இணைய இதழ் 111கட்டுரைகள்

சுடுமண்- திக்கற்றவருக்குத் தெய்வம் துணையா? – தாமரைபாரதி

கட்டுரை | வாசகசாலை

மனித குல வரலாற்றில் மிக தொன்மையான கலைப் படைப்புகள் சுடு மண் சிற்பங்களே ஆகும். இந்தியாவில் சிந்து வெளிப் பண்பாட்டில் கண்டெடுக்கப்பட்ட தாய்த் தெய்வம் சுடுமண் சிற்பமும் அண்மையில் தமிழ் நாட்டில் கீழடி ஆய்வில் அகழ்ந்தெடுக்கப்பட்ட சுடுமண் சிற்பங்களுமே அதற்குச் சான்றாகக் கொள்ளலாம். வரலாற்றுக் கால மனிதர்களில் இந்த வகுப்பினர்தான் சுடுமண் சிற்பங்களைச் செய்தனர் என்று அறிய முடியவில்லை. ஆனால், காலப்போக்கில் மண்பாண்டம் செய்யும் குயவர்கள் சுடுமண் சிற்பங்களை உருவாக்கவும் செய்தனர் என்பதை அறிய முடிகிறது.

குயவர்கள், மண்பாண்ட வேளாளர், குலாளர் என அழைக்கப்பட்ட இவர்களில் குலாளர் குலத்தில் வாழ்ந்த ஒரு சிறுகுடி இனத்தின் துயர வாழ்வைப் பேசும் நாவலாகச் சுடுமண் நாவலைப் படைத்துள்ளார் நாவலாசிரியர் இராஜலட்சுமி .

காலம் 

பிரிட்டிஷ் காலணி ஆதிக்க இந்தியாவில் நிரந்தர நிலவரித்திட்டத்தை அறிமுகப்படுத்திய காரன் வாலீஸ் கொண்டுவந்த ஜமீன்தாரி முறையின் படி உழுகுடி மக்களின் உழைப்பைச் சுரண்டி அதன் பலாபலனை பிரிட்டிஷாரும் ஜமீன்தார்களும் அனுபவித்து வந்த காலத்தில் கதைக்களம் ஆரம்பிக்கிறது .

இடம் 

தமிழகத்தின் தொண்டை மண்டலப் பகுதி, நடுநாடு என அழைக்கப்படும் தென் ஆர்க்காடு பகுதியின் கடலூர், தேவணாம்பட்டிணம், அரசூர், பன்ருட்டி, சேமக்கோட்டை சிறுவத்தூர் ஏரி மற்றும் செஞ்சிக் கோட்டை ஆகிய பகுதிகளில் கதைக்களம் அமைகிறது .

கதைக்கள நிகழ்வும் சூழலும்

அய்யனார் எனும் நாட்டுப்புற சிறு தெய்வ வழிபாட்டின் மூலம் கோவிலுக்கு சுடுமண் சிலைகள் செய்து தர வரும் குலாளர் இனத்தின் உழைப்பைச் சுரண்டுவதோடு மட்டுமல்லாமல் அக்குழுவின் கன்னிப்பெண்களைக் குறிவைத்து நிகழும் பாலியல் சுரண்டலும் அதனைத்தொடர்ந்ந கொலைகளும் அவை குறித்த துப்பறிதலும்தான் கதை .

பன்ருட்டி கடலூர் பகுதியில் உள்ள தொழில் நிமித்தமாகச் சமூகத்தில் உள்ள நெசவு தொழில் செய்வோர், நகை தொழில் செய்வோர், கால்நடை வளர்ப்போர் போன்ற சார்புத் தொழிலாளர்கள் குறித்து எழுதுகிறார்.

விவசாய உற்பத்தியில் குதிரைவாலி, நெல்லி அரிசி, கேழ்வரகு முந்திரி, கொடி கடலை, கம்பு என அப்பகுதி மக்களிடையே அந்தக் காலத்தில் பயிர் செய்ததை அறிய முடிகிறது. நாவலில் தமிழ் மாதங்களை அடிக்கடி பயன்படுத்தியது மகிழ்ச்சியளித்தது.

செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, தரங்கம்பாடி கோட்டை, வேலூர் கோட்டை செஞ்சிக் கோட்டை, திருமயம் கோட்டை போன்ற கோட்டைகள் பற்றி வேறு சில படைப்புகளின் மூலம் அறிந்திருக்கிறேன். ஆனால், முதல் முறையாகக் கடலூர் டேவிட் கோட்டை பற்றிய தகவல்களும் சித்தரிப்புகளும் இந்த நாவலில் வருகிறது. டேவிட் கோட்டையை மையமாகக் கொண்டு வாணிபம் நடந்ததை அறிய முடிகிறது.

பானை செய்வதற்கும் சுடுமண் சிலைகள் செய்வதற்கும் தேவையான மண் எடுப்பது பற்றிய விவரனை அருமை. அதிலும் குறிப்பாகச் சிறுவத்தூர் ஏரியில் எவ்வளவு அடியில் மண்ணை அள்ள வேண்டும், நீர் பரப்பில் இருந்து எவ்வளவு தூரத்தில் எடுக்க வேண்டும், மண் எடுக்கப் பயன்படும் நொச்சிக் கொடியில் உருவான தட்டு போன்ற விவரனைகளின் நுணுக்கமும் கதைக்கான விவரனைகளைத் துல்லியத்துடன் தரவேண்டும் என்கிற முனைப்பும் பாராட்டுக்குறியது. சுடு மண் சிலைகள் செய்வது குறித்த விவரணையை வெகு எளிதாகப் புரியுமாறு பத்தொன்பதாம் அத்தியாயத்தில் சொல்லிச் செல்கிறார் கதாசிரியர்.

ஜமீன்தார்கள் எவ்வாறு விவசாயக் குடிகளுக்கும் அதிகார வர்க்கத்தினருக்கும் (கிழக்கிந்தியக் கம்பெனி, முகலாயப் பேரரசு, பிரிட்டிஷ் இந்தியா) இடையிலான இடைத்தரகர்களாகச் செயல்பட்டனர் என்பதையும் வரலாற்றிலிருந்தே விளக்குகிறார். ஜமீந்தார்கள் அடக்குமுறையை ஏவிவிடுபவர்களாக இருந்த அதே நேரத்தில் நல்ல மனிதாபிமானம் உள்ளவர்களாகவும் இருந்துள்ளார்கள் என்பதை பெரிய ஜமீந்தார் மகேந்திர பூபதியின் கதாபாத்திர செயல்பாடுகள் மூலம் அறியலாம்.

நாவலில் அதிகாரத்தின் ஓங்கிய கரங்கள் இரண்டு. ஒன்று பிரிட்டிஷாருடையது. மற்றொன்று ராஜசிம்மன் எனும் இளைய ஜமீன்தாருடையது. அதிகாரத்தால் பாதிக்கப்பட்டோர் மாயன் குடும்பத்தினரும் அவனைச் சார்ந்த பிறரும்.

வரலாறு என்பது உண்மையைப் பற்றிய விசாரனை என்பர் (History is an inquiry of the truth) .இந்நாவலில் வரலாறும் புனைவுமே உண்மையைத் தேடுவதாய் அமைகிறது. வெளிப்படாத மர்மம் வாசகரின் வாசக யூகத்திற்கு விட்டுச் செல்லும் கதையின் இறுதிப்பகுதி சுவாரஸ்யமளிக்கிறது எனினும் தேர்ந்த வாசகர் அதைக் கனித்து விடுவாரென்றே தோன்றுகிறது .

வரலாற்றுப் புனைவை மேற்கொள்கையில் உண்மைத்தரவுகள், வாய்மொழிச் சேகரங்கள், கள ஆய்வுகள் போன்றவை பெரும் உதவியாக இருக்கும்.

சுடுமண் சிலைகள் செய்வதை வாழ்வதாரத்துக்கான வேலையாக மட்டும் கொள்ளாமல், சமய நம்பிக்கைகள், கலாச்சாரப் பாதுகாப்பு, கடவுள் மீதான ஈடுபாடு போன்ற பண்பாட்டுக் கூறுகளுடன் பின்னிப் பிணைந்த ஒன்றாகத்தான் குலாளர் குடியினர் கருதினர் என்பதை கதாசிரியர் பல இடங்களில் நிறுவுகிறார் .

குலாளர்களின் வாழ்வு முறை, உணவு முறை, சமய சடங்குகள், குலதெய்வ வழிபாடு, தெருக்கூத்து, டாணாக்காரன் பற்றிய சித்தரிப்பு, அய்யனார் சாமி பற்றிய தொன்ம நம்பிக்கை, ஜமீன்தார்களின் போக வாழ்வு போன்றவை நாவலில் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

குலாளக் குடிகளின் ஏழையான அடிமை வாழ்வு முறை குறித்த அவதானிப்பினை நாவலின் பல கதாபாத்திரங்கள் (இரணியன், சங்குமணி, மாயன், கருப்பன், செங்கோடன், சிகப்பி, மலர்விழி, காத்தவராயன்) வழியே காணலாம் .

ஜமீன் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டிருப்பினும் முத்தழகியும் அடிமை வாழ்வுதான் வாழ்கிறாள், கற்பு எனும் கற்பிதத்தால் ஜமீன் வீட்டுப் பெண் பத்மினி வீதிக்கு விரட்டப்படுகிறாள்.

சமூகச் செயல்பாட்டுக்கான வர்க்க சமரில் அதிகாரத்தின் பிடியானது எளிய மக்களின் மீதான ஆதிக்கமாகவே எப்போதும் இருந்து வருகிறது.

‘அரசு அன்று கொல்லும்; தெய்வம் நின்று கொல்லும்’ என்பர். திக்கற்றவருக்குத் தெய்வம் துணை என்பர். நாவலில் தெய்வம் இன்றே கொல்கிறது. ஆனால், எளிய மக்களைத் திக்கற்றவர்களாக இன்னும் வைத்திருப்பது எது என்ற கேள்வி நாவலில் மறைமுகமாக ஒரு சில இடங்களில் எழுப்பப்படுகிறது.

தவிர்த்திருக்க வேண்டியவை

சிறுதெய்வ வழிபாட்டின் நம்பிக்கைகள் பற்றி எழுதும் போது பெருந்தெய்வ வழிபாட்டில் செய்யப்படும் மூலவர் உற்சவர் முறை போன்றே அய்யனார் ஊர்வலம் வருவார் என்றும், அப்படி வரும்போது எதிர்படுபவர்களின் கதி என்னவாகும் என்பதும் எத்தனையோ தமிழ்த் திரைப்படங்களில் நாம் பார்த்த காட்சிதான் 

நாவலில் முதுமக்கள் தாழியைப்பற்றி இருமுறை குறிப்பிட்டிருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

முத்தழகி ராஜசிம்மனைத்தாக்க முனையும்போது மகேந்திரபூபதி எழுப்பும் குரல் நாடகீயத்தனமானது. இருக்கட்டும்.. புனைவில் நாடகீயமும் அடங்கும்.

ஒவ்வொரு அத்தியாத்திலும் தலைப்பு கொடுக்கப்பட்டிருப்பது வாசகருக்குச் சில சமயங்களில் முன் முடிவுகளுக்கு இட்டுச் செல்லும். சில தலைப்புகள் பொருந்தாமல் தொக்கி நிற்கின்றன. எனவே அத்தியாயங்களுக்குத் தலைப்பிடுவதை அடுத்த நாவலில் தவிர்ப்பார் என நம்புகிறேன்.

சொல்முறை

நாவலின் சொல்மொழி கடலூர் பகுதியின் வட்டார வழக்குமொழி. அவ்வழக்கு மொழியைச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் .அச்சொல்மொழியின் வழியே கடலூர் பன்ருட்டி பகுதியின் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னதான வாழ்க்கைப் பண்பாட்டினைத் தன் புனைவாக்கச் செயல்பாட்டினால் வடித்தெடுத்துள்ளார்.

சில அத்தியாயங்களில் முடிந்த நிகழ்வை முன் சொல்லி அதற்கானப் பகைப்புல நிகழ்வுகளைப் பின்னடுக்கியும்(அ-நேர்க்கோட்டு எழுத்து) சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அது குழப்பமூட்டுவதாக இல்லை.பாதி தெரிந்த வரலாற்றைப் புனைவாக்கம் செய்வதில் தேர்ந்த நவீன எழுத்தாளர்களில் குறிப்பிடத் தகுந்தவர் அ.வெண்ணிலா. அவரது கங்காபுரம், நீரதிகாரம் போன்ற நாவல்கள் அதற்குச் சான்றானவை . இராஜலட்சுமியும் இதுபோல நடந்திருக்கலாம் என்கிற கற்பனையில் நிஜமாகவே நடந்ததைப் போன்று “சுடுமண்” நாவலை ஒரு வரலாற்று நாவலாக, வட்டார நாவலாக, யதார்த்த நாவலாகத் தந்துள்ளார். எழுத்துப் பயணத்தில் சுடுமண் நாவலை விடவும் சிறந்த நாவல்களைத் தமிழுக்கு அவரால் தரமுடியும் என நம்புகிறேன்.

சுடுமண்நாவல்

ஆசிரியர்இராஜலட்சுமி

வெளியீடுவாசகசாலை பதிப்பகம்

thamaraibharadhi@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க
Close
Back to top button