆடுவது தான் வில்லியம்சனின் வழக்கம். சண்டைக்கு அழைக்கும் பந்துவீச்சாளரிடம் நீ எல்லாம் எனக்கு சமமான வீரன் இல்லை என்று கூறுவது போல இருக்கும். அமைதியான இடத்தில் மென்மையாக ஒலிக்கும் பீத்தோவனின் சிம்பொனி போன்றது அவரது ஆட்டம். ஆனால் நேற்று கதையே வேறு.. ஒவ்வொரு பந்துவீச்சாளரிடமும் சண்டைக்கு வருகிறாயா என்று கேட்பது போல இருந்தது. மிகவும் புதிதாக ரேம்ப் ஷாட் போன்ற ஷாட்டுகளை எல்லாம் ஆடினார். பீத்தோவனின் சிம்பொனி நாம் ஆடும் டப்பாங்குத்தாக மாறிப் போனதே நேற்றைய ஆட்டத்தின் பெருத்த ஆச்சரியம்.

நேற்று யாரோ ஸ்டார்க்கை கை காண்பித்து இவர் தான் உங்களின் உலகக்கோப்பை கனவை 2015ம் ஆண்டு முடித்து வைத்தவர் என்று கூறியிருப்பார்கள் போல. ஸ்டார்க்கிடம் எதிர்கொண்ட 12 பந்துகளில் மட்டும் 39 ரன்கள் எடுத்தார் வில்லியம்சன். ஏதோ பரம்பரை பகையாளி போல ஸ்டார்க்கை நடத்தினார். 85 ரன்களுக்கு எப்படியோ வில்லியம்சன் வெளியேற பின்பு நீஷம் மற்றும் சீஃபர்ட் உதவியுடன் 20 ஓவர்களில் நியுசிலாந்து அணி 172 ரன்கள் எடுத்தது.

172 ரன்கள் என்பது ஓரளவு நல்ல ஸ்கோர் தான். மும்பை இந்தியன்ஸ் அணி வென்ற ஐந்து கோப்பைகளுள் மூன்று கோப்பைகள் முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு குறைவாக எடுத்து பெறப்பட்டது தான். நியூசிலாந்து அணியின் பந்துவீச்சும் சிறப்பான வீரர்களை உள்ளடக்கியது. ஆனால் நியூசிலாந்து அணி ஒரு சிறிய தவறை முதல் இன்னிங்சிலேயே செய்திருந்தது. அதே தவறை ஆஸ்திரேலிய அணியை செய்ய வைத்தால் கோப்பை நிச்சயம் என்ற முனைப்பில் விளையாடி ஸ்விங் பவுலிங்கை சமாளிக்க திணறி வந்த ஆரன் பின்ச்சின் விக்கெட்டை மூன்றாவது ஓவரிலேயே வீழ்த்தியது. இந்த விக்கெட்டுக்கு பின்பு ஆஸ்திரேலிய அணி போட்டியை அணுகிய விதம் தான் அவர்களுக்கு கோப்பை வென்று கொடுத்துள்ளது.

நியூசிலாந்து அணியைப் போலவே இவர்களுக்கும் முதல் விக்கெட் விரைவாக விழுந்தது. ஆனால் அதன் பின்பு வந்த மிட்செல் மார்ஷ் தான் சந்தித்த முதல் மூன்று பந்துகளிலேயே 14 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணியின் மேல் அழுத்தம் போட வேண்டும் என நினைத்த நியூசிலாந்து அணியின் மேல் மூன்று பந்துகளில் அழுத்தத்தை யூடர்ன் செய்து விட்டார் மார்ஷ். சிறிது நேரம் பொறுமையாய் இருந்த வார்னரும் திடீரென IPL தொடரை நினைத்து விட்டார் போல. எந்த நாட்டில் சன்ரைசர்ஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டாரோ அதே நாட்டில் நான் யாரென்று நிரூபிக்கிறேன் பார் என்று பவுண்டரிகளும் சிக்சருமாக அடித்து அமர்க்களப்படுத்தினார்.

மார்ஷ் மற்றும் வார்னர் இருவரும் அரைசதம் கடந்தனர். 13வது ஓவரில் போல்ட் வார்னர் விக்கெட்டை வீழ்த்தினாலும் அது கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்ற கூற்றைத் தான் நினைவு படுத்தியது. பின்பு மேக்ஸ்வெல் வந்து 28 ரன்கள் எடுக்க 19வது ஓவரில் ஆஸ்திரேலிய அணி எளிதாக வென்றது. கடந்த 2019ம் ஆண்டு ஐந்தாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கு மிட்செல் மார்ஷ் சேர்க்கப்பட்ட போது, எந்த ஆஸ்திரேலிய ரசிகரும் அதை விரும்பவில்லை. மார்ஷ் இதனால், “யாருக்கும் என்னை பிடிக்கவில்லை என்பது தெரியும். ஆனால் நான் ஒரு நாள் அத்தனை ரசிகர்களுக்கும் வெற்றி பெற்றுக் கொடுப்பேன்” என அப்போது கூறினார். சொல்லியது போலவே இறுதிப்போட்டியில் சிறப்பாக ஆடி ஆட்ட நாயகன் விருது வென்றார். அதே போல சன்ரைசர்ஸ் அணிக்கு பல ஆண்டு காலம் தனியாக உழைத்த டேவிட் வார்னர் அணியிலிருந்து நீக்கப்பட்டு அவமதிக்கப்பட்டார். ஆனால் அதே நாட்டில் தற்போது நடந்து முடிந்திருக்கும் தொடரில் அவர் தான் தொடர் நாயகன். காலம் எல்லாவற்றையும் மாற்றும் என்பதற்கு வேறு நல்ல உதாரணங்கள் தேவையில்லை.

நியூசிலாந்து அணி நான்காவது ஓவரில் விக்கெட்டை இழந்தது. இழந்ததும் மறுபடியும் விக்கெட்டுகள் விழுந்து விடுமோ என்ற பதட்டத்தில் நிதானமாக ஆடியது. பத்து ஓவர்களில் 57 ரன்கள் மட்டும் தான் நியூசிலாந்து அணிக்கு வந்தது. நமக்கு நாமே ஆப்பு வைக்கிறோம் என்பதை அறியாமல் கப்திலும் வில்லியம்சனும் அமைதி அமைதி என்று ஷின்ச்சான் மோடில் ஆடினர். மறுபக்கம் ஆஸ்திரேலியாவும் அதே போல மூன்றாம் ஓவரில் முதல் விக்கெட்டை இழந்தது. ஆனால் அவர்களிடம் பதட்டம் இல்லை. டி20 போட்டியை எப்படி ஆட வேண்டுமோ அப்படியே ஆடினர். ஒரு விக்கெட் போனாலும் முதல் பத்து ஓவர்களில் 82 ரன்கள் எடுத்தனர். இது தான் வித்தியாசம். நியூசிலாந்து அணி இறுதிப் போட்டி அழுத்தத்தில் சிறிது நேரம் அமிழ்ந்து போனது. ஆஸ்திரேலியாவோ எதிர்நீச்சல் போட்டது. கப்தில் அந்த முதல் பத்து ஓவர்களில் ஒரு பத்து ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் கூட ஆட்டத்தின் முடிவு மாறியிருக்க வாய்ப்புள்ளது.
எது எப்படியோ… பல ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவை ஏங்க வைத்துக் கொண்டிருந்த டி20 உலகக்கோப்பையையும் அந்த அணியின் அலமாரியில் இனி அமரப் போகிறது.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button